தலையங்கச் செய்தி
“தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்” (மாற்கு 8 : 35)
“பரிசுத்த பக்த சிரோன்மணிகள்” என்ற தலைப்பிலான இந்த அருமையான புத்தகத்தை வாசிக்கப்போகும் தேவப் பிள்ளையாகிய உங்களை கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் வாழ்த்துகின்றேன். உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு மிகவும் ஆசீர்வாதமான இந்தப் புத்தகத்தை பல மாதங்களாக தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபத்தோடு எழுதி முடித்தேன். இந்த புத்தகத்தில் காணப்படும் பரிசுத்தவான்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள் கடந்த கால நாட்களில் நமது “தேவ எக்காளம்” பத்திரிக்கையில் ஏற்கெனவே வெளி வந்தவைகள்தான். இருப்பினும், கூடுதலான தகவல்களைத் திரட்டி அநேக படங்களுடன் இந்த புத்தகத்தை ஜெபத்தோடு நான் வெளியிடுகின்றேன். தேவ எக்காளம் பத்திரிக்கையை படிக்க வாய்ப்பில்லாமல் போன தேவ மக்களுக்கு இந்தப் புத்தகம் பரலோக மன்னாவாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சில பரிசுத்தவான்களின் சரித்திரங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளதால் அடிக்கடி நீங்கள் இதை எடுத்து வாசித்து திரண்ட ஆவிக்குரிய தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள அனுகூலமாக இருக்கும்.
கடந்த நாட்களில் நான் உங்களுக்கு அனுப்பிய “அன்பரின் நேசம்” என்ற எனது சுயசரிதை புத்தகத்தைப் போல இதுவும் ஒரு முழுமையான அன்பளிப்பு புத்தகமாகும். இதற்கு நான் விலை எதுவும் குறிப்பிடவில்லை. இந்தப் புத்தகத்தை ஜெப நிலையில் வாசிக்கப் போகும் நீங்கள் இந்தப் புத்தகத்தில் காணப்படும் கடந்த கால பரிசுத்தவான்கள் தங்களை தங்கள் பாவ அடிமைத் தனத்தினின்று மீட்டு இரட்சித்து, நித்திய ஜீவனுக்கு தங்களை சுதந்திரவாளிகளாக்கின தங்கள் அடிக்கப்பட்டஅன்பின் தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு இந்த உலகத்தில் எத்தனை தியாகம், எத்தனை கண்ணீர், எத்தனை பாடுகள், எத்தனை துயரங்கள், எத்தனை அர்ப்பணிப்போடு தேவ ஊழியம் செய்தார்கள், தங்கள் அன்பின் ஆண்டவரை எவ்வளவாக தங்கள் தேவ ஊழியங்களின் மூலமாக மகிமைப்படுத்தினார்கள் என்பதை நீங்கள் தேவ சமூகத்தில் அமர்ந்து நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு தியானிக்க வேண்டும். அந்த பரிசுத்த பக்தர்களைப்போல நீங்களும் அன்பின் ஆண்டவருக்கு முழுமையான அர்ப்பணிப்போடும், ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் ஊழியம் செய்ய வேண்டும்.
360 ஏக்கர் விசாலமான உயர் விளைச்சல் நிலத்திற்கு சுதந்திரவாளியான அமெரிக்க தேசத்தின் பெரும் பண்ணையாரின் மகன் இந்த உலகத்தில் தனக்கு சுதந்திரமாகக் கிடைத்த எத்தனை ஆடம்பரம், எத்தனை அந்தஸ்து, எத்தனை சாங்கோபாங்கமான உலக உல்லாச வாழ்வுகளை எல்லாம் தனது கரம் பற்றிய தனது ஆத்தும மணவாளனாம் இயேசு இரட்சகருக்காக அற்பமும், குப்பையும், தூசியுமாக உதறித் தள்ளி நீண்ட கடல் கடந்து இந்தியாவுக்கு முதல் அமெரிக்க மிஷனரியாக வந்து இந்திய மொழிகளை கற்று அவைகளில் நமக்கு புதிய ஏற்பாட்டையும், சுவிசேஷங்களையும் தந்து நமது இந்திய சீதோஷ்ண நிலைகள் தனது குடும்பத்தினருக்கு ஒத்து வராத காரணத்தால் மனைவி, பிள்ளைகள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வினை பலிபீடத்தில் அர்ப்பணித்து, அவைகளை அப்பால் ஒதுக்கி வைத்துவிட்டு நமது இந்திய மக்களுக்கு இரட்சகரின் கல்வாரி அன்பை பறைசாற்றும் பணியில் தீவிரமாக களமிறங்கி அந்த பணியிலேயே இறுதியில் நமது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் கடைகோடி கிராமம் ஒன்றில் மிகவும் பரிதாபகரமான நிலையில் ஒரு நாள் இரவில் காலரா நோயினால் மரிக்கின்றார். ஆம், அந்த பரிசுத்தவான் கார்டன் ஹால் அவர்களின் தியாக சரித்திரம் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஜெபத்தோடு வாசித்து உங்கள் ஆத்துமாவுக்கு ஆசீர்வாதமாக்கிக் கொள்ளுங்கள்.
இங்கிலாந்து தேச புராட்டஸ்டண்ட் திருச்சபையினரின் உபதேசங்களுக்கு எதிராக இரட்சிப்பின் சுத்த சுவிசேஷ நற்செய்தியை அறிவித்ததின் காரணமாக பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படும் “மோட்ச பிரயாணம்” என்ற பரிசுத்த நூலை எழுதிய ஜாண் பன்னியன் என்ற பக்த சிரோன்மணி இரண்டாவது சார்லஸ் மன்னரின் காலத்தில் சிறை தண்டனை அடைந்து பெட்ஃபோர்ட் என்ற இடத்திலுள்ள குளிரான சிறையில் 12 ஆண்டு நீண்ட காலம் மகா கஷ்டங்களையும், சொல்லொண்ணா பாடு துயரங்களையும் அனுபவித்தார். தனது ஏழை குடும்பத்தையும் விசேஷமாக தனது கண் பார்வையற்ற, கபோதியான தனது மேரி மகளையும் தனது சிறைக்கூடத்தில் ஒரு சிறிய கைத் தொழிலைச் செய்து அதின் மூலமாக அவர்களை பாடுபட்டுக் காப்பாற்றினார். தான் பிரசங்கித்த சத்தியத்துக்கு எதிராக ஒரு வார்த்தை மட்டும் அவர் சொன்னால் உடனே விடுதலை என்ற நிலையிலும் அவர் தேவனுக்கு முன்பாக தன்னை கடைசி வரை உத்தமனாகக் காத்து தன் அருமை ஆண்டவரை கனப்படுத்தினார். அந்த மாபெரும் தேவ பக்தனின் வாழ்க்கை சாயலும் இந்தப் புத்தகத்தில் உண்டு.
இப்படி கடந்த கால பரிசுத்த பக்தர்கள் தங்களையே தியாக பீடத்தில் வைத்து எந்த ஒரு சூழ்நிலையிலும் கடைசி வரை பின் வாங்கிப் போகாமல் தங்கள் அன்பின் நேசரை உலகுக்கு உயர்த்திக் காட்டியிருக்கும் வேளையில் நாம் வாழ்கின்ற இந்த நமது நாட்களில் தேவனுடைய உன்னதமான பரிசுத்த தேவ ஊழியங்கள் கர்த்தரை அறியாத மக்களால் எத்தனையாக அலைக்கழிக்கப்படுவதை கண்ணீரோடு நாம் கவனிக்கின்றோம். எந்த ஒரு அர்ப்பணிப்பு, எந்த ஒரு தியாகம், எந்த ஒரு தேவ அழைப்பு இல்லாமல் இந்த உலகத்தில் கஷ்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கான ஒரு உலகப் பிரகாரமான நல்லதொரு தொழிலாக தேவ ஊழியங்களைக் கண்டு துணிகரமாக அவைகளைத் தங்கள் கரங்களில் எடுத்துப் பயன்படுத்துகின்றனர். இதைக் காண்கின்ற புறமதஸ்தர் நமது தேவ ஊழியங்களைப் பார்த்து கைதட்டி பரிகசிக்கின்றனர். “எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புற ஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறது” (ரோமர் 2 : 24) என்ற தேவ வாக்கு நிறைவேறுகின்றது.
“நல் மீட்பர் இயேசு நாமமே என் காதுக்கின்பமாம், புண்பட்ட நெஞ்சை ஆற்றவே ஊற்றுண்ட தைலமாம்” என்ற மாட்சியான பாடலை இயற்றிய ஜாண் நியூட்டன் என்ற இங்கிலாந்து தேச பரிசுத்தவான் ஒரு தடவை இவ்வாறு கூறினார். “தேவனுடைய ஊழியத்தை உலக ஆதாயத்துக்கான ஒரு தொழிலாக நீ உனது கரத்தில் எடுத்துச் செய்வாயானால் அதைப் போன்ற மகா நாச மோசமான தொழில் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை துரிதமாக நீ கண்டு கொள்ளுவாய்” என்றார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
இந்த “பரிசுத்த பக்த சிரோன்மணிகள்” என்ற புத்தகத்தை வாசிக்கப் போகும் அன்பான தேவப்பிள்ளையே, இந்த புத்தகத்தில் நீ வாசிக்கப் போகின்ற பரிசுத்தவான்கள் எப்படியாக தங்கள் ஆண்டவரை தங்கள் முழு இருதயத்தோடு நேசித்தார்கள், எப்படியாக தங்கள் ஆண்டவரைப் போல அவர்கள் காணாத ஆடுகளைத் தேடி அலைந்து அவைகளை தங்கள் மீட்பரின் தொழுவத்துக்குள் கண்ணீருடன் கொண்டு வந்து சேர்த்தார்கள், அந்த பரலோக பணியினிமித்தமாக எப்படியாக அவர்கள் தங்களை முழுமையாக தகன பீடத்தில் தகனித்துக் கொண்டார்கள் என்பதை எல்லாம் நீ தாழ்மையான, நொறுங்குண்ட இருதயத்தோடு ஜெப நிலையில் வாசித்து தியானம் செய். அவர்களைப் போல ஆத்தும பாரத்தோடும், கண்ணீரோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய். அவர்களைப்போல போராடி ஜெபிக்கும் ஜெப மாந்தனாயிரு. அதற்கான பிரதி பலனை நம் அன்பின் பரம தகப்பன்தாமே இம்மையிலும், நாம் நாடிச் செல்லும் மறுமையிலும் நமக்குத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
“என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவனல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” (எண்ணாகமம் 12 : 7) என்று கர்த்தரால் சாட்சி பெற்ற மோசேயைப் போலவும், “அவன் புற ஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்போஸ்தர் 9 : 15) என்று கர்த்தரால் கனம் பெற்ற பவுலைப் போலவும் தேவன் நம்மைக் குறித்து சாட்சி பகரத்தக்கதாக நாம் நம் ஆண்டவருக்காக எரிந்து பிரகாசித்து அநேகரை நீதிக்குட்படுத்தும் (தானியேல் 12 : 3) பாக்கிய சிலாக்கியங்களை தேவ பெலத்தால் பெற்றுக் கொள்ளுவோமாக. ஆமென்.
உங்களுக்காக ஜெபிக்கும்,
உங்கள் அன்புள்ள சகோதரன்
என். சாமுவேல்.
N. Samuel,
Editor “Deva Ekkalam”
Post Box No.6, KOTAGIRI 643 217 Nilgiris
E.mail:- nsamuel236@gmail.com
Website:- devaekkalam.com