தனித்தாள் தேவ ஊழியர் (Colporteur)
“அங்கிள் ஜாண் வாசர்”
(1813 – 1878)
கிறிஸ்தவ மார்க்கத்தின் ஆணி வேர் என்பது ஒரு மனிதன் ஆண்டவராகிய இயேசு இரட்சகருடன் மிகவும் பின்னிப் பிணைந்த செடியும், கொடியுமான ஆழமான பரலோக உறவு கொண்டிருப்பதேயாகும். இது ஒன்றேதான் மெய் கிறிஸ்தவ மார்க்கமாகும். இந்த உண்மை மார்க்கத்தின் அச்ச அடையாளங்களுக்குக் குறைவான யாதொன்றையும் அங்கிள் ஜாண் வாசர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. முதன்மையானதும், பிரதானமானதுமான அவருடைய பரிசுத்த குணாதிசயம் என்னவெனில் “கிறிஸ்து பெருமானின் மேல் அவர் மகா வலுவான காதல் கொண்டிருந்தார்” என்பதுதான். அழியும் ஆத்துமாக்களை நாடித் தேடி ஓடி அவர்களின் இரட்சிப்புக்காக அலைந்து திரிந்த அவர் “தனித்தாள் தேவ ஊழியத்தின் அப்போஸ்தலன்” என்று அழைக்கப்படுகின்றார். தன் அருமை இரட்சகரை முழு மனதார நேசிப்பதே அவரது வாழ்க்கையின் நிலைக்கால் சட்டமாக இருந்தது. எந்தப் பாவமாக இருந்தாலும் சரியே பாவத்துக்கு எதிராக போர்க் கொடி உயர்த்துவதே அவரது முழு மனதாரான வாஞ்சையாயிருந்தது.
ஒரு நாள் ஒரு பெரிய தேவாலயத்தின் ஆராதனையில் கலந்து கொண்டு விட்டு மிகவும் ஏமாற்றத்துடன் அங்கிள் ஜாண் வாசர் வெளியே வந்தார். அந்த நாளில் ஒரு பிரபலமான தேவ ஊழியர் கர்த்தருடைய செய்தியை அந்த ஆலயத்தில் கொடுத்திருந்தார். மிகவும் துக்கம் தோய்ந்த மன வேதனையான குரலில் “ஐயோ, அந்த மனிதர் தனது பிரசங்கம் முழுமையிலும் ஒரே ஒரு தடவை கூட அருமை இரட்சகர் இயேசுவின் நல்ல நாமத்தை உச்சரிக்கவில்லையே” என்று அங்கலாய்ப்புடன் கூறினார். குடும்ப பாசம் என்ற ஆழமான உறவைக்காட்டிலும், பெந்து மித்திரர், உற்றார் உறவினர் என்பவர்களின் நேச பாசங்களைக் காட்டிலும், பிறந்த நாட்டின்மேல் கொண்ட தாய் நாட்டுப் பற்றைப் பார்க்கிலும், தனது சொந்த ஜீவன் மேல் கொண்ட ஆழமான அன்பைக்காட்டிலும் தன்னை முதலாவது நேசித்து தனக்காகத் தனது சொந்த ஜீவனையே கொடுத்த தன் அருமை மீட்பர் இயேசுவின் மேலேயே அவர் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். அநேக கிறிஸ்தவர்கள் மோட்ச மகிமையைக் குறித்து அதிகமாகப் பேசுவதைப் போன்று மோட்சத்தைக் குறித்து அவர் அதிகமாக பேசாமல், ஆண்டவரோடு எப்பொழுதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதையும், இயேசுவைப்போல தேவ சாயலாக மாறி அவரை உலகுக்கு காண்பிப்பதைக் குறித்துமே பேசினார்.
தனித்தாள் தேவ ஊழியத்தில் அவர் சிறந்து விளங்கினார். அமெரிக்க சுவிசேஷக் கைப்பிரதி கழகத்தின் கால் நடையாக வீடு வீடாக அலைந்து திரிந்து கிறிஸ்தவ புத்தகங்களை கர்த்தருடைய நாம மகிமைக்காக விற்கும் ஒரு தாழ்மையுள்ள ஊழியக்காரனாக அவர் காணப்பட்டார். அவர் தன்னை அடிக்கடி “நல்ல மேய்ப்பனின் நாய்” என்று அழைத்துக் கொள்ளுவார். காணாமற் போன ஆடுகளாகிய கிறிஸ்துவின் ஆடுகளை நல்ல மேய்ப்பனின் தொழுவத்திற்குள் கொண்டு சேர்க்கும் நாய் என்று அவர் தன்னைக் கூறிக் கொண்டாலும் அவருடைய சிநேகிதர்கள் அவரை “அங்கிள் ஜாண் வாசர்” என்றே அழைத்தனர்.
கடைசி வரை அவர் எந்த ஒரு பட்டத்தையும் விரும்பவில்லை. தானாக அவரைத் தேடி வந்த குருத்துவ பட்டம் போன்றவைகளை எல்லாம் அவர் கண்ணேறிட்டுக்கூட பார்க்கவில்லை. அவர் எந்த ஒரு பிரசங்க பீடங்களிலிருந்தும் நின்று பேசியதில்லை. ஆனால், ஆண்டவருக்காக அநேகரை ஆதாயம் பண்ணினார். அவர் ஒரு தேவ மனிதர். கிறிஸ்து இரட்சகர் மேல் கொண்ட அவரது அளவற்ற அன்பானது, நாளடைவில் எப்பொழுதும் தொடர்ச்சியாக ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான ஜெப வாழ்க்கைக்கு நேராக அவரை வழிநடத்திச் சென்றது. அவரோடு நெருங்கிப் பழகிய அவரது நண்பர்களில் ஒருவர் சொல்லும்போது “அங்கிள் ஜாண் வாசர், இரவும் பகலும் ஜெபித்துக் கொண்டே இருந்தார். நான் அவரோடு பல தடவைகளிலும் அவருடன் ஒரே அறையில் இரவுக்குஇரவு இராத்தங்கும் சிலாக்கியம் பெற்றிருக்கின்றேன். நான் நித்திரைக்குப் போகும்போது அவர் ஜெபித்துக் கொண்டிருப்பதையும், நான் நித்திரையினின்றி கண் விழித்து எழும்பும் ஒவ்வொரு சமயத்திலும் இன்னும் அவர் ஜெப நிலையில் தனது இருதயத்தை தேவனுக்கு முன்பாக ஊன்றிக் கொண்டிருப்பதையும் நான் ஆச்சரியத்துடன் கண்டிருக்கின்றேன்” என்று சொல்லுகின்றார்.
அங்கிள் ஜாண் வாசர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 18 ஆம் ஜனாதிபதி யுலிசிஸ் கிராண்ட் அவர்களைச் சந்தித்து அவரோடு கை குலுக்கும் ஒரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்த போது அவர் தனது கரத்தை எடுப்பதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் அதிபதியாகிய அவருக்கு செலுத்த வேண்டிய கனத்தை செலுத்திவிட்டு இன்னும் தனது கரம் ஜனாதிபதியை பற்றிக் கொண்டிருக்கும் வேளையின் போது தனது ஆத்தும மணவாளனாம் கர்த்தராகிய இயேசு இரட்சகரைப் பற்றி அவருக்கு கூறி ஜனாதிபதி அவர்களுக்கு மறுபடியும் பிறந்த மறுபிறப்பின் நிச்சயம் உண்டுமா? என்றும் தைரியமாகக் கேட்டுவிட்டார்.
அங்கிள் ஜாண் வாசரின் பிறப்பும், இளமையும்
அங்கிள் ஜாண் வாசர் யார் என்பது ஆயிரக்கணக்கானோருக்கு நன்கு தெரிவதுடன் அந்தப் பெயரை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அத்தனை எளிதாக மறக்கவும் இயலாது. எனினும், அவர் எப்பொழுது வந்தார்? அவருடைய பரிசுத்த பக்தி வாழ்க்கைக்கு வழி நடத்திய சம்பவங்கள் என்ன என்பதை எல்லாம் நாம் துருவி ஆராய்ந்தால்தான் தெரிய வரும்.
வாசருடைய குடும்பம் ஃபிரஞ்சு வம்சாவாளியினர் ஆவார்கள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அவர்களில் கொஞ்சம் பேர்கள் இங்கிலீஸ் கால்வாயைக் கடந்து இங்கிலாந்திலுள்ள செழிப்பான நார்ஃபோக் என்ற ஜில்லாவில் குடியேறினார்கள். விவசாயத் தொழிலுக்குப் பேர்போன அந்த இடத்தில் கம்பளி நெசவுத் தொழிலிலும், விவசாயத்திலும் மூன்று தiலை முறையாக வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் காலப்போக்கில் மரணமடைந்து விட்டார்கள். அங்கிள் ஜாண் வாசரின் தகப்பனார் தாமஸ் வாசர் இந்த நார்ஃபோக் என்ற இடத்தில் பிறந்து நாற்பது ஆண்டு காலம் அங்கு வாழ்ந்தார்.
தாமஸ் வாசரும் அவருடைய சகோதரர்களும் இங்கிலாந்து தேச திருச்சபையிலிருந்து பிரிந்து பாப்திஸ்து சபையில் இணைந்திருந்தபடியால் அவர்கள் வாழ்ந்த இடத்திலுள்ள இங்கிலாந்து தேச திருச்சபையினரால் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய துன்புறுத்துதலுக்குப் பயந்து அநேகர் அங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பயணப்பட்டார்கள். அந்தப் பயணக்கூட்டத்தாருடன் தாமஸ் வாசரும், அவருடைய சகோதரர்களும் புறப்பட்டார்கள். தங்களுக்கென்று பெயர், புகழை சம்பாதித்து இந்த உலக வாழ்வில் ஜெயக் கொடி நாட்ட வேண்டும் என்ற ஆசை ஆவலில் அவர்கள் பிரயாணப்படாமல் தங்கள் ஆண்டவரை சுயாதீனமாக ஆராதிக்கும் ஒரு இடத்தை நாடி கிளம்பினார்கள்.
1796 ஆம் ஆண்டு ஒரு அக்டோபர் மாதத்தில் அவர்களை ஏற்றி வந்த கப்பல் “கிரிட்டேரியன்” நியூயார்க் வளை குடாவைக் கடந்து அமெரிக்காவிலுள்ள பவ்கீப்சி என்ற இடத்திற்கு வந்தது. அங்குதான் அவர்கள் குடியேறினார்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் 400 அல்லது 500 மக்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர். கொஞ்ச காலத்திற்கு தாமஸ் வாசரும் அவருடைய சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து அங்கு விவசாயத் தொழிலைச் செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் தாமஸ் வாசர் தனது பூர்வீக இடத்திற்குச் சென்று விவசாயத் தொழிலுக்குத் தேவையான விதைகளையும், விவசாயக் கருவிகளையும் கொண்டு வந்தார். அநேக ஆண்டு காலத்திற்குப் பின்னர் தாமஸ் வாசர் தாங்கள் வாழ்ந்த பட்டணத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு மைல்களுக்கு அப்பால் புகழ்பெற்ற செங்கல் சூழை ஒன்றை தொடங்கினார்.
இங்கிருந்தபோது, தாமஸ் வாசர் லாங் ஐலண்ட் என்ற இடத்திலுள்ள ஜோன்னா எல்லிசன் என்ற அம்மையாரை மணம் புரிந்தார். அந்த அம்மையார் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள். அந்த அம்மையாரின் தகப்பனார் அவர்கள் வாழ்ந்த இடத்தில் புகழ்பெற்ற ஒரு கல்விச்சாலையை தோற்றுவித்திருந்தார். தாமஸ் வாசரைவிட அவரது மனைவியார் 20 வருடங்கள் இளமையானவர்கள். எந்த ஒரு தன்னலமில்லாதவர்களும் மற்றவர்களுடைய பாரங்களை சுமக்கும் ஒரு பரிசுத்த தாயாரும் ஆவர்கள். தனது 75 ஆம் வயதில் அவர்கள் எழுதின கடிதங்கள் ஆங்கிலத்தில் அவர்கள் கொண்டிருந்த பாண்டித்தியத்தை வெளிப்படுத்துவதுடன் அந்தக் கடிதங்கள் அவர்களின் இளகிய மனதையும், குழந்தை உள்ளத்தையும் தெரிவிப்பதாக இருந்தன.
தாமஸ் வாசர் பிரகாசமான முகத்தையும், மிகவும் சுறு சுறுப்பான உடற்கட்டையும், கடல் கடந்த தனது வாழ்வின் இனிமையான அனுபவங்கள் நிறைந்த நெஞ்சத்தையும் உடையவராக இருந்தார். அவருடைய இருதயம் தேவனுடைய வசனங்களால் நிரம்பி வழிந்தன. அதின் காரணமாக அந்த ஜீவ வார்த்தைகள் அவருடைய உதடுகளிலிருந்து தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளி தேன் துளிகளாக அவ்வப்போது சொட்டிட்டு விழுந்து கொண்டிருந்தன. தேன் ஈயைப் போன்று எப்பொழுதும் சுறுசுறுப்புடன் மக்களுக்கு நன்மை செய்வதில் அவர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். தனது பிள்ளைகள், அல்லது பேரக் குழந்தைகள் தன்னுடைய முழங்கால்களைச் சுற்றியிருக்கும் போது அந்த சின்னஞ் சிறுவர்களுக்கு ஆழ்கடல்களுக்கு அப்பாலுள்ள தன்னுடைய பூர்வ கால வீட்டைக் குறித்து கதைகளையும், யாவுக்கும் மேலாக பரிசுத்தமும், அலங்காரமும், மாட்சிமையுமான நித்திய மோட்ச வீட்டைக் குறித்தும் அவர்களுக்குச் சொல்லுவதில் அவர் மிகவும் பரவசமுடையவராகக் காணப்பட்டார். அவர் தனது 19 ஆம் வயதிலிருந்து 93 ஆம் வயது வரைக்கும் ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இறுதியாக, அவர் தனது கரங்களை மேலே உயர்த்தி பரிசுத்த அப்போஸ்தலர் ஒருவர் கூறின இனிமையான ஆசீர்வாத வார்த்தைகளை தேவ ஜனத்திற்கு கூறிக் கொண்டிருந்த வேளையில்தானே திடீரென தனது நித்திய விண் வீட்டிற்கு கடந்து சென்றுவிட்டார்.
இப்படிப்பட்ட பக்த சிரோன்மணியான பெற்றோருக்கு அங்கிள் ஜாண் வாசர் நான்காம் புதல்வனாக 1813 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். அவர் பிறந்த எளிமையான வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். தனது தாயாரின் ஒரே ஒரு தம்பி டாக்டர் ஜாண் எல்லிசனுடைய பெயரை அவருக்கு சூட்டினார்கள். அங்கிள் ஜாண் வாசருடைய இளமைக் காலத்தைக் குறித்த விசேஷ நிகழ்வுகள் எதுவும் நமக்குத் தெரியவில்லை. இருப்பினும், அவர் நல்ல தெளிந்த புத்தியுடையோனும், துடிதுடிப்புள்ளவனும், பாசத்துடன் யாவரிடமும் பழகுபவனாகவும், அவரிடம் கொடுக்கப்படும் காரியங்களை முழு மூச்சுடன் நின்று முடிப்போனும், அதே சமயம் மிகவும் துரிதமாக கோபத்துக்கு இடம் கொடுப்பவனாகவும் இருந்தார்.
ஜாண் வாசர் மூன்று குளிர் காலங்கள் மட்டும் ஒரு சாதாரண பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பாக்கியம் பெற்றிருந்தார். அதற்கு மேல் அவர் கல்வி கற்கவில்லை. பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை விட அவருடைய தாய் தந்தையர் நல்ல கல்வி அறிவு உடையவர்களாக இருந்தபடியால் மகன் ஜாண் வாசருக்கு அவர்கள் வீட்டிலேயே தங்களால் முடிந்த நல்லதோர் கல்வியை புகட்டினார்கள். ஜாண் வாசர் தனக்குக் கொடுக்கப்பட்ட கல்வியை சிறப்பாகக் கற்றுக் கொண்டார் என்று நாம் சொல்லுவதற்கில்லை. நல்ல தீர்க்கமான ஞானம் அவருக்கு இருந்தபோதினும் பாடப் புத்தகங்களின் பால் அவர் தனது கவனத்தை செலுத்த தயங்கினார். ஜாண் வாசர் கல்வி கற்ற மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விந்தையான சின்னஞ்சிறு பள்ளியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அவர் தனது 12 ஆம் வயதில் செங்கற் சூளைக்கு வேலைக்குச் சென்றார். அவர் ஒடிசலான உடலைக் கொண்டிருந்தாலும் நல்ல திடகார்த்தினனாகவும், தைரிய நெஞ்சினனாகவும் இருந்தார். அவர் சிறுவனாக இருந்தபோதினும் ஒரு முழுமையான ஆளுக்குரிய பெலசாலியாகக் காணப்பட்டார். அவர் 20 வயதினனாக இருக்கும்போது அவர் வாழ்வில் சந்தித்த எதிர்பாராத சம்பவம் ஒன்று அவரை மீதமுள்ள வாழ்நாட்காலம் முழுமைக்கும் கொஞ்சம் குறைய ஒரு ஊனமுற்றவராக அவரை விட்டுச் சென்றது. அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மரக்கட்டைகளால் செய்யப்பட்டிருந்த சிறிய பாலத்தின் கட்டைகளின் இடைவெளியில் அவரது கால் ஒன்று எதிர்பாராதவிதமாக நன்கு சிக்கி அது உடைந்து சிதைந்து போயிற்று. அவர் தனது கொடிய காயத்துடன் அநேக வாரங்கள் வீட்டில் கட்டில் கிடையாகக் கிடந்தார். அவருக்கு நேர்ந்த விபத்தின் காரணமாக அவர் தனது படுக்கையிலேயே தனது பாவங்களை தேவனுக்கு அறிக்கையிட்டு இரட்சிப்பின் பாத்திரமாவார் என்ற அவரின் பெற்றோருடைய மிகுந்த ஆசை ஆவலான எதிர்பார்ப்பு முற்றும் பொய்த்துப் போய்விட்டது. காயத்தின் இரணங்கள் குணமடைந்து அவர் தனது படுக்கையிலிருந்து எழுந்தாரே தவிர அவருடைய பழைய பாவ மனுஷன் ஜெய கெம்பீரத்துடன் அப்படியேதான் இருந்தான். பழைய பாவ வாழ்க்கை, தூஷணம், ஜெபமின்மை எல்லாம் துரிதமாகவே அவருடைய வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்டது. தேவனை அவர் மறந்துவிட்டார். முடிவில்லாத நித்தியம் என்பது கடந்து மறையும் கனவைப்போல அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டது.
காலங்கள் விரைந்து ஓடி மறைந்தது. இப்பொழுது அவர் 25 வயதினனாகி மேரி லீ என்ற பெண்ணை மணந்து கொண்டார். ஜாண் வாசரைப் போல மேரி லீ அம்மையாரின் தாய் தந்தையரும் பக்தியுள்ள பெற்றோராக இருந்தார்கள். ஆனால், அந்த அம்மையாரும் ஜாண் வாசரைப் போல இரட்சிப்பின் சந்தோசத்தை இன்னும் பெறாதவர்களாகவே இருந்தார்கள். ஜாண் வாசரும், மேரி லீ அம்மையாரும் பவ்கீப்சி என்ற இடத்தில் எந்த ஒரு குறைவும் இல்லாமல் மிகுந்த சந்தோசத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஜாண் வாசர் அங்குள்ள மாவு ஆலையிலும், சாராயம் காய்ச்சும் தொழிற்கூடத்திலும் வேலை செய்து ஏராளமாக சம்பாதித்து வந்தார்.
அங்கிள் ஜாண் வாசரின் மனந்திரும்புதல்
சில குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் கன்மலையில் உளியிட்டு வெட்டின எழுத்துக்களைப் போன்று என்றும் நம் நினைவில் இடம் பெற்று விடுகின்றன. எத்தனை காலம் கடந்து சென்றாலும் அந்த நிகழ்வுகள் மங்காமல், மறையாமல் அப்படியே நம்மில் நிலைத்து நின்று விடுகின்றது. அங்கிள் ஜாண் வாசரின் மனந்திரும்புதலைக் குறித்த சம்பவமும் அதைப் போன்றதுதான். அப்பொழுது அவர் தனது பெற்றோரைக் கண்டு தான் எத்தனை ஆச்சரியமும், அற்புதமுமான அருமை இரட்சா பெருமானைத் தனது வாழ்வில் தனது சொந்த இரட்சகராகக் கண்டு கொண்டு விட்டேன் என்ற ஆனந்த களிகூருதலின் செய்தியை சொல்லும்படியாக அவர் தனது வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வீட்டிற்கு வரும்போது நாங்களும் தாத்தா வீட்டில்தான் இருந்தோம். நாங்கள் மிகவும் சின்னஞ் சிறுவர்களாக இருந்தபடியால் அப்பொழுது அவர் என்ன சொன்னார் என்பதைக் குறித்து அவர் பேசிய ஒரு வரியைக்கூட இந்த நேரத்தில் நாங்கள் நினைவு படுத்தக் கூடாமல் இருந்தபோதினும் அந்த நாளில் நடந்த சம்பவம் திட்டமும் பூரணத் தெளிவுமான ஒரு மாட்சியான காட்சியாக இன்றும் பசுமையாக உள்ளது. அவர் தனது மனந்திரும்புதலின் சரித்திரத்தை சொல்லுகையில் நாங்கள் எல்லாரும் அழுதோம். அந்த பழைய பண்ணை வீட்டில் கூடி வந்திருந்த எல்லாரும் முழங்கால்களில் நின்றனர். அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் ஜெபித்தார்கள். அதைத் தொடர்ந்து ஒரு அமைதியான பரிசுத்த மகிழ்ச்சி அந்த நாள் முழுவதும் அந்த வீட்டில் நிலைத்திருந்தது. அது கெட்ட குமாரன் தனது தகப்பனுடைய வீட்டிற்குத் திரும்பி வந்த ஒரு ஆச்சரிய வரலாறு. வீட்டைவிட்டு ஓடிப்போன ஒருவன் தனது உலகப்பிரகாரமான தந்தையின் வீட்டிற்குத் திரும்பி வந்தால் அந்த வீட்டில் சந்தோசமும், மகிழ்ச்சியின் ஆரவாரமும் தொனிக்கும்போது மனந்திரும்புகின்ற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் ஆனந்த களிகூருதல் எதிரொலிக்காமல் எப்படி இருக்க முடியும்!
அங்கிள் ஜாண் வாசரின் மனந்திரும்புதல் அசாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகும். அப்பொழுது உள்ளூரில் உள்ள ஒரு தேவாலயத்தில் உயிர் மீட்சி கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதிகாலையில் கூட்டங்களும், இரவில் ஆராதனைகளும் இடம் பெற்றிருந்தன. இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்படியாக அங்கிள் ஜாண் வாசர் கேட்டுக் கொள்ளப்பட்டபோது அவர்அதை திட்டமாக மறுத்துவிட்டார். இறுதியாக, அவருடைய குடும்பத்தின் மிகவும் நெருங்கிய இனத்தானான மத்தேயு வாசர் என்பவரின் “ஒரே ஒரு தடவை மட்டும் வந்து கலந்து கொள்ளுங்கள்” என்ற உள்ளம் உருகிய வேண்டுகோளால் அவர் கூட்டத்தில் வந்து கலந்து கொண்டார். ஒரு தடவை கலந்து கொண்ட அவர் அடுத்த தடவையும் வற்புறுத்துதல் இல்லாமல் கூட்டத்தில் பங்கு பெற்றார். இரண்டாம் கூட்டம் முடிவடையும் முன்னரே அவருடைய உள்ளம் பாவப் பாரத்தால் தவித்தது. அதிலிருந்து தனது ஆத்துமாவுக்கு ஒரு இரட்சண்ய மீட்பு உடனே அவசியம் தேவை என்பதை அவர் திட்டமாக உணர்ந்து கதறத் தொடங்கினார். ஒரு வார காலம் சாத்தானுடய அந்தகார சக்திகள் அவர் மனந்திரும்பி ஆண்டவரை அண்டிக் கொள்ளவிடாதபடி கடுமையாக அவரோடு போராடி நிறுத்த சமர் புரிந்து கொண்டிருந்தது. அந்த நாட்களில் அவர் கடும் புயலால் தாக்கப்படுகின்ற ஒரு சிறிய மரம் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுவது போல அலசடிப்பட்டார். பாவமும், பாவத்திற்கான தேவ கோபாக்கினையின் பின் விளைவுகளின் கடூரமும் மிகவும் நிச்சயமாக அவருக்கு காணப்பட்டதால் அந்த நாட்களில் அவர் கூட்டங்களில் கலந்து கொண்டுவிட்டு இரவில் வீடு திரும்பி வரும்போது தனது அயர்ந்த இன்பமான தூக்கத்தில் இருக்கும் தனது மனைவியை தட்டி எழுப்பி “அன்பே, உங்கள் கணவர் நரக பாதாள அக்கினிக் கடலுக்கு நேராகச் சென்று கொண்டிருக்கும்போது உங்களால் எப்படி கவலையின்றி நன்கு நிம்மதியாக தூங்க முடிகின்றது?” என்று அவர் கண்ணீரோடு கேட்பார்.
ஊதாரித்தனமான, தீயொழுக்கமுள்ள, துன்மார்க்கமான ஒரு வாழ்க்கையின் ஏட்டை அங்கிள் ஜாண் வாசர் தன்னகத்தே கொண்டிராத போதினும் அவர் தன்னால் கட்டுப்படுத்த முடியாத எரி கனலான, ஒரு கோப குணத்தைக் கொண்டிருந்தார். அதின் காரணமாக கடும் விளைவுகள் ஏற்படலாயின. அந்தக் கோபம் வெடித்துச் சிதறும்போது அருவருப்பான தூஷண வார்த்தைகள் அவர் வாயிலிருந்து தாராளமாக புறப்பட்டு வரும்.
அங்கிள் ஜாண் வாசரின் இரட்சிப்பின் காரியத்தைக் குறித்து சங்கை எட்கார் வான் கிளீக் என்பவர் கூறுவதை நாம் கவனிப்போம்:-
“லாஃபாய்ட் தெருவிலுள்ள சிறிய தேவாலயத்தில் அப்பொழுது உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. தங்கள் தங்கள் இரட்சிப்பின் காரியத்தில் கவலை கொண்டிருந்த மக்களால் ஆலயம் நிறைந்திருந்தது. நான் ஜாண் வாசர் அமர்ந்திருந்த முன் வரிசை இருக்கையில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அந்த இடம் ஆலயத்தின் வாசல் கதவுக்கு மிகவும் அருகிலேயே இருந்தது. தன் பாவங்களுக்காக அங்கலாய்த்து தவித்த அவரைப் போன்ற ஒரு ஆத்துமாவை நான் காணவே இல்லை.
அந்த நாளுக்கான உயிர் மீட்சி கூட்ட ஒழுங்குகள் அப்பொழுது முடிவுற்றன. அதில் கலந்து கொண்ட சபை மக்கள் பலரும் இரவில் இளைப்பாறுதலுக்காக தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். சிலர் மாத்திரமே ஆலயத்தில் தரித்திருந்த போதினும் அவர்களும் தங்கள் வீடுகளுக்குச் செல்லும் எண்ணத்தில் தான் இருமனமாக இருந்தனர். அப்படி அங்கிருந்த மக்களை எந்த ஒரு நிலையிலும் அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போகாமல் நீண்ட நேரம் ஆலயத்தில் தரித்திருந்து தனது இரட்சிப்புக்காக ஜெபிக்கும்படியாக ஜாண் வாசர் அவர்களை கெஞ்சி மன்றாடினார். பாவ மன்னிப்பின் நிச்சயமும், இரட்சிப்பின் சந்தோசமும், தேவன் அருளும் சமாதானமும் பரத்திலிருந்து அருளப்படும்வரை அங்கிருந்து தான் நகரப் போவதில்லை என்று அவர் திட்டமாகக் கூறினார். எங்களில் 6 பேர்கள் அவருடைய வேண்டுகோளை ஆத்தும பாரத்தோடு ஏற்று அவருடைய பாவப்பாரம் நீங்கும்படியாக தேவனுடைய கிருபைக்காக அவரோடு தரித்திருந்து மன்றாடி ஜெபிக்கலானோம்.
அந்த வேளையில் ஜாண் வாசர் தனது இருதயம் நொறுங்குண்ட நிலையில் தனது கடந்த கால பாவங்களுக்காக தேவனை நோக்கி தனது விண்ணப்பங்களை மிகுந்த வியாகுலத்துடனும் பலத்த சத்தத்துடனும் ஏறெடுக்கத் தொடங்கினார். தனது பாவத் தவறுகளுக்காக அவரைப்போல தனது மன்றாட்டுகளை கண்ணீருடன் தேவனுக்கு நேராக ஏறெடுத்த எந்த ஒரு பாவியையும் நான் என் வாழ்க்கையில் அதுவரைக் கண்டதே இல்லை. அத்தனையாக அவருடைய பாவப்பாரத்தின் புலம்பல்கள் இருந்தன. எங்களுடன் பண்டிதர் பாப்காக் அவர்களும் இருந்தார். அவர் ஜாண் வாசருக்கு கிறிஸ்து பெருமானில் உள்ள மீட்பின் பிரவாகத்தையே சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தார். அதின் பின்னர் நாங்கள் எல்லாரும் ஆலயத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஜாண் வாசர் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். எனினும், இன்னும் அவருடைய இருதயத்தில் போராட்டம் இருப்பது தெரிய வந்தது.
மறு நாள் இரவிலும் அவர் தொடர்ந்து கூட்டத்தில் வந்து கலந்து கொண்டார். என்ன ஆச்சரியம்! இப்பொழுது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சகர் இயேசுவில் பெற்ற உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும் பெற்று அனுபவித்து ஆனந்தத்தால் ஆர்ப்பரிப்பவராகக் காணப்பட்டார். அவருடைய முகம் ஆனந்த பரவசத்தால் நிறைந்திருப்பதை நாங்கள் பிரத்தியட்சமாக அவரில் காண முடிந்தது. அவருடைய ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்தது. அத்துடன் அவர் தனது இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்ட இடமான லாஃபாய்ட் சிறிய தேவாலயமும் மகிமையால் நிறைந்ததாகக் காணப்பட்டது. தேவன் அருளின சமாதானமும், இரட்சகர் இயேசுவின் நிறைந்த ஜோதிப் பிரசன்னமும் தன்னை முழுமையாக ஆட்கொண்டிருப்பதை அவரே அந்த இரவில் எங்களிடம் பரவசம் பொங்கக் கூறினார். ஜாண் வாசர் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொண்ட லாஃபாய்ட் தெருவிலுள்ள சிறிய தேவாலயத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
ஜாண் வாசர் மனந்திரும்புதலின் நிகழ்ச்சிக்குப் பின்னர் கொஞ்ச நாட்களுக்குப்பிறகு நாங்கள் எல்லாரும் பக்கத்து ஊரில் நடைபெற்ற ஒரு உயிர் மீட்சி கூட்டத்தில் கலந்துவிட்டு இராக்காலத்தில் எங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். எங்களுடன் ஜாண் வாசரும் இருந்தார். எங்களில் சிலர் கர்த்தருக்குள் ஆரவாரித்து எங்களுடைய மட்டற்ற மகிழ்ச்சியின் காரணமாக அந்த இரவின் பிந்திய நேரம் உரத்த குரலில் நாங்கள் பாடிக் கெண்டு வந்து கொண்டிருந்தோம். எங்களுடைய பாடலைக் கேட்கும் மக்கள் நிச்சயமாக நாங்கள் பைத்தியம் பிடித்தவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்ளுவார்கள் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கெண்டோம். அதைக் கேட்ட விசுவாசத்தில் அப்பொழுது குழந்தைக்குரிய வளர்ச்சியில் இருந்த அங்கிள் ஜாண் வாசர் “அந்த மக்கள் அப்படியே நினைக்கட்டும். அவர்கள் நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தர் இயேசுவையே பிசாசு பிடித்தவன் என்றுதானே சொன்னார்கள்” என்று துரிதமாக பதில் அளித்தார்.
நாங்கள் அங்கிள் ஜாண் வாசரைப் பார்த்தபோது விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட அவர் ஆயத்தாகிவிட்டார் என்பதை திட்டமாகக் கண்டு கொண்டுவிட்டோம். ஆ, எத்தனை மாட்சியாக அவர் பின் வந்த நாட்களில் கர்த்தருக்காக யுத்தம் செய்தார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்!
அங்கிள் ஜாண் வாசரை தேவன் தமது ஊழியத்திற்கு பயிற்றுவித்தது
ஆயுதங்களும், யுத்த தளவாடங்களும் உலகப்பிரகாரமான மற்றும் ஆவிக்குரிய போராட்டங்களில் மகா முக்கியமானவை களாகும். ஒரு ஆயுதவர்க்கத்தை எவ்வாறாக அரையில் கச்சையாகத் தரித்துக் கொண்டு பட்டயத்தால் எப்படி சுழற்றி வெட்ட வேண்டும் என்ற பயிற்சியை நாம் அவசியம் பெற்றிருக்க வேண்டும். யுத்தங்களின் தேவனானவர் பயிற்சியே இல்லாத எந்த ஒரு அடிமட்ட வீரனையும் எடுத்த எடுப்பில் ஒரு தலைவனாக தேர்வு செய்வதில்லை. மோசே தீர்க்கனை ஓரேப் பர்வதத்திலும், எலிசா தீர்க்கத்தரிசியை வனாந்திரத்திலும், பவுல் அப்போஸ்தலனை அரேபியாவிலும் போதிய பயிற்சி அளித்து அவர்களை அவர்கள் பணிக்கு ஆயத்தப்படுத்தின தேவன் 40 நாட்கள் வனாந்திர வாழ்வின் பயிற்சிக்குப் பின்னர் தமது மானிடவதார இரட்சண்ய ஊழியத்தை துவக்குவதை நாம் காண்கின்றோம். தம்முடைய மாட்சிமையான தேவ ஊழியத்திற்கு தெரிந்து கொண்ட தமது அடியானான அங்கிள் ஜாண் வாசரையும் கர்த்தர் இடைக்கச்சை கட்டி பற்பலவிதமான வழிகளில் அவரை தேவ ஒழுங்கின் பயிற்சிகளுக்குட்படுத்தினார். இந்தப் பயிற்சிகளில் அவரைப் பக்குவப்படுத்த ஆண்டவருக்கு எட்டு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது மிகவும் நீண்டதொரு காலம் என்று நாம் சொல்லுவதற்கில்லை.
தேவாலயத்தின் சமுதாய கூட்டங்களில் அங்கிள் ஜாண் வாசரின் குரல் கேட்கப்பட்ட போதினும் பக்திக்கடுத்த காரியங்களில் குறிப்பாக தேவனுடைய வார்த்தையைக் குறித்த ஞானத்தில் அவர் அடிமட்டத்திற்கும் கீழான அடித்தட்டிலேயே இருந்தார். அவர் எந்த ஒரு ஓய்வு நாள் பள்ளி வகுப்புக்கும் சென்றதில்லை. அத்துடன் அவர் எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு தேவாலயத்திற்கும் ஒழுங்காக சென்றது கிடையாது. அவருக்கிருந்த மிகவும் சொற்பமான துணிக்கை போன்ற சிறிய வேத அறிவை எவ்வளவு துரிதம் துரிதமாக வளர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக வளர்க்க அவர் பிரயாசம் எடுத்துக் கொண்டார். அவர் வேலை செய்த சாராயம் காய்ச்சும் சாராயக்கடையின் சுவர்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் இரண்டு அல்லது மூன்று வேத பகுதிகளை எழுதிப்போட்டு தனது பணியில் இருந்த வண்ணமாகவே அந்த வேத பகுதிகளை அவர் வாசித்து, வாசித்து தியானம் செய்வார். அவைகளை மனப்பாடமும் செய்து கொள்ளுவார்.
அவருக்கு அருகாமையில் உள்ள ஒரு அலமாரியிலோ அல்லது கால் சட்டைப் பையிலோ அவரது சிறிய வேதாகமம் எப்பொழுதும் இருக்கும். சாராயக்கடையில் வேலையில்லாத நேரத்தில் அவரது சிறிய வேதாகமம் அவரது கரங்களில் இருக்கும். மாலை நேரங்களில் எந்த ஒரு ஆலய ஆராதனைகளுக்கும் அவர் செல்ல இயலாமல் இருக்கும் வேளைகளில் மணிக்கணக்கான நேரம் அவர் தன்னுடைய வேதாகம தியானத்தில் சில வேளைகளில் முழங்கால்களில் நின்ற வண்ணமாகவே கர்த்தருடைய வார்த்தைகளைத் தியானிக்கத் தொடங்கி விடுவார். இவ்விதமாக கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வார்த்தைகளில் அவர் நன்கு வளர்ச்சியடைந்து பின் நாட்களில் அவைகளை தேவ ஜனத்தின் மட்டற்ற ஆசீர்வாதத்திற்கு அனுகூலமாக வெளிப்படுத்தினார். அந்த வேத வசன தியானத்தின் காரணமாக தனக்கு எதிராக வந்த வேதப் புரட்டர்களையும், தேவ வசனத்தின் எதிராளிகளையும் தங்கள் கையினால் தங்கள் வாயைப் பொத்திக் கொண்டு நிற்கச் செய்தார். ஆம், எப்படி மலையின்மேல் சோதனைக்காரன் தனக்கு எதிராகத் தொடுத்த அனைத்து கேள்விகளுக்கும் அங்குமிங்கும் நகர முடியாத, தடுத்து நிறுத்த இயலாத பொருத்தமான தேவ வசனங்களால் அவனது வாயை அடைத்த தனது அருமை இரட்சகரைப் போன்று அங்கிள் ஜாண் வாசர் விளங்கினார்.
அங்கிள் ஜாண் வாசர் மனந்திரும்பிய ஆரம்ப கால நாட்களிலிருந்தே அவருடன் 30 நிமிட நேரம் மாத்திரம் செலவிடும் எந்த ஒரு மனிதனும் அவருடைய கிறிஸ்தவ பக்தி வாழ்வின் மார்க்கம் மெய்யானதொன்று என்று கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது கூடாத காரியமாகும். ஜெப கூடுகைகளிலும், எழுப்புதல் ஆராதனைகளிலும் அவர் வல்லமையாக விளங்கினார். அங்கிள் ஜாண் வாசருடன் சுவிசேஷ கீதங்களின் பாட்டு ஆராதனையை நடத்த அவருடன் அரை டஜன் மற்றவர்களும் சேர்ந்து கொண்டால் அவர்களின் பாடல் தொனி அரை மைல் தொலைவு வரை பனி மூட்டம் நிறைந்த இரவு வேளைகளில் தெளிவாகக் கேட்கும். வழியில் செல்லுவோர் அந்தப் பாட்டுகளின் அடிகளைக் கூர்ந்து கவனிக்கும்போது பரலோக கீதங்களையே தாங்கள் கேட்பதாக ஆவியில் பரவசப்பட்டுக் கொண்டு செல்லுவார்கள். ஆனால், அந்தப் பாடல்களைக் கேட்கின்ற உலகத்தான் அவைகளைக் கேட்டு பரியாசம் செய்து கொண்டு ஏளனமாக சிரித்துக் கொண்டு செல்லுவான். ஆனால் அந்தோ, அது மாந்தரின் மனந்திரும்புதலுக்கேற்ற உன்னதமான தேவனுடைய ஆளுகையின் கிருபையின் பொற் காலங்கள் என்பது அவனுடைய கண்களுக்கு மறைவாயிருக்கும்.
தேவனுடைய சேனையின் போர் வீரன் தான் பெற்றுக் கொள்ளும் போர்ப் பயிற்சிகளில் மிகவும் கடுமையான, இரக்கமற்ற, தயையற்ற பயிற்சிகளையும் பெற்றே ஆக வேண்டும். கிறிஸ்தவன் கடந்து செல்ல வேண்டிய பியூலா (ஏசாயா 62 : 4) என்ற ஒளி மயமான வாழ்க்கை நாடு என்று ஒன்று இருந்தால் அழுகையின் பள்ளத்தாக்கையும் (சங் 84 : 6 ) கூட அவன் உருவக் கடந்தேதான் செல்ல வேண்டும். அங்கிள் ஜாண் வாசர் தனது மகிழ்ச்சியான குடும்பம் உடைந்து சிதறுவதை தன் சொந்தக் கண்களால் காண நேரிட்டது. அந்தப் பரிசுத்த குடும்பத்தின் ஒளி விளக்குகள் ஒவ்வொன்றாக அணைவதை மிகுந்த துயரத்தோடு அவர் பார்த்தார். அவரது குடும்பத்தில் மனைவியும் அவரது இரண்டு பையன்களும் இருந்தனர். அவரது இளைய குமாரன் முதலாவதாக வியாதிப்பட்டு 1847 ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தான். அதற்கு அடுத்தபடியாக அவரது மூத்த குமாரன் மிகவும் துடுதுடுப்பான, பிரகாசமான 9 வயது பாலகன் அடுத்து வந்த இலையுதிர் காலத்தில் சில மணிகள் நேரத்திற்கு மட்டுமே நீடித்த சுகயீனத்தின் காரணமாக மரித்துவிட்டான். அந்த அன்பு பாலகன் தனது பாசமுள்ள பெற்றோர்களின் புயங்களில் சாய்ந்தவாறே “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்” என்ற வார்த்தையை பெற்றோர்களின் காதில் முணுமுணுத்தவாறே பரலோகத்திற்கு கடந்து சென்றான்.
தனக்குக் கிடைத்த மரண அடிகளைத் தாங்க இயலாமல் அந்த அன்புத்தாயாரும் மனைவியுமான அவர்கள் சாயத் தொடங்கினார்கள். ஒரு வருட காலமாக தனது அருமைக் கண்மணி பிள்ளைகளின் எதிர்பாராத துரித மரணங்களை நினைத்து தன்னளவில் அங்கலாய்த்து ஏங்கி, ஏங்கி இறுதியில் 1849 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேவனுடைய ஜனங்களுக்குள்ள நித்திய இளைப்பாறுதலுக்குக் கடந்து சென்றார்கள். தனது மனைவி மரித்த அந்த இலையுதிர் கால இரவில் தான் அங்கிள் ஜாண் வாசர் தன்னைச் சந்தித்த அடுக்கடுக்கான துயரங்களின் காரணமாக ஒரு கணம் தூக்கி வீசப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் அரை மணி நேரம் தனது கட்டிலில் படுத்தவாறே இதயம் நொறுங்கிப் போன ஒரு அன்புக் குழந்தையைப் போன்று ஏங்கி, ஏங்கி கதறி அழுதார். அவரது அன்புத் தகப்பனாரின் கண் இமைகளை நீண்ட நித்திய தூக்கத்திற்காக (மரணத்திற்காக) மூடி வைத்து வழி அனுப்பி வைத்துவிட்டு 4 வாரங்களுக்குள்ளாக அவரது அருமை மனைவியும் தேவ சமூகத்திற்கு கடந்து சென்று விட்டார்கள்.
பூலோகத்தின் பாசப்பிணைப்புகள் எல்லாம் ஷணப் பொழுதில் உடைந்து நொறுங்குண்டு போகும். ஆனால் விசுவாசமானது துரிதமாக மீண்டும் எழும்பி தன் கர்த்தாவில் களிகூர்ந்து ஆரவாரிக்கும். கழுகானது மிகவும் அமைதியான, நிர்மலமான ஆகாயத்தில் அல்ல, புயற்காற்று சீறி வீசும் கொந்தளிப்பான வான வீதியில்தான் மிக உச்சிக்கு பறந்து செல்லும். அதைப்போன்றே ஒரு விசுவாசியும் வாழ்வின் இருண்ட மணி நேரங்களில், வாழ்வில் புயற் காற்று கொடுமையாக தாக்கி மோதும் வேளைகளில் பரலோகத்திற்கு நேராக செட்டைகளை அடித்து எழும்புகின்றான். கப்பலின் திசைகாட்டி கருவியின் முள் சடுதியாக கப்பலைத் தாக்கிய புயலின் காரணமாக சற்று நேரம் பரபரப்புடன் அங்குமிங்கும் சுழன்று அசைந்தாடி மீண்டும் சற்று நேரத்திற்குள்ளாக தனது ஆரம்ப நிலைக்கு அருமையாக வந்து நின்று சரியான பாதையைக் காட்டிக்கொண்டு நிற்பதைப் போன்று அங்கிள் ஜாண் வாசரும் வாழ்வின் கோரப் புயலால் ஒரு கணம் சின்னா பின்னமாக அலைக்கழிக்கப்பட்ட போதினும் அடுத்த கணம் தன்னைப் போன்று பாடுகள் கண்ணீரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தனது வாழ்வின் சொந்த அனுபவத்திலிருந்து ஆறுதல் கூறி அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை அரவணைக்கும் உன்னத நிலைக்கு உயர்ந்து நின்றார். தனக்கு முன்பாக கண்ணீர் வடியும் கண்களோடு காணப்பட்ட ஏழை ஆத்துமாக்களுக்கு “நானும் உங்களைப்போன்று இதே கண்ணீரின் பள்ளத்தாக்கின் வழியாகத்தான் கடந்து சென்றபடியால் உங்களுடைய ஆத்துமாவின் கசப்பு எனக்கு நன்றாகத் தெரிவதுடன், கசப்பைத் தொடர்ந்து வரவிருக்கும் ஆசீர்வாதப் பிரவாகத்தையும் நான் அறிந்தவன்” என்று கூறக்கூடிய நிலையில் காணப்பட்டார்.
அங்கிள் ஜாண் வாசரின் நீண்ட கால நண்பரும், அவர் ஆராதித்த ஆலயத்தின் குருவானவருமான ஹையற் சிமித் என்பவர் அங்கிள் ஜாண் வாசரைக் குறித்துச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியுங்கள்:-
“நான் அங்கிள் ஜாண் வாசரின் சபைக்கு குருவானவராகப் பொறுப்பெடுத்த ஆரம்ப கால நாட்களில் சபையிலுள்ள வீடுகளைச் சந்திப்பது எனது வழக்கமாக இருந்தது. ஜாண் வாசர் எங்கே இருப்பார் என்று கேட்டறிந்து இறுதியாக அவர் வேலை செய்து கொண்டிருந்த சாராயம் காய்ச்சும் தொழிற்கூடத்திற்கு நான் சென்றேன். நான் அவருக்குத் தெரியாவண்ணம் மறைவாக தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். அப்பொழுது அவர் நெருப்பு உக்கிரமமாக எரிந்து கொண்டிருந்த ஒரு பெரிய சாராய கொப்பரைக்கு முன்னால் நின்று கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை மிகுந்த ஆசை ஆவலோடு வாசித்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவர் எந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நான் அறியும்படியாக எந்த ஒரு ஓசை, ஒலி எழுப்பாமல் மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து அவருக்கு அருகில் சென்று அவருடைய தோளுக்குப் பின்னாக அருகில் நின்று கொண்டு அந்தப் புத்தகத்தை நான் கவனித்தபோது பரிசுத்தவான் ஜாண் ஃபாக்ஸ் John Foxe என்பவர் எழுதிய
“இரத்த சாட்சிகளின் வரலாற்றுப் புத்தகத்தை” (Book of Martyrs) அவர் வாசித்துக் கொண்டிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கண்டு கொண்டேன்.
நான் சாராயத் தொழிற்கூடத்திலிருந்து வெளியே வரும் சமயம் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் “நீங்கள் அந்த மனிதரை சந்தித்தீர்களா?” என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு “ஆம்” என்று பதிலளித்தேன். “நல்லது” என்று கூறிக்கொண்டே அவர் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தார். “இந்த சாராயத் தொழிற்சாலையில் நீங்கள் அந்த மனிதரை சந்தித்த அந்த இடமானது இந்த பவ்கீப்சி ஊரிலுள்ள எந்த ஒரு தேவாலயத்தைக் காட்டிலும் மிகவும் பரிசுத்தமான இடம். அங்கேதான் ஜாண் வாசர் எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டே இருப்பார்” என்று கூறினார்.
அங்கிள் ஜாண் வாசரின் மனைவி அப்பொழுது மரணத்தின் விழிம்பிலிருந்தார்கள். அவர்களுடைய வியாதி கொடிய ஷயரோகமாகும். வியாதி தன்னை குரல்வளையை நெரித்து மூச்சுத் திணறப்பண்ணி மரணப்படையப் பண்ணும் என்று அவர்கள் பயந்ததினால் அவர்கள் ஒரு நாள் என்னைப் பார்த்து கஷ்டமின்றி தான் மரணம் அடைய ஜெபிக்கும்படியாக என்னை அன்பாகக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் படும் பாட்டைக் கண்டு மனதுருகிய நான் பரிதாபத்தின் காரணமாக அவசர நிலையில் அப்படியே செய்வதாக நான் அவர்களுக்கு வாக்களித்துவிட்டேன். அதின் பின்னர் பக்கத்து அறையிலிருந்த அங்கிள் ஜாண் வாசரிடம் போய் “நான் ஒரு கடினமான வாக்குறுதியை ஒருவருக்கு கொடுத்துவிட்டேன்” என்று சொன்னேன். “எதற்காக?” என்று அவர் என்னிடம் கேட்டார். “என்னிடத்தில் விசுவாசமில்லாதபடியால் அதற்கான தேவ வாக்குத்தத்தம் ஒன்றும் இல்லை” என்று எண்ணிக்கொண்டு அப்படிச் சொல்லிவிட்டேன்” என்றேன் நான்.
அதற்கு அவர் பிரதியுத்தரமாக “ஒரு ஐசுவரியவான் தான் அதிகமாக நேசிக்கின்ற தனது குமாரனுக்கு அவனது உண்மையான தேவை அது என்று அவன் கருதினால் அவன் கேட்கின்ற 100 டாலர்களை கொடுப்பது எத்தனை நிச்சயமான காரியம். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் மாறாதவைகளாக இருக்கின்றன. தனது மெய் தேவ பக்தருக்கு அன்பின் ஆண்டவர் அவர்களுடைய தேவைகளை ஒருக்காலும் மறுப்பதில்லை” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் எனது அற்ப விசுவாசத்தை மிகவும் பலப்படுத்துவதாக இருந்தது. நாங்கள் இருவரும் ஜெபத்திற்காக முழங்காலூன்றினோம். தேவன் எங்கள் ஜெபத்தை அங்கீகரித்தார். ஆம், திருமதி வாசர் அம்மையார் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.
அங்கிள் ஜாண் வாசரின் மனைவி மரணத்திற்கேதுவான சுகயீனமாக இருந்த நாட்களில் நான் அவர்களை அடிக்கடி போய்ச் சந்தித்து வந்தேன். நான் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் ருசியுள்ள தின்பண்டம் எதையாகிலும் நான் அவர்களுக்குக் கொண்டு செல்லுவேன். அவர்கள் மரணமடைந்த நாள் காலையிலும் அவர்கள் எற்கெனவே மரித்துவிட்டார்கள் என்பதை நான் அறியாமல் ஒரு சிறிய ஜாடியில் அவர்களுக்கு விருப்பமானதொரு ருசியுள்ள ஒரு பதார்த்தத்தை என் கரத்தில் எடுத்துக் கொண்டு சென்றேன். வீட்டு வாசலில் ஜாண் வாசர் நின்று கொண்டிருந்தார். நான் எனது கரத்தில் கொண்டு சென்றதை வாங்கிக் கொள்ளும்படியாகவும், நான் துரிதமாக வீடு திரும்ப வேண்டும் என்றும் நான் அவரைக் கேட்டுக் கொண்டேன். உடனே அவர் தனது கரங்களை ஆனந்தத்தால் பலமாகத் தட்டியவராக “ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தரால் என் மனைவி இப்பொழுது மோட்சத்தில் இருக்கின்றார்கள். இனி அவர்களுக்கு ஒன்றுமே தேவையில்லை” என்று சொன்னார்.
அவருடைய வாழ்க்கைத் துணைவியார் மரித்து ஜீவனற்ற கட்டையாக இருளான வீட்டில் கிடக்கும் போது அவரால் எப்படி ஆனந்தமாகத் தன் கரங்களைத் தட்டிப்பேச முடிந்தது என்பதை அப்பொழுது என்னால் புரிந்து கொள்ள இயலாத போதினும் இப்பொழுது அதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. மரணத்தின் மூலமாக தனது மனைவி அடைந்து கொண்ட ஆதாயமானது தனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டது என்ற துயரமான சுயநல எண்ணம் எதுவுமில்லாமல் சரீரப் பாடுகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் நித்தியமான விடுதலையைப் பெற்று தேவனுடைய மகிமைக்குள் தன்னுடைய மனைவி பிரவேசித்து விட்டார்கள் என்ற ஆனந்தப் பரவச நினைவு அவரை அவ்விதமாகக் கை தட்டி ஆரவாரிக்கச் செய்தது.
தனித்தாள் தேவ ஊழியர் அங்கிள் ஜாண் வாசர்
சொந்த குடும்ப பந்தபாசங்களும், பொறுப்புகளும் மக்களை அவர்கள் இருக்கும் இடங்களில் அங்குமிங்கும் நகர முடியாத வண்ணம் அப்படியே பிடித்து வைத்துக் கொள்ளுவதை நாம் காணலாம். நமது அங்கிள் ஜாண் வாசரும் அதற்கு விதி விலக்கானவர் அல்ல. “வாசர் & கம்பெனி” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த மாவு மில்லிலும், சாராயத் தொழிற்கூடத்திலும் ஜாண் வாசர் பல ஆண்டு காலம் வேலை செய்து வந்திருந்தபடியால் பணத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அந்த வேலைகளையும், அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களான தனது ஒன்றுவிட்ட அன்பும், பட்சமும் உள்ள சகோதரர்களையும் திடீரென விட்டுப் பிரிய அவரால் இயலாததாக இருந்தது. எனினும், தனது இரட்சிப்பின் மூலமாகப் பெற்றுக் கொண்ட நீத்திய ஜீவ வாழ்வுடன் ஒப்பிடும்போது தனது உலக வேலை நிரந்தரம் இல்லை என்பதையும், தான் தனது அன்பின் ஆண்டவருடைய மகிமைக்காக அந்த வேலையை விட வேண்டியதின் அவசியத்தையும் அவர் உணர்ந்தார். அதைத் தொடர்ந்து தனது 12 வருட கால உலக வேலையை முதன் முறையாக விட்டுவிட்டு வேலை இல்லாதவனாக இருந்தார். தனது வாசர் கம்பெனியின் அவரது சகோதரர்கள் எவ்வளவோ அவரை நயம் பண்ணின போதினும், ஆதாயத்தில் அவருக்கு ஒரு பெரிய பங்கைக் கொடுக்க மகிழ்ச்சியோடு அவர்கள் முன்வந்தபோதினும் அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்தச் சமயத்தில் வாஷிங்டனில் தோன்றிய எழுப்புதல் அமெரிக்காவின் பற்பல பகுதிகளிலும் பரவிக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து “அமெரிக்க கிறிஸ்தவ கைப்பிரதி கழகம்” அந்த நாட்களில் தனது தனித்தாள் சுவிசேஷ ஊழியர்களை நாடு முழுவதும் அனுப்பிக் கொண்டிருந்தது. அந்தக் கைப்பிரதி கழகம் நமது ஜாண் வாசரை தனது தனித்தாள் ஊழியனாக 1830 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் நியமனம் செய்தது. அவருடைய வேலைக்கு அந்தக் கைப்பிரதி கழகம் எந்த ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணவில்லை. ஆண்டுக்கு 160 டாலர்கள் மட்டுமே அவருக்கு கொடுக்க அது முன் வந்தது. தினசரி பயணப்படியும் அவருக்கு கொடுக்கப்பட்டது. நமது ஜாண் வாசர் அதை மிகுந்த களிகூருதலோடு ஏற்று தனது வாழ்வின் இறுதி வரை அந்த பரிசுத்தமான தேவ ஊழியத்தை ஆத்தும பாரத்தோடு செய்தார். அவருடைய தேவ ஊழியத்தைக் குறித்து ஒருவர் அந்த நாட்களில் இப்படி எழுதினார்:-
“ஜாண் வாசருக்கு இந்த ஊழியத்தின் காலமானது கடுமையான கஷ்டங்கள், மற்றும் பாடுகள் நிறைந்த நாட்களாக இருந்தன. காரணம், அவர் தனது வீட்டிலிருந்து பிரிந்து அவாந்திரமான தீவில் தனித்த ஒரு சிறை வாசியைப் போல கரடு முரடான நாட்டுப்புற பகுதிகளில் ஒரு அந்நியனைப்போல வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் பல இரவுகளையும் தனது ஊழியத்திற்காக பயன்படுத்திய கூடார வண்டியிலோ அல்லது அந்த வண்டிக்கு கீழாக தரையிலோ படுத்திருந்தார். ஆனால், தேவன் அவர் சென்ற புற்கள் நிறைந்த ஏகாந்தமான தனிமை இடங்களுக்கு அவருடன் சென்றதுடன் அவருடைய ஊழியங்களை ஆசீர்வதித்து அவருடைய இருதயத்தை தேவ சமாதானத்தாலும் தம்மைப்பற்றிய துதியினாலும் நிரப்பினார். சில சமயங்களில் தேவன் தன்னை அழைத்த உன்னதமான ஊழிய அழைப்பை அவர் எண்ணும் பொழுது அந்த பரலோக மகிழ்ச்சியை தன்னளவில் அடக்கிக் கொள்ள இயலாமல் அவர் பயணம் செய்யும் கூடார வண்டிக்குள் ஆனந்த நடனமாடி விடுவதாக அவரே கூறியிருக்கின்றார். விசாலமான புல் மைதானங்களான “பிரயரிகள்” வழியாக அவர் தம்முடைய ஊழியத்தின் பாதைகளில் செல்லும் வேளைகளில் தான் இந்த உலகத்தில் எத்தனையான தகுதியற்ற பாவி என்பதையும், அதே சமயம் பூமியின் முகத்திலேதான் தன்னுடைய ஆண்டவரின் எத்தனையான தொரு கிருபா பாத்திரம் என்பதையும் உணர்ந்து நெஞ்சம் பூரிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார். அந்த வேளை அவருடைய இருதயம் தனது அருமை நேச இரட்சகரின் கல்வாரி அன்பால் நிரம்பி உருகும்.
ஆத்துமாக்களை இரட்சகருக்காக ஆயத்தம் பண்ணிக் கொள்ளக்கூடிய அற்புதமான தாலந்துகளை தேவன் அவருக்குக் கொடுத்திருந்தார். ஒரு மனிதனுக்கு கர்த்தரைப் பற்றிச் சொல்ல வேண்டிய முதல் வார்த்தைகளையும், அந்த மனிதனுடைய ஆத்துமத்தின் நிலையையும் அவனுடைய முகப் பார்வையைக் கொண்டும், தனது வார்த்தைகளுக்கு அவன் அளிக்கும் முதல் பதில்களைக் கொண்டும் அவர் நிதானித்து கணித்து விடுவார். அவர் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுடைய ஆவிக்குரிய நிலையையும் அவர் கேட்டறிந்து கொள்ள மிக ஆவலாக இருந்தார். அந்த மனிதன் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரமாக இல்லாதிருந்தால் அவர் அவனை கண்ணீரோடு எச்சரித்து இரட்சிப்பின் செய்தியை அவனுக்குச் சொல்லுவார்.
அமெரிக்க கிறிஸ்தவ கைப்பிரதி கழகம் அமெரிக்காவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியையும், இல்லினாய்ஸ்ஸில் சில இடங்களையும், குறிப்பாக கெண்டல், டிகால்ப், பூன், கெய்ன் போன்ற இடங்களையும் அங்கிள் ஜாண் வாசரின் தேவ ஊழியத்திற்காகப் பிரித்துக் கொடுத்திருந்தது. அந்த இடங்களுக்குப் போவதற்கு முன்னர் அவர் சிக்காகோ பட்டணத்தில் கொஞ்ச நாட்கள் தங்கியிருந்து தனது நண்பர்களைச் சந்தித்ததுடன் தனது ஊழியத்திற்குத் தேவையான வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், ஆவிக்குரிய கிறிஸ்தவ புத்தகங்கள், கைப்பிரதிகள் போன்றவற்றை தனது ஸ்தாபனத்திலிருந்து பெற்றுக் கொண்டார். இப்பொழுது அங்கிள் ஜாண் வாசருக்கு 37 வயது ஆகியிருந்தது. அழியும் ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தால் அவருடைய ஆத்துமா நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அந்த ஆண்டின் கோடை காலம் சுட்டெரிக்கும் மிகவும் வெப்பமுடையதாக இருந்தது. எனினும், அங்கிள் ஜாண் வாசர் ஊழியத்திற்காகச் சென்ற ஃபிரயரி புல் வெளிகள் பசுமையாகவே காணப்பட்டது. கொடிய வெப்பம் காரணமாக ஃபிரயரி மக்களுடைய இருதயம் கரைந்து சோர்ந்து போய்விட்டது. அதிகமான பண புழக்கம் இல்லாததால் அங்கிள் ஜாண் வாசரின் கிறிஸ்தவ புத்தகங்கள், வேதாகமங்கள் போன்றவற்றின் விற்பனையும் குறைவாகவே இருந்தது. பகற்காலம் முழுவதும் வியர்வை கொட்டும் வெப்பமாகவும், இராக்கால நேரம் மிகவும் குறுகியதாகவிருந்தமையால் ஜாண் வாசர் மிகவும் கஷ்டப்பட்டார். அவருடைய இருதயம் சோர்ந்தும் போயிற்று. எனினும், தேவன் அவரை தம்முடைய தேவ சமாதானத்தால் தாங்கி வழி நடத்தினார். சிறிதும் பெரிதுமான நல்ல ஊழிய வாய்ப்புகளை அவர் சென்ற இடங்களில் எல்லாம் தேவன் அவருக்கு கொடுத்தார்”
ஊழியத்தின் பாதையில் அங்கிள் ஜாண் வாசருக்கு ஏற்பட்ட மறக்க முடியாத நினைவுகள்
இல்லினாய்ஸ் என்ற பட்டணத்தில் டைவ்ஸ் என்ற தெருவிலுள்ள ஒரு ஐசுவரியமுள்ள மனிதரின் வீட்டின் கதவை அங்கிள் ஜாண் வாசர் ஒரு நாள் தட்டி நின்றார். அப்பொழுது வீட்டின் எஜமாட்டி வந்து “ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்கள். “அமெரிக்க கிறிஸ்தவ கைப்பிரதி கழகத்தின் தனித்தாள் ஊழியர் நான். அதோ கூடையில் இருக்கும் அவர்களுடைய கிறிஸ்தவ புத்தகங்களை நான் விற்பனை செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றேன்” என்று ஜாண் வாசர் பதிலளித்தார். “எங்கள் வீட்டில் ஒரு பெரிய கிறிஸ்தவ புத்தகசாலையே இருக்கின்றது” என்று அந்த அம்மையார் கூறினார்கள். அந்த கூர்மையான பதிலில் மனமடிந்து விடாமல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அந்த பெரிய வீட்டை அங்கிள் ஜாண் வாசர் ஒரு தடவை சுற்றும் முற்றும் பார்த்தவராக “ஆனால், உண்மையில் நான் ஜாண் பன்னியன் (John Bunyan) ரிச்சர்ட் பாக்ஸ்டர் (Richard Baxter) ஜாண் ஃப்ளேவல் (John Flavel) போன்ற பக்த சிரோன்மணிகளின் கால்களாக நான் இருந்து கொண்டு அவர்களுடைய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கின்றேன். அந்த பரிசுத்த பக்தர்கள் எல்லாரும் அதோ அந்தக் கூடையில்தான் இருக்கின்றனர்” என்று சொன்னார். “வெறுமனே கிறிஸ்தவ புத்தகங்களை மட்டும் விற்பனை செய்து கொண்டு செல்லுபவன் நான் அல்ல. அன்பின் ஆண்டவர் இயேசுவை நீங்கள் நேசிக்கின்றீர்களா என்பதை அறிய நான் மிகுந்த ஆவலுடையவனாக இருக்கின்றேன்” என்றார் ஜாண் வாசர். “நான் இங்குள்ள சபையின் அங்கத்தினன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அம்மையார் பதிலளித்தார்கள். “உங்களைப்போல நானும் ஒரு சபையின் அங்கத்தினன்தான். ஆனால், ஆண்டவர் நமது தேவாலயத்துக்கு வந்து தேவாலயத்தின் பதிவேடுகளைப் புரட்டி நமது பெயர் அங்கு பதிவு பண்ணப்பட்டிருக்கின்றதா என்பதைப் பாராமல் நமது பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றதா என்பதை மட்டும்தான் பார்ப்பார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது” என்றார் ஜாண் வாசர். “உண்மைதான், நாம் எந்த ஒரு சபை பிரிவையும் மாத்திரம் சார்ந்திருப்பது மட்டும் போதாது. நீங்கள் என்னுடைய பரிசுத்த தாயாரைப் போன்று பேசுகின்றீர்கள். உண்மைதான், நான் என் ஆண்டவரை நேசிக்கின்றேன்” என்றார்கள் அந்த அம்மையார். “கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக என்றார் ஜாண் வாசர். அதுதான் நம்மை சகோதரன், சகோதரியாக மாற்றுகின்றது. நீங்கள் இரட்சகரை நேசிப்பீர்களானால் நாம் கொஞ்ச நேரம் ஜெபிக்கலாமே” என்றார் ஜாண் வாசர். “நீங்கள் ஜெபிப்பதை நான் அதிகமாக விரும்புகின்றேன்” என்றார்கள் அந்த அம்மையார். அந்த இடத்திலே ஜாண் வாசரும் அந்த அம்மையாரும் அடுத்தடுத்து முழங்காலில் நின்றார்கள். கண்களில் கண்ணீர் பொங்கி வழிய வழிய ஜாண் வாசர் தன் உள்ளத்தை உடைத்து ஊற்றி தேவ சமூகத்தில் மன்றாடி ஜெபித்தார்.
ஜெபித்து முடிந்ததும் அந்த ஐசுவரியவாட்டி கூடையிலுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் என்ன விலை என்று கேட்டார்கள். கூடையிலுள்ள புத்தகங்கள் எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்த்து அதின் தொகையை அம்மையாரிடம் கொடுத்த போது அதற்கான பணத்தையும், ஜாண் வாசருக்கு ஒரு சிறிய அன்பளிப்பையும் சேர்த்து அவர்கள் கொடுத்துவிட்டு கூடையிலுள்ள புத்தகங்கள் யாவையும் தங்கள் வீட்டு புத்தகசாலையில் சேர்க்கும்படியாக தனது வீட்டு வேலைக்காரனிடம் அம்மையார் கேட்டுக் கொண்டார்கள். அதின் பின்னர் அந்த அம்மையார் அங்கிள் ஜாண் வாசரிடம் ஆரம்பத்தில் தான் பெருமையாக நடந்து கொண்டதற்காக அவர் தன்னை மனப்பூர்வமாக மன்னிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். “எனது சகோதரியே, அந்தக் காரியத்தை நீங்கள் இங்கு குறிப்பிட அவசிமில்லை. நமது ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தர் நமது பாவங்களையும், சாபங்களையும் தம் பேரில் ஏற்று எத்தனையாக நம்மை மன்னித்து நம்மை நேசித்தார் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார் ஜாண் வாசர். இந்த நிகழ்வோடு காரியம் முற்றுப் பெற்றுவிடவில்லை. அங்கு அங்கிள் ஜாண் வாசர் ஏறெடுத்த அவரது கண்ணீரின் ஜெபத்தின் காரணமாக பின் நாட்களில் நல்லதொரு தேவ ஊழியம் அந்த இடத்தில் நடந்ததாக கூறப்படுகின்றது.
மனந்திரும்ப மனமற்ற கொடிய மனிதனை சந்தித்தது
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மனிதன் இருந்தான். உலக மக்களின் நெருக்கமான பழக்க வழக்கங்களுக்கெல்லாம் விலகி அப்பால் தொலைவான இடத்தில் வாளால் அறுக்கப்பட்ட மரப் பலகைகளால் உருவாக்கப்பட்ட ஒரு மர வீட்டில் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். நான் அவனை முதல் முதலில் சந்தித்த நாளை என்னால் என்றும் மறக்கவியலாது. ஓ, மனந்திரும்புதலுக்கு அவன் எத்தனை விரோதமாக எதிர்த்து நின்றான் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! அவன் எதிர்த்து நின்றது போல அந்த அளவுக்கு தேவனுடைய கிருபையும் அவனுக்கு ஆதரவாக அவன் மேல் இருந்ததுதான் ஆச்சரியத்துக்குரிய காரியமாகும்! அவனுக்கு ஒரு பக்தியுள்ள மனைவி இருந்தாள். அவன் அவளை அதிகமாக நேசித்தான். அவனுக்காக அவள் ஜெபிப்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அவள் ஜெபிப்பதை அவன் வேளாவேளைகளில் உற்றும் கேட்டிருக்கின்றான். மனந்திரும்ப மனமற்ற அந்த மனிதனை நான் ஏறத்தாழ 20 தடவைகள் சந்தித்திருக்கின்றேன். சில தடவைகளில் நான் அவனை நல்லவனாகவும், சில தடவைகள் மூர்க்க வெறி கொண்டவனாகவும் பார்த்திருக்கின்றேன். அவனுடைய விலையேறப் பெற்ற ஆத்தமாவின் நன்மையைக் கருத்தில் கொண்டு நான் அவனிடம் கேட்கும் அன்பான விசாரிப்பின் நிமித்தமாக அவன் எனக்கு விரோதமாக அவ்வப்போது பைத்தியம் கொண்டவனைப் போல சீறி எழும்பி விடுவான். ஆனால், தெய்வாதீனமாக அவன் என்னை ஒருபோதும் தாக்கவில்லை. அடிப்பதற்காக மிகவும் அருகாமையில் என்னண்டை ஒன்றிரண்டு தடவைகள் அவன் நெருங்கி வந்தான். கட்டாயம் அவன் என்மேல் கைபோட்டு விடுவான் என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.
இதன் பின்னர் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் அவனுடைய வீட்டுப் பகுதிக்கு நான் ஒரு தடவை செல்லும்போது அவன் தனது வேலையில் மூழ்கியிருந்தான். அவன் என்னைக் கண்டதும் தனது கையிலிருந்த நீண்ட கைப்பிடியுள்ள புல் வெட்டும் கத்தியை கீழே போட்டுவிட்டு சிங்கத்தைப் போல என்னை நோக்கி என்னை தூஷித்துக் கொண்டும், என்னை சபித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தான். என்னருகில் வரவே தன் நிலையில் தரித்து நின்று என்னையே கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். நானும் அவனையே நோக்கிக் கொண்டிருந்தேன். இப்படி நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கையில் நான் அவனைப் பார்த்து “சிநேகிதனே, நீங்கள் உங்கள் இருதயத்தை இரட்சகர் இயேசுவுக்கு ஒப்புக் கொடாத வரை உங்களுக்கு சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சொன்னேன். எனது வார்த்தைகள் மிகவும் அன்பாகவும், சொல்லப் போனால் நான் அந்த வார்த்தைகளை அழுது கொண்டே சொல்லுவது போலத்தான் சொன்னேன். ஆனால், அந்த வார்த்தைகள் அவனை கோபம் மூட்டுவதாக இருந்திருக்கின்றது. அவன் கோபத்தால் வாயில் நுரை தள்ளிக் கொண்டு உரத்த குரலில் “நீ இந்த இடத்தைவிட்டு உடனே போய்விடு, நான் உன் முகத்தை இனிமேல் பார்க்க கூடாது, இல்லையேல் நான் உன்னைக் கொன்று போடுவேன்” என்றான். நான் அவனுடைய வார்த்தைக்கு ஒரு பதிலும் பேசவில்லை. எனினும், எனது உள்ளத்தில் இந்தக் காரியத்துக்கும் ஒரு முடிவு உண்டு, அந்த மனிதனால் இனி தப்ப முடியாது என்று என் உள்ளத்தில் உணர்ந்தவனாக கடந்து சென்றேன்.
அடுத்த முறை நான் அந்த மனிதனுடைய வீட்டு வழியாக கடந்து சென்றபோது அவன் என்னைக் கண்டதும் என்னுடைய கண்ணில் படாதபடிக்கு ஒளித்துக் கொள்ள முயற்சிப்பதை நான் தூரத்திலிருந்து கவனித்தேன். நான் நேராக அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனுடைய மனைவியினிடத்தில் அவளின் கணவன் எங்கே என்று கேட்டேன். “ஓ என்னுடைய ஏழை கணவர் என்று கூறிக்கொண்டே கண்ணீர் சொரிந்தாள்” “தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னிடம் பேசுங்கள். இந்த நாளில் தேவன் உங்கள் அன்புக் கணவரை சந்திப்பார் என்று நான் விசுவாசிக்கின்றேன். அவர் எங்கு சென்றார்?” என்று அந்தப் பெண்ணிடம் நான் கேட்டேன். “உங்களை அவர் தூரத்தில் பார்த்ததும் தான் எங்கு சென்று விட்டேன் என்று உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு மறைந்து கொண்டார். அநேகமாக அவர் இப்பொழுது எங்கள் வீட்டின் பின்புறமுள்ள எங்கள் வீட்டு தானியக் கழஞ்சியத்தில் பதுங்கியிருப்பார்” என்றாள்.
நான் அந்தப் பெண்ணிடம் “அன்பான சகோதரியே, நீங்கள் உங்கள் நிலையில் இங்கு தரித்து நின்று ஜெபித்துக் கொண்டிருங்கள். நானும் ஜெபத்துடன் உங்கள் கணவனைக் கண்டு பிடிக்க முயற்சிக்கின்றேன்” என்று கூறிவிட்டு வீட்டுக்குப் பின்னர் உள்ள தானியக் கழஞ்சியத்திற்குச் சென்று கதவைப் பலமாகத் தட்டினேன். அது உட்புறமாகப் பலமாகப் பூட்டப்பட்டிருந்தது. பல தடவைகள் அதை தட்டினபோதினும் எந்த ஒரு குரலும் வெளி வராத கல்லறையாக அது எனக்கு காணப்பட்டது. அந்தக் கழஞ்சியத்தின் மற்றொரு கதவையும் அப்படியே நான் பல தடவைகளும் பலமாகத் தட்டினேன். சற்று நேர இடைவெளிக்குப் பின்னர் தானியக் கழஞ்சியத்தின் உள்ளே பெருமூச்சுகள் எழும்பும் சத்தத்தை நான் கேட்டேன். அதற்கப்பால் உள்ளே காலடிகள் எடுத்து வைத்து கதவண்டை நடந்து வரும் சத்தத்தை நான் கவனித்தேன். நான் மிகவும் பயத்துடன் அந்த கோபக்கார மனிதர் நமக்கு என்ன தீங்கு செய்து விடுவாரோ என்ற எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன். அறையின் கதவு மெதுவாக திறக்கப்பட்டது. அங்கே அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். ஆம், தேவன் இறுதியாக ஜெயித்துவிட்டார். அல்லேலூயா! அந்த மனிதருடைய முகம் வெளிறிப் போயிருந்தபோதினும் அந்த முகத்தில் கோபம் என்பது சற்றும் தென்படாதிருந்தது. அவர் என்னிடம் பேச முயற்சித்தார். ஆனால் அவரால் கூடாது போயிற்று.
நான் அவரிடத்தில் நடந்து சென்று அவருடைய கரங்களைப் பற்றிப்பிடித்து “என் அருமை சகோதரனே, நாம் இப்பொழுது ஜெபம் பண்ணுவோம்” என்று இருவருமாக முழங்காலூன்றினோம். அந்த இடத்தில் எங்களுடைய வார்த்தைகளை விட கண்ணீர்தான் அதிகமாகக் கொட்டினது. சற்று நேரத்தில் அவர் தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு “நாம் இப்பொழுது எனது மனைவியைக் காணச் செல்லுவோம்” என்று கூறினார். அந்த இடத்திலிருந்து அவருடைய வீடு 2 நிமிட நேர நடை பயணத் தூரத்தில் இருந்தது. அந்த இரண்டு நிமிட நேரங்களில் நாங்கள் அனுபவித்த பரலோக சந்தோசத்தை அளவிட வார்த்தைகளில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக வருவதை அந்த மனிதரின் மனைவி தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்களின் முகம் ஆனந்த சந்தோசத்தால் நிரம்புவதை எங்களால் காண முடிந்தது. அந்த சகோதரியின் முகத்தில் அன்று கண்ட அந்த ஆனந்த மகிழ்ச்சியை நான் என் வாழ்வில் என்றுமே எந்த ஒரு சகோதரியிடமும் கண்டதே இல்லை”
வேதாகமத்தை இரு துண்டாக்கிய நாஸ்தீகன் தான் துண்டாக்கிய வேதாகம பகுதியால் ஆண்டவரைக் கண்டு கொண்ட அதிசயம்
அங்கிள் ஜாண் வாசர் ஒரு சமயம் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தார். அந்த வீட்டில் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஒரு ஜெப சகோதரி இருந்தார்கள். அவர்களுடைய கணவர் ஊறிப்போன தேவனற்ற நாஸ்தீகனாக இருந்தான். அவர்கள் இருவரும் கலியாணம் செய்த நாள் முதல் அந்த சகோதரி தனக்கென்று ஒரு வேதாகமத்தை வைத்து வாசிக்க இயலாதவர்களாக இருந்தார்கள். அந்த சகோதரி அங்கிள் ஜாண் வாசரைக் கண்டதும் தனது வீட்டின் நிலையை அவருக்கு எடுத்துக்கூறி அவரை கெஞ்சி மன்றாடி ஒரு வேதாகமத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அங்கிள் ஜாண் வாசர் அந்த வேதாகமத்தைக் கொடுத்து விட்டு அந்த வீட்டிலிருந்து கடந்து செல்லவும் அந்த நாஸ்தீக கணவன் தன்னுடைய மனைவியின் கரத்தில் வேதாகமம் இருப்பதைக் கண்டதும் கடுங்கோபத்தில் அந்த வேதாகமத்தை அவர்களுடைய கரங்களிலிருந்து பற்றிப் பிடுங்கி ஒரு கோடரியைக் கொண்டு வந்து அதை மரம் வெட்டும் மரக்கட்டையில் வைத்து அதை இரண்டு துண்டுகளாக வெட்டி அதின் ஒரு பகுதியை தன் வசம் வைத்துக் கொண்டு அடுத்த பகுதிiயை “இந்த இடத்திலுள்ள யாவற்றிலும் உனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று சொல்லுகின்ற நீ, உனக்குரிய இந்த பங்கையும் பெற்றுக் கொள்” என்று மிகவும் ஏளனமாகச் சிரித்துச் சொல்லி தான் வெட்டிய அடுத்த பகுதியை மனைவியிடம் கொடுத்து விட்டான். அவர்கள் அதை பத்திரமாக வைத்து வாசித்து வந்தார்கள்.
தன்னுடைய பங்கான வேதாகம பகுதியை அந்த நாஸ்தீக கணவன் இரும்பு சாமான்கள் போடுகின்ற ஒரு பெட்டியில் போட்டு தன் அறையில் வைத்துக் கொண்டான். கடுங்குளிர் கால நாட்கள் வந்தன. அந்த மனிதனுக்கு வெளியே வேலைகள் எதுவும் இல்லாதிருந்தது. வீட்டினுள் அவன் அடைபட்டுக் கிடந்த நாட்களில் தான் படிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற எண்ணத்தில் பழைய செய்தித் தாட்கள் ஏதாவது கிடைக்குமா என்று அவன் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் சில சமயத்திற்கு முன்னர் தான் கோடரியால் வெட்டிப்போட்ட வேதாகமத்தின் பகுதி கிடைக்கவே வேறு வழியில்லாமல் அதை ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தான். அந்த நாஸ்தீகன் படிக்க ஆரம்பித்த பகுதி கெட்ட குமாரனுடைய சரித்திரமாக இருந்தது. அந்த சரித்திரத்தின் முழுமையும் அவனுக்கு கிடைக்காததால் அதின் முடிவைப் படிக்க மட்டற்ற ஆவல் கொண்டான். அந்தப் பகுதி தனது மனைவிக்குத் தான் வெட்டிக் கொடுத்த வேதாகமத்தில் இருப்பதைக் கண்ட அவன் அந்தப் பகுதியை தந்திரமாக அவளிடமிருந்து திருடி எடுத்துப் படிக்க ஆவல் கொண்டு எவ்வளவோ தேடியும் கடைசி வரை அவனால் அதை கண்டு பிடிக்கக்கூடாமற் போயிற்று. அவனுடைய பக்தியுள்ள மனைவி மிகவும் புத்திசாலித்தனமாக எங்கேயோ அதை நன்கு மறைத்து வைத்துக் கொண்டார்கள்.
கெட்ட குமாரனின் முழுச் சரித்திரத்தையும் எப்படியாவது வாசித்துவிட வேண்டும் என்ற நாஸ்தீக கணவனின் அளவு கடந்த ஆசையானது அவனுடைய பெருமையை எல்லாம் அவனைவிட்டு விரட்டி ஓட்டி தனது பக்தியுள்ள மனைவியிடம் சரணாகதி அடையச் செய்தது. மனைவியிடமிருந்த அந்த வேத பகுதிiயை அவன் கேட்டு வாங்கி கெட்ட குமாரனின் முழுச் சரித்திரத்தையும் வாசித்து முடித்தான். ஒரு முறையல்ல பல தடவைகளும் அதை வாசித்து, வாசித்து ஆனந்தம் கொண்டான். அந்த வாசிப்பின் பயனாக இறுதியில் அந்த நாஸ்தீக மனிதனே தனது பரலோகத் தந்தையை நாடி வந்த குமாரனாகி முடிவில் ஆண்டவருடைய அன்பின் அடிமையானான்.
அவருடைய வாயை அத்தனை எளிதாக உங்களால் மூடிவிட முடியாது
அங்கிள் ஜாண் வாசர் ஒரு சமயம் ஒரு மனிதரை தேடிக் கொண்டு ஒரு இடத்திற்குச் சென்றிருந்தார். அந்த மனிதருடைய வரவுக்காக ஒரு மாடியின் தாழ்வாரத்தில் காத்துக் கொண்டிருந்த வேளையில் மிகவும் பகட்டாக ஆடை அணிகலன்கள் அணிந்து மிகவும் பெருமையாக காணப்பட்ட ஒரு ஸ்திரீ அவருக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அங்கிள் ஜாண் வாசர் அந்தப் பெண்ணுடன் தனது சம்பாஷணயை தொடங்கினார். மறுபடியும் பிறக்க வேண்டியதன் அவசியத்தையும், ஆண்டவராகிய இயேசு இரட்சகரை உடனே அண்டிக் கொள்ள வேண்டியதன் தேவையையும் அவளுக்கு திட்டமாக எடுத்துச் சொன்னார்.
அந்த வார்த்தைகளைக் கேட்கவே அவள் இடி முழக்கம் போன்று கெர்ச்சித்துக் கொண்டு அப்படிப்பட்ட வார்த்தைகளில் தனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என்றும் அவற்றை தன்னிடம் பேச வேண்டாம் என்றும் அவள் அவரைக் கடிந்து கொண்டாள். ஜாண் வாசரும் அவளை விட்டபாடில்லை. இரட்சகர் இயேசுவை மறுதலிப்பதில் உள்ள ஆபத்துக்களையும், முரட்டாட்டத்தின் முடிவில் உள்ள பயங்கர நாசங்களையும், தேவ கோபாக்கினையையும் தனது கரத்திலிருந்த வேதாகமத்திலிருந்து வேத வசனங்களை கோர்வையாக எடுத்து, எடுத்து அவளுக்குக் காண்பித்தார். அதின் பின்னர் தான் தேடிச் சென்ற ஆள் வந்துவிடவே அந்த இடத்திலிருந்து அங்கிள் ஜாண் வாசர் நகர்ந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையில் பகட்டான ஆடை அணிகலன் அணிந்த அந்த ஸ்திரீயின் கணவன் அவளண்டை வந்து சேர்ந்தான். “ஒரு விருத்தாப்பிய மனிதன் சிறிது நேரத்திற்கு முன்பாக என்னிடத்தில் கிறிஸ்தவ மார்க்க சம்பந்தமான காரியங்களைப் பேசிக் கொண்டிருந்தான்” என்று தனது கணவனிடம் அவள் புகார் சொன்னாள். “அவனுடைய வாயை நீ ஏன் அடைக்கவில்லை?” என்று மிகுந்த ஏளனமான குரலில் அவன் பதில் சொன்னான். “நீங்கள் நினைப்பது போல அத்தனை எளிதாக அந்த மனிதரின் வாயை உங்களால் மூடிவிட முடியாது” என்று அவள் தனது கணவனுக்குப் பதில் கொடுத்தாள். “நான் மட்டும் இந்த இடத்தில் இருந்திருக்கும் பட்சத்தில் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு உடனே போய்விடு என்று நான் அவனிடம் சொல்லியிருப்பேன்” என்று அவன் சொன்னான். “நீங்கள் மட்டும் அவரைச் சந்தித்திருந்தால் அவர் தன்னுடைய வேலையிலேயேதான் மிகுந்த தீவிரமாக ஈடுபட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள்” என்று அவன் மனைவி பதில் கூறினாள். தனது பரம ஏஜமானரின் ஆத்தும ஆதாய பணியில் அங்கிள் ஜாண் வாசர் எப்பொழுதும் அத்தனை தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1600 ஏக்கர் நிலத்தின் மண் மின்னும் வைரத்தை மூடியிருக்க அது எப்படி பிகாசிக்க முடியும்!
ஜேக்கப் நாப் என்ற பிரசித்தி பெற்ற சுவிசேஷகர் அமெரிக்காவின் சிக்காக்கோ பட்டணத்தில் தொடர்ச்சியான எழுப்புதல் கூட்டங்களை அப்பொழுது நடத்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அங்கிள் ஜாண் வாசரும் அந்தப் பட்டணத்தில் தான் இருந்தார். சுவிசேஷகர் ஜேக்கப் நாப் அவர்களின் பிரசங்கத்தைக் கேட்க மக்கள் திரள் கூட்டமாக வந்து ஆலயத்தை நிரப்பினார்கள். ஆலயத்தில் வல்லமையான தேவச் செய்திகள் கொடுக்கப்பட்டன. எனினும், கொடுக்கப்பட்டசெய்திகளால் மக்கள் எந்த ஒரு பாவ உணர்வுமின்றி அப்படியே வந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். எந்த ஒரு ஆத்துமாவும் ஆண்டவர் இயேசுவை தேடவில்லை, எவரும் தங்களுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படியாக சுவிசேஷகரை கேட்கவுமில்லை. தேவன் தமது ஜனத்தை மறந்துவிட்டாரா? தேவனுடைய சத்துருக்கள் பரிகாசம் பண்ணத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட ஒரு துயர நிலை அதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் அவருடைய ஊழியங்களில் ஏற்பட்டதில்லை.
இந்த நேரத்தில் சுவிசேஷகர் ஜேக்கப் நாப், அங்கிள் ஜாண் வாசரை தேடிச் சென்று தனக்கு ஏற்பட்ட காரியத்தை அவருடன் மிகவும் துயரத்துடன் பகிர்ந்து கொண்டார். தனது ஊழியத்தில் இப்படிப்பட்ட ஒரு வீழ்ச்சி ஏற்பட்டதன் இரகசியம் என்னவென்று கேட்டார். எனது ஊழியத்தில் நான் எடுக்கும் சகல பிரயாசங்களும் வீணாய் போவதன் காரணம் யாது? எனது சரீர பெலன் அனைத்தும் எதற்கும் உதவாமல் விருதாவாக செலவழிகின்றதே என்று புலம்பினார்.
ஜேக்கப் நாப் என்ற அந்த பிரபலமான சுவிசேஷகர் 1600 ஏக்கர் பண்ணை நிலத்தை தனக்கென்று சொந்தமாக அந்தச் சமயத்தில்தான் வாங்கியிருந்தார். அந்தச் செய்தி அங்கிள் ஜாண் வாசரின் காதுகளுக்கு எப்படியோ வந்து எட்டியிருந்தது. ஜேக்கப் நாப் சொன்ன வார்த்தைகளை எல்லாம் மிகவும் பொறுமையுடன் கேட்டு முடித்த பின்பு மிகவும் தேவ அன்புடனும், கிறிஸ்துவுக்குள்ளான மட்டற்ற மனத்தாழ்மையுடனும் இரட்சகரின் தூசியாகிய நான் உங்களிடம் பேசத் துணிந்தேன் என்று கூறினவராக அங்கிள் ஜாண் வாசர் தனது வாயைத் திறந்து பேசினார். “1600 ஏக்கர் நிலத்தின் மண் தேவனுடைய பிரகாசமான வைரத்தை மூடியிருக்கும்போது அது எப்படி எழும்பி பிரகாசிக்க முடியும்?” என்று கூறி முடித்தார்.
சுவிசேஷகர் ஜேக்கப் நாப் தனது தவறை உணர்ந்தார். தனக்கென்று அந்த பெரிய பண்ணை நிலத்தை வாங்கின பாவத்தை தேவ சமூகத்தில் கண்ணீரோடு அறிக்கையிட்டு அந்த நிலத்தை கர்த்தருடைய ஊழியத்திற்காக கொடுத்துவிட்டு முற்றும் வெறுமையானார். அவ்வளவுதான், கர்த்தர் தம்முடைய பாத்திரத்தை மீண்டும் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினார். திரள் திரளான ஆத்துமாக்கள் ஆண்டவருக்கென்று ஆதாயம் பண்ணப் பட்டனர்.
அங்கிள் ஜாண் வாசர் உங்களை சந்திப்பாரானால், நீங்கள் அவரைச் சந்திக்க தயக்கம் காண்பிக்கும் நேரத்திற்குள்ளாக பக்கத்து வீட்டாரைச் சந்தித்து அந்த முழுக் குடும்பத்தையும் முழங்கால் ஊன்றச் செய்து அவர் ஜெபிக்க ஆரம்பித்து விடுவார். நான் சிறுவனாக இருந்த சமயம் நானும் எனது நண்பர்களும் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை ஒன்றில் அங்கிள் ஜாண் வாசர் எங்களைச் சந்தித்தார். “தம்பி மாரே, உங்கள் இருதயங்களை இரட்சகர் இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டீர்களா?” என்று அவர் எங்களைப் பார்த்துக் கேட்டார். அவர் கேட்ட அந்த கேள்வியை நான் எனது ஜீவ கால பரியந்தம் மறக்கவே மாட்டேன். அவரின் ஒரே குறிக்கோள் அதுவேதான். அவர் யாரிடமாவது பேசுகிறார் என்றால் அவர் தனது அருமை ஆண்டவர் இயேசுவைக் குறித்துத்தான் பேசுவார்.
1863 ஆம் ஆண்டிலிருந்து 1865 ஆம் ஆண்டு வரை ஜாண் வாசர் ராணுவ வீரர்கள் நடுவில் தேவ ஊழியத்தை செய்தார். அவருடைய ஊழியத்தைக் குறித்து ராணுவ வீரர்களில் ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதுகின்றார்:-
“ஜாண் வாசரின் உடற்கட்டின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் பார்த்தோமானால் அவர் ஆண்டவருக்காக செய்த காரியம் மிகவும் ஆச்சரியத்திற்குரியதாகும். அவர் தனது நாளை ராணுவ வீரர்களுக்கு வழக்கம்போல தினமும் காலையில் எடுக்கப்படும் ஆஜர் பதிவிலிருந்து ஆரம்பித்து மிகவும் தீவிரமாக 16 முதல் 18 மணி நேரம் வரை ஒரு நாளில் அவர் ராணுவ வீரர்களைச் சந்தித்து கர்த்தருக்கு ஊழியம் செய்தார். அவர் மிகவும் குறைவாகச் சாப்பிட்டார், மிகவும் குறைவாக தூங்கினார். என்றபோதினும் அவர் தளர்ச்சியடையவில்லை. வாரத்திற்கு வாரம், வாரத்திற்கு ஏழு நாட்களிலும் அதே உயர்மட்ட தேவ ஊழிய உழைப்பில் அவர் ஈடுபட்டிருந்தபோதினும் தேவன் அவரை அப்படியே தமது கிருபைக்குள் மிகவும் தெம்பாக வைத்துப் பாதுகாத்துக் கொண்டார். எங்கள் ராணுவ யூனிட்டில் 8000 ராணுவ அதிகாரிகளும் ஏராளமான காலாட் படை வீரர்களும் இருந்தனர். நான் அங்கிருந்த சமயம் அனைத்து ராணுவ அதிகாரிகள் மற்றும் போர் வீரர்களை எல்லாம் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் தனிப்பட்ட விதத்தில் சந்தித்து இரட்சிப்பின் காரியத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். நான் அவரைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் அவர் தனது காரியத்தினிமித்தம் ஓடிக் கொண்டிருப்பவராகக் காணப்பட்டார். எனினும், எந்த ஒரு மனுஷீக ஆத்திர அவசரம் இல்லாதவராக அவர் இருந்தார். அவருடைய ஓய்வில்லாத உழைப்பு எல்லாம் ஆண்டவருக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதைக் குறித்தே இருந்தது. எந்த ஒரு பரம தரிசனத்துக்கடுத்த காரியத்தைக் குறித்து தான் எப்பொழுதும் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவரது ஆத்தும ஆதாய வாஞ்சை எப்பொழுதும் அவரது கண்களுக்கு முன்பாக நிழலாடிக் கொண்டிருந்தது.
அமெரிக்க தேசத்தின் மேயின் என்ற இடத்திலிருந்து ஃப்ளாரிடா என்ற இடம் வரைக்கும், அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து பசிபிக் சமுத்திரப் பகுதி வரைக்கும் அங்கிள் ஜாண் வாசர் கால் நடையாகவும், கூடார வண்டியிலும், குதிரைச் சவாரி செய்தும், ரயில் மூலமாகவும், யந்திரப்படகு மூலமாகவும் இராப்பகலாக பயணம் செய்து தேவனுடைய சுவிசேஷத்தை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கண்ணீரோடு அறிவித்தார். அவருடைய மனத்தாழ்மையான, ஆத்தும பாரமிக்க, கண்ணீரின் தனித்தாள் தேவ ஊழியத்தின் மூலமாக ஒரு பெருங்கூட்டம் மக்கள் ஆண்டவருடைய பரம ராஜ்யத்திற்கு நிச்சயமாக வழி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் திட்டமாக நம்பலாம்.
அங்கிள் ஜாண் வாசரின் இறுதி நாட்கள் தேவ ஊழியங்கள்
“விருத்தாப்பியம் என்பது சூரிய ஒளி என்பதே என்றும் இல்லாத ஒரு மழை காலம் போன்றது. இருண்ட மழை மேகங்களும், தூறல்களும், ஈரப்பதமும் பல நாட்களுக்கு அங்கு தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று ஜேம்ஸ் ஹாமில்ட்டன் என்ற ஒருவர் கூறியிருக்கின்றார்.
அங்கிள் ஜாண் வாசர், வயதானவர் என்று நிச்சயமாகச் சொல்லுவதற்கு முன்பே அவரது தேக சுக நிலையில் பலத்த சரிவு ஏற்பட ஆரம்பித்தது. அறுபது வயது ஆவதற்குள்ளாகவே அவர் தமது சரீரத்தில் கடுமையான பாடு வேதனைகளை நாளின் பல மணி நேரங்களுக்கு சந்திக்க வேண்டியதாகவிருந்தது. எனினும், வாழ்வின் ஆரம்ப கால நாட்களில் நல்ல திடகாத்திரமான உடற்கட்டை அவர் கொண்டிருந்தமையால் பின் நாட்களில் அவருக்கு ஏற்பட்ட சரீர பாடுகளைப் பொறுத்துக் கொள்ளுவது என்பது அவருக்கு ஓரளவு இலகுவாக இருந்தது.
அவர் தனது தேவ ஊழியத்தின் பாதையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பதாகவே அவர் தன்னை ஓரளவு நடமாடித் திரியும் சுக நிலையில் வைத்துக் காத்துக் கொள்ளுவது என்பது அவரால் கூடாத காரியமாகக் காணப்பட்டது. எனினும், கர்த்தருடைய ஊழியங்களைச் செய்வதிலிருந்து தனக்கு ஓய்வு என்பது அவரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத ஒரு காரியமாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஓய்வை அவர் எக்காலத்தும் விரும்பவே இல்லை. எனினும், அவரது சரீர சுக நிலை அவருக்கு இணக்கம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
அங்கிள் ஜாண் வாசர் கலந்து கொண்ட கடைசி தேவ ஊழியம் நியூயார்க் பட்டணத்திலுள்ள மிண்டன் மாண்ட் கோமரி என்ற இடமாகும். அங்கு நடந்த தேவ ஊழியத்தைக் குறித்து குருவானவர் வெப்பர் என்பவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:-
1877 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஹட்சன் என்ற இடத்திலுள்ள கோக்ஸ்சாக்கி என்ற இடத்திற்கு நான் சென்றிருந்தபோது அங்கிள் ஜாண் வாசர் அந்த இடத்தில் கடந்து சென்ற குளிர் காலத்தில் தேவனுக்குச் செய்த மகத்தான ஊழியத்தின் அநேக காரியங்களைக் குறித்து நான் கேள்விப்பட்டேன். அது என் உள்ளத்தைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. அதைக் கேள்விப்பட்ட நான் என்னுடைய திருச்சபையிலும் அவரை அழைத்து ஊழியம் செய்தால் ஒரு பெரிய ஆத்தும அறுவடை எப்படியாவது கிடைக்கும் என்று நான் பெரிதும் வாஞ்சித்தேன். அதுமட்டுமல்ல அதற்காக நான் கடந்த நாட்களில் எவ்வளவோ ஜெபித்தும் வந்திருந்தேன்.
அதற்கான ஏற்பாடுகளை நான் உடனடியாக கவனிக்க ஆரம்பித்தேன். அவர் தனித்தாள் தேவ ஊழியம் செய்த “அமெரிக்க கிறிஸ்தவ கைப்பிரதி கழகம்” என்ற ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அனுமதியை நான் முதலில் பெற்றுக் கொண்டேன். எனது விருப்பத்திற்கு அவர்கள் செவிசாய்த்து அங்கிள் ஜாண் வாசரை தேவ ஊழியத்தின் பாதையில் நான் பயன்படுத்திக் கொள்ளும்படியாகவும், குறிப்பிட்ட தேதியில் அவர் ஃபோர்ட் பிளேன் என்ற இடத்திற்கு வந்து சேருவதாகவும் எனக்குத் தகவல் கொடுத்தார்கள். நான் அவரைச் சந்திக்க இரயில் நிலையம் சென்றிருந்தேன். இரயில் வந்து நின்றதும் முதல் ஆளாக அங்கிள் ஜாண் வாசர் அவர்கள்தான் அதிலிருந்து இறங்கினார். எங்கள் வீட்டிற்கு வரும் வழியிலேயே அவர் சுகயீனமாக இருப்பதை அறிந்த நான் அவர் நன்றாகத் தங்கி இளைப்பாற ஒரு வெதுவெதுப்பான அறையை ஆயத்தப்படுத்திக் கொடுத்ததுடன், பகற் காலத்தில் அவர் மனமகிழ்ச்சியடைய ஒரு குதிரை சவாரிக்கும் நான்ஒழுங்கு செய்தேன். ஆனால் அவர் அந்த நாளின் பிற்பகலிலேயே தேவ ஊழியத்தைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்று துடி துடித்தார். நான் அவரை சாந்தப்படுத்தி முதலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டினேன்.
அடுத்த நாள் நாங்கள் வீடு வீடாகச் சென்று கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்தோம். ஓரிரு நாட்கள் சென்ற பின்னர் அவர் என்னைப் பார்த்து “சகோதரனே, நாம் இன்னும் சரியான முடிச்சைக் கண்டு கொள்ளவில்லை. எனினும், நாம் தொடர்ந்து ஊக்கமாக ஜெபிப்போம். நிச்சயமாக தேவன் விரைவாகவே நமது தேவ ஊழிய ஒழுங்கு என்ன என்பதை நமக்கு வெளிப்படுத்திக் கொடுப்பார்” என்று கூறினார்.
அவர் அப்படிச் சொன்ன அந்த நாளிலேயே பெத்தேல் என்ற இடத்தில் ஒரு மரண வீட்டிற்கு வந்து அடக்க ஆராதனையை நடத்தும்படியாக நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அதை அறிந்த அவர் மிகவும் பரவசமுற்று “தேவன் அங்கிருந்துதான் நமது ஊழியத்திற்கான வழியை திறக்கப் போகின்றார்” என்று சொன்னார். அப்படியே அந்த அடக்க ஆராதனையில் நாங்கள் தேவனுடைய அசைவாடுதலை எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் பூரணமாக உணர்ந்தபடியால் அடுத்து வந்த ஒரு வார காலத்திற்கு உயிர் மீட்சி கூட்டங்களை ஒழுங்கு செய்தோம். கூட்டத்தின் முதல் நாள் அங்கிள் ஜாண் வாசர் மற்றொரு இடத்தில் தேவச் செய்தி கொடுக்கச் சென்றுவிட்டார். அந்த நாளின் இரவில் கர்த்தருக்குத்தங்களை ஒப்புவித்தவர்கள் முன் வரும்படியாக அழைக்கப்பட்டபோது 9 பேர்கள் முன் வந்தனர்.
அடுத்த நாள் இரவில் அங்கிள் ஜாண் வாசர் கூட்டத்தைப் பொறுப்பெடுத்தார். பொறுப்பெடுத்த உடன் தானே அவர் ஆவிக்குள் அனலானார். அங்கிள் ஜாண் ஜெபித்தார், பாடினார், ஆத்துமாக்களோடு உறவாடினார். அவ்வளவுதான், கூட்டத்தில் கலந்து கொண்ட யாவரும் கண்ணீர்விட்டு கதற ஆரம்பித்தார்கள். தேவ நாம மகிமைக்காக ஒரு பெரிய உயிர் மீட்சி ஏற்படலாயிற்று.
அவர் பட்டணத்தில் இருந்த நாட்களிலெல்லாம் ஒவ்வொரு வீடு வீடாக, ஒவ்வொரு வியாபார ஸ்தலம் ஸ்தலமாக ஏறி, ஏறி மக்களுடைய மனந்திரும்புதலின் அத்தியந்த அவசியத்தையும், விலையேறப்பெற்ற ஆத்துமாவை நஷ்டப்படுத்திக் கொள்ளுவதால் உண்டாகும் ஈடுசெய்ய முடியாத இழப்பையும் கண்ணீர் பெருக்கோடு எடுத்துக் கூறினார். சில இடங்களில் அந்த இடத்திலேயே நின்று ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு கடந்து செல்லுவார். அங்கிள் ஜாண் வாசர் மரணத்திற்குப் பின்னர் ஒரு கடைக்கார மனிதர் என்னிடம் “அன்று, அங்கிள் ஜாண் வாசர் என் கடைக்கு வந்து எனது மனந்திரும்புதலின் காரியமாக என்னிடம் பேசி எனது ஆத்துமாவுக்காக மனதுருகி மன்றாடியிராத பட்சத்தில் நான் நிச்சயமாக மனந்திரும்பாத பாவியாக எரி நரகத்திற்குச் சென்றிருப்பேன்” என்று என்னிடம் கூறினார்.
அங்கிள் ஜாண் வாசர் சென்று கொண்டிருந்த பாதை ஒன்றில் ஒரு வயோதிபர் தனது வீட்டு கொல்லைப்புறத்தில் தனது கோடரியால் ஒரு மரத்துண்டை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்தார். அவருடைய வயது 70 ஐ தாராளமாக தாண்டியிருக்கும். அங்கிள் ஜாண் அவரிடம் அவருடைய மரணத்திற்குப் பின்னாலுள்ள அவருடைய ஆனந்த நம்பிக்கையைக் குறித்துக் கேட்டார். உடனே அந்த மனிதர் தான் ஒரு வேதாந்தி என்றும், வேதாகமத்தில் தனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது என்றும், எனினும் அங்கிள் ஜாண் வாசர் தனது நல்ல வேலையை மற்ற மக்களின் நலனுக்காக தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று தான் முழு மனதார விரும்புவதாகவும் சொன்னார். அங்கிள் ஜாண் அந்த மனிதரிடத்தில் சற்று கூடுதலாக அவரது ஆத்துமாவின் காரியமாகப் பேசிவிட்டு அந்த மனிதருக்காக அந்த இடத்தில் ஜெபித்த பின்னர் அங்கிருந்து கடந்து சென்றார். நாளடைவில் அந்த விருத்தாப்பிய மனிதர் ஆண்டவருக்குத் தன்னை ஒப்புவித்து பின் நாட்களில் ஒரு மெய்யான சாட்சியுள்ள ஒரு கிறிஸ்தவரானார்.
நான் எங்கள் சபையில் ஆயத்தம் செய்த அந்தக் கூட்டங்கள் 2 வாரங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. சில சமயங்களில் கூட்டத்தில் சில வாலிபர்கள் கலந்து கொண்டு கூட்டத்தில் கேலி செய்து, பரிகாசம் பண்ணி கூட்டத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதைக் கண்ட அங்கிள் ஜாண் வாசர் உடனே எழுந்து அந்த வாலிபர்களின் கூட்டத்திற்கு நேராகச் சென்று அவர்களுக்கு முன்பாக அமைதியாக நின்று அந்த வாலிபர்கள் வெட்கப்படவும், அதே சமயம் தங்களது ஆத்துமாவின் இரட்சிப்பின் மேல் கவலை கொள்ளத்தக்கதான மன உருக்கமான ஜெபத்தைக் கண்ணீரோடு ஏறெடுத்து விடுவார். அவ்வளவுதான், பழைய நிலை முற்றுமாக மாறி கேலி செய்ய வந்த வாலிபர்கள் பயபக்தியாக அமர்ந்து விடுவார்கள்.
இரண்டு வாரக் கூட்டங்களின் கடைசி நாளில் அங்கிள் ஜாண் வாசர் புதிதாக தங்களை ஆண்டவருக்கு ஒப்புவித்தவர்களுக்காக ஆத்தும பாரத்தோடு ஜெபித்து, விசேஷமான தேவ ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினார். கூட்டங்களில் கலந்து கொண்ட யாவருக்கும் அவர் பொதுவான அருமையான ஞானபோதனைகளை வழங்கி, விழித்திருந்து ஜெபித்து தங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை காத்துக் கொள்ள மன்றாடினார். அவரைப் போல அன்று பேசிய பரிந்து மன்றாடுதலின் வார்த்தைகளை நான் இதுவரை கேட்கவுமில்லை, இனி கேட்பேன் என்று நினைக்கவுமில்லை. யாவரும் கண்ணீர்விட்டுக் கதறவும், ஏங்கவும் தக்கதான மிகவும் மனம்உருக்கம் நிறைந்த தனது இறுதி ஜெபத்தை எங்களுக்காக ஏறெடுத்தார்.
ஜெபம் முடிந்ததும் யாவரும் அவரைச் சுற்றி நின்று கடைசியாக ஒரு தடவை அந்த மெய் தேவ பக்தனின் கரத்தைப் பற்றிப்பிடித்து அவருக்கு இறுதி விடை கொடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய தேவ ஆலோசனையும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்ற ஆசீர்வாத வார்த்தையையும் அங்கிள் ஜாண் வாசர் கூறினார். அந்த இறுதி விடைபெறும் நேரம் அங்கு கூடி வந்திருந்த அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழ வைப்பதாகவும், கண்ணீர் சிந்தும் வேளையாகவும் இருந்தது.
நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விடைபெறும் நேரம் வந்தபோது அங்கிள் ஜாண் வாசர் என்னைப் பார்த்து “என் அருமை சகோதரனே, தேவன் உங்களோடும், உங்களுடைய இந்த திருச்சபையின் மக்களோடும் இருப்பாராக. உங்கள் விருத்தாப்பிய சகோதரன்அங்கிள் ஜாண் வாசரை உங்கள் ஜெபங்களில் சில வேளைகளில் நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அங்கிள் ஜாண் வாசர் எங்களிடமிருந்து விடைபெற்று தனது வீட்டைச் சென்றடைந்தபோது 1877 ஆம் ஆண்டின் கடைசி மாத நாட்களாகும். தனது அருமை இரட்சகருக்காக 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக அயராது பாடுபட்டு அழியும் ஆத்துமாக்களின் மீட்புக்காக அவர் எடுத்துக் கொண்ட இளைப்பாறுதலில்லாத ஓயாத பிரயாசங்கள் அவருக்கு சரீரத்தில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கினது.
அங்கிள் ஜாண் வாசர் மோட்ச மகிமைக்குள் பிரவேசித்தது
தனது சரீரத்தில் காணப்பட்ட ஒருவித தாங்கொண்ணா வலி வேதனை காரணமாக அவர் சுமார் 6 மாத காலம் சாஷ்டாங்கமாக கட்டிலில் தலை குப்புற நெடுஞ்சாண் கிடையாக படுத்திருந்து வேதனைப்பட்டார். அந்த நிலையில் அந்த பரிசுத்த பக்தனை பார்க்க சகிக்க முடியாத ஒரு துயரக் காட்சியாக இருந்தது. மருத்துவம் அவருக்கு சுகம் கொடுக்கவோ அல்லது அவரது கடும் வேதனை, மற்றும் வலியிலிருந்து சற்று நிவாரணம் அளிக்கவோ கூடாது போயிற்று.
1878 ஆம் ஆண்டு கோடை காலத்தின் மத்திப நாட்கள் வந்தபோது அங்கிள் ஜாண்அவர்களின் தேக சுகம் சற்று புத்துயிர் பெறுவது போல தென்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது பரம எஜமானரின் திராட்ச தோட்டத்தில் மிகவும் சிறு சிறு வேலைகளைச் செய்தார். தெருக்களில் அவர் மீண்டும் காணப்பட்டார். ஓய்வு நாளில் கர்த்தருடைய ஆலயத்திலும் அவர் வந்து கலந்து கொண்டார். ஒரு காலத்தில் துடு துடுப்பாக நடந்து சென்ற அவரது கால் நடையில் இப்பொழுது தளர்ச்சியும், சோர்பும் காணப்பட்டது. எனினும்,அவரது குரல் வழக்கமான கணீர் ஒலியுடன் வெளி வந்தது. அவரது சிரிப்பு பூரண பொலிவுடன் முகத்தில் பிரகாசித்தது. அதை வைத்து நாம் அவரது சரீர சுகத்தை சரி என்று சொல்ல முடியாமல் போய்விட்டது. காரணம், விளக்கு அணைவதற்கு முன்பு அது ஒரு கணம் பிரகாசமாக எரிந்த பின்னர் உடனே அணைந்து விடுகின்றதல்லவா!
கடைசி நாள் வந்தது. அது டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக் கிழமை. அங்கிள் ஜாண் வாசரின் மிகவும் உண்மையுள்ள மருத்துவர் டாக்டர் ஹார்வி தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தார். கடந்த 25 ஆண்டுகாலமாக அவர் அங்கிள் ஜாண் வாசரின் குடும்ப வைத்தியர். மிகவும் நல்ல நண்பர், மிகவும் அன்பான கிறிஸ்தவ சகோதரன். அவருடைய பழக்கப்பட்ட மருத்துவ கண்கள் அங்கிள் ஜாண் வாசரின் பூவுலக வாழ்வின் முடிவின் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதைக் கண்டன. சில மணி நேரம் கடந்த பின்னர் மருத்துவர் திரும்பவும் வந்தார். அவர், மரித்துக் கொண்டிருந்த ஜாண் வாசரைப் பார்த்து எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி அவருடைய இறுதி விடைபெறும் வேளை வந்துவிட்டதை தெரிவித்தார். அதைக் கேட்ட அவர் தனது கடந்த கால தேவ ஊழியங்களின் ஆசீர்வாதங்களையும், கர்த்தர் தன்னை அநேகருடைய மனந்திரும்புதலுக்கு ஏதுவாக பயன்படுத்தின அற்புத செயல்களையும் கண்ணீரோடு ஒரு கணம் நினைவு கூர்ந்து மிகுந்த களிகூருதலோடு எளிமையான குரலில் பேசினார். அநேக வாசஸ்தலங்களுள்ள பிதாவின் வீட்டில் திரும்பவும் சந்திக்கும் வேளை வரை மருத்துவர் ஹார்வியிடம் ஆனந்தக் கண்ணீர் துளிகளோடு ஜாண்வாசர் விடை பெற்றுக் கொண்டார். மரண யோர்தான் கரையில் தனது பாதங்கள் நின்று கொண்டிருந்தபோதினும், அதை இன்னும் சிறிது நேரத்தில் கடந்து சென்று உச்சித பட்டண அலங்கார வாசலுக்குள் பிரவேசித்து விடும் அத்தனை விழிம்பில் அவர் இருந்தபோதினும் தனது பூவுலக வாழ்வின் இறுதி வேளை அத்தனை விரைவாக வந்து விட்டதா என்று அவர் ஆச்சரியப்பட்டார். மருத்துவர் ஹார்வியை எப்படியும் மறு நாளில் சந்திக்கலாம் என்ற முழு நம்பிக்கையோடு அவரிடம் விடை பெற்றார்.
ஜாண் வாசர் மரிப்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது என்பதை அவரது குடும்பத்தினர் நன்கு புரிந்து கொண்டனர். உடனே அவர்கள் எல்லாரும் அவரது மரணப் படுக்கையைச் சுற்றிலும் கூடி வந்தனர். அங்கிள் ஜாண் வாசரின் இரண்டாம் மனைவி அவருடைய உத்தம கூட்டாளியாகவும், சிறந்த ஆலோசகராகவும் 24 ஆண்டு காலம் அவரோடு வாழ்ந்து அவருக்குஅருமையாக பணிவிடை செய்திருந்தார்கள். உவால்டர், ஆல்பர்ட், ஹெய்த்தி, ஜானி ஆகிய அவரது அன்புச் செல்வங்களான நான்கு பிள்ளைகளும் அவரருகில் வந்து நின்று கொண்டிருந்தனர். தனது அருமைக் கண்மணிகள் தன்னண்டை வந்து நிற்பதை அவர் நன்கு கவனித்துக் கொண்டார். அந்த டிசம்பர் மாத பகற் காலம் மறைந்து இரவு வேளை வந்தது. அவரைச் சுற்றி நின்ற கூட்டத்தினருடன் அவருடைய சகோதரி மற்றும் ஒன்றுவிட்ட மற்றொரு சகோதரன் மற்றும் இரண்டு நண்பர்களும் வந்து கூடினார்கள்.
அந்த நேரம் மிகவும் சாந்தமாக எந்த ஒரு வலி வேதனையுமின்றி, மிகவும் அமைதியாக தான் தனது வாழ்நாள் முழுவதும் மிகுந்த பாசத்தோடு நேசித்து, ஓய்வு ஒளிவின்றி ஊழியம் செய்த தன் பரிசுத்த கர்த்தரிடம் அங்கிள் ஜாண் வாசர் கடந்து சென்றார். மரணம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அவரது உதடுகள் மெதுவாக அசைந்து பேசுவதைக்கவனித்த அவருடைய மனைவி தனது காதுகளை தாழ்த்தி அந்த வார்த்தையைக் கவனித்தார்கள். “மகிழ்ச்சியோடு விடைபெறுகின்றேன்” “மகிழ்ச்சியோடு விடைபெறுகின்றேன்” என்று அவர் இரண்டு தடவைகள் கூறினார். அதையடுத்து திரும்பவும் அவரது உதடுகள் அசைவதைக் கவனித்த அவரது மனைவி மறுபடியும் தனது செவிகளைத் தாழ்த்தி கவனித்தபோது “அல்லேலூயா” என்ற ஆர்ப்பரிப்பின் குரலோடு அவரது வாய் நிரந்தரமாக மூடிக் கொண்டது.
சாயங்காலம் 7 மணிக்கும் சற்று பிந்திய நேரத்தில் அவரது ஜீவன் அமைதியாகப் பிரிந்து சென்றது. இறுதியாக சிலுவைப் போர் வீரன் அங்கிள் ஜாண் வாசர் தனது ராஜாதி ராஜாவின் பூமிக்குரிய சேவையிலிருந்து நித்திய ஓய்வு பெற்றுக் கொண்டார். அத்துடன் அவர் தனது சேவைக்கான ஜீவ கிரீடத்தைத் தன் கர்த்தாவின் ஆணி கடாவுண்ட அன்புக் கரங்களிலிருந்து பெற்று தலைமேல் சூட்டிக் கொள்ளப் பாடி பறந்து சென்றுவிட்டார்.
அங்கிள் ஜாண் வாசர் மரித்து தலை சாய்த்த இடமானது அவரை அதிகமாக நேசித்த அவருடைய கொஞ்ச கிறிஸ்தவ நண்பர்கள் அவருக்கு அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்த வீடாகும். அவர் தனது விதவை மனைவிக்கென்றும் தனது நான்கு பிள்ளைகளுக்காகவும் இந்த உலகத்தில் எந்த ஒரு ஆஸ்தி ஐசுவரியத்தையும் பின் விட்டுச் செல்லவில்லை. அவர் விட்டுச் சென்றதெல்லாம் எந்த ஒரு கறை திரையற்ற மாசற்ற பரிசுத்த வாழ்க்கையையும், தன் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக மிகுந்த வீராவேசமான அர்ப்பணிப்பையும், பரிசுத்தமான தியாகத்தையும் மாத்திரமே. அங்கிள் ஜாண் வாசரின் அப்படிப்பட்ட மகத்தான தியாக வாழ்வை தற்போதைய கிறிஸ்தவ தலை முறையினர் மீண்டும் ஒரு முறை பெற்றுத் தங்கள் ஆண்டவரை மகிமைப்படுத்த முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் திங்கள் கிழமை பிற்பகல் ஜாண் வாசரை நேசித்த அவருடைய அன்பர்கள் அவருடைய சரீரத்தை மில் ஸ்ட்ரீட் என்ற இடத்திலுள்ள தேவாலயத்திற்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அவருடைய சரீரம் தேவாலயத்திற்குள் வரும்போது அது மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது. அந்த நாள் மேக மூட்டமும், இருளானதுமான ஒரு நாளாகவிருந்தது. அந்த நாளின் காலை வேளை நல்லதோர் பனிப் பொழிவும், அதைத் தொடர்ந்து பலத்ததோர் மழையும் பெய்திருந்தது. தெருக்களிலுள்ள மக்கள் கூட்டத்தை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக யாவரும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்திய ஒரு துக்க தினமாக அது இருந்தது. அங்கிள் ஜாண் வாசருக்கு மிகவும் பிடித்தமான 103 ஆம் சங்கீதத்தை அவருடைய நீண்ட கால கிறிஸ்தவ நண்பர் டாக்டர் ஸ்டோன் என்பவர் வாசித்தார். பின்னர் ஜாண் வாசரின் குருவானவர் டாக்டர் ஹெண்ட்ரிக் என்பவர் அங்கிள் ஜாண் வாசரின் முழு வாழ்க்கை சரிதையையும், அவரது அருமையான தேவ ஊழியத்தின் நடபடிகளையும் விவரமாகப் பகிர்ந்து கொண்டார்.
அதற்கப்பால்புரூக்லின் பட்டணத்தை சேர்ந்த குருவானவர் டாக்டர் ஃபுல்டன் அவர்கள் தனது பேச்சைத் தொடர்ந்தார். அவர் அங்கிள் ஜாண் வாசரின் பிரேத பெட்டியிலுள்ள அவருடைய முகத்தைப் பார்த்தவராக “தனது வாழ்க்கை ஓட்டத்தை இப்பொழுது தானே முடித்திருக்கும் அப்போஸ்தலனாகிய அங்கிள் ஜாண் வாசர் அவர்கள் ” நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று ஜெய கெம்பீர முழக்கமிடும் ஜெய தொனியை நான் இந்த நேரத்தில் என் காதுகளால் நன்கு கேட்க முடிகின்றது. தன்னுடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தனது தேவ ஊழியத்திற்கான அனைத்து வல்லமையையும், வெற்றியையும் பெற்றுக் கொண்ட அங்கிள் ஜாண் அவர்கள் அதைக் கொண்டு எந்த ஒரு நிலையிலும் பெருமை கொள்ளவே இல்லை. அவர் தனது தேவ ஊழியத்தை மிகவும் எளிமையும், தாழ்மையுமான கிறிஸ்தவப் புத்தகங்களை விற்கும் ஒரு தனித்தாள் ஊழியனாக (Colporteur) ஆரம்பித்தார். அந்த அற்பமான ஆரம்பத்திலேயே அவர் படிப்படியாக உயர்ந்து முழு இஸ்ரவேலுக்கும் அவர் அதிபதியானார். அங்கிள் ஜாண் வாசரை நான் முதன் முதலில் பாஸ்டன் பட்டணத்தில் சந்தித்தேன். அங்குள்ள டிராமென்ற் டெம்பிள் என்ற இடத்தில் அப்பொழுது ஒரு எழுப்புதல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கர்த்தருடைய ஆவியானவரும் வல்லமையாக அசைவாடிக் கொண்டிருந்தார்.
அந்தச் சமயம் அங்கிள் ஜாண் வாசரும் பாஸ்டன் பட்டணத்தில் இருந்தார். அவர் அங்கிருப்பதை அறிந்த நான் கூட்டத்தில் வந்து கலந்து எங்களுக்கு உதவி செய்யும்படியாக அவரை அன்போடு அழைத்தேன். அவ்வளவுதான், உடனே அவர் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார். ஆ, அவர் எத்தனை ஆசை ஆவலோடு கூட்டத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! கூட்டத்தில் கலந்து கொண்ட மனந்திரும்பாத மக்களை அவர் நரக அக்கினியிலிருந்து கஷ்டத்துடன் இழுத்துக் கரை சேர்ப்பவராகக் காணப்பட்டார். ஒவ்வொரு நாளும் மனந்திரும்பிய ஆத்துமாக்கள் என்ற வெற்றிச் சின்னங்களை தனது பரம எஜமானரின் பாதார விந்தங்களில் படைப்பவராக அவர் காணப்பட்டார். ஒரு தடவை, ஒரு ஓய்வு நாளின் பிற்பகலில் எனது இடத்தை அவர் ஏற்று மக்களுக்குச் செய்தி கொடுக்கும்படியாக நான் அவரை அழைத்தேன். ஆ, அவர் அன்று கொடுத்த வல்லமையுள்ள தேவ செய்தியை நான் என்றுமே என் வாழ்வில் கேட்டதில்லை.
நியூ இங்கிலாந்து என்ற இடத்தின் கிராம பள்ளிக்கூடங்களிலும், கிராம தேவாலயங்களிலும் அவர் காணப்பட்டார். அதின் இருளான மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் காணாமற் போன ஆத்துமாக்களான ஆடுகளைத் தேடிச் சென்ற அவரை அவரது கால்கள் சுமந்து சென்றன. இப்பொழுது அங்கிள் ஜாண் வாசர் என்றுமாக முடிசூட்டப்பட்ட சிலுவை வீரராக ஆண்டவர் இயேசுவோடு கூட பரலோகத்தில் இருக்கின்றார்” என்று கூறி முடித்தார்.
குருவானவர் ஃபுல்டனைத் தொடர்ந்து இன்னும் சில தேவ மக்கள் ஜாண் வாசரின் பரிசுத்த ஊழியத்தைக் குறித்துப் பேசினார்கள். அதின் பின்னர் பவ்கீப்சி என்ற இடத்திலுள்ள பிரஸ்பிட்டேரியன் சபை குருவானவர் டாக்டர் வீலர் அவர்கள் அங்கிள் ஜாண் வாசரைத் தந்த அன்பின் ஆண்டவருக்கு மிகுந்த துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்து அவருக்கு நன்றி கூறினார். அவருடைய வார்த்தையைத் தொடர்ந்தே தேவாலய பாடகர் குழு ஜெய கெம்பீர தொனியில்:-
தம் சொந்த மோட்சானந்த வீட்டிற்கு என்னை அழைத்துக் கொள்ள,
என் இரட்சகர் எப்பொழுது வருவார் என்ற வேளையை
நான் அறியேன்.
ஆனாலும் அவர் இன்ப சமூகம் என் இருளை நீக்கிடும்
அதுவே என் மகிமையுமாம்.
என்ற பாடலைப் பாடினார்கள். பாடலைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு மிகவும் அறிமுகமான அந்த பரிசுத்த தேவ மனிதரின் முகத்தைக் கடைசியாக ஒரு தடவை கண்டு கொள்ளும்படியாக அலை அலையாக நகர்ந்து சென்றனர். “வாழ்க்கையின் கடும் புயலிலும், தாங்கொண்ணா வேதனையிலும், சாவின் கூரிலும் அந்த முகம் மிகுந்த தேவ சமாதானத்தோடிருக்க” அவர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.
பிற்பகலில் ஆரம்பித்த அடக்க ஆராதனை இருள் சூழ்ந்த சாயங்காலத்துக்குள்ளும் நன்றாகக் கடந்து சென்று விட்டது. பரிசுத்தவான்களான குருவானவர்களின் குழு அவரது சரீரத்தை ஹட்சன் பாங்க்ஸ் என்ற இடத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் உயிர்த்தெழுதலின் ஆனந்த நம்பிக்கையோடு அடக்கம் செய்தார்கள். அல்லேலூயா.