பிரயாணியின் சிலுவைத் தரிசனை
கிறிஸ்தியான் மிகுந்த வருத்தத்தோடே ஓடிக் கடைசியாகத் தனக்கு முன்இருந்த ஒரு மேட்டின் அடிவாரம் வந்து சேர்ந்தான். அதின் உச்சியில் ஒரு சிலுவையும், அதன் அருகே ஒரு சமாதியும் இருந்தது. கிறிஸ்தியான் மெதுவாய் அந்த மேடேறி சிலுவையண்டை வந்தான். வரவே, அவன் முதுகில் இருந்த பாரச் சுமையின் கயிறுகள் தெறிப்புண்டு விழுந்து பந்து போல் அந்தச் சமாதிமட்டும் உருண்டு உருண்டு அதனுள் விழுந்து அப்புறம் காணாமலே போயிற்று.1 என்று நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
அதுமுதல் கிறிஸ்தியான் மலர்ந்த முகமும், நிமிர்ந்த முதுகு முடையவனாய் நின்று கொண்டு, “அவர் தமது துக்கத்தால் எனக்கு ஆறுதலையும், தமது சாவினால் ஜீவனையும் தந்தார்” என்று ஆனந்த மனதோடு சொன்னான். அப்புறம் அவன் தனக்குண்டான பெரும் பாக்கியத்தை உணர்ந்து பிரமித்து, அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு அதிசயப்பட்டான். சிலுவையைக் கிட்டவும், கயிறுகள் தெறிக்கவும், குருசை நெருங்கவும், பாரம் இறங்கவும் நேரிட்டது தனக்கே விளங்காத ஆச்சரியமாய் இருந்தது. ஆச்சரியத்தால் அவனுடைய கண்களாகிய சுனையிலிருந்து கண்ணீர் பெருகி, கன்னங்களின் வழியாய் வடிந்தன. (சகரியா 12 : 10) அதை அவன் துடைக்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை, அவ்வளவு பிரமிப்பு அவனுக்கு உண்டாயிற்று. இப்படி அவன் அழுத கண்ணும் சிந்தின மூக்குமாய் இருக்கையில், மூன்று ஒளிமயரூபிகள்2. (மாற்கு 2 : 5) அவனண்டை வந்து: “உனக்குச் சமாதானம் உண்டாவதாக” என்று சொல்லி வாழ்த்தினார்கள். அவர்களில் ஒருவர்: “உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன” என்றார். அடுத்தவர்: அவனுடைய பழைய வஸ்திரங்களைக் கழற்றி புது வஸ்திரங்களை அவனுக்கு தரிப்பித்தார். (சகரியா 3 : 4) மூன்றாவ தானவர்: அவனுடைய நெற்றியில் அடையாளம் போட்டு, முத்திரை பதுப்பிக்கப்பட்ட ஒரு சுருளையும்3 (எபேசியர் 1 : 13) அவன் கையில் கொடுத்து, கிறிஸ்தியானே! நீ ஓடும் மார்க்கத்தில் இதைப் பார்த்துக் கொண்டே ஓடி, பரலோகத்தின் வாசலில் சேரும்போது இதைக் காட்டு என்று சொல்லிவிட்டு, காணாமல் மறைந்து போனதை நான் என் சொப்பனத்திலே கண்டேன்.
அப்பொழுது கிறிஸ்தியான் மும்முறை குதித்து, ஆனந்த பரவசம் கொண்டு:
பாவபாரஞ் சுமந்தேன்
இதுவரையும் வந்தேன்,
இங்கே வருமட்டுமே
பாரம் நீங்கவில்லையே.
இங்கே வந்த நிமிஷம்
என் பாவபாரம் நாசம்,
இது என்ன இடமோ!
பாரம் நீங்கிப் போயிற்றே.
இங்கென் கட்டு விடவும்,
என் வாழ்வு துவக்கிற்றே
இது என்ன இடமோ!
சிலுவையே நீ வாழ்க!
சமாதியே நீ வாழ்க!
சிலுவையில் மாண்ட
இயேசுவே வாழ்க, வாழ்க
என்று பாடிக்கொண்டே வழி நடந்து போனான்.
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டதாவது: கிறிஸ்தியான் சிலுவையைக் கண்ட மலையைக் கடந்து இறங்கி அதின் அடிவாரத்தில் சேரவே, சற்று அப்பால் மூன்று பேர் படுத்து நித்திரை செய்கிறதை கண்டான். அம்மூவருடைய கணுக்காலிலும் சங்கிலிகள் மாட்டப் பட்டிருந்தன.
அவர்களில் ஒருவனுக்குப் பேதை என்றும், மற்றவனுக்கு சோம்பன் என்றும், இன்னொருவனுக்குத் துணிகரன் என்றும் பேர்.4
கிறிஸ்தியான் அவர்களண்டை போய்த் தட்டி எழுப்பி, தம்பி மாரே! இப்படியும் உறங்குவார் உண்டா? கடல் கொந்தளித்துக் காற்று பலமாய் அடிக்கிறபோது பாய்மரத்தின் உச்சியிலே படுத்துத் தூங்குகிற வர்களைப் போல அல்லவா உங்கள் காரியம் இருக்கிறது? (நீதிமொழிகள் 23 : 34) அடியற்ற பாதாளமாகிய சாவின் கடல் உங்களுக்குக் கீழ் இருக்கிறது தெரியாதா? விழித்தெழுந்து வாருங்கள், ஏனோதானோ என்று ஆலோசியா தேயுங்கள்; உங்கள் விலங்குகளை முறிக்கும்படி நான் உதவி செய்வேன், எவர்களை விழுங்கலாமோ என்று வகைதேடித் திரிகிற சிங்கம் உங்களைக் கண்டால், நீங்கள் தப்பிப் பிழைக்க வகையில்லாமல் அதின் பல்லுக்கே இரையாவீர்கள் என்று சொன்னான். (1 பேதுரு 5 : 8) அதைக் கேட்ட அவர்கள் அவன் முகத்தை சூடாகப் பார்த்து, அவரவர் பின் வருகிறபடி அவனுக்கு உத்தரவு சொல்லத் தொடங்குகிறார்கள்.
பேதை சொல்லுகிறான்: மோசம், மோசம் என்று மூச்சுவிடாமல் கத்துகிறாயே, எங்கடா மோசம்? என்றான். சோம்பன்: அப்பா, அப்பா அலட்டாதே; இன்னும் கொஞ்சம் தூக்கம்தான் என்றான். துணிகரன்: ஒவ்வொரு தொட்டியும் தன் காலில் நிற்கவேண்டியது அப்பா, உன் பாட்டைப் பார் என்றான். இப்படி மூவரும் அவரவர் சொல்ல வேண்டியதைச் சொல்லி மறுபடியும் படுத்துக் கொண்டார்கள்; கிறிஸ்தியான் தன் வழியே போனான்.
அவன் போகப் போக, தூங்கினவர்களை எழுப்பி அவர்களுக்கு வரும் அபாயத்தை உணர்த்தி, விலங்குகளையும் தறிக்கும்படி உதவி செய்வேன் என்று புத்தி சொல்லும் சிநேகிதன் பேச்சை அகற்றிப் போட்டார்களே! இவர்கள் எப்படிப்பட்ட சுபாவமுடையவர்களோ என்று பலவாறாய் விசனப்பட்டுக் கொண்டே போனான். போகவே, இரண்டு பேர் அந்தப் பாதையில் இடது பக்கத்துச் சுவரைத்தாண்டி விழுந்து, விரைவாய் வந்து கிறிஸ்தியானோடே கூடினார்கள். அவர்களில் ஒருவனுக்கு வேஷக்காரன் என்றும், மற்றவனுக்கு மாயக்காரன்5 என்றும் பெயர்.
கிறி: துரை மக்களே! நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கே போகின்றீர்கள்? என்று கிறிஸ்தியான் அவர்களைக் கேட்டான்.
வேஷ-மாய: நாங்களா? நாங்கள் வீண்மோடி தேசத்தில் பிறந்து, விருது பெறும்படி சீயோன் மலைக்குப் போகிறோம் என்று வேஷக்காரனும் மாயக்காரனும் சொன்னார்கள்.
கிறி: அப்படியா? நீங்கள் இந்த வழியின் துவக்கத்தில் இருக்கிற திட்டிவாசலுக்கு வரவில்லையே அதன் காரணம்? “ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுகிறவன் திருடனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கிறான்” (யோவான் 10 : 1) என்று விளம்பரஞ்செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியாதோ?
வேஷ-மாய: அதற்கு வேஷக்காரன்-மாயக்காரன்: வாசல் மட்டும் போய் அப்புறம் சேருவது, மகா சுற்று வழி என்று எங்கள் தேசத்தார் எண்ணிக்கொண்டு இந்தப்படியே சீயோனுக்குப் போகிற பாதையில் சேரத் தீர்மானித்திருக்கிறார்கள்; அதினாலேதான் நாங்கள் இப்படி சுவர் தாண்டி விழுந்து வருகிறோம்.
கிறி: வட்டம் சுற்றி வழி ஏறினாலும், சுவர் ஏறி விழுந்து வழியேறினாலும் வழி வழிதான்; ஆனாலும் இப்படிச் சுவர் ஏறி வழியில் சேருகிறது கூடாது என்று நாம் நாடிப் போகும் தேசத்து ராஜா விளம்பரம் அடித்திருக்க, அதை மீறினால் அது முண்டுத்தனமும், கீழ்ப்படியாமையுமாய் இருக்கும் அல்லவா? என்று சொன்னான்.
வேஷ-மாய: அதற்கு அவர்கள்: அந்தக் குப்பையை நீ ஏன் உன் தலைமேல் வாரிப் போட்டுக் கொள்ளுகிறாய்? நாங்கள் வழக்கப் படித்தானே செய்திருக்கிறோம். இப்படிச் செய்வதே ஆயிரம் வருஷமாய் எங்கள் தேசத்து வழக்கம் என்பதை நிரூபிக்க உனக்கு பதினாயிரம் சாட்சி வேண்டுமானாலும் இதோ தயாராய் இருக்கிறது.
கிறி: உங்கள் வழக்கம் எல்லாம் கோர்ட்டார் விசாரணையில் நிலை நிற்குமா?
வேஷ-மாய: பாரபட்சம் இல்லாத ஒரு நியாயாதிபதி மாத்திரம் இந்த வழக்கை தீர்க்கட்டும், அப்போ நியாயம் விளங்கும். ஆயிரம் வருஷத்து வழக்கமானபடியால், சட்டம் அதற்கு விரோதமானாலும், காலதோஷத்தினாலே ரத்தாய் போயிற்று என்று மூடனும் சொல்லு வானே; அது போகட்டும், எந்த மாதிரியாய் வந்தாலும் என்ன? சரியான வழியில்தானே இருக்கிறோம்; வழியில் வந்தது வந்தாயிற்று, இனி என்ன? நீ திட்டிவாசலில் இருந்து இந்த வழியில் வருகிறாயாக்கும்; நாங்கள் சுவர் ஏறி வந்தோமாக்கும்; இருவரும் கூடிப்போகிற வழி ஒன்றுதானே; எங்கள் காரியத்திலும் உன்னுடைய காரியம் எவ்விதத்தில் மேன்மை ஆயிற்று? அதைச் சொல்லு.
கிறி: நான் என் எஜமானுடைய சட்டப்படி இந்த வழியில் நடக்கிறேன், நீங்களோ உங்கள் மனங்கொண்ட பிரகாரம் இதில் வந்து கூடினீர்கள். இந்த வழியின் ஆண்டவர், உங்களைப்போல் இவ்வழி வருகிறவர்களை திருடர் என்றும், கொள்ளைக்காரர் என்றும் தீர்மானித்திருக்கிறார்; ஆதலால் கடைசியிலே நீங்கள் உண்மையுள்ள வர்களாக ஒப்புக் கொள்ளப்படுவீர்களோ என்பதைப் பற்றி நான் சந்தேகப்படுகிறேன். நீங்கள் அவர் சொல்லும் புத்தியின்படி அல்ல, உங்கள் சுயபுத்தியின்படி வருகிறவர்கள் ஆனதால், அவருடைய இரக்கத்தைப் பெறாமல் உங்கள் மட்டில் போகிறவர்களாகத்தான் இருப்பீர்கள் என்று சொன்னான்.
இதை அவர்கள் கேட்டு: ஏன் அப்பா மண்டை நோக, தொண்டை காயப் பேச வேண்டும்? உன் பாட்டை நீ பார், எங்கள் பாட்டை நாங்கள் பார்ப்போம்; கட்டளைகளையும், ஆசாரங்களையும்பற்றி நாங்கள் கரிசனையற்றவர்கள் அல்ல; உன்னைப் போல நாங்களும் எங்கள் மனச்சாட்சிக்கு ஏற்றபடி நடந்து வருகிறோம் என்பதற்கு சந்தேகம் இல்லை என்று மாத்திரம் சொல்லிவிட்டு, அவரவர் தன் தன் வழியிலே நடந்து போகையில், அவ்விரண்டு பேரும் சொல்லுகிறார்கள்: இல்லாத ஞானம் எல்லாம் பேசுகிறாய், உனக்கும் எங்களுக்கும் என்னவித்தியாசம்? உன் நிர்வாணத்தை மூடிக்கொள்ளும்படி யாரோ ஒருவன் இந்த அங்கியைக் கொடுத்திருக்கின்றான்; அந்த அங்கி ஒன்று தவிர6 ஆளுக்கு ஆள் பேதம் உண்டோ காட்டு என்றார்கள்.
கிறி: நீங்கள் வாசல் வழியாய் வராதவர்கள் ஆனதால் கட்டளை களாலும், ஆசாரங்களாலும் இரட்சிக்கப்படமாட்டீர்கள். (யோவான் 10 : 2) அது போகட்டும்; என் மேல் இருக்கும் அங்கியோ நான் போகிற அரண்மனையின் அதிபதியினால் நீங்கள் சொல்லுகிறபடியே என் நிர்வாணத்தை நான் மூடிக் கொள்ளவே எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எனக்கு கந்தையல்லாமல் வேறொன்றும் இல்லாததால், இதை நான், அவர் என்மேல் காண்பித்த அன்புக்குஅத்தாட்சி என்றே எண்ணிக் கொள்ளுகிறேன். என் கந்தைகளில் இருந்து நான் உரிந்து கொள்ளப்பட்ட நாளில் எனக்கு கிடைத்த இந்த அங்கியை நான் போட்டுக் கொண்டிருக்கிறதால், நான் வாசலில் சேர்ந்த உடனே பட்டணத்தின் அதிபதி என்னை நன்றாய் இனம் அறிந்து கொள்ளுவார். அதுவுமின்றி என் பாரச்சுமை விழுந்த நாளில், என் ஆண்டவருடைய உத்தம தாசரில் ஒருவரால் என் நெற்றியில் ஒரு அடையாளமும் போடப்பட்டது, அதை நீங்கள் இதுவரையும் கவனிக்கவில்லை என்று தோன்றுகின்றது. அது மாத்திரமா? என் வழியில் நான் வாசித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படியாக முத்திரையிடப்பட்ட ஒரு சுருளும் எனக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சுருளை உன்னதத்திலுள்ள உச்சிதபட்டணத்தின் வாசலில் கால் மிதித்த உடனே காண்பிக்கும்படியாகவும் எனக்குக் கற்பிக்கப்பட்டது. இவை ஒன்றும் உங்களுக்கு இல்லை என்று நான் நம்புகின்றேன். நீங்கள் திட்டிவாசலின் வழியாய் வராததால் இவை உங்களுக்கு இருக்கவே மாட்டாது என்று சொன்னான்.
இவையெல்லாம் அவர்கள் கேட்டும் உணராமலும், பதில் பேசாமலும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள் என்று நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
அந்த மூவரும் அப்புறம் ஒன்றும் பேசாமல் அவரவர் பாட்டிலே போனார்கள். கிறிஸ்தியான் மாத்திரம் தனக்குள் பேசிக்கொண்டும், பலவாறாய் ஆலோசித்துக் கொண்டும், ஆறுதல் அடைந்தும், பெரு மூச்சுவிட்டும் நடந்து போனான். சில தரம் தன் கையில் இருந்த சுருளை வாசித்துத் தேறுதல் அடைவான்.
1. உத்தம மனஸ்தாபமும், இயேசுவின் மேல் உண்மையுள்ள விசுவாசமும் உடைய ஒவ்வொருவனும், நித்திய ஜீவ வழியில் இருக்கிறான்: ஆனால் அதின் பின், சில காலத்துக்குப் பாவப்பாரம் மனதை வருத்தும்; அதோடு அற்ப சந்தோசமும், சொற்ப சமாதானமும் இருக்கும். அவன் இயேசுவின் மூலமாயுள்ள இரட்சிப்பை பூரணமாயும் தெளிவாயும் அறிகிறபொழுது, பாரம் நீக்கப்படுகிறது. தனக்குப் பதிலாக கிறிஸ்து மரித்தார் என்று காண்கின்றான். பாவமானது விசுவாசியின் முதுகில் இருந்து எடுக்கப்பட்டு, கிறிஸ்துவோடு அவருடைய கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டது போலவும், இனி ஒரு காலத்திலும் அவனுக்கு விரோதமாய் எழும்பி ஆக்கினை செய்யமாட்டதென்பதுபோலும் உணருகிறான்.
2. மனந்திரும்பின விசுவாசிக்குப் பிதாவாகிய தேவன் பாவங்களை மன்னிக்கிறார். குமாரன் தமது மாசில்லாத அங்கியாகிய நீதி என்னும் உடுப்பால் அவனை உடுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை சுத்திகரித்து அதின் பரிசுத்த மாறுதல்கள் மற்றவர்களுக்கும் விளங்கும்படி செய்கிறார்.
3. முத்திரையிடப்பட்ட சுருள் என்பது, பாவ மன்னிப்பின் நிச்சயத்தைக் குறிக்கிறது. “ஆவியானவர் தாமே நம்முடனே கூட சாட்சி கொடுக்கிறார்” (ரோமர் 8 : 16 )
4. மெய் கிறிஸ்தவன் தன் காரியத்தைப் பற்றி மாத்திரம் கவலைப் படுகிறவனாய் இராமல், இரட்சிப்பைப்பற்றிய நாட்டமும் கவலையும் இல்லாத மற்றவர்களையும் உணர்த்துகிறான். பேதை என்பது அறிவில்லாத வர்களையும், சோம்பன் என்பது அஜாக்கிரதையினாலே மோட்ச பாக்கியங்களை இழந்து போகிறவர்களையும், துணிகரன் என்பது இரட்சிப் பின் விஷயத்தில் தங்கள் காரியமெல்லாம் சரியாய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, தங்களை எச்சரிக்கிறவர்களை, நீ உன் காரியத்தை மாத்திரம் பார்த்துக்கொள் என்று சொல்லுகிறவர்களையும் குறிக்கிறது.
5. வேஷக்காரன், மாயக்காரன் என்பது, தாங்கள் நினைத்த காரியம் கைகூடும்படியான நோக்கமாய் கிறிஸ்து மார்க்கத்துக்குட்படுகிறவர்களைக் குறிக்கிறது. வேஷக்காரன் என்பது, தேவபக்திக்கடுத்த வெளியரங்க ஆசாரங்களை மாத்திரம் கைக்கொண்டு தன்னையே வஞ்சித்துக் கொள்ளு கிறவனைக் குறிக்கிறது. மாயக்காரன் என்பது, அதே வகையாய் மற்றவர்களை வஞ்சிக்கிறவனைக் குறிக்கிறது.
6. தங்கள் சொந்த நீதியானது கந்தைக்குச் சமம் என்பதை அறிந்து கொள்ளாத வேஷதாரிகள், ஒவ்வொரு விசுவாசியும் உடுத்தப்படுகிற கிறிஸ்துவின் நீதியாகிய அங்கியை அலட்சியமாய் நினைக்கிறார்கள்.