ராபர்ட் மொஃபட் (1795 – 1883)
அநேக நுகங்கள் பூட்டப்பட்ட எருதுகள் ஆப்பிரிக்க சுதேசிகள் மூவருடன் வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தது. நல்ல உடற்கட்டும், திடகாத்திரமும், அழகான ரூபமுமுடைய ஒரு வெள்ளைக்கார இள வயது வாலிபன் அந்த வண்டியில் அமர்ந்தவனாக ஆப்பிரிக்காவின் பாலைவனம் ஒன்றைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். ஒரு முழுமையான இரவு முழுவதும் மற்றும் அடுத்து வந்த நாளின் ஒரு பகுதி வரை பிரயாணம் செய்த பின்னர் அந்தப் பிரயாணக் குழு ஒரு தண்ணீர் ஊற்றண்டைக்கு வந்து சேர்ந்தது. எனினும், அந்த ஊற்றில் ஒரு துளி தானும் தண்ணீர்கூட இல்லை என்பதை அது துயரத்துடன் கவனித்தது. பாலைவனத்தின் வெப்பம் பயங்கரமானதாக இருந்தபோதினும், புல்லின் ஒரு அத்தாட்சியோ அல்லது எந்த ஒரு குத்துச் செடியோ இல்லாத அந்தப் பாலைவனத்தில் அந்த பிரயாணக் குழு தங்கள் பிரயாணத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பாலைவனத்தின் வெப்ப நிலை 118 டிகிரியாக இருந்தது. தங்களது வண்டியில் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. தாகத்தால் நாவறண்ட நிலையில் எருதுகளின் குழம்புகள் பாலைவன வெப்ப மணலின் சூட்டின் காரணமாக வெந்து போய் அவைகள் வேதனை பொறுக்க முடியாமல் வண்டியிலிருந்து கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. அவைகளை திரும்பவும் வண்டிக்கு திருப்பிக் கொண்டு வரும்படியாக ஒரு ஆப்பிரிக்க சுதேசி அவைகளின் பின்னாகத் தொடர்ந்தான். அவன் நள்ளிரவு சமயத்தில் சிங்கங்களின் துரத்துதல்களுக்கு அஞ்சி பயத்துடன் அலறி அடித்துக்கொண்டு கொடும் தண்ணீர் தாகம் காரணமாக அழுது கொண்டே வந்தான். தண்ணீருக்காக அவர்கள் தாங்கள் இருந்த இடத்தை தீவிரமாகத் தோண்டிய போது கொஞ்சம் தண்ணீர் அவர்களுக்குக் கிடைத்தது. அதைக்கொண்டு அவர்கள் தங்கள் தாகத்தினை ஓரளவு தீர்த்துக் கொண்டனர். ஆனால் அவர்களது உணவு கையிருப்பு முற்றுமாக முடிந்து போய்விட்டது. ராபர்ட் மொஃபட் (Robert Moffat) என்ற பெயரையுடைய அந்த வெள்ளைக்கார மனிதர், மீதமுள்ள எருதுகளையும், இரண்டு சுதேசிகளையும் தங்களுக்கு ஏதாவது ஆகாரம் பெற்றுக்கொண்டு வரும்படியாக அனுப்பினார்.
அவர்கள் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பாலைவனத்தில் எழுந்த ஒரு மணல் சூறாவழியில் சிக்கி அவர்கள் மறைந்தே போனார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர் ராபர்ட் தனது நிலை மிகவும் நிர்ப்பந்தமும், மிகக் கடுமையானது என்பதை துயரத்தோடு உணர்ந்தார். பசி, கொடுந்தாகம், பாலைவனத்தின் அக்கினிமயமான அனல், பயங்கரமான தனிமை போன்ற அந்த சூழ்நிலை எந்த ஒரு மனிதனையும் பைத்தியத்திற்கு நேராக வழிநடத்திவிடும். உதவி கொண்டு வரும்படியாக எருதுகளுடன் சென்ற அந்த சுதேசிகளின் கதி என்னவாயிற்று? அவர்கள் வனாந்திரத்தில் மடிந்துவிட்டார்களா? ஆப்பிரிக்காவில் தன் அன்பின் ஆண்டவருக்காக ஒரு பூந்தோட்டத்தை நாட்டுவதற்காகச் சென்ற அந்த ஆங்கிலேய மனிதரின் ஆனந்தக் கனவு பாலைவனத்தில் அவர் மேற்கொண்ட முதல் பிரயாணத்தின்போது நிகழ்ந்த ஆப்பிரிக்க சுதேசிகளின் மரணத்தின் மூலமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டதா?
“இந்த அகண்ட பாலைவனப் பரப்பில் ஒரு மனிதனுக்கு தேவையானதெல்லாம் தங்கமோ அல்லது வைரமோ அல்ல. தண்ணீர் மாத்திரமேதான். தண்ணீர் இல்லையேல் மக்கள் மாண்டு மடிந்து போய்விடுவார்கள். தாவரங்கள் காய்ந்து வறண்டு விடும். நிலமானது சாகுபடிக்கு உதவாத பாழ்நிலமாகிவிடும்” என்று ராபர்ட் தனக்குள்ளாக இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டே தனது வேதாகமத்தை தனது கரங்களில் எடுத்துப் புரட்டியபோது மிகவும் நேசிக்கப்பட்ட பகுதியான ஏசாயா 35 ஆம் அதிகாரம் அவரது கண்களில் பட்டது. “வனாந்திரமும், வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். வெட்டாந்தரை தண்ணீர் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்” (ஏசாயா 35 : 1, 7)
தோட்டக்காரர் என்ற தொழிலைக்கொண்டிருந்த ராபர்ட் மொஃபட் போன்ற மனிதருக்கு மனதை மயக்கும் எத்தனை மதுரமான தேவ வார்த்தைகள்! “ஆனால், நானோ இங்கே இருக்கிறேன்” என்று அவர் தனக்குள்ளாகப் பிரலாபிக்கத் தொடங்கினார். வெறுமனே பூமியில் தோட்டங்களை மாத்திரம் நாட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை. நான் இங்கு வந்ததின் ஒரே நோக்கம் மாபெரும் தேவ கிருபை என்ற நீர் ஊற்றைச் சுற்றி மனுமக்களின் இருதயங்களில் தோட்டங்களை உண்டாக்குவதற்காகவேதான்” என்ற வார்த்தைகளுடன் ராபர்ட் தனது முழங்கால்களில் வீழ்ந்து தனது இருதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றினார்.
“என் அருமை இரட்சகா, உமது ஊழியக்காரனாகிய உமது அடியான் மீதும், இந்த பரிதாபகரமான இருண்ட ஆப்பிரிக்க தேசத்தின் மீதும் உமது மனதுருக்கம் நிறைந்த பார்வையைச் செலுத்தும். பசியாலும், கொடுந் தாகத்தாலும் நான் மரிப்பதானால் அது உம்மைச் சேர்ந்த காரியமாகும். ஆனால், நான் ஜீவிப்பேனானால் இந்த ஆப்பிரிக்க வனாந்திரத்தில் உமது பூந்தோட்டத்தை நிலை நாட்ட என்னைப் பயன்படுத்தும். அதின் பயனாக திரள் கூட்டத்தினராகிய ஆப்பிரிக்க மக்கள் ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றாகிய உம்மிடம் வந்து தங்கள் தாகத்தைத் தீர்த்து, உமது ஜீவ விருட்சத்தின் இலைகளால் அவர்கள் ஆரோக்கியத்தைக் கண்டு கொள்ளுவார்களாக” என்று கதறி மன்றாடினார். இந்த விசேஷமான தேவனுடைய வாலிபன் வனாந்திரத்தில் 3 (மூன்று )நாட் காலம் சித்திரவதையான பசி, தாகம், கடும் வெப்பத்திற்குப்பின்னர் இறுதியாகக் காப்பாற்றப்பட்டார்.
யார் இந்த வாலிபன்? ஆம், அவர்தான் ராபர்ட் மொஃபட் என்பவராவார். 1795 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் ஸகாட்லாந்து தேசத்திலுள்ள ஈஸ்ட் லோத்தியான் என்ற இடத்தில் அவர் பிறந்தார். அந்த இடமானது மாபெரும் தேவ பக்தர்களான ஜாண் நாக்ஸ் மற்றும் ஜியார்ஜ் விஷாட்டின் ஞாபகச் சின்னமாக விளங்குகின்றது. சத்தியத்துக்கு சாட்சியாக நின்ற பரிசுத்தவான் ஜியார்ஜ் விஷாட்டை, போப் ஆண்டவரின் கார்டினல் ஒருவரின் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இங்குதான் கம்பத்தில் வைத்துக் கட்டி தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினார்கள். ராபர்ட் மொஃபட் மிகவும் பக்தியுள்ள, ஆனால், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். உலகப் பிரகாரமான ஐசுவரியங்கள் எதுவும் இல்லாதவர்களாக இருந்தபோதினும் அவருடைய பெற்றோர்கள் சிறந்த தேவ பக்தியுள்ளவர்கள். நல்ல உடற்கட்டும், உண்மையும், நற்குணமுமுடைய சான்றோர்களாக அவர்கள் விளங்கினார்கள். ராபர்ட்டின் தாயார் அன்பும், பக்தியும், உண்மையுமுள்ள ஸ்காட்லாந்து தேச மாது. அவர்கள் தனது மகன் ராபர்ட்டுக்காக செய்த காரியங்கள் ஏராளமாகும். ஒரு தடவை அந்த பக்தியுள்ள தாயார் கடல்கள் கடந்த நாடுகளில் வாழும் தேவனை அறியாத அஞ்ஞானிளைக்குறித்தும், அவர்கள் மத்தியில் நடைபெறும் மிஷனரிப் பணிகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை குறித்தும் பேசியதை ராபர்ட் கவனமாகக் கேட்டார். மாலைப் பொழுதுகளில் பிள்ளைகள் எல்லாரும் குளிர் காயும் அடுப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு தங்கள் பின்னல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் இதில் கலந்து கொள்ளுவார்கள். அந்த நாட்களில் இப்படி இரு பாலரும் அத்தொழிலைச் செய்வது அந்த நாட்டில் வழக்கமாக இருந்தது. பிள்ளைகள் நடுவில் அவர்களின் பரிசுத்த தாயார் அமர்ந்து பிள்ளைகளின் பக்தி விருத்திக்கான காரியங்களை மிகுந்த ஞானத்தோடு அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவார்கள்.
ராபர்ட் தனது பள்ளிக்குச் செல்லும்போது அவரது பாடப் புத்தகத்துக்குப் பதிலாக அரிச்சுவடி எழுதப்பட்ட ஒரு சிறிய கிறிஸ்தவ ஞானோபதேச வினாவிடை புத்தகமே அவரது கரத்தில் இருக்கும். அவர் தனது படிப்பைக் குறித்து எந்த ஒரு அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதின் காரணமாக அவருடைய பள்ளி ஆசிரியரிடம் அவர் நன்றாக அடியும் வாங்கியிருக்கின்றார். சில ஆண்டு கால பள்ளிக் கல்விக்குப் பின்னர் ராபர்ட் சமுத்திரத்துக்கு ஓடிச் சென்றார். அங்கு அவருக்கு ஒரு கப்பலில் வேலை கிடைத்தது. கப்பல் வாழ்க்கை அவருக்கு அத்தனையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அங்கு அவர் கடினமான நாட்களைச் சந்திக்க நேரிட்டதுடன் மயிர் இளையில் உயிர் தப்பிப் பிழைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. அந்த பயங்கரமான அனுபவங்கள் கப்பல் வாழ்க்கையை அவர் அடியோடு வெறுத்து வீடு திரும்பச் செய்தது. வீடு திரும்பிய அவர் திரும்பவும் தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார். ஆரம்பத்தில் அவர் கற்ற கல்வியைவிட இப்பொழுது அவருக்கு படிப்பில் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. கணிதம், புவியியல், வான சாஸ்திரம், வணிகவியல் போன்றவற்றை அவர் படித்தார். எனினும் அடுத்து வந்த ஆறு மாதங்களில் அந்தக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தனது 14 ஆம் வயதிலேயே தனக்கு சுய சம்பாத்தியத்தைக் கொடுக்கக்கூடிய தோட்டக் கலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
தோட்டக் கலையைக் கற்றுக்கொள்ளும்படியாக அவர் ஒரு உதவியாளனாக ஒருவரிடம் போய்ச் சேர்ந்தார். அவர், தோட்டக் கலையைக் கற்றுக்கொள்ளச் சேர்ந்த எஜமானர் மிகவும் கண்டிப்பான மனிதர். அந்த மனிதரின் கரங்களுக்குள் கிடந்து கஷ்டம் அனுபவித்த ராபர்ட், புத்தி தெளிந்து, நல்ல கல்வியை தான் பெற்று வாழ்க்கையில் முன்னேறும் பொருட்டாக தனது தோட்ட வேலையின் மத்தியில் மாலைப் பொழுதில் லத்தீன் மொழியையும், ஷேத்திரக்கணிதமும் கற்றார். இந்தச் சமயம் அவர் இரும்பு உபகரணங்கள் செய்யக்கூடிய கருமான் வேலைகளையும் படித்துக் கொண்டார். அத்துடன் இந்த நாட்களில்தானே அவர் வயலின் மற்றும் இதர இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய பயிற்சியையும் பெற்றுக்கொண்டார். இங்கு அவர் கற்றுக்கொண்ட எல்லா கலைகளும் அவர் பின் நாட்களில் மாபெரும் ஆப்பிரிக்க மிஷனரியானபோது அவருக்கு மிகவும் கை கொடுத்து உதவியது. அவர் கற்றுக்கொண்ட வாத்திய இசை அவர் துன்ப துக்க நேரங்களில் தேவனுக்கு முன்பாகப் பாடி மகிழ அவருக்குக் கை கொடுத்து உதவியது. ஆ, தேவன் தமது பிள்ளைகளை எப்படியாக பயிற்றுவித்து தமது நாமத்திற்கு மகிமையாக எத்தனை ஆச்சரியமாக பயன்படுத்துகின்றார், பாருங்கள்!
இந்தச் சமயத்திலிருந்து 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வரை அதாவது அவரது 87 ஆம் வயதான அவரது மரண நாள் வரை அவரது வாழ்க்கை ஆறு சரித்திர பூந்தோட்டங்களைக் கொண்டதாக உள்ளன.
கிருபை என்ற பூந்தோட்டம்
மிகவும் பயபக்தியும், அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக ராபர்ட் மொஃபட்டின் பெற்றோர் இருந்தபடியால் நாம் அவரை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும். அவரது 18 ஆம் பிறந்த நாள் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் தனது ஸ்காட்லாந்து தேச வீட்டை விட்டுவிட்டு இங்கிலாந்திலுள்ள செஷயர் என்ற இடத்திலுள்ள ஹைலேயில் ஒரு தோட்டக்காரர் வேலையை ஏற்றுக்கொள்ளுவதற்காக அவர் புறப்பட்டார். அவருடைய பரிசுத்த தாயாரும் தனது அன்பு மகனுடன் ஃபோர்த் என்ற இடம் வரை வலுக்கட்டாயமாகச் சென்றார்கள். அங்கிருந்துதான் ராபர்ட் இங்கிலாந்து தேசத்துக்கு கப்பல் ஏறவேண்டும். கர்த்தருக்குத் தன்னை ஒப்புவிக்காத நிலையில் மனந்திரும்பாத இருதயத்துடன் பாவம் நிறைந்த உலகத்துக்குள் தனது அருமைக் குமாரன் கடந்து செல்லுவதை எண்ணி உள்ளத்தில் வியாகுலப்பட்டவர்களாக ராபர்ட்டின் தாயார் அவருடன் வழி நடந்து சென்றார்கள். தாயார் தனது அன்புத் தனயனை விட்டுப் பிரியும் கடைசி நேரத்தில் “ராபர்ட், நான் உன்னைவிட்டுப் பிரியும் முன்னர் கடைசியாக ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். ஒவ்வொரு நாளும் தேவனுடைய வேத புத்தகத்திலிருந்து காலையில் ஒரு அதிகாரத்தையும், இரவில் ஒரு அதிகாரத்தையும் நீ வாசிப்பதாக எனக்கு வாக்கு கொடுப்பாயா?” என்று கேட்டார்கள். தான் அப்படியே செய்வதாக ராபர்ட் தனது அன்புத் தாயாருக்கு வாக்கு கொடுத்தபோது “நான் இப்பொழுது களிகூர்ந்த இருதயத்தோடு வீட்டிற்குத் திரும்பிச் செல்லுவேன். ஓ, என் அருமை மகன் ராபர்ட், புதிய ஏற்பாட்டை அதிகமதிகமாக வாசி. விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்களையும் சிறப்பான கவனத்தோடு நீ வாசிக்க வேண்டும். உள்ளத்தின் ஆழ்ந்த சிந்தனையோடு நீ ஜெபிக்கும்பட்சத்தில் அன்பின் ஆண்டவர் உனக்குப் போதித்து உன்னைத் தமக்கு நேராக இழுத்துக்கொள்ளுவார்” என்று கூறினார்கள்.
ஹைலேயில் தனது வேலைக்குப் பின்னர் இரவில் தோட்டத்திலுள்ள வீட்டில் தேவனுடைய வார்த்தைகளை தியானித்துக் கொண்டே ராபர்ட் படுத்திருப்பார். பகற் காலத்தில் அவர் தோட்டத்தில் வேலை செய்யும் முழு நேரத்திலும் ஒரே ஒரு கேள்வி அவரை சதா தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. கிளாட்ஸ்டன் என்ற தேவ பக்தனின் வார்த்தையின்படி அந்த சிரேஷ்டமான கேள்வி என்னவெனில் “கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” என்பதுதான். ஒரு நாள் இரவு ராபர்ட் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளடங்கிய வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு ஒளி அவருடைய உள்ளத்தில் பிரகாசித்தது. “பாவ இருள் சூழ்ந்த என் உள்ளத்தில் அந்த ஒளி பிரவேசித்தது” என்கின்றார் ராபர்ட். ரோமர் 3 ஆம் அதிகாரம் 22 ஆம் வசனம் முதல் 26 ஆம் வசனங்களை அப்பொழுது அவர் வாசித்து தெளிவுபடுத்தி இரட்சிப்பின் பாத்திரமானார். அந்த நாட்களில் அவர் இருந்த இடத்தில் நடைபெற்ற ஒரு விசேஷ ஆவிக்குரிய கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளும்படியாக அவர் அழைக்கப்பட்டார். அந்தக் கூட்டத்தில்தான் அவர் தன்னை முழுமையாக தன் ஆண்டவருக்குத் தத்தம் செய்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் தான் பெற்ற இரட்சிப்பின் சந்தோசத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டுமென்ற பேராவல் அவர் உள்ளத்தில் அந்த எழுப்புதல் கூட்டத்தில்தான் அவருக்கு உண்டானது.
இனிமைக் கனவுகள் நிறைந்த பூந்தோட்டம்
குறிப்பிட்ட ஒரு கோடை கால வசீகரமான மாலை நேரம், சூரியன் மேல் வானில் அஸ்தமிக்கும் வேளை ராபர்ட் தான் இருந்த செஷையர் என்ற இடத்திலிருந்து 6 மைல்கள் தொலைவிலுள்ள வாரிங்டன் என்ற இடத்திற்கு கொஞ்சம் சாமான்கள் வாங்கும் பொருட்டாகத் தனது கால் நடைப் பயணத்தை ஆரம்பித்தார். மாலைப் பொழுதாகி விட்டபடியால் தனது நடையைத் துரிதப்படுத்தி விரைவாக நடந்து கொண்டிருந்த வேளையில் அவர் தனது வருங்காலத்தைக் குறித்த இன்பக் கனவுகளை கற்பனை செய்யத் தொடங்கினார். 19 வயதே நிரம்பப் பெற்ற நிலையில் தனக்குக் கிடைத்த நல்ல ஊதியமுள்ள தோட்டக் கலையின் வேலையைக்குறித்தும், இன்னும் சில ஆண்டுகள் கடந்து செல்லும் காலப் போக்கில் அது தன்னை உயர்த்திவிடக்கூடிய அந்தஸ்தையும் நினைத்து அவர் உள்ளம் பூரித்தார். இந்தக் கற்பனைக்கோட்டையில் தனது உள்ளத்தைப் பறிகொடுத்து துரிதமாக வந்து கொண்டிருந்த அவர் தான் வர வேண்டிய வாரிங்டன் பட்டணத்துக்கு வந்து விட்டதையும்,
ரஸ்தா ஓரமாக ஒட்டப்பட்டிருந்த ஒரு விளம்பரத்திற்கு முன்பாக தான் நிற்பதையும் கவனித்தார். அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததை அவர் திரும்பத் திரும்ப வாசிக்கலானார்.
மிஷனரிக்கூட்டம் – கில்ட் ஹால்
வாரிங்டன்
வியாழன் மாலை ஜூலை 25 ஆம் நாள்
செய்தியாளர்:- சங்கை வில்லியம் ராபி (மான்செஸ்டர்)
சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்த தேதி கடந்து சென்றுவிட்டது. அந்த மிஷனரிக்கூட்டமும் நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும், ராபர்ட் அந்தச் சுவரொட்டி விளம்பரத்தைவிட்டு கடந்து செல்லாமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். திடீரென அவரது யோசனைகள் அவரது குழந்தைப் பருவகால நாட்களுக்கு ஓடோடிச் சென்றன. அந்த மாரி கால குளிரான நாட்களின் இராக் காலங்களில் அவர் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் ஜூவாலித்து எரியும் படுக்கை அறை சிம்னி அடுப்பண்டை அமர்ந்து தனது அருமைத் தாயார், மோரேவிய மிஷனரிகள் தங்கள் உயிரையே பணையம் வைத்து தேவனுடைய சுவிசேஷத்தை எடுத்துக் கொண்டு தொலை தூரங்களிலுள்ள கிரீன்லாந்து மற்றும் கிழக்கிந்திய தீவுகளுக்குச் சென்ற மிகுந்த பரபரப்பான உண்மை மிஷனரி சரித்திரங்களை சொல்ல, அவர் கேட்ட நினைவுகள் எல்லாம் அப்பொழுது அவரது நினைவுக்கு ஓடோடி வந்தன. அந்த வேளையில்தானே தேவனுடைய அமர்ந்த மெல்லிய குரலோசை அவரது உள்ளத்தின் ஆழத்திற்குள் இவ்விதமாகத் தொனித்தது. “ராபர்ட், உன்னுடைய உலகப்பிரகாரமான திட்டங்களை எனது பரலோகத் திட்டங்களுக்காக விட்டுக் கொடுப்பாயா? புற மதஸ்தர் இரட்சிப்பைக் கண்டு கொள்ளும் பொருட்டாக நீ அவர்களுக்காக பாடு அனுபவிப்பாயா?” இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ராபர்ட் “ஆம், தேவனே” என்று மிகவும் சப்தமாக தன்னுடைய அன்பின் ஆண்டவருக்குப் பதில் அளித்தார். அந்த நாளிலிருந்து ராபர்ட் மொஃபட் என்ற அந்த தேவ மனிதருக்கு தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை, அது எட்டாத இருள் சூழ்ந்த தொலை தூரமான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்ற தணிக்க முடியாத வாஞ்சை அவர் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
சில சமயத்திற்குப் பின்னர், ராபர்ட் மொஃபட், மான்செஷ்டர் பட்டணம் சென்று அங்கு வாழ்ந்த பரிசுத்த குருவானவர் வில்லியம் ராபியை சந்தித்து தன்னை ஒரு மிஷனரியாக எந்த ஒரு மிஷனரி ஸ்தாபனத்தின் மூலமாவது ஆண்டவருடைய ஜீவனுள்ள நாமத்தை அறியாத தொலை தூரமான இடத்திற்குத் தன்னை அனுப்பும்படியாக மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ராபர்ட்டிடம் காணப்பட்ட அருமையான தேவ சீலங்களை நேரிடையாகக் கண்டு பரவசம் அடைந்த வில்லியம் ராபி என்ற அந்த பரிசுத்த தேவ மனிதர் தன்னாலியன்றதனைத்தையும் செய்து ராபர்ட் தனது மிஷனரி பணிக்குத் தேவையான விசேஷித்த போதனைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டாக டியூக்கன்ஃபீல்ட் என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தேவ பக்தனான ஜேம்ஸ் ஸ்மித் என்பவருடைய வீட்டின் தோட்டக்காரராக அவரை அனுப்பி வைத்தார். ஜேம்ஸ் ஸ்மித் மிகவும் செல்வந்தரான மனிதர். பூஞ்செடிகள் மற்றும் பழமர நாற்றங்கால்களை அவர் திரளாக வைத்திருந்தார். டியூக்கன்ஃபீல்ட் நாற்றங்கால்கள் என்றால் அந்த நாட்களில் அது பேர்பெற்று விளங்கிக் கொண்டிருந்தது. அதின் பரப்பளவு ஹைட்பிரிட்ஜ் என்ற இடம் வரை வியாபித்திருந்தது. ஜேம்ஸ் ஸ்மித்தும் அவரது மனைவியும் மிகவும் தேவ பக்தியுள்ளவர்கள். கர்த்தருக்காக மிகவும் பக்தி வைராக்கியம் கொண்டவர்கள். அவர்களுடைய ஒரே குமாரத்தி மேரி மிகவும் சௌந்தர்யமுள்ள பெண்மணி. அவள் ஃபேர்பீல்ட் என்ற இடத்திலுள்ள ஒரு மோரேவிய பள்ளியில் படித்ததினால், ராபர்ட் எவ்வண்ணமாகத் தனது தாயாரின் மூலமாகக் கேட்ட மிஷனரி சரித்திரங்களின் மூலமாகப் பரவசமடைந்து தன்னை ஆண்டவருக்கு ஒப்புவித்தாரோ அதே வண்ணமாக மேரியும் தனது பள்ளியில் மோரேவிய ஆசிரியர்களால் சொல்லக் கேட்ட மிஷனரிக் கதைகளினால் தொடப்பட்டுத் தன்னை தன் அன்பின் ஆண்டவருடைய சேவைக்கு அர்ப்பணம் செய்து கொண்டதுடன், தான் ஒரு மிஷனரியாக வெளி நாடு செல்ல வேண்டுமென்ற இரகசியமான தீர்மானத்தையும் தனக்குள்ளாக எடுத்துக் கொண்டாள்.
ராபர்ட் மொஃபட், வேதாகமத்தில் நாம் காண்கின்ற வாலிபனைப்போன்று நல்ல சிவந்த மேனியும், அழகான கண்களும், நல்ல உடற்கட்டுடைய வாலிபனாக இருந்ததுடன் நல்ல தேவ பக்தனாகவும் இருந்தார். மேரிக்கு அந்த வாலிபனை மிகவும் பிடித்திருந்தது. காரணம், அவரது அழகு மாத்திரமல்ல, ஆப்பிரிக்கா தேசத்துக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டுமென்ற கட்டுக்கடங்கா ஆவல் அவர் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததே முக்கியமான காரணமாகும். ராபர்ட்டும், மேரியும் ஒருவருக்கொருவர் ஒரே தேவ தீர்மானத்தைக் கொண்டிருப்பதை கண்டு கொள்ள அவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கவில்லை. டஃபோடைல்ஸ் மலர்களும், லீலி புஷ்பங்களும் மலர்ந்து கிடந்த மலர் படுக்கைகளின் ஊடாக அவர்கள் இருவரும் கை கோர்த்தவர்களாக தங்கள் இருவர்களுடைய உள்ளங்களிலுள்ள மிஷனரிக் கனவுகளைக் குறித்த காட்சிகளை கற்பனை செய்தவர்களாகப் பேசிக்கொண்டே செல்லுவார்கள்.
கோடை காலம் ஒரு முக்கியமான ஆச்சரியமான செய்தியுடன் ஆரம்பமானது. ராபர்ட் ஜேம்ஸ் ஸ்மித்தின் மகள் மேரியை தோட்டத்தினுள் அழைத்து “இதோ, இந்தக் கடிதம் லண்டன் மிஷனரி ஸ்தாபனம் என்னை தனது மிஷனரியாக ஏற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு என்னை அனுப்பப் போவதை உறுதி செய்வதாக உள்ளது. நான் விரைவில் எனது கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கப்போகின்றேன். மேரி, நீயும் என்னுடன் வருவாயா? நீ வந்தால் நான் மிகவும் சந்தோசம் அடைவேன்” என்றார் ராபர்ட். “எனது தாயாரும், தந்தையும் இதைக் குறித்து என்ன சொல்லுவார்களோ என்று எனக்குத் தெரியாதே” என்று தனது இருதயம் படபடக்க மேரி பதில் அளித்தாள். அந்த நாளின் இராக்காலத்தில் அந்தக் காரியத்தை ராபர்ட், மேரியின் தாய், தந்தையரிடம் கூறினார். “எனது மனைவிக்கும், எனக்கும் உங்களது திருமணத்தைக் குறித்து எந்த ஒரு தடையும், எதிர்ப்பும் கிடையாது. ஆனால், உங்களது திருமணத்திற்குப்பின்னர் நீங்கள் எனது மகள் மேரியுடன் இந்த இங்கிலாந்து தேசத்தில்தான் இருக்க வேண்டும். அநாகரீகமான ஒரு தேசத்திற்கு எனது மகள் உங்களுடன் வரும்பட்சத்தில் பல துன்ப துயரங்களை அனுபவித்து அநேகமாக அவள் சொற்ப வயதிலேயே மரித்துவிடுவாள்” என்று ஆழ்ந்த துயரத்துடன் ஜேம்ஸ் ஸ்மித் கூறினார்.
இவ்விதமாக ராபர்ட், மேரியின் இன்பக் கனவுகள் என்ற பூந்தோட்டத்தில் அநேக கண்ணீர்கள் விழுந்தன. ஒருவருக்கொருவர் விடைபெற்றபோது அவர்களின் இருதய வேதனை தாங்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இருப்பினும், கர்த்தர் கொடுத்த மிஷனரிப் பணிக்காக ராபர்ட் முதலில் ஆப்பிரிக்க நாட்டுக்குச் செல்லுவதென்றும், மேரி இங்கிலாந்தில் சில காலம் தரித்திருக்கவும் தீர்மானித்து ராபர்ட் முதலில் கப்பல் ஏறிப் புறப்பட்டார்.
ஆப்பிரிக்க மக்களின் பூந்தோட்டம்
ராபர்ட் மொஃபட் 1817 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 13 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டவுண் என்ற பட்டணத்தை வந்தடைந்தார். 8 மாத கால கடினமான மொழி பயிற்சிக்குப் பின்னர் அவர் ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்குச் செல்ல ஆயத்தமானார். அவருடைய வழிப்பாதையில் ஒரு டச்சுக்கார ஐசுவரியமுள்ள குடியானவரின் அழகான பண்ணை வீட்டை ஒரு நாள்இரவு அவர் வந்தடைந்தார். இராச் சாப்பாட்டுக்குப் பின்னர் அந்த டச்சுக்கார மனிதர் ஒரு வேதாகமத்தை எடுத்து வந்து அதை ராபர்ட்டிடம் கொடுத்து தம்முடைய வீட்டில் ஒரு குடும்ப ஆராதனை நடத்தும்படியாக கேட்டுக் கொண்டார். வேதாகமத்தை தனது கரத்தில் வாங்கிய ராபர்ட் அந்த வீட்டின் விசாலமான அறையை அங்கும் இங்கும் பார்த்த பின்னர் “உங்களுடைய பண்ணையில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் எங்கே?” என்று அந்த டச்சுக்கார பண்ணையாரைக் கேட்டார்.
“வேலைக்காரர்கள்? நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றீர்கள்?” என்று அவரைக் கேட்டார்.
“உங்கள் பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த அநேக ஆப்பிரிக்க சுதேசிகளைக் குறித்துத்தான் நான் பேசுகின்றேன்”
“ஆப்பிரிக்க சுதேசிகள்” அந்த டச்சுக்கார பண்ணையார் அசட்டுத்தனமான ஒரு சிரிப்புடன் “குடும்ப ஜெபம் நடத்த உங்களுக்கு ஒரு கூட்டம் மக்கள் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் காட்டிற்குச் சென்று அங்குள்ள வாலில்லா குரங்கு கூட்டத்தை அழைத்துக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அல்லது எனது மகன்களிடம் சொல்லி எங்கள் வீட்டிலுள்ள நாய்களைத்தான் கொண்டு வரச்சொல்ல வேண்டும்” என்று ராபர்ட் மொஃபட்டை மிகவும் கேவலமாகப் பேசிவிட்டார்.
ராபர்ட் அந்த பெருமைக்கார பண்ணையாரின் வார்த்தைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கர்த்தருக்குள் மிகவும் பொறுமையுள்ளவராக எழுந்து நின்று வேத புத்தகத்திலுள்ள சீரோபேனிக்கியா ஸ்திரீயைக் குறித்து பேசப்பட்ட பகுதியை எடுத்து “ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளை தின்னுமே” என்ற தேவ வார்த்தையை திரும்பத் திரும்ப அழுத்தமாக கூறியபோது அந்த டச்சுக்கார பண்ணையார் உள்ளத்திலே அதிகமாக உணர்த்தப்பட்டவராக மிகவும் விசனத்துடன் “நீங்கள் ஒரு கனமான சுத்தியலை எடுத்து ஒரு கடினமான மண்டையை உடைத்து நொறுக்கிவிட்டீர்கள்” என்று அந்த டச்சுக்கார பண்ணையார் தனது கடின உள்ளத்தைக் குறித்தே தேவன் ராபர்ட் மூலமாகப் பேசினார் என்று கூறினார்.
ராபர்ட், கேப் காலனி கடைசி எல்கைகளை நெருங்கும் சமயத்தில் மற்றொரு டச்சுக்காரரின் வீட்டில் தங்கினார். தென் ஆப்பிரிக்கா முழுமையுமே அஞ்சி நடுங்கக் கூடிய மிகக் கொடிய ஆப்பிரிக்கத் தலைவனுடைய கிராமத்திற்கு ராபர்ட் செல்லப் போவதை அறிந்த அந்த டச்சுக் குடும்பத்தினர் மிகவும் துக்கமடைந்தனர். “எனக்குத் தெரிந்த வரை அந்த ஆப்பிரிக்கத் தலைவன் சில மிஷனரிகளுடன் தொடர்பு கொண்டதாகவும், நீங்கள் நினைக்கின்ற அளவிற்கு அவன் அத்தனை கொடியவன் அல்லன்” என்றும் ராபர்ட் அந்தக் குடும்பத்தினரிடம் சொன்னார். ஆனால், அவர்கள் அதை ஒத்துக்கொள்ள மறுத்து நின்றார்கள். “அந்த ஆப்பிரிக்கத் தலைவன் ஒரு எல்கைக் கோட்டைக் குறித்திருப்பான். நீங்கள் அதைக் கடந்து செல்லும்போது அவனுடைய ஆட்கள் உங்களைச்சுட்டுத் தள்ளிவிடுவார்கள்” என்று அந்த குடும்பத்தின் தலைவன் கூறினார்.
“உங்கள் தோலை உரித்து மத்தளம் செய்து, அதின் உதவியால் அந்த சுதேசிகள் நடனமாடி உங்கள் மண்டை ஓட்டைப் பானம் பண்ணும் கோப்பையாக பயன்படுத்திக் கொள்ளுவார்கள்” என்று அந்தக் குடும்பத் தலைவி சொன்னார்கள்.
“நீங்கள் ஒரு விருத்தாப்பியனாக இருந்திருப்பீர்ளானால் நாங்கள் அதிகமாகக் கவலைப்பட மாட்டோம்” என்று அந்த வீட்டின் பாட்டியம்மா தன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சொன்னார்கள். “உங்களைப்போன்ற மிக இளவயதினனான வாலிபன் அந்த ராட்சதனுடைய வாய்க்கு இரையாவதை என்னால் எந்த ஒரு நிலையிலும் சகித்துக் கொள்ளவே முடியாது” என்று அந்தப் பாட்டியம்மா தனது வார்த்தையைத் தொடர்ந்தார்கள்.
தனது பாலைவனப்பயணத்தில் தனது ஜீவனே போய்விடக்கூடியதான இறுதிக்கட்டத்தில் ராபர்ட் அந்தக் கொடிய ஆப்பிரிக்கத் தலைவனுடைய கிராமத்துக்கு 1818 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வந்து சேர்ந்தார். இளைஞனான ராபர்ட்டைக் கண்டு அவரோடு கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசியதுமே அந்தக் கொடிய மனிதனுடைய உள்ளத்தில் ஒரு அற்புதமான மாறுதல் உண்டாயிற்று. அவனது மனம் தனக்குள்ளாக மகிழ்ந்தது. உடனே அவன் அந்தக் கிராமத்திலுள்ள சில பெண்களை அழைத்து “மிஷனரிக்கு துரிதமாக ஒரு வீட்டைக் கட்டுங்கள்” என்று கட்டளை கொடுத்தான். அவ்வளவுதான், உயர்ந்த கம்புகளைக் கொண்டு வந்து வட்ட வடிவமாக நட்டி அதைச் சுற்றிலும் மூங்கில் பாய்களை இணைத்து, தவழ்ந்து உள்ளே செல்லும் அளவிற்கு அதிலே ஒரு திறப்பை உண்டுபண்ணி, ஒரு சிறிய ஜன்னலையும், ஒரு புகை போக்கியையும் கூட அதில் வைத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த ஆப்பிரிக்க சுதேசிப் பெண்கள் நமது ராபர்ட்டுக்கு ஒரு அழகான வீட்டை உருவாக்கிவிட்டனர். இந்த வீட்டில்தான் ராபர்ட் மொஃபட் என்ற அந்த தேவ பக்தன் ஏழ்மைக்கு ஏழ்மையாக தனது மிஷனரி வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தக்குடிசையில் அவர் அடுத்து வந்த 6 மாதங்களாகத் தங்கியிருந்தார். அந்தக் குடிசை அத்தனை பாதுகாப்பானது அல்ல. பசிபட்டினியாக இருக்கும் நாய்கள் அவர் வீட்டைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தன. அத்துடன் எந்த நேரம் வேண்டுமானாலும் விஷமுள்ள பாம்புகள் குடிசையின் மேலிருந்து குடிசைக்குள் விழும் ஆபத்தும் அங்கிருந்தது. அவருடைய ஆகாரம் பெரும்பாலும் காய்ந்த இறைச்சியும், பாலுமாகவே இருந்தது. மேலே குறிப்பிட்ட அந்த சுதேசிகளின் தலைவன் ராபர்ட்டுக்குப் பால் கொடுக்கக்கூடிய 2 பசு மாடுகளைக் கொடுத்திருந்தான். அதின் காரணமாக, அடிக்கடி பசியோடு இராக்காலங்களில் தனது படுக்கைக்குச் சென்று கொண்டிருந்த அவரை அந்தப் பால் காத்துக் கொண்டது. அவருடைய மிஷன் ஸ்தாபனம் அவருக்கு மாதம் ஒன்றுக்கு பத்து (10 ) டாலர்கள் மட்டுமேதான் கொடுத்தது. அதைக் கொண்டு அவருக்குத் தேவைப்பட்டதை எல்லாம் எப்படி வாங்க முடியும்?
காலையிலும், மாலையிலும் அவர் பிரசங்க ஆராதனை நடத்தினதுடன் பகற் காலத்தில் ஒரு பள்ளிக்கூடமும் நடத்தினார். அந்தப் பகல் வேளைப் பள்ளி வெகு துரிதமாகவே 100 மாணவர்களைக் கொண்ட பள்ளியாக வளர்ந்துவிட்டது. நாட்கள் அதிகமாகச் செல்லுவதற்கு முன்பாகவே அந்தக் கொடிய ஆப்பிரிக்கத் தலைவன் நமது ராபர்ட் நடத்திய கர்த்தருடையஆராதனைகளில் ஒழுங்காக வந்து கலந்து கொள்ள ஆரம்பித்தான். அத்துடன் எழுதவும், வாசிக்கவும் தனது அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் அவன் தீவிர கவனம் செலுத்தினான். இப்பொழுது அவன் தேவனுடைய புதிய ஏற்பாட்டை மணிக்கணக்காக உட்கார்ந்து ஆவலோடு வாசிக்கவும் ஆரம்பித்தான். அநேக சமயங்களில் ராபர்ட்டின் மூங்கில் குடிசைக்கு அருகில் உள்ள ஒரு பெரிய மலைப் பாறையில் உட்கார்ந்த வண்ணமாக தனது புதிய ஏற்பாட்டை நள்ளிரவு வரை அவன் வாசித்துக் கொண்டே இருப்பான். தேவனின் அன்பைக் குறித்தும், இரட்சகர் இயேசுவின் மீட்பின் பரவச செயலைக் குறித்தும், பரலோகத்தின் பேரின்பங்களைக் குறித்தும் அவன்அந்தப் பாறையில் இருந்தவாறே ராபர்ட் மிஷனரியுடன் கேள்விகள் கேட்டு அவர்அளிக்கும் பதில்களால் களிகூர்ந்து ஆனந்திப்பான்.
ஒரு நாள் இவ்வண்ணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த ஆப்பிரிக்கத் தலைவன், ராபர்ட்டைப் பார்த்து “சற்று நேரத்துக்கு முன்னர் நீங்கள் என்னையே கண் இமைக்காமல் ஏன் அத்தனை கவனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தீர்கள்?” என்று கேட்டான். “நீங்கள் எத்தனை சாந்தமும், சாதுவுமானவர்களாக மாற்றம் அடைந்துவிட்டீர்கள் என்பதை அறிந்துதான்” என்று ராபர்ட் பதில் அளித்தார். “ஒரு சமயம் துப்பாக்கியையும், உடைவாளையும் (நீண்ட சண்டை கத்தி) சாவையும் உங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தேசமெங்கும் சுற்றியலைந்த நீங்கள் இன்று இத்தனை மாற்றமடைந்த நிலையில் வாழ்வது எத்தனை உண்மையானது என்பதைத்தான் கற்பனைப்பண்ணிப் பார்க்கின்றேன்” என்றார் அவர். அதற்கான பதிலுக்கு ஒரு காலத்தில் இரத்தப் பிரியனாக வாழ்ந்த அந்த மனிதன் ஒரு குழந்தையைப்போல ஏங்கி, ஏங்கி அழுதான்.
அந்தக் கொடிய ஆப்பிரிக்கத் தலைவனின் மனந் திரும்புதலுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொரு நாளும் வெளிப் படையாகத் தெரிந்தவண்ணமாக இருந்தன. வலுவிழந்த ஏழை மக்களை எங்கே ஒரு காலம் கொள்ளையடித்து வந்தானோ அந்த மக்களின் நல் வாழ்வுக்காகவும், மனமகிழ்ச்சிக்காகவும் இப்பொழுது அவன் பாடுபடுபவனாகக் காணப்பட்டான். ஒருவருக்கொருவர் பயங்கரமாகச் சண்டையிடும் இரண்டு ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் நடுவில் இந்த தலைவன் போய் நின்று கொண்டு “நான் குரூரமாக சண்டையிட்ட எல்லாச் சண்டைகள், நான் திருட்டளவாகக் களவாடிஎடுத்துக் கொண்ட எல்லா ஆடு மாடுகள் இவைகளின் நடுவில் நான் இன்று வெட்கம், அவமானம் உடையவனாகவும், ஏன் அப்படி எல்லாம் அறிவீனமாகச் செய்தோம் என்ற மனவியாகுலத்துடனும் இருக்கின்றேன்” என்று அவன் கூறினான்.
இளம் மிஷனரியான ராபர்ட் மொஃபட், ஆப்பிரிக்க மக்கள் நடுவிலும், இந்த மக்களின் தலைவன் வாழ்விலும் ஏற்பட்டு வரும் பரிசுத்த மாற்றங்களைக் கண்டு கர்த்தரில் களிகூர்ந்தார். அவரின் உள்ளத்தின் ஆழத்தில், தான் முற்றும் தனிமையாக இருப்பதை அவர் அதிகமாக உணர்ந்தார். தன்னைப் போன்ற ஒரு வெள்ளை மனிதனைப்பார்த்து ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது. டியூக்கன்ஃபீல்ட்டிலுள்ள ஜேம்ஸ் ஸ்மித் என்பவரின் மகள் மேரி ஸ்மித்தைக் குறித்து அவர் மிகவும் சிந்தனை செய்தார். அங்கிருந்து உள்ளத்தைக் களிப்பூட்டும் ஒரு செய்தி தனக்குக் கிடைக்காதா என்று அவர் கர்த்தருக்குள் ஆவலுடன் எதிர்பார்த்தவராக இருந்தார். கடைசியாக அவருக்கு அந்த மேரி ஸ்மித்திடமிரு ந்தே ஒரு கடிதம் வந்தது. அதில் மேரி ஆப்பிரிக்கா தேசத்துக்குச் செல்லுவதை அவளுடைய பெற்றோர் முன்னைவிட கடுமையாக எதிர்ப்பதாகவும், அவள் அங்கு வருவதை எதிர்பார்ப்பது முற்றும் பயனற்ற காரியம் என்றும் அவள் குறிப்பிட்டிருந்தாள். அதை வாசித்த ராபர்ட்டின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. அதைப் படித்த பின்னர் “என் ஆறாத் துயரத்தில் காட்டு மிராண்டிகளான ஆப்பிரிக்க மக்களின் இரட்சிப்பையும், எனக்காக கல்வாரி சிலுவையில் ஈனக்கோலத்தில் தொங்கி மாண்ட என் அன்பின் இரட்சகரையும் நான் நினைத்த போது எனது துயரங்கள் யாவும் ஆனந்தமாக மாறிற்று” என்று ராபர்ட் எழுதினார்.
ஒரு நாள் ராபர்ட் அந்த ஆப்பிரிக்க தலைவனிடம் தன்னுடனே கூட தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் (Cape Town) என்ற பட்டணத்துக்கு வரவேண்டுமென்ற ஆச்சரியமான வேண்டுகோளை அவனுக்கு முன்பாக வைத்தார். அந்த வேண்டு கோளை அந்த தலைவன் முதலில் முற்றுமாக நிராகரித்தான். தான் அநேக கொலைகள் செய்திருப்பதால் அரசாங்கம் தன்னைப் பிடித்து மரண தண்டனை அளித்துவிடும் என்று அவன் மிகவும் பயந்து கூறினான். “உங்களுக்கு எந்த ஒரு தீங்கும் வராதபடி நான் உங்களைப் பார்த்துக் கொள்ளுவேன். எந்த ஒரு கொடிய பாவியையும் இரட்சிக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவ வல்லமைக்கு நீங்கள் ஒரு ஜீவனுள்ள சாட்சியாக இப்பொழுது இருக்கின்றீர்கள். மக்கள் உங்களைப் பார்க்கும் போது நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகிவிட்ட உங்கள் பரிசுத்த மாறுதலைக் காணும் போது அவர்கள் தங்களில் களிகூர்ந்து அன்பின் ஆண்டவர் இயேசுவை நிச்சயமாக மகிமைப்படுத்துவார்கள்” என்று கூறினார்.
தனது ஜீவனை ராபர்ட்டின் கரங்களில் ஒப்புவித்தவனாக அந்த ஆப்பிரிக்கத் தலைவன் சம்மதம் தெரிவித்து தனது பயணத்தை தொடங்கினான். அநேக வாரங்கள் மாட்டு வண்டிப் பயணத்துக்குப் பின்னர் ராபர்ட்டும், அந்த தலைவனும் 15 மாதங்களுக்கு முன்பாக இராத்தங்கிய டச்சுக்கார குடியானவருடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். “நீங்கள் யார்?” என்று அந்தக் குடியானவர் ராபர்ட்டைக் கேட்டார். நான்தான் ராபர்ட் மொஃபட், என்னை நீங்கள் இத்தனை சீக்கிரமாக மறந்துவிட்டீர்களா?” என்றார் அவர். “மொஃபட்” என்ற வார்த்தையை தடுமாற்றத்துடன் உச்சரித்த அவர் தனக்குள்ளாகக் கூனி குறுகியவராக “இது உங்களுடைய ஆவியாகும். அந்தக் கொடிய ஆப்பிரிக்கத் தலைவனால் ராபர்ட் மொஃபட் கொல்லப்பட்டுவிட்டதாக ஒவ்வொருவரும் பேசிக் கொள்ளுகின்றார்கள். உங்களுடைய எலும்புகளைக்கூட தான் பார்த்ததாக ஒரு மனிதன் என்னிடம் சொன்னான்” என்றார் அந்த டச்சுக்கார குடியானவர்.
தான் ஒரு செத்துப்போன ஆவி அல்ல என்றும், தான் நிஜமான ராபர்ட் என்றும் அவர் தன்னை அந்த மனிதருக்கு உறுதிப்படுத்திக் கூறிய பின்னர் அந்த ஆப்பிரிக்கத் தலைவனுடைய மனந்திரும்புதலின் காரியங்களை எல்லாம் மிகவும் விபரமாக அந்தக் குடியானவருக்கு எடுத்துக்கூறி முடிவாக “அந்த ஆப்பிரிக்கத் தலைவன் இப்பொழுது ஒரு மெய்க்கிறிஸ்தவன்” என்று சொல்லி முடித்தார். “அப்படியானால் அது உலகத்தில் எட்டாவது அதிசயத்தைத் தவிர வேறொன்று மில்லை” என்றார் அந்த டச்சுக்கார குடியானவர். “நீங்கள் சொல்லுவது உண்மையானால், நான் மரிப்பதற்கு முன்பாக அந்த மனிதனைப் பார்த்துவிட வேண்டும். அந்த மனிதன் எனது அங்கிளை (Uncle) கொன்ற கொலை பாதகனாக இருந்தபோதினும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் அவனைப் பார்க்க வேண்டும், அவனோடு பேச வேண்டும்” என்றார் அந்தக் குடியானவர்.
“நீங்கள் நினைக்கும் நேரத்திற்கும் முன்னதாகவே உங்களது உள்ளத்தின் ஆசை நிறைவேறப் போகின்றது” என்றார் ராபர்ட். “அதோ, அங்கு நின்று கொண்டிருப்பவர்தான் அந்த ஆப்பிரிக்கத் தலைவன்” அதைக் கேட்ட அந்த டச்சுக்கார குடியானவர் அந்த மனிதரை மிகுந்த ஆச்சரியத்துடன் கண் இமைக்காமல் கொஞ்ச நேரம் பார்த்த பின்னர் தனது கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்து மிகுந்த பயபக்தியுடன் “ஓ என் அருமை தேவனே, உம்முடைய வல்லமையின் அதிசயம்தான் என்னே” என்று அந்தக் குடியானவர் சொன்னார்.
ராபர்ட்டும், அந்த ஆப்பிரிக்கத் தலைவனும் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் பட்டணத்தில் ஒரு பெரிய ஆச்சரிய எழுச்சியை உண்டாக்கி விட்டனர். கேப் பட்டணத்தின் கவர்னர் சோமர்செட் பிரபு அந்த ஆப்பிரிக்கத் தலைவனுக்கு 80 பவுண்டுகள் விலை மதிப்புள்ள ஒரு அழகான வண்டியை பரிசாக அளித்தார். கேப் டவுண் பட்டணத்து மக்கள் யாவரும் அந்த கொடிய ஆப்பிரிக்கத் தலைவனை காணவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் எந்த ஒரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் அவருடைய இரட்சிப்பின் வல்லமையை நேரடியாகப் பார்க்கவும் அணி திரண்டு வந்தனர்.
கேப் டவுண் பட்டணத்தில் இருந்தபோது அங்கிருந்த இரண்டு லண்டன் மிஷனரி ஸ்தானாபதிகளை ராபர்ட் சந்தித்தார். ராபர்ட்டின் அசாதாரணமான மிஷனரி பணிகளால் அவர்கள் மிகவும் தொடப்பட்டார்கள். அந்த ஸ்தானாபதிகளின் ஆலோசனைகளின்படி ராபர்ட் குருமன் நதிக்கரையிலுள்ள பெக்வானா என்ற ஆப்பிரிக்க சுதேசிகளின் நடுவில் மிஷனரியாகப் பணிபுரிய அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். அது முந்தைய இடத்தைவிட மிகவும் விசாலமான பணித்தளமாகும். அந்த ஆப்பிரிக்கத் தலைவனும், ராபர்ட் மொஃபட்டும் ஒருவரையொருவர் பிரியும் தருணத்தில் மிகவும் அழுதனர். அந்த தலைவன் தனது இடத்திற்குத் தனிமையாகவே திரும்பிச் சென்றான். எனினும், அந்த தலைவன் வருங்காலத்தில் தனது ஆப்பிரிக்க சுதேச குடிமக்களின் நடுவில் கர்த்தர் நாட்டின தோட்டமாக விளங்குவான் என்ற நிச்சயமான நம்பிக்கையில் ராபர்ட் தனக்குள்ளாக ஆனந்தம் அடைந்தார்.
இருதய மனமகிழ்ச்சியின் பூந்தோட்டம்
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுண் பட்டணத்தை வந்தடைந்த நான்காம் நாள் ராபர்ட்டுக்கு அவருடைய வருங்கால மனைவியான மேரி ஸ்மித்தின் பெற்றோர் தங்களது அருமைக் குமாரத்தியை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைப்பது என்ற திடீர் முடிவை எடுத்துவிட்ட ஆச்சரியமான செய்தி அவருக்கு வந்து எட்டியது. டிசம்பர் மாதம் அந்த அம்மையார் கேப்டவுண் வந்து சேருவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. ராபர்ட் மொஃபட்டுக்கு இருந்த சந்தோசம் அளவிட முடியாததாக இருந்தது. இங்கிலாந்தின் செஷையரிலுள்ள மேரி ஸ்மித்தின் தோட்டத்தில் அவர்கள் இருவரும் கைகோர்த்த நிலையில் தங்களுடைய வாழ்க்கையை மிஷனரி பணிக்கு ஒப்புவித்து ஆண்டவரை அறியாத மக்களுக்கு அவருடைய கல்வாரி அன்பை எடுத்துச் செல்லுவதென்ற அவர்களின் திட்டங்களை எல்லாம் ராபர்ட் அதிகமாக அந்த வேளையில் நினைவுகூர்ந்தார்.
டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணமானபோது அவர்கள் இருவருக்கும் 24 வயது தான். திருமணம் முடிந்த அன்றே மேரி அம்மையார் தனது சுருள் சுருளான அழகான முடிகளை கத்தரித்து அந்த முடியை தன்னைக் கவனித்த மேட்ரன் அம்மையாரின் தொப்பிக்குள் வைத்துவிட்டு மிஷனரியின் மனைவியாக தன்னை மாற்றிக் கொண்டார்கள். மேரி மொஃபட் அம்மையாரின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். திருமணம் முடிந்து கொஞ்ச நாட்களிலேயே ராபர்ட்டையும், மேரியையும் ஏற்றிச் செல்லுவதற்காக மூன்று கட்டை வண்டிகள் ஆயத்தமாக வந்து நின்று கொண்டிருந்தன. லட்டாக்கு என்ற தங்களது புதிய மிஷனரி பணித்தளத்திற்குச் செல்ல அவர்கள் 700 மைல்கள் பயணம் செய்தாக வேண்டும். தங்களது அன்பின் மகள் அநேக ஆபத்துக்கள் நிறைந்த நீண்ட தொலைவிலுள்ள நாட்டிற்குச் செல்லுவதைக் குறித்து மிகவும் கவலை கொண்டாலும் அந்த வயதான பெற்றோர் தங்கள் குமாரத்தியை சர்வ வல்லவரின் அடைக்கலப் பாதுகாப்புக்கு அடுத்தபடியாக ராபர்ட்டின் பாதுகாப்புக்குள் அனுப்பி வைத்தனர். அந்த ஆச்சரிய அன்பை அதிகமாக உணர்ந்த ராபர்ட் அந்தப் பெற்றோருக்கு “உங்கள் அருமை குமாரத்தி மேரியின் வருகையானது, நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்த அத்தனை ஒரு முக்கியமான மனமகிழ்ச்சியின் சம்பவமாக எனது வாழ்வில் அமைந்தது. முற்றும் அந்நியர்களான மக்கள் நடுவில் உங்கள் மகள் இருக்கப் போகின்றபோதினும் எப்பொழுதும் பிரசன்னராகி இருக்கும் உன்னதமானவரின் உயர் அடைக்கலப் பாதுகாப்புக்குள் அவர்கள் இருப்பதை நீங்கள் நன்கு நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன், அவர்களை வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்து ஏற்றுக்கொண்டிருக்கும் நான் அவர்களுக்கு ஒரு தகப்பனாகவும், தாயாகவும், கணவனாகவும் இருந்து உங்களின் குமாரத்தியாகிய அவர்களை கர்த்தருக்கென்று அர்ப்பணம் செய்த உங்கள் எல்லையற்ற அன்புக்கு நான் எப்பொழுதும் பாத்திரமாகவும், நன்றியுள்ளவனாகவும் நடந்து கொள்ளுவேன்” என்று எழுதினார்.
அங்கும் இங்கும் தூக்கிப்போட்டு ஆடி அசைந்து செல்லும் கட்டை வண்டியில் நாள் ஒன்றுக்கு 15 மைல்கள் வீதம் 7 வார காலம் பிரயாணம் செய்து ராபர்ட்டும், மேரியும் இறுதியாக லட்டாக்கிலுள்ள தங்கள் ஆப்பிரிக்க வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தங்களைச் சுற்றிலும் காட்டு மிராண்டிகளான, மிருகங்களான மக்கள் நடுவில் எத்தனையோ பாடுகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்த போதினும் அவர்கள் இருவரும் தேவனுடைய மாறாத அன்பின் அரவணைப்புக்குள் மிகுந்த ஆறுதலோடும், கரை புரண்டோடும் தேவ சமாதானத்தோடும் மிகுந்த மன ரம்மியமாக இருதய மனமகிழ்ச்சியின் பூந்தோட்டத்தில் வாழ்ந்தனர்.
கூர்மையான முட்களின் பூந்தோட்டம்
ராபர்ட்டும், மேரியும் வாழ்ந்த லட்டாக்கு என்ற கிராமம், காட்டு விலங்குகளாலும் மற்ற ஆபத்துக்களிலுமிருந்தும் பாதுகாக்கப்பட அடர்த்தியான முட்புதர்களால் சூழப்பட்டிருந்தது. நல்ல உறுதியானதும், மிகவும் கூர்மையானதுமான முட்களால் அந்தப் புதர்கள் நிறைந்து கிடந்தது. “பதுங்கித் தாக்கும் முட்கள்” என்று அந்த முட்கள் மிகவும் பொருத்தமாக அங்குள்ள சுதேசிகளால் அழைக்கப்பட்டன. மிகுந்த தைரியசாலிகளான அந்த ஸ்காட்லாந்து தேச மிஷனரிகளான ராபர்ட் மற்றும் மேரியின் வாழ்வில் அந்த முட்களைப்போன்ற பாடு துயரங்கள் நிரம்பவே காணப்பட்டன. அவர்களைச் சுற்றி வாழ்ந்த ஆப்பிரிக்க சுதேசிகளின் தவறான எண்ணம், அதிருப்தி போன்ற முட்புதர்களால் அவர்கள் நாள்தோறும் குத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். அநேக சமயங்களில் கடுமையான ஏமாற்றம், சரீரப் பிரகாரமான வியாதி துன்பங்களால், ஆத்துமாவின் அங்கலாய்ப்பு போன்ற முட்களால் அவர்கள் ஆழமாகக் குத்தப்பட்டனர். தங்கள் அன்பின் ஆண்டவரையும் அவரது சிரசின் முட்களையும் நினைத்தபோது அவர்கள் அவரில் ஆறுதலும், பெலனும் பெற்றனர்.
அவர்கள் திருமணமாகி ஒரு ஆண்டு காலம்தான் ஆகியிருந்தது. அதற்குள்ளாக மேரி கொடிய பெலவீனத்துக்குள்ளானார்கள். அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் அவர்களுடைய கடைசி மூச்சாகக் காணப்பட்டது. ஆறாத் துயரம் தோய்ந்த முகத்தினனாக ராபர்ட் தனது மனைவியின் படுக்கையண்டை அமர்ந்து வாழ்வின் இறுதி நேரத்தில் அவர்கள் சொல்லும் செய்தி என்னவோ என்பதை அறிய ஆவலோடு அமர்ந்து காத்திருந்தார். இறுதியாக அம்மையார் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார்கள். அதற்கப்பால், சில வாரங்கள் சென்ற பின்னர் அவர்கள் மற்றொரு கஷ்டப்பள்ளத்தாக்கின் ஊடாகக் கடந்து சென்றார்கள். இப்பொழுது அவர்கள் தனது பெயரையே தாங்கிய ஒரு பெண் மகவைக் கையில் ஏந்தியவர்களாக வெளி வந்தார்கள்.
ராபர்ட் மொஃபட்டின் வீட்டைப் பல பாடு துயரங்களும், ஆபத்துக்களும் படையெடுத்து வந்தன. அவர்களுடைய குடிசை அழைக்கப்படாத ஆப்பிரிக்க சுதேச விருந்தாளிகளால் அவ்வப்போது நிறையப்பட்டு மூச்சுத் திணறும் அளவுக்கு அங்குள்ள மக்கள் சூழ்ந்து கொள்ளுவார்கள். அந்த சுதேசி மக்கள் மிகவும் சப்தமாகப் பேசுவதுடன் தங்கள் மட்டாக அவருடைய குடிசையின் களி மண் தரையில் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு குரட்டைவிட்டுத் தூங்கவும் ஆரம்பித்து விடுவார்கள். அந்த மக்களை மிகவும் கவனமாக கண்காணிக்காத பட்சத்தில் அந்த திறமை வாய்ந்த திருட்டுக் கரங்கள் விலையுயர்ந்த மற்றும் அத்தியாவசியமான நல்ல பொருட்களை எல்லாம் களவாடி எடுத்துச் சென்றுவிடும். கத்திகள், கரண்டிகள், மரம் அறுக்கும் வாட்கள், கோடரிகள் மற்றும் இதர பொருட்களை எல்லாம் மாய மந்திரம் போல கண் இமைக்கும் நேரத்தில் அத்தனை சாமர்த்திய தந்திரமாக அவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் ராபர்ட் சொல்லுவது போல “அந்த நாளில் நாங்கள் இழந்ததைக் குறித்து கதைகள் உண்டே தவிர வேறொன்றும் இருக்காது” அந்த அநாகரீகமான ஆப்பிரிக்க மக்களுக்கு ராபர்ட் கற்றுக்கொடுத்த முதல் பாடம் அவர்கள் ஸ்நானம் செய்து சுத்தமான வஸ்திரங்களை உடுத்த வேண்டும் என்பதுதான். அதைச் சொல்லும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களுடைய பாவங்களை எல்லாம் நீக்கிப்போடுவார் என்றும் சொல்லுவார்.
ஆராதனைகள் ஒழுங்காக அங்கிருந்த சிற்றாலயத்தில் நடைபெற்றன. கொஞ்ச பேர்கள்தான் அதில் கலந்து கொண்டதுடன் அவர்களில் பலர் ஏனோதானோவென்று அக்கறையற்றவர்கள் போலக் காணப்பட்டனர். மக்கள் மத்தியில் உண்மையாகவே பகைமை அலை காணப்பட்டது. மிஷனரிகள் இருந்த இடத்தில் அநேக மாத காலமாக மழையே பெய்யவில்லை. அந்த இடத்திலிருந்த நீரோடைகளும், துரவுகளும் வறண்டு போய்விட்டன. தண்ணீர் இல்லாத காரணத்தால் எந்த ஒரு வேளாண்மையையும் மக்களால் அங்கு செய்ய இயலாது போயிற்று. ஆடு, மாடுகள் பசியினாலும் தாகத்தினாலும் மாண்டு போயின. அந்த இடத்திலிருந்த சுதேசிகளின் தலைவன் மாத்பி என்ற பெயரையுடையவன் மழையைக் கொண்டு வரும் சூனியக்கார மனிதனை அழைத்து வர ஆள் அனுப்பினான். அந்த தந்திரசாலியான சூனியக்காரன் அநேக ஆடு மாடுகளை பலியிட்ட பின்னரும் மழை வராமற் போகவே இறுதியாக “இங்குள்ள வெள்ளைக்கார மிஷனரிதான் மழையில்லாமைக்குக் காரணம். அவர்களைக் கண்டு பயந்துதான் மழை மேகங்கள் மழையைக் கொடுக்காமல் விலகிச்செல்லுகின்றன” என்று கூறிவிட்டான்.
அவ்வளவுதான், ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்த மக்கள் மிஷனரிகளை சபிக்கத் தொடங்கினர். மிஷனரி குடிசைக்கு முன்பாக தனது கரத்தில் குழந்தையுடன் நின்று கொண்டு மேரி மொஃபட் அம்மையார், கொடிய கோபத்துடன் நின்று கொண்டிருக்கும் கூட்டத்தினருக்கு அஞ்சாமல் அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும் தனது கணவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். கோபக்கனல் கண்களில் பறக்க, நீண்ட ஈட்டியை கரத்தில் பிடித்தவனாக நின்று கொண்டிருந்த ஆப்பிரிக்க சுதேசிகளின் தலைவன் மிஷனரிகள் உடனடியாக அங்கிருந்து ஓடிப்போய்விடவேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் கடுமையான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியதாகும் என்றும் சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட ராபர்ட் மொஃபட் இரத்தசாட்சி மரணத்துக்கு ஆயத்தமானவரைப் போன்று அந்தத் தலைவனின் முகத்துக்கு முகம் பார்த்தவராக “நீங்கள் உங்கள் ஈட்டியை எனது மார்புக்குள் பாய்ச்சலாம், எனது குடிசையை தீ வைத்துக் கொழுத்தலாம், எனது மனைவி குழந்தையை கொன்று இரத்தம் சிந்தலாம். ஆனால், நாங்கள் உங்களுக்குப் பயந்து இந்த இடத்தைவிட்டு ஓடிப்போகமாட்டோம். தேவன் உங்களை நேசிக்கவும், உங்களுக்கு சேவை செய்யவும் எங்களை தமது நாமத்தினிமித்தமாக உங்களண்டை அனுப்பியிருக்கின்றார்” என்று தைரியமாகக் கூறினார். ராபர்ட்டின் அசாதாரணமான தைரியத்தைக் கண்ட தலைவன் தன்னை அறியாத நிலையில் அவருக்கு மாறுத்தரம் எதுவும் பேச இயலாதவனாக தன் வழியே போய்விட்டான். கோபம் கொண்டு திரண்டு வந்த கூட்டமும் அவனைத் தொடர்ந்து கலைந்து சென்றுவிட்டது.
ஆப்பிரிக்க வனாந்திரத்தில் தேவனின் பூந்தோட்டம்
ராபர்ட்டின் இருதயம் ஆப்பிரிக்க மக்களின் இரட்சிப்புக்காக கொழுந்துவிட்டு எரிந்தது. அவர் தொடர்ச்சியாக நீண்ட பிரசங்க பயணங்களை மேற்கொண்டு வந்தார். அவர் தனது பிரயாணங்களில் எத்தனையோ ஆபத்துக்களையும், கொடிய கானக விலங்குகளையும், நரமாமிச பட்சிணிகளையும், பசி தாகத்தையும் இன்னும் எத்தனையோ இடர்களையும், துன்ப துயரங்களையும் சந்தித்தார். தங்களுடைய லட்டாக்கு மிஷன் பணித்தளத்தில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருந்ததால் அவர்கள் அங்கிருந்து எட்டு மைல்கள் தொலைவிலுள்ள குருமன் (Kuruman) என்ற இடத்திற்கு தங்கள் குடியிருப்பை மாற்றினார்கள். குருமனிலுள்ள அவர்களின் மிஷனரிப் பணித்தளத்தை படத்தில் நீங்கள் காணலாம்.
ராபர்ட் மொஃபட், ஆப்பிரிக்காவின் பெக்வானா மொழியை எழுத்து வடிவத்திற்கு கொண்டு வருவதற்கும், அதற்கான எழுத்திலக்கணம் தயாரிப்பதற்கும் தனது நேரத்தை எல்லாம் அங்கு செலவிட்டார். அங்கு அநேக கட்டிடங்களை எழுப்பினார். அந்த இடத்தில் அவர் நதியிலிருந்து தண்ணீரை எடுத்து வருவதற்கு குழிகள் தோண்டச் செய்து பள்ளத்தாக்கு எங்கிலும் அழகான பூந்தோட்டங்களை உண்டாக்கினார். எங்கும் பூக்களே காணப்பட்டன. அவர் தனது மனைவியைப் பார்த்து “இந்த அழகான பூந்தோட்டங்கள் நாம் மிஷனரிப்பணி செய்யும் இந்த ஆப்பிரிக்க பாலைவனம், தேவனின் பூங்காவனமாக மாறுவதற்கு முன் அடையாளமாக இருக்கின்றது” என்று சொன்னார். அவருடைய மனைவி மேரியின் விசுவாசமும் அவருடைய விசுவாசத்துக்கு குறைந்தது அல்ல. ஒரு நாள் அந்த அம்மையாருக்கு இங்கிலாந்திலுள்ள அவர்களுடைய சிநேகிதி ஒருவரிடமிருந்து அவர்களுக்கு என்ன அன்பளிப்பு வாங்கி அனுப்ப வேண்டும் என்று கேட்டு கடிதம் ஒன்று வந்தது.. “மக்களுக்கு கர்த்தருடைய ராப்போஜனம் பரிமாறுவதற்கு நற்கருணைப் பாத்திரங்கள் அனுப்புங்கள்” என்று மேரி அம்மையார் தனது சிநேகிதிக்குப் பதில் எழுதினார்கள். இதில் ஒரு வியப்பான காரியம் என்னவெனில், ஆப்பிரிக்க சுதேசிகளில் ஒருவரும் இன்னும் ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று மனந்திரும்பவில்லை என்பதுதான்.
இந்தச் சமயத்தில் ஒரு ஆச்சரியமான மாற்றம் ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் ஏற்படுவதை நமது மிஷனரிகள் கவனித்தனர். ராபர்ட் மொஃபட் தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கும்போது ஒரு காலத்தும் இல்லாத அளவிற்கு அந்த மக்கள் தேவனுடைய செய்தியை மிகுந்த ஆர்வத்தோடும், பயபக்தியோடும் கவனித்தனர். அடிக்கடி அந்த ஆப்பிரிக்க மக்களின் கரிய முகங்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிவதை மிஷனரிகள் கவனித்தனர். தங்களுக்கு முன்னாலுள்ள கூட்டத்திலிருந்து தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு நொறுங்குண்ட இருதயங்களிலிருந்து எழும்பும் அழுகுரல்களும், தேவனுடைய இரக்கங்களுக்காக மன்றாடும் ஏக்கங்களும் தெளிவாகக் கேட்டன. நாளுக்கு நாள் மக்கள் கூட்டமும் திரண்டு வரவே சிற்றாலயத்தில் இடம் இல்லாமல் போயிற்று. ஆச்சரியமோ ஆச்சரியம்! எந்த ஒரு ஜனங்கள் ஒரு சமயம் படிப்பறிவற்ற வெறும் கூலிகள், எதற்கும் உதவாத மக்கள் என்று எண்ணப்பட்டனரோ அவர்களே தங்கள் மட்டாக தொலை தூரமான காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டிக் கொண்டு வந்து தங்கள் கரங்களாலேயே ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டினார்கள். அவர்கள் தங்களைத் தேவனைப் பாடித் துதிப்பதற்கும், ஜெப தியானங்களுக்கும் ஒப்புவித்தனர். அவர்களில் மிகவும் வாஞ்சையுள்ள சிலர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். 1829 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை, திருச்சபை சரித்திரத்தில் மிகவும் நினைவுகூறப்படவேண்டிய நாளாகும். ஏராளமான கூட்டத்தில் 6 சுதேசிகள் ஞானஸ்நானம் பெற்றனர். யாவுக்கும் கிரீடம் சூட்டினாற்போல முதல் முறையாக கர்த்தருடைய ராப்போஜனத்திற்கு மக்கள் அமர்ந்தனர். அந்த நாளுக்கு முந்தைய தினம்தான் மேரி அம்மையாரின் சிநேகிதி இங்கிலாந்து தேசத்திலிருந்து கர்த்தருடைய ராப்போஜனம் பரிமாறுவதற்கான பாத்திரங்களை அனுப்பியிருந்தார்கள். அதை அனுப்பும்படியாக அம்மையார் 2 வருடங்களுக்கு முன்பாக தனது தோழியிடம் கேட்டிருந்தார்கள். என்னே, தேவனின் அற்புதச் செயல்!
ஏழு ஆண்டுகளுக்கு ஒரு தடவை எடுக்கும் விடுமுறையில் ராபர்ட் 1839 மற்றும் 1843 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அந்தச் சமயம் அவர் டேவிட் லிவிங்ஸ்டனைச் சந்தித்து அவரை ஆப்பிரிக்க நாட்டிற்கு மிஷனரிப் பணிக்குப் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். ஆப்பிரிக்க தேசத்தின் மிகவும் இருண்ட பகுதிகளில் ராபர்ட் மொஃபட் தோற்றுவித்த மிஷனரிப் பணியை டேவிட் லிவிங்ஸ்டன் போன்ற இளவயதினரான மிஷனரிகள் வளர்ந்தோங்கச் செய்வதற்கு ஏதுவாக இருந்தார்கள். ஆப்பிரிக்க சுதேசிகளுக்கு டேவிட் லிவிங்ஸ்டன் வேதாகமத்தை விளக்குவதை படத்தில் நீங்கள் காணலாம். தனது வியாதியின் சிகிட்சைக்காக குருமன் என்ற இடத்திற்கு வந்து ராபர்ட் மொஃபட்டுடைய குடும்பத்தினருடன் தங்கியிருந்த டேவிட் லிவிங்ஸ்டன் தனது வியாதி படுக்கையில் தனக்கு மருத்துவ சிகிட்சை செய்த ராபர்ட் மொஃபட்டின் மூத்த குமாரத்தி மேரியையே தனது மனைவியாக 1844 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
23 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் ராபரர்ட் மொஃபட் இங்கிலாந்து தேசத்துக்குச் சென்று பெக்வானா மொழியில் தான் மொழி பெயர்த்த புதிய ஏற்பாடு அச்சிடப்படுவதை கவனமாக மேற்பார்வையிட்டார். இங்கிலாந்தில் அவர் இருந்த நாட்களில் ஆவியில் அனல் பறக்கும் மிஷனரிப் பிரசங்கங்களை அவர் தேவாலயங்களிலும், இதர மிஷனரி கூடுகைகளிலும் ஆத்தும பாரத்தோடு கொடுத்தார். அவருடைய தேவச்செய்திகளால் தொடப்பட்டோர் அநேகர். அநேக வாலிப நெஞ்சங்களிலே கடல் கடந்து இருண்ட நாடுகளிலிருக்கும் மக்களுக்கு மிஷனரிப்பணி செய்ய வேண்டுமென்ற தாகம் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்படிப் பட்டவர்களில் மாபெரும் மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டனும் ஒருவர் என்பது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது.
இங்கிலாந்திலிருந்து ஆப்பிரிக்கா திரும்பிய ராபர்ட் மொஃபட் தேவ பெலத்தால் தான் ஆரம்பித்த உயிர்மீட்சியின் எழுப்புதல் தீ ஆழமாகவும், அதே சமயம் விரிவாகவும் சென்று கொண்டிருப்பதைக் கண்டு ஆவியில் களிகூர்ந்தார். அநேக தென் ஆப்பிரிக்க மக்கள் இரட்சிப்பைக் கண்டடைந்து தேவனுடைய திருச்சபையில் அங்கத்தினரானார்கள். அவர் தனது நேரத்தையும், காலத்தையும் எழுதுவதற்கும், மொழிபெயர்ப்பதற்கும், தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை தீவிரமாகப் பிரசிங்கிப்பதற்காகவும் கவனமாகப் பிரித்து வைத்து செலவிட்டார். அவரது 30 ஆண்டுகள் அயராத உழைப்புக்குப் பின்னர் பெக்வானா மொழியில் முழு வேதாகமும் 1857 ஆம் வருடம் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் அந்த வேதாகமத்தை மொழிபெயர்த்து கடைசி வசனத்தையும் எழுதி முடித்த போது “ஆ, எனக்கு இப்பொழுது மரணம் வந்தால் வெகு களிகூருதலோடு நான் மரிப்பேன்” என்று கூறிக்கொண்டே தனது முழங்கால்களில் வீழ்ந்து தேவன் தனக்கு தம்முடைய மகிமையான வேதாகம மொழி பெயர்ப்புப் பணியைச் செய்து முடிக்க வேண்டிய தேவபெலத்தையும், பரம ஞானத்தையும், ஆச்சரியமான கிருபைகளையும் அளித்தமைக்காக அவருக்கு அனந்தம் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தார்.
பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் “மோட்ச பிரயாணம்” என்ற பரிசுத்த நூலையும் அவர் பெக்வானா மொழியில் மொழி பெயர்த்ததுடன் பூர்வீக பக்தர்களின் பாடல்கள் அடங்கிய ஞானப்பாட்டையும் அதே பாஷையில் மொழி மாற்றம் செய்தார். ஒரு காலத்தில் மனிதர்களை மனிதர்கள் அடித்துக்கொன்று தின்னும் நரமாமிச பட்சிணிகளாக இருந்த ஆப்பிரிக்க மக்கள் கர்த்தருக்குள் புது சிருஷ்டியாகி தங்கள் ஆவியில் களிகூர்ந்து ஞானப்பாடல்களை உரத்த குரலில் ஆரவாரித்துப் பாடுவதைக் கண்ட அவரது உள்ளம் தனது கர்த்தாவில் பரவசம் அடைந்தது. அவர் 60 வயதினனாக இருந்தபோது 1854 ஆம் ஆண்டு கலகாரி (Kalahari) பாலைவனத்தின் குறுக்காக 700 மைல்கள் தொலைவை தனது கரத்திலிருந்த திசைகாட்டும் காந்தக் கருவியின் (காம்பஸ்) உதவியால் கடந்து இறுதியாக தனது பழைய நண்பன் மிலிக்காசி என்பவரைச் சந்தித்து நிடுப்லி என்ற ஆப்பிரிக்க மக்கள் நடுவில் தமது நிலையான மிஷன் ஸ்தாபனம் ஒன்றை தோற்றுவித்தார்.
54 ஆண்டு காலம் தென் ஆப்பிரிக்கா தேசத்தில் தனது அன்பின் ஆண்டவருக்கு ஊழியம் செய்த பின்னர் தனது அதிகமான சுகயீனத்தின் காரணமாக 1870 ஆம் ஆண்டு அவர் தனது மனைவி மேரியுடன் இங்கிலாந்திற்குத் திரும்பினார். அவர்கள் இங்கிலாந்து வந்து சேர்ந்த அடுத்த ஆண்டிலேயே அவருடைய அருமை மனைவி ஆண்டவருடைய பரம ராஜ்யம் சென்றடைந்தார்கள். மேரி அம்மையார் மிகவும் ஞானமுள்ளவர்கள். தனது ஜீவ காலம் முழுமையும் தனது அன்புக் கணவருக்கு உண்மையும், உத்தமமுமாக நடந்து அவரது மிஷனரிப் பணியில் அவருடன் தோளோடு தோள் கொடுத்து தேவனுடைய சுவிசேஷத்தை தென் ஆப்பிரிக்காவில் பரவச் செய்ய உறுதுணையாக இருந்தார்கள். நல்லதொரு குடும்பப் பெண்ணாக ஒன்பது (9) குழந்தைகளின் பரிசுத்த தாயாராக இருந்து அவர்கள் அனைவரையும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள வழிநடத்தி, தங்களைச் சுற்றி வாழ்ந்த காட்டு மிராண்டிகளான ஆப்பிரிக்க மக்களுக்கு நல்லதொரு ஆசிரியராகவும், மருத்துவம் பார்க்கும் சிறப்பான மருத்துவ தாதிப்பெண்ணாகவும், திறம்பட்ட நிர்வாகியாகவும் அவர்கள் விளங்கி தனது வாழ்வில் தேவனை மகிமைப்படுத்தினார்கள். மேரி மொஃபட் அம்மையாரின் கல்லறையை படத்தில் நீங்கள் காணலாம்.
மொஃபட் இங்கிலாந்தில் தங்கியிருந்த தனது எஞ்சிய ஆயுட்காலம் முழுமையிலும், சொல்லப் போனால் அவரது மரண நாள் மட்டும் தேவனுடைய கல்வாரி அன்பை தங்கள் வாழ்வில் அறியாத கடல்களுக்கப்பால் உள்ள நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரி ஸ்தாபனங்களை ஊக்குவிக்கும் பணியில் இராப்பகலாக ஈடுபட்டு உழைத்தார். தான் கடைசியாகப் பணிபுரிந்த தென் ஆப்பிரிக்க தேசத்திலுள்ள குருமன் (Kuruman) என்ற இடத்தில் ஒரு வேதாகம கல்லூரி நிறுவுவதற்காக அவர் பணம் சேர்த்தார். அங்குள்ள ஆப்பிரிக்க சுதேச கிறிஸ்தவ மக்களே தேவனுடைய ஊழியர்களாகி தங்களுடைய சொந்த ஜனங்களுக்கே அவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் பெரிதும் ஆவல் கொண்டார். இங்கிலாந்து தேசத்தில் தனது இறுதி காலத்தில் தனக்கு சன்மானமாகவும், நன்கொடைகளுமாகக் கிடைத்த பெரும் செல்வம் அனைத்தையும் தான் அதிகமாக நேசித்த ஆப்பிரிக்க மக்கள் தேவனுடைய நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும்படியான சுவிசேஷ பணிகளுக்காகவே அவர் கொடுத்துவிட்டார்.
ராபர்ட் மொஃபட் நல்ல உயரமானவர், வெகு தைரிய நெஞ்சினன். அடர்த்தியான ரோமமும், தாடி முடியும் அவர் கொண்டிருந்தார். நல்ல ஆரோக்கியமான உடல் வாகு, கூர்ந்து நோக்கும் பார்வை அவருக்கு உண்டு. அவர் குழந்தை உள்ளம் கொண்டவர். அவருடைய அடக்கமும், அன்பும், சுயநலமற்ற குண நலனும் அவரை மற்ற மக்கள் மேல் ஆளுகை செய்யும் கம்பீரமான நிலைக்கு உயர்த்திச் சென்றது. அவருடைய தேவச் சாயலும், பரிசுத்த குணாதிசயங்களும் ஆப்பிரிக்க மக்களை காந்தம் போல அவரண்டை கவர்ந்து இழுத்துக்கொண்டது. தென் ஆப்பிரிக்க கிறிஸ்தவ மிஷனின் முன்னோடித் தந்தையாக அவர் போற்றப்படுகின்றார். ஆப்பிரிக்க மக்களின் இணை பிரியா நண்பனாகவும், அந்த மக்களை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்திய தேவனுடைய உத்தம மிஷனரியாகவும், ஆப்பிரிக்க மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்ட ஏழைப் பங்காளனாகவும் ஆப்பிரிக்க மக்களின் உள்ளத்திலே வைத்து அவர் என்றும் நினைவுகூர்ந்து போற்றப்படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது.
பூவுலகத்தில் தனது பரம எஜமானருக்குத் தான் செய்ய வேண்டிய எல்லா பணிவிடைகளையும் சிறப்பாகச் செய்து முடித்து, இருண்ட ஆப்பிரிக்க தேசத்திலே, குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலே தன் அன்பின் ஆண்டவருக்காக ஒரு அழகான பூந்தோட்டத்தையும் உருவாக்கிய பின்னர் தன்னுடைய ஆசை ஆவலான முகத்தை பரதீசின் பூங்காவுக்கு நேராக மிகுந்த நம்பிக்கையோடு ஏறெடுத்து அதின் எஜமானர் தன்னை அதின் திறந்த வாசலுக்கு முன்பாக வந்து நின்று “நல்லது, உண்மையும், உத்தமமுமான தோட்டக்காரனே, உனது பரம எஜமானரின் நித்திய சந்தோசத்துக்குள் பிரவேசி” என்று ஆசை ஆவலோடு அழைக்கும் குரல் கேட்டு தன் அன்பின் நேசரண்டை 1883 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் நாள் மிகுந்த தேவ சமாதானத்தோடு இங்கிலாந்து தேசத்தின் லீக் என்ற இடத்திலிருந்து அவர் பாடிப் பறந்து சென்றார். அவருடைய சரீரம் அவரது மனைவி மேரி அம்மையாரின் அருகில் நார்வுட் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அவரைக்குறித்த ஒரு ஞாபகச் சின்னம் அவர் பிறந்த இடமான ஈஸ்ட் லோத்தியான் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
1883 ஆம் ஆண்டு ராபர்ட் மொஃபட் தனது 87 ஆம் வயதில் மரணம் அடைந்தபோது லண்டனிலுள்ள ஒரு பிரபல்லியமான செய்தித்தாள் “ராபர்ட் மொஃபட்டைப்போன்ற உண்மையும் உத்தமமுமான தேவ மனுஷனைக் காண்பது அறிது. மிகுந்த கல்வி கற்ற ஞானவான்களும், பேர்புகழ்பெற்ற கனவான்களும், திரண்ட செல்வச் செழிப்புள்ள பிரபுக்களும் கூடுகின்ற மிகவும் கம்பீரமான அலங்கார மண்டபங்கள் கொண்ட இங்கிலாந்து தேசத்தின் மிகவும் பிரசித்திப் பெற்ற வெஸ்ட் மினிஸ்டர் அபி (Westminister Abbey) என்ற மாளிகையில் அவர் எப்படிப் பேசினாரோ அந்த எளிய தேவச் செய்தியைத்தான் படிப்பறிவற்ற, நாகரீகம் இல்லாத, காட்டுமிராண்டிகள் வாழும் ஆப்பிரிக்க குடிசைகளில் கூடிவந்த மக்களுக்கும் மிகுந்த தாழ்மையோடு பகிர்ந்து கொண்டார்” ராபர்ட் மொஃபட் ஒரு தடவை “நான் சில நாட்களில் காலை வேளைகளில் சூரிய வெளிச்சமும், ஆயிரம் ஆப்பிரிக்க கிராமங்களிலிருந்து எழும்பும் புகையும் ஒன்றாக மேலெழுந்து செல்லுவதைப் பார்த்திருக்கின்றேன். அந்தப் புகையை நான் பார்க்கும்போது, அந்த கிராமங்களில் எல்லாம் ஒரு கிறிஸ்தவ மிஷனரி கூட இல்லையே என்று நான் எனக்குள்ளாகவே புலம்பி கதறி அழுதிருக்கின்றேன்” என்று கூறினார். என்னே, அந்த மாபெரும் ஆப்பிரிக்க பரிசுத்த மிஷனரியின் ஆத்தும பாரம்!