பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
தாழ்மையின் பள்ளத்தாக்கின் அந்தத்தில் மரணநிழல் 1 என்னப்பட்ட வேறொரு பள்ளத்தாக்கும் இருந்தது. உச்சித பட்டணத்தின் பாதை அதினூடே போனதால் கிறிஸ்தியான் அந்தப் பள்ளத் தாக்கையும் கடந்து போக வேண்டியதாய் இருந்தது. இது ஒரு ஏகாந்த வெளியாய் இருந்தது. இதின் தன்மையைக்குறித்து தீர்க்கத்தரிசியாகிய எரேமியா “அவாந்தர வெளியும், பள்ளங்களுள்ள தேசம், வறட்சியும் மரண இருளுமுள்ள தேசம்” என்றும் கிறிஸ்தியானேயன்றி “ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசம்” (எரேமியா 2 : 5) என்றும் சொல்லியிருக்கிறார். இங்கே கிறிஸ்தியான் அனுபவித்த துன்பங்கள் அப்பொல்லியோனின் அம்புகளாலும் உண்டான படுகாய நோவிலும் பதின் மடங்கு அதிகம் என்று பின் வரும் குறிப்புகளால் நீ அறிந்து கொள்வாய்.
அப்பொழுது நான் என் சொப்பனத்திலே கண்டதாவது: கிறிஸ்தியான் தாழ்மைப் பள்ளத்தாக்கை கடந்து மரணப்பள்ளத்தின் எல்லையை மிதிக்கையில் நல்ல தேசத்தைக் குறித்துக் கெட்ட சாட்சி சொன்னவர்களின் புத்திரராகிய (எண்ணாகமம் 13 : 32) இரண்டு மனுஷர் 2 கிறிஸ்தியானுக்கு எதிர்ப்பட்டு, போ, போ திரும்பி போ என்று சொன்னார்கள். அவர்களைப் பார்த்துக் கிறிஸ்தியான் கேட்கிறான்.
கிறி: நீங்கள் எங்கே போகிறீர்கள்?
மனுஷர்: திரும்பி, திரும்பி, திரும்பிப் போகிறோம், உன் ஜீவனையும், சமாதானத்தையும் நீ தேடினால் திரும்பிவிடுவது நலம் என்று சொல்லுகிறோம்.
கிறி: ஏன்? அப்படி என்ன விசேஷம் இருக்கிறது?
மனு: விசேஷமா? நீ போகிற வழியிலேயே எங்களால் கூடியமட்டும் நடந்து போனோம். கூடக் கொஞ்ச தூரம் மாத்திரம் நாங்கள் போனது மெய்யானால் இதற்குள் நாசந்தான். நல்ல வேளையில் திரும்பி வந்துவிட்டோம்; மற்றப்படி உனக்குச் செய்தி சொல்ல வந்திருக்க மாட்டோம்.
கிறி: உங்களுக்கு நேரிட்டது என்ன? சொல்லுங்களேன்.
மனு: நேரிட்டதா? நாங்கள் மரண நிழலின் பள்ளத்தாக்குக்குள் கொஞ்சங்குறைய புகுந்துவிட்டோம், எங்களுக்கு நல்ல காலம் இருந்ததென்று சொல்ல வேண்டும்.
கண்ணை ஏறெடுத்துப் பார்க்கவே அங்கிருந்த மோசங்கள் எல்லாம் உள்ளங் கை நெல்லிக் கனி போல் தெரிந்தது. (சங்கீதம் 44 : 19, 107 : 10)
கிறி: நீங்கள் அங்கே கண்டதுதான் என்ன?
மனு: கண்டதா? அந்தப் பள்ளம் கருங்கீலைப்போல கறேல் என்று இருட்டாய் இருக்கிறது. அதினுள் காளிகளையும், கூளிகளையும், காட்டேரிகளையும், வல்ல சர்ப்பங்களையும் கண்டோம். விலங்கு மாட்டப்பட்டு வாயால் சொல்லக்கூடாத வலிய துன்பங்களை அனுபவிக்கிற ஜனக்கூட்டம் இடும் ஊளைகளையும், புலம்பலையும் அங்கே கேட்டோம். அதைரியத்தை உண்டாக்கும் கலக்கம் என்னும் கார்மேகம் அப்பள்ளத்தாக்கை கவிந்து கொண்டிருக்கிறது. ஒரு வேளாவேளை மரணமும் தன் செட்டைகளை அதன்மேல் விரிக்கிறதும் உண்டு. மொத்தமாய்ச் சொன்னால் அங்கே நோக்கும் திசையும், பார்க்கும் பக்கமும் எல்லாம் குழப்பமும் பயமுமாய் இருக்கிறது அப்பா! (யோபு 3 : 5 10 : 21)
கிறி: நீங்கள் சொல்லுகிறது எல்லாம் மெய்யானால், நான் நாடிய தேசத்திற்கு போகும் வழி இதல்ல என்று இன்னும் எனக்குத் தோன்றுகிறதில்லையே. (சங்கீதம் 44 : 18, 19. எரேமியா 2 : 6)
மனு: இதுதான் உன் பாதையாய் இருந்தால் இருக்கட்டும், எங்களுக்கு இந்தச் சங்கடம் வேண்டியதில்லை; நாங்கள் எங்கள் பாட்டிலே போகிறோம் அப்பா என்று சொல்லிக் கொண்டு தங்கள் வழியே திரும்பிப் போனார்கள்.
கிறிஸ்தியானோ, வழியில் சத்துருக்கள் வந்து எதிர்த்தாலும் எதிர்ப்பார்கள் என்று அஞ்சி உருவின பட்டயமும் கையுமாய் முன்னுக்கு நடந்து போனான் என்று என் சொப்பனத்திலே கண்டேன்.
மரண நிழலின் பள்ளத்தாக்கின் நெடுக, பாதையின் வலது பக்கத்தில் 3 கெடு பாதாளம் இருந்தது; இந்தப் பாதாளத்தில்தான் காலாகாலங்களாக குருடருக்கு வழிகாட்டின குருடர் எல்லாரும் ஏகமாய் விழுந்து மாண்டார்கள். அது மாத்திரமோ? பாதையின் இடது பக்கத்தில் மோசமான ஒரு சேற்றுப்பள்ளம் இருந்தது; 4 அதிலே எப்படிப்பட்ட நல்லவன் விழுந்தாலும் மறுபடியும் காலூன்றி நின்று கொள்ள வகை காணமாட்டான். இந்த உளையில் அரசனாய் இருந்த தாவீது ஒரு தரம் விழுந்தான்; அவனிலும் வல்லவர் வந்து தூக்கி எடுக்காவிட்டால் அவனும் அதினுள் திக்குமுக்கிட்டுச் சங்கடப் படுவான் என்பது நிஜம். (சங்கீதம் 69 : 14)
மேலும் இந்தப் பள்ளத்தாக்கின் வழியாய்ப்போன பாதையும் மகா நெருக்கமாய் இருந்தது; இதுவும் கிறிஸ்தியானுக்குப் பெரிய சோதனை ஆயிற்று. ஏனெனில் மேக மந்தாரக் காரிருளில் அவன் வலது பக்கத்துப் படுகுழிக்கு விலகிக்கொள்ளக் காலெடுத்து வைக்கையில் இடது பக்கத்து உளையில் கால் அகப்பட்டுக் கொள்ளுகிறதுபோல இருந்தது; அவன் உளையைப் பற்றி மிகுந்த எச்சரிக்கையோடு நடந்தால் படுகுழியில் விழுகிறாப்போல் இருந்தது. இப்படியே தள்ளாடி நடந்து போனான். (எபேசியர் 6 : 18) போகப் போக அவன் அழுத கண்ணீருக்கும் விட்ட பெருமூச்சுக்கும் ஒரு அளவில்லை. இவை மாத்திரமோ? போகப் போகக் குத்திருளாய் இருந்ததால் அவன் அடிக்கடி தன் காலைத் தூக்கி, எங்கே வைக்கலாம் என்று தெரியாமல் ஒற்றைக் காலோடு நின்று அலறி அழுவான். (சங்கீதம் 116 : 4)
இந்த மரணப் பள்ளத்தாக்கின் மத்தியில் நரக லோகத்தின் வாயிருக்கக்கண்டேன். நரக வாயிலின் விளிம்பே பாதையின் ஓரம் என்று சொல்லும்படி அவ்வளவு கிட்ட இருந்தது. கிறிஸ்தியான்: ஐயோ, இப்போது நான் என்ன செய்வேன்? என்று நினைத்தான். அங்கிருந்து திடீர் திடீர் என்று குமுறிக்கொண்டு அக்கினிப் பொறி களும், புகைத்திரள்களும் ஓயாமல் எழும்பின. பறந்த அப்பொல் லியோனை குத்திக் கிடத்தின பட்டயம் இவைகளை அடக்க உதவுமா? உதவாதே. ஆகையால், கிறிஸ்தியான் தன் பட்டயத்தை அதின் உறையிலே சொருகிக் கொண்டு சகலவித ஜெபமாலை 5 என்னும் வேறொரு ஆயுதத்தைத் தன் அம்பறாத் துணியிலிருந்து உருவி வைத்துக் கொண்டு; “கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்” என்று இப்படிப் பலவாறாகச் சொல்லி வெகு நேரம் அபயமிட்டான். அப்படி இருந்தும் அக்கினி ஜூவாலைகள் அவன் மட்டும் வந்து எட்டின; பயங்கரமான இரைச்சலும் குமுறலும் முன்னிலும் அதிகமாய் எழும்பின. அந்தக் குமுறல்கள் கிறிஸ்தியானை இங்கும் அங்கும் பிடித்துத் தள்ளினாற்போல் இருந்ததால், நான் ஒன்று சின்னா பின்னமாய்ப் போவேன், அல்லது வழியில் கிடக்கும் சேற்றைப் போல மிதிக்கப்படுவேன் என்று சிலதரம் தன்னைக் குறித்து நினைத்தான். இந்தப் பயங்கரக்காட்சியும் அதிரடிக் குமுறலும் அநேக மைல் தூரம் மட்டும் இருந்தது. இவற்றோடு போயிற்றா? அவன் இவ்வளவு தத்தளிப்போடு நடந்து போகையில் பூதசேனை ஒன்று தனக்கு எதிரே வருகிறதைக் கண்டான். உடனே அவன் நிலைபெயராமல் நின்று கொண்டு; பூதகணங்கள் வருகிறதே, இனி நான் என்ன செய்வது தகுதியாய் இருக்கும் என்று ஆலோசித்தான். திரும்பிவிடுவோமா என்று ஒரு தரம் யோசித்தான்; மறுபடியும் பாதிப் பள்ளம் கடந்தாயிற்றே; இனித் திரும்பவா என்று சொல்லிக் கொண்டான். இம்மட்டும் எத்தனையோ பெரும் ஆபத்துக்களை எல்லாம் கடந்தேன், இனிமேல் பின்னிட்டு திரும்புவதால் உண்டாகும் வருத்தங்கள் முன்னிட்டுச் செல்லுவதால் உண்டாகும் வருத்தங்களிலும் அதிக மாகவே இருக்கும் என்று அதோடு உணர்ந்து கொள்ளுவான். கடைசியாக முன்னுக்கு நடப்பதே தீர்மானம் என்று சொல்லிக் கொண்டு நடந்தான்; ஆனால் பூதக்கணக் கூட்டம் வரவர நெருங்கி வருகிறதை கண்டான். மிகவும் சமீபத்தில் அவைகள் வந்த உடனே கிறிஸ்தியான் சிங்கம் கெர்ச்சிக்கிறாப் போல முழங்கி, தேவனாகிய கர்த்தருடைய வல்லமையைக் கொண்டு நடந்து போவேன் என்று சத்தமிட்டுச் சொன்னான், அச்சத்தம் தொனித்த உடனே பூதகணங்கள் அப்படியே விலகி காணாமலே போயின.
இதன் இடையில் கிறிஸ்தியானிடத்தில் நான் கண்ட ஒரு விசேஷத்தையும் சொல்லாமல் விடலாகாது. அவன் நரலோக வாயின் பக்கத்தில் நடந்து வரும்போது தன்னை மறந்தவனாய் இருந்தான். அவன் பேசுகிறதும், செய்கிறதும் தனக்கே தெரிந்ததில்லை என்று என் மனதில் பட்டது. எப்படியெனில் எரிகிற பாதாள வாய்க்கு எதிரே அவன் நடந்தபோது தீயோன் ஒருவன் அவன் பிறகாலே போய் அரவங்கேளாதபடி அவனுடைய முதுகின் கிட்ட நெருங்கி மன நோவு உண்டாக்கத்தக்கதான பல தேவ தூஷணங்களை குசு குசுவென்று அவன் காதுக்குள் ஓதினான். கிறிஸ்தியானோ அந்த தூஷணம் எல்லாம் தன் மனதில் இருந்து புறப்பட்டதாகவே எண்ணிக் கொண்டான். இம்மட்டும் உண்டான மன வியாகுலங்களில் எல்லாம் இதுவே அவனுக்குப் பிரமாண்டமாகக் காணப்பட்டது; நான் அவ்வளவாய் நேசித்தவரை இவ்வளவாய் தூஷித்தேனே என்கின்ற எண்ணம் அவன் மனதை வாதித்தது. அந்த தீயோனின் செய்கையை தடுக்கக்கூடுமானால் கிறிஸ்தியான் தடுத்தே இருப்பான்; ஆனால் அவனுக்குச் செவிகொடாத படி தன் காதை அடைத்துக் கொள்ளவாவது, அந்த தேவ தூஷண ஊசல் எத்திசையிலிருந்து வந்ததென்று பகுத்தறிந்து கொள்ளவாவது சக்தியற்ற நிலைமையில் அவன் இருந்தான் என்று நான் நன்றாய் அறிந்திருந்தேன்.
இப்படி ஆறுதலற்றவனாகக் கிறிஸ்தியான் வெகுதூரம் நடந்து போகிறபோது, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர்” என்று தனக்கு முன்பாக ஒரு மனுஷன் சத்தமிட்டுச் சொல்லுகிறது போலவும் கேட்டான். (சங்கீதம் 23 : 4) இதினால் அவன் மனம் பூரித்தது. அவன் மனப்பூரிப்புக்கு இரண்டொரு முகாந்தரங்களும் இருந்தன. எப்படி யெனில்:-
1. அவன் கேட்ட அந்தச் சத்தத்தின் தொனியினால், கர்த்தருக்குப் பயந்து நடந்த யாரோ சிலர் தன்னைப் போல இதின் வழியே கடந்து போனதாக அறிந்தான்.
2. இருளும் மருளுமுள்ள இடத்தில் அகப்பட்ட போதிலும், தன்னோடு தேவன் இருக்கிறார் என்றும் உணர்ந்து கொண்டான். இவ்விடத்தில் அவரை மறைக்கும் பல திரைகள் இருப்பதால் நான் அவரைக் காணக்கூடவில்லையாக்கும், மற்றவர்களோடு இருந்தவர் என்னோடிருக்கமாட்டாரோ என்றும் நினைத்துக் கொண்டான்.
3. நான் சற்றே எட்டி நடப்பேனேயானால் முந்திப்போகிற அவர்களோடு சேர்ந்து ஒரே கூட்டமாகத் திரண்டு போகலாம் என்றும் நினைத்தான்.
மேலே சொல்லிய முகாந்தரங்களை அவன் ஆலோசித்துக் கொண்டு மனப்பூரிப்போடு விசையாய் நடந்து முன் சத்தம் காட்டின ஆளைக் கூப்பிட்டான். கூப்பிடும் குரலை அவன் கேட்டும் இந்த ஏகாந்தமான மைதானத்தில் நாம்தான் தனிமையாய் இருக்கிறோம் என்றுஎண்ணிக் கொண்டு யாதொரு மறுமொழியும் கொடாமல் தன் பாட்டிலே போனான். வரவர இருள் நீங்கி ஒளி தோன்றிப் பொழுதும் விடிந்தது. கிறிஸ்தியான் அகமகிழ்ந்து “அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றினார்” (ஆமோஸ் 5 : 8) என்று சொன்னான்.
பொழுது உதித்த பின்பு அவன் தான் வந்த வழியை ஏறிட்டுப் பார்த்தான். திரும்பிப் போய்விடும் சிந்தையோடல்ல, இரவில் அவன் கடந்து வந்த துன்பங்களும், சங்கடங்களும் எவை என்று அறியும்படியாகவே பார்த்தான். பார்க்கவே வழியின் வலது பக்கத்துப் படு குழியும், இடது பக்கத்து உளையும் நன்றாய்த் தெரிந்தது. படுகுழிக்கும் உளைக்கும் மத்தியில் தான் கடந்து வந்த பாதை எவ்வளவு இடுக்கமும் நெருக்கமுமாய் இருந்திருக்கிறதென்று அறிந்து கொண்டான்.
அதோடு பள்ளத்தாக்கில் வசித்த கூளிகள், காளிகள், காட்டேரிகள், வல்ல சர்ப்பங்கள் இவைகளின் மும்முரமும் வெகு தூரத்தில் தெரிந்தன; ஏனெனில் விடிகிற நேரம் வருகிறபோது அவைகள் அவனை முன் போல பின் தொடராமல் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டன. அவைகள் அனைத்தும் எவ்வளவு தூரத்தில் இருந்த போதினும் “அவர் அந்தகாரத்தில் இருக்கிற ஆழங்களை வெளியரங்க மாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டு வருகிறார்” (யோபு 12 : 22) என்று எழுதப் பட்டிருக்கின்றதின்படி கிறிஸ்தியானுக்கு அவைகள் எல்லாம் தெளிவாய்க் காணப்பட்டன.
இவ்வளவு உபத்திரவங்களின் வழியாகத் தனிப் பயணஞ் செய்து வந்த அவன் யாதொரு மோசமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டதை அதிகமாய் உணர்ந்து சந்தோசப்பட்டான். முன்பு அவன் இந்த உபத்திரவங்களுக்கு அஞ்சினாலும் கிழக்கு வெளுக்கவே அவை எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டான். மேலும் இந்தச் சமயத்தில் சூரியனும் தன் சுடரொளிக் கதிர்களை வீசத் துவக்கினது, அவன் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் கருவி போலும் இருந்தது. ஏனெனில், மரணப்பள்ளத்தாக்கிலே இதுவரையும் அவன் கடந்து வந்த முன் பாகம் மெத்த வருத்தமுள்ளதாய் இருந்தபோதினும், இன்னும் கடக்க வேண்டிய பின்பாகம் முன்னிலும் அதிக சங்கடங்களுள்ளது என்பதை நீ கவனித்துக் கொள்ள வேண்டியது. இப்பொழுது அவன் நின்ற இடம் முதல் கடைசி எல்லைமட்டுமுள்ள பாதை முழுவதும் கண்ணிகளாலும், பொறிகளாலும், சுருக்குகளாலும், வலைகளாலும் நிறையப்பட்டிருந்தது. அதுவும் அன்றி, வழி நெடுக பள்ளங்களும், மேலே மண் மூடிய படுகுழிகளும், ஆழமான உளைக் கிணறுகளும், செங்குத்தான மேடுகளும் இருந்தன. மரணப்பள்ளத்தின் முன் பாதியில் இருந்ததுபோல இரவும், அந்தகாரமும், கார்மேகக்கூட்டமும் இங்கே இருக்குமானால், ஒரு உயிர் அல்ல, ஆயிரம் உயிர்கள் அவனுக்கு இருந்தாலும் அவை அனைத்தையும் ஒவ்வொன்றாய் இழந்து கடைசியாக மாண்டே போவான். ஆனால் சற்று முன்னே சொன்னபடி அவனுக்கு நல்வாழ்வு இருந்தபடியால் இத்தருணத்தில் சூரியனும் தன் கதிர்களை வீசினது, ஆதலால் பகலின் வெளிச்சத்திலே அவன் நடந்து மரணப்பள்ளத்தாக்கை கடந்தான். கடந்தவுடனே, “அவர் தீபம் என் தலையின் மேல் பிரகாசித்து, அவர் அருளின வெளிச்சத்தினால் இருiளைக்கடந்து போனேன்” (யோபு 29 : 3) என்று அகமகிழ்ந்து அறிக்கை யிட்டான்.
1. மரண நிழலின் பள்ளத்தாக்கு: என்பது, ஒரு கிறிஸ்தவன் பயத்தினாலும், சந்தேகத்தினாலும் நிறைந்து, தேவபக்திக்கேதுவான முயற்சிகளில் இன்பங் கொள்ளாதிருக்கிற ஒரு சமயத்தைக் குறிக்கிறது.
2. இரண்டு மனுஷர்: இவர்கள் இரட்சண்ய மார்க்கத்தின் காரியா பாகங்கள் எல்லாவற்றையும் பரிசோதனை செய்து, அதினால் மெய் பாக்கியம் உண்டாகிறதில்லை என்று அறிந்து கொண்டதுபோல சொல்லுகிறவர்களுக்கு சமமானவர்கள்.
3. கெடு பாதாளம்: என்பது, அறிவில்லாதவர்கள் பெரும்பாலும் தங்களைப் போலொத்தவர்களுக்குச் சொல்லி, அவர்கள் மனதை வழிநடத்தும் மோசமான கள்ள உபதேசங்களைக் குறிக்கிறது.
4. சேற்றுப்பள்ளம்: தாவீது விழுந்ததற்கு சமமான வெளியரங்க பாவங்களை குறிக்கிறது.
5. சகலவித ஜெபமாலை: ஒரு கிறிஸ்தவனுக்கு சோதனைகள் நேரிட்டால் அவன் ஜெபம் செய்ய வேண்டியது.