உபாயியின் தோழர் சந்திப்பு
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால் கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் உபாயியை விட்டுப் பிரிந்து முன்னெட்டி நடந்து போனார்கள். சற்று நேரம் போனவுடன் இருவரில் ஒருவன் பின் நோக்கிப் பார்த்தான். பார்க்கவே, உபாயியோடு வேறு மூன்று பேர் கூடிவருவதைக் கண்டான். அவர்கள் கிட்டவந்த உடனே உபாயி அவர்களுக்கு தலை குனிந்து வந்தனம் செய்தான். அவர்களும் அவனுக்கு மரியாதை செய்தார்கள். அம்மூவரில் ஒருவனுக்கு உலகப்பற்று 1 என்றும், மற்றவனுக்கு பணவாஞ்சை என்றும் அடுத்தவனுக்கு பிசினாறி என்றும் பேர். இவர்கள் மூவரும் உபாயினுடைய பள்ளித்தோழர்கள்தான். இவர்கள் எல்லாரும் இச்சித்தல் என்று பெயர் வழங்கப்பட்ட வடநாட்டு வியாபாரப் பட்டணங்களில் ஒன்றாகிய ஆதாயவாரிபுரி என்னும் ஊரில் இருந்த சர்வகலாசாலைத் தலைவராகிய பணம்பிடுங்கி என்னும் வித்வ சிரோன்மணியின் பாதத்தில் படித்தவர்களாய் இருந்தார்கள். இந்த உபாத்தியாயர் பலவந்தமாயாவது, தந்திர உபாயமாயாவது, இதம் பேசியாவது, பொய்பேசியாவது, தேவபக்தியின் வேஷம் போட்டாவது, மாயம் போட்டாவது தமது மாணாக்கர் பணம்பிடுங்கி பெரிய குடித்தனக்காரராகிவிட நன்றாய்ப் படிப்பித்து வந்தார். அவருடைய கல்விச் சாலையில் படித்த மாணாக்கர் அனைவரிலும் இந்த நாலுபேரும் கல்வியில் தேறின ஆசாமிகள் ஆகிவிட்டதால் அப்புறம் அவரவரே இப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தை தோற்றுவித்து நடத்தி வந்தார்கள்.
அவர்களுடைய பூர்வோத்திரம் இப்படியிருக்க, நான் முன்பு சொல்லியபடி அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, மாற்றி மாற்றி வந்தனங்கள் பண்ணிக் கொண்டபின்பு பணவாஞ்சை என்பவன், அதோ நமக்கு முன்னே போகிறார்களே அவர்கள் யார்? என்று உபாயியைக் கேட்டான். ஏனெனில் கிறிஸ்தியானும் திடநம்பிக்கையும் அவர்கள் கண் பார்க்கும் தூரத்துக்குள்தான் போனார்கள்.
உபாயி: அவர்கள் யாரோ தூர தேசத்தார்; அவர்கள் தங்கள் மனப்போக்கின்படியே பிரயாணம் செய்கிறார்களாக்கும்.
பணவாஞ்சை: ஐயோ! ஏன் நின்றார்கள் இல்லை, எல்லாரும் கூடி ஒரே கும்பலாக போகலாமே? அவர்களும் நாங்களும், ஐயா, ஒரு வேளை நீரும் கூட மோட்ச பிரயாணம் தானே போகிறோம்?
உபாயி: ஆம், நாம் எல்லாரும் அந்தப் பயணத்தில்தான் இருக்கிறோம். ஆனால், அதோ முந்திப் போகிறார்களே அவர்கள் வெகு கண்டிப்புக்காரர். தங்கள் மனதின் அபிப்பிராயங்களின்மேல் பிரியங்கொண்டிருக்கிறார்கள். ஒரு மனுஷன் எவ்வளவு பக்தியுடை யவனாய் இருக்கட்டுமேன், அவன் அவர்கள் கருத்துக்கு இசைந்து நடவாவிட்டால் அவனை முற்றிலும் அசட்டைபண்ணி தங்களோடு கூட வரக்கூடாது என்று துரத்திவிடுகிறார்கள்.
பிசினாறி: அது மகா கெட்ட குணம். சில பூரண பக்தரைப்பற்றி நாம் வாசித்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்களுடைய மிஞ்சின பக்தியானது தங்களைத்தவிர மற்றவர்களுக்கு இரட்சிப்பே இல்லை என்று துணிந்து சொல்லும்படி அவர்களை ஏவிவிடுகிறது. ஆனால் உமக்கும் அவர்களுக்கும் வித்தியாசப்பட்ட விஷயங்கள் தான் என்ன? எந்தக் காரியங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் பேதப் பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லும்படி உம்மை மன்றாடுகிறேன்.
உபாயி: அவர்கள் தங்கள் முரட்டுக்குணத்துக்குத் தக்கதாக மழை ஆனாலும்சரி, வெயில் ஆனாலும் சரி, ஆடை ஆனாலும் சரி, கோடையானாலும் சரி பிரயாணத்தை நடத்தவேண்டும் என்கின்றார்கள். நானோ காற்று நின்று கடலின் அலை அடங் குவதைப் பார்த்து புறப்படலாம் என்கின்றேன். அவர்கள் தேவ சகாயத்தை நம்பிக்கொண்டு திடும்பிரவேசமாய் சகலத்தையும் முடிக்கப்பார்க்கிறார்கள். நானோ ஜீவ நாசமாவது பொருள் நஷ்டமாவது சம்பவியாதபடி சகலத்தையும் ஆற அமர நடத்தப் பிரயாசப்படுகிறேன். எல்லாரும் அவர்கள் நோக்கத்துக்கு விரோதமாய்ச் சொன்ன போதினும் அவர்கள் தங்கள் கருத்தே சிறந்ததென்று சொல்லுவார்களேயன்றி மாறுகிறதில்லை. நானோ என் மட்டுக்கு காலத்துக்கேற்றதாகவும், பொருள் நஷ்டம் ஆகாமலும் எல்லா விஷயங்களிலும் தேவபக்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கந்தைகட்டி கனவீனப்படுகிற சமயத்திலும் பக்தியை விடக்கூடாது என்கின்றார்கள். நானோ அந்த பைத்தியமான புத்தியைத் தள்ளிப்போட்டு, அது தன் வெள்ளிப் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொண்டு சூரியப்பிரகாச வேளையில் சம்பிரமமாய் வீதி வழி வரும்போது அதைப் பிடித்துக்கொள்ளுவேன் என்று சொல்லுகிறேன் என்றான்.
உலகப்பற்று: அதைக் கேட்டவுடனே உலகப்பற்று என்பவன் சொல்லுகிறான்: ஆம், ஆம். அது சரி, என் பிராண சிநேகிதராகிய உபாயி என்பவரே, உமது கருத்தை விடாதேயும். ஒருவன் தனக்கு அகப்படும் ஆதாயங்களை பாதுகாத்துக் கொள்ள சுயாதீனமுடையவனாய் இருந்தும், விவேகமில்லாமல் அதைக் கைநழுவ விட்டுவிடுவானேயானால் அவனைப் போல் மூடன் இல்லை என்று என் புத்திக்குத் தோன்றுகிறது. நாமோ சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாய் இருப்போமாக. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது உத்தமம். தேனீக்களைப் பாருமேன், அவை மாரிகாலமெல்லாம் சும்மா இருந்து, வெயில் காலத்தில் லாபமடையும் படியாகச் சந்தோசத்தோடு பூவுக்கு பூ பறந்து திரிகின்றன. தேவன் சில காலத்தில் மழை பெய்யவும், சில காலத்தில் வெயில் எரிக்கவும் செய்கிறார். அவர்கள் மழை காலத்தில் பயணம் போகவேண்டும் என்று சாதிக்கிற மதிகேடராய் இருந்தால் இருக்கட்டும். நாம் வெயில் காலத்தில் சுகமாய் நடந்து போகலாம். என் மட்டுக்குச் சொன்னால் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்களைப் பேணிக் கொடுக்கிற மாதிரியான தேவ பக்தி எதுவோ அப்படிப்பட்ட பக்தியின் மேலேதான் எனக்குப்பிரியம் இருக்கிறது. இந்த ஜீவியத்திற்கு அடுத்த நல்ல வாழ்வுகளை தேவனே தந்திருக்கையில் அவர் நிமித்தம் நாம் அவைகளைப் பேணிக் கொள்ளல் ஆகாது என்று தன் சுயயோசனையின்படி எவனாவது தீர்மானிக்கக்கூடுமா? ஆபிரகாமும், சாலொமோனும் பக்தியோடு பக்தியாய் பணக்காரராய் இருந்தார்கள். மேலும் யோபு என்பவர் நல்ல மனுஷன் பொன்னை தூளைப்போல் சேர்த்து வைப்பான் என்று சொல்லியிருக்கிறார். அதோ முந்தி நடக்கிறார்களே அவர்கள் நீர் சொன்ன குணம் உடையவர்களானால், யோபு சொல்லுகிற மனுஷன் அவர்களைப்போல் இருக்கக்கூடாதே.
பிசினாறி: எனக்குத் தோன்றுகிறபடி நாம் எல்லாரும் இந்தக் காரியத்தில் ஏகமனதுடையவர்களாய் இருக்கிறதினால் அதைப்பற்றிப் பேச்சை வளர்ப்பது அவசியம் இல்லை.
பணவாஞ்சை: அந்தப் பேச்சை நிறுத்தவேண்டும் என்பது சரிதான். ஏனெனில் நாம் நம்முடைய அபிப்பிராயத்தை வேதத்துக்கும் புத்திக்கும் இசைவாகத் தீர்மானித்திருப்பது போல், எவனொருவன் தன் அபிப்பிராயத்தை நிலைநிறுத்தாமல் இருப்பானோ அவன் தனக்குள்ள சுயாதீனத்தை அறியாமலும் தன் வாழ்வைத் தேடாமலும் இருப்பான்.
உபாயி: நாம் எல்லாரும் ஏகமாய் பரலோக பிரயாணம் போகிறவர்களாய் இருக்கிறோமே, நாம் ஆகாமியத்திற்கு விலகிக் கொள்ளும்படியாக நான் ஒரு பொதுக்கருத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்படி நீங்கள் எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டியது.
ஒரு குரு அல்லது ஒரு வியாபாரி அல்லது வேறு எவனாவது இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவனுக்கு முன்பாக இந்த ஜீவனுக்குரிய மேலான பாக்கியங்கள் சில வைக்கப் பட்டிருக்கின்றன. அந்தப் பாக்கியங்களை அவன் தேவபக்திக்குரிய சில காரியங்களில் வேஷம் போட்டால் அன்றி மற்றபடி அடைந்து கொள்ள முடியாது என்று வைத்துக்கொள்ளுவோம். இப்படிப்பட்ட சமயத்தில் அவன் தேவ பக்தியின் வேஷம் தரித்து அவைகளைச் சம்பாதித்துக் கொண்டு அதோடு நல்லவனாயும் இருப்பது தோஷம் ஆகுமோ?
பணவாஞ்சை: ஓகோ! உமது கேள்வியின் ஆழம் எனக்கு விளங்குகின்றது. இந்தக் கனவான்களுடைய மன விருப்பத்தின்படி நான் அதற்குப் பொறுத்தமான உத்தரவை நன்கு ஆராய்ந்து சொல்லுகிறேன் கேளும். முதலாவது: ஒரு குருவின் சம்பந்தமாய் நீர் சொல்லுகிறதைப்பற்றிப் பேசுவோம். ஒரு குரு இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளும். அவருக்கு குரு யோக்கியதை எல்லாம் இருந்தும் அற்ப வருமானமுள்ள ஒரு சபையே கிடைத்திருக்கிறது. அவர் அதிக வருமானமும், செல்வாக்கும், அந்தஸ்தும் தருகிறதற்கு ஏதுவான ஒரு கோவிலையும், சபையையும் தேடுகிறபோது அதுவும் தெய்வாதீனமாக அகப்பட்டுக்கொள்ளுகிறாற்போல் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம். அந்தச் சமயத்தில் அவர் அதிக ஆராய்ச்சி செய்கிறதும், அந்தக் காலத்து ஜனங்களின் குணாகுணத்துக்கு ஏற்றபடி அடிக்கடி பிரசங்கிக்கிறதும், வைராக்கியமாய் விளங்குகிறதும், சபையாரின் கருத்துக்கு இசைவாக தமது சொந்த தீர்மானங்களில் சிலதை மாற்றிக்கொள்ளுகிறதுமாய் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். இப்படிப்பட்ட ஒரு அழைப்பு தனக்கு இருக்கு மானால் அந்த குரு இந்தப்படி செய்கிறதினாலே அல்லது இதற்கு மிஞ்சி செய்தபோதினும் தப்பிதம் என்று சொல்லக்கூடுமா? என் மனதுக்கு தோன்றுகிறபடி அவர் இவை எல்லவற்றோடுங்கூட நல்லவராய் இருக்கலாமே, எப்படியெனில்:
1. அதிக வருமானமுள்ள கோவில் உத்தியோகம் தெய்வாதீனமாய் அவருக்கு கிடைத்திருக்கிறதானபடியால் அதை அவர் நாடுவது நியாயம்தான். அது நியாயம் அல்ல என்று ஒருவரும் சொல்லக்கூடாது. மனச்சாட்சியில் மாத்திரம் அவருக்கு மயக்கம் இல்லையானால் சும்மா பெற்றுக்கொள்ளலாம்.
2. அதுவும் அல்லாமல் அதிக வரும்படியுள்ள கோவில் உத்தியோகத்தின் மேலுள்ள ஆசையானது அதிக ஆராய்ச்சிக்கும், அதிக வைராக்கியத்துக்கும், நல்ல பிரசங்கத்துக்கும் அவரை ஏவி எழுப்பி முன்னிலும் அவரை தேறினவராக்குகிறது. இவை எல்லாம் தேவ சித்தம்தானே.
3. அந்தக் குரு ஜனங்களின் குணாதிசயங்களுக்குத் தக்கதாக தனது போங்கை மாற்றிக்கொள்ளுகிற விஷயத்தைப்பற்றிச் சொன்னால் அப்படி அவர் மாற்றுகிறதினாலே முதலாவது தன்னை வெறுக்கிற குணமுடையவர் என்றும் இரண்டாவது மற்றவர்களை தன் வசம் இழுத்துக்கொள்ளும் நேச குணமுடையவர்என்றும் மூன்றாவது குருமுறைக்கேற்ற யோக்கிய குணசாலி என்றும்தானே நன்றாய் விளங்குகிறார்.
4. ஆகையினாலே என் தீர்மானம் என்னவென்றால் ஒரு குரு அதிக வருமானத்திற்காக சொற்ப வருமானமுள்ள சபையை விட்டுவிடுகிறது பொருளாசையினால் வந்த காரியம் என்று தீர்ப்புச் சொல்லுவது நியாயமாய் இராமல் தனக்குக் கிடைத்த நற்காலத்துக்குத்தக்கதாக தன் உத்தியோகத்துக்கு அடுத்தவைகளை தேர்ச்சியாக்கி, சுறுசுறுப்போடு தன் அழைப்பில் முயற்சி செய்கிறவர் என்றே சொல்ல வேண்டியது.
இப்போது நீர் வியாபாரிகளையும் மற்றவர்களையும் குறித்துச் சொன்ன இரண்டாம் பாகத்தைக் குறித்து நான் சொல்லுகிறதை கேளும். ஒரு மனுஷன் தாழ்ந்த உத்தியோகத்தில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். அவன் பக்தியுள்ளவன் ஆகிறதினாலே தன் வாழ்வை செழிப்படையப் பண்ணக்கூடும். ஒரு வேளை ஒரு பணக் காரியை கலியாணம் பண்ணிக்கொள்ளலாம், அல்லது பணக்காரரான அதிகமான பேரை தன் கடைக்கு வாடிக்கைக்காரராக பிடித்துக்கொள்ளலாம். இப்படிச் செய்கிறது தவறு அல்ல என்றே என் மனதுக்குத் தோன்றுகின்றது. அது எப்படி என்று என்னைக் கேட்பீரோ?
1. ஒரு மனுஷன் எந்த உபாயங்களினால் ஆனாலும் சரி அவன் பயபக்தி உள்ளவனாகிறது சந்தோசமான காரியம்தான்.
2. பணக்காரியை கலியாணஞ்செய்வதும் பெரியோரை வாடிக்கை பிடிப்பதும் அநியாயமா?
3. அதுவுமின்றி தேவபக்தியுள்ளவன் ஆகிறதினாலே இவ்வளவு லாபத்தையும் சம்பாதித்துக்கொள்ளுகிற ஒரு மனுஷன் தன்னில் தானே நல்லவன் ஆகிறதினால் நல்லவர்களிடத்தில் உள்ள நல்லவைகளையே தனக்கு சுதந்தரித்துக் கொள்ளுகிறான். அவனுக்கு நல்ல மனைவி அகப்பட்டிருக்கிறாள். நல்ல வாடிக்கையாளர்கள் அகப்பட்டிருக் கிறார்கள். நல்ல இலாபம் கிடைத்திருக்கிறது. இவை எல்லாம் அவன் பக்தியுள்ளவன் ஆகிறதினாலேதான் அகப்பட்டன. அப்படிப்பட்ட பக்தியும் நலமானதுதானே. ஆதலால் இந்த நன்மைகளை அடையும் படி ஒருவன் பக்தியுள்ளவனாகிறது நலமும் அனுகூலமுமான நோக்க மாகவே இருக்கிறது.
உபாயி என்பவர் கூறின கருத்துக்கு பணவாஞ்சை என்பவர் விவரமாய்ச் சொல்லிய இந்தத் தாற்பரியம் அருமை, அருமை என்று எல்லாராலும் புகழ்ந்து கொள்ளப்பட்டது. ஆதலால் அந்தக் கருத்து மொத்தத்தில் ஆரோக்கியமும், ஆதாயமுமான முறை என்று அவர்களால் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து மடக்கிப்போட எவனாலும் கூடாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டபடியினாலும், கிறிஸ்தியானும் திடநம்பிக்கையும் இன்னும் கூப்பிடு தூரத்துக்குள்ளேதான் போகிறபடியினாலும், விசேஷமாய் முன்னே அவர்கள் உபாயியை எதிர்த்துப் பேசி மடக்கினபடியினாலும் சற்று எட்டி நடந்து அவர்களைப் பிடித்து இந்தக் கேள்வியைப் போட்டு அவர்களை மடக்கிவிடவேண்டும் என்று ஏகமாய் யோசித்துக் கொண்டார்கள். அந்த யோசனையின்படியே இவர்கள் அவர்களை நின்று போகும்படி கூப்பிட்டார்கள். அப்படியே இவர்கள் வந்து சேருமட்டும் கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் நின்றார்கள். இவர்கள் அவர்களண்டை நடந்துபோகும்போதே ஒருவருக்கொருவர் சொல்லுகிறார்கள்: உபாயி என்பவருக்கும் அவர்களுக்கும் விவாதம் நேரிட்டுப் போனதால் அவர் இனி அவர்களை மடக்கும் இந்தக் கேள்வியைப் போட்டால் எரிகிற கொள்ளிக்கு எண்ணெய் வார்த்தால் போல் இருக்கும். ஆதலால் உலகப்பற்று என்பவர் கேட்டால்தான் நலம்.
அப்போது அவருக்கு பழையபடி எரிச்சலோடு உத்தரவு சொல்லாமல் சாவதானமாய் சொல்லுவார்கள் என்று தீர்மானம் பண்ணிக்கொண்டார்கள்.
அப்படியே அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து ஒருவருக்கொருவர் மினவிக்கொண்ட பின்பு உலகப்பற்று என்பவன் அந்தக் கேள்வியைக் கிறிஸ்தியானுக்கும் அவன்கூட்டாளிக்கும் சொல்லி இதற்கு மறுமொழி கொடுங்கள் பார்ப்போம் என்றான்.
அதற்குக் கிறிஸ்தியான் சொல்லுகிறான்: தேவபக்தியில் குழந்தை யாய் இருக்கிறவன் முதலாய் இம்மாதிரி பதினாயிரம் கேள்விகளுக்கு உத்தரவு சொல்லக்கூடும். யோவான் சுவிசேஷத்தில் சொல்லிய வண்ணம் (யோவான் 6 : 26) போஜனத்துக்காக இரட்சகரைப் பின்பற்றுவது நியாயம் அல்ல. ஆனால் அவரையும் தேவபக்தியையும் உலகத்தின் வாழ்வு களைச் சம்பாதிக்கும்படி ஏறிப்போகிற குதிரையைய் போல வைத்துப் பயன்படுத்திக்கொள்ளுகிறது என்பது எவ்வளவு அநியாயம் என்று சொல்லவேண்டியது. இப்படிப்பட் எண்ணம் அஞ்ஞானிகளுக் குள்ளும், மாயக்காரருக்குள்ளும், பிசாசுகளுக்குள்ளும், பில்லிசூனியக் காரருக்குள்ளும் இருக்கிறதாக நான் கண்டேனேயல்லாமல் மற்றவர் களுக்குள் நான் கண்டதில்லை.
முதலாவது: அஞ்ஞானிகள் இப்படி நினைக்கிறார்கள் என்று சொன்னேனே அது எப்படி என்று கேளுங்கள். ஏமோருக்கும், சீகேமுக்கும் யாக்கோபின் மகள்மேலும், ஆடுமாடுகள் மேலும் நாட்டம் உண்டானபோது, தாங்கள் விருத்தசேதனம் பெற்றால் அன்றி அவைகளில் ஒன்றும் தங்களுக்கு கிட்டாது என்று கண்டு தங்கள் சிநேகிதரை நோக்கி: அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப் பட்டவர்களாய் இருக்கிறது போல நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்களுடைய ஆடுமாடுகள், ஆஸ்திகள், மிருக ஜீவன்கள் எல்லாம் நம்மோடு சேரும் அல்லவா? என்றுசொன்னான். அவர்கள் விரும்பியதெல்லாம் யாக்கோபின் குமாரத்தியும் அவனுடைய ஆடுமாடுகளுமே. அவைகளைச் சம்பாதிக்கும்படி அவர்கள் ஏறிப்போன பக்தியின் குதிரையும் இதுதான். (ஆதியாகமம் 34 : 20 – 24)
இரண்டாவது: மாயக்காரராகிய பரிசேயரும் இப்படிப்பட்ட பக்தியுடையவர்கள்தான். அவர்கள் வெளிக்கு நீண்ட ஜெபங்கள் செய்வார்கள். உள்ளத்துக்குள் எந்த கைம் பெண்ணின் வீட்டை கட்டைமண்ணும் குட்டிச்சுவரும் ஆக்கிவிடலாம் என்று கருத்துடையவர்களாய் இருப்பார்கள். இவர்கள்மேல் தேவன் அதிக ஆக்கினையை சுமத்தியிருக்கிறார். (லூக்கா 20 : 46, 47)
மூன்றாவது: யூதாசு என்ற பிசாசும் இவ்வித பக்தியில் சேர்ந்தவன் தான். அவன் பணப்பையில் போடப்படுகிறதை அபகரித்துக் கொள்ளும்படியாக கருத்துக்கொண்ட பக்தனாய் இருந்தான். ஆகையால் அவனை பணப்பையின் பக்திமான் என்று சொல்ல வேண்டியது. அவன் கைவிடப்பட்டு புறம்பாகத் தள்ளப்பட்டு, கேட்டின் மகனாகக் கெட்டே போனான்.
நான்காவது: பில்லிசூனியக்காரனாகிய சீமோனும் இவ்வித பக்தியில் சேர்ந்தவன்தான். இவன் திரண்ட பணத்தைச் சம்பாதிக்கும் படியாக பரிசுத்த ஆவியானவர் தனக்கு வேண்டும் என்று விரும்பினான். அவனுக்கு பேதுரு சொன்ன உத்தரவு தகுதியானதுதான். (அப்போஸ்தலர் 8 : 10 – 22)
ஐந்தாவது: எனது மனதில் இருக்கிற இன்னொரு தீர்மானம் ஒருக்காலும் மாறமாட்டாது. அதாவது: லோக வாழ்வுகளைச் சம்பாதிக்கும்படி தேவபக்தியைக் கருவியாக பிரயோகிக்கிறவன் லோக வாழ்வுக்காக தன் பக்தியை விட்டுவிடுவான். ஏனெனில், யூதாஸ் உலகத்தை நாடி பக்தியுள்ளவனானது எப்படியோ அப்படியே உலகத்துக்காகத் தன்பக்தியையும் தன்எஜமானையும் விற்றே போட்டான். ஆதலால் உங்கள் கேள்விக்கு நான் நினைக்கிறபடி நீங்கள் எல்லாரும்ஒத்துக்கொண்ட பிரகாரம் ஆம், ஆம், அது சரி என்று சொல்லுகிறதும், அது மெய்தான் என்று ஏற்றுக்கொள்ளுகிறதும், அஞ்ஞானமும், மாய்மாலமும், பேய்த் தனமுமாய் இருக்கின்றன. உங்களுக்கு கிடைக்கிற பலனும் உங்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாகவே இருக்கும் என்று சொல்லிமுடித்தான்.
கிறிஸ்தியான் இப்படிச் சொல்லவே அவர்கள்எல்லாரும் எதிர் வார்த்தை பேச சக்தியற்று திருக திருக விழித்து ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். திடநம்பிக்கை என்பவரும் கிறிஸ்தியானுடைய தெளிந்த புத்தியுள்ள உத்தரவைக் கவனித்து அது சரி என்று ஒத்துக் கொண்டார். ஆகவே அனைவரும் கம்மென்று சற்று நேரம் அமைதலாய் இருந்தார்கள். அப்புறம் கிறிஸ்தியானும் அவன் தோழனும் முந்திப்போகட்டும் என்ற மனம் உடையவர்கள் போல் உபாயியும், அவனுடைய தோழரும் மெதுவாய் நடந்தார்கள். அப்போது கிறிஸ்தியான் தன் தோழனைப் பார்த்து: இவர்கள் மனிதருடைய நியாய விசாரணைக்கு முன்நிற்கவே கூடாதானால் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு எப்படி எதிர் நிற்கக் கூடும்? களிமண் பாண்டங்களுக்கு முன்பாக கட்டைபோல் நிற்கிற இவர்கள் பட்சிக்கிற அக்கினி ஜூவாலை பற்றி எரியும் போது என்ன செய்வார்கள்! என்றான்.
1. உலகப்பற்றும் அவன் தோழரும், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைப்போல காணப்பட்டு தங்கள் மனதை உலகத்துக்கு சாய்கிறவர்களைக் குறிக்கிறது.