சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
இவ்வண்ணமாய் அவர்கள் இருவரும் வழிநடந்து, அந்த வனத்தைக் கடந்து முடிகிற சமயத்தில் உண்மை தற்செயலாய் பின்னாகப் பார்த்து ஒரு ஆள் வருகிறதைக் கண்டான். அது முன் அறிந்த ஆள் போலவும் அவனுக்குக் காணப்பட்டது. உடனே அவன் தன் சிநேகிதனாகிய கிறிஸ்தியானைக் கூப்பிட்டு அதோ வருகிறது யார்? என்று கேட்டான். உடனே கிறிஸ்தியான் திரும்பிப் பார்த்து, ஆகா என் உத்தம சிநேகிதனாகிய சுவிசேஷகன் 1 வருகிறார் என்றான். அப்படியா? அவர்தானோ? அவர் எனக்கு உத்தம நேசர் தான், அவர்தான் எனக்கு திட்டி வாசலில் திசையைக் காட்டினவர் என்று சொன்னான். இதற்குள்ளாக அவரும் அருகில் வந்து, அவர்களுடன் கூடிக்கொண்டு பின்வருகிறபடி சம்பாஷித்தார்.
சுவிசேஷகர்: பிரியமான சகோதரரே, உங்களுக்குச் சமாதானம், உங்களுக்குச் சகாயம் செய்கிறவர்களுக்கும் சமாதானம்.
கிறி: வாரும், வாரும் புண்ணிய குருவே! உமது முகத்தைக் கண்டவுடனே, என்னுடைய நித்திய நன்மைக்கென்று நீர் செய்த உதவிகளும், இளைப்பில்லாத பிரயாசங்களும் என் ஞாபகத்தில் வருகிறது.
உண்மை: சுவிசேஷகரே, வந்தனம், வந்தனம்; ஆயிரந்தரம் வந்தனம் ஐயா! எங்களைப் போலொத்த ஏழைப் பிரயாணிகளுக்கு அருமை யான சுவிசேஷகரே! உம்முடைய சகவாசம் எவ்வளவோ உதவியாய் இருக்கிறது என்று உண்மை சொன்னான்.
சுவிசேகர்: நான் உங்களுடனே பேசிப் பிரிந்தது முதல் உங்களுடைய சீர் நிர்வாகங்கள் எப்படி? உங்களுக்கு என்னென்ன சம்பவித்தது? நீங்கள் எப்படி எப்படி நடந்துகொண்டீர்கள்? என்று சுவிசேஷகர் கேட்டார்.
அப்போது கிறிஸ்தியானும், உண்மையும் அவரவர் அனுபவித்த சங்கடங்களையும், பட்டபாடுகளையும், அவைகளிலிருந்து தப்பி இவ்வளவு தூரம் வந்து சேர்ந்த வகைகளையும் விஸ்தாரமாய்ச் சொன்னார்கள்.
அதைக் கேட்ட சுவிசேஷகர்: ஆகா! என் உள்ளம் சந்தோசத்தால் பூரிக்கிறது. நீங்கள் சங்கடப்பட்டதையிட்டல்ல, மெத்தவும் பலவீனராயிருந்தும் அவைகளை நீங்கள் ஜெயித்து, வெற்றியடைந்து, இந்நாள் மட்டும் பிரயாணம் செய்கிறீர்களே, அதுவே எனக்குச் சந்தோசமாய் இருக்கிறது.
ஆகா! இதைக்குறித்து என் நிமித்தமாகவும், உங்கள் நிமித்த மாகவும் என் ஆவியில் உண்டாகிற ஆனந்தத்துக்கு அளவில்லை என்று நான் மறுபடியும் சொல்லுகிறேன். எப்படியெனில் நான் விதைத்தேன் நீங்கள் அறுத்தீர்கள், “விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோசப்படத்தக்க காலம் இதோ வருகிறது” (யோவான் 4 : 36.) அதாவது நீங்கள் முடிவுபரியந்தம் உங்கள் பயணத்தை நடத்துகிறதற்கு “தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்பீர்கள்” (கலாத்தியர் 6 : 9.) உங்களுக்கு முன்னே கிரீடம் இருக்கிறது, அது அழிந்து போக மாட்டாத ஒரு கிரீடமாய் இருக்கிறது, “அதை நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (1 கொரிந்தியர் 9 : 24-27) உங்களைப்போல அநேகர் இந்தக் கிரீடத்தை பெற்றுக்கொள்ளும்படி பிரயாணப்பட்டு, வெகு தூரம் நடந்தும், வேறொருவன் அவர்களுக்கு முந்திக்கொண்டு அதைக் கொண்டு போய் விடுகிறதும் உண்டு. ஆகையால் ஒருவரும் உங்கள் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டு இருங்கள். (வெளி 3 : 11) நீங்கள் பிசாசின் குண்டு அடி தூரத்தை இன்னும் தாண்டிவிடவில்லை. “பாவத்துக்கு விரோதமாகப் போராடு கிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை” (எபிரேயர் 12 : 4) பரம ராஜ்யம் எப்போதும் உங்கள் முன் இருப்பதாக. காணப்படாதவைகளைப் பற்றிய விசுவாசத்தில் உறுதியாய் இருப்பீர்களாக. மறு உலகத்துக்கு இந்தப் பக்கத்தில் இருக்கும் எந்த விஷயங்களும் உங்களுக்குள் பிரவேசிக்கவே வேண்டாம். எல்லா வற்றிற்கும் மேலாக, உங்கள் சொந்த இருதயங்களை உற்றாராய்ந்து, அதின் இச்சைகளைப் பரிசோதனை செய்யுங்கள். ஏனெனில் அது எல்லாவற்றைப் பார்க்கிலும் “திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது” (எரேமியா 17 : 9) உங்கள் முகம் தீத்தட்டிக் கற்பாளம் போல் திடமாய் இருக்கட்டும், வானத்திலும் பூமியிலும் உள்ள சகல வல்லமைகளும் உங்கள் பட்சத்தில் இருக்கிறது என்று சொன்னார்.
கிறி: அப்புறம் கிறிஸ்தியான், சுவிசேஷகர் சொன்ன ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றியறிதல் செலுத்தி அதோடு மீதிப் பிரயாணத் துக்கு உதவியான பல புத்தி போதனைகளையும் (அவரை அவர்கள் தீர்க்கத்தரிசி என்று அறிந்திருந்தபடியால்) பிரயாணத்தில் உண்டாக இருக்கிற விபத்துக்களையும், அவைகளை ஜெயங்கொள்ளும்படியான முறையையும், சற்று சொல்லும் படியாகவும் கேட்டான். அதற்கு சுவிசேஷகர் சம்மதித்துக் கொண்டு பின் வருகிறபிரகாரம் சொல்லுகிறார்.
சுவிசேஷகர்: என் மக்களே! நீங்கள் “அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்றும், பட்டணங்கள் தோறும் “கட்டுகளும் உபத்திரவங்களும் உங்களைச் சூழ்ந்திருக்கிறது” என்றும் சத்திய சுவிசேஷ வாசகங்களில் எழுதப்பட்டிருக்கிறதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆதலால் அப்படிப் பட்ட துன்பங்கள் ஏதாவது ஒருவிதமாய் உங்களுக்குச் சம்பவியாத படிக்கு நீங்கள் உங்கள் பிரயாணங்களை நடத்திவிடலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். அந்த வாசகங்களின் உண்மையை நீங்கள் இதற்குள்ளாக அனுபவித்திருக்கிற பல பாடுகளால் அறிந்து இருக்கிறீர்கள். இன்னும் வெகு சீக்கிரத்துக்குள்ளாக வேறுஅநேக துன்பங்கள் உங்களைப் பின்தொடரும். இந்த விஸ்தாரமான வனத்தை கடந்து முடிக்கப்போகிற நீங்கள் இன்னும் கொஞ்ச தூரம் போனால் உங்களுக்கு தெரியப் போகிற ஒரு பட்டணத்தில் சேர வேண்டிய திருக்கும்.
அங்கு சேர்ந்த உடன் பல சத்துருக்கள் நானா திசையிலும் உங்களைச் சூழ்ந்து கொண்டு, உங்களைக் கொலை செய்யும் படியாக தங்களால் ஆன பிரயத்தனங்களை எல்லாம் செய்வார்கள். எப்படியாவது உங்களில் ஒருவனாவது அல்லது இருபேருமாவது உங்கள் சாட்சியை இரத்தத்தினாலே முத்திரை இடவேண்டியது இருக்கும் என்பதை உறுதியாய் நம்பிக் கொள்ளுங்கள். ஆனால் மரணபரியந்தம் உண்மையாய் இருங்கள். மகிமையின் இராஜா ஜீவ கிரீடத்தை உங்களுக்குத் தருவார். அங்கே சாகிறவனுடைய சாவு குரூரமாய் இருந்தாலும் அவனுக்கு உண்டாகும் துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் ஒரு அளவு இல்லாதிருந்தாலும், அவன் உயிரோடு இருக்கும் தன் தோழனிலும் பாக்கியம் உள்ளவன் என்றே சொல்ல வேண்டியது. அவன் மற்றவனுக்கு முந்திப் பரலோகத்தின் படிகளில் ஏறிவிடுவான் என்பதினாலே மாத்திரம் அல்ல, மற்றவன் இன்னும் தன் பிரயாணம் முடியுமட்டும் அனுபவிக்க வேண்டிய பெருந்துன்பங் களுக்கெல்லாம் தப்பிக் கொள்ளுவான் என்பதினாலும் அவன் அதிக பாக்கியவானாய் இருக்கிறான். நீங்கள் அந்தப் பட்டணத்தில் பிரவேசித்தவுடன் நான் சொல்லுகிறவவைகள் எல்லாம் உங்களுக்கு சம்பவிக்கும். அப்பொழுது உங்கள் சிநேகித னையும், அவன் சொன்ன காரியங்களையும் நினைவுகூர்ந்து தைரிய முள்ள புருஷராக உங்களை வெளிப்படுத்தி, நன்மை செய்கிறவர்களாய் உங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக் கடவீர்கள் என்று சொன்னார்.
1. சுவிசேஷகன்: கிறிஸ்தியான் சிலகாலம் விட்டுப் பிரிந்திருந்த அவனுடைய பழைய போதகனைக் குறிக்கிறது. இப்பொழுது அவர் அவனையும் அவன் தோழனையும் உற்சாகப்படுத்தி அவர்கள் பயணத்தை நிறுத்திவிடாமல் தொடரும்படி சொல்லுகிறார்.