பிரயாணி கஷ்டகிரி சேருதல்
அப்புறம் நான் என் சொப்பனத்திலே கண்டது என்னவென்றால், வேஷக்காரன், மாயக்காரன், கிறிஸ்தியான் ஆகிய மூவரும் முன்னும் பின்னுமாய் வழிநடந்து தங்களுக்கு எதிரே இருந்த கஷ்டகிரி1 என்னும் ஒரு மலையடிவாரம் சேர்ந்தார்கள்; அங்கே ஒரு நீரூற்று இருந்தது. திட்டிவாசலில் இருந்து வருகிற நேர்வழியை யல்லாமல் மலையின் வலப்பக்கத்திலும், இடப் பக்கத்திலும் இரண்டு கிளை வழிகளும்2 அவ்விடத்தில் பிரிந்திருந்தன. அவைகளில், திட்டிவாசலிலிருந்து துவக்கின இடுக்கமான வழி நேராக மலைச் சிகரத்திற்குப் போனது. கிறிஸ்தியானோ அந்த ஊற்றில் கொஞ்சம் தண்ணீர் குடித்து, தாகந்தீர்த்துக் கொண்டு கஷ்டகிரி மேலே ஏறினான். அவன் மலையில் ஏற ஏற;
இம்மலை மா உயரம்; ஏறுவேன், ஏறுவேன்.
இந்தச்சிகரம் கஷ்டம்; ஆனால் ஏறுவேன், ஏறுவேன்
இப்பரும்பே ஜீவவழி; ஏறுவேன், ஏறுவேன்.
நெஞ்சே நீ அஞ்சாதே; ஏறுவேன், ஏறுவேன்.
மனமே மயங்காதே; ஏறுவேன், ஏறுவேன்.
கஷ்டம் ஆனால் நல்வழியே; ஏறுவேன், ஏறுவேன்.
ஏற்றம் ஆனால் நேர் வழியே; ஏறுவேன், ஏறுவேன்.
லேசு வழி நாசம்; இதில் ஏறுவேன், ஏறுவேன்.
மனமே நீ மூச்சடக்கு; ஏறுவேன்,ஏறுவேன்.
என்று சொல்லிக்கொண்டே ஏறினான்.
மற்ற இரண்டு பேரும் மலைமேல் போகும் கஷ்ட வழியைக்கண்டு கலங்கி, பக்கத்தில் இருந்து பிரியும் இருவழிகளும் மலையைச் சுற்றி, நேர்வழியில்தான் சேரும் என்று நினைத்துக்கொண்டு,3 ஒருவன் வலப்பக்கத்து வழியிலும், மற்றவன் இடப்பக்கத்து வழியிலும் நடந்தார்கள். அவ்விரு வழிகளும் முறையே, மோசம், நாசம் என்று பேர் வழங்கப்பட்டது. மோசத்தில் நடந்தவன் கடைசியாக அடர்ந்த ஒரு சோலைக்குள் போய் காணாமலே போனான்.
நாசத்தில் நடந்தவன் ஒரு இருண்ட மலைச் சிகரத்தில் சேர்ந்து வழுக்கிவிழுந்து எழுந்திருக்க இயலாமல் நாசமாய்ப் போனான்.
அப்புறம், கஷ்டகிரியின்மேல் ஏறின கிறிஸ்தியானை நான் நோக்கினேன். துவக்கத்தில் ஓடி, ஓடி ஏறினவன் அப்புறம் நடந்து, நடந்து ஏறினான். அப்பால் முழங்காலால் நடந்து, கல்லையும், கரட்டையும், செடிகளையும் பிடித்துப் பிடித்து ஏறினான். பாதிமலை ஏறவே பச்சென்று தோன்றிய ஒரு நந்தவனத்தை4 அவன் கண்டான். அந்த மலையின் அதிபதி பிரயாணிகள் இளைப்பாறிக் கொள்ளும்படி அதை அங்கே ஸ்தாபித்திருந்தார். கிறிஸ்தியான் அந்த நந்தவனம் சேர்ந்து சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறினான். சற்று நேரம் தன் மடியில் இருக்கும் சுருளை எடுத்து வாசித்து தேறுதல் அடைந்து, சிலுவையின் அடிவாரத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட அங்கி முதலானவைகளைக் குறித்து தியானித்துக் கொண்டே தலை சாய்த்தான். தலை சாயவே அயர்ந்து பொழுது அஸ்தமிக்கப் போகிற நேரமட்டும் தூங்கிவிட்டான். தூக்கத்தில் அவன் சுருளும் கையில் இருந்து நழுவி விழுந்துவிட்டது. இப்படி அவன் அயர்ந்து தூங்கு கையில் யாரோ ஒருவன் வந்து தட்டி எழுப்பி: “சோம்பேறியே, நீ எறும்பண்டை போய் அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக் கொள்” (நீதிமொழிகள் 6 : 6) என்று சொன்னார். அதைக் கேட்ட கிறிஸ்தியான் திடும் பிரவேசமாய் எழுந்து, உடனே அங்கிருந்து மலையேறி உச்சியில் சேர்ந்தான்.
கஷ்டகிரியைக் கடந்துவிட்டேன் அப்பா என்று கிறிஸ்தியான் மகா சந்தோசத்தோடு உட்கார்ந்திருக்கையில், இரண்டுபேர் தலைவிரி கோலமாய் ஓடி வந்து அவனண்டை சேர்ந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அச்சன் என்றும், வேறொருவனுக்கு சந்தேகி என்றும் பேர்.5 கிறிஸ்தியான் அவ்விருவரையும் நோக்கி: ஐயா முதலாளிமாரே! ஏது விசேஷம் என்று கேட்டு, தப்பான பாதை வழியில் அல்லவா ஓடுகிறீர்கள் என்று சொன்னான். அதற்கு அச்சன் சொல்லுகிறான்: நாங்கள் சீயோனுக்கு ஓடினோம், இதோ இந்த சங்கடமான இடத்தையும் கடந்து போனோம்; ஆனால் என்னடா அப்பா, இந்த அவதியும் உண்டா? போகப் போக வருத்தமா? போகப் போகச் சங்கடமா? ஒன்று தாண்டி ஒன்று அதிக வருத்தமாய் இருக்கிறது. இந்த அவஸ்தைகளை யார்தான் சகிப்பார்கள்? ஆனதினால் சீயோனும் வேண்டாம், அதின் வாழ்வும் வேண்டாம் என்று திரும்பி ஓடுகிறோம் என்று சொன்னான்.
அவன் இவ்வளவும் சொல்லி முடித்த உடனே சந்தேகி சொல்லு கிறான்: இதோ நமக்கு முன்னே கொஞ்ச தூரத்தில் இரண்டு சிங்கங்கள் கிடக்கின்றன; அது தூங்குகிறதோ, விழித்திருக்கிறதோ தெரியுதில்லை; நல்ல வேளைக்கு அதின் கண்ணில் அகப்படாதபடிக்கு தப்பினோம்; எங்களை மாத்திரம் கண்டது நிஜமானால் இதற்குள் நாங்கள் சதை வேறு எலும்பு வேறாய் போயிருப்போம் என்று சொன்னான்.
கிறி: அப்போது கிறிஸ்தியான்: ஐயோ, நீங்கள் என்னைப் பயம் காட்டுகிறீர்களே; நான் எங்கே ஓடிப் போய் ஒளிப்பேன்? என் ஊருக்குத் திரும்பி ஓடிப் போக வேண்டுமானாலும் அது அக்கினிக்கும், கந்தகத்துக்கும் இரை ஆகும்படி தீர்மானிக்கப்பட்டாயிற்று. அது அழியும்போது நானும் அழிய வேண்டியதுதான்; உன்னதத்தில் இருக்கும் உச்சிதப் பட்டணம் சேர்ந்தாலோ நான் சந்தோஷமாய் வாழ்ந்திருப்பேன்; ஆகையால் அங்கேயே போகத் துணிவேன். திரும்பி பின்னாய் போவது மரணமாய் முடியும். திரும்பாமல் முன்னே போனால் சாவோம் என்கிற பயங்கரம் மாத்திரம் இருக்கிறது; ஆனால் அது நித்திய ஜீவனாய் முடியும். ஆகையால் இன்னும் முன்னுக்கே செல்வேனாக என்று சொன்னான். இப்படிச் சொன்ன பின் அச்சனும், சந்தேகியும் மலையிலிருந்து இறங்கி ஊர் முகமாய் ஓடினார்கள். கிறிஸ்தியானோ தன் வழியே போனான். ஆனாலும் தன்னைச் சந்தித்த இரண்டு பேரும் சொன்ன வார்த்தைகள் அடிக்கடி அவன் மனதில் ஞாபகத்திற்கு வந்தது. அப்போது வழக்கப்படி தன்னைத் தேற்றிக் கொள்ளும்படியாகத் தன் மடியில் இருந்த சுருளை எடுக்கப்போனான்.
1. கஷ்டகிரி என்பது, ஒரு கிறிஸ்தவன் வருத்தங்களைச் சகிக்கவும், தன்னை வெறுப்பதை முயற்சிக்கவும், துர்ப்பழக்கங்களை மேற்கொள்ளவும், தன்னை ஆளும் விசேஷமான பாவங்களை விடவும் நேரிடுகிற பல சமயங்களை குறிக்கிறது.
2. கிளை வழிகள் என்பது, மனுஷர் தேவனுடைய பிரமாணங்களுக்கு அடங்க மனமில்லாதிருக்கையில் தங்கள் மனச்சாட்சியை சாந்தப்படுத்தும்படி தேடும் பல வீண்போக்குகளைக் குறிக்கிறது.
3. மனிதர் இந்தச் சங்கடம் தொலையுமட்டும் அதற்கு அவசியமாய் வேண்டிய தீமைகளைச் செய்துவிட்டு அப்புறம் விட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். இது எப்போதும் அவர்களை மோசத்துக்குட்படுத்திக் கடைசியாக நாசப்படுத்தும்.
4. நந்தவனம் என்பது சங்கடங்களின் ஓய்வை அல்லது ஆவிக்குரிய மட்டுக்கு மிஞ்சின ஆறுதல்களைக் குறிக்கலாம். இப்படிப்பட்ட சமயங்களில் உத்தம கிறிஸ்தவர்கள் முதலாய் அசதியாய் இருந்துவிடும்படியான சோதனைக்கு உட்படுகிறார்கள்.
5. அச்சன், சந்தேகி என்பது, மனுஷருக்கு அஞ்சியாவது, துன்பத்தின் நிமித்தமாவது, கிறிஸ்துமார்க்க நெறி தவறிப்போகிறவர்களுக்கு அடையாள மாய் இருக்கிறது.