பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
இப்படி அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு மாயாபுரியின் கோட்டை வாசலைக் கடக்கவே தங்களுக்கு முன்னே நடந்துபோன ஒருவனைக் கண்டு அவனுடன் கூடினார்கள். அவனுக்கு உபாயி 1 என்று பெயர். இவர்கள் அவனை நோக்கி உமக்கு எந்த ஊர் ஐயா! இந்த வழியாக எவ்வளவு தூரம் போகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் நயவசனபுரியில் இருந்து புறப்பட்டு வருகிறேன். உச்சிதபட்டணம் சேர நடந்து போகிறேன் என்றான். ஆனால் தன் பெயரையோ அவன் சொல்லவில்லை.
நயவசனபுரியில் இருந்தா புறப்பட்டீர்? அவ்வூராருக்குள் எவனாவது யோக்கியன் உண்டா? (நீதிமொழிகள் 26 : 25) என்று கிறிஸ்தியான் கேட்டான்.
உபாயி: ஆம் நயவசனபுரியில் நல்லவர்கள் இல்லாவிட்டால் பின் எங்கேதான் இருப்பார்கள்?
கிறிஸ்: ஐயா! நான் உம்மை என்ன பெயரால் அழைக்கவேண்டும் தயவாய்ச் சொல்லும்.
உபாயி: நான் உங்களை அறியமாட்டேன். நீங்கள் என்னை அறியவும் மாட்டீர்கள். நீங்கள் இந்த வழியே போகிறது மெய்யானால் உங்களுடன் கூட வழிநடப்பது எனக்குச் சந்தோசந்தான். மற்றப்படி நான் தனிமையாகத்தான் போகவேண்டும்.
கிறி: உம்முடைய நயவசனபுரியைக் குறித்து நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அது மகா ஐசுவரியமுள்ள ஒரு பட்டணம் என்று கேள்விப்பட்டதாக எனக்கு ஞாபகம் உண்டு.
உபாயி: அதற்கும் சந்தேகமா? அது வாழ்வுள்ள ஒருபட்டணம் என்பதற்கு சந்தேகம் இல்லை. அவ்விடத்து மகாராஜரான பலர் எனக்கு நெருங்கிய பெந்துக்கள்தான்.
கிறி: நான் துணிந்து கேட்பதையிட்டு நீர் விசனமடைய வேண்டாம். அவ்விடத்திலுள்ள உமது இனபெந்துக்கள் யார் ஐயா?
உபாயி: ஏறக்குறைய எல்லாரும் என் பெந்துக்கள்தான். ஆனால் நெருங்கிய இனத்தாரை மாத்திரம் சொல்லுகிறேன். கட்சிமாறி நாயனார் இருக்கிறாரே அவர் சமய தந்திர மன்னர், இந்தப் பட்டணத்திலே முதலாவது குடியேறி தமது பெயரையே அதற்கு இட்ட குடும்பத் தலைவராகிய நயவசனி இருக்கிறாரே அவர் ஆகிய உயர்குலத்தோரும், இனியன், இருமுகன் ஆகிய இவர்களும் என் பெந்துக்கள்தான். எங்கள் ஊர் மூலஸ்தான குருவாகிய இரு நாக்கு இருக்கிறாரே அவரும் தூரத்தில் உள்ளவர் அல்ல அவர் என் பிதா வழியில் தாய்மாமன்தான். இன்னும் நிஜத்தைச் சொல்ல வேண்டு மானால், நான் பேரடுப்புள்ள ஒரு பிரபுவாக்கும். எனது பாட்டனாரோ ஒரு படகோட்டிதான், அவர் ஒரு திசையை நோக்கி மறுதிசையாய் தண்டுவலிக்கிற மகா சமர்த்தர். நானும் அந்தப்படி தண்டு வலித்தே திரண்ட பொருளைச் சம்பாதித்துக் கொண்டேன் என்றான்.
கிறி: நீர் ஒண்டிக்காரரா? கலியாணம் செய்தவரா?
உபாயி: கலியாணக்காரன்தான். என் மனைவி மகா பதிவிரதா பத்தினி. அவள் பத்தினி வயிற்றில் பிறந்த பத்தினி தான் அப்பா! யாருடைய மகள் சொல்லட்டுமா? அவள் போலியம்மாள் பெற்ற செல்வபுத்திரியாக்கும். ஆகையால் அவள் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். பெரிய வீட்டுக்காரி மகள் ஆனபடியால் அரசனானாலும் சரி, ஆண்டியானாலும் சரி எல்லாருக்கும் இணக்கமானபடி நடந்துகொள்ளத்தக்க பெரும் பக்தியுடையவளாய் இருக்கிறாள். எங்களுக்கும், மார்க்க விஷயங்களில் நுட்பமாய் நடந்துகொள்ளப் பிரயாசப்படுகிறவர்களுக்கும் அவ்வளவு ஒத்துவராது என்பது மெய்தான். ஆனால் என்ன? இரண்டு அற்ப காரியத்தி னாலேதான் அந்தப் பேதம் இருக்கிறது. அதென்னவென்றால் முதலாவது நாங்கள் காற்றுக்கும் கடல் அலைக்கும் எதிர்த்துப் போகிறதில்லை. (இரண்டாவது) ஆனால் மார்க்கமானது வெள்ளிச் சப்பாத்தைப் போட்டுக்கொண்டு தெரு வீதி ஏறுகிறபோது நாங்கள் அதிக வைராக்கியம் உடையவர்களாகிறோம். இந்தச்சமயத்தில் சூரிய பிரகாசம் பளிச்சென்று பிரகாசிக்கவும், ஜனங்கள் ஆர்ப்பரித்துப் புகழவும் நேரிட்டால் எங்களுக்கு மெத்தவும் மகிழ்ச்சி உண்டாகிறது என்று சொன்னான்.
இவ்வளவும் கேட்டவுடனே கிறிஸ்தியான் சற்றே விலகி நடந்து தன் தோழனாகிய திடநம்பிக்கையண்டை போய், காரியத்தைப் பார்த்தால் இவன் நயவசனபுரியின் உபாயி என்றுதான் என் மனதில் படுகிறது. இவன் அவனேயானால் அவ்விடத்து துஷ்டர் எல்லாரிலும் பரம துஷ்டன் நமக்குத் தோழன் ஆனான் என்று அறிந்து கொள்ள வேண்டியது என்றான். அதற்கு திட நம்பிக்கை: அவன் பேரைத்தான் கேளுமேன். பெயரைச் சொல்லவும் அவனுக்கு வெட்கம் இருக்குமா? அவன் வெட்கப்படமாட்டான் என்று எனக்குத் தோன்றுகிறது என்றான். அப்புறம் கிறிஸ்தியான் மறுபடியும் மெதுவாக அவனண்டை சேர்ந்து ஐயா, நீர் பேசுகிறதைப் பார்த்தால் உம்மிடத் திலுள்ள அறிவு உலகம் முழுவதிலும் உள்ளவர்களிடத்திலும் இல்லை போலக் காணப்படுகிறது. ஆனால், நான் வரம்பு தப்பிப் பேசுகிறதாக நீர் எண்ணவேண்டியதில்லை. உம்மைப்பற்றி எனக்கு இனம் தெரியும் போல இருக்கிறது. உம்முடைய நாமதேயம் நயவசனபுரியின் உபாயி அல்லவா?
உபாயி: ஆ-கா-கா! அது என்னுடைய பெயர் அல்ல, ஆனால் என் மேல் காய்மகாரப்படுகிற சிலர் இந்த வக்கணைப்பேரால் 2 என்னைக் கூப்பிடுகிறதுண்டு. நல்லோர் அநேகர், நிந்தையான பல பெயர்களை மகிமையாக எண்ணி இதற்கு முன் ஏற்றுக்கொண்டதுபோல, நானும் இதை மகிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாய்தான் இருக்கிறது.
கிறிஸ்: ஆனால் இதற்குமுன் பலரும் இந்தப்பேரால் உம்மை அழைக்கும்படி நீர் இடம் பண்ணிக்கொண்டதில்லையோ?
உபாயி: இல்லவே இல்லை, இந்தப் பேரால் என்னை அவர்கள் அழைக்கும்படி இடம்பண்ணிக்கொண்ட கெட்டகாலம் எதுவென் றால் காலத்துக்கும் சமயத்துக்கும் தக்கதாக நான் என் சொந்த புத்தியின்படி நடந்து, நல் அதிர்ஷ்டம் அடைகிறதுண்டு. அந்த முறையாக நல்ல வாழ்வும், பாக்கியமும் எனக்குப் பெருகிற்று. சிலர் என் அதிர்ஷ்டத்தைப் பார்த்து மனம் பொறாமல் இப்படி வக்கணைப் பேர் சொல்லுகிறதுண்டு. ஆனாலும் இப்படிப்பட்ட காரணத்தைத் தொட்டு ஒரு அவகீர்த்தி உண்டாகுமானால் அதை நான் ஆசீர்வாதம் என்றே எண்ணிக்கொள்ள வேண்டியது. அதினாலே பொறாமைக் காரர் என் மேல் அவகீர்த்தியை குவிக்க வேண்டியதில்லை.
கிறி: நான் கேள்விப்பட்டிருந்த ஆள் நீர்தான் என்று நினைத்தது சரிதான். என் மன விருப்பத்தை உள்ளபடி சொல்லவேண்டுமானால், நீர் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, இந்தப் பேர் உமக்கே தகுமானாதாய் இருக்கிறது என்று எனக்கு நன்றாய்த் தோன்றுகிறது.
உபாயி: உம்முடைய மனதில் அப்படி அபிப்பிராயப்பட்டால் அதற்கு நான் என்ன செய்யக்கூடும்? ஆனால் என்னை உங்கள் கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளப் பிரியம் இருக்குமானால் என்னை நல்ல தோழன் என்று அறிந்து கொள்ளுவீர்கள் என்பது மெய்.
கிறி: நீர் எங்களோடு கூட வருகிறது மெய்யானால் காற்றுக்கும், கடல் அலைக்கும் எதிர்த்துப் போக வேண்டியது. அப்படி எதிர்ப்பதோ உமது மனதுக்கு விரோதமாய் இருக்கிறாற்போல தோன்றுகிறதே. நீர் மார்க்கமானது வெள்ளிப்பாதரட்சை போட்டு வீதி வழி வரும்பொழுது மாத்திரம் அல்ல, அது கந்தைகட்டினதாய் கடைத் தெருவில் வரும்போதும் அதை சார்ந்திருக்க வேண்டியது. தெருக்களில் புகழ்ச்சி பெறும் பொழுது மாத்திரம் அல்ல, இரும்பு விலங்குகளோடு போகும்போதும் அதைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்றே.
உபாயி: நீங்கள் என் மனதைக் கட்டாயப்படுத்தி என் விசுவாசத்துக்கு ஆண்டவன்மாராய் இருக்கக்கூடாதே; என்னை என் இஷ்டத்துக்கு விட்டுவிடுங்களேன்; நான் கூடவே வருகிறேன்.
கிறி: அதெப்படி ஆகும்? நான் முன் சொல்லியபடி நீரும் செய்யாவிட்டால் ஒரு அடி எடுத்துவைக்கல் ஆகாது என்று கிறிஸ்தியான் சொன்னான்.
இப்படிச்சொன்னவுடனே உபாயி சொல்லுகிறான்: நீங்கள் என்ன சொன்னாலும் சொல்லுங்கள். என்னுடைய அபிப்பிராயங்களில் யாதொரு குற்றம் இல்லை. மேலும் அதினால் அதிக லாபமும் இருக்கிறது. ஆகையால் என் பழைய எண்ணங்களை நான் விடவேமாட்டேன். உங்களுடன் கூட வருகிறதற்கு வகை இல்லை யானால், உங்களைச் சந்திக்குமுன் நடந்து வந்ததுபோல தனித்து நடந்து போவேன். என் நோக்கத்துக்கு இசைந்தவன் எவனாவது பின்னாலே வந்து சேர்ந்தால் அப்புறம் நாங்கள் சல்லாபமாகப் பேசி உல்லாசமாய் நடந்து வருவோம், நீங்கள் போங்கள் என்று சொன்னான்.
1. உபாயி இது லோக வாழ்வுக்கடுத்த விஷயங்களில் அனுகூலமாயிருக்கும் மட்டும் பக்தர் போல நடந்துகொண்டு அதற்கு விரோதமான சம்பவங்கள் சம்பவிக்கும்போது பக்தியை முற்றிலும் விட்டுவிடுகிறவர்களைக் குறிக்கிறது. இவனுடைய பந்துக்களின் பெயர் மாயக்காரரின் குணங்களைக் காட்டுகிறது.
2. மாயக்காரர் இரண்டகம் செய்கிறவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் துன்பம் பொறுக்கமாட்டாமல் இப்படி இரு பட்சத்துக்கும் இணங்கி நடக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் வேறு கள்ளப் பேர்களால் தங்களை வஞ்சிக்கிறார்கள். பொருளாசைக்காரன், தான் விவேகமாய் நடக்கிறேனேயன்றி வேறல்ல என்று சொல்லிக் கொள்ளுகின்றான்.