பிரயாணிகள் தேவ நதி சேருதல்
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால் பிரயாணிகள் இருவரும் தங்கள் வழியே நடந்து ஒரு இன்பமான ஆற்றண்டை வந்து சேர்ந்தார்கள்.
அந்த ஆறு தாவீது அரசனால் “தேவ நதி” என்றும் யோவான் அப்போஸ்தலனால் “ஜீவ தண்ணீருள்ள நதி”1 என்றும் அழைக்கப் பட்டிருக்கிறது. (சங் 65 : 9 வெளி 22 : 1 எசே 47 : 1 – 9) பிரயாணிகளின் பாதை அந்த ஆற்றங்கரை மேலே போயிற்று. கிறிஸ்தியானும் அவன் தோழனும் இங்கே நடக்கையில் அவர்களுக்கு உண்டான சந்தோசங்களுக்கு ஒரு அளவில்லை. அவர்கள் அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தார்கள். ஆதலால் இளைத்த அவர்கள் ஆவி தழைத்துப் பலப்பட்டது. அதுவும் அல்லாமல் அந்த ஆற்றின் இரு கரைகளிலும் பலவித கனிகளைக் கொடுக்கும் அநேக விருட்சங்கள் பச்சை பசேரென்று இருந்தன. அவைகளின் இலைகளை அவர்கள் பிடுங்கி தின்று பல நோய்களையும், வழிப்பிரயாணத்தால் உண்டாகும் இரத்தக் கொதிப்புகளையும் தீர்த்துக் கொண்டார்கள். அதுவும் அல்லாமல் நதியின் இரு பக்கங் களிலும் லீலியா புஷ்பங்கள் நிறைந்த புல் மைதானங்களும் இருந்தன. அது வருஷம் முழுவதும் பசுமையாகவே காணப்பட்டது. இங்கே படுத்துக்கொள்ள வசதியாய் இருந்தபடியால் அவர்கள் இந்த மைதானத்தில் படுத்துத் தூங்கினார்கள். (சங் 23 : 2 ஏசா 14 : 10) கண் விழித்து எழுந்தவுடனே அந்த மரத்துக் கனிகளை பறித்துத் தின்று ஆற்றின் தண்ணீரைக் குடித்து மறுபடியும் படுத்துத் தூங்குவார்கள். அவர்கள் அநேக இரவையும் அநேக பகலையும் இப்படியே கழித்தார்கள். அந்த இடத்தில் இருக்கும்போது அவர்கள் ஆனந்த பரவசங் கொண்டு:-
1. மா இன்ப நதிதான்
ஓடுதே பார்!
பளிங்கொளி போலத்தான்
தோன்றுதே பார்
ராஜ பாதையாக
நடப்பவருக்காக
மா இன்ப நதிதான்
ஓடுதே பார்!
2 மைதானம் பச்சென்று
காணுதே பார்!
பூமணம் கம்மென்று
வீசுதே பார்!
ஆற்றோரத்து மரக்
கனி இலைகள் மகா
ஆரோக்கியம் தரும்
அவிழ்தமாம்
3 அவ்வின்பம் கண்டவன்
இப்பூமியை
வாங்கத் தனக்குள்ள
எல்லாம் விற்பான்
ராஜபாதையாக
நடப்பவருக்காக
மா இன்ப நதிதான்
ஓடுதே பார்!
என்று பாடினார்கள். இம்மட்டோடு அவர்கள் பயணம் முடிய வில்லை. அவர்கள் மறுபடியும் பிரயாணம் பண்ண மனங்கொண்ட போது புசித்துக் குடித்துப் புறப்பட்டார்கள்.
1. ஜீவ தண்ணீருள்ள நதி: இது ஞான ஜீவனின் ஊற்றாகிய பரிசுத்த ஆவியைக் குறிக்கலாம். அதில் பானம் பண்ணினார்கள் என்பது, பரிசுத்தமான அன்பினாலும், சந்தோசத்தினாலும் நிறைந்திருப்பதையும், இந்த உலகத்தின் கவலைகளையும், வருத்தங்களையும் தாண்டியிருப்பதையும் நமக்கு உணர்த்துகிறது.