பாப்பு ராஷதன் சந்திப்பு
அப்புறம் நான் என் சொப்பனத்திலே கண்டதாவது: மரணப் பள்ளத்தாக்கின் அந்தத்தில், இரத்தக்கட்டிகளும், எலும்புக் குவியல் களும், சுடுகாட்டுக் குப்பைகளும், சின்னா பின்னமாக்கப்பட்ட பல பிரயாணிகளின் தேகங்களும், எலும்புக்கூடுகளும் கிடக்கக் கண்டேன். இதின் இரகசியம் என்ன? இரத்தமும், எலும்பும், குப்பையும், பிணங் களும் இங்கே எப்படி வந்தது என்று சற்று நேரம் ஆழமாய் ஆராய்ந்து பார்த்தபோது, எனக்குச் சற்று முன்னே பாப்பு, பல தேவ பக்தன்1 என்னும் இரண்டு ராஷதர் முன் ஒரு காலத்தில் வசித்து வந்த குகை இருக்கிறதென்றும், அவர்களுடைய ஆக்கினா சக்கரத்தினாலே கண்டதுண்டம் ஆக்கப்பட்டு, அக்கினியில் தகனிக்கப்பட்ட அநேக மனுஷருடைய இரத்தமும் எலும்புகளும் குப்பைகளுமே இங்கே குவிந்து கிடக்கிறது என்றும் அறிந்து கொண்டேன். கிறிஸ்தியான் இந்த வழியே கடந்து போகையில் எள்ளளவும் அச்சமின்றித் தாராளமாய் நடந்து போனான். ஏது இவ்வளவு தாராளத்தில் போகிறான் என்று கவனித்து நானே அதிசயப்பட்டேன். அப்புறம் அந்த சந்தேகம் நீங்கிப் போயிற்று. எப்படி என்று கேட்பாயோ? பல தேவ பக்தன் மாண்டு வெகு வருஷங்கள் ஆகிவிட்டதாம்; பாப்பு ராஷதன் இருக்கிறானே, அவன் இன்னும் உயிரோடிருந்தாலும் நடைப்பிணம் என்றுதான் சொல்ல வேண்டுமாம். இப்பொழுது கிடுகிடு கிழவனாகிவிட்டதோடு, தன் வாலிப காலத்தில் அட்டகாசம் பண்ணினதில் பல தட்டுப்பாடுகளும், தொக்கிஷங்களும் உண்டானதால், இடுப்பு ஒடிந்து, மொழிகள் புரண்டு, கைகால்கள் திமிர்ந்து, இருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க பெலனில்லாமல் குகையின் வாசலில் உட்கார்ந் திருக்கிறானாம். சீயோனுக்குப் போகிற பிரயாணிகளை பழையபடி பலவந்தமாய்ப் பிடித்து மானபங்கம் செய்து, அவர்கள் உயிரை வாங்கி இரத்தத்தைக் குடிக்கும்படி அவன் இப்போதும் பிரியப்பட்டாலும், காரியம் சித்திக்க வகை இல்லையாம். அதனாலேதான் அவ்வழியாய்ப் போகிறவர்களைக் கண்டால், வெகு காரியங்களை எல்லாம் நிறைவேற்றிப் போடுகிறவனைப் போல் அவன் கையை நீட்டுகிறதும், விரலை மடக்குகிறதும், பல்லைக் கடிக்கிறதும், கண்ணை உருட்டு கிறதும், சிங்கத்தைப் போல கெர்ச்சித்து பயமுறுத்துகிறவனாய் இருக்கிறானாம். இதினாலேதான் கிறிஸ்தியான் அவ்வளவு அமை தலோடு நடந்து போய் இருக்கிறான்.
இந்த ராஷதர்சங்கதி இப்படியிருக்க, கிறிஸ்தியான் அவர்கள் குகை வழியாகவே போனான். கிழட்டுப் பாப்பு, குகையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு அவன் கடந்து போகிறபோது எழுந்து போய் பிடிக்க சக்தியற்றிருந்தாலும் சொல்லுகிறான்: இன்னும் உங்களில் அநேகரை அக்கினிப் பிரவேசம் செய்யுமட்டும் உங்களுக்குப் புத்தி வரப்போகிறதில்லை என்று சொன்னான். இதைக் கேட்கவே கிறிஸ்தியான் என்ன பதில் சொல்லலாம் என்று தெரியாமல் சற்று நேரம் திகைத்தாலும், அப்புறம் ஒன்றும் பேசாமல் தன் வழியே விசையாக நடந்து போய்விட்டான். அவனுக்கு அந்த இடத்தில் ஒரு அபாயமும் உண்டானதில்லை; அதின் பின்பு கிறிஸ்தியான்,
அதிசய பூலோகமே!
மரண பள்ளத்தாக்கிலே
இயேசுவே துணை தந்தார்.
பேய், பாவம், நரகம், கண்ணி,
வலை, குழி, இருள் பொறி,
யாவும் என்னைச் சூழ்ந்தன
நீசன் நானும்
மற்றப்படி நாசம் ஆவேன், இயேசுவே நீர்
வாழ்க, வாழ்க, நான் பிழைத்தேன்
என்று தோத்திரம் பாடிக்கொண்டு, தன் வழியே நடந்து போகிறதை நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
1. பாப்பு, பல தேவபக்தன் என்னும் ராஷதர்: முந்தின காலங்களில் ரோமாபுரியில் ஆண்ட பல அஞ்ஞான ராயர் கிறிஸ்து மார்க்கத்தைப் பற்றிக் கொண்டதன் நிமித்தம் அநேகரைக் கொலை செய்தார்கள். சில காலங்களுக்கு முன் ரோமை மார்க்கத்தை அநுசரித்திருந்த தேசங்களில், பாப்புவின் கட்டளைப்படி புராட்டஸ்டாண்டர் தங்கள் மார்க்கத்தின் நிமித்தம் துன்பப்படுத்தப்பட்டு, அநேகர் உயிரோடு முதலாய் அக்கினியில் தகனிக்கப்பட்டார்கள். முன் காலத்தை விட இப்பொழுது மார்க்க விஷயத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது.