வில்லியம் கிரிம்ஷா (1708 – 1763)
“இன்று நான் மரிப்பேனானால் எனக்குப் பின்னால் நான் இந்த உலகத்தில் விட்டுச் செல்ல எனக்கு ஒரு பென்னி நாணயம் கூட கிடையாது” என்றும் “நாம் பெருமை பாராட்ட நமக்கு என்ன உள்ளது? நமக்குள்ளதென்று நாம் நினைப்பது நாம் நம் கர்த்தாவிடமிருந்து பெற்றுக்கொண்டதல்லவா? கிருபையினாலே முற்றும் இலவசமாக நாம் இரட்சிக்கப் பட்டோம். நான் மரிக்கும்போது ஒரு மாபெரும் துயரமும், ஒரு பேரானந்த களிகூருதலும் எனக்குக் காத்திருக்கும். நான் இந்த உலகத்தில் இருந்த எனது வாழ்நாட் காலத்தில் நான் என் அருமை ஆண்டவர் இயேசுவுக்காக எத்தனை சிறியதொன்றைச் செய்தேன் என்பதே அந்தக் கவலையும், என் அருமை நேச கர்த்தர் பாவியாகிய எனக்காக எத்தனை பேரன்பைச் செய்துவிட்டார் என்பதே அந்த ஆனந்த களிகூருதலின் சந்தோசமாகவும் இருக்கும். இந்த உலகத்தை நான் என் மரணத்தின் மூலமாக என்றும் நிரந்தரமாகக் கடந்து செல்லுகையில் எனது வாயில் காணப்படும் எனது கடைசி வார்த்தைகள் “இதோ, அப்பிரயோஜனமான ஊழியன் கடந்து செல்லுகின்றான்” என்பதாகவே இருக்கும் என்பது போன்ற பரிசுத்த மணிமொழிகளை உதிர்த்தவர்தான் படத்தில் நாம் காண்கின்ற தேவ மனிதர் “வில்லியம் கிரிம்ஷா” என்பவராவார். 18 ஆம் நூற்றாண்டில் முதன்மை ஸ்தானத்தில் வாழ்ந்த ராட்சத தேவ மனிதர்களான ஜியார்ஜ் விட்ஃபீல்ட், ஜாண் வெஸ்லி என்ற இருவருக்கும் உடனடி அடுத்த ஸ்தானத்தில் வில்லியம் கிரிம்ஷா வைத்துப் போற்றப்படுகின்றார்.
வில்லியம் கிரிம்ஷா 1708 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் இங்கிலாந்து தேசத்திலுள்ள லங்காஷையர் மாநிலத்திற்கு அருகிலுள்ள பிரிண்டல் என்ற இடத்தில் பிறந்தார். விவசாயத்தையே தங்கள் தொழிலாகக் கொண்ட 1300 மக்கள் ஜனத்தொகையைக் கொண்ட பிரிண்டல் கிராமத்திற்கு அருகில்தான் பிரஸ்டன், சோர்லி, பிளாக்பர்ன் என்ற மூன்று பெரிய தொழிற்சாலை பட்டணங்கள் இருந்தன. கிரிம்ஷாவுடைய தகப்பனார் யார்? அவருடைய தாயார் யார்? அவருடன் பிறந்த அவருடைய சகோதரர்கள், சகோதரிகள் எத்தனை பேர்கள்? என்ற எந்த விபரமும் நமக்குக் கிடைக்கவில்லை. அப்படியே கிரிம்ஷாவுடைய இளமைப் பருவம், கல்வி போன்ற தகவல்களும் நமக்கு இல்லாதிருக்கின்றது. பிளாக்பர்ன் மற்றும் ஹெஸ்க்கத் என்ற இடங்களில் படித்த அவர் கேம்பிரிட்ஷ்க்கு அருகிலுள்ள கிறிஸ்து கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டதாரியானார் என்ற விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவர் ஒரு மாணவனாகவும், இளைஞனாகவும் கல்விச்சாலைகளில் கல்வி பயின்ற நாட்களில் அவருடைய நடத்தை, குணாதிசயம் போன்ற காரியங்களைக் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
1731 ஆம் ஆண்டு வில்லியம் கிரிம்ஷா, ரோச்டேல் என்ற இடத்தில் உதவி குருவானவராக நியமனம் பெற்றார். தன் ஆண்டவருடைய மகிமையின் சுவிசேஷத்திற்கு ஒரு ஸ்தானாபதி ஆகின்றோம், தன் ஆண்டவருக்கும், அழிந்து போகும் ஆத்துமாக்களுக்கும் தான் எத்தனையான உத்திரவாதத்துடன் பரிசுத்த பக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு உணர்வும், எண்ணமும் துளிதானும் இல்லாமல் உலகப்பிரகாரமாக நல்ல வசதிகளோடும், சுகபோகமாகவும் வாழ வகை செய்யும் ஒரு நல்ல உத்தியோகம் பூவுலகில் அதிர்ஷ்டவசமாகத் தனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதாக மற்ற உலகப் பிரகாரமான குருவானவர்களைப்போல அவரும் நினைத்துக் கொண்டார்.
ரோச்டேல் என்ற இடத்தில் உதவி குருவானவராக நியமனம் பெற்ற கிரிம்ஷா ஏதோ காரணமாக பணி செய்யக்கூடாமல் 1731 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே ட்றாட்மார்டன் என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். ரோச்டேல் என்ற இடத்திற்கும் லீட்ஸ் என்ற இடத்திற்கும் இடையில் உள்ள அழகு குலுங்கும் பசுமைப் பள்ளத்தாக்குத்தான் ட்றாட்மார்டன் என்ற இடமாகும். நீராவி இரயில் அந்த இடத்திற்கு வராத காலம் வரை அந்த இடம் தன்னளவில் நிகரற்ற அழகுடன் விளங்கிக் கொண்டிருந்தது. ட்றாட்மார்டன் என்ற அந்த இடத்தில் வில்லியம் கிரிம்ஷா நீண்ட 11 ஆண்டு காலமாகத் தங்கியிருந்து தேவப்பணி புரிந்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில்தான் கிரிம்ஷாவின் ஆவிக்குரிய சரித்திரம் முற்றுமாக மாற்றம் அடைந்தது.
ட்றாட்மார்டன் என்ற இடத்திற்கு வந்த மூன்றாம் ஆண்டில் அதாவது 1734 ஆம் ஆண்டு அவர் தனது ஆத்துமாவைக் குறித்தும், தனது கரத்தின் கீழ் உள்ள தனது சபையின் மக்களின் ஆத்துமாக்களைக் குறித்தும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்தார். அதின் காரணமாக அவரது வெளிப்படையான வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து அதுகாலம் வரை அவரது வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்திருந்த வேட்டையாடுதல், மீன் பிடித்தல், சீட்டாட்டம் ஆடுதல், விருந்துக் களிப்பு, கேளிக்கைக் கொண்டாட்டம் போன்றவற்றை விட்டுவிட்டு தனது சபை மக்களை சந்திக்க ஆரம்பித்து கிறிஸ்தவ பக்தி வாழ்வின் அத்தியாவசியத்தை அவர்களுக்கு மிகவும் ஆழமாக வற்புறுத்திச் சொன்னதுடன், தானும் அதை முழுமையாக தனது வாழ்க்கையில் அப்பியாசிக்கத் தொடங்கினார். அந்த நாட்களில் அவர் தேவ சமூகத்தில் அதிகமாக ஜெபிக்க ஆரம்பித்தார். ஆம், தினமும் நான்கு தடவைகள் அவர் ஆண்டவருடைய பாதங்களில் விழுந்து மன்றாடத் தொடங்கினார். அந்த மாட்சியான தேவ சமூகப் பழக்கத்தை அவர் தனது வாழ்வின் கடைசி நாட்கள் வரை விட்டு விலகவே இல்லை.
கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை சத்தியங்களான “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்ட இரட்சிப்பு” “விசுவாசத்தினாலே நீதிமானாகுதல்” “இயேசு கிறிஸ்துவின் மூலமாக உள்ள இலவச பாவ மன்னிப்பு” “பரிசுத்த ஆவியானவரின் புதிதாக்கும் வல்லமை” போன்ற எதையும் அந்த நாட்களில் கிரிம்ஷா முற்றும் அறியாதிருந்தார். அவர் உதவி குருவானவராக பணி செய்த ரோச்டேல் திருச்பையின் தலைமைப் போதகர் டாக்டர் டன்ஸ்டர் என்பவரிடமிருந்து ஒரு சில கிறிஸ்தவ புத்தகங்களை அவர் வாங்கி வாசித்த போதினும் அவைகள் அவரது ஆவிக்குரிய தேவைக்கு ஏற்றதாக அவருக்குக் காணப்படவில்லை. கொர்நேலியுவை பேதுரு அப்போஸ்தலனும், அப்பொல்லோவை ஆக்கில்லா, பிரிஸ்கில்லாளும் தேவனுடைய வழியை மிகவும் பூரணமாக வெளிப்படுத்திக் காண்பித்தது போல நமது கிரிம்ஷாவை ஆவிக்குரிய சத்தியத்தின் பாதையில் வழிகாட்டி அழைத்துச் செல்ல எவருமே இல்லை. ஆனால், அவர் தேவனுடைய வழியை உத்தம இருதயத்தோடு தேடிக் கொண்டே இருந்தார். அவர் தேடிய ஒளி அவர் விரும்பியவாறு உடனே வராத போதினும் கட்டாயம் வரவே வந்தது. தமஸ்குவில் உள்ள யூதாவின் வீட்டில் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அதிகமாக ஜெபித்துக் கொண்டிருந்தபோது போல கிரிம்ஷாவும் ஊக்கத்தோடே ஜெபித்துக் கொண்டிருந்தபடியால் அவரது ஜெபம் கேட்கப்பட்டது. தேவன் அவருக்கு உதவி செய்தார். கிரிம்ஷா, தேவனுடைய திருவுள சித்தத்தை மாத்திரமே செய்யும்படியான உத்தமமான மனமுடையவராக இருந்தபடியால் அவர் தமது அடியானுக்கு தமது வார்த்தையின்படி “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்றுஅறிந்கொள்ளுவான்” (யோவான் 7 : 17) என்ற தமது வசனத்தை கிரிம்ஷாவுக்கு உறுதிப்படுத்திக் கொடுத்தார்.
கிரிம்ஷாவுடைய வாழ்வில் ஒளிக்கும், இருளுக்குமான போராட்டம் அநேக ஆண்டு காலம் நீடிப்பது போலக் காணப்பட்டது. அது நீண்ட கால காலதாமதமாக நமக்குத் தெரிந்தாலும் அந்த தேவ மனிதர் எந்த ஒரு வெளி உலக மனிதரின் ஒத்தாசையின்றி முற்றும் தானாகவே தனித்த நிலையில் தனது ஆவிக்குரிய போராட்டத்தை சந்தித்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த ஆவிக்குரிய போராட்டம் மெதுவாக அவரில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதினும் அது உறுதியாகவும், நிச்சயமாகவும் முன் சென்று கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் அவரது மனைவியார் நோய்வாய்ப்பட்டு தனது 4 ஆண்டுகள் குடும்ப வாழ்விற்குப் பின்னர் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு மரித்துப் போனார்கள். மனைவியின் பிரிவினாலுண்டான கொடிய வியாகுலம் நமது கிரிம்ஷாவை அவரது அன்பின் ஆண்டவரோடு இன்னும் ஆழமாக நெருங்கி ஜீவிக்க வழிவகுத்துக் கொடுப்பதாக இருந்தது. இந்தச் சமயத்தில் “பியூரிட்டான்” (Puritan) தேவ பக்தனான தாமஸ் புரூக்ஸ் என்பவர் எழுதிய “சாத்தானுடைய தந்திரங்களுக்கு எதிரான சிறந்த பரிகாரங்கள்” (Precious Remedies Against Satan’s Devices) மற்றும் ஜாண் ஓவன் என்பவர் எழுதிய “நீதிமானாகுதல்” ஆகிய என்ற இரண்டு அருமையான ஆவிக்குரிய புத்தகங்கள் அவரது கரங்களுக்கு கிடைத்தன. அவைகள் அவருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தனது நீண்ட கால ஆவிக்குரிய போராட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமைந்தது. அதின் பின்னர் கிரிம்ஷா, “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8 : 12) என்ற பூரண ஆவிக்குரிய தெளிவுக்குள் வந்து சேர்ந்தார். அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் முழுமையாக உதிர்ந்து விழுந்துவிட்டன. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. தேவனுடைய சத்தியத்தை கிரிம்ஷா முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டார். அவர் அறிந்த சத்தியம் அவரை விடுதலையாக்கிற்று.
மனந்திரும்பாத, ஜென்ம சுபாவமுடைய உலக மனிதனாக, கேட்டின் மகனாக ட்றாட்மார்டன் என்ற திருச்சபைக்குள் குருவானவராக நுழைந்த கிரிம்ஷா, கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டியாக, தன் அன்பின் ஆண்டவரை “அப்பா, பிதாவே” என்றழைக்கும் புத்திர சுவீகாரத்தின் அதிகாரத்தைப் பெற்ற பரிசுத்த தேவ மனிதராக மாற்றமடைந்து காணப்பட்டார். அங்கு அவர் ஆண்டவரின் பாதங்களில் கற்றுக்கொண்ட பரலோகப் பாடங்களை அவர் தன் வாழ்வின் கடைசி வரை மறக்கவே இல்லை. “சோதனை, ஜெபம், வேதாகமம், தியானம் ஒருவனை தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தின் உண்மையுள்ள ஊழியக்காரனாக மாற்றுகின்றது” என்று கூறிய ராட்சத தேவ மனிதர் மார்ட்டின் லூத்தரின் வார்த்தைகளை நமது வில்லியம் கிரிம்ஷா என்ற பரிசுத்த குருவானவரின் வாழ்க்கை மெய்பிப்பதாக இருந்தது.
தனது ஆவிக்குரிய போராட்டத்தில் தேவனுடைய வார்த்தைகளின் வல்லமையைக் குறித்த கிரிம்ஷாவின் சாட்சியானது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவும், நம்மைப் போதனையடையச் செய்வதாகவும் இருக்கின்றது. அநேகரைப்போல அவரும் ஆரம்பத்தில் வேதாகமத்தை ஏதோ ஒரு புதிய புத்தகம் போலவே தனது உள்ளத்தில் எண்ணிக் கொண்டார். ஆனால், பின் வந்த நாட்களில் தேவனுடைய வார்த்தைகளுடன் அவர் சஞ்சரித்து அதின் வல்லமையை தன்னளவில் உணர்ந்து கொண்ட நாட்கள் ஒன்றில் ஒரு நண்பனிடம் “தேவன் தம்முடைய வேதாகமத்தை பூவுலகிலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாக தனக்கு வித்தியாசமான மற்றொன்றை அனுப்புவாரானால் அது தனக்கு புதிதாக இருக்காது” என்று கூறினார். உண்மைதான், ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகி விட்டால் பழையவைகள் ஒழிந்து எல்லாம் புதிதாகி விடுகின்றன.
ட்றாட்மார்டன் திருச்சபையிலுள்ள மக்கள் தங்கள் குருவானவரின் புதிய ஆவிக்குரிய வாழ்வின் மாற்றத்தை துரிதமாகவே கண்டு கொண்டுவிட்டார்கள். அவருடைய ஆவிக்குரிய போராட்டத்தின் ஆரம்ப கால நாட்கள் ஒன்றில் ஒரு ஏழை ஸ்திரீ தனது ஆத்துமாவின் மனக்கிலேசத்தில் அவரண்டை சென்று தனது கவலையை அவரிடம் சொன்ன போது “சூசன், நான் உங்களுக்கு என்ன ஆலோசனை சொல்லுவதென்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை. காரணம், நானும் உங்களுடைய மன நிலையில் நானே நிம்மதியடைய இப்பொழுது வழி தேடிக் கொண்டிருக்கின்றேன். நாம் இருவரும் ஆண்டவருடைய இரக்கத்தில் நம்பிக்கை வைப்போமானால் அதைப் போன்ற மோசம் நமக்கு எங்கும் கிடையாது” என்று சொன்னார். அந்த ஸ்திரீயைப்போல மேரி ஸ்கோல்ஃபீல்ட் என்ற மற்றொரு அம்மையார் வந்து கிரிம்ஷாவுடைய தேவ ஆலோசனையைக் கேட்டபோது “மேரி, நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அந்த துயரமான எண்ணங்களை எல்லாம் அப்பால் வீசி எறிந்து போட்டு உலகத்தில் சந்தோசம் கொண்டாடும் கூட்டத்தோடு நீங்களும் போய்ச் சேர்ந்து கொண்டு சந்தோசமாயிருங்கள். உங்கள் உள்ளத்தின் வேதனைகளிலிருந்து நீங்களே உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வீர்களானால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னார். ஆண்டவரை தனது வாழ்வின் சொந்தமாக்கிக் கொண்ட தனது பின் நாட்களில் கிரிம்ஷா மேற்கண்ட மேரியின் வீட்டிற்குச் சென்று “ஓ மேரி, குருடருக்கு வழிகாட்டும் குருட்டுத் தலைவனாக நான் இருந்த நாட்களில் உங்களை உலகத்தின் மாய சந்தோசங்களை அனுபவிக்கும் உலக மக்களின் கூட்டத்தில் சேர்ந்து உங்கள் துயரங்களைப் போக்கும்படியாக உங்களுக்கு எத்தனை மதிகெட்ட ஆலோசனையைச் சொன்னேன்” என்று கூறி தனது கொடிய தவறை ஒப்புக்கொண்டார். இப்படிப்பட்ட அநேக சம்பவங்கள் கிரிம்ஷா ஆண்டவருடைய மெய்யான இரட்சிப்பின் பாத்திரமாக மாறியதும் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. தேவ சமூகப் பிரசன்னம் ஒளி வீசி பிரகாசிக்கும் உண்மையான இரட்சிப்பின் காரியத்தை இந்த உலகத்தில் எதுவும் மறைக்கக் கூடாது என்பதை இது நமக்குப் புலப்படுத்துகின்றது.
ட்றாட்மார்டன் திருச்பையில் இருந்த நாட்களில் கிரிம்ஷா கடந்து சென்ற துயரத்தின் பாதை அத்தனை இலகுவானதல்ல. அவருடைய அன்பான மனைவியின் மரணம் அவரை உலுக்கி எடுத்துவிட்டது. அவரை ஆட்கொண்ட அவரது பரம குயவனார் அவரை உபத்திரவத்தின் குகையில் பழுக்கக் காய்ச்சி அவரைத் தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக எப்படி எப்படி வனைய வேண்டுமோ அந்தவிதத்தில் வனைந்து எடுத்துவிட்டார்.
ஹாவொர்த் திருச்சபையில் குருவானவர் கிரிம்ஷாவின் மகத்தான தேவ ஊழியம்
ஒரு நூறாண்டு காலத்திற்கு முன்னர் ஹாவொர்த் என்ற இடம் எந்த ஒரு குருவானவரும் சென்று தேவ ஊழியம் செய்ய முடியாத அளவிற்கு கடினமானதும், அநாகரீகமானதொரு இடமாகவும் இருந்தது. “நியாயத்தீர்ப்பின் நாள்” என்றதொரு புத்தகம் கூட அந்த இடத்தைக் குறித்து “பாழான அவாந்திர வெளி” என்று வர்ணித்திருந்தது. அது ஒரு ஒடுக்கமான நீண்டதொரு கிராமமாகும். அதின் வீடுகள் எல்லாம் பழுப்பு நிறக்கற்களால் கட்டப்பட்டவைகளாக இருந்தன. அந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டுமானால் அதற்குக் கீழாக உள்ள எப்டன் பாலத்திலிருந்து செங்குத்தாக மேலே ஏறிச் செல்ல வேண்டும். அதின் செங்குத்து உயரத்தைக் காண்போர் எவராயினும் அந்த ஊருக்கு சக்கரங்களால் இயங்கும் எந்த ஒரு வாகனமும் சமீப கால நாட்களில்தான் சென்றிருக்க வேண்டும் என்று உடனே கண்டு கொள்ளுவார்கள். உண்மைதான், அதைக் குறித்து ஒரு சுவையான சம்பவம் கூட உண்டு. அதாவது, முதன் முதலாவதாக ஹாவொர்த் கிராமத்திற்கு நான்கு சக்கர வாகனம் ஒன்று சென்றவுடன் அதைக்கண்ணுற்று ஆச்சரியமடைந்த அந்தக் கிராமவாசிகள் அந்த வாகனத்தை ஒரு மிருகம் என்று எண்ணிக்கொண்டு அது தின்பதற்காக வைக்கோலைக் கொண்டு வந்து அதற்கு முன்பாகப் போட்டார்களாம். அந்தவிதமான அநாகரீகமான கிராமத் திருச்சபையில்தான் நமது குருவானவர் வில்லியம் கிரிம்ஷா தேவனுடைய சிலுவைக் கொடியை ஏற்றி வைப்பதற்காக தனது காலடி தடம் பதித்தார்கள். கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு அத்தனையான இருள் சூழ்ந்த கிராமமாக அது காணப்பட்டது.
மனந்திரும்பாத பாவ நிலையில் குருத்துவ ஊழியம் செய்த ட்றாட்மார்டன் கிராமத்தில் அவர் செய்ததைப் போல இல்லாமல் ஹாவொர்த் கிராமத்தில் முற்றும் வித்தியாசமானதொரு விதத்தில் தனது தேவப்பணியை ஆரம்பித்தார். முரட்டுத்தனமான, நாகரீகமற்ற தனது திருச்சபையின் மக்களுக்கு கிறிஸ்து இரட்சகரின் மகிமையின் சுவிசேஷத்தை மிகவும் எளிமையான, விளங்கிக் கொள்ளும் விதத்தில் தேவாலயத்தில் பிரசங்கித்ததுடன் அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளையும் அவர் சந்திக்கத் தொடங்கினார். அவருடைய பிரசங்கம் நான்கு சுவர்களைக் கொண்ட தனது தேவாலயத்துக்குள் மாத்திரம் அடங்கி ஓய்ந்துவிடவில்லை. தம்முடைய சபையின் மக்களைக் கூட்டமாக தெருக்களிலோ, ஒரு அறையிலோ, தானியத்தை விளைவிக்கும் ஒரு வயலிலோ, தானிய கழஞ்சிய கூடத்திலோ, ரஸ்தா ஓரங்களிலோ, கற்கள் வெட்டி எடுக்கப்படும் குவாரிகளிலோ அவர் கண்டுவிட்டால் உடனே பிரசங்கிக்கத் தொடங்கிவிடுவார். வீடு வீடாகச் சென்ற அவர் மக்களுடன் உலகப்பிரகாரமான காரியங்களைக் குறித்துப் பேசி சிரித்து வேடிக்கையாகப் பொழுது போக்காமல் சபை மக்களின் ஆத்துமத்தின் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாகவிருந்தார். அவர் சென்ற இடமெல்லாம் தனது பரம எஜமானரையும் தன்னுடன் அழைத்தச் சென்று மக்களிடத்தில் அவர்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் ஆத்தும பாரத்தோடு பேசினார்.
அவர் தம்முடைய ஹாவொர்த் தேவாலயத்தில் திருச்சபை மக்களுக்கு ஆராதனை நடத்திய பரிசுத்த பாங்கு கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த ஆராதனைகளில் ஜீவன் இருந்தது, பரிசுத்த அக்கினியின் அனல் இருந்தது, சத்தியத்தின் சாட்சி இருந்தது. அதின் காரணமாக மற்ற தேவாலயங்களில் நடக்கும் ஆராதனைகளுக்கும் ஹாவொர்த் ஆலயத்தில் நடக்கும் ஆராதனைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்பட்டது. ஹாவொர்த் தேவாலயத்தில் அங்கு ஆராதனையில் பயன்படுத்தப்பட்ட ஜெப புத்தகம் ஒரு வித்தியாசமான புத்தகமாக காட்சியளித்தது. பிரசங்க பீடம் மக்களுக்கு எத்தனை பரிசுத்த பய உணர்வை ஏற்படுத்தியதோ அதே உணர்வை வேத பாடங்கள் வாசிக்கப்பட்ட பீடமும் உண்டாக்கியது. வில்லியம் கிரிம்ஷாவின் வாழ்க்கையைக் கவனித்த மிட்ல்ட்டன் என்பவர் “ஹாவொர்த் தேவாலயத்தில் கிரிம்ஷா ஆராதனையை நடத்தும் பரிசுத்த ஒழுங்கு, விசேஷமாக கர்த்தருடைய இராப்போஜனம் பரிமாறப்பட்ட ஆராதனைகளை அவர் கையாண்ட விதம் அற்புதமாகும். அந்த ஆராதனை சமயங்களில் அவருடைய பாதங்கள் தேவாலயத்தின் தரையில் இருப்பதாகக் காணப்பட்ட போதினும் அவரது ஆத்துமா பரலோகத்தில் இருப்பதாகவே காணப்பட்டது. தேவனுடைய செய்தியை மக்களுக்குக் கொடுப்பதற்கு முன்பாக அவர் தேவனுக்கு நேராக ஏறெடுத்த ஜெபமானது பலிபீடத்தின் கொம்புகளை அவர் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு கர்த்தர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து தமது ஜனத்தின் மேல் ஆசீர்வாதத்தைப் பொழிந்தாலொழிய தான் பிடித்த பலி பீடத்தின் கொம்புகளை எந்த நிலையிலும் விடப்போவதில்லை என்று அவர் கர்த்தரோடு போராடும் பாவனையில் காணப்பட்டது” என்று அவர் கூறுகின்றார். “தனக்கு முன்பாக அமர்ந்திருந்த ஏராளமான திருச்சபை மக்களுக்கு அவர் தேவனுடைய சத்தியத்தை உள்ளமுருகி முழு இருதயத்தோடும், தெளிவான விளக்கங்களோடு பகிர்ந்து கொண்ட விதமானது அநேகமாக அவர்கள் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது” என்று அவர் தொடர்ந்து கூறுகின்றார். தனது காலத்தில்வாழ்ந்த இதர தேவ ஊழியர்களைக்காட்டிலும் தனது பிரசங்கத்திற்கு இசைந்தாற்போல வாழ்ந்த கிரிம்ஷாவின் கிறிஸ்தவ வாழ்க்கை விசேஷித்ததாகவிருந்தது. தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தின் மேன்மையை அலங்கரித்து நின்ற அவர், அவரைக் காணும் அனைத்துக் கண்களுக்கும் அழகாக விளங்கினார். பிரசங்க பீடத்தில் ஒன்றைப் பிரசிங்கித்துவிட்டு தங்கள் நடைமுறை வாழ்க்கையில் அதற்கு நேர் விரோதமாக நடந்து தேவனுடைய நல்ல நாமத்தை தூஷிக்க வகைசெய்து கொடுக்கும் மற்ற குருவானவர்களைப் போன்று நமது கிரிம்ஷா காணப்படவில்லை. ஹாவொர்த் தேவாலயத்தின் பிரசங்க பீடத்தில் எந்த இயேசுவை பிரசிங்கித்தாரோ அந்த இயேசுவை தனது நடை முறை வாழ்க்கையிலும் தனது சபை மக்களுக்கு முன்பாகவும் அவர் வாழ்ந்து காட்டினார். ஹாவொர்த் தேவாலயத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பரிசுத்த குருவானவர் வில்லியம் கிரிம்ஷாவின் பரிசுத்த குணநலன்கள்
கிரிம்ஷா அபூர்வமான கண்ணும் கருத்தும், சுயவெறுப்புடைய தேவ மனிதராவார். தன்னுடைய தேவ அழைப்பின் பாதையில் அவரைப்போல அத்தனை கடினமாக உழைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு சிலரே அவரைப்போல உழைத்திருக்க முடியும். அவர் வாரந்தோறும் சராசரியாக 20 தடவைகளும் அடிக்கடி 30 தடவைகளும் பிரசிங்கித்தார். அதைச் செய்வதற்காக அவர் அநேக மைல்கள் தூரம் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டே இருந்தார். அந்தத் தேவப் பணியைச் செய்வதற்காக தனக்கு அளிக்கப்பட்ட மிகவும் எளிமையான பயணக்கட்டணத்தையும், மிக மிக வசதியற்ற தங்குமிடங்களையும் அவர் மிகுந்த மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
அவர் அசாதாரணமான கொடையாளியும், சகோதர சிநேகமும் கொண்டவர். அவர்கள் எந்தப் பெயர்களால் அழைக்கப் பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் கர்த்தராகிய இயேசு இரட்சகரை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்களை எல்லாம் முழுமையான அன்புடன் நேசித்தார். உலகப்பிரகாரமான அன்பிலும், ஆவிக்குரிய அன்பிலும் ஒவ்வொருவரையும் அவர் நேசித்தார். “அவருடைய ஈகைக்கு எல்லையே இல்லாதிருந்தது” என்று மேலே குறிப்பிட்ட மிட்ல்ட்டன் என்பவர் கூறுகின்றார். “அவருடைய இரக்கம், உண்மை போன்ற தேவதா சீலங்கள் அவரை யாவருக்கும் பயனுள்ளவராக்கினதுடன், மிகவும் ஏழை மக்களுடன் அவரை ஒன்றரக் கலந்துவிட வகை செய்தது. “நான் இன்று மரிப்பேனானால் நான் பின் வைத்து விட்டுச் செல்ல என் வசம் ஒரு பென்னி நாணயம் கூட கிடையாது” என்று அவர் அடிக்கடி சொல்லுவார்” என்று மிட்ல்ட்டன் தொடர்ந்து சொல்லுகின்றார்.
வில்லியம் கிரிம்ஷா வெளியே தமது படிப்பறையில் எதைச் செய்தாரோ அதையே தேவாலயத்திலும், பிரசங்க பீடத்திலும் செய்தார். அவர் அப்படிச் செய்தது 100 ஆண்டுகளுக்கு பின்னால் வாழும் நமக்கு நூதனமாகவும், மிகவும் விசித்திரமானதாகவும் காணப்படலாம். அந்த தேவ மனிதரைத் தவிர வேறு எவராலும் அதைச் செய்ய இயலாது. ஹாவொர்த் என்ற இடத்திலிருந்த அவரது தேவாலயத்தில் ஆராதனைக்காக வந்து கலந்து கொள்ளும் தனது சபை மக்கள் மத்தியில் மிகுந்த ஒழுங்கையும், சிறந்த பக்தி நடத்தையையும் அவர் மேற்கொண்டார். கவலையீனம், ஒழுங்கற்ற நடத்தை போன்றவை உடனுக்குடனும், நேருக்கு நேராகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஆலயத்தில் தனக்கு முன்பாக அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் கர்த்தரைப்பற்றிய பயத்துடன் காணப்படும் வரை அவர் தனது ஆராதனையை தொடர்ந்து நடத்தவே மாட்டார். தன்னுடைய சபையினரை அவ்வித பரிசுத்த ஒழுங்கில் தேவனுக்கு முன்பாக வளர்த்திக் கொண்டு வந்த காரணத்தாலேயே கிரிம்ஷாவுடைய ஓய்வு நாள் ஆராதனையில் பங்கு பெறுவதற்காக அநேகர் 10 முதல் 12 மைல்கள் வரை நடந்து வந்தனர். அவருடைய சபையைச் சேர்ந்த ஜாண் மேடன் பாகப் என்பவர் போகவர 40 மைல்கள் அடிக்கடி ஓய்வு நாளில் பிரயாணம் செய்து வந்து அவரது ஆராதனையில் வந்து கலந்து கொண்டிருந்தார்.
தன்னுடைய சொந்த சபையான ஹாவொர்த் போதக சேகரத்தில், தான், ஒரு போதகர் என்ற விதத்தில் அவர் கையாளும் காரியங்கள் மிகவும் வியப்பளிப்பதாக இருக்கும். அவர் அந்த ஊர் தெருக்கள் அல்லது சந்துக்கள் வழியாகச் சென்று கொண்டிருக்கும்போது தன்னுடைய சபை மக்கள் கூட்டமாகப் பேசிக் கொண்டும், சம்பாஷித்துக் கொண்டும் இருப்பதைக் காணும்போது அங்கே தனது குதிரையை நிறுத்தி அவர்கள் ஒழுங்காக ஜெபித்து வருகின்றார்களா என்று கேட்பார். அவர்களுடைய பதில் அவருக்குச் சந்தேகத்தை அளிப்பதாக இருந்தால் உடன் தானே அங்கேயே அவர்களுடன் முழங்காற்படியிட்டு ஜெபித்து அவர்களை ஆவிக்குள் அனல் மூட்டிவிடுவார். அப்படி அவர் மக்களுடன் முழங்காலூன்றி நிற்கும் இடம் எங்கே, எந்தச் சூழ்நிலை, எப்படி என்ற காரியங்களை எல்லாம் அவர் சற்றும் கண்டு கொள்ளவே மாட்டார். அவர் செய்கின்ற செயலை அந்நியன் ஒருவன் அந்த இடத்தில் நின்று காண்பானானால் அவனால் வாய்விட்டுச் சிரிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்காது. ஆனால், அதை எல்லாம் நம்முடைய கிரிம்ஷா கண்டு கொள்ளவே மாட்டார்.
“தன்னுடைய குதிரை சவாரியிலேயே தனது சபை மக்களை உயிர் மீட்சி அடையப்பண்ணி அவர்களை ஜெபிக்க ஏவிவிட்ட தேவ மனிதர்” என்ற ஒரு வழக்கச் சொல் அவர் வாழ்ந்த மாவட்டத்தில் அவருக்கு உண்டு. ஒரு சமயம் அவர் தனது குதிரையில் “கோன்” என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் வயது முதிர்ந்த ஒரு கிறிஸ்தவ மூதாட்டியைக் கண்டு அவர்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று கேட்டார். “வில்லியம் கிரிம்ஷாவுடைய பிரசங்கத்தைக் கேட்பதற்காக” என்று சொன்னதுடன் “தனது இருதயம் அந்த தேவ மனிதருடைய ஆலயத்தில் இருப்பதாகவும், சரீரம் மட்டுமே இங்கிருப்பதாக” சொன்ன அந்த அம்மையாரின் வார்த்தைகளைக் கேட்டு பரவசமடைந்து அந்த அம்மையார் வழிநடந்து கஷ்டப்படாமல் இருப்பதற்காக அவர்களைத் தூக்கி தனது குதிரையில் வைத்துக் கொண்டு சென்று தனது தேவாலயத்திலேயே விட்டு தனது பிரசங்கத்தைக் கேட்கச் செய்தார்.
தனது கைக்குள்ளான தனது திருச்சபை மந்தையின் ஆடுகள் தன்னிடமிருந்து கேட்கும் தேவ சத்தியங்களின்படி தங்கள் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்கு உண்மையாகவும், மகிமையாகவும் எல்லாக் காரியங்களிலும் ஜீவிக்கின்றார்களா என்பதை வில்லியம் கிரிம்ஷா மிகவும் ஆழமாகக் கண்காணித்து கவனித்து வந்தார் என்று தேவ மனிதர் ஜாண் நியூட்டன் சொல்லுகின்றார். அதைப் பரிசோதித்துப் பார்க்க அந்த பரிசுத்த பக்தன் கடுமையான பரிசோதனை நடபடிகளை எல்லாம் மேற்கொண்டார் என்று அவர் கூறுகின்றார். மாய்மாலம், வெளி வேஷம் போன்றவைகள் காணப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க ஒரு சிலரே அபூர்வமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளை எல்லாம் அவர் செய்தார். தனது மந்தையின் ஆடுகளில் ஒரு சிலரைக் குறித்து அவர் அதிகமாகச் சந்தேகப்பட்டதால் அவர்களுடைய உண்மை நிலையைக் கண்டறிய மாறு வேடங்களை அவர் எடுத்தார். அப்படி தனது சபையிலுள்ள ஒரு ஐசுவரியமுள்ள மனிதனைக் கண்டு பிடிக்க கிரிம்ஷா ஒரு ஏழை மனிதன் போல தன்னை மாற்றிக்கொண்டு அவனண்டை சென்று தனக்கு ஆகாரமும், தங்குமிடமும் கொடுத்துதவும்படியாக கெஞ்சினார். அந்த மனிதன் வெளிப்படையாக மிகவும் இரக்கமும், தயவும், அன்பும் உள்ளவனைப்போல தன்னைக் காண்பித்துக் கொண்டிருந்தான். அவன் ஏழையாக வந்த கிரிம்ஷாவை உண்மையாகவே ஏதோ ஒரு ஏழைதான் தன்னண்டை உதவிக்காக வந்திருக்கின்றான் என்று நினைத்து வாய்க்கு வந்தபடி நன்றாகத் திட்டித் துரத்தி அனுப்பி விட்டான்.
அங்கிருந்து கிரிம்ஷா தனது சபையிலுள்ள ஒரு வயதான கிறிஸ்தவ மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றார். அந்த அம்மையாருக்கு கண் பார்வை கிடையாது. அந்த அம்மையாரிடம் சென்ற அவர் தனது கரத்தில் ஒரு சிறிய கோலை எடுத்து அதைக் கொண்டு அவர்களை மிகவும் மென்மையாக ஓரிரு தடவைகள் தொட்டார். தனது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வீட்டுச் சிறிய குழந்தைகள் விளையாட்டுக்காக அவ்விதமாகச் செய்கின்றன என்ற உணர்வை கிரிம்ஷா ஏற்படுத்தினார். அவ்வளவுதான், அந்த அம்மையாருக்கு கடுமையான கோபம் வந்து தன்னைக் குழந்தைகள்தான் அப்படிச் செய்கின்றன என்று எண்ணி கடுமையாக பயமுறுத்தி அவர்களை ஏசவும் பேசவும் தொடங்கி விட்டார்கள். உடனே பாட்டியம்மாவின் ஆவிக்குரிய வளர்ச்சியை தன்னளவில் துக்கத்துடன் கண்டு கொண்டுவிட்டு அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார் பரிசுத்த பக்தன் கிரிம்ஷா.
கிரிம்ஷா தனது பரிசுத்தமான வாழ்க்கையாலும், தன்னுடைய வல்லமையுள்ள தேவச் செய்திகளாலும் தான் தேவப்பணி புரிந்த ஹாவொர்த் திருச்சபையிலுள்ள மக்கள் யாவரையும் ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்திவிடாத போதினும் அந்த தேவ மனிதரைக் குறித்த ஒரு பரிசுத்த பயம் சபை மக்கள் அனைவருக்கும் இருந்தது என்பது வெளிப்படையான ஒரு உண்மையாகும். ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். கர்த்தருடைய ஒரு பரிசுத்த ஓய்வு நாளில் ஒரு மனிதர் குதிரை சவாரி செய்து கொண்டு ஹாவொர்த் கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக அவனது குதிரையின் கால்களிலுள்ள லாடங்களில் ஒன்று கழன்று விழுந்துவிட்டது. புதிய லாடம் ஒன்று போட்டுக் கொள்ளுவதற்காக அந்த மனிதன் கொல்லனைத் தேடிச் சென்றான். ஆனால், அன்று ஓய்வு நாளானபடியால் குருவானவருடைய அனுமதி இல்லாமல் தான் குதிரைக்கு லாடம் கட்ட முடியாது என்று கொல்லன் கூறிவிடவே அவர்கள் இருவரும் கிரிம்ஷாவை தேடி வந்தனர். அந்தக் குதிரைக்கார மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு நோயாளியைக் காப்பாற்ற சிகிட்சைக்காக ஒரு டாக்டரை தேடிச் சென்று கொண்டிருந்ததால் கிரிம்ஷா உடனடியாக குதிரைக்கு லாடம் கட்டும்படியாகக் கொல்லனைக் கேட்டுக் கொள்ளவே அந்த வேலை முற்றுப்பெற்றது.
கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் குறிப்பாக கோடை கால நாட்களில் கர்த்தருடைய ஆலயத்திற்கு வராமல் ஊருக்கு அப்பாலுள்ள வயல் வெளிகளுக்குச் சென்று அங்கு வீணாகப் பொழுதைப் போக்குவது, அந்த நாட்களில் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தது. அந்த கெட்ட பழக்கத்திற்கு எதிராக கிரிம்ஷா எத்தனையோ தேவ செய்திகள் தேவாலயத்தில் கொடுத்த போதினும் வாலிப மக்கள் அதிலிருந்து சீர்திருந்த வழியே இல்லை. கடைசியாக அந்த வாலிபர்கள் ஓய்வு நாளில் எந்த இடத்தில் ஒன்றாகக் கூடி வருகின்றார்கள் என்பதை திட்டமாக அறிந்து கொண்ட பின்னர் ஒரு ஓய்வு நாளின் மாலை நேரம் கிரிம்ஷா வேஷம் மாறி அந்த இடத்திற்குச் சென்று அவர்களண்டை வந்ததும் தனது வேஷத்தைக் களைந்து போட்டு அங்கிருந்த அத்தனை வாலிபர்களையும் அங்கேயே நிற்கும்படியாகக் கேட்டு அவர்கள் அனைவரின் பெயர்களையும் பென்சிலால் எழுதிக் குறித்துக் கொண்டு அவர்கள் எல்லாரும் குறிப்பிட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட மணி நேரத்தில் தன்னை வந்து சந்திக்கும்படியாகக் கேட்டுக்கொண்டார்.
கிரிம்ஷா அந்த வாலிபர்களைக் கேட்டுக் கொண்ட வண்ணமே அவர்கள் யாவரும் ஏதோ அரசாங்க ஆணைக்கு நடுநடுங்கிக் கீழ்ப்படிபவர்களைப்போன்று குறிப்பிட்ட அந்த நாளில், அந்த மணி நேரத்தில் கிரிம்ஷாவின் குருமனை இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். கிரிம்ஷா அவர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே அவர்கள் எல்லாரையும் முழங்கால்களில் நிற்கச் செய்து, அவரும் அவர்கள் நடுவில் முழங்காலூன்றி நின்று அவர்களுக்காக உள்ளத்தை உருக்கும் ஒரு ஜெபத்தை ஏறெடுத்த பின்னர் அவர்களை எழும்பச் செய்து அவர்கள் உள்ளங்களைத் தொடும்படியான ஒரு கனிவான பிரசங்கத்தைச் செய்தார். அந்த நாளிலிருந்து அந்த வாலிபர்கள் ஓய்வு நாளில் வீண் பொழுது போக்கிற்காக வயல்வெளிகளுக்குச் செல்லாமல் ஒழுங்காக கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தனர். அதிலிருந்து தேவ
மனிதர் கிரிம்ஷா மீண்டும் ஒரு தடவை வேஷம் மாறிச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமற் போயிற்று. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.
மற்ற மக்களுடைய ஆத்துமாக்கள் பேரில் மிகவும் அக்கரை கொண்டு அவர்களை விழிப்போடு கண்காணித்த வில்லியம் கிரிம்ஷா தனது ஆத்தமாவின் காரியத்தில் வேண்டா விருப்பமற்றவராக இருந்துவிடவில்லை என்று ஹார்டி என்பவர் கூறுகின்றார். அதற்கு எடுத்துக் காட்டாக அவர் ஒரு உதாரணத்தையும் நமக்கு முன்பாக வைக்கின்றார். ஒரு சமயம் கிரிம்ஷா ஒரு அழகான பசு மாடு வைத்திருந்தார். அதைக் குறித்து அவர் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். காரணம், அவர் எங்கு சென்றாலும் அது அவரைப் பின் தொடர்ந்து செல்லும். எனினும், அது அவருடன் ஆலயத்துக்குச் செல்லுவது ஆண்டவருடனான அவருடைய ஐக்கியத்துக்கு மிகவும் இடையூறாக இருப்பதை உணர்ந்த அவர் தனது அழகிய பசு மாட்டை விற்றுவிடுவதென்ற திட்டமான முடிவுக்கு வந்தார். அதற்கான அறிவிப்பையும் அவர் கொடுத்துவிட்டார். அதைக் கேள்விப்பட்ட ஒரு விவசாயி அதை வாங்குவதற்காக வந்து அதின் அழகையும், ஆரோக்கியத்தையும் கண்டு வியப்புற்று அதை விற்பதற்கான அதினிடத்திலுள்ள குறை என்னவென்று போதகர் கிரிம்ஷாவிடம் கேட்டான். “அந்த மாட்டைக் குறித்து நான் கண்ட குற்றம் உனது பார்வையில் ஒருக்காலும் குற்றமாகவே இருக்காது. காரணம், அது என்னோடு கூட தேவாலயத்தின் பிரசங்க பீடத்திற்கே வருகின்றது” என்று கிரிம்ஷா குடியானவனுக்கு பதில் அளித்து அதை அவனுக்கே விற்றுவிட்டார்.
மிகுந்த மனத்தாழ்மையும், தியாக அன்பும் கொண்ட கிரிம்ஷா
எந்த ஒரு கிறிஸ்தவ சகோதரனுக்கும் அன்பையும், உபசரிப்பையும் காண்பிக்க வில்லியம் கிரிம்ஷா ஆரம்பித்துவிட்டால் அவரது மனத்தாழ்மையும், எளிமையும் எல்லை தாண்டிச் செல்லும் அளவிற்குச் சென்றுவிடும். அவரது தேவ பக்தியுள்ள நண்பர் ஒருவர் ஒரு நாள் இரவில் அவரோடு இராத்தங்கினார். அடுத்த நாள் காலை அவர் கண் விழித்து தனது படுக்கை அறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தான் முந்தின இரவில் கழற்றிப்போட்டிருந்த தனது துர்நாற்றம் வீசும் சப்பாத்துக்களை கிரிம்ஷா எடுத்து நன்றாகப் பாலீஸ் போட்டு பாங்குற சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு பேரதிர்ச்சியடைந்தார். அதுமட்டுமல்ல, அவர் தனது மேல் வீட்டறை படுக்கையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது தான் முந்தின இரவில் படுத்திருந்தது கிரிம்ஷாவின் படுக்கை அறை என்றும், அந்த அறையை அவர் தனக்குக் கொடுத்துவிட்டு இரவு முழுவதும் வைக்கோல் பரணில் பலவித கஷ்டங்களின் மத்தியில் கிரிம்ஷா நித்திரை செய்திருந்ததை ஆழ்ந்த துயரத்துடன் கண்டார்.
வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு சரித்திர சம்பவம்
தேவ மனிதர் வில்லியம் கிரிம்ஷாஅவர்களைக் குறித்து மிகவும் பிரபல்யமாகப் பேசிக் கொள்ளப்படும் ஒரு உண்மையான சரித்திரம் என்னவெனில், அவர் தனது ஹாவொர்த் பட்டணத்தில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்த குதிரைப் பந்தயங்களை நிரந்தரமான ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததுதான். அந்த புகழ்பெற்ற குதிரைப் பந்தயங்கள் ஹாவொர்த் பட்டணத்திலுள்ள தங்கும் விடுதிகளை வைத்து நடத்தும் ஐசுவரியமுள்ள முதலாளிகள் பொறுப்பெடுத்து நடத்தும் பந்தயங்களாகும். அந்தக் குதிரைப் பந்தயங்கள் நடக்கின்ற நாட்களில் ஏராளமான மது வகைகள் செலவிடப்படும். மக்கள் மட்டுக்கு மிஞ்சி குடித்து வெறித்தனர். குடிவெறி, தூஷணங்கள், கலவரங்கள், விபச்சாரம், வேசித்தனம் எல்லாம் அந்த நாட்களில் ஏராளமாகவும், தாரளமாகவும் அந்தப்பட்டணத்தில் நடைபெறும். அதைக் கண்ணுற்ற கிரிம்ஷா தனது ஆவிக்குள்ளாக மிகவும் துயரம் அடைந்தார். அந்த தீய காரியங்கள் எல்லாம் அந்தக் குதிரைப் பந்தயங்களையே மையமாக வைத்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால் எந்தவிதத்திலாவது அவைகளை நிறுத்திவிட கிரிம்ஷா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டன. கடைசியாக அந்தக் காரியத்தில் கிரிம்ஷா எவ்விதமாக ஜெயம் எடுத்தார் என்பதை புகழ்பெற்ற தேவ மனிதர் ஜாண் நியூட்டன் இவ்விதமாகக் கூறுகின்றார்:-
“குதிரைப் பந்தயங்களை நிறுத்தும்படியாக ஹாவொர்த்திலுள்ள மனிதர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட காரியங்கள் யாவும் நிறை வேறாமற் போனபடியால் மிகவும் மனம் உடைந்து போன வில்லியம் கிரிம்ஷா தனது ஆண்டவரை நோக்கி தனது கெஞ்சுதல்களை ஏறெடுத்தார். குதிரைப் பந்தயங்கள் நடைபெறப்போகும் நாட்களுக்கு முன்பதாகவே கிரிம்ஷா தனது ஜெபத்துக்காக நாட்களை ஒதுக்கி வைத்து நடைபெறப்போகும் பந்தயங்களில் கர்த்தர் தலையிட்டு பட்டணத்திற்கு நிந்தை அவமானத்தையும், நாசத்தையும், தீங்கையும் கொண்டுவரும் அவைகளைத் தமது திருவுளச்சித்தத்தின் வழிகளில் எப்படியாவது தடைசெய்யும்படியாக ஊக்கமாகத் தனது ஜெபங்களை மேற்கொண்டார். பந்தயங்கள் நடைபெறும் நாட்கள் நெருங்கின. மக்கள் திரள் திரளாக கூடி வழக்கபோல அதற்கான ஆயத்தங்களை ஆனந்தமாகச் செய்யத்தொடங்கினார்கள். என்ன ஆச்சரியம்! பந்தயங்கள் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் திடீரென்று வானம் கார் மேகங்களால் இருண்டு மழை கொட்டு கொட்டெனக் கொட்டத் தொடங்கினது. அந்த மழை தொடர்ந்து பந்தயங்கள் ஆரம்பிக்கும் நாள் வரை பெய்தது. அதின் காரணமாக பூமி மிகவும் ஈரமாகி சேறும், சகதியும் ஏற்பட்டு குதிரைகள் தங்கள் கால்களை பூமியில் ஊன்றக்கூடாத நிலையில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது. இந்த எதிர்பாராத சம்பவம் ஹாவொர்த் பட்டணத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. “வயதான கிரிம்ஷா பக்தன் தனது ஜெபங்களால் குதிரைப் பந்தயங்களை நிறுத்திவிட்டார்” என்ற ஒரு பழமொழியாக அந்தப் பட்டணத்தில் ஆச்சரியமாகப் பேசிக் கொள்ளப்பட்டடது. அது முதல் அந்த தீய குதிரைப் பந்தயங்கள் அந்த ஹாவொர்த் பட்டணத்தில் நடைபெறவே இல்லை” என்று ஆச்சரியத்துடன் கூறுகின்றார் ஜாண் நியூட்டன்.
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளையல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு
வில்லியம் கிரிம்ஷாவுடைய காலத்தில் வடக்கு இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான கிராமப்புற சபைகள் நிரந்தரமான குருவானவர்களின்றி, ஆராதனைகளின்றி நிர்ப்பந்தமாகக் கிடந்தன. அப்படியே ஆராதனைகள் நடந்தாலும், அந்த ஆராதனைகள் குளிருமின்றி, அனலுமின்றி செத்தவைகளாகவும் அவைகளில் கலந்து கொள்ளும் சபை மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் காணப்பட்டன. தனது சொந்த திருச்பையான ஹாவொர்த் சபையுடன் அதின் 50 மைல்கள் சுற்று வட்டாரத்தில் காணப்பட்ட லங்காஷையர், யார்க்ஷையர், செஷையர் போன்ற மூன்று மாவட்டங்களிலிருந்த ஏராளமான சபைகளுக்கு கிரிம்ஷா தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை சுமந்து கொண்டு சுவிசேஷகனாகச் சென்றார். அதின் காரணமாக மக்கள் மிகுதியும் ஆசீர்வதிக்கப்பட்டனர். லங்காஷையர், யார்க்ஷையர், செஷையர் போன்ற இடங்களிலிருந்த பேராயர்களும், பிரதான மூப்பர்களும் தங்கள் சபைக்குள் நுழைந்து பிரசங்கித்த அவரை அவ்விதமாகச் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்த இயலாதவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய அந்தராத்துமாவில் கிரிம்ஷா அவ்வண்ணமாக மக்களுடைய ஆத்தும மீட்புக்காக பிரசங்கிக்க வேண்டியது அவசியமென்று அவர்கள் கண்டார்கள். அத்துடன் அவரைப்போன்று கஷ்டப்பட்டு மக்களுக்காக உழைப்பது தங்களால் முற்றும் கூடாத காரியம் என்றும் கண்டார்கள். யாவுக்கும் மேலாக தேவனுடைய கிருபையுள்ள கரம் கிரிம்ஷாவின் மேல் இருந்தபடியால் ஹாவொர்த்திலுள்ள தனது சொந்த திருச்சபையின் காரியங்களையும் கவனித்துக் கொண்டு மற்ற திருச்சபைகளிலும் தனது மரணபரியந்தம் அவர் தேவப் பணி புரிந்தார்.
கிரிம்ஷா ஒருக்காலும் மற்ற சபைகளுக்கு போய் தேவ ஊழியம் செய்யக்கூடாது என்று தடை செய்யப்படாவிட்டாலும் அவர் அதினிமித்தம் பாடுகளுக்கும், உபத்திரவங்களுக்கும் முற்றுமாக நீங்கலாகி இருந்தார் என்றும் நாம் எண்ணிவிடக் கூடாது. இந்த உலகத்தின் அதிபதியாம் பிசாசானவன் தனது குடிகளில் ஒருவரைக் கூட இழந்து போக விரும்பமாட்டான் என்பதை நாம் நன்கறிவோம். அத்துடன் யாராவது தனது குடிகளில் கை போட்டால் அவன் கொந்தளித்து குமுறிவிடுவான் என்பதுவும் நாமறிந்த உண்மையே. ஹாவொர்த்தை தவிர அவர் பணி புரிந்த மற்ற இடங்களில் எல்லாம் “கிறுக்கன் கிரிம்ஷா” என்றே நமது தேவ மனிதர் கிரிம்ஷா அழைக்கப்பட்டார். திருச்சபைகளின் குருவானவர்கள்தான் அவரை அதிகமாக எதிர்த்தார்கள். வைக்கோல் பரணில் கிடக்கும் நாய் தானும் வைக்கோல் தின்னாமல், வைக்கோலைத் தின்பதற்காக வரும் மாட்டையும் தின்னவிடாமல் குரைத்துத் துரத்துவதைப்போன்று மேற்கண்ட பாதிரிகள் தாங்களும் சபையோருக்கு நன்மை செய்யாமல், நன்மை செய்ய வரும் மற்றோரையும் அனுமதிக்க மறுத்து நின்றார்கள்.
கிரிம்ஷாவை வெகு கொடூரமாக எதிர்த்து அவருக்கு கடும் தீங்கு செய்த மனிதன் சங்கை ஜியார்ஜ் ஒயிட் என்ற குருவானவர்தான். லங்காஷையரிலுள்ள கோன் மற்றும் மார்ஸ்டன் என்ற இடங்களிலிருந்த இரண்டு தேவாலயங்களுக்கு அவன் உதவி குருவானவராக இருந்தான். இங்கிலாந்து தேச அரச சேவைக்கு எதிராக கிரிம்ஷா காரியங்களைச் செய்கின்றான் என்றும், அரசரைப் பாதுகாக்க திரண்டு வாருங்கள் என்றும் பொய்யாக ஒரு தாக்கீதை எழுதி மக்கள் அறிய அதை எங்கும் விளம்பரப்படுத்திவிட்டான். அதின் எதிர் விளைவாக ஜாண் வெஸ்லியும் (மெதடிஸ்ட் திருச்சபையைத் தோற்றுவித்தவர்) வில்லியம் கிரிம்ஷாவும் 1748 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் ஒரு பெரிய கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். மதுபானம் அருந்தியிருந்த அந்த குடிகாரக் கும்பல் நமது ஜாண் வெஸ்லி மற்றும் கிரிம்ஷாவை தடிகளால் அடித்து அவர்களை திருடர்கள் மற்றும் பாதகர்களைப்போல தெரு வழியாக இழுத்துக்கொண்டு ஜியார்ஜ் ஒயிட் என்ற மேற்கண்ட மனிதனிடம் வந்தனர். அவர்கள் சேற்றையும், சகதியையும் நம்முடைய தேவ மக்கள் மேல் வாரி இறைத்தனர். அத்துடன் கிரிம்ஷா மற்றும் ஜாண் வெஸ்லியின் பிரசங்கங்களைக் கேட்க அங்கு கூடி வந்த சபை மக்களுக்கு இன்னும் பல துயரங்கள் நேரிட்டன. அவர்கள் சேற்றில் போடப்பட்டு நன்கு புரட்டி உருட்டி எடுக்கப்பட்டதுடன் ஆண், பெண் என்று பாராமல் தலை முடியைப் பிடித்து தெருக்களில் இழுத்துக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் எல்லாரும் தங்கள் ஜீவன் தப்ப ஓட்டம் பிடித்தனர்.
இத்தனை பாடுகள் அனுபவித்த போதினும் சிங்க இருதயம் கொண்ட அஞ்சா நெஞ்சினனான கிரிம்ஷா தேவனுடைய சுவிசேஷத்துடன் தான் பாடுகள் பட்ட இடத்திற்கே திரும்பவும் வந்து அடி உதைகள் பட்டு தன் ஆண்டவரில் மகிழ்ச்சியடைந்தார். அவர் இவ்வண்ணமாக தனது சரீரத்தில் சத்துருக்களால் அடிபட்ட காரணத்தாலேயே அவரது மரணம் சொற்ப வயதினனாக அவர் இருந்தபோதே அவருக்கு ஏற்பட்டது என்று சொல்லப்படுகின்றது. தன்னுடைய சபையைவிட்டு மற்ற சபைகளுக்குள் சென்று பிரசங்கிக்கின்றார் என்ற குற்றச்சாட்டு இறுதியாக பிரதான ஆர்ச் பிஷப்புக்கே போய் எட்டினது. அவர் நமது கிரிம்ஷாவை தம்மண்டை வரவழைத்து தான் தற்பொழுது குருவானவராக பணி புரியும் ஹாவொர்த் சபைக்கு முதன் முதலாவதாக வந்த சமயம் எத்தனை அங்கத்தினர்கள் இருந்தனர்? என்று கேட்டார். “என் பிரபுவே, 12 பேர்கள் இருந்தனர்” என்று கிரிம்ஷா பதில் அளித்தார். “இப்பொழுது சபையில் எத்தனை பேர்கள் இருக்கின்றனர்?” என்று ஆர்ச் பிஷப் கேட்டார். குளிர் கால நாட்களில் 300 முதல் 400 பேர்களும், கோடை கால நாட்களில் 1200 பேர்களும் இருப்பார்கள்” என்று சொன்ன பதிலைக் கேட்டு வெகுவாக ஆச்சரியமடைந்து “இத்தனை அங்கத்தினர்களை கர்த்தருடைய பந்தியில் அமர வைத்திருக்கும் கிரிம்ஷாவுக்கு எதிராக நாம் ஒரு குற்றச்சாட்டையும் இனி சுமத்தக் கூடாது” என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார்.
செஷையரிலுள்ள ரோஸ்த்தர்ன் சபையிலுள்ள ஒரு வீட்டில் கிரிம்ஷா ஒழுங்காக கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வீடு ஜாண் கிராஸ் மற்றும் அலீஸ் கிராஸ் என்பவர்களின் வீடாக இருந்தது. கிரிம்ஷாவின் தேவச்செய்திகளைக் கேட்டு கேட்டு அலீஸ் கிராஸ் நல்லதோர் தேவ பக்தினியாக மாற்றம் பெற்று விட்டதுடன் தேவனுடைய பரிசுத்த நாமத்திற்காக ஊழியங்களை முன்னின்று நடத்தும் பாத்திரமாகவும் விளங்கினார்கள். அலீஸ் கிராஸ் தேவனுடைய அடியாளாக ஆனபோதினும் அவர்களின் கணவர் ஜாண் கிராஸ் இன்னும் தனது பழைய பாவ வழிகளிலேயே நிலை கொண்டிருப்பதை அந்த அம்மையார் துக்கத்துடன் கவனித்தார்கள். “ஜாண் கிராஸ், நீங்கள் என்னுடன் மோட்சம் வருவதானால் வாருங்கள். இல்லையேல் நான் உங்களுடன் நரகத்திற்கு வரும் பேச்சுக்கே இடமில்லை” என்று தன் கணவரைப் பார்த்துத் திட்டமாகச் சொல்லிவிட்டார்கள். இறுதியாக ஜாண் கிராஸ் தன்னை ஆண்டவருக்கு ஒப்புவித்து அவரும் தனது மனைவியின் பரிசுத்த பாதைக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தங்கள் வீட்டில் ஆலயத்தைப் போலவே ஒரு பிரசங்க பீடம் அமைத்து தேவ தாசர்கள் வந்து பிரசிங்கிப்பதற்கும், மக்கள் அதைக் கேட்பதற்கும் வசதி செய்து கொடுத்தார்கள்.
ஏழைகளுக்கும், பிச்சை எடுப்பவர்களுக்கும் அலீஸ் கிராஸ் அவர்கள் இல்லத்திற்குப் பிச்சை எடுப்பதற்காக வந்தால் அந்த ஏழை மக்களை அன்புடன் ஏற்று உபசரித்து அந்த ஏழை மக்களை அன்புடன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களுடன் முழங்காலூன்றி ஜெபித்து கிறிஸ்து இரட்சகரிலுள்ள அவருடைய கிருபையின் ஐசுவரியத்தை அந்த ஏழை மக்களுக்கு விளக்கிக்கூறி தன்னாலியன்ற தான தருமங்களை அவர்களுக்குச் செய்து அவர்களை தனது தேவ அன்பால் மெய்சிலிர்க்கச் செய்தார்கள். இப்படியாக ஏழைகளுக்குத் தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டதுடன் பாவத்தில் வாழ்வோரையும் அந்த அம்மையார் கடிந்து கொள்வதினின்று பின் வாங்கவில்லை. ஒரு சமயம் தன் வீட்டுக்கு முன்பாக தங்கள் குதிரைகளுடனும், தங்கள் குதிரை வீரர்களுடனும் சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த செஷையர் மாவட்டத்தின் அதிபதியான ஸ்டாம்ஃபோர்ட் பிரபுவையும் அவரது நண்பர் சர் ஹாரி மெயின்வாரிங் என்பவரையும் அன்போடும், தைரியத்தோடும் நிறுத்தி கிறிஸ்து இரட்சகருக்கு அப்பாலுள்ள ஆடம்பர வாழ்வின் பயங்கரமான ஆபத்தைக் குறித்து எச்சரித்துக்கூறினார்கள். ஒரு தடவை தங்களுடைய வீட்டிற்கு வழக்கமாக வரவேண்டிய தேவ தாசர்கள் தேவச்செய்தி கொடுப்பதற்கு ஏற்ற வேளையில் வரவில்லை. கூடி வந்த மக்கள் எல்லாரும் ஏமாற்றத்துடன் தங்கள் தங்கள் வீடுகளுக்கு போக வேண்டிய கடைசி நேரத்தில் அலீஸ் கிராஸ் தனது வேதாகமத்துடன் முன் எழுந்து சென்று பிரசங்க பீடத்தின் முன் நின்று தேவனுடைய ஜீவ அப்பமாகிய தேவனுடைய வார்த்தைகளை கேட்போர் உள்ளங்கள் கொழுந்துவிட்டு எரியும் வண்ணமாக பகிர்ந்து கொண்டார்கள். இந்த விதமான ஜனங்களைத்தான் நமது வில்லியம் கிரிம்ஷா தனது ஹாவொர்த் திருச்சபைக்கு 50 மைல்கள் சுற்றளவில் சிதறிக்கிடந்த திருச்சபைகளில் தனது வல்லமையான பிரசங்கங்களின் மூலமாக உருவாக்கிக் கொடுத்தார். கர்த்தருக்கே மகிமை.
தேவ மனிதர் வில்லியம் கிரிம்ஷாவின் நித்தியானந்த மோட்ச பிரவேசம்
கிரிம்ஷா தனது மரணத்திற்கு சொற்ப நாட்களுக்கு முன்னர், தான், தேவப்பணி புரிந்த ஹாவொர்த் கிராமத்திற்கு அருகிலுள்ள மலையில் புகழ்பெற்ற தேவ மனிதர் ஜாண் நியூட்டனுடன் நின்று கொண்டு தனக்கு முன்னால் விரிந்து வியாபித்துக் கிடந்த இடங்களைச் சுட்டிக் காண்பித்து “தான் ஒரு காலத்தில் முதன் முதலாவதாக அந்த இடத்திற்கு வந்தபோது தனது குதிரையில் சவாரி செய்து கொண்டே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு நான்கு திசைகளையும் அரை நாள் பிரயாணத்திற்குள்ளாகவே முடித்துவிடமுடியும் என்றும், அந்த நாட்களில் அவர் தனது அரை நாள் பிரயாணத்தில் ஒரு மெய்யான கிறிஸ்தவனைக்கூட சந்திக்க இயலாதென்றும், அந்த நாட்களில் கிறிஸ்தவத்தின் வாசனையே அந்த இடங்களில் அறவே இல்லாதிருந்தது என்றும் கூறினார். ஆனால், கர்த்தருடைய கிருபையாலும், அவருடைய ஆசீர்வாதத்தினாலும் தனது கடினமான உழைப்பின் காரணமாக அநேக நூற்றுக்கணக்கான மெய்க்கிறிஸ்தவர்கள் அந்தப் பள்ளத்தாக்கு முழுமையிலும் இப்பொழுது எழும்பிவிட்டார்கள் என்றும், கர்த்தருடைய ராப்போஜன பந்தியில் அந்த தியாக கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தி விநயமாக பங்குபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த கிறிஸ்தவ மக்களின் துன்ப துயர நேரங்களிலும், கண்ணீர் கவலைகளிலும் நானும் அவர்களுடைய குடும்பத்தில் ஒரு நெருங்கிய அங்கத்தினனாக இருந்து அவர்களை ஆண்டவருக்குள் இன்னும் ஆழமாக வழிநடத்தினேன்” என்றும் ஜாண் நியூட்டனிடம் சொன்னார்.
வில்லியம் கிரிம்ஷாவின் பரிசுத்தமும், ஆத்தும ஆதாயமும் நிறைந்த மகத்தான தேவப்பணி 1763 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தான் குருவானவராக தேவப் பணிபுரிந்த ஹாவொர்த் என்ற இடத்தில் தனது 55 ஆம் வயதில் தனது 21 ஆம் ஆண்டு கர்த்தருடைய பணியின்போது அவர் ஒருவித கொடிய விஷக்காய்ச்சலால் தாக்குண்டு இறந்தார். அந்த தொத்து நோய்க் காய்ச்சல் அவருடைய சபையில் அந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே பரவத் தொடங்கி அநேகரை மாளச் செய்தது. அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது சபையின் அங்கத்தினர் ஒருவரைக்கண்டு சந்தித்து அவருக்காக ஜெபிக்கச் சென்றபோது அவரையும் அந்தக் காய்ச்சல் பற்றிக்கொண்டது. அந்தக் காய்ச்சல் அவரைத் தாக்கின உடனேயே தான் இனி ஒருக்காலும் குணமடையப் போவதில்லை என்று திட்டமாகக் கூறிவிட்டார்.
அவரைச் சந்தித்த அவரது நண்பனும், கர்த்தருடைய ஊழியத்தில் சகோதரனுமான குருவானவர் இங்காம் என்பவரைப் பார்த்து “எனது கடைசி சத்துரு வந்துவிட்டான். மரணத்தின் அறிகுறிகள் என் சரீரத்தில் தெளிவாகக் காணப்படுகின்றன. என்னை நெருங்கும் மரணத்திற்கு நான் அஞ்சவில்லை. இல்லவே இல்லை, கர்த்தருடைய பரிசுத்த நாமம் வாழ்க, தேவன் மேலுள்ள எனது நம்பிக்கை மிகவும் ஆழமாக உள்ளது, நான் அவருடைய கரங்களில் இருக்கின்றேன்” என்று சொன்னார். அதின் பின்னர் குருவானவர் இங்காம் தனது நண்பர் கிரிம்ஷாவின் வாழ்நாட்காலத்தை கர்த்தர் கூட்டிக் கொடுத்து அவர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இன்னும் சில காலம் மக்களுக்கு பிரசிங்கிக்கும்படியாக ஜெபித்தார். அதற்கு கிரிம்ஷா மாறுத்தரமாக “ஐயகோ, எனது நிர்ப்பந்தமான தேவ ஊழிய சேவைகள் எதற்காக? பிரயோஜனமில்லாத எனது வாழ்வின் இந்த இறுதி மணி நேரங்களில் “தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று என் தேவனை நோக்கிக் கதறுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய அறியாதவனாக இருக்கின்றேன்” என்று சொன்னார். மற்றொரு சமயம் தனது படுக்கையில் தனது கரத்தை தன்னுடைய மார்பில் வைத்து “நான் மிகுந்த களைப்புடையவனாக இருக்கிறேன். மிகவும் பரிதாபகரமான ஏழைப் பாவியாகிய என்னை தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்டு இரட்சித்த என் ஆண்டவருடைய பேரின்ப வீட்டில் வெகு விரைவிலேயே நான் போய்ச் சேர்ந்து அவருடன் நான் என்றும் நிலைத்து வாழுவேன்”என்று சொன்னார்.
வில்லியம் கிரிம்ஷா அதிகமாக நேசித்த ஹட்டர்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தின் பரிசுத்த குருவானவர் ஹென்றி வென் என்பவர் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். கிரிம்ஷாவின் சுகநலன் குறித்து விசாரித்த போது “நான் எனது வாழ்வில் முதன் முறையாக ஆண்டவர் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளின் ஆனந்த களிகூருதல் இப்பொழுது எனக்கு உள்ளது. நான் இங்கு என்ன மகிழ்ச்சியோடு இருக்கின்றேனோ அதே மகிமையின் களிகூருதலோடு நான் விரைந்து பிரவேசிக்கவிருக்கும் பரலோகிலும் காணப்படுவேன்” என்று சொன்னார். அதின் பின்னர் தன்னுடைய வியாதி கொடிதும், மற்றவர்களை விரைந்து தொத்திக் கொள்ளக்கூடியதுமாகவிருந்ததால் கர்த்தருடைய ஊழியர்களான தனது நண்பர்களை தன்னை அடிக்கடி வந்து சந்திக்கக் கூடாதென்று மிகவும் கண்டிப்பாகக் கேட்டுக்கொண்டார். தன் அன்பின் ஆண்டவர்பேரிலுள்ள அவரது பூரிப்பான தேவ சமாதானமும், மகிமையால் நிறைந்ததுமான ஆனந்த நம்பிக்கை கடைசி வரை சற்றும் தடுமாற்றமில்லாமல் காணப்பட்டது. உலகத்தில் வாழ்ந்த நாட்களில் தன் கர்த்தாவில் எத்தனையான களிகூருதலோடு அவர் வாழ்ந்தாரோ அதே பேரானந்த மகிழ்ச்சியோடு அவர் தன் ஆண்டவரில் நித்திரையடைந்தார். தான் வாழ்ந்த உலகத்தினைக் குறித்த துளிதானும் பற்று அந்த தேவ மனிதரிடத்தில் காணப்படவில்லை.
வில்லியம் கிரிம்ஷாவின் விருப்பப்படியே அவரது சரீரம் கால்டர் பள்ளத்தாக்கிலுள்ள லட்டன்டென் தேவாலயத்தின் உள் கிராதியண்டை அடக்கம் செய்யப்பட்டிருந்த அவரது மனைவியின் கல்லறை அருகிலேயே வைக்கப்பட்டது. அந்த இடம் அவர் குருவானவராக 21 ஆண்டு காலம் பணிபுரிந்த ஹாவொர்த் திருச்சபைக்கு அருகிலுள்ள ஒரு இடம்தான். யோசேப்பு மரணமடையும்போது தனது எலும்புகளைக்குறித்து இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளை கொடுத்த வண்ணமாகவே தேவ மனிதர் கிரிம்ஷாவும் தனது சரீர அடக்கத்தைக் குறித்து அவர் மரணத்துக்கு ஏதுவான நோயினால் தாக்கப்படுவதற்கு வெகு முன்பதாகவே வெகு தெளிவான விபரணங்களைக் கொடுத்துவிட்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து காரியங்களும் அவரது விருப்பப்படியே செய்யப்பட்டது. “அவர் மரணமடைந்த அறையில் அவரது சரீரத்தை சூழ உறவினரும், தேவ மக்களுமாக 20 பேர்கள் மாத்திரமேதான் இருக்க வேண்டும். புதைக்கப்படும் அவரது சரீரம் ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் மரணத்தில் அவர்களுடைய சரீரத்தைச் சுற்றி மூடிப் புதைக்கப்படும் மிக எளிமையான வஸ்திரங்களாலேயே உடுத்துவிக்கப்படல் வேண்டும். அவருடைய பிரேதப் பெட்டி ஏழைகளைப் புதைக்க வாங்கப்படும் வெகு சொற்பமான விலைக்கிரயமான எல்ம் என்ற மரப்பலகையால் உருவாக்கப்பட்ட பிரேதப் பெட்டியாக இருக்க வேண்டும். பெட்டியின் மேல் “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்ற தேவ வசனம் எழுதப்பட்டிருக்க வேண்டும். தன்னை அடக்கம் செய்யப் போகும் தேவாலயத்தின் வழி நெடுகிலும் 23, 39, 91 ஆம் சங்கீதங்களிலிருந்து தேவ வசனங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு வாசிக்கப்படுவதுடன் பொறுத்தமான பாடல்களும் பாடப்பட வேண்டும். தன்னுடைய அடக்க ஆராதனையை நடத்தும் குருவானவர் பிலிப்பியர் 1 : 21 (கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்) என்ற தேவ வசனத்தின் பேரிலேயே தனது பிரசங்கத்தை நிகழ்த்த வேண்டும்” என்றஅவருடைய மன விருப்பங்கள் எல்லாம் அப்படியே நிறைவேற்றப்பட்டன. கிரிம்ஷாவின் பழைய நண்பரும், பரிசுத்த பக்தனும், தேவ ஊழியருமான குருவானவர் ஹென்றி வென் அடக்க ஆராதனையின் பிரசங்கத்தைச் செய்தார்.
லட்டன்டென் தேவாலயம் திரள் திரளாக கூடி வந்த மக்கள் கூட்டத்தை தனக்குள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு சிறியதாகக் காணப்பட்டது. குருவானவர் ஹென்றி வென் என்பவரின் பிரசங்கம் வெண்கல மணி ஓசை போல கல்லறைத் தோட்டம் முழுவதும் எதிரொலித்தது. வில்லியம் கிரிம்ஷாவின் தேவதா பக்தி வாழ்வின் பரிசுத்த குணநலன்களையும், அவர் தனது அன்பின் ஆண்டவர் இயேசுவைப்பின்பற்றி அவரைப்போன்று வாழ்ந்த விதங்களையும் அழியும் ஆத்துமாக்களைக் குறித்த அவரது அளவற்ற ஆத்தும பாரத்தையும் ஹென்றி வென் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து அவர் கிறிஸ்து இரட்சகரைப் பின்பற்றிய விதமாக கூடி வந்திருக்கும் சபை மக்களும் இரட்சகர்இயேசுவைப்பின்பற்றி அவருக்கு சாட்சிகளாக வாழ வேண்டுமென்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
வில்லியம் கிரிம்ஷா தனது சவ அடக்க காரியங்கள் மிகவும் எளிமையாக, ஏழைக்கு ஏழையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட போதினும் நாட்டை ஆளுகை செய்கின்ற அரச குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு மரணத்தைப்போன்று திரள் திரளான மக்கள் கூட்டம் அவரது கல்லறைத் தோட்டத்தில் கடல் அலைகள் போல அலை மோதிக் கொண்டு நின்றது. தான் உயிரோடிருந்த நாட்களில் ஆத்துமாக்கள் நரக பாதாளம் சென்றுவிடாமல் அவர்களை இரவும் பகலும் கண்காணித்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்திய தங்கள் நல்ல மேய்ப்பன் இப்பொழுது பிரேதப் பெட்டிக்குள் அடங்கிவிட்டதை கண்ணுற்ற மக்கள் கண்களில் கண்ணீர் வடிய வடிய அழுகையோடும், புலம்பலோடும் தங்கள் குருவானவரின் குளிர்ச்சியான முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். “தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி அவனுக்காக மிகவும் துக்கம் கொண்டாடினார்கள்” என்ற தேவ வாக்கின்படி அவருடைய பிரேதப் பெட்டியை தேவ மக்கள் சுமந்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
தேவ மனிதர் வில்லியம் கிரிம்ஷாவின் ஒரே குமாரன் பரலோகம் சென்ற வரலாறு
வில்லியம் கிரிம்ஷாவிற்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் இருந்தார்கள். அவருடைய மகள் 12 வயது பிள்ளையாக கிங்ஸ்வுட் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் சடுதியாக இறந்து போனாள். “அந்த அன்பு மகள் இரட்சகர் இயேசுவை தன் சொந்தஇரட்சகராக ஏற்று அவருக்குள் மரித்தாள்” என்று சார்லஸ் வெஸ்லி என்ற மாபெரும் தேவ மனிதர் கூறினார். கிரிம்ஷாவின் மகன் ஜாண் கிரிம்ஷா தனது தகப்பனார் இறந்து 3 ஆண்டு காலத்திற்குப் பின்னர் இறந்தார். தகப்பனார் மரணமடையும் காலம் வரை அவர் மனந்திரும்பவே இல்லை. மரணப்படுக்கையில் இருந்த தகப்பனாரைக் காண வந்த தனது மகன் ஜாண் கிரிம்ஷாவைப் பார்த்து “உனது ஆத்துமாவை நீ கவனமாகப் பாதுகாத்துக் கொள், நீ இப்பொழுது மரணத்தைச் சந்திக்க ஆயத்தமான நிலையில் இல்லவே இல்லை” என்று கூறினார். அத்துடன் தனது சரீரமானது அகோர காய்ச்சலின் காரணமாக கொதிக்கும் பாத்திரம் போலக் காணப்பட்டாலும் தனது ஆத்துமா ஆண்டவர் இயேசுவில் ஆனந்தக் களிப்போடு இருக்கின்றது” என்றும் சொன்னார். அவர் தமது மரணப்படுக்கையில் சொல்லிய அந்த வார்த்தைகளும், தனது ஒரே மகனுக்காக அவர் ஏறெடுத்த அநேக கண்ணீரின் விண்ணப்பங்களும் தேவ சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு இறுதியாக அவருடைய மகன் மனந்திரும்பி 1766 ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் ஈவுட் என்ற இடத்தில் மரணமடைந்தார். தனது தகப்பனார் வில்லியம் கிரிம்ஷா இறந்த பின்னர் அவருடைய குதிரையில் அவருடைய மகனான மேற்கண்ட ஜாண் கிரிம்ஷா ஏறிச் சவாரி செய்து கொண்டு போவது வழக்கம். ஒரு நாள் அவர் அவ்விதமாக குதிரையில் சென்று கொண்டிருந்தபோது ஹாவொர்த் திருச்சபையிலுள்ள ஒரு மனிதன் அவரைப் பார்த்து “அந்த பழைய பரிசுத்த குருவானவர் வில்லியம் கிரிம்ஷாவின் குதிரையில் நீங்கள் சவாரி செய்து கொண்டு போகின்றீர்கள் என்று நான் நினைக்கின்றேன்” என்று கேட்டான். “நீங்கள் சொல்லுவது சரிதான், அதே குதிரைதான்” என்று அவர் பதிலளித்தார். “ஒரு காலத்தில் அந்தக் குதிரை ஒரு மாபெரும் தேவ பக்தனை சுமந்து கொண்டு சென்றது. ஆனால், இப்பொழுதோ அது ஒரு மாபெரும் பாவியை சுமந்து கொண்டு செல்லுகின்றது” என்று அவர் வெட்கத்தால் நாணி தலை குனியத்தக்கதாகச் சொன்னானாம்.
அத்தனையான பாவியான அந்த ஜாண் கிரிம்ஷா தான் மரணமடைவதற்கு முன்பு நன்கு மனந்திரும்பி ஆண்டவரின் அடிமையானார். அதற்கான வெளிப்படையான அனைத்து அறிகுறிகளும் வெளி உலகத்திற்குத் தெரியத் தொடங்கின. அவரது மரணத்திற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் “நான் இறுதியாக மோட்சத்திற்கு வந்துவிட்டதைக் காணவும் என் அருமைப் பரிசுத்த தகப்பனார் எத்தனையான ஆனந்தக் கண்ணீருடன் களிகூருவார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?” என்று ஒரு தடவை ஒரு மனிதனிடம் அவருடைய மகன் ஜாண் கிரிம்ஷா சொன்னதை ஒருவர் கேட்டுக் கொண்டே இருந்திருக்கின்றார். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
பரிசுத்த குருவானவர் வில்லியம் கிரிம்ஷாவைக் குறித்து ஒரு தேவ மனிதரின் சாட்சி
வில்லியம் ரோமைன் என்ற பரிசுத்தவான் கிரிம்ஷா மரித்த சொற்ப நாட்களில் புனித டன்ஸ்டான் என்ற இடத்தில் மக்களுக்கு பிரசங்கித்த ஒரு பிரசங்கத்தின் சில வரிகள்:-
நான் அறிந்தவரை பரிசுத்த குருவானவர் வில்லியம் கிரிம்ஷா தன்ஆண்டவர் இயேசு இரட்சகருக்காக மிகவும் கடுமையாக, சலிப்பின்றி, ஓய்வின்றி உழைத்த தேவ பக்தன் ஆவார். தான் பாடுபட்டு உழைத்த ஆத்துமாக்களை கர்த்தருக்காக ஆதாயம் பண்ணிக் கொள்ளுவதற்காக தன்னைத் தேடி வந்த உலகச் செழிப்பையும், உல்லாச வாழ்வையும், உலகம் கொடுக்கும் அனைத்து பாக்கிய சிலாக்கியங்களையும் குப்பையும் தூசியுமாக உதறித் தள்ளிவிட்டார். அத்துடன் அழியும் ஆத்துமாக்களுக்காக மிகவும் ஆனந்த மகிழ்ச்சியோடு கஷ்டங்களையும், ஆபத்துக்களையும், உபத்திரவங்களையும் மேற்கொண்டார். அவர் இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே பிரசங்கித்தார். அதற்கு முத்திரையாக அவருடைய பரிசுத்த ஊழியத்தின் அறுவடையை தேவன் காணும்படிச் செய்தார். “கர்த்தருக்குள் உண்மையும், உத்தமமுமான 1200 திருச்சபை மக்கள் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் கர்த்தருடைய இராப்போஜன பந்தியில் பங்குபெறுவதை நான் மகிழ்ச்சியோடு காண்கின்றேன்” என்று அவரே என்னிடம் சொல்லியிருக்கின்றார். கர்த்தருக்குள்ளான அவருடைய பரிசுத்த நண்பர்கள் அவருடைய உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு மிகவும் அன்புடன் இனி தனது தேவ ஊழியத்தை மட்டுப்படுத்திக் கொள்ள ஆலோசனை சொன்ன போது “நான் இப்பொழுது என் ஆண்டவருக்காக உழைப்பேனாக, வருகிற நாட்களில் எனக்கு போதுமான இளைப்பாறுதல் கிடைத்துக் கொள்ளும். எனக்காக எவ்வளவோ செய்த என் ஆண்டவருக்கு நான் அத்தனை போதுமான அளவில் எதுவுமே செய்துவிடவில்லை” என்று அவர் பதிலளித்தார். நான் சந்தித்த தேவ மனிதர்களில் கிரிம்ஷாவைப்போல தன் ஆண்டவருடன் அத்தனை மனத்தாழ்மையுடன் நடந்த வேறொருவரை நான் காணவில்லை. தன் அன்பின் ஆண்டவருக்கு அவர் எத்தனை பயன் உள்ள ஒரு தேவப் பிள்ளை என்று அவரைக் குறித்துப் புகழ்ந்து பேசும் எந்த ஒரு வார்த்தைகளையும் அவர் கேட்கவும், ஏற்றுக்கொள்ளவும் விரும்பவே இல்லை. அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட அவரது கடைசி வார்த்தைகள் “இதோ, அப்பிரயோஜனமான ஊழியன் கடந்து செல்லுகின்றான்” என்பதே.