வாயாடி வந்து கூடுதல்
பின்னும் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால், கிறிஸ்தியானும், உண்மையும் ஒருவரோடு ஒருவர் பல காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டே வழி நடந்து போகையில் உண்மை தற்செயலாய் திரும்பி வாயாடி 1 என்கிற ஒரு மனுஷன் தங்கள் பக்கத்தில் நடந்து வருகிறதைக் கண்டான். அவர்கள் இப்போது நடந்து போன இடத்தில் அவனும் கூட நடக்கத்தக்கதாக பாதை சற்று அகலமாக இருந்தது. அவன் அதிக நெட்டையன். தூரத்தில் அவன் அதிக அழகாய்த் தோன்றினாலும், சமீபத்தில் அலங்கோலமாய்க் காணப்பட்டான். அவனும் உண்மையும் பின் வருகிறபடி சம்பாஷிக்கத் தொடங்கினார்கள்.
உண்மை: சிநேகிதனே, எங்கே பயணம்? மோட்ச லோகத்துக்கா?
வாயாடி: ஆம், ஆம் அங்கே போகிற பயணம் தான்.
உண்மை: அது சரி, நீர் எங்களுக்கு நல்ல வழி துணையாய் இருப்பீர் என்று நம்புகின்றேன்.
வாயாடி: நான் உங்களுக்கு வழித்தோழனாய் இருப்பேன் என்று என் நல் மனதோடு அறிக்கையிடுகிறேன்.
உண்மை: பின்னே வாரும், கூடிப்போவோம், நடவும், பிரயோஜனமான பல விஷயங்களைக் குறித்துப் பேசிக்கொண்டே நடப்போம் வாரும்.
வாயாடி: உங்களோடானாலும் சரி, வேறு யாரோடானாலும் சரி, நல்ல காரியங்களைக் குறித்து சம்பாஷித்துக்கொண்டுபோவது எனக்கு மெத்தப் பிரியமான காரியமாய் இருக்கிறது. இப்படிப்பட்ட நல்ல மனதுடையவர்களோடு நான் கூடி வழி நடக்கும்படி நேரிட்ட சமயத்துக்காக நான் அதிக சந்தோசப் படுகிறேன். உள்ளதைச் சொன்னால், உங்களைப்போல் நலமான காரியங்களைப் பேசிக்கொண்டு தங்கள் வழிப்பிரயாணத்தைக் கழிக்கிறவர்கள் கொஞ்ச பேர், மற்றவர்கள் எப்போதும் வீணான காரியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போக ஆசைப்படுகின்றார்கள். இது அடிக்கடி என் மனதுக்கு வேதனையாய் இருந்துண்டு.
உண்மை: இது மனஸ்தாபப்பட வேண்டிய விஷயந்தான். பரலோகத்தின் தேவனுடைய காரியங்களைப் பேசுகிறதைப் போல் மனுஷருடைய நாவுக்கு அருமையான விஷயம் வேறென்ன இருக்கிறது!
வாயாடி: உம்மை நான் அதிகமாய் விரும்புகிறேன், ஏனென்றால் உமது வாயின் பேச்செல்லாம் மகா உணர்வை ஊட்டுகின்றது. அதுவுமின்றி தெய்வீக விஷயங்களைப்பற்றிப் பேசுகிறதைப்போல் இன்பமானதும் பிரயோஜனமுள்ளதுமான வேறு விஷயங்கள் தான் என்ன இன்பமான வேறு செய்திகள் உண்டோ? அதாவது அதிசய சம்பவங்களைக் குறித்துப் பேச ஆசைப்பட்டால்: திருஷ்டாந்தமாக, ஒரு மனுஷன் சரித்திர சம்பந்தமான விஷயங்களை, அல்லது இரகசிய விஷயங்களைப் பற்றிச் சம்பாஷிக்க விருப்பங்கொண்டாலும், அல்லவென்று ஒரு மனுஷன் அற்புத விஷயங்களை அல்லது அடையாளங்களைக் குறித்துப் பேசிக்கொள்ள விரும்பினாலும் அப்படிப்பட்ட விஷயங்களைக் குறித்து பரிசுத்த வேதாகமத்தில், மனதைக் கவர்ந்து கொள்ளும்படியாக அவ்வளவு இன்பமாய் வரையப்பட்டிருக்கிறதைப் போல, வேறெங்கே எழுதப்பட்டிருக்க நாம் காணலாம்?
உண்மை: அது மெய், ஆனால் அந்த விஷயங்களால் நமக்குப் பிரயோஜனத்தைத் தரும் காரியங்களை பேசிக் கொள்ளுகிறதே நமது நோக்கமாய் இருக்க வேண்டியது.
வாயாடி: அதுதான், நானும் அதைத்தான் சொல்லுகிறேன். அதைப் போலொத்த காரியங்களைப் பேசுவது அதிக பிரயோ ஜனத்தைத் தரும். அப்படிப் பேசிக்கொள்ளுகிறதால், ஒரு மனுஷன் பூமிக்கடுத்த விஷயங்களின் மாயை இன்னதென்றும், வானத்துக்கடுத்த விஷயங்களின் மாட்சிமை இன்னதென்றும், கிரகித்துக் கொள்ளத்தக்க அநேக விஷயங்களைப்பற்றிய அறிவை அடையலாம். பொதுவான பிரயோஜனத்தைப் பற்றிச் சொன்னால் இதுதான்: ஆனால், விசேஷ பிரயோஜனத்தைப் பற்றிச் சொன்னாலோ, இவைகளைப்பற்றி பேசிக் கொள்ளுகிறதால் ஒரு மனுஷன் மறுபிறப்பின் அவசியம், நமது கிரியைகளின் பேதமை, கிறிஸ்துவின் நீதியின் தேவை முதலியவை களைப் பற்றிப் படித்துக் கொள்ளலாம். அதுவும் அல்லாமல் இவை களைப் பற்றி எத்தனைக்கு பேசிக் கொள்ளுகிறோமோ அத்தனைக்கு மனந்திரும்புகிறதாவதென்ன? விசுவாசிக்கிறதாவதென்ன? ஜெபிக்கிறதாவதென்ன? சகிக்கிறதா வதென்ன? என்கிற இவை மாத்திரமா? சம்பாஷிப்பதால் ஒரு மனுஷன் தன் ஆத்துமாவைத்தேற்றிக் கொள்ளும்படியான சுவிசேஷத்தின் பிரதான வாக்குத்தத்தங்களும், ஆறுதலான வாய் மொழிகளும் இன்னதென்றும் படித்துக் கொள்ளலாம். இவற்றோடு முடிந்ததோ? இப்படிக் கலந்து பேசிக் கொள்ளுவதால் ஒரு மனுஷன் தப்பான எண்ணங்களைக் கண்டிக்கவும், சத்தியத்தை நிலை நிறுத்தவும் சமர்த்தனாகிறதோடு, அறிவீனருக்கு அறிவை உணர்த்தும்படியான சர்வசாஸ்திர பண்டிதனும் ஆகிவிடலாம்.
உண்மை: இதெல்லாம் சரிதான். இவைகளைப்பற்றி உமது வாயிலிருந்து புறப்படுவதைக் கேட்பது எனக்கு சந்தோஷந்தான்.
வாயாடி: இப்படிப்பட்ட சம்பாஷணைகளைச் செய்து தங்கள் அறிவை விருத்தியாக்கிக் கொள்ளாமையினாலேதான், ஐயோ! அநேகம் பேர் நித்திய ஜீவனுக்கு ஏதுவான விசுவாசத்தின் அவசியத்தையும் கிருபையின் கிரியைகளின் தாபந்தத்தையும் தங்கள் ஆத்துமாவில் அறியாதிருந்து, தேவனுடைய ராஜ்யத்தில் தங்களைச் சேர்க்க மாட்டாத நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை அறிவீனத்தினாலே கைக்கொண்டு காலங்கழிக்கிறார்கள்.
உண்மை: ஐயா, உம்முடைய பேச்சு தலைக்குமேல் – ஆனால் பரம காரியங்களைப் பற்றிய அறிவு தேவ ஈவாய் அல்லவோ இருக்கின்றது. அவைகள் மனுஷ முயற்சிகளால் அல்லது அவைகளைக் குறித்துப் பேசிக்கொள்ளுகிறதால் மாத்திரம் சம்பாதிக்கக் கூடியவைகள் அல்லவே!
வாயாடி: அதெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும், உன்னதத்தில் இருந்து ஒருவனுக்கு அருள் அளிக்கப்படாவிட்டால் ஒரு மனுஷன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான். எல்லாம் கிருபையால் கிடைக்கிறது, கிரியைகளினால் அல்ல. இது மெய் என்பதற்கு நூறு வேத அத்தாட்சிகள் உமக்கு வேண்டுமானாலும் சரமாரிபோல் பொழிய இதோ தயாராய் இருக்கிறேன்.
உண்மை: நல்லது. நாம் இப்போது பேசிக்கொள்ள வேண்டிய சங்கதி இன்னது என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லும்.
வாயாடி: அதை உமது இஷ்டம்போல தெரிந்து கொள்ளுமேன், நீர் தெரிந்து கொள்ளும் பொருள் பரலோக விஷயமானாலும் சரி, பூலோக விஷயமானாலும் சரி, சன்மார்க்க விஷயமானாலும் சரி, சுவிசேஷ விஷயமானாலும் சரி, வைதீக விஷயமானாலும் சரி, லௌகீக விஷயமானாலும் சரி, கடந்த காரியங்களானாலும் சரி, வருங்காரியங்களானாலும் சரி, நாட்டு விஷயங்களானாலும்சரி, வீட்டு விஷயங்களானாலும் சரி, நமக்கு வேண்டிய விஷயங்களானாலும் சரி, வேண்டாத விஷயங்களானாலும் சரி, எதுவோ அதை நீர் சொல்லும். அதினால் நமக்குப் பிரயோஜனம் உண்டாகும்படியான முறையாய் நான் பேசுவேன்.
வாயாடியினுடைய சாதுரிய வார்த்தைகள் உண்மையை பிரமிக்கச் செய்தது. அவன் மெதுவாக நகர்ந்து பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த கிறிஸ்தியானண்டை போய், காதோடு வாய் வைத்து, நமக்கு அகப்பட்ட வழித்தோழன் எவ்வளவு தைரியமுள்ளவனாய் இருக்கிறான் பாரும். மெய்யாக இவன் வெகு சாமர்த்தியமுள்ள மோட்ச பிரயாணி ஆவான் என்று சொன்னான்.
கிறி: உண்மை இப்படிச் சொன்னவுடனே கிறிஸ்தியான் புன்னகை கொண்டு, நீர் மெச்சிக்கொள்ளுகிற ஆள் தன்னை அறியாத இருபது பேரோடு போனாலும் அவ்விருபது பேரையும் தன் வாயாட்டத்தால் மயக்கிப்போடுவான் என்றான்.
உண்மை: அப்படியானால் நீர் அவனை அறிவீரோ?
கிறி: அறியமாட்டேனா? தன்னை அவன் அறிந்து கொண்டதை விட நான் அவனை அறிவேன்.
உண்மை: அவன் யார் என்று தயவுசெய்து சொல்லும்.
கிறி: அவன் பேர் வாயாடி. நம்முடைய ஊரான்தானே, நீர் அவனை அறியாதது ஆச்சரியமாக இருக்கிறது. நம்முடைய ஊர் பட்டிக்காடாய் இராமல் பெரிய பட்டணமாய் இருக்கிறதைத் தொட்டு உமக்குத் தெரியவில்லை போல் இருக்கிறது.
உண்மை: நம்முடைய ஊரான்தானா? எனக்கு இனம் தெரியவில்லையே, இவன் யாருடைய மகன்? இவன் வீடு எந்தத் தெருவில் இருக்கிறது?
கிறி: இவனையா இனம் அறியமாட்டீர்? இவன் அலப்புத் தெருவில் குடியிருக்கிற நயப்பேச்சு என்கிறவனுடைய மகன். அலப்புத் தெரு வாயாடி என்றால், தெருவில் விளையாடுகிற சிறு குழந்தை களுக்கும் தெரியுமே. அவன் வாய் நன்றாய்த்தான் இருக்கிறது, ஆனால் மற்ற விஷயத்தில் மெத்த அற்பமான மனுஷன்.
உண்மை: அப்படியா? பார்த்தால் மகா யோக்கியன் போலக் காணப்படுகிறான்.
கிறி: அவனுடைய உள்ளான காரியங்களை அறியாதவர்கள் அவனைப்பற்றி இப்படியே சொல்லுவார்கள். நீர் அவனை மகா யோக்கியன் என்று சொன்ன வார்த்தை, சித்திர வேலையைப் பற்றி நான் கவனித்த ஒரு காரியத்தை நினைப்பூட்டுகிறது. சித்திரக்காரன் எழுதிய படம் தூரத்தில் மகா அழகாய்க் காணப்பட்டாலும் சமீபத்தில் அவலட்சணமாய்த் தோன்றுகிறது. வாயாடியின் காரியமும் அப்படி என்று சொல்லலாம். அவனைக்குறித்து நாட்டுக்குள் நல்ல பேர்தான், வீட்டுக்குள் இருக்கிற நாற்றம் கொஞ்சம் அல்ல.
உண்மை: நீர் சிரித்ததைப் பார்த்தால் இதெல்லாம் பரியாச வார்த்தைகள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
கிறி: நான் புன்சிரிப்பு கொண்டபோதினும் இப்படிப்பட்ட விஷயங்களில் நான் ஒருவனைப் பரியாசம்பண்ணாதபடிக்கும் அல்லது இல்லாததைச் சொல்லி ஒருவனைக் குற்றப்படுத்தாதபடிக்கும் ஆண்டவர் என்னைக் காப்பாராக. அவன் காரியங்களைப்பற்றி இன்னும் சற்று விபரமாய் சொல்லுகிறேன் கேளும். இவன் எந்தக் கூட்டத்துக்கும் ஏற்ற கோமாளியாயும், எந்தப் பேச்சுக்கும் ஏற்ற வாயாடியாயும் இருக்கிறான். உம்மிடத்தில் பேசுகிறதெப்படியோ, அப்படியே சாராயக்கடை மேடையிலிருந்தும் பேசுவான். சாராய வெறி சிரசில் ஏறுகிறதற்குத்தக்கதாக வாய் வழியாய் இப்படிப்பட்ட பேச்செல்லாம் எழும்பும். அவன் இருதயத்திலாவது, வீட்டிலாவது, சம்பாஷணையிலாவது தேவ பக்தியின் வாசனையை முதலாய்க் கண்டு பிடிக்கக்கூடாது. அவன் பக்தி எல்லாம் அண்ணாக்குமுதல் நுனி நாக்குவரையும் மாத்திரம் இருக்கிறது. இப்படி வாயாடி கழிப்பதே மதாபிமானம் என்று அவன் தன் சிந்தையில் எண்ணி இருக்கிறான்.
உண்மை: நீர் இப்படியா சொல்லுகிறீர்? அப்போ நான் அவனால் ஏமாந்து போனேன் போல் இருக்கிறதே!
கிறி: போல் இருக்கிறதா? ஏமாந்தே போனீர், இது நிஜம். “அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்” (மத்தேயு 23 : 3) என்ற தேவ வார்த்தையை நினைத்துக் கொள்ளும். “தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே இருக்கிறது” (1 கொரிந்தியர் 4 : 20) அவன் ஜெபத்தைக் குறித்தும், விசுவாசத்தைக் குறித்தும், மனந்திரும்புதலைக் குறித்தும், மறுபிறப்பைக்குறித்தும் பேசுகிறானே; இப்படிப் பேசத் தெரியுமேயல்லாமல் வேறொன்றும் தெரியாது. நான் அவனோடு குடியிருந்து, வீட்டிலும், வெளியிலும் அவனுடைய காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறேன். நான் அவனைப்பற்றிப் பேசுவ தெல்லாம் நிஜம் என்று நன்றாய் அறிவேன்.
முட்டையின் வெள்ளைக்கரு எப்படி ருசி அற்றிருக்கிறதோ அப்படி அவன் வீடும் பக்தியற்ற பாழ்வீடாய் இருக்கிறது. அங்கே ஜெபமும் இல்லை, பாவத்துக்காக உண்டாகும் உத்தம மனஸ்தாபமும் இல்லை. உள்ளதைச் சொன்னால், இவனைப் பார்க்கிலும் மிருகம் தன் நிலைமையில் தேவனை அதிகமாக கனப்படுத்துகின்றது என்று சொல்லலாம். அவன் கிறிஸ்து மார்க்கத்தின் அழுக்கும், அவமானமும், நிந்தையுமாய் இருக்கிறான் என்று அவனை அறிந்த எல்லாரும் சொல்லுவார்கள். (ரோமர் 2 : 24, 25) அவன் நிமித்தம் அவனுடைய வீட்டின் அக்கம் பக்கத்திலெல்லாம் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகிறது. அவனை அறிந்த சாதாரண ஜனங்கள் எல்லாரும், “வெளியில் பரிசுத்தவான், வீட்டில் பிசாசு” என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்கள். அவன் வீட்டார் எல்லாருக்கும் அவனுடைய நடவடிக்கை தெரிந்திருக்கிறது. அவன் வண்டனாயிருந்து, சண்டைக்கு விழுந்து, வேலைக்காரரோடு முண்டுத்தனமான வார்த்தைகளை பேசுகிறதையிட்டு அவனுக்கு என்னதான் செய்ய வேண்டும் என்றும், அவனுடன் எப்படித்தான் பேசலாம் என்றும் தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அவனோடு கொடுக்கல் வாங்கல் பண்ணுகிறவர்கள், இந்த வாயாடியோடு கூடி வியாபாரம் செய்கிறதைப் பார்க்கிலும், வழிப்பறிகாரனோடு வியாபாரம் செய்யலாம் அப்பா என்று அங்கலாய்க்கின்றார்கள். இவனா? கூடுமானால் அவர்களையும் ஏமாற்றி, சூதுசெய்து, தந்திரம் பண்ணி, குல்லாப்போட்டுவிடுவான். அதுவுமல்லாமல் தன் பிள்ளை களும் தன்னைப் போல பித்தலாட்டக்காரர் ஆகும்படி இவன் அவர்களுக்கு நன்றாய்ப் படிப்பிக்கிறான். அவர்களில் யாராவது தன் மனதுக்குப் புத்தியீனராய் அல்லது பயங்காளிகளாய் இருக்கிறதாக (ஏனெனில் இளகிய மனச்சாட்சியின் ஆரம்பத்தை வாயாடி இப்படியே எண்ணுகிறான்) தெரியவந்தால் அவன் அவர்களை மூடர் என்றும், மரத்தலையுள்ளவர்கள் என்றும் தீர்மானித்து, உயர்ந்த உத்தியோகங் களில் அவர்களை வைக்காமலும், மற்றவர்களிடத்தில் அவர்களைக் குறித்துப் புகழ்ந்து பேசாமலும் இருக்கிறான். என் மனதில் பட்டிருக்கிற எண்ணத்தின்படி அவன் தன்னுடைய துன்மார்க்கமான செய்கை களால் அநேகர் இடறவும், விழுந்து போகவும் காரணமாய் இருந்தது உண்டு.
தேவன் அவனைத் தடுக்காதபட்சத்தில் அவன் இன்னும் அநேகருடைய அழிவுக்கு ஏதுவாய் இருப்பான் என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்.
உண்மை: என் நல்ல சகோதரனே! நீர் அவனை அறிந்திருக்கிற தனாலே மாத்திரம் அல்ல, ஒரு உத்தம கிறிஸ்தவனைப் போல மற்றவர்களுடைய சங்கதிகளைப்பற்றித் தெரியப்படுத்து கிறதினாலும் நான் உமது பேச்சை நம்ப கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். ஏனெனில், வாயாடியைப்பற்றி நீர் சொல்லியதெல்லாம் துர்ச்சிந்தை யினாலே அல்ல, காரியம் அப்படி இருக்கிறபடி யினாலேதான் சொல்லுகிறீர் என்று நான் நம்புகிறேன்.
கிறி: உம்மைப் போல் நான் அவனை முந்தி அறியாதிருந்தால் நானும் துவக்கத்தில் நீர் நினைத்தபடியே ஒரு வேளை அவனைக் குறித்து நினைக்க ஏதுவாயிருந்திருக்கும். அவனைக் குறித்து நான் சொல்லிய சங்கதிகளை, சத்திய மார்க்க விரோதிகளால் கேள்விப்பட்டு இருந்தால் அதைப் புறங்கூறுதல் என்று தள்ளிவிட வேண்டியது. சத்திய மார்க்க விரோதிகள் எப்போதும் மெய் மார்க்கத்தாருக்கு விரோதமாய் பேசுகிறதே அவர்கள் வழக்கம். இவனைக் குறித்து இம்மட்டும் சொன்னவைகளாலும், இன்னும் நான் அறிந்திருக்கிற இவைபோன்ற பல விஷயங்களாலும் அவனைக் குற்றவாளியாக ருசுப்படுத்த என்னால் கூடும். அதுவுமின்றி நல்லவர்கள் அவனைக்குறித்து வெட்கப் படுகிறார்கள். அவனை அவர்கள் சகோதரன் என்று அழைக்கவாவது, சிநேகிதன் என்று சொல்லவாவது இடம் இல்லை. வாயாடி என்ற பேர் காதில் விழுந்த உடனே அவனை அறிந்தவர்களுடைய முகம் சுண்டிப் போகிறது.
உண்மை: நல்லது; சொல்லுகிறது வேறே, செய்கிறது வேறே என்று எனக்கு இப்போது நன்றாய் விளங்குகிறது. இந்த வித்தியாசத்தை இனி நான் கவனித்துக் கொள்ளுவேன்.
கிறி: சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் எவ்வளவு பேதம்உண்டோ அவ்வளவு பேதம், சொல்லுக்கும் செய்கைக்கும் உண்டென்பது நிஜமான காரியம். ஆத்துமா இல்லாத சரீரம் செத்ததாய் இருக்கிறது போல, சொல்லுதல் மாத்திரம் இருந்து செய்கை இல்லாவிட்டால் செத்த பிணம் என்றே சொல்ல வேண்டும். தேவ பக்திக்கு உயிர் நல்ல நடத்தையே. “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படும் உபத்திர வத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாய் இருக்கிறது” (யாக்கோபு 1 : 27 1 : 22-26) இந்த இரகசியம் வாயாடிக்குத் தெரியாது.
காது கொடுத்துக் கேட்கிறதும், வாய் திறந்து பேசுகிறதுமே ஒருவனை நல்ல கிறிஸ்தவனாக்கிப் போடும் என்று அவன் நினைத்துக் கொண்டு தன்னுடைய ஆத்துமாவை வஞ்சித்துக் கொள்ளுகிறான். கேட்பது விதை ஊன்றுவது போல மாத்திரம் இருக்கிறது. அந்த விதை இருதயத்திலும், நடக்கையிலும் பலனைக் கொடுக்கிறது என்று காட்ட வாய்ப்பேச்சு போதாது. நடுத்தீர்வை நாளில் மனுஷர் அவரவருடைய கனிகளின்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நாம் திட்டமாய் நம்பிக்கொள்ள வேண்டியது. அந்த நாளிலே நீங்கள் விசுவாசித்தீர்களா என்று கேட்கப்படாமல், செய்கிறவர்களாய் இருந்தீர்களா அல்லது சொல்லுகிறவர்களாய் மாத்திரம் இருந்தீர்களா? என்று கேட்கப்படும். (மத்தேயு 13 : 23) அவரவர் வாயில் இருந்து அதற்கு வரும் உத்தரவுக்குத்தக்கதாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். உலகத்தின் முடிவு நமக்குள் இருக்கும் பயிர் அறுப்புக்கு ஒப்பிடப்பட்டு இருக்கிறது. அறுப்பில் சமுசாரி பலனைத் தவிர வேறொன்றையும் விரும்புகிறதில்லை என்று உமக்குத் தெரியும். மெய் விசுவாசத்தினால் உண்டாகாததொன்றும் நடுத்தீர்வை நாளில் கவைக்கு உதவாமல் போகும். வாயாடியினுடைய தேவபக்தி அந்த நாளில் ஒரு பொருட்டாய் இருக்கமாட்டாது என்று உமக்கு விளக்கிக் காட்டும்படியாகவே இதையெல்லாம் சொன்னேன். (மத்தேயு 13 : 30)
உண்மை: இவைகளை நீர் சொல்ல நான் கேட்கிறதினாலே சுத்தமான மிருகங்கள் இவை என்று கண்டுபிடிக்கும்படி மோசே முனிவர் சொல்லும் குறிப்புகள் என் ஞாபகத்தில் வருகிறது. (லேவியராகமம் 11 ஆம் அதிகாரம் உபாகமம் 14 ஆம் அதிகாரம்.) உத்ம பக்தன் விரிகுளம்புள்ளதும், அசைபோடுகிறதுமான ஜந்துவுக்கு சமம் என்று சொல்லலாம். அவன் விரிகுளம்புமாத்திரம் உள்ள ஜந்துவைப் போலும் அல்ல, அசைபோடுகிறது மாத்திரமுள்ள ஜந்துவைப்போலும் அல்ல. முயல் அசை போடுகிறது ஆனாலும் அது சுத்தமுள்ளதல்ல, ஏனெனில் அதற்கு விரிகுளம்பில்லை. வாயாடி இருக்கிறானே, அவன் உள்ளடி முயலுக்கு ஒப்பானவன். அவன் அசைபோடுகிறான், எப்படியெனில் பல அறிவையும் சம்பாதிக்கிறான். வார்த்தைகளை அரைத்துக் குவிக்கிறான், ஆனால் அவனுக்கு விரிகுளம்பில்லை; அதாவது பாவிகளின் வழியைவிட்டுப் பிரிகிற சுபாவம் அவனிடத்தில் இல்லை. முயல் அசைபோட்டும், அதின் கால் நாயின் காலைப்போல், அல்லது கரடியின் காலைப்போல் இருக்குமட்டும் அது அசுத்தமானது தான். இந்த வாயாடியின் காரியமும் அப்படியே என்று நினைத்துக் கொள்ளும்.
கிறி: இந்த வாக்கியங்களை நான் அறிந்தமட்டும் நீர் சுவிசேஷ உபதேசங்களின் சாரத்துக் கேற்றதாகத் தாற்பரியப்படுத்தி இருக்கிறீர் என்று காண்கின்றேன். அதோடு நான் வேறொரு கருத்தையும் வெளியிட விரும்புகிறேன். அப்போஸ்தலானாகிய பவுல்: வாய்ச் சம்பிரதாயக்காரரும், மற்றவர்களுமான பல மனுஷரை சத்தமிடுகிற வெண்கலம் என்றும், ஓசையிடுகிற கைத்தாளம் என்றும் அழைக் கின்றார். (1 கொரிந்தியர் 13 : 1 -3) அதாவது அவரே வேறொரு இடத்தில் விளக்கிக் காட்டுகிறபடி அவர்கள் சத்தம் இடுகிற உயிரில்லாத வாத்தியங் களுக்குச் சமானமாய் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 14 : 7) உயிரில்லாதவைகள் என்பது மெய்யான விசுவாசமும், சுவிசேஷ கிருபையும் இல்லாதவர்கள் என்பதைக் குறிக்கிறது. இப்படிப்பட்டவர்களுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் தேவதூதர்களுடைய சத்தத்திற்கு ஒத்திருந் தாலும், அதினாலே அவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கிற தேவனுடைய புத்திரரோடு கூடி வாழும்படிக்கு குடியேற்றப்பட மாட்டார்கள்.
உண்மை: அது சரி; அவனுடைய கூட்டுறவு துவக்கத்தில் எனக்கு அவ்வளவு பிரியமாய் இருக்கவில்லை. இப்போது முற்றிலும் வெறுத்துப் போயிற்று. அவனை நம்மைவிட்டுத் தொலைக்கிறதற்கு என்ன பிரயத்தனம் பண்ணலாம்?
கிறி: நீர் என் புத்தியைக் கேட்டு நான் சொல்லுகிறபடி மாத்திரம் செய்யும்; கடவுளாய் அவனுடைய இருதயத்தைத் தட்டி அவன் மனதைத் திருப்பிவிட்டால் அன்றி மற்றப்படி இவன் சகவாசம் நமக்கு வேண்டாம் என்று அவனே ஓட்டம் பிடித்துவிடுவான் பாரும்.
உண்மை: நான் என்ன செய்யச் சொல்லுகிறீர்?
கிறி: என்ன செய்ய? நீர் மறுபடியும் அவனண்டை போய், மெய் தேவபக்தியின் வல்லமையைக்குறித்து, மன உணர்வுக்கேற்றதாகப் பேச்சுக் கொடுக்கும்படி கருத்தாய் இருந்துகொண்டு, அதைக்குறித்துப் பேசுவோமா என்று கேளும். அவன் அதைக் குறித்து நானாச்சு என்று சொல்லி இணங்கிக்கொள்ளுவான். அவன் இணங்கின பின்பு, அந்த மெய் தேவ பக்தியின் வல்லமை அவன்இருதயத்திலும், வீட்டுக் குடித்தனத்திலும் வெளிச் சம்பாஷணைகளிலும் உண்டா இல்லையா என்று தெளிவாய்க் கேட்டுப் பரிசோதனை செய்து பாரும்.
நல்லது அப்படியே ஆகட்டும் என்று உண்மை நெடிய நடந்து மறுபடியும் வாயாடியண்டை போய், வாரும் என்று அவனை அழைத்தான். ஆகா வந்தீரா? மெத்த சந்தோசம், என்ன விசேஷம் என்று கேட்டான்.
வாயாடி: மெத்த சலாம், வாரும், எல்லாம் ஷேமம்தான். இதற்குள் அனந்தம் காரியங்களை நாம் பேசி முடித்திருக்கலாம் என்று நினைத்தேன்.
உண்மை: நல்லது, உமக்கு இஷ்டமானால் உடனே பேசத் தொடங்குவோமே. நாம் பேசும் விஷயம் இன்னது என்று என்னையே தீர்மானிக்கச் சொன்னீரே, தேவனுடைய இரட்சண்ய கிருபை மனுஷர் உள்ளத்தில் இருக்கும்போது எவ்விதமாய் வெளியாக்கப்படும் என்ற விஷயத்தையே நமது சம்பாஷணையின் பொருளாக வைத்துக்கொள்ளுவோமாக.
வாயாடி: நீர் குறித்த பொருளைக் கூர்மையாய்க் கவனிக்கிறபோது, வஸ்துக்களின் வல்லமையின் பேரில் போகிறீராக்கும். நல்லதுதான், இது முதல்தரமான கேள்விதான். இதற்கு உத்தரவு சொல்ல மனப்பூர்வத்தோடு இருக்கிறேன். அதின் மறுமொழியை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறேன் கேளும். முதலாவது, தேவ கிருபை எந்த இருதயத்தில் இருக்குமோ அங்கே அது பாவத்துக்கு விரோதமாக பெருங்கூச்சலை எழும்பச் செய்கிறது. இரண்டாவது:
உண்மை: இல்லை, பொறும், பொறும். நாம் ஒவ்வொன்றாக பரிசோதனை செய்துவிட்டு அடுத்ததுக்குப் போவோம். நீர் அப்படிச் சொன்னதைவிட, தேவ கிருபையுள்ள ஆத்துமாவானது தன் பாவங்களை அரோசிக்கும்படியாக இணங்குகிறது என்று இப்படிச் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
வாயாடி: அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்? பாவத்துக்கு விரோதமாய் கூப்பாடு போடுகிறது என்றால் என்ன? பாவ அரோசிப்புக்கு இணங்குகின்றது என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
உண்மை: ஓ! இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதே. லோக முறைப்படி ஒரு மனுஷன் தன் பாவங்களுக்கு விரோதமாய் கூக்குரலிடலாம், ஆனால் தெய்வீக பக்தியினால் உண்டாகிற விரோதத்தின் வல்லமையினால் அன்றி மற்றப்படி அவன் தன் பாவங்களை அருவருக்கக் கூடாதவனாய் இருப்பான். நான் அடிக்கடி அநேகர் பிரசங்க மேடையில் நின்று கொண்டு பாவத்துக்கு விரோதமாய் கூக்குரலிடக் கேட்டிருக்கின்றேன்.
அப்படிப்பட்டவர்கள் பின்னும் தங்கள் உள்ளத்திலும், வீட்டிலும், சம்பாஷணையிலும் பாவத்தை வைத்திருக்கிறதையும் நான் அறிவேன். (ஆதியாகமம் 39 : 15) யோசேப்பின் எஜமாட்டி, தான் மகா பதிவிரதா பத்தினி போல கூக்குரலிட்டாளே, கூக்குரலிடும் குணம் அவளுக்கிருந்த போதினும், யாதொரு தடையும் நேரிட்டிராவிட்டால், அவள் நினைத்த அசுத்தத்தில் அன்று விழுந்திருப்பாள் அல்லவா? சில தாய்மார் தங்கள் பிள்ளைகளை மடியில் வைத்துக்கொண்டு, நீ கெட்ட பிள்ளை, துஷ்டப்பிள்ளை, உனக்குப் பாலில்லை, சோறில்லை என்று திட்டுகிறது போலவே அநேகர் தங்கள் பாவங்களுக்கு விரோதமாய்க் கூக் குரலிட்டுத் திட்டுவார்கள். அப்படித் திட்டின தாயானவள் கொஞ்ச நேரத்துக்குப் பிற்பாடு, என் கண்ணே, மணியே, கரும்பே, மரிக் கொழுந்தே என்று சொல்லிக் கழுத்தைக் கட்டி அணைத்துக் கொள்ளு வார்கள். ஆகையால், பாவத்துக்கு விரோதமாகக் கூக்குரலிடுகிறதில் பிரயோஜனம் இல்லை.
வாயாடி: நீர் பேச்சிலே பிடி அகப்படாதா என்று பதிவிருந்து ஆளை மடக்கலாம் என்றிருக்கிறாற்போல தெரிகின்றது.
உண்மை: அல்ல, அல்ல அது என் சுபாவம் அல்ல. அந்தத்தக் காரியத்தை அதினதின் இடத்தில் ஒழுங்குபடுத்தவே நான் பார்க் கின்றேன். இனி இருதயத்தில் இருக்கும் தேவ கிருபை வெளியாகும் முறையை உணர்த்தும் இரண்டாவது காரியத்தைச் சொல்லும்.
வாயாடி: சுவிசேஷ இரகசியங்களைப் பற்றிய உயர்ந்த அறிவுதான்.
உண்மை: இந்த அடையாளத்தை முந்திச் சொல்ல வேண்டியதாயிருந்தது. முந்திச் சொன்னால் என்ன, பிந்திச் சொன்னால் என்ன இதுவும் தப்பான அடையாளந்தான். ஏனெனில் சுவிசேஷ இரகசியங்களைப் பற்றிய சாதாரண அறிவுகளை அல்ல, உயர்ந்த அறிவுகளையே ஒருவன் உடையவனாய் இருந்தாலும் இருதயத்தில் எள்ளளவும் தேவ கிருபையற்றவனாய் இருக்கலாமே. அவன் சகல அறிவுகளையும் உடையவனாய் இருந்தபோதினும் அவனிடத்தில் தேவகிருபையே இல்லாததினால் அவன் தேவனுடைய பிள்ளையாய் இருக்கமாட்டான். (1 கொரிந்தியர் 13 : 2) “இவைகளை எல்லாம் அறிந்து கொண்டீர் களா” என்று இயேசு ஒரு தடவை கேட்டபோது, சீஷர்: “ஆம்” என்றார்கள். இயேசுவோ “இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள்” என்றார்.
அவர் அவர்களுடைய அறிவின் மேல் ஆசீர்வாதங்களைப் பொழியாமல் அவர்களுடைய செய்கையின் மேல் பொழிகிறார். ஏனெனில் செய்கையோடு கூடாத ஒரு அறிவும் இருக்கிறது. “எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் அதின்படி செய்யாதவன் எவனோ” என்று இரட்சகர் வேறொரு தரம் சொல்லி இருக்கிறார். இதினாலே எஜமான் சித்தம் அறிந்தும் அதின்படி செய்யாத வேலைக்காரரும் உண்டென்று விளங்குகிறது. ஒரு மனுஷன் தேவ தூதர்களுக்கொத்த அறிவுடையவனாய் இருந்தும் கிறிஸ்தவனாய் இல்லாமலிருக்கலாம். ஆகையால், நீர் சொல்லும் அடையாளம் சரியான அடையாளம் அல்ல. ஒன்றைக் குறித்த அறிவு, வாய்ச் சம்பிரதாயக்காரருக்கும், வீம்பருக்கும் பிரீதியாயிருக்கும் என்பது மெய்யானாலும், தேவனுடைய திருவுளத்துக்குப் பிரீதியானதோ ஒருவனுடைய செய்கைதான். ஆகையால் அறிவு – அறிவு என்னப் படுகிற இரண்டு காரியம் உண்டு. பல விஷயங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் சம்பாதிக்கிற அறிவும் உண்டு. விசுவாசம், அன்பு ஆகிய இவைகளின் கிருபை கலந்த அறிவும் உண்டு. இந்த அறிவு தேவ சித்தத்தை முதலாய் இருதயத்திலிருந்து நிறைவேற்றும்படி ஏவி எழுப்பும். முந்தின அறிவு வாய்ப்பேச்சை விரும்புகிறவர்களை திருப்தி செய்யும். ஆனால், பிந்தின அறிவு இல்லா விட்டால் மெய்க்கிறிஸ்தவன் மன ரம்மியம் அடையமாட்டான். “எனக்கு உணர்வைத் தாரும், அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு என் முழு இருதயத்தோடும் அதைக் கைக் கொள்ளுவேன்” (சங்கீதம் 119 : 34) என்று ஒரு பக்தன் சொன்னார்.
வாயாடி: நான் முன் சொன்னது சரிதான், மறுபடியும் நீர் பேச்சிலே ஆளை மடக்கப் பதிவிருக்கிறீர். சூ-ச்சூ-ச்சூ இது யார் செய்கிற வேலை, இப்படியானால் மனதில் எப்படி எழுப்புதல் உண்டாகும்?
உண்மை: அது போகட்டும், இருதயத்தில் இருக்கும் தேவ கிருபை வெளியாகிற வேறொரு வகையையாவது சொல்லுமேன்?
வாயாடி: இனி சொல்ல நான் பைத்தியக்காரனா? நாமே ஒருவருக்கு ஒருவர் ஒத்துவரக் காணோமே.
உண்மை: உமக்கு சொல்ல மனம் இல்லையானால் நான் சொல்லவாவது உத்தரவு தருவீரா?
வாயாடி: உமது இஷ்டம், உமது இஷ்டம்.
உண்மை: ஒரு ஆத்துமாவில் தேவ கிருபை இருக்கிறது மெய்யானால், அது தன்னை உடையவனுக்குள் நடத்தும் கிரியை யாலும், அக்கம் பக்கம் அவனோடு பழகுகிறவர்களுக்குள் அது நடத்தும் கிரியையாலும் வெளிப்படும் என்று சுருக்கிச் சொல்லலாம்.
தன்னை உடையவனுக்குள் நடத்தும் கிரியையால் எப்படி விளங்கும் என்றால், அந்தக் கிருபை அவனுக்குள் பாவ உணர்வையும், விசேஷமாய் அவனுடைய சுபாவத்தின்படியுள்ள அழுக்கையும், அவிசுவாசமாகிய பாவத்தையும் அவனுக்குச் சுட்டிக்காட்டி, இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தின் மூலமாய் அவன் தேவனிடத்தில் இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவைகளின் நிமித்தம் நிச்சயமாகவே தண்டனைக்கு உட்படுத்தப்படுவான் என்று அவனுக் குள் உணர்த்தும். இவ்வகையான தோற்றமும் அறிவும் அவனுக்குள் கிரியை செய்து அவனைப் பாவத்துக்காகத் துக்கப்படவும், வெட்கப் படவும் பண்ணும். (சங்கீதம் 37 : 18, எரேமியா 31 : 19, யோவான் 16 : 8, ரோமர் 7 : 24, மாற்கு 16 : 16, கலாத்தியர் 2 : 16, வெளிப்படுத்தல் 1 : 6.) அதுவும் அல்லாமல், லோக இரட்சகர் தம்மை அவனுக்குள் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கண்டறிந்து நித்திய ஜீவன் கிட்டும்படி அவரோடு கூடி வாழ்ந்து காலங்கழிப்பதே அவசியம் என்றும் அவன் அறிகின்றான். இதினாலே அவர் இல்லாமல் தீராது என்ற பசியும் தாபமும் அவர்மேல் உண்டாகிறது. இப்படிப் பசிதாக முதலிய வாஞ்சையுடையவர் களுக்காகவே தேவன் அநேக வாக்குத் தத்தங்களை அருளிச் செய்திருக்கிறார். இப்படிப்பட்டவன் தன் இரட்சகர் பேரில் தனக்கு இருக்கும் விசுவாசத்தின் பலத்துக்கு அல்லது பலவீனத்துக்குத்தக்கதாக சந்தோசத்தையும் சமாதானத்தையும் உடையவனாய் இருக்கிறான். அவன் தன் தன் விசுவாச அளவுக்குத் தக்கதாகவே பரிசுத்தத்தின்மேல் நேசமுடையவனாய் இருக்கிறான். இரட்சகரை மென்மேலும் அறிய ஆசையாய் இருக்கிறான். இவ்வுலகில் அவருக்கு ஊழியம் செய்ய ஊக்கம் கொள்ளுகிறான். ஆனால் ஒருவனுடைய இருதயத்தில் இருக்கிற தேவ கிருபை இவ்வண்ணமாக வெளிப்படும் என்று நான் சொன்ன போதினும் இவை அனைத்தும் தேவ கிருபையின் தொழிலே அன்றி வேறல்ல என்று அம்மனிதனே அறிந்து தீர்மானமாய்ச் சொல்லக்கூடுவது அபூர்வம் என்று சொல்ல வேண்டியது. ஏனெனில் அவனுக்கு இந்த நிலைமையிலும் இருக்கும் சுபாவக் கேடும், துர்ப்புத்திக்கு சாயும் மனமும் அவனுடைய உள்ளத்தில் இவைகளைப் பற்றிச் சரியான தீர்ப்பைச் செய்து கொள்ள விடுகிறது இல்லை.
ஆதலால் ஒருவனுக்குள் இந்தக் கிரியை நடந்தேறுகையில், இது கிருபையின் கிரியையேயல்லாமல் வேறில்லை என்று அவன் உறுதியாய் தீர்மானப்படுத்திக் கொள்ளும்படி தெளிந்த புத்தியும், பகுத்தறிவும் மனமும் அவசியமாய் வேண்டியது. (யோவான் 19 : 6, கலாத்தியர் 2 : 15, 16 அப்போஸ்தர் 4 : 12,மத்தேயு 5 : 6, வெளி 21 : 6)
தேவகிருபை தன்னை உடையவனுக்குள் எப்படி விளங்கும் என்று முன் சொன்னேனே, இப்போது அந்தக் கிருபை அக்கம்பக்கம் அவனோடு பழகுகிறவர்களுக்கு எப்படி விளங்கும் என்று சொல்லுகிறேன் கேளும்.
1. கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தைத் தன் ஆத்துமாவின் அனுபவப்படியே அவன் மற்றவர்களுக்கு அறிக்கையிடுகிறதிலே அது வெளியாகும்.
2. அந்த அறிக்கைக்கேற்ற நடக்கையினாலும் வெளியாகும், பரிசுத்தமாய் ஜீவனம் செய்யும்படியாக, அவன் இருதயம் பரிசுத்தமாய் இருக்கும், அவன் குடும்பமும் பரிசுத்தமாய் இருக்கும், உலகத்தில் அவன் சம்பாஷணையும் பரிசுத்தமாய் இருக்கும். இந்த விதமான ஜீவனம் பொதுவாகத் தனக்குள் இருக்கும் தன் பாவத்தை அருவருக் கவும், பாவத்தைத் தன் குடும்பத்தில் இருந்து அகற்றிவிடவும், பரிசுத்தத்தை உலகத்தில் விருத்தியாக்கவும் அந்தரங்கத்திலே அவன் ஏவப்படுகிறான். அவன் சில மாயக்காரரும், அலப்பரும் பலதைப் பேசித் தங்களைப்போல பக்தியுள்ளவர்கள் ஒருவரும் இல்லையே என்று வெளிக்குக் காண்பிக்கப் பிரயாசப்படுகிறது போல் அல்ல, தேவ வசனத்தின் வல்லமைக்கு விசுவாசத்தினாலும் அன்பினாலும் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொண்டு அதின்படி நடந்து வருகிறதினாலே அந்தக் கிருபையின் கிரியை வெளியாகும். (யோபு 42 : 5, 6 சங்கீதம் 50 : 23, எசேக்கியேல் 20 : 43, மத்தேயு 5 : 8, யோவான் 14 : 15, ரோமர் 10 : 10, எசேக்கியேல் 36 : 25, பிலிப்பியர் 1 : 27, 3 : 17)
ஐயா, வாயாடியே! தேவகிருபையின் கிரியை இன்னது என்றும், அது வெளியாகும் வகை இப்படி என்றும் நான் சுருக்கமாய் சொன்னேனே, இவைகளைக் குறித்து நீர் ஏதாவது ஆட்சேபிக்க மனமானால் ஆட்சேபியும், அப்படி இல்லையானால் இரண்டாவது கேள்வியைச் சொல்ல உத்தரவு தாரும்.
வாயாடி: இல்லை அப்பா, நீர் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருப்பது இனி என் வேலையே தவிர ஆட்சேபிப்பது என் வேலை அல்ல, இரண்டாம் கேள்வியைக் கேளும் பார்ப்போம்.
உண்மை: அடுத்த கேள்வி இதுதான்: தேவகிருபை தன்னை உடையவனுக்குள் நடத்தும் கிரியைகளால் விளங்கும் என்பதைப் பற்றிச் சொன்ன குறிப்புகளுக்கு உமது அனுபவம் இசைந்து இருக்கிறதா? இல்லையா? உமது ஜீவனார்த்தமும் சம்பாஷணைகளும் அதைப்பற்றிச் சாட்சி சொல்லக்கூடுமா? கூடாதா? உம்முடைய பக்தி எல்லாம் உதட்டிலும் நாவிலும் மாத்திரம் இருக்கிறதா? அல்லது செய்கையிலும் சத்தியத்திலும் இருக்கிறதா? சொல்லும், ஆனால் ஒரு மன்றாட்டு, இவைகளுக்கு நீர் மறுமொழி சொல்ல மனம் இசைந்தால், நீர் அறிந்து இருக்கிறதற்கு மிஞ்சி ஒன்றும் கூட்ட வேண்டாம். நீர் சொல்லும் காரியங்கள் எல்லாம் தேவன் “ஆமென்” என்று சொல்லத்தக்கதாகவும், உம்முடைய மனச்சாட்சியும் யதார்த்தம், யதார்த்தம் என்று ஒத்துக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கட்டும். ஏனெனில் தன்னைப் புகழுகிறவன் உத்தமன் அல்ல, கர்த்தரால் புகழப்படுபவனே உத்தமன். (2 கொரிந்தியர் 10 : 18) மேலும் நீரே சொல்லும், என் சம்பாஷணைகளும், என் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் என்னைக் குறித்து இவன் பொய்யன் என்று அறிக்கையிட, நான் மாத்திரம் என்னைப் போல யோக்கியன் இல்லை, என் காரியம் அப்படி அல்லது இப்படி என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் அதைப்போல அக்கிரமம் வேறு உண்டா?
வாயாடி: இப்படி கேட்டவுடனே வாயாடியினுடைய முகம் செத்துப் போயிற்று. மறுபடியும் அவன் தனக்குள்ளே திடன் அடைந்து சொல்லுகிறான்: ஓகோ, நீர் ஞான அனுபோகத்திற்கும், மனச் சாட்சியின் ஒற்றுமைக்கும், தேவ சாட்சிக்கும் வந்து விட்டீரோ? பேசுகிறதற்கெல்லாம் ஆமென் சொல்ல ஆண்டவரைப் பிடித்து வைக்கிறீரோ? சரி, சரி. இப்படிப்பட்ட சம்பாஷணையை இழுத்து விடுவீர் என்று நான் கனவிலும் எண்ணினது இல்லை, இப்படிப்பட்ட கேள்விகளுக்கு மறுமொழி சொல்ல என் வாயைத் திறக்கவும் மாட்டேன், அப்படி எனக்கு அக்கறையும் இல்லை. நான் உமது பள்ளிக்கூடத்திற்கு வந்து படித்து, நீர் எனக்கு உபாத்தியாராய் உட்கார்ந்து கொண்டு இருப்பீரே, அன்றைக்கு வேண்டுமானால் உத்தரவு சொல்லுகிறேன். அப்போதுங்கூட உம்மை என் நியாயாதி பதியாய் இராதபடித் தள்ளிப்போட மனமானால் தள்ளிப் போடுவேன்.
ஆனால் நீர் என்னிடத்தில் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறதற்கு காரணந்தான் என்ன? தயவு செய்து சொல்லும்படி மன்றாடுகிறேன்.
உண்மை: காரணமா? உம்முடைய வாய் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்துக்கொண்டபடியினாலும், இந்த வாய்ச் சம்பிரதாயமே யன்றி தேவ பக்தியின் வயிரம் இல்லை என்ற காரியம் எனக்குத் தெரியாமற் போனபடியினாலும் இப்படிக் கேட்டேன். அதுவுமின்றி உள்ளதை எல்லாம் சொல்ல வேண்டுமானால், நீர் தேவபக்தியை வாய்ப்பேச்சுக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறீர் என்றும், உமது வாயின் வார்த்தைகளெல்லாம் பொய் என்று உம்முடைய சம்பாஷணைகள் ருசுப்படுத்துகிறதென்றும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். கிறிஸ்தவர் களுக்குள்ளே நீர் ஒரு கரும் புள்ளியாய் இருக்கிறீர் என்றும், உம்முடைய அவ பக்கியுள்ள நடக்கை தேவ பக்தியை நாசப்படுத்துகிற தென்றும், உம்முடைய தீய வழிகளைப் பின்பற்றி இடறி விழுந்தவர்கள் வெகுபேர் என்றும் சொல்லிக் கொள்ளு கிறார்கள். உம்முடைய பக்திக்கும், சாராயக்கடைக்கும், பொருளாசை மனதுக்கும், அசுத்த மனதுக்கும், பொய் உதட்டுக்கும், ஆணையிடும் நாவுக்கும், போக்கிரிகள் கூட்டத்துக்கும் ஒத்துப்போகுமாம். ஆகவே சொல்ல வேண்டுமானால், “ஒரு வேசி எல்லாப் பெண்களுக்கும் வெட்கம் வருவிக்கிறாள்” என்று துன்மார்க்க ஸ்திரீகளைப் பற்றிச் சொல்லப் படுகிற பழமொழி உமக்கே தகும். நீர் தேவபக்தர் எல்லாருடைய வெட்கமாகவும் இருக்கிறீர்.
வாயாடி: சொல்வார் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தீர விசாரியாமல், இப்படிப் படபடப்பாய்த் தீர்மானங்கள் செய்து விடுகிறாய். ஆகையால் நீ வெடுவெடுத்து முகங்கோணித் திரிகிற புத்தியுடைய ஒரு மனுஷன். உனக்கும் நமக்கும் ஒத்துவராது என்று சொல்லிவிட்டு வாயாடி மெதுவாய் விலகிப் போய்விட்டான்.
அப்பால் கிறிஸ்தியான் தன் சிநேதினண்டை நெருங்கி வந்து, இப்போ பார்த்தீரா? நான் சொன்னதும் சரி, இங்கே நடந்ததும் சரி, உம்முடைய பேச்சுக்கும் அவனுடைய இச்சைக்கும் ஒருக்காலும் சரிப்படாது. அவன் தன் நடக்கைகளைச் சீர்ப்படுத்துகிறதைப் பார்க்கிலும் உம்முடைய உறவைவிட்டு விலகிக் கொள்ளும்படி பிரியப்படுகிறான். நான் சொன்னபடி தொலைந்து போனான். அவன் போனால் போகட்டும். அவன் போனதினாலே யாருக்கு நஷ்டம்? அவனுக்குத்தான் நஷ்டம். நாம் அவனை விட்டுப் பிரிந்தோம் என்றிராதபடி அவனே நம்மைவிட்டுப் பிரிந்து போனது ஒரு சகாயம் தான்.
இந்தக் குணத்தை அவன் விடமாட்டான் என்று எனக்குத் தோன்றுகிறது. விடாமல் அதன்படியே பேசிவருவானானால் அவன் நம்மோடுகூட வருகிறது நமக்குப் பெரிய லச்சையாய்த்தான் இருக்கும், அதுவுமன்றி அப்போஸ்தலனும் இப்படிப்பட்டவர்களுக்கு விலகு என்றே கற்பித்திருக்கிறார் என்றான்.
உண்மை: எப்படியும் அவனுடன் கொஞ்சம் சம்பாஷித்துக் கொண்டதற்காக நான் சந்தோசப்படுகிறேன். ஒரு வேளை அவன் அவைகளைப்பற்றி மறுபடியும் நினைத்தாலும் நினைப்பான். எப்படி இருந்தாலும் நான் ஒன்றையும் மூடி வைக்காமல் எல்லாவற்றையும் தெளிவாயும் தீர்க்கமாயும் சொல்லிப் போட்டேன். ஒரு வேளை அவன் கெட்டுப் போனாலும் நான் அவன் இரத்தப் பழிக்கு நீங்கலாய் இருக்கிறேன்.
கிறி: நீர் இவ்வளவு தெளிவாய் பேசினது மெத்த நல்லது. இந்தக் காலங்களில் இப்படி உம்மைப்போல தெளிவாயும் தீர்க்கமாயும் சத்தியங்களை உணர்த்துகிறவர்கள் மெத்தக் கொஞ்சம் பேர். அதினாலேதான் தேவ பக்தி அநேகருடைய மனதுக்கு துர்க்கந்தம் மூக்கில் ஏறுகிறது போல் இருக்கிறது. இப்படிப்பட்ட வாயாடிப் பயல்களுக்கெல்லாம் வாயிலே மாத்திரம் தேவ பக்தி இருக்கிறது. நடக்கையோ தாறுமாறு. இப்படிப்பட்டவர்களை நமக்குள்ளே சேர்த்துப் போடுகிறதினாலே உலகத்துக்கு அதிசயமும், கிறிஸ்து மார்க்கத்துக்கு ஈனமும், பக்தருக்கு மனநோவும் உண்டாகிறது. எல்லா மனுஷரும் இப்படிப்பட்ட மூடரை உம்மைப்போல நடத்துவார் களானால் எனக்கு மெத்த சந்தோஷமாய் இருக்கும். அப்படிச் செய்தால், ஒன்று மெய் தேவபக்திக்கு இசைவாய் நடப்பார்கள்; அல்லது பரிசுத்தவான்களின் ஐக்கியத்துடன் நமக்கு இசையாது என்று சொல்லி விலகிக்கொள்ளுவார்கள் என்று சொன்னான். அப்புறம் அவர்கள் இருவரும்:-
வாயாடி என்போனுமே
வழியோடு கூடி – மிகத்
துடியோடு ஓடி – தன்
பெருமை அலங்காரங்களைப்
பிரித்துக் காட்டினானே–
மெத்தவோ சமர்த்தன் போல
ஆடி ஆடி அசைந்து – அவன்
கூடி ஓடி நடந்து – தனக்
கெவரும் நிகரில்லை போல
கெருவம் பேசினானே–
உண்மையோன் என்போனுமே
வாயின் வாளைத் தீட்டி – ஒரு
ஈட்டி போல நீட்டி – இருதய
நிலைமையை கேட்டபோது
தேய்பிறை போல் மறைந்தான்.
என்று பாடிக்கொண்டு, அவரவர் தங்கள் வழிப்பயணங்களில் கண்ட காட்சிகளையும் பட்ட வருத்தங்களையும் பற்றிப் பேசிப் பேசி வழி நடந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் நடக்காவிட்டாலும், மெத்தவும் மனஞ்சோர்ந்து போவார்கள், ஏனெனில் அவர்கள் இப்போது ஒரு பாழ்வனத்தைக் கடந்து போகிறவர்களாய் இருந்தார்கள்.
1. வாயாடி என்பது, இருதயத்தில் மெய்யான தேவ கிருபையில்லாமல் இருந்தாலும், மார்க்க விஷயத்தைப்பற்றிய அநேக அறிவுகளை உடையவராய் இருந்து அதைப்பற்றி வெகு சாமர்த்தியமாய் பேச சக்தி உடையவர்களைக் காட்டுகிறது.