அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
கிறிஸ்தியான் தனிமையாய் தாழ்மை1 என்னும் பள்ளத்தாக்கின் வழியாய் நடந்து போனான். இந்தப் பள்ளத்தில் அவனுக்கு உண்டான அவஸ்தைகளுக்கு அளவில்லை. எப்படியெனில் அவன் தன்னை வழிவிட்டனுப்பும்படி வந்த நாலு கன்னிமாப் பெண்களையும் விட்டுப் பிரிந்து சற்றுதூரம் வரவே, ஒரு ஊத்தைநாறிப் பிசாசு அவனுக்கு எதிரே வந்தான். அவனுக்கு அப்பொல்லியோன்2 என்று பேர். அவனைக் கண்ட உடனே கிறிஸ்தியான் கலங்கி, இவனை எதிர்க்கிறதா?அல்லது திரும்பிவிடுகிறதா? எது நலம் என்று தனக்குள்ளே ஆலோசித்து, கடைசியாக, ஆகா, நமது முதுகைப் பேணிக்கொள்ளும் சீரா ஒன்றும் இல்லையே, பின்னிட்டுத் திரும் பினது மெய்யானால், அப்பொல்லியோனின் அம்புகள் சொரி மணலில் பாய்வது போல, என் திறந்த முதுகில் பாயும்; அப்புறம் நான் பிழைப்பது ஏது ? ஆகையால் நின்ற நிலை மாறாமல் எதிர்ப்பதே புத்தி; என் ஜீவனைப் பேண வேண்டும் என்று இருந்தால் பின் வாங்கல் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.
இந்த தீர்மானத்தோடு பின்னும் கொஞ்சதூரம் செல்லவே, அப்பொல்லியோன் அவனுக்கு எதிர்ப்பட்டான். அந்த இராட்சதனின் அலங்கோல ரூபத்தை என்ன என்று சொல்ல! பார்த்த உடனே உடம்பு சிலிர்த்துவிடும். அவன் தேகம் மீன் சிலாம்புகள் போல் இருந்தது; அதுவே அவனுடைய பெருமையாய் இருந்தது. வல்ல சர்ப்பத்தைப் போல அவனுக்குச் செட்டைகளும், கரடியைப்போல அவனுக்கு கால்களும் இருந்தன. அவன் வயிற்றுக்குள்ளிருந்து அக்கினியும் புகைக்காடும் புறப்பட்டன. சிங்கத்தின் வாயைப் போலொத்த வாயும் அவனுக்கு இருந்தது. அவன் கிறிஸ்தியானைக் கண்டவுடனே, தலையை நிமிர்த்தி, சீறிப்பார்த்துக் கொண்டு பின் வருகிறபடி கேட்டான்.
அப்பொல்: நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே பிரயாணம் போகிறாய்?
கிறி: சகல ஆகாமியங்களுக்கும் உறைவிடமாய் இருக்கிற நாசபுரியிலிருந்து புறப்பட்டு சீயோன் நகரத்துக்குப் போகிறேன்.
அப்பொல்: அப்படியானால் நீ நம்முடைய குடிகளில் ஒருவன் என்று வெளியாகிறது. அதெல்லாம் நம்முடைய தேசம் ஆயிற்றே, அதின் ஆண்டவனும் அதிபதியும் நாம்தான். காரியம் இந்தப்படி இருக்க நீ உன் அரசனைவிட்டுப் பிரியத் துரோகம் செய்த காரணம் என்ன? நீ இன்னும் நமது அடிமையாய் இருந்து நமக்குத் தொண்டு செய்வதான பூரண நம்பிக்கையைத் தராதபட்சத்தில், ஒரே அடியில் உன்னை அதோகதி ஆக்குவேன் பார்.
கிறி: உன் அரசாட்சிக்குட்பட்ட தேசத்தில் நான் பிறந்தது மெய்தான்; ஆனால் உனக்கு ஊழியஞ்செய்ய என்னால் இயலவில்லை. வேலை வாங்கினாலும் கூலி கொடாதவனிடத்தில் எவன்தான் இருப்பான்? நீ கொடுக்கும் கூலி அரைவயிற்றுக்குப் பற்றுமா? பாவத்துக்குச் சம்பளம் மரணம்தானே. அதினாலே எனக்குப் புத்தி தெளிந்தபின்பு, தெளிந்த புத்தியுள்ள பலரும் செய்கிறதுபோல என் வாழ்வுக்கு அநுகூலமான வழியை நான் தேடிக் கொண்டேன்.
அப்பொல்: எந்த ராஜாவானாலும் இப்படித் தன் குடிகளை இவ்வளவு லேசாய் இழந்து போகமாட்டான். நாமும் உன்னை இழந்துவிட இடங்கொடுக்கமாட்டோம். ஆனால் நீ நம்முடைய வேலை கடினம் என்றும், கூலி கொஞ்சம் என்றும் முறையிடுகிறாயே; நல்லது, அதை உன் மனதின்படியே ஒழுங்கு செய்து கொள்ளலாம். நீ திரும்பவும் நம்முடைய நாட்டுக்குப் போய், பழையபடி உன் வேலைகளைச் செய்; நமது நாட்டின் வருமானங்கள் எவைகள் உண்டோ அவைகளை உன் மனம்போல தரும்படி நாம் இதோ வாக்குக் கொடுக்கிறோம்.
கிறி: நான் ராஜாதி ராஜாவுக்கே என்னை ஒப்புவித்து அவருக்கு அடிமையாகிவிட்டேன்; ஆகையால் இனிமேல் திரும்பி உன் பிறகாலே வருகிறது நியாயமாய் இருக்குமோ?
அப்பொல்: நீ பேசுகிறதைப் பார்த்தால் “தீமையை விட்டுவிட்டு அதி தீமையில் விழுந்தான்” என்கிற பழமொழி போல இருக்கிறது; போயும் போயும் அங்கேயா சேர்ந்தாய்? ஆனால் போனது போகட்டும், நம்மை விட்டுப் போட்டு அவருக்கு அடிமைகள் ஆகிறவர்கள் கொஞ்சக் காலத்துக்குப் பின்பு மெதுவாய் அவரை விட்டு விலகி மறுபடியும் நம்மிடத்திற்கே வந்து விடுகிறது உண்டு; நீ அந்தப்படி வந்துவிட்டால் எல்லாக் காரியமும் உனக்கு ஷேமமாய் இருக்கும்.
கிறி: நான் ஆணையிட்டு, சத்தியம்பண்ணி, இனி நான் உமக்கே அடிமை என்று என்னை ஒப்புவித்தாயிற்று; அதை நான் மீறி நடந்தால் என்னைப்போல் துரோகி யாரும் இல்லை; அப்படிப்பட்ட துரோகியை தூக்கில் போட வேண்டாமா?
அப்பொல்: நீ நமக்கும் இப்படியே துரோகம் செய்திருக்கிறாயே; இப்பொழுது நீ நம்முடைய பேச்சைக் கேட்டு திரும்பிவிடுவாயானால் நாம் அதையெல்லாம் மறந்து போவோமே.
கிறி: எனக்குப் புத்தி தெரியாத காலத்தில் நான் உனக்கு அடிமையாய் இருக்க வாக்குக் கொடுத்ததுண்டு; நான் இப்பொழுது யாருடைய கொடியின் கீழ் இருக்கிறேனோ அவர் எனக்கு அதை மன்னித்து, உனக்கு உட்பட்டிருந்த காலத்தில் நான் நடப்பித்து வந்த பாவங்களையெல்லாம் மறந்து போவார் என்று உறுதியாய் நம்புகின்றேன். நாசகாலனாகிய அப்பொல்லியோனே, பின்னும் கேள்; உள்ளபடி சொன்னால் அவருடைய வேலையையும், அவர் தரும் கூலியையும், அவருடைய ஊழியக்காரரையும், அவருடைய ஆளுகையையும், அவருடைய தாசரையும், அவருடைய தேசத்தையுமே நான் விரும்புகிறேன். ஆதலால் நீ இனி வம்பும் தும்பும் பேசி என்னை வழி மறிக்க வேண்டாம்; நான் அவருடைய ஊழியன், அவரையே பின் தொடருவேன்.
அப்பொல்: நீ கவலையற்று மனச்சந்தோசத்தோடு போகிறாயே, வழியில் உனக்கு உண்டாகும் நாச மோசங்களைப் பற்றியாவது சற்று யோசித்துப் பார். நமக்கு இரண்டகம் பண்ணி நம்முடைய வழிகளில் நடவாத அவருடைய ஊழியக்காரர் எல்லாருக்கும் எவ்வளவு கேவலமான முடிவு வந்திருக்கிறது என்று உனக்கே தெரியுமே. அப்படிப்பட்டவர்கள் எத்தனையோ பேர் அவமானமான மரணம் அடைந்திருக்கிறார்கள்; அது போகட்டும், நமது ஊழியத்தைப் பார்க்கிலும் அவருடைய ஊழியத்தை உயர்த்திப் பேசுகிறாயே, அவர் தம்மைச் சேவிக்கிறவர்களுக்குச் சகாயம் செய்யும்படியாக, எப்போ தாவது தாம் இருந்த இடத்தைவிட்டு அசைந்தது உண்டா? சொல்லு. நம்முடைய குணமோ அப்படி அல்ல, வல்லமையினாலாவது, தந்திரத்தினாலாவது ஊரும் உலகமும் அறிந்தபடி, நம்மை சேவிக்கின்ற வர்களுக்கு சகாயம் செய்யவும், அவர்கள் சிறை பிடிக்கப்பட்டுப் போனாலும் அவர்களை அவருடைய கைக்கும், அவருடைய ஊழியக் காரருடைய கைக்கும் தப்புவிக்கும்படியாகவும், படாத பாடெல்லாம் பட்டு, செய்யாத பிரயத்தனம் எல்லாம் செய்கிறோம்! அந்த சகாயத்தை உனக்கும் செய்வோம் என்று நம்பு.
கிறி: அவர் இப்பொழுது அவர்களுக்கு உதவி செய்யப் பின்வாங்குவது போல் இருப்பது, அவர்கள் முடிவுபரியந்தம் தம்மைப் பற்றிக் கொள்ளுவார்களோ அல்லவோ என்று அவர்களுடைய அன்பைப் பரிசோதிக்கவே அல்லாமல் வேறு காரணத்தால் அல்ல. நீ அவர்களுடைய முடிவைப்பற்றி, அது அவமானமுள்ள முடிவு என்றல்லவா சொல்லுகிறாய்; அவர்களுக்கு அதுதான் மகிமையுள்ள தாக எண்ணப்படுகிறது. ஏனெனில் தற்கால விடுதலைகளை அவர்கள் அவ்வளவாய் நாடாமல், பிற்கால மகிமைக்காக எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய அதிபதி தமது மகிமையோடும், தமது தூதருடைய மகிமையோடும் வருங்காலத்தில் அதை அவர்கள் பெற்றுக் கொள்ளுவார்கள்.
அப்பொல்: அவரிடத்தில் ஊழியத்துக்கு அமர்ந்து இவ்வளவு காலத்துக்குள்ளாக நீ காண்பித்திருக்கிற உண்மைத்தாழ்ச்சி அதிகமாய் இருக்கிறதே; இனி அவரிடத்தில் கூலி வாங்கி சுகிக்கலாம் என்று எண்ணுகிறாயோ?
கிறி: எந்த விஷயத்தில் நான் அவர் ஊழியத்தில் உண்மை அற்றவனாய் நடந்திருக்கிறேன்? சொல்லு, அழிம்பனே!
அப்பொல்: நம்பிக்கையிழவில் நீ விழுந்து திக்குமுக்காடடைந்த போது ஏன்தான் வந்தேன் என்று மயங்கினாய்; உன் அதிபதி உன்னுடைய சுமையை இறக்கும் காலத்துக்கு நீ காத்திராதபடி வேறு வழியாய் நடந்து அதைச் சீக்கிரம் இறக்கிவிட வேண்டும் என்று போனாய்; நீ அக்கிரமத்தால் தூங்கி உனக்கு அவசியமான பொருட்களை இழந்தாய்; சிங்கங்களைக் கண்டவுடனே திரும்பி ஓட்டம் பிடிக்க காலெடுத்து வைத்தாய்; உன் பிரயாணத்தைப் பற்றியாவது, நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் பற்றியாவது சொல்லும்போது வீண் மகிமையை நாடும் நாட்டமே உன் உள்ளத் துக்குள் இருக்கிறது; இவை எல்லாம் உண்மைத் தாழ்ச்சி அல்லவா?
கிறி: இதெல்லாம் உள்ளதுதான்; இன்னும் நீ சொல்லாமல் விட்டவை அனந்தம் உண்டு. என்றாலும் நான் கனப்படுத்தி சேவிக்கும் மா பிரபு, இரக்கமும் மன்னிக்கும்படி ஆசையும் உடையவராய் இருக்கிறார். ஆனால் இந்தப் பலவீனங்கள் உன் நாட்டில்தான் என்னைத் தொத்திக் கொண்டது; அந்த ஆகாமியங்களின் முலைப் பாலை அங்கேதான் நான் குடித்து, அவைகளின் கீழ் அகப்பட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டேன்; இப்போது அவைகளுக்காக மனஸ்தாபப்பட்டு, என் அதிபதியினிடத்தில் மன்னிப்பையும் பெற்றுக் கொண்டேன் என்றான்.
அப்பொல்: இப்படிச் சொன்ன உடனே அப்பொல்லியோன் பெருஞ் சத்தம் போட்டு உக்கிர கோபத்தோடு, நாம் அந்த அதிபதியின் விரோதி; நாம் அவரையும் அவருடைய சட்டங்களையும், அவருடைய ஜனங்களையும் பகைக்கிறோம்; உன்னோடு போர் புரியவே இங்கே எழுந்தருளியானோம் என்று முழங்கினான்.
கிறி: முழங்கவே கிறிஸ்தியான்: அப்பொல்லியோனே கேள்! நீ செய்யப் போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரு; ஏனெனில் நான் பரிசுத்த மார்க்கமாகிய ராஜபாதையில் இருக்கிறேன், ஆதலால் பத்திரமாய் நடந்து கொள் என்றான்.
அப்பொல்: அதைக் கேட்ட உடனே அப்பொல்லியோன் தன் இரண்டு கால்களையும் கவிட்டுவைத்து, பாதை முழுவதையும் மறித்துக் கொண்டு, என்ன வந்தாலும் அஞ்சோம், நீ சாகும்படி தயாராய் இரு, நாம் வசிக்கும் பாதாள லோகப் படுகுழியின் மேல் ஆணைப்படிக்கு நீ இதற்கப்பாலே போகமாட்டாய்; உன் ஆத்துமாவை இந்த இடத்திலேயே சீரழித்து விடுகிறேன் பார் என்று சொல்லிக்கொண்டு, ஒரு அக்கினி அஸ்திரத்தை அவன் மார்புக்கு நேராக விட்டான். கிறிஸ்தியான் கையில் ஒரு கேடகம் இருந்ததால் 3 அதைக்கொண்டு அஸ்திரத்தை தடுத்து ஆபத்துக்குத் தப்பிப் பிழைத்தான்.
உடனே கிறிஸ்தியான் இனி நின்றால் காரியம் இல்லை, ஒரு கை பார்க்கத்தான் வேண்டும் என்று கிட்ட நெருங்கினான். நெருங்கவே கல் மழை சொரிந்தாற்போல் சரமாரியாய் அப்பொல்லியோன் அக்கினி அஸ்திரங்களை அவன் மேல் விட்டான். கிறிஸ்தியான் எவ்வளவு சாமர்த்தியமாய் அவைகளைத் தடுக்க முயன்றாலும் அப்பொல்லியோனின் அம்புகள் அவனைத் தலையிலும், கையிலும், காலிலும் காயப்படுத்தின. 4 கிறிஸ்தியான் பட்ட காயங் களினாலே சற்றுப் பின்வாங்கினான், பின் வாங்கவே அப்பொல்லியோன் வீரங்கொண்டு முன்னேறி கணக்கற்ற அஸ்திரங்களை முன்போல விட்டான். கிறிஸ்தியானும் தைரியம் அடைந்து வெகு சாமர்த்தியமாய் அந்த அஸ்திரங்களைத் தடுத்தான்; இந்தப் போர் அரை நாள் மட்டும் நடந்தது; கிறிஸ்தியானும் களைத்து சோர்ந்து போனான்; ஏனெனில் கிறிஸ்தியானுக்கு உண்டான படுகாயங்களினால் அவன் வரவரப் பலவீனமும், ஆயாசமும் அடைவான் என்று நீயே அறிந்து கொள்ள வேண்டியது.
அப்பால் அப்பொல்லியோன் சமயம் பார்த்து, கிட்ட நெருங்கி, மல்லுக்கட்டி கிறிஸ்தியானை கீழே விழத்தள்ளினான். தள்ளவே அவனுடைய பட்டயம் 5 கையிலிருந்து நழுவி தூரத்தில் விழுந்துவிட்டது. அதைக் கண்ட அப்பொல்லியோன்: பயலே அகப்பட்டாய், இப்போது உன் உயிர் என் கையில் இருக்கிறது என்பது நிச்சயம் என்று சொல்லி அவன் குற்றுயிராகும் மட்டும் நசுக்கினான்; கிறிஸ்தியானும் “நான் இதோடு தொலைந்தேன்” என்று எண்ணிவிட்டான். கடைசியாக அப்பொல்லியோன், அந்த நல்ல மனுஷனை இதோடு கொன்று போடும்படி தீர்மானித்து கையை ஓங்கினான்; ஆனால் ஜெயம் கர்த்தருடையதாகும்படி 6 அவர் சித்தங்கொண்டதால், ஓங்கின குத்து விழுகிறதற்குள்ளாக அவன் தன் கையை மெதுவாக நீட்டி, விழுந்து போன தன் பட்டயத்தை மறுபடியும் எடுத்துக் கொண்டு, என் சத்துருவே, எனக்கு விரோதமாய் சந்தோசப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன் (மீகா 7 : 8) என்று சொல்லிக் கொண்டு ஒரே குத்தாய் குத்தினான். குத்தவே அப்பொல்லியோன் சாவு குத்து விழுந்தவன் போல் பின்வாங்கினான். அது கண்ட கிறிஸ்தியான் தைரியங்கொண்டு, “இவைகள் எல்லாவற்றிலேயும் நாங்கள் எங்களில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம்” (ரோமர் 8 : 37) என்று சொல்லிக் கொண்டு அவன்மேல் விழுந்து அவனைக் குத்தி மடங்கடித்தான். அதோடு அப்பொல்லியோன் தன் வல்ல சர்ப்ப செட்டைகளை விரித்துக் கொண்டு பறந்து போய் விட்டான். கிறிஸ்தியான் அவனை அப்புறம் கண்டதே இல்லை. (யாக்கோபு 4 : 7)
இந்தப் போர் நடந்த சமயத்தில் அப்பொல்லியோன் போட்ட சத்தமும், இட்ட முழக்கமும் மகா பயங்கரமாய் இருந்தது. என்னைப் போல கிட்ட நின்று பார்த்தவர்களுக்கும், கேட்டவர்களுக்குமே அன்றி மற்றவர்களுக்கு அதின் தன்மை தெரியாது. அவன் வல்ல சர்ப்பத்தைப் போல பேசினான்; அவனுடன் போர்புரிந்த கிறிஸ்தியானுடைய இருதயத்திலிருந்து வியாகுலங்களும், பெருமூச்சுகளும் புறப்பட்டன. அவர்கள் இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கையில் நான் கிறிஸ்தியானுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு அற்ப சந்தோசமாவது அவன் முகச்சாயலில் காணப்படவில்லை; தன் பட்டய நுனியால் அப்பொல்லியோனைக் குத்தி மலத்தினது முதல்தான் அவன் முகம் சந்தோசமாய்த் தோன்றிற்று; அப்போது அவன் புன்னகை கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்; நானும் கண்டேன், கேட்டேன்; இப்படிப்பட்ட பயங்கரமான யுத்தம் நடந்திருப்பதே இல்லை.
போர் முடிந்த பின்பு கிறிஸ்தியான் என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சித்தவரும், அப்பொல்லியோனின் கைக்குத் தப்பும்படி சகாயம் செய்தவருமான என் பர்த்தாவை இந்த இடத்திலேயே துதிப்பேனாக என்று சொல்லி:-
ஆனந்தக் களிப்பு
துத்தியம், துத்தியம் என்றும்-திருநாமத்
துரையேசுநாதரை துதிப்பேனே என்றும்
துஷ்டனை நான் வெல்ல-அருள் தந்த
துரையேசுநாதரே! துத்தியம் என்றும்.
பேயாளும் பெயேல்செபூலும் – என்னோடு
போராட அழிம்பனை விட்டானே பாரும்
அக்கினிப் பாணங்களோடும் – இன்றவனை
விட்டேனா? நான் அவனை விட்டேனா? கேளும் —
பாதாளபூத அப்பொல்லோன் – நரக
கோபவெறி, சாப வெறி, மூர்க்கவெறி கொண்டோன்
விட்டானே பாணங்கள் என்மேல் – என்றாலும்
விட்டேனா? நான் அவனை விட்டேனா? கேளும் —
பிரதான தூதர் மிகாவேல்-துணை தந்தார்
வாள் வீசி வெற்றி பெற அவன் மேல்
குத்தினேன் பட்டய நுனியால்-உடனே
பறந்தானே இனிமேல் தொடரானே என்மேல்–
என்று இந்த ஆனந்தக் களிப்பைப் பாடினான்.
அந்த நேரத்தில் ஜீவ விருட்சத்தின் இலைகளை ஏந்திய ஒரு கை 7 அவனிடத்திற்கு நீட்டப்பட்டது. அவன் அதை வாங்கிப் போரில் உண்டான படு காயங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இலையைக் கிள்ளி வைத்தான். அந்நிமிஷமே அந்தக் காயங்கள் குணமாயின; அவன் சற்று நேரம் அவ்விடத்தில் உட்கார்ந்து, கன்னிமாப் பெண்களால் வழிக்கென்று கொடுக்கப்பட்ட அப்பத்தைப் புசித்து, திராட்சரசத்தைப் பானம் பண்ணி இளைப்பாறினான். சற்று நேரம் ஆனபின் அவன் மறுபடியும் பயணம்பண்ண எழுந்து, இன்னும் எந்தச் சத்துரு வருவானோ தெரியுதில்லை, ஆனதால் பட்டயமும் கையுமாய் இருப்பதே யூகம் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு உருவின வாளோடு புறப்பட்டான். அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும்மட்டும் அப்பொல்லியோனால் வேறு யாதொரு தொந்தரவும் அவனுக்கு உண்டானதில்லை.
1. தாழ்மைப்பள்ளம் என்பது, தேவனுடைய பிள்ளைகள் ஆவிக்குரிய பெருமையினால் அழிந்து போதபடிக்கு அவர்களைத் தாழ்த்தும்படி தேவன் பல துன்பங்களை பிரயோகிக்கும் சமயங்களைக்குறிக்கிறது. இப்படிப்பட்ட சமயங்களில் திருப்தியுடன், முறுமுறுப்பில்லாமல் இருப்பது மகா மேன்மையானது.
2. அப்பொல்லியோன். எபிரேய பாஷையில் சாத்தான் “அபெத்தோன்” என்று அழைக்கப்படுகிறது போல, கிரேக்கு பாஷையில் அவன் “அப்பொல்லியோன்” என்று அழைக்கப்படுகிறான். வெளி 9 : 11. இவ்விரு பதங்களும் “அழிம்பன் அல்லது நாசகாலன்” என்னும் பொருளைக் குறிக்கிறது. ஒரு கிறிஸ்தவன் சந்தேகத்தினாலும். பயத்தினாலும் வருந்துகையில் அவன் தன் பக்தியை விட்டுவிடவும், பலமான லோக இன்பங்களுக்கு மறுபடியும் திரும்பவும் சாத்தான் அவனை ஏவிவிடுகிறான்.
3. கேடகம் (விசுவாசம்) என்பது, தேவனுடைய வாக்கின்மேலுள்ள விசுவாசத்தைக் குறிக்கிறது; இதினால் அக்கினி பாணங்களை ஒத்த ஆகாத நினைவுகள் எல்லாவற்றையும் அவித்துப் போடலாம்.
4. பன்னியன் என்பவர் இந்த வாசகத்தை, கிறிஸ்தியான் தன் பகுத்தறிவிலும், விசுவாசத்திலும், சம்பாஷணையிலும் காயப்பட்டான் என்று சொல்லி விஸ்தரித்திருக்கிறார். அவன் மனதின் காரியங்கள் முன்போல் அவ்வளவு தெளிவாய் அவனுக்குத் தெரிகிறதில்லை; அவன் விசுவாசம் முன்போல் பலமாய் இருக்கிறதில்லை. அவன் நடக்கையும் அவ்வளவு சீராய் இல்லை. மெய்யான கிறிஸ்தவன் முதலாய் சோதனைக்கு இடங்கொடுத்த போதிலும் அதற்கு விரோதமாய் யுத்தம் செய்கிறான்.
5. பட்டயம். இது தேவ வசனத்தைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து “எழுதி இருக்கிறதே” என்று சொன்ன சமயத்தில் அதைக் கொண்டே சாத்தானை எதிர்த்தார். கிறிஸ்தியான் கையிலிருந்த பட்டயம் விழுந்துவிட்டது என்பது, அவன் தேவனுடைய வசனத்தினால் தனக்கு யாதொரு பாக்கியமும் கிடைக்க மாட்டாது என்று நினைக்கும்படியான சோதனைக்குட்பட்ட சமயத்தைக் குறிக்கிறது.
6. தேவன் தமது பிள்ளைகளுக்கு உண்டாகும் சோதனைகளை எல்லாம் விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்; அவர்கள் சகிக்கிறதற்கு மிஞ்சி சோதிக்கப்பட அவர் இடங்கொடாமல், கடைசியில் அவர்கள் அதிகமாய் ஜெயங்கொள்ளும்படி கிருபை செய்கிறார்.
7. ஒரு கை: என்பது, பலத்த சோதனைக்குப் பின்பு தேவன் தமது ஊழியக்காரரைக் கொண்டு அருளும் ஆறுதல்களைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவன் பாவ மன்னிப்பைத் தேடும் பொழுது சமாதானம் மறுபடியும் அருளப்படுகிறது.