பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
அவர்கள் கொஞ்ச தூரம் போகவே அவர்களின் வழி ஆற்றை விட்டுப் பிரிகிறாற்போலக் கண்டார்கள். அதினால் அவர்களுக்கு உண்டான மனச் சோர்பு கொஞ்சம் அல்ல. என்றாலும் வழியைவிட்டு விலகவோ அவர்கள் துணிந்ததில்லை. ஆற்றுக்கு அப்பால் அந்த வழி மிகவும் கரடு முரடாய் இருந்தது. இம்மட்டும் அவர்கள் நெடுந்தூரம் செய்த பிரயாணத்தினால் பாதம் தொய்ந்து போயிருந்தது போலவே இந்த வழியைக் குறித்தும் அவர்கள் மனம் தொய்ந்துபோயிற்று. (எண்ணாகமம் 21 : 4) ஆதலால் அவர்கள் போகப் போக நல்ல பாதை கிட்டாதா என்று எண்ணிக்கொண்டே போனார்கள். போகவே பாதையின் இடது பக்கத்தில் ஒரு வயல்வெளியும் அதற்குப் போகும் ஒரு படிக்கட்டுப் பாதையும் காணப்பட்டது. அந்த வயல் வெளிக்குப் பக்கத்துவழி மைதானம்1 என்று பேர்.
அந்தப் பாதையைக் கண்டபோது கிறிஸ்தியான் தன் தோழனைப் பார்த்து: இந்த மைதானம் நமது வழியின் ஓரத்தில் இருக்குமானால் அதைக்கடந்து போவோமேன் என்று சொல்லிக் கொண்டு அதை அறியும்படி படிக்கட்டுப் பாதையண்டை போனான். அங்கே வேலிக்கு அப்பால் ஒரு பாதை தாங்கள் போகிற வழிக்கு அருகாமையாய்ப் போயிற்று. அதைக் கண்ட கிறிஸ்தியான் தன் தோழனைப் பார்த்து: நான் நினைத்தபடியே இங்கே வழி இருக்கிறது. திடநம்பிக்கையே வாரும், இந்த இலகுவான பாதையாகவே போவோம் என்று கூப்பிட்டான்.
திடநம்: ஒரு வேளை இந்தப் பாதை நம்மை வழியைவிட்டு விலகிப் போகப்பண்ணினால் என்ன செய்கிறது? என்று திடநம்பிக்கை சொன்னான்.
கிறி: அப்படி வழி விலகிப்போவோம் என்பது போல தோன்றக் காணோம். அதோ பாரும், இந்தப் பாதை வேலியோரமாய் நம்முடைய பாதையை அடுத்துத்தானே போகிறது! 2 என்று காட்டினான்.
அப்படியே திடநம்பிக்கை தன் சிநேகிதன் பேச்சுக்கு இணங்கி அவன் பின்னாலே சென்று படிக்கட்டைக் கடந்து போனான். அவர்கள் வேலியோரமாய்ப் போன பாதையில் சேர்ந்து அந்த வழி கால் நடைக்கு வெகு லேசாய் இருந்தபடியால் மெத்த சந்தோசத்தோடு இருவரும் நடந்து போனார்கள். சற்று தூரம் போகவே தங்களைப் போல வேறொரு பிரயாணியும் அவ்வழியாய் முன்னுக்கு நடந்து போகிறதை அவர்கள் கண்டார்கள். அவனுக்கு வீணுறுதி 3 என்று பேர். அவனை அவர்கள் கூப்பிட்டு இது எவ்விடத்துக்குப் போகிற வழி அப்பா என்று கேட்டார்கள். “இது உச்சித பட்டணத்தின் அலங்கார வாசலுக்கு போகிற பாதை” என்று அவன் சொன்னான். பார்த்தாயா? நான் சொன்னது சரி ஆயிற்றா? 4 இதனாலே நாம் நேர் பாதையில்தான் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளுகிறோம் என்று கிறிஸ்தியான் திடநம்பிக்கையைப் பார்த்து சொன்னான். அவ்வழியே முன்னே போகிறவன் பின்னாலே இவர்களும் நடந்து போனார்கள். இங்கே பொழுதும் அஸ்தமித்தது. இருளும் சூழ்ந்தது. முன்னே போனவனைப் பின்னே போகிறவர்கள் காணக்கூடாமற் போயிற்று.
வீணுறுதி முன்னே நடந்து போகவே வழி தெரியாமல், தனக்கு முன் வெட்டப்பட்டிருந்த ஒரு ஆழமான குழியில் பொதீர் என விழுந்தான். வீண் மகிமை கொண்ட மதிகேடரைப் பிடிக்கும்படியாகவே இப் படுகுழி அந்த மைதானத்தின் எஜமானனால் வெட்டி வைக்கப் பட்டிருந்தது. அவன் விழுந்த விசையில் எலும்பு வேறு சதை வேறாய் சிதறிப் போனான்.
அவன் விழுந்த சத்தத்தை கிறிஸ்தியானும் திடநம்பிக்கையும் கேட்டார்கள். உடனே அவர்கள் ஏது விசேஷம் என்று சத்தமிட்டுக் கூப்பிட்டுக் கேட்டாலும் ஏங்கலையும் பெருமூச்சையுமேயன்றி வேறொரு மறுமொழியையும் கேட்கவில்லை. அப்போது திட நம்பிக்கை தன் தோழனைப் பார்த்து: நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்று கேட்டான். கிறிஸ்தியானோ: ஐயோ, நாம் அவனை வழிவிலகப்பண்ணி இப்படி மோசமான இடத்துக்கு கொண்டு வந்து விட்டோமே என்று கலங்கி, ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருந்தான். இந்த வருத்தத்தோடு வருத்தமாய் அந்தச் சமயத்தில் பெருங்காற்றுஅடித்தது. கார்மேகங்கள் திரண்டன. மின்னல்கள் பளிச்சென்று வீசின. இடிகள் மட மட என முழங்கின. 5 கடைசியாக கனத்த மழையும் பெய்தது. வெள்ளமும் புரண்டோடினது.
அப்பொழுது திடநம்பிக்கை: ஆ! நான்என் வழியைவிட்டுப் பிரியாதிருந்தேன் இல்லையே என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.
கிறி: இந்த வழி இப்படி நம்மை மோசம்பண்ணும் என்று யார் நினைத்தது?
திடநம்: துவக்கத்திலேயே இந்த வழியைப்பற்றி எனக்கு அச்சம் தோன்றிற்று. ஆகையால்தான் சாந்தத்தோடு உம்மை எச்சரித்தேன். நீர் என் வயதுக்கு மூத்திராதிருந்தால், அதைவிடக் கண்டிப்பாய் பேசியிருப்பேன்.
கிறி: நல்ல சகோதரனே? கோபித்துக்கொள்ள வேண்டாம். உன்னை வழி விலகச் செய்ததற்காகவும், இவ்வளவு மோசமான நிலைமையில் சேர்த்ததற்காகவும் நான் மிகவும் துக்கப்படுகிறேன். சகோதரனே, என்னை மன்னிக்கும்படி உன்னை வேண்டுகின்றேன். நான் தகாத நோக்கத்தோடு இப்படிச் செய்ததே இல்லை.
திடநம்: என் சகோதரனே, நீர் உமது மனதில் அதைக்குறித்து கலக்கமடையவேண்டாம். நான் மன்னித்துக் கொண்டேன். இதுவும் நமக்கு ஒரு நன்மைக்காக இருக்கலாம்.
கிறி: இவ்வளவு தயாள குணமுள்ள ஒரு சகோதரன் என்னோடிருக்கிறதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நாம் இவ்விடத்தில் நிற்கலாகாது, திரும்பிப் போகலாம் வாரும்.
திடநம்: என் உத்தம நேசனே, நான் முந்தி நடக்கிறேன், நீர் என் பின்னாலே வாரும்.
கிறி: அல்ல, அல்ல உமக்கு மனமானால் நான் முந்திப்போகிறேன். ஏதாவது ஒரு மோசம் இருந்தால் நான் உம்மை வழியைவிட்டு விலக்கினபடியால் எனக்கு அது முதலாவது சம்பவிப்பது நியாயமாய் இருக்கும்.
திடநம்: அப்படி அல்ல, நீர் முந்திப் போகக்கூடாது. ஏனெனில் உமது மனதில் இப்போது கலக்கம் இருக்கிறபடியால் மறுபடியும் பாதையை விட்டு விலகிவிடுவீர் என்று சொல்லிக் கொண்டிருக்கிற சமயத்தில் “நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை திரும்பு, இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு” என்று அவர்களுக்குத் தைரியம் உண்டாகும்படி பேசின ஒரு சத்தத்தைக் கேட்டார்கள். இதற்குள்ளாக வெள்ளம் பெருகி வழியை மறைத்துவிட்டதால் அப்புறம் போவது அதிக மோசத்துக்கு ஏதுவானதாகக் காணப்பட்டது. (அப்பொழுது நான்: நல்வழியை விட்டுத் தகாத வழியில் போய்விடுவது அதிக லேசாக இருந்தாலும் தகாத வழியிலிருந்து நல் வழிக்குத் திரும்ப வந்துவிடுவது எவ்வளவோ வருத்தம் என்று மனதில் எண்ணிக்கொண்டேன்.) என்றாலும் அவர்கள் திரும்பி நடக்கும்படியாகத் துணிந்து பிரயாசப்பட்டார்கள். ஆனால் கனத்த இருளினாலும், கழுத்தளவு தண்ணீர் பெருகின படியாலும் ஒன்பது, பத்து தடவைகள் அமிழ்ந்தே போகிறதுபோல 6 காணப்பட்டார்கள். அவர்கள் என்ன பிரயத்தனப்பட்டாலும் அன்றிரவு படிக்கட்டை கண்டு பிடித்துக் கொள்ளக் கூடாமல் போயிற்று. ஆகையால் பொழுது விடியட்டும் என்று ஒரு அற்ப ஒதுக்கிலே 7 உட்கார்ந்து சற்று இளைப்பாறினார்கள். அவர்கள் அந்த இரவெல்லாம் பட்ட வருத்தங்களின் ஆயாசத்தால் அப்படியே தூங்கிவிட்டார்கள். 8
1. பக்கத்துவழி மைதானம் என்பது, சத்திய பாதையிலிருந்து விலகுகிறதைக் குறிக்கிறது. மெய்க்கிறிஸ்தவர்கள் முதலாய் துன்ப காலத்தில் சில வேளை மருள விழும்படியான சோதனைக்குட்படுகிறார்கள்.
2. சாத்தான் கிறிஸ்தவர்களை இழுக்கும்படி படிபடியாய்ப் பிரயாசப்படுகிறான்.
3. வீணுறுதி என்பது இருதயத்தில் தேவ கிருபை இல்லாமலும், வெளியரங்கமாய் பாவ வழியில் நடந்தும், நாங்கள் மோட்சத்துக்குத்தான் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு சாங்கோபாங்கமாய் காலங்கழிக்கிறவர்களைக் குறிக்கிறது.
4. கிறிஸ்தவர்கள் தங்களுக்கு சந்தேகமாய் இருக்கும் தப்பிதங்களை மற்றவர்களுடைய மாதிரியால் தப்பிதம் அல்ல என்று சொல்ல ஆயத்தமாய் இருக்கிறார்கள்.
5. இடிகள் என்பது, பாவத்துக்கு விரோதமாய் இடிமுழக்கமிடும் தேவனுடைய பிரமாணங்களை மீறப்போட்டோமே என்று கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் பயந்து நடுங்கினதை குறிக்கிறது.
6. ஒரு கிறிஸ்தவன் பாவத்தில் விழுந்துவிட்டால் அதிலிருந்து திரும்பி வருகிறது மகா கஷ்டம். அது இருட்டில் வழிதேடுவது போலவும் அல்லது ஆழமும் இழுப்புமுள்ள ஆற்றைக் கடப்பது போலும் இருக்கிறது.
7. அற்ப ஒதுக்கு என்பது அவர்கள் தங்கள் மனச்சாட்சியை சாந்தப்படுத்திக் கொண்ட ஏதோ ஒரு தப்பான அபிப்பிராயத்தைக் காட்டுகிறது.
விடியுமட்டும் உட்கார்ந்து இளைப்பாறினார்கள் என்பது அவர்கள் தங்கள் பழைய ஞான ஜீவ நிலைமையை அடையும்படி சாவகாசமான ஒரு காலம் வரட்டும் என்று நினைத்திருந்ததை காட்டுகிறது.
8. தூங்கிவிட்டார்கள் என்பது, தேவ பக்தியைப்பற்றி மனம்விட்டுப் போய் தங்கள் நிர்ப்பந்த ஸ்திதியைப்பற்றி எவ்வளவேனும் உணர்வில்லாதிருந்ததைக் குறிக்கிறது.