கார்டன் ஹால் (1784 – 1826)
(சுவிசேஷம் அறிவிக்க இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க மிஷனரி)
(360 ஏக்கர் உயர் விளைச்சல் நிலத்திற்கு சுதந்திரவாளியான அமெரிக்கா தேசத்தின் பெரும் பண்ணையார் ஒருவரின் மகன் தனது தகப்பனுடைய பண்ணையத்தைப் பார்த்துக் கொண்டு உலகம் அளிக்கக்கூடிய எல்லா இன்ப பாக்கியங்களையும் தனது வாழ்நாட்காலம் முழுமையும் அனுபவித்து சுகபோகமாக தனது இனஜன பெந்துக்கள், நண்பர்கள் புடை சூழ மரிப்பதற்குப் பதிலாக தன்னை ஆட்கொண்ட தன் அன்பின் இயேசு இரட்சகருக்கு அடிமையாகி, அவரது சுவிசேஷத்தை சுமந்து கொண்டு மிஷனரியாக இந்தியாவுக்கு வந்து தனது முழு பெலத்தோடும் தன் அன்பின் கர்த்தருக்குப் பணிபுரிந்து, இறுதியில் அந்த பரிசுத்த பணியிலேயே தனது சொற்பமான 41 வயதில் காலரா நோயால் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் அநாதையாக மரித்தார். தனது ஆண்டவர் இயேசுவுக்காக தனது சொந்த அழகிய அமெரிக்க தேசம், பெற்றோர், உற்றார், உறவினர், மனைவி, மக்கள் யாவரையும் குப்பையும், தூசியுமாக உதறித் தள்ளிய கார்டன் ஹால் என்ற பரிசுத்த மிஷனரியின் பிரகாசமான பரிசுத்த வாழ்க்கையை நாம் ஜெபத்துடன் வாசித்து நமது ஜீவியத்தை கர்த்தருக்குள்ளாக புதுப்பித்துக் கொள்ளுவோமாக.
பிறப்பும், இளமை காலமும்
இரவின் பிந்திய நேரம், பிரதான சாலைக்கு சற்று அப்பால் இருந்த அந்தப் பெரிய வெள்ளை வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு ஓரத்திலிருந்த பழைய சிகப்பு வீட்டிலிருந்த மக்கள் அந்த இரவில் மேற்கண்ட வெள்ளை வீட்டிலுள்ளோருக்கு உதவி செய்யும்படியாகவும், வெள்ளை வீட்டாருடன் சேர்ந்து சந்தோசம் அனுபவிக்கவும் அந்த இரவிலே அங்கு கூடியிருந்தார்கள்.
பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்ற கேள்வி குறி அனைவர் உள்ளங்களிலும் காணப்பட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் எலிசபெத் ஹால் அம்மையரின் காதிலே அவர்களுக்கு பிள்ளைப் பேறு பார்த்த மருத்துவ தாதி “ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்ற இனிப்பான செய்தியை கூறினாள். தனது பெரிய பண்ணை நிலத்தில் தனக்கு உதவி செய்யும்படியாக ஒரு மகனுக்காகவே ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்த நத்தான் ஹாலுக்கு தான் ஒரு பெரிய அன்பளிப்பை அளித்துவிட்ட மட்டற்ற மகிழ்ச்சி எலிசபெத் ஹால் அம்மையாரின் முகத்தில் பிரதி பலித்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கீழ்ப்பகுதியிலுள்ள மாசா சூட்ஸ் என்ற மாநிலத்தின் டோலண்ட் என்ற இடத்தில்வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் 1784 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் கார்டன் ஹால் என்ற அந்த ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தாய் தந்தையர் எலிசபெத், நத்தான் ஆகியோர் அமெரிக்காவின் கனடிக்காட் என்ற இடத்திலுள்ள எல்லிங்டன் என்ற இடத்திலிருந்து டோலண்ட் என்ற இடத்திற்கு ஆரம்ப காலத்திலேயே குடிபெயர்ந்தவர்களாவார்கள். கார்டன் ஹாலுடன் பிறந்தோர் 4 பேர்களாவார்கள். அவருடைய தந்தை நத்தான் ஹாலுக்கு 360 ஏக்கர் உயர் விளச்சல் நிலம் இருந்த கரணத்தால் வீட்டில் பிறந்தோர் வேலைசெய்ய பெலன் கொண்ட உடனேயே பண்ணை நிலத்தில் தங்கள் பணிகளை செய்ய எதிர்பார்க்கப்பட்டனர். கார்டன் ஹால் வளர்ந்து பெரியவனான போது அவனும் அப்படியே தனது தந்தையின் விசாலமான பண்ணை நிலங்களில் பாடுபடத் தொடங்கினான். அப்படிப் பாடுபட்டு வேலை செய்வது கார்டனுக்கு சற்று கடினமாக இருந்தபோதினும் அந்த பண்ணை நிலங்கள் நியூ இங்கிலாந்து என்ற இடத்தில் இருந்தமையால் அதின் கிராமப்புற அழகில் நமது கார்டன் சொக்கியே போனான் என்றுதான் சொல்ல வேண்டும். குளிர் காலத்தின் பனிப் பொழிவுகளின் மீது பளிச்சிட்டு மின்னும் சூரிய ஒளிக் கதிர்களையும், வசந்த கால மாதங்களில் வெடித்து வெளி வரும் பசும் துளிர்களையும், இலையுதிர் காலத்தின் மரங்களின் அழகையும் அவன் ஒருக்காலும் மறப்பதே இல்லை.
சிறுவனான கார்டன் நாளுக்கு நாள் வலிமையுடயவனாக வளர்ந்து வரவர உலகத்தைப் பற்றிய எந்த ஒரு கவலையற்ற பையனாக காணப்பட்டான். ஆனால், ஒரு நாள் வந்தது. அப்பொழுது அவன் தனது குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களைப் போல தனது தந்தையின் நியூ இங்கிலாந்துப் பண்ணை நிலத்தில் தனது வேலைப் பங்கையும் பகிர்ந்து கொள்ள வேண்டியதானது. சிறு பருவத்திலிருந்தே கார்டன் ஒரு வித்தியாசமானவனும், துடிதுடிப்பும், ஞானமும் உள்ளவனாக விளங்கினான். அக்கம் பக்கத்திலுள்ளோருக்கெல்லாம் கார்டனின் அபூர்வ ஞான அறிவுத்திறன் வியப்பாக இருந்தது. பண்ணையத்தில் தனது தந்தையின் கட்டிட கட்டுமானங்களுக்கு அவன் உதவி கரம் நீட்டி உதவி செய்தான். வேலைகளைத் துரிதமாகச் செய்ய இயந்திர நுட்பங்களை அவன் கண்டறிய ஆசைப்பட்டான். குறிப்பாக வயல்களுக்கு துரிதமாக நீர் இறைக்கக்கூடிய சுழல் சக்கர உருளைகளை நிர்மாணிப்பதில் அவன்அதிக புத்திசாலியாக இருந்தான். தனது ஓய்வு நேரங்களில் பெரிய காற்று பலூன்களை அவன் செய்து பறக்கவிட்டான். கார்டன் தனது வயதுக்கு சமமான இளைஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக புத்திசாலியாக விளங்கினான்.
அழகான பெரிய வெள்ளை வீட்டிற்கு அருகாமையிலேயே தேவனுடைய ஆலயமும் இருந்தது. 1797 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் 11 அங்கத்தினர்களில் எலிசபெத் ஹால் அம்மையாரும் ஒரு அங்கத்தினராவார்கள். 1800 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்தின் பல பகுதிகளில் உண்டான உயிர் மீட்சியைத் தொடர்ந்து ஆவிக்குரிய எழுப்புதலின் அனல் மங்காமல் எரிந்து கொண்டேதான் இருந்தது. அதின் காரணமாக டோலண்ட் தேவ ஆலயத்தில் வாரத்தின் நாட்களிலும் கூட்டங்கள் நடைபெற்றன. அந்தக் கூட்டங்கள் ஜீவனுள்ளதும், அனல் நிறைந்ததுமாகவே இருந்தன.
ஞாயிறு ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. பாடல்கள், பிரசங்கங்கள் எல்லாம் வெகு அருமை. நமது இளைஞன் கார்டன்ஹால் தேவ ஆலயத்திலுள்ள பெட்டி போன்ற தனது இருக்கையில் தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களுடன் அமர்ந்தவண்ணமாகவே ஆராதனைகளை உன்னிப்பாக கவனித்து வந்தான். அங்கு பிரசிங்கிக்கப்பட்ட நீண்ட பிரசங்கங்களை திறந்த உள்ளத்தோடு அவன் கவனித்தான். தேவனுடைய சுவிசேஷத்தின் வல்லமை, அதின் சவால், அதின் தன்னிகரற்ற மனமகிழ்ச்சி எல்லாம் கார்டனை கவர்ந்திழுப்பதாக இருந்தது.
அந்த நாட்களில் நியூ இங்கிலாந்து பகுதியில் இருந்த தேவாலயங்களில் கப்பல் கேப்டன் பெஞ்சமீன் விக்ஸ் என்பவர் கொடுத்த பரவசமான தேவச் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தன. தனது கப்பலில்தான் மார்ஷ்மேன் மற்றும் வார்ட் என்ற இரு மனிதரை வில்லியம்கேரி என்ற புகழ்பெற்ற இங்கிலாந்து தேச மிஷனரிக்கு உதவியாக அழைத்துச் சென்றதாகவும், அந்த வில்லியம் கேரி என்ற தேவ மனிதர் இந்தியாவிலுள்ள செராம்பூர் என்ற இடத்தில் எத்தனை சிறப்பாக மிஷனரி பணி செய்து கொண்டிருக்கின்றார் என்றும், அவர் மூலமாக எத்தனையோ இந்திய மக்கள் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று அதின் மூலமாக தேவ நாமம் மகிமை அடைகின்றது என்றும் அவர் கூறியிருந்தார். அதைக் கேட்ட நியூ இங்கிலாந்து மக்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் சேர்த்து அதை வில்லியம் கேரியின் மிஷனரிப் பணிக்கு அனுப்பி வைத்தனர். அந்தச் செய்தி கார்டன் ஹாலுக்கு உள்ளத்தை தொடும் செய்தியாக அமைந்தது.
டோலண்ட் தேவாலயத்தின் குருவானவர் ரோகர் ஹாரிசன்அவர்கள் சிறந்த பக்திமானும், வேத பண்டிதருமாகவும் இருந்தார். தனது குடியிருப்புக்காக அவர் ஒரு பெரிய வீட்டை நத்தான் ஹால் குடும்பத்தினரிடமிருந்தே பெற்று அதற்கான வாடகையை அவர் செலுத்தி வந்தார். குருவானவர் ரோகர் ஹாரிசன், ஹால் குடும்பத்தினருக்கு அருகாமையில் வாழ்ந்து கொண்டிருந்தமையால் இளைஞனான கார்டன் ஹாலுடைய அறிவுத்திறனை அவர் நன்கு கண்டு கொண்டார்.
சாயங்கால நேரங்களில் தனது பள்ளிக்கூட படிப்பும், தனது தகப்பனாரின் பண்ணையத்தில் தனக்கான வேலைகளும் முடிந்ததும் கார்டன், குருவானவர் ரோகர் ஹாரிசனின் வீட்டிற்கு வந்து அவரோடு நீண்ட மணி நேரங்கள் சம்பாஷித்துக் கொண்டே இருப்பான். உலகத்தின் பல்வேறு காரியங்களைக் குறித்தும் இருவரும் பேசுவார்கள். தன்னால் முடிந்தவரை அதிகமான அமெரிக்கா தேசத்தின் முன்னோடிக் கதைகளையும், இதர அயல் நாட்டு வீரதீர வரலாறுகளையும் படிக்குமாறு இளைஞன் கார்டனிடம் குருவானவர் கூறுவார். கார்டனுடைய ஆர்வமிக்க வாசிப்பு திறன், எழுத்தாற்றல் அனைத்தையும் கவனித்த குருவானவர் அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் மட்டும் கொடுக்கப்படும் பட்சத்தில் அவன் சிறந்து விளங்குவான் என்று தன்னளவில் நிச்சயித்துக் கொண்டார். கார்டனை எப்படியாவது கல்லூரிக்கு அனுப்பி வைத்து அவனை ஒரு கற்றறிந்த ஞானவானாக்க ஆவல் கொண்டார். ஆனால், கார்டனுடைய தந்தைக்கு தனது மகனை கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசை கிஞ்சித்தும் கிடையாது. மாறாக, குருவானவரின் முயற்சிகைளை கடுமையாக எதிர்த்தார்.
கார்டன் ஹாலின் கல்லூரி வாழ்க்கையும் மனந்திரும்பி தேவப் பணிக்கு தன்னை ஒப்புக் கொடுத்தலும்
1793 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வில்லியம் கல்லூரி அந்த நாட்களில் புகழ் பெற்று விளங்கியது. தங்கள் ஆண் மக்களை அந்தக் கல்லூரியில் கல்வி கற்பதற்காக சேர்ப்பது என்பது பெற்றோருக்கு புகழ் சேர்ப்பதாக இருந்தது. அந்தக் கல்லூரியானது கல்வி துறையில் அப்பொழுது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது.
கார்டன் ஹால் அப்பொழுது 22 வயதிய வாலிபனாக இருந்தான். டோலண்ட் சபையின் குருவானவரும், கற்றறிந்த மேதையுமான ரோகர் ஹாரிசன் என்பவர் கார்டனுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து வில்லியம் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை அவன் நல்ல விதமாக எழுத உதவி செய்தார். வில்லியம் கல்லூரியின் தலைவர் ஃபிச் என்பவர் கார்டனின் நுழைவுத் தேர்வு திறமையைக் கண்டு, குறிப்பாக ஆங்கில மொழி அறிவின் புலமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். வில்லியம் கல்லூரியில் நமது கார்டன் சேரும்போது அந்தக் கல்விஆண்டுக்கான ஒரு பகுதி பாடம் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. எனினும், கார்டன் கடுமையாக முயற்சித்து இரவின் பிந்திய மணி நேரங்கள் வரை படித்து நடத்தி முடித்த பழைய பாடங்களை எல்லாம் மனதில் நன்கு பதித்துக் கொண்டான்.
கார்டன் தனது ஓய்வு மணி நேரங்களை கல்லூரியின் புத்தகசாலையில் செலவிட்டான். தங்களுடைய வாழ்க்கையில் துன்புறும் மனுக்குலத்திற்காக அரிய பெரிய காரியங்களை சாதித்த மேன்மக்களின் வாழ்க்கை வரலாறுகளை படிப்பதில் கார்டன் மிகுந்த கவனம் செலுத்தினான். அமெரிக்க கப்பல்கள் கொண்டு வந்த கீழை நாடுகளின், விசேஷமாக இந்தியாவின் கதைகளை அவன்ஆர்வத்தோடு படித்தான். ஆப்பிரிக்காவின் “நன் நம்பிக்கை முனையை” சுற்றி 1498 ஆம் ஆண்டு இந்தியா வந்து சென்ற வாஸ்கோடகாமா என்ற புகழ்பெற்ற கடல் யாத்ரீகனும், மாலுமியுமான அந்த மனிதரின் பிரயாணக் கட்டுரைகளை கார்டன் மிகுந்த உவகையுடன் வாசித்தான். ஆண்டவருடைய சீடரான தோமாவுடைய வருகைக்குப் பின்னர் இந்தியாவில் கிறிஸ்தவ சபைகள் தோன்றியதையும், இந்தியாவுக்கு வந்து தேவப்பணிபுரிந்த கத்தோலிக்க பரிசுத்தவான்களான பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி. நொபிலி போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களின் தேவப்பணிகள் போன்றவற்றையும் கார்டன் வாசித்து தனக்குள்ளாக ஆனந்த பரவசம் அடைந்தான். இப்படிப்பட்ட தேவ மனிதர்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள் அவனுடைய உள்ளத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது.
கார்டன் அப்பொழுது மனந்திரும்பாதவனாக இருந்த போதினும் தேவன் தன்னை தமது நல்ல நாமத்தை பிரசிங்கிக்க வெளி நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு அழைப்பரானால் அந்த அழைப்பை உடனே ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதாக தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். இந்தியாவிலுள்ள இலட்சாதி லட்சம் மக்கள் உலக இரட்சகரான இயேசு கிறிஸ்துவை குறித்து ஒரு தடவை கூட தங்கள் வாழ்வில் கேள்விப்படவில்லை என்பதையறிந்த கார்டனின் உள்ளம் நெருப்புக்கு முன்னாலுள்ள மெழுகு போல உருகினது. ஏழ் கடல்கள் தாண்டிக் கிடக்கும் பெரிய இந்திய நாட்டின் மக்கள் சிறந்த ஆன்மீகவாதிகள் என்றும், இரட்சண்யத்தை அவர்கள் ஆவலோடு தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும், உலகத்தின் சில நாடுகள் மாத்திரமே தங்கள் மிஷனரிகளை அனுப்பி இந்திய மக்களின் ஆன்மீகத் தாகத்தை தீர்க்கின்றார்கள் என்றும், ஆனால் தனது சொந்த நாடான அமெரிக்காவை பொறுத்தவரை அது தனது பெரிய கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பி வாசனை திரவியங்களையும், இதர விலையேறப்பெற்ற வர்த்தக பண்டங்களையும் கொள் முதல் செய்து வாணிபம் செய்வதைத் தவிர அது தனது நாட்டிலிருந்து தேவனுடைய நற்செய்தியை அறிவிக்க ஒரு மிஷனரியைக்கூட இந்தியாவுக்கு அனுப்பவில்iலை என்பதை கார்டன் மிகுந்த வேதனையோடு கவனித்தான்.
கார்டனுடைய உலகப்பிரகாரமான கல்வியானது வில்லியம் கல்லூரியில் சிறப்பாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் அவனது உள்ளத்தில் தேவனுடைய நற்செய்தியை அமெரிக்காவிலிருந்து வேறு எவரும் இந்தியாவுக்கு கொண்டு செல்லாதபட்சத்தில் தானே அந்தச் சவாலை ஏற்றுச் செல்லுவதென்று தனக்குள்ளாக முடிவெடுத்தான். இந்தியாவுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் பணிக்கென்று கார்டன் இந்தியாவின் பல்வேறுபட்ட மதங்களைக்குறித்தும் கற்றறிந்தான். கார்டனைப் போலவே தங்கள் இருதயங்களில் தேவனுடைய அன்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் பேர் இருந்தனர். அவர்கள் தேவனுடைய இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று அவரது ஆழ்ந்த தேவ சமாதானத்தால் திழைத்துக் கொண்டிருந்தார்கள். “என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்று கூறிய தங்கள் மீட்பராம் இளம் கிழக்கு இந்திய இளைஞர் இயேசு கிறிஸ்துவின் கட்டளையை தங்கள் சிரசின் மேல் ஏற்று உலகத்தின் எந்த ஒரு பகுதிக்கும் செல்ல துடி துடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அவர்கள்.
1806 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் கார்டனும் அவருடன் கல்வி பயின்ற ஐந்து மாணவர்களும், மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் கல்லூரியிலிருந்து சற்று தூரமான இடம் ஒன்றிற்கு பிக்னிக்குக்காக சென்றனர். தங்கள் அருமை இரட்சகர் இயேசுவின் சுவிசேஷ நற்செய்தியை தூரமான இடங்களுக்கு எடுத்துச் சென்று கூறுவதைக் குறித்து தங்கள் உள்ளத்தின் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளுவதற்காகவே அந்த பிக்னிக்கை அவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். அவர்கள் தங்கள் வில்லியம் கல்லூரியைத் தாண்டி ஹூசாக் நதி கரையிலுள்ள சுலோவன் புல் வெளி மைதானத்துக்கே சென்றுவிட்டனர்.
அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்கும் கூடுதலாக தேவனுடைய காரியத்தை குறித்து விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. சற்று நேரத்திற்கெல்லாம் வானம் மழை மேகங்களால் இருண்டு இடி முழக்கங்கள் முழங்கவே அவர்கள் அனைவரும் அருகாமையிலிருந்த ஒரு பண்ணையின் வைக்கோல் படைப்பில் அடைக்கலம் புகுந்தனர். மழை கொட்டத் தொடங்கினது. அவர்கள் எல்லாரும் தங்கள் இருதயங்களை தேவனுக்கு முன்பாக உடைத்து ஊற்றி கர்த்தர் தங்கள் ஒவ்வொருவரோடும் இடைபடும்படியாக ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
கொட்டும் மழை நிற்பதற்கு முன்பாகவே வாலிபர்கள் எல்லாரும் கர்த்தருக்கு தங்களை சமூலமாக ஒப்புவித்து அவர் தங்களை தமது ஊழியத்தின் பாதையில் எந்த ஒரு இடத்திற்கு அனுப்புவதானாலும் போக ஆயத்தமாக இருப்பதாக கூறினர். அந்த வைக்கோல் படைப்பில் தானே நமது கார்டன் உள்ளத்தில் தேவ ஆவியானவர் பலமாக கிரியை செய்ததால் அவர் பாவ உணர்வடைந்து தனது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு அழுது அங்கலாய்த்து அங்குதானே ஆண்டவர் இயேசுவை தனது ஆத்தும நாயகராக ஏற்று இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்டார். அவரது ஆவிக்குரிய பரிசுத்த நண்பர்களும் அந்த இடத்தில் அவருடைய இரட்சிப்பின் சம்பந்தமாக அவருக்கு ஒத்தாசை புரிந்தனர். அந்த வைக்கோல் படைப்பில் கார்டன் தன் வாழ்வை முழுமையாக ஆண்டவர் இயேசுவுக்கு அர்ப்பணம் செய்தார்.
மேற்கண்ட வைக்கோல் படைப்பு கூட்டத்திற்கு பின்னர் 1807 ஆம் ஆண்டு கோடைகால நாட்களின் போது கார்டனும் அவரது நண்பர்கள் சாமுவேல் மில்ஸ் என்பவரும், ஜேம்ஸ் ரிச்சர்ட்சும் மற்றுமொரு வைக்கோல் படைப்பில் ஒரு நாள் முழுமையையும் ஜெபத்தில் செலவிட்டு தங்களது ஆண்டவருடைய ஊழிய சம்பந்தமான தங்களது எதிர்கால திட்டங்களை வரைந்தனர்.
குருவானவராக நியமனம் பெற்றது
கார்டன் தமது எம்.ஏ. பட்டத்தை வில்லியம் கல்லூரியில் சிறப்பான மதிப்பெண்களுடன் 1808 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெற்றுக் கொண்டார். அவரது கல்வித் தரத்தைப் பாராட்டி கல்லூரி முதல்வர் அவர் கற்ற அந்த வில்லியம் கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்ற வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார். ஆனால், கார்டனின் உள்ளார்ந்த ஆசை ஆண்டவருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதாக இருந்தமையால் அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேவன், கார்டனுடைய வாழ்க்கையை படிப்படியாக வழிநடத்திக் கொண்டு சென்றார். தனது வாழ்க்கையை கர்த்தருக்கு முற்றுமாக ஒப்புவித்த கார்டனுக்கும் அது நன்றாகவே தெரிந்திருந்தது. தேவனுக்கு ஊழியம் செய்ய தனக்குப் போதுமான வேதசாஸ்திர கல்வி தேவை என்பதை கார்டன் தனக்குள்ளாக உணர்ந்து கொண்டிருந்த வேளை பண்டிதர் எபநேசர் போர்ட்டர் என்ற தேவ மனிதர் கார்டனை தனது குடும்பத்தினருடன் வந்து தங்கியிருக்க வேண்டிக் கொண்டு அவருக்கு குருத்துவ கல்வியையும் உலகின் பல்வேறு மதங்களின் போதனைகளைக் குறித்த கல்வியையும் தனது சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொடுத்து தேவனுடைய சுவிசேஷத்தை அதிகாரப் பூர்வமாக ஆலயங்களில் பிரசங்கிக்கக்கூடிய ஒரு குருத்துவ உத்திரவாத பட்டத்தையும் கார்டனுக்கு வாங்கிக் கொடுத்தார்.
1809 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் கார்டன் ஒரு குருவானவராக வெளி வந்தபோது பல சபைகளும் அவரை தங்கள் சபைக்கு குருவானவராக அழைத்தன. காரணம், கார்டன் ஒரு வல்லமையான சிறந்த பிரசங்கியாராக விளங்கினார். தேவ சமூகத்தில் அதிகமான காத்திருப்பு மற்றும் மிகுதியான ஜெபத்திற்குப் பின்னர் கனடிக்காட் என்ற இடத்திலுள்ள உட்பரி என்ற இடத்தின் திருச்சபை குருவானவராக இருக்க அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அவரது உள் மனம் தேவனுடைய மிஷனரியாக, கடல்கள் கடந்து வேற்று நாட்டுக்குச் செல்ல அவரை தூண்டிக் கொண்டே இருந்தது. தான் விரும்புகின்ற எந்த நேரத்திலும் தன்னை குருவானவர் பணியிலிருந்து விடுவித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கார்டன் தனது குருவானவர் வேலையை ஒப்புக் கொண்டார்.
முதல் குருவானவராக உட்பரி என்ற அந்த சபையில் கார்டன் பொறுப்பெடுத்ததும் அவருக்கு போராட்டம் ஆரம்பமாயிற்று. புதிய குருவானவர் கார்டன் ஹால் தமது பிரசங்கங்களிலே சபை மக்களின் பாவங்களை கண்டித்துப் பேசினார். சபை மக்களின் பாவங்களை குருவானவர் மென்மையாக கண்டிக்க வேண்டும் என்று சபையினர் விரும்பினார்கள். ஆனால், குருவானவர் கார்டன் அந்த விசயத்தில் மென்மையையும், பூசி மெழுகி மறைப்பதையும் விரும்பாமல் மக்களின் தேவனுக்கு விரோதமான பாவங்களை கடுமையாக கண்டித்து சாடிப் பேசினார். தன்னை சீக்கிரமாக தங்கள் சபையிலிருந்து வெளியேற்றும் முகமாக அவர்களின் பாவங்களை அவர்களுக்கு முன்பாகப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த சபையினர் அவரை தங்கள் சபையிலிருந்து வெளியேற்றுவதற்குப் பதிலாக அவரை நேசித்து அவரையே தங்கள் நிரந்தரமான குருவானவராக இருக்க மன்றாடினார்கள். அந்தக் காரியம் கார்டனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்ததுடன் எந்த ஒரு காரியத்திலும் பாவத்திற்கு இணக்கம் தெரிவித்து பாவத்துடன் உடன்படாமல் தனது தேவ பணியை உத்தமமாக நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரு பரிசுத்த பாடத்தையும் அந்த நிகழ்ச்சி அவருக்கு கற்றுக் கொடுத்தது.
அந்த உட்பரி சபையினர் தங்கள் குருவானவர் கார்டனுக்கு மிகவும் கை நிறைந்த சம்பளமாக ஆண்டுக்கு 600 டாலர்கள் கொடுத்தனர். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த தொகை ஒரு பெரிய புதையல் போன்றது. சுமார் ஒரு ஆண்டு கால பணிக்குப் பின்னர் 1810 ஆம்ஆண்டு மே மாதம் கார்டன் தனது உட்பரி திருச்சபையைவிட்டு வெளிக் கிளம்ப ஆயத்தமானபோது சபையினர் அவரை இன்னும் கொஞ்ச ஆண்டுகள் தங்கள் சபையிலேயே குருவானவராக இருக்க கெஞ்சிக் கேட்டனர். அவர்களுக்கு கார்டன் சொன்ன பதில் இதுதான் :- “கிறிஸ்தவ உலகின் எந்த ஒரு இடத்திலும் நான் நிலையாக இருக்கவே மாட்டேன். தங்கள் சுகத்துக்காகவும் , ஐசுவரியத்துக்காகவும், கவலையில்லாத சுகமான வாழ்வு வாழ்வதற்காகவும் குருவானவர்களாக மற்றவர்கள் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரை பசி, தாகம், கஷ்ட துன்பங்களை நான் அனுபவித்து தெருவிலும், திண்ணையிலும், வானம் பார்த்த பூமியிலும் என் ஆண்டவர் இயேசுவுக்காக எனது படுக்கையை போடக்கூடியவன் நான். அன்பின் ஆண்டவர் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிராத மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் என்னை அழைக்கின்றார். இருளிலுள்ள அந்த ஜனங்களுக்கு தேவனுடைய சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ!” என்று கூறினார்.
ஆண்ட்டோவர் திருமறைக் கல்லூரி
திருமறை கல்வியை இன்னும் சிறப்பாக கற்றுக் கொள்ளுவதற்காக 1810 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கார்டன் ஆண்ட்டோவர் திருமறை கல்லூரியில் சேர்ந்தார். வில்லியம் கல்லூரியில் பயின்றபோது கார்டன் தமது உலகப்பிரகாரமான கல்வியை கற்றார். ஆனால், ஆண்ட்டோவரில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை ஆழமாக கற்றறியும் திருமறைக் கல்வியில் ஈடுபட்டார். மற்ற மார்க்கங்களிலுள்ள மக்கள்எவ்வண்ணமாக கடவுளைக் கண்டடைய முயற்சிக்கின்றனர் என்பதை கார்டன் இந்த வேதசாஸ்திர கல்லூரியில்தான் அதிகமாக ஆராய்ந்தார். அங்கு அவர் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளை கற்று பாண்டித்தியம் பெற்றார். அந்த பண்டைய மொழிகளில் புலமை பெற்றது அவருக்கு மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள பேருதவியாக இருந்ததுடன் தனது வருங்காலத்திய இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புகளுக்கும் அது கை கொடுத்து உதவியது. தான் ஒரு பன்மொழிப் புலவர் என்பதை கார்டன் நிரூபிக்கக்கூடியவராக இருந்தார். தேவன் அவருக்கு இதர மொழிகளை சுலபமாக கற்றுக்கொள்ளக்கூடிய அதிசயமான மொழி அறிவின் தாலந்துகளையும் கொடுத்திருந்தார்.
இந்து மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக அவர் கற்றறிந்த ஆழ்ந்த கல்வி ஞானம் அந்த மார்க்கத்திலுள்ளோரை மெய்யான தேவனாம் இயேசு கிறிஸ்துவண்டை வழிநடத்த பின் நாட்களில் அவருக்கு பெரிதும் அனுகூலமாக இருந்தது. ஆண்ட்டோவர் திருமறைக் கல்லூரியில் கார்டன் ஹாலுடன் சாமுவேல் மில்ஸ், அதோனிராம் ஜட்சன், சாமுவேல் நியூவெல், சாமுவேல் நாட் போன்ற தேவ பக்தர்களான வாலிபரும் வேத சாஸ்திர கல்வி பயின்றனர். அந்த இளைஞர்கள் எல்லாரும் ஒன்று கூடி வெளி நாடுகளுக்கு மிஷனரிகளை அனுப்பக்கூடிய ஒரு மிஷனரி ஸ்தாபனத்தை உருவாக்க அதிகமாகப் பிரயாசப்பட்டனர். அந்த இளைஞர்கள் இரவின் பிந்திய மணி நேரங்களில் உட்கார்ந்து அதிகமாக ஜெபித்து, தேவ சமூகத்தில் கெஞ்சி மன்றாடி, திட்டங்கள் போட்டு எப்படியாவது ஒரு மிஷனரி இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்துவிடவேண்டும் என்று பாடுபட்டனர்.
அந்தச் சமயத்தில் மேலே நாம் கண்ட சாமுவேல் நாட் என்ற இளைஞரை நியூபரிபோர்ட் என்ற இடத்திலுள்ள தேவாலய போதகர் பண்டிதர் சாமுவேல் ஸ்பிரிங் என்பவர் தமது ஆலயத்தில் தேவச் செய்தி கொடுக்கும்படியாக ஒரு வாரம் அழைத்திருந்தார். அந்தப் போதகரிடத்தில் சாமுவேல் நாட், மிஷனரி இயக்கம் ஒன்றுஉடனடியாக அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை கூறியபோது, அதே ஆத்தும பாரத்தால் தவித்துக் கொண்டிருந்த அந்தப் போதகர் பூரிப்படைந்தார். தன்னுடன் ஆண்ட்டோவர் திருமறைக் கல்லூரியில் திருமறை பயிலும் சில இளைஞர்களும் அதே பரிசுத்த எண்ணத்தில் இருப்பதை சாமுவேல் நாட் மேற்கண்ட போதகரிடம் தெளிவுபடுத்திக் கூறினார்.
மறு நாள் இரவே, நியூபரிபோர்ட் போதகர் பண்டிதர் சாமுவேல் ஸ்பிரிங் வேறு சில வேத பண்டிதர்களையும், குருவானவர்களையும் ஒன்று கூடி வரும்படி அழைத்து அவர்கள் முன்னிலையில் ஆண்ட்டோவர் திருமறைக் கல்லூரியில் திருமறை பயிலும் சாமுவேல் நியூவெல் என்ற தேவ பக்தியுள்ள இளைஞனை மிஷனரி இயக்கத்தின் அத்தியாவசிய தேவையை கூறும்படி கேட்கவே அந்த இளைஞனும் தனது இருதயத்தை முற்றுமாக உடைத்து ஊற்றி அமெரிக்காவிலிருந்து மிஷனரிகளை வெளி நாடுகளுக்கு அனுப்ப வேண்டியதன் தவிர்க்க முடியாத தேவையை கண்ணீர் நிறைந்த கண்களோடு விளக்கிக் கூறினார். கூடி வந்த வேத பண்டிதர்களும், குருவானவர்களும், சாமுவேல் நியூவெல் என்பவiரை ஆண்ட்டோவர் திருமறைக் கல்லூரியில் உள்ள தேவ பக்தியுள்ள இளைஞர்களிடம் கூட்டாக ஒரு அறிக்கை தயாரித்துக் கொடுக்கும்படியாக கேட்டு அதை திருச்சபையின் பொது குழுவிலே வைத்தனர்.
பிராட்ஃபோர்ட் என்ற இடத்தில் கூடி வந்த அந்த பொது குழுவிலே அந்த அறிக்கை வைக்கப்பட்டது. அந்தப் பொது குழு கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக தனது குதிரை இழுக்கும் சாரட்டு வண்டியிலே சென்ற ஒரு முக்கியமான அங்கத்தினரை ஒரு வாலிபன் அவரது குதிரை வண்டி உடனேயே ஓடிக்கொண்டே மிஷனரி இயக்கத்தை தோற்றுவிக்க பொது குழுவிலே வைக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆதரிக்கும்படியாக மன்றாடி கேட்டுக் கொண்டே ஓடினான். அப்படியாக தலை தெறிக்க ஓடிய அந்த வாலிபன் நமது கார்டன் ஹால் என்பதை பின்னர் அறிந்தபோது அந்த அங்கத்தினர் அடைந்த ஆச்சரியத்தைவிட அப்படி தன்னுடைய குதிரை வண்டியுடன் ஓடிக்கொண்டு வந்த அதே கார்டன் ஹால் அமெரிக்க மிஷனரி குழுவில் இடம் பெற்று அமெரிக்காவின் முதல் மிஷனரியாக இந்திய நாட்டிற்குச் சென்றது அவருக்கு மட்டில்லாத ஆச்சரியத்தை அளித்தது. மிஷனரி வாஞ்சை நிறைந்த கார்டன் ஹால் குதிரை வண்டியோடு ஓடும் காட்சியை நீங்கள் படத்தில் காணலாம்.
ஆண்ட்டோவர் வேதாகம கல்லூரி மாணவர்களான கார்டன் ஹால், அதோனிராம் ஜட்சன் மற்றும் சக தேவ பக்தியுள்ள தோழர்களாலும், இதர வேத பண்டிதர்களாலும், பரிசுத்தமான குருவானவர்களாலும் 1810 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் நாள் அமெரிக்க மிஷனரி இயக்கம் உதயமாயிற்று. மிஷனரிப் பணி இயக்கத்திற்கு மக்கள் பணங்களை வாரி வழங்கத் தொடங்கினர்.
மிஷனரி பணிக்கு அனுகூலமான மருத்துவ பயிற்சி பெற்றுக் கொள்ளுதல்
ஆண்ட்டோவர் வேதாகமக் கல்லூரியில் தனது திருமறைக் கல்வியை முடித்த கார்டன் ஹால் உடனடியாக பாஸ்டன் நகரில் தனது மருத்துவ கல்வி பயிற்சியை தொடங்கினார். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கேற்ற மருந்துகளை குறித்து அவர் படித்தார். பாஸ்ட்டன் துறைமுகத்துக்கு வரும் மத்திய கிழக்கு நாடுகளின் பிணியாளிகளை அவர் கவனமாக பரிசோதித்து தனது மருத்துவ சிகிட்சை அனுபவத்தை நன்கு பெருக்கிக் கொண்டார். பாஸ்ட்டனில் அவர் காண்பித்த மருத்துவ தேர்ச்சியை மனதில் கொண்டு இன்னும் நல்ல தேர்ச்சிக்காக அவரை அமெரிக்க மிஷனரி இயக்கத்தினர் பிலதெல்பியா நகரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் ஒரு வருட காலம் தனது பொன் போன்ற நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் நோயாளிகளின் நோயைக் கண்டு பிடித்து அதற்கேற்ற சிகிட்சை அளிப்பதிலும், மருந்துகளைப் பற்றி ஆராய்வதிலும், புதிய புதிய மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்து அதின் சிகிட்சை பலாபலன்களை கண்டறிவதிலும் கார்டன் செலவிட்டு தனது வருங்கால மிஷனரிப் பணியில் வியாதியஸ்தரை சுகமாக்கும் ஒரு சிறப்பான அம்சத்தையும் கார்டன் ஒருங்கிணைத்துக் கொண்டார். அதின் காரணமாக பின் நாட்களில் தமது இந்திய மிஷனரிப் பணியில் கார்டன் அநேக நோயாளிகளை மரணத்திலிருந்து பாதுகாத்தார். அவரால் வியாதிகளிலிருந்து சுகம் பெற்றோர் பலராவார்.
தேவ மனிதன் விரும்பிய லாரா என்ற பெண்மணி
தேவனுடைய சுவிசேஷத்தை சுமந்து கொண்டு கடல் கடந்து செல்லும் இளம் மிஷனரிகள் தங்களுடைய வாழ்க்கை துணையோடு செல்லுவதை அதிகமாக விரும்பினர். இனிமேல் தங்கள் தாய் நாடான அமெரிக்காவுக்குத் திரும்புவதில்லை என்ற உறுதியான தீர்மானத்தோடு செல்லும் அவர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கு உதவி செய்யக்கூடிய மனைவிகளைத் தெரிந்தெடுத்தனர். மிஷனரி அதோனிராம் ஜட்சன் அவர்கள் நான்சி ஆஸ்லைன் என்ற பெண் மீது விருப்பம் கொண்டு அவர்களை மணந்து கொண்டார். நான்சி ஆஸ்லைனின் தோழி ஏரியட் என்ற பெண்ணை மிஷனரி சாமுவேல் நியூவெல் திருமணம் புரிந்தார். அப்படியானால், நமது மிஷனரி கார்டன் ஹாலுடைய காரியம் என்ன? செல்வந்தரின் குமாரரான அவருக்கு அவர் வாழ்ந்த நியூ இங்கிலாந்து பகுதியிலேயே அழகுப் பெண்கள் பலர் இருந்தபோதினும் அவருடைய இருதயம் லாரா என்ற இளம் பெண்ணையே அதிகம் விரும்பியது. நல்ல அழகும், கவர்ச்சியும், ஞானமும் உள்ள பெண்ணாக அவர்கள் விளங்கினார்கள். நியூயார்க் பட்டணத்தை ஒட்டிய மார்சல்ஸ் என்ற இடத்தை சேர்ந்த பெண் அவர்கள். குருவானவராக வீடு சந்திப்பின் போது கார்டன் அவர்களைச் சந்தித்தார்.
லாரா, அசாதாரணமான தாலந்துகளை தன்னகத்தே கொண்டிருந்தார்கள். வாழ்க்கையில் வீர தீர செயல்களைச் செய்ய வேண்டும், வாழ்க்கையை பயனுள்ளதாக அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் லாராவுக்கு இருந்தது. ஆங்கில இலக்கியத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்த லாராவின் அறிவானது தேவனுடைய வார்த்தைகளை இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புக்கு பெரிதும் உதவும் என்று கார்டன் எண்ணினார். கார்டன் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தபோதினும் அந்தப் பெண் அவருக்கு ஒன்று அல்லது இரண்டு கடிதங்கள் மாத்திரம் தான் எழுதியிருந்தார்கள். எனினும், கார்டனை மணந்து கொள்ள அவர்கள் உள்ளூர ஆசைப்பட்டார்கள். கார்டனோடு இந்திய நாட்டிற்குச் செல்லுவதற்குக்கூட தனது முழுமையான சம்மதத்தை லாரா தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்தப் பெண்ணின் பொல்லாத தந்தை தனது மகள் இந்தியா செல்லுவதை முற்றும் விரும்பாததால் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தனது மகளோடு போராடி அந்தப் பெண்ணின் தீர்மானத்தை முற்றுமாக மாற்றிக் கொள்ள வழி செய்து விட்டார். தகப்பனின் விருப்பம் மாறாக இருந்தபோதினும் இந்தியாவுக்கு கப்பல் ஏறும் கடைசி நிமிஷம் வரை லாரா தனது மனதை மாற்றிக் கொண்டு தன்னுடன் எப்படியும் வந்துவிடமாட்டார்களா என்று கார்டன் வழிமேல் விழி வைத்து ஆவலோடு காத்திருந்தார். ஆனால், தேவன் தனக்கு மிஷனரியாக இந்தியாவுக்குச் செல்லும் கார்டனுக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள வேறு ஒரு சௌந்தரியவதியான மணவாட்டியை இந்திய நாட்டிலேயே ஆயத்தம் செய்து வைத்திருப்பதை அவர் பின் நாட்களில் கண்டு கர்த்தருக்கு துதி செலுத்தினார். ஆ, தேவனுடைய வழிகள் எத்தனை ஆச்சரியமானவைகள்!
மிஷனரி பட்டாபிஷேக ஆராதனை
1812 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் நாள் நியூ இங்கிலாந்திலுள்ள வீடுகளிலுள்ள மக்கள் எல்லாரும் தங்களது அன்றைய நாளின் வேலைகளைச் செய்ய, மற்ற நாட்களைவிட அதிகாலையிலேயே எழும்பிக் கொண்டனர். அந்த நாள் அவர்களுடைய வாழ்வில் என்றும் நினைவில் வைத்துப் போற்றக்கூடிய ஆனந்தமான நாளாக இருந்தது. மிகவும்குளிரான அந்த நாள் காலை சமயம் பூமி எங்கும் உறை பனி மூடியிருந்தது. நியூ இங்கிலாந்திலுள்ள வீடுகளிலுள்ள புகை போக்கிச் சிம்னிகளில் எல்லாம் புகை ஏகமாக வானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
வெளிநாட்டு மிஷனரிப் பணிகளுக்காக ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் மொத்தமாக எடுத்துக் கொண்டு மக்கள் சாலேம் பட்டணத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர். எல்லா ரஸ்தாக்களும் அன்று சாலேம் பட்டணத்துக்குத்தான் போவதாகத் தெரிந்தது. ஹாவர்ஹில், மான்செஷ்டர், கிளவ்செஷ்டர் போன்ற பட்டணங்களின் மக்கள் எல்லாரும் கூட்டம் கூட்டமாக பெரிய உற்சாக ஆரவார குரலோசையுடன் சாலேம் பட்டணத்தை நோக்கிப் பயணமானார்கள்.
ரோவ்லி, ஆண்ட்டோவர், பாஸ்ட்டன் பட்டணங்களிலிருந்து குதிரைகள்பூட்டிய பற்பலவிதமான வண்டிகளில் மக்கள் அந்த தேசீய முக்கியத்துவம் வாய்ந்த பரிசுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காகப் புறப்பட்டனர். அந்த நாளில்தான் அவர்களது தாய் நாட்டு மாந்தர் ஐந்து பேர் வெளிநாட்டு மிஷனரிகளாக புறப்பட்டுப் போவதற்கு முன்பு அபிஷேகிக்கப்பட இருந்தனர். சமீபத்தில் ஆரம்பமான அமெரிக்க மிஷனரி ஸ்தாபனம் அந்த ஐவரையும் மிஷனரிகளாக அனுப்ப முன் வந்தது.
மிஷனரி பட்டாபிஷேகம் நடைபெறவிருந்த சாலேம் தேவாலயம் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதுமாக இருந்தது. சாலேமில் முதன் முதலாவதாக வந்து குடியேறிய மக்கள் அந்த தேவாலயத்தை 1629 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள் கட்டியிருந்தனர். “தேவன் தம்மையே தமது ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியமுள்ள வார்த்தைகளின் மூலமாக நமக்கு வெளிப்படுத்த பிரியம்கொண்ட படியால் நாம் அவரது பரலோகத் திட்டங்களை நாம் ஒருவருக்கொருவர் ஒன்று சேர்ந்து நிறைவேற்ற தேவனோடும், நாம் ஒருவருக்கொருவருமாக உடன்படிக்கை செய்து கொள்ளுகின்றோம்” என்பதே சாலேம் பட்டணத்தின் தேவாலயத்தை தோற்றுவித்த வர்களின் உடன்படிக்கையாகும்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் சாலேம் தேவாலயத்துக்குள்ளும், ஆலயத்தின் உள்ளே மாடியில் இருந்த பெரிய காலரியிலும், ஆலயத்திற்கு வெளியிலுமாகக் குழுமியிருந்தனர். இரண்டாயிரம் மக்கள் அன்று அந்த ஆலயத்தில் இருந்தனர் என்று சொல்லப்படுகின்றது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த எண்ணிக்கை அமெரிக்க தேசத்தில் மிகவும் பெரிய ஒரு எண்ணிக்கையாகும். சாமுவேல் நியூவெல், அதோனிராம் ஜட்சன் (புகழ்பெற்ற பர்மீய மிஷனரி) சாமுவேல் நாட், கார்டன் ஹால், லூத்தர் ரைஸ் என்ற ஐந்து மிஷனரிகள் அன்றைய தினம் அமெரிக்க மிஷனரிகளாக அபிஷேகம் பெற்று இந்தியா புறப்பட இருந்தனர்.
ஆராதனை ஆரம்பிக்க சற்று நேரத்திற்கு முன்னர் மேற்கண்ட ஐந்து மிஷனரிகளும் தங்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தபோது தேவாலயம் முழுவதிலும் ஒரு விசேஷித்த பரிசுத்த அமைதி நிலவிற்று. பண்டிதர் உட்ஸ், பண்டிதர் கிரிபின், பண்டிதர் மோர்ஸ், பண்டிதர் சாமுவேல் ஸ்பிரிங், பண்டிதர் சாமுவேல் வார்செஷ்டர் என்ற ஐந்து குருவானவர்களும் ஐந்து மிஷனரிகளுக்கு முன்னால் வந்து நின்றபோது தேவனுடைய பிரசன்னம் அப்படியே தேவாலயத்தை நிரப்பிய வண்ணமாக இருந்தது.
பண்டிதர் கிரிபின் தமது ஜெபத்தோடு ஆராதனையை ஆரம்பித்து வைக்க பண்டிதர் உட்ஸ் அவர்களின் தேவச் செய்தி அமர்ந்திருந்த 5 புதிய மிஷனரிகளுக்கும், கூடி வந்திருந்த திருச்சபை மக்களுக்கும் ஒரு சவாலின் செய்தியாக உள்ளங்களைத் தொட்டு நின்றது. அதின் பின்னர் ஐந்து குருவானவர்களும் தங்களுடைய கரங்களை முழங்காலூன்றியிருந்த ஐந்து மிஷனரிகளின் தலைகளில் வைத்திருக்க, பண்டிதர் மோர்ஸ் அவர்கள் தேவனுடைய கிருபையுள்ள பராமரிப்புக்கும், பாதுகாவலுக்கும், பயன்படுதலுக்கும், ஆசீர்வாதத்திற்கும் அவர்களை ஒப்புவித்து ஜெபித்த ஜெபமானது கேட்போர் உள்ளங்களை கண்ணீரால் நனைக்கும்படியான ஜெபமாக இருந்தது. அந்த ஜெபத்தை அன்று கேட்டோர் தங்கள் ஜீவகாலபரியந்தம் அதை மறந்திருக்கவே மாட்டார்கள். நமது கார்டன் ஹாலுக்கு அந்த நாளின் ஆராதனை நிகழ்ச்சி மிகவும் விசேஷித்த ஒன்றாகும்.
தன்னை திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை முழுமையாக தெரிவித்திருந்த தனது வருங்கால மனைவி லாரா தேவாலயத்திற்கு வந்திருக்கின்றார்களா என்று கார்டன் தேவாலயத்தில் கூடி வந்திருந்த மக்கள் எல்லாரையும் பார்த்தார். தேவாலயத்தின் தரையில் அமர்ந்திருந்தவர்களிலும், ஆசனங்களில் அமர்ந்திருந்தவர் களிலும், மாடியில் இருந்த காலரி அரங்கிலும் தனது அன்பின் அடியாளுடைய மலர்ந்த முகம் தென்படுவதாக இல்லை. உண்மைதான், லாரா அந்த ஆராதனையில் கலந்து கொள்ளவே இல்லை. இனிமேல் லாராவை தான் தனது வாழ்வில் ஒருக்காலும் சந்திக்கவே இயலாதோ என்றுகூட கார்டன் தனக்குள் ஒரு கணம் யோசித்தார். அவரது முடிவான யோசனை சரியாகத்தான் இருந்தது. லாரா வராவிட்டாலும் பரவாயில்லை, தனது அன்பின் இரட்சா பெருமானுடைய பரிசுத்த பணியில் தனது கரங்களை வைத்துவிட்ட கார்டன் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிச் செல்லுவதே இல்லை என்று தனக்குள் திட்டமான முடிவு எடுத்துக் கொண்டார். சாலேம் தேவாலயத்தில் நடைபெற்ற மிஷனரி பட்டாபிஷேக ஆராதனையின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
பெற்றோரிடம் இறுதி விடை பெறுதல்
சாலேம் தேவாலயத்தின் மிஷனரி பட்டாபிஷேக ஆராதனைக்கு மறு தினம் தனது பெற்றோரிடம் கடைசி விடைபெறுவதற்காக கார்டன்ஹால் தனது வீடு இருக்கின்ற டோலண்ட் என்ற இடத்திற்குப் பயணமானார். கார்டன் தனது பிறந்த வீட்டையும், தனது அருமைப் பெற்றோரையும், உடன் பிறந்த சகோதர சகோதரிகளையும் வெகு அதிகமாக நேசித்தார். அவர்கள் எல்லாரையும் என்றுமாக நிரந்தரமாக விட்டுவிட்டுச் செல்லுவது என்பது அவருக்கு அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. எனினும், தன்னை ஆட்கொண்ட தனது அன்பின் இரட்சகருடைய அழைப்பை புறக்கணித்து வீட்டையும், பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் நேசிப்பது என்பது அவர் முற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு காரியமாக இருந்தது.
தனது மகன் கார்டன் தனது திரண்ட சொத்துக்களின் பேரில் கவனம் செலுத்தி தனது பண்ணையத்தில் தனக்கு பேருதவியாக இருப்பான் என்று நூற்றுக்கு நூறு திட்டமும், தெளிவுமாக நம்பியிருந்த தகப்பனார் நத்தான் ஹாலுக்கு தனது மகனின் முடிவான தீர்மானம் அடி வயிற்றில் இடி விழுந்ததைப் போலவே இருந்தது. உண்மைதான், நத்தான் ஹால் ஒரு முழுமையான உலகம். அதின் காரணமாகத்தான் அவர் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் அவருடைய மனைவி எலிசபெத் அம்மையார் டோலண்ட் தேவ ஆலயத்தின் நிர்வாக அங்கத்தினர்களில் ஒருவராக இருந்தார்கள். உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசிங்கிப்பது என்ற தேவனுடைய கட்டளை எல்லாம் நத்தான் ஹாலுக்கு முற்றும் புரியாத புதிராகும். மனந்திரும்பாத, தேவனுடைய இரட்சிப்பின் அனுபவமில்லாத ஒரு உலகப் பிரகாரமான தந்தையிடமிருந்து கார்டன் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
பெற்றோரையும், உடன் பிறப்புகளையும், பிறந்த வீட்டையும் நிரந்தரமாக விட்டுப் பிரிந்து செல்லுவது என்பது கார்டனுக்கு மகா துயரத்தின் துடிதுடிக்கும் ஒரு அனுபவமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோருடைய ஆசீர்வாதமோ, அல்லது அவர்களின் ஆறுதலான அரவணைப்பின் வார்த்தைகளோ கடைசி நேரத்தில் கூட அவருக்கு கிடைக்கவில்லை. தனது பிறப்பிடமாம் தனது அழகான பெரிய வெள்ளை வீட்டையும், மனமுடைந்துபோன தனது அன்புள்ள பெற்றோரையும் விட்டுச் செல்லும்போது தன்னைக் கர்த்தருக்குள் படிப்படியாக வழி நடத்தி தன்னை ஒரு மிஷனரி என்ற மேலான ஸ்தானத்துக்கு உயர்த்திவிட்ட தனது உண்மையும், பக்தியுமுள்ள குருவானவர் ரோகர் ஹாரிசனை அவர் அதிகமாக நினைவுகூர்ந்தார். தான் விட்டுச் செல்லும் டோலண்டுக்கு தான் திரும்பவுமாக வருவோம் என்ற எண்ணம் கார்டனுக்கு கொஞ்சம் கூட இல்லாதிருந்தது. ஏனெனில், இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் அந்த முதல் அணியினரான விசுவாசமுள்ள அந்த ஐந்து மிஷனரிகளும் திரும்பவும் அமெரிக்கா தேசத்துக்கு கூடுமானவரை வராதிருக்க வேண்டுமென்பதே ஒரு தீர்மானமாகவிருந்தது. தங்கள் ஆண்டவர் இயேசுவுக்காக தொடர்ந்து இந்தியாவிலேயே பணி செய்து தங்கள் விசுவாச ஓட்டத்தை அங்கேயே முடித்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களை அனுப்பும் மிஷனரி கமிட்டியின் விருப்பமாக இருந்தது.
டோலண்டை விட்டு பிலதெல்பியா நோக்கிய தனது பயணப் பாதையின் போது நியூ இங்கிலாந்தின் பசுமை கொழிக்கும் இடங்களை கார்டன் கண் குளிர கடைசியாகப் பார்த்துக் கொண்டார். அந்த பசுமைப் பள்ளத்தாக்கில் கடினமாக உழைக்கும் குடியானவர்களின் குடும்பங்களை அவர் பார்த்தார். அந்தச் சமயம், தான் செல்லப்போகின்ற இந்திய மக்கள் எப்படியோ என்று தனக்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டார். அந்த நினைவுகள் தனது உள்ளத்தை விட்டு நீங்காதிருக்கும் போது தானே பிலதெல்பியாவிலிருந்து கார்டன் தனது பெற்றோருக்கு இவ்விதமாகக் கடிதம் எழுதினார் “என் அன்பான அருமைப் பெற்றோரே, ஆண்டவராகிய இயேசு இரட்சகரின் பரிசுத்த நாமத்தில் உங்களை வாழ்த்துகின்றேன். இம்மட்டும் கர்த்தர் எனக்குஉதவி செய்தார். அவருடையஆசீர்வதிக்கப்பட்ட நாமம் வாழ்க. ஆண்டவருடைய வேலை மகா விஸ்தாரமானது. அதை செய்யும் பொருட்டாக நான் எனது கரங்களை கலப்பையில் வைத்துவிட்டேன். நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிகின்றபடியால் இனி எப்பொழுது ஒன்றாக சந்திப்பது என்ற கேள்வி எழும்பலாம். அவை எல்லாம் பரலோகத்தின் தேவனுக்குள் மறைவாக உள்ளது. அது முற்றுமாகவே நிச்சயமற்றதாக இருக்கின்றது. தேவன் நமக்கு அளிப்பதை முறுமுறுப்பன்றி ஏற்று அவருக்குள் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பதே அவருடைய திருவுளசித்தமாகும்” என்று எழுதினார்.
இந்தியா நோக்கிய கப்பற்பயணம்
1812 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் காலை நேரம் பிலதெல்பியா துறைமுகத்தில் மக்களின் ஆரவாரமும், சந்தடியும், பரபரப்பும், உணர்ச்சி பெருக்கமான விடைபெறும் நிகழ்ச்சிகளும் காணப்பட்டன. “ஹார்மோனி” என்ற கப்பலின் தலைவன் தனது கப்பலில் ஏற்றப்படும் ஒவ்வொரு மரப் பெட்டியையும், இரும்பிலான டிரங் பெட்டியையும் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பெட்டிகள் சரியான விதத்தில் பூட்டப்பட்டு இடை வெளி தெரியாமல் மூடப்படாத பட்சத்தில் வெப்ப மண்டல சமுத்திரங்களில் எழும்பக்கூடிய புயற் காற்றுகளால் அப்படிப்பட்ட பெட்டிகளினிமித்தம் கப்பலுக்கு உண்டாகக்கூடிய ஆபத்தை அனுபவத்தில் கண்டவன் அவன். கடல் வாணிபத்தில் கடுமையான லாபங்களை தேடிக் கொண்டிருந்த காலம் அது. 90 அடிகள் நீளமுள்ள தனது கப்பலில் மிகவும் கவனமாக 300 டன்கள் எடையுள்ள பொருட்களை ஏற்றி தனது கப்பல் சொந்தக்காரர்களுக்கு மிகுந்த லாபத்தை சம்பாதித்துக் கொடுக்க அந்தக் கப்பலின் தலைவன் ப்ரவுண் என்பவன் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
கார்டன் தனது பெட்டிகளை எல்லாம் கடல் தண்ணீர் எந்தவிதத்திலும் உட்புகாதபடி நேர்த்தியாக பாக்கிங் செய்தார். தனது மருத்துவ புத்தகங்கள், சிகிட்சைக்குரிய மருத்துவக் கருவிகள், படுக்கைகள், ஆடைகள், சின்ன சின்ன உலோகக் கருவிகள், அன்றாடக வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்கள் போன்றவற்றை விசேஷித்த விதமாக பெட்டிகளில் அடைத்துப் பத்திரப்படுத்தினார். கடலில் எழும்பும் புயற் காற்றுகள் தனது பெட்டிகளுக்கு எந்த ஒரு சேதத்தையும் விளைவிக்காமல் இருப்பதற்காக அவர் எல்லா பாதுகாப்பு முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்தியாவில் எந்தெந்த பொருள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று அவர் யூகித்து அவர் சிறந்த முயற்சிகள் எடுத்து காரியங்களை ஒழுங்கு செய்தார்.
கடற் பயணங்கள் மகா ஆபத்தான ஒன்றாக இருந்த நாட்கள் அவை. கடற் புயல்களும், சூறாவளிகளும் ஒரு புறம் இருக்க, ஈவு இரக்கமற்ற கொலைஞர்களான கடற் கொள்ளையர்களின் பயம் மற்றொரு பக்கம் இருந்தது. அமெரிக்காவின் ஐந்து மிஷினரிகளையும் ஒரே கப்பலில் ஏற்றி அவர்கள் அனைவரையும் ஒருமிக்க இழக்கலாம் என்ற பயத்தில் அவர்கள் இரு கப்பல்களில் அனுப்பப்பட்டனர். கப்பல் ஹார்மோனியில் கார்டன் ஹாலும், சாமுவேல் நாட்டும், லூத்தர் ரைசும் சென்றனர். அடுத்து வந்த “காரவான்” என்ற கப்பலில் அதோனிராம் ஜட்சனும், சாமுவேல் நியூவெல்லும் பிரயாணமாயினர். “காரவான்” கப்பல் அமெரிக்காவின் சாலேம் என்ற இடத்தின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
பிற்பகலின் பிந்திய வேளையில் பிலதெல்பியா துறைமுகத்தில் ஜன நெருக்கடி அதிகமானது. தங்களுக்கு அன்பானவர்களுக்கும், அருமையானவர்களுக்கும் கடைசி நேர வெகுமதிகளை மக்கள் கொடுத்தவண்ணமாக இருந்தனர். “ஹார்மோனி” கப்பலில் பயணம் செய்யும் அமெரிக்க மிஷனரிகள் இனி ஒருக்காலும் தங்கள் தாய் நாடே திரும்பாதவர்களானதால் உற்றார், உறவினர், பெற்றோர், உடன் பிறந்தவர்களின் அழுகையும், அங்கலாய்ப்பும், கதறல்களும் ஒரு புறம் கேட்டுக்கொண்டிருந்தன. சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கக்கூடிய அந்த கடற்பயண யாத்திரைக்கு தேவையான தின் பண்டங்கள், பலகாரங்களை எல்லாம் பயணிகளுக்கு இனஜனபெந்துக்கள் அளித்தனர். அதில் இஞ்சி ரொட்டி மிகவும் பயனுள்ள ஆகாரமாகும். கப்பலில் கொடுக்கப்படும் ஒரே உணவுக்கு மாற்றாக அப்போதைக்கப்போது இஞ்சி ரொட்டியையும் சாப்பிடுவது நலமாக இருந்தது. கடற்பயணத்தில் ஏற்படக்கூடிய வயிற்றுக் குமுட்டல் நோய்க்கு அது அருமருந்தாக இருந்தது.
பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் இரவின் பிந்திய மணி நேரம் வரை “ஹார்மோனி” கப்பலுக்கு கடைசி நிமிட பார்வையாளர்கள் வந்து கொண்டுதான் இருந்தார்கள். மறு நாள் பொழுது விடிய விடிய நங்கூரம் எடுக்கப்பட்டு கப்பல் இந்தியாவின் கல்கத்தா நோக்கி பயணமாயிற்று. “காரவான்” கப்பலும் அதே நாள் காலைதான் சாலேம் பட்டணத்திலிருந்து புறப்பட்டது.
ஐந்தரை மாத கால நீண்ட கடற் பயணத்தின் ஆரம்பத்தில் பலருக்கு வழக்கமாக வரக்கூடிய குமட்டல் இருந்தபோதினும் நாட்கள் செல்ல செல்ல கடற்பயணம் பழக்கமாகி போய்விட்டது. ஒவ்வொரு நாளும் கப்பல் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்துள்ளது என்பதை பயணிகள் கணக்கிட்டனர். கப்பலில் கிடைக்காத ஒன்று உடற்பயிற்சியாக இருந்தது. கப்பல் பயணிகள் சின்ன சின்ன அறைகளிலேயே இருந்தபடியேதான் இருக்க வேண்டும். எனினும், ஏதாவது நல்ல ஒரு கயிறு ஒன்று கிடைத்துவிட்டால் அதை எடுத்து துள்ளிக் குதித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொள்ளுவார்கள். கப்பலிலுள்ள குழந்தைகள் கப்பல் பிரயாணிகளுடைய கவனத்தை முழுவதுமாக கவரக்கூடியவர்களாக இருந்தனர். அவர்களை வைத்தும் நேரங்கள் கடந்து செல்லும். சின்ன சின்ன அறைகளில் இருக்கும் பிரயாணிகள் இரவு நெடு நேரம் வரை பற்பலவிதமான காரியங்களின் பேரில் பொழுதைப் போக்குவதற்காக வாதம், பிரதிவாதம் செய்வார்கள். அந்த வாக்குவாதங்கள் மிகுந்த பரபரப்பான உச்ச கட்டத்தை அடைந்தாலும் அவை எல்லாம் இறுதியில் சந்தோசமாகவே முடிவுறும்.
நம்முடைய மிஷனரி கார்டன் ஹாலும் அவரது சக மிஷனரிகள் இருவரும் தங்களுடைய நேரத்தை ஜெபத்திலும், வேத வசன தியானத்திலும், இந்தியாவின் மொழிகளை கற்பதிலும், இந்திய நாட்டின் சரித்திரத்தை படிப்பதிலும் கட்டாயம் செலவிட்டிருப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
1812 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் காலை ஹார்மோனி கப்பல் தனது கடற் பயணத்தின் இறுதி கட்டத்தில் இருந்தது. ஐந்தரை மாத கால கப்பல் யாத்திரைக்குப் பின்னர் இந்தியாவின் கிழக்கு கடற்கரை தெரிந்தது. முதலாவது மலைகள் தெரிந்தன. பின்னர் ஒரிசா கடற்கரையும் அதின் கிராமங்களும் தெளிவாகத் தெரிந்தன. அதின் பின்னர் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி நதி முகத்துவாரம் தென்பட்டது. அப்பொழுது ஹார்மோனி கப்பல் மாபெரும் கங்கை நதிக்கு சற்று வடக்காக ஓடிக் கொண்டிருந்தது. இறுதியாக, கப்பல் ஹூக்ளி நதியில் நங்கூரமிட்டு நின்றது. அந்த ஹார்மோனி கப்பலின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.
கப்பலிலிருந்து தரையிறங்கியது
ஹார்மோனி கப்பலிலிருந்து கல்கத்தா துறைமுகத்தில் தரையிறங்கியதும் மிஷனரிகள் கார்டன்ஹாலும், சாமுவேல் நாட்டும், சாமுவேல் ரைசும் முதலாவது செல்ல வேண்டிய இடம் இங்கிலாந்து தேசத்து கிழக்கிந்திய கம்பெனியின் காவல் நிலையம் என்பதுவும், கிழக்கிந்திய கம்பெனியின் லைசன்ஸ் பெறாத இதர வெளி நாட்டவர்கள் தாங்கள் வந்த தேசத்திற்கே திருப்பி அனுப்பப் படுவார்கள் என்பதுவும் நமது மிஷனரிகளுக்குத் தெரியாது. ஆனால், ஹார்மோனி கப்பல் தலைவனுக்கு அது நன்றாகவே தெரியும். நீண்ட கப்பல் பயணத்தில் மிஷனரிகள் நடந்து கொண்ட விதமும், கார்டன் ஹாலுடைய மருத்துவ சேவையையும் பாராட்டி கப்பல் தலைவன் அவர்கள் மூவரையும் ஒரு தந்திரத்தின் மூலமாக தரையிறக்க முயற்சி செய்தான். அதாவது , துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ஒரு படகில் ஏறி, தாங்கள் படகில் வந்ததாக பொய் சொல்லி தப்பிக் கொள்ள ஆலோசனை கொடுத்தான். படகில் வருவோருக்கு எந்த கேள்விகளும் கிடையாது. ஆனால், கார்டன் ஹால் அந்த விதமான தேவனுக்கு பிரியமில்லாத ஆலோசனைக்கு உடன்படாமல் நேருக்கு நேராக கிழக்கிந்திய கம்பெனியை தன் மட்டாக சந்திக்கத் தீர்மானித்தார்.
தேவன் தன்னை அழைத்த மேலான தேவப் பணியைத் தடுக்க இந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மட்டுமல்ல, இதைப்போன்ற ஓராயிரம் கம்பெனிகளாலும் முடியாது என்ற திட்டமான தீர்மானத்தோடும், உறுதியான விசுவாசத்தோடும் கர்த்தருக்குள் தன்னை நன்கு திடப்படுத்திக் கொண்டார். அவர்கள் கப்பலிலிருந்து தரையிறங்கியதும் அன்பான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. முதன் முதலாவதாக கல்கத்தா பட்டணத்தின் சீதோஷ்ணம் மிஷனரிகளுக்கு தங்களது அமெரிக்கா தேசத்தின் நியூ இங்கிலாந்து பட்டணத்து சீதோஷ்ணாக இருந்தது. அவர்களை வரவேற்க வந்தவர்களில் ஹட்ஸன் டெயிலர் தம்பதியினரும் ( சீன தேச மிஷனரிகள்) புகழ் பெற்ற வில்லியம் கேரியின் சக மிஷனரிகளும் அடங்குவர். வில்லியம் கேரி இங்கிலாந்து தேசத்தை சேர்ந்தவர். அமெரிக்க மிஷனரிகள் மூவரும் ஹார்மோனி கப்பலை விட்டு தரை இறங்கக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளையை கல்கத்தாவிலுள்ள கிழக்கிந்திய கம்பெனி விதித்திருந்த போதினும், வில்லியம் கேரி என்ற அந்த இங்கிலாந்து தேச மிஷனரி தனது சொந்த செல்வாக்கை மேலிடத்தில் பயன்படுத்தி மிஷனரிகள் மூவரையும் செராம்பூரிலுள்ள தனது மிஷன் வீட்டுக்கு வரும்படியாக அனுமதி பெற்றுக் கொண்டார். அதின்படி மிஷனரிகள் மூவரும் காவல் நிலையம் சென்று தங்களுக்கு லைசன்ஸ் இல்லாததையும், தாங்கள் கல்கத்தாவுக்கு வெளியே உள்ள வில்லியம் கோட்டையிலுள்ள வில்லியம் கேரியின் மிஷன் வீடு சென்று திரும்புவதாகவும் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
இரவின் நீண்ட மணி நேரங்கள் கார்டன் ஹால், வில்லியம் கேரியோடு சம்பாஷித்து அவரது தேவப்பணிகள் யாவையும் குறித்து திட்டமாக விசாரித்து அறிந்தார். இங்கிலாந்து தேசத்தின் எளிமையான தேவ மனிதர் வில்லியம் கேரியின் மாட்சியான தேவ ஊழியங்கள் கார்டனை களிகூரப்பண்ணுவதாக இருந்தது. பல்லாண்டு காலத்திற்கு முன்னர் இங்கிலாந்திலிருந்து கல்கத்தாவுக்கு மிஷனரியாக வந்த வில்லியம் கேரிக்கும் ஆரம்ப கால நாட்களில் இதே சிக்கல்கள்தான் இருந்தன. கார்டன், மிஷனரி ஊழிய சம்பந்தமாக பலவிதமான கேள்விகளை வில்லியம் கேரியிடம் கேட்டார். குறிப்பாக 1810 ஆம் ஆண்டு வில்லியம் கேரி எழுதி வெளியிட்ட மராத்தி மொழி அகராதி மற்றும் இலக்கணநூல்களை குறித்தும் அதற்காக மேற்கொண்ட எழுத்து வேலைகள், அச்சு கோர்ப்பு வேலைகள் பற்றியும் விபரமாகக் கேட்டார். இந்தக் கேள்விகள் அந்த புகழ் பெற்ற வில்லியம் கேரியின் உள்ளத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது. அதின் காரணமாக அவரே ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் சிறப்பு குருவானவர் தாமஸ் தாம்ஸன் அவர்களிடம் பேசி பம்பாய் பட்டணத்தில் ஒரு மிஷன் ஸ்தாபனத்தை நமது மிஷனரிகள் மூவரும் தோற்றுவிக்க அனுமதி வாங்கித்தருவதாக அவர்களிடம் உறுதி கூறினார்.
சில நாட்களுக்குப் பின்னர் நமது மிஷனரிகள் மூவரும் வில்லியம் கேரியின் மிஷன் பணிகளைப் பார்வையிட செராம்பூர் சென்றனர். அந்த பாப்திஷ்ட் மிஷனரிகள் அங்கு செய்து கொண்டிருந்த மகத்தான தேவப்பணிகளைக் கண்ட நமது மூன்று இளம் மிஷனரிகளுக்கும் தூக்கி வாரிப் போட்டது. வில்லியம் கேரியின் சக மிஷனரிகள் மார்ஷ்மேன் மற்றும் வார்ட் இருவரும் இரண்டு தூண்களாக வில்லியம் கேரியின் தேவ ஊழியத்தை நடத்திச் சென்று கொண்டிருந்தனர். வில்லியம் கேரியின் புகழ்பெற்ற அச்சுக்கூட வேலைகள், உயர்தரமான மொழி பெயர்ப்பு வேலைகள் அவரது பன்மொழிப் புலமை போன்றவை கார்டனை ஆச்சரியத்தில் முழ்க்கடிப்பதாக இருந்தது. குறிப்பாக அச்சுக்கூடம் அவருக்கு பேரதிசயமாக விளங்கியது.
வில்லியம் கேரியையும் அவரது சக மிஷனரிகளையும் அவர்களது மேன்மையான தேவ ஊழியங்களையும் நேரில் பார்த்த கார்டன் இந்திய நாட்டிலேயே இனி தான் நிரந்தரமாக தங்கிவிட கர்த்தருக்குள் திட்டமான முடிவெடுத்தார். வில்லியம் கேரியுடன் இரவில் நீண்ட நேரம் பேசியதன் பின்னர் மிஷன் வீட்டுத் தோட்டத்தில் அமைதியான இராக்காலத்தின் இதமான குளுமையில் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டே “தேவனே, இந்த இங்கிலாந்து தேச மிஷனரிகளுக்கு இந்தியாவில் ஊழியம் செய்ய வழி வாசல்களை திறந்த நீர் அமெரிக்கர்களான எங்களுக்கும் இந்த நாட்டில் உமது மகத்தான பணியை செய்ய வாசல்களை திறக்கக்கூடாதா!” என்று கதறி அழுதார். அந்த ஜெபத்திற்கு அன்பின் தேவன் உடனே செவி சாய்த்தார்.
கார்டன் ஹாலும் அவரது சக மிஷனரிகள் இருவரும் கல்கத்தாவிலிருந்து தப்பி பம்பாய் பட்டணம் வந்து சேர்ந்த கண்ணீரின் கதையை இங்கே விவரிக்க வேண்டுமானால் இன்னும் சில பக்கங்கள் எழுத வேண்டும். தேவனுடைய சுத்தக்கிருபையாலும், அவரது அநாதி தீர்மானத்தின்படியும் மிஷனரிகள் பம்பாய் வந்து சேர்ந்தனர் என்ற ஒரே வரியில் முடித்துவிடுகின்றேன்.
பம்பாய் நகரம்
1813 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் நாள் காலை வேளை கார்டன் ஹால் மிகுந்த பரபரப்போடு தனது படுக்கையிலிருந்து எழுந்து துரிதமாக தனது வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு கப்பலின் மேல் தட்டுக்கு வந்து தனக்கு முன்பாக இருந்த நிலப்பரப்பை பார்த்தார். விரிந்து வியாபித்துக் கிடந்த வளைகுடாவின் சமுத்திர ஜலம் அமைதியாகக் காணப்பட்டது. காலைச் சூரியன் இரத்தாம்பர சிகப்பு பந்து போல சமுத்திரத்தின் பரப்பிலிருந்து மெதுவாக மேலே ஏறிக் கொண்டிருந்தது. காலை மூடு பனிக்கு அப்பால் உயர்ந்த மலைகள் தென்பட்டன. ஆ, தேவன் எவ்வளவு அழகான உலகத்தைப் படைத்து உள்ளார். தமது அழகிய உலகத்தின் மையத்தில் பம்பாய் பட்டணத்தை அவர் வைத்திருந்தது போல கார்டனுக்கு தெரிந்தது. கார்டனும், அவரது மிஷனரி நண்பர்களும் பம்பாய் வந்து சேர்ந்தபோது அந்த நகரம் 20000 வீடுகளைக் கொண்ட ஒரு பெரிய கடற்கரை கிராமமாகத்தான் இருந்தது.
கார்டன், பம்பாய் வந்து சேரு முன்னரே அவருக்கு பம்பாயைக் குறித்த அனைத்து சரித்திரமும் நன்கு bரிந்திருந்தது. பம்பாய் என்ற சொல் “மும்பை” (மும்பா தாய்) என்ற பதத்திலிருந்து வந்தது என்றும், அந்த மும்பா தாய்தான் அந்த நாட்களில் அங்கு குடியிருந்த மீன் பிடிக்கும் பழங்குடி மக்களின் வணக்கத்திற்குரிய தாய் தேவதை என்பதுவும், அந்தப் பழங்குடியினர் 7 தீவுகளில் சிதறி வாழ்ந்தனர் என்பதுவும் அவருக்கு நன்கு தெரியும். அது மாத்திரமல்ல கி.பி. 354 ஆம் ஆண்டில் ரோம சக்கரவர்த்தி கான்ஸ்டாண்டைன் தமது நாட்டிலிருந்து பிஷப் தியாஃபிலஸ் என்பவரை இந்தியாவுக்கு அனுப்பி இயேசு கிறிஸ்துவே உலகத்தின் இரட்சகர் என்ற நற்செய்தியை பிரசிங்கிக்க அனுப்பினார் என்பதுவும் அந்த பிஷப் பம்பாயில் ஊழியம் செய்ததும் கார்டனுக்கு தெரிந்த ஒன்றுதான். அந்த பிஷப் தியாபிலஸ் தென் இந்தியாவுக்கு சமீபமாக உள்ள மாலத்தீவுகளைச் சேர்ந்தவர் என்பது இன்னும்ஆச்சரியதுக்குரிய காரியமாகும்.
பம்பாய் நகர ஆரம்ப கால மருத்துவ ஊழியங்கள் – மராத்தி மொழி கற்றுக்கொண்டது – அச்சுக்கூடம் நிறுவியது
பம்பாய் நகரத்தில் தரையிறங்கிய ஆரம்பத்திலிருந்த இதமும், இன்பமுமான சீதோஷ்ண நிலை அடுத்து வந்த கோடை காலத்தில் முற்றுமாக மாறிப் போய்விட்டது. கடுங்கோடையின் வெப்பத்தால் மிஷனரிகள் மூவரும் அனலிலிட்ட புழுவாகத் துடிதுடித்தனர். தாங்கள் விட்டு வந்த அமெரிக்க தேசத்தின் நியூ இங்கிலாந்தின் குழுமையும், செழுமையும் மனோகரமுமான சீதோஷ்ணத்தை மிஷனரிகள் அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டார்கள்.
மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏராளம் தங்களுக்கு முன்பாக குவிந்து கிடப்பதை மிஷனரிகள் கண்டனர். விசேஷமாக வியாதியஸ்தர்கள் மிஷன் வீட்டு வாசற்படிக்கே ஏராளமாக வரத் தொடங்கினர். மலேரியா, குஷ்டம், காலரா, கினியா புழுக்கடி போன்ற வியாதிகளால் தாக்குண்ட மக்கள் மருத்துவ சிகிட்சையை நாடி வந்தனர். கினியா புழுக்கடி நோய்வாய்ப் பட்ட மக்கள் அதின் காரணமாக முடமானார்கள். தண்ணீர் எடுக்கச் செல்லும் மக்களுடைய கால்களை அந்த கினியா புழுக்கள் அட்டைபோல் அவர்கள் அறியாவண்ணமாக தொத்திப் பிடித்து இரத்தத்தைக் குடித்தன. அந்த பயங்கரமான புழுக்களின் நீளம் 20 அங்குலம் வரை கூட இருக்கும். அந்தப் பிணியாளிகளுக்கு கார்டன் மருத்துவ சிகிட்சை அளித்தார்.
மராத்தி மொழியை எவ்வளவு துரிதமாக கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு துரிதமாக மிஷனரிகள் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். தாங்கள் கற்றுக் கொண்ட மராத்தி மொழி வார்த்தைகளை தங்களைச் சுற்றிலுமிருந்த மராத்தி மொழி பேசும் குழந்தைகளுடன் பேசி அதை சரி பார்த்துக் கொண்டனர். அப்படிப்பட்ட சிறுவர் சிறுமியர் கல்வி கற்க பள்ளிகள் இல்லாமல் இருப்பதை கார்டன் கண்டபோது மனம் வெதும்பினார். அவருடைய காலத்தில் ஐரோப்பிய குழந்தைகளுக்காகத்தான் ஒரு பள்ளிக்கூடம் பம்பாயில் இருந்ததே தவிர இந்திய குழந்தைகளுக்கு கல்விக்கூடம் எதுவுமே இல்லை. மராத்தி மொழியை கார்டன் கற்றுக் கொண்டதும் தனது முதலாவது பணி தன்னால் இயன்ற அளவு பள்ளிக்கூடங்களை இந்திய குழந்தைகளுக்கு ஆரம்பிப்பதுதான் என்று தன் மனதில் தீர்மானித்துக் கொண்டார்.
இதற்கிடையில் மிஷனரிகள் மூவரும் மராத்தி மொழியை சிறப்பாகக் கற்று முன்னேறினதுடன் மராத்தி மொழியில் தேவனுடைய வார்த்தைகளை மொழி பெயர்க்கவும் தொடங்கி விட்டனர். அதுமாத்திரமல்ல, கல்கத்தாவிலுள்ள தங்கள் நண்பர்கள் மூலமாக ஒரு அச்சுக்கூடத்தை விலைக்கு வாங்கி அதை பம்பாய்க்கு கொண்டு வர தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் பட்டணத்தின் தேவ பக்தியுள்ள மக்கள் அந்த அச்சுக்கூடத்திற்குத் தேவையான பணத்தை அனுப்பி வைத்தனர். அதின் பிரதி பலனாக ஒரு பயனுள்ள அருமையான அச்சு இயந்திரம் கல்கத்தாவில் வாங்கப்பட்டது. அந்த இயந்திரம் பம்பாய் துறைமுகத்தில் இறங்கும் சமயம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட காலை நேரமாகும். கார்டன் அதை கப்பலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதற்காக அதிகாலையிலிருந்தே துறைமுகத்தில் காத்துக் கிடந்தார். கப்பல் கல்கத்தாவிலிருந்து பம்பாய் வந்ததும் ஒரு மாட்டு வண்டியில் அதை ஏற்றிக் கொண்டு மிகுந்த களிகூருதலோடு மிஷன் வீட்டுக்கு வந்தார். அச்சுக்குப் பயன்படுத்தக்கூடிய எல்லா எழுத்துக்களும் அவர்களாலேயே, அவர்களது சொந்தக் கரங்களாலேயே உருவாக்கப்பட வேண்டியதாக இருந்தது. அதின் காரணமாக மிஷனரிகள் மூவரும் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் ஏராளம், ஏராளமாகும்.
தேவனால் ஆயத்தம் செய்யப்பட்டதோர் மணவாட்டி
தேவ மனிதர் கார்டன் ஹால் மணம் புரிய விரும்பிய லாரா என்ற மங்கையை அவரால் திருமணம் செய்து கொள்ள இயலாமற் போயிற்று. அதுபற்றிய விபரத்தை நாம் முன்பு கவனித்தோம். ஆனால், தேவன் தமது ஊழியக்காரனுக்கு ஒரு பொருத்தமான வாழ்க்கைத் துணையை இந்தியாவில் ஆயத்தம் செய்து வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் பெயர் மார்க்கரெட் என்பதாகும். இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த பெண்ணான அவர்கள் சௌந்தரியவதியும், சிறப்பான கல்வி தேர்ச்சியுமுடையவர்களாகவும், மிகுந்த சுறுசுறுப்பும், திடகார்த்த பெலனுடையவர்களுமாகக் காணப்பட்டார்கள். அவர்களுடைய ஆருயிர் தோழி காதரீனை இந்தியாவிலிருந்த இங்கிலாந்து தேசத்தின் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னருக்கு அடுத்தபடியாக அந்தஸ்து பெற்ற மார்க்கின்டோஷ் என்ற ஆங்கிலேயர் திருமணம் செய்திருந்தார். அவர்களுடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக மார்க்கரெட்டை, மார்க்கின்டோஷ் வைத்திருந்தார். அதற்காகவே இங்கிலாந்திலிருந்த அந்தப் பெண்ணை அவர் பம்பாய்க்கு வரவழைத்திருந்தார். அந்த மார்க்கின்டோஷ் கனவான் ஒரு தேவ பக்தியுள்ள மனிதராக இருந்தார். முகமதியர்கள் மத்தியில் அரபு நாடுகளில் சிறந்த தேவ ஊழியம் செய்து அந்த நாடுகள் ஒன்றிலேயே தனது தலையை சாய்த்து ஜீவனை விட்ட மாபெரும் தேவ பக்தன் ஹென்றி மார்ட்டின் பம்பாய் வந்திருந்தபோது மேற்கண்ட மார்க்கின்டோஷ் என்ற கனவானுடைய வீட்டில்தான் சில நாட்கள் தங்கியிருந்தாராம். அந்த ஹென்றி மார்ட்டின் பரிசுத்தவானைக் குறித்த பரிசுத்த நினைவுகள் எல்லாம் மார்க்கரெட்டுக்கு பசுமையாக இருந்தன.
சற்றும் எதிர்பாராதவிதமாக மார்க்கின்டோஷ் திடீரென நோய்வாய்ப்பட்டபடியால் அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். மார்க்கரெட்டும் அவர்களுடன் இங்கிலாந்துக்குச் செல்லுவதாகத்தான் இருந்தது. ஆனால், பம்பாயில் இருந்த நாட்களில் அந்த பெண் மணி அநேக அருமையான குடும்பங்களுடன் பழகி அவர்களுடன் ஒன்றாகக் கலந்துவிட்டபடியால் அவர்கள் மார்க்கரெட்டை இங்கிலாந்து செல்லவிடாமல் தடுத்ததுடன் தங்களுடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு ஆசிரியையாக இருக்கும்படியாக அவர்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அப்படியே அந்தப் பெண்மணி பம்பாயிலேயே தங்கிவிட்டார்கள். அதுவே தேவனுடைய அநாதி தீர்மானமாகவும் இருந்தது.
நமது கார்டன் முதன் முதலாவதாக மார்க்கரெட்டை பம்பாயிலுள்ள பரிசுத்த தாமஸ் தேவாலயத்தில்தான் சந்தித்தார். இருவரும் அங்கு ஆலய ஆராதனைகளில் பங்குபெறச் செல்லுவார்கள். இக்காலத்தைப் போல அக்காலத்தில் தேவாலயங்களில் மின் விசிறிகள், மின் விளக்குகள் எதுவுமே கிடையாது. மின் விசிறிகளுக்குப் பதிலாக ஒரு நீண்ட பங்கா குஞ்சான் ஆலயத்துக்குள் தொங்கிக் கொண்டிருக்கும். அது ஒரு நீண்ட கயிற்றால் இணைக்கப் பட்டிருக்கும். ஆலயத்தின் ஜன்னல் ஓரமாக ஒரு பையன் நின்று அந்த பங்கா கயிற்றை இழுத்து, இழுத்து வெளிக்காற்றை உள்ளே வருவித்துக் கொண்டிருப்பான். கார்டன் எப்பொழுதும் அந்த பங்கா இழுக்கும் பையனண்டை உள்ள ஆசனத்தில்தான் ஆலயத்தில் அமர்ந்திருப்பார். காரணம் ஏன் என்று கேட்கின்றீர்களா? ஆராதனையில் குருவானவரின் பிரசங்கம் ஒருக்கால் எழுப்புதலாக இல்லாவிட்டால் தனக்கு தூக்கம் வந்துவிடக்கூடாதே என்ற பயத்தால் அந்த பங்கா இழுக்கும் பையனுடைய பங்கா இழுக்கும் செயல் தன்னை எப்பொழுதும் விழிப்பாக வைத்திருக்கும் என்ற எண்ணத்தில்தான் அப்படி அமர்ந்திருப்பார்.
1816 ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் கார்டன் நமது மார்க்கரெட் என்ற பெண்மணியை குறித்து அதிகமாக கேள்விப்பட ஆரம்பித்தார். அத்துடன் அந்தப் பெண்மணி கார்டன் நிறுவிய பள்ளிகளுக்கும் அவ்வப்போது வந்து அவைகளைப் பார்வையிட்டதோடு பள்ளி சம்பந்தமாக தனது அருமையான தேவ ஆலோசனைகளையும் கார்டனுக்கு கொடுத்து வந்தார்கள். இந்தவித சந்திப்புகளின் மூலம் கார்டனுடைய உள்ளத்தில் தனது பள்ளிகளுக்கு மிகவும் பயனுள்ள பெண்ணாக இருக்கும் மார்க்கரெட்டை தான் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வாஞ்சை பெருகவே மிகுதியான ஜெபத்திற்குப் பின்னர் தனது விருப்பத்தை மார்க்கரெட்டிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண்ணும் அதை தேவ வாக்காக ஏற்று அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்கள். அந்தப் பெண் வயதில் தன்னைவிட சற்று மூப்பாக இருந்தபோதினும் கார்டன் அதை பொருட்படுத்தவில்லை. அப்படியே அவர்களது திருமணம் 1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் பம்பாயிலுள்ள பரிசுத்த தாமஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் தாமஸ் தேவாலயம் நிரம்பி வழிந்ததுடன் தேவாலயத்தை சூழ அமைந்திருந்த பெரிய புல்மைதானமும் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவிட்டது. கார்டனால் சுகம்பெற்ற மக்கள் பலரும், ஏழைகள் எளியவர்கள் எல்லாம் அந்த திருமணத்தில் வந்து கலந்து ஆனந்தம் கொண்டனர். அத்துடன் மார்க்கரெட்டுக்கு அறிமுகமான அநேக மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து கலியாண வைபவத்தில் கலந்து கொண்டனர். பரிசுத்த தாமஸ் தேவாலயம் அன்று தேவனுடைய மகிமைப் பிரசன்னத்தால் மெய்யாகவே நிரம்பித் ததும்பினது. அவர்கள் திருமணம் நடைபெற்ற அந்த பூர்வ காலத்து தேவாலயத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அடுத்து வந்த அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் தேவனுக்கு மகிமையாகவே சிறந்து விளங்கினது.
கார்டன் ஹால், மார்க்கரெட் ஹால் இருவரின்அயராத தேவ சேவைகள்
1821 ஆம் ஆண்டு கார்டனின் அயராத முயற்சியால் 25 பள்ளிகள் முழு மூச்சில் நடந்து கொண்டிருந்தன. கார்டன் தனது தேவப்பணியில் இராப்பகலாக அயராது பாடுபட்டுக் கொண்டிருந்தார். மராத்தி மொழியில் அவர் சிறந்த பாண்டித்தியம் பெற்றது மாத்திரமல்ல, ஹிந்தி, குஜராத்தி மொழிகளிலும் அவரால் சம்பாஷிக்கவும் அந்த மொழிகளில் நன்கு எழுதவும் அவருக்குத் தெரியும். நள்ளிரவுக்குப் பின்னான மணி நேரங்களில் கூட அவரது அறையின் விளக்கு அணையாதிருந்தது. அந்த நேரம் அவர் கிரேக்க, எபிரேய மொழிகளில் உள்ள தனது புலமையை இன்னும் பிரகாசமாக்கிக் கொண்டார். இந்திய நாட்டின் மேற்கு பகுதிகளிலுள்ள மக்களின் மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளை மொழி பெயர்க்க அது அவருக்கு கை கொடுத்து உதவியது.
முகமதியர்களுக்கும், இந்துக்களுக்கும் கூட்டாக அவர் மார்க்க ஆராய்ச்சி கூட்டங்களை ஒழுங்கு செய்து அதில் அந்த மார்க்கங்களின் பெரிய தலைவர்களை கலந்து கொள்ளச் செய்து ஒருவரையொருவர் அன்புடன் புரிந்து கொள்ள வகை செய்ததோடு கடவுளைத் தேடி கண்டு பிடிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை கருத்தோடு கேட்டு தெரிந்து கொண்டதுடன் அந்த மெய்யான கடவுளை இயேசு கிறிஸ்து மூலமாக இலகுவாகக் கண்டு கொள்ளலாம் என்றும் அன்பொழுகக் கூறினார். கார்டன், மார்க்கரெட் இருவரின் அன்பால் கவரப்பட்ட இந்துக்களும், முகமதியர்களும் தங்கள் வீடுகளை அவர்களுக்கு தாராளமாகத் திறந்து கொடுத்தனர். அதை பயன்படுத்திக் கொண்டு மார்க்கரெட் அம்மையார் பர்தா அணிந்து தங்கள் வீடுகளில் தனித்திருக்கும் முகமதிய பெண்களுக்கும், தங்களது பெண் மக்களை மிகவும் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் வைராக்கியமான தேஷ்முக் என்ற இந்து சமூகத்தினரிடமும் சென்று அவர்கள் வீடுகளிலுள்ள அந்தப் பெண் மக்களுக்கும் தேவனுடைய கல்வாரி அன்பை பகிர்ந்து கொண்டார்கள். முகமதிய பெண்களுக்கு கார்டன் தமது சொந்தக் கரத்தால் எழுதி வெளியிட்ட உருது மொழி கிறிஸ்தவ பிரசுரங்களை மார்க்கரெட் பயன்படுத்தினார்கள். அந்த உருது பிரசுரங்களைப் படித்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று ஞானஸ்நானம் பெற்ற முகமதிய கனவான்களும் கூட உண்டு. அத்துடன் இங்கிலாந்திலிருந்து வந்து பம்பாயில் குடியேறியிருந்த மிகவும் பிரபலமான ஐரோப்பிய சமூகத்தினரிடமும் அடிக்கடி சென்று தேவனுடைய அன்பை அவர்களுக்கு கூறினதுடன் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஏழ்மையான ராணுவ வீரர்களுக்கும் கர்த்தர் இயேசுவை நமது கார்டன் தம்பதியினர் உயர்த்திக் காண்பித்தனர்.
நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்த தேவ மனிதன்
பம்பாய் நகர தெருக்களில் கார்டன் ஹால் இப்பொழுது எல்லாருக்கும் நன்கு அறிமுகமானவரும், எல்லாராலும் நேசிக்கப்பட்டதொரு மனிதனுமாகவிருந்தார். எல்லா மணி நேரங்களிலும் இராப்பகலாக தனது பரம எஜமானரைப் போன்று அவர் நன்மை செய்கின்றவராக சுற்றித் திரிந்தார். அவரை நாம் பார்க்கும் போதெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாகவும், மிகவும் துடி துடிப்போடும் தேவனுடைய சுவிசேஷ பணியில் நாம் அவரைக் காணக் கூடும். சில சமயம் நாம் அவரை ஒரு சிறிய கூட்டம் மக்களோடு துரிதம் துரிதமாக நடந்து சென்று கொண்டிருப்பதை நாம் காணலாம். ஆம், அந்த நேரம் அவர் யாராவது ஒருவர் உயிரை கடும் நோய் பிணியிலிருந்து காப்பாற்றச் சென்று கொண்டிருக்கின்றார் என்று நாம் நமக்குள்ளாக யூகித்துக் கொள்ளலாம். சில நேரம் அந்த தேவ மனிதன் தனது வீட்டுக்கு இராச்சாப்பாட்டுக்கு வராமல் வெளியே தங்கிக் கொள்ளுவார். யாராவது ஒருவர் மரணத்தின் விழிம்பில் இருப்பார். அந்த இராக்காலம் முழுவதும் அந்த நோயாளியோடு கட்டாயம் தான் இருந்தாக வேண்டும் என்று அவர் அப்பொழுது முடிவெடுத்திருப்பார். அந்த மனிதன் தனது மரண ஆபத்தைக் கடந்த பின்னர்தான் நமது கார்டன் தனது ஓய்வையும், இளைப்பாறுதலையும் குறித்து யோசிப்பார்.
பம்பாய் நகரத்திலிருந்த சிறைக்கூடம் தேவ மனிதனின் சிறப்பான கவனத்தைப் பெற்றிருந்தது. அங்குள்ள சிறைக் கைதிகள் மேல் அவருக்கு அத்தனையான அலாதி பிரியம். அடிக்கடி அவர் அங்கு சென்று சுவிசேஷம் அறிவித்து வருவார். அங்கு போகும் பொழுது ஏழை மனிதர் சும்மா செல்ல மாட்டார். அந்த நாட்களில் பம்பாயில் பெயர் பெற்றிருந்த “ரோக்சன்னா கேக்” என்ற தின் பண்டத்துடன் சென்று அங்குள்ள கைதிகளுக்கு அதை சாப்பிடக் கொடுத்து மகிழ்ச்சியடைவார். சமுதாயத்தால் அந்தக் கைதிகள் புறக்கணித்து வெறுத்து தள்ளப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒரு அன்பான பரம பிதா உண்டென்றும், அவரிடம் செல்லும் எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை என்றும் கூறுவதுடன் அந்த சிறைக் கைதிகள் விடுதலை பெற்று வெளியே வரும்போது அவர்களின் மறு வாழ்வுக்கு தன்னாலியன்றதையும் செய்ய ஆயத்தமாக இருப்பதையும் கார்டன் அவர்களுக்கு நினைவுபடுத்தி வருவார். அப்படியே அவர் உதவியும் செய்வார்.
அந்த நாட்களில் கார்டன் மிகச் சிறந்த டாக்டராக எல்லாராலும் கருதப்பட்டார். அவரை ஒரு சமயம் புறக்கணித்த இங்கிலாந்து நாட்டின் கிழக்கிந்திய கம்பெனியே இப்பொழுது அவரை தனக்கென்று டாக்டராக வைத்துக் கொள்ளவும், அதற்காக அவருக்கு நிறைய ஊதியம் கொடுக்கவும் முன் வந்தது. ஆனால், கார்டன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். “சுகயீனமாக தேவையிலிருக்கும் எந்த ஒரு நோயாளியையும் எனக்கு காண்பியுங்கள். நான் அந்த மனிதருக்கு சிகிட்சை அளிக்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால், பணத்திற்காக நான் உங்களிடம் பணியில் அமரமாட்டேன்” என்று அவர் கூறிவிட்டார். மாந்தரின் வியாதிகளை குணமாக்குவது மாத்திரம் அவரது பிரதான குறிக்கோளாக இருக்கவில்லை. கலாசாலைகளை நிறுவி வெறும் உலகப்பிரகாரமான கல்வியை மாத்திரம் மாணவர்களுக்கு அளிப்பதும் அவரது குறிக்கோளல்ல. இவற்றை அடிப்படையாக வைத்து இவை மூலமாக பாவ மன்னிப்பையும், தேவ சமாதானத்தையும், சந்தோசத்தையும், நித்திய ஜீவனையும் அளிக்கக்கூடிய கர்த்தராகிய இயேசு இரட்சகரை மனுமக்களுக்கு அளிப்பதே அந்த கர்த்தருடைய தாசனின் தணியாத வாஞ்சையாக இருந்தது.
ஒரு பக்கம் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி அவரை தனது டாக்டராக வைத்துக்கொள்ள ஆசைகொண்ட அதே நேரம், அதே கம்பெனியின் போலீசார் அவரை கைது செய்து நாடு கடத்தவும் ஆயத்தமாகி வந்தனர். காரணம், அப்பொழுது அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. நமது கார்டன் அமெரிக்கர் என்பது நமக்கு தெரியும் அல்லவா! எனினும், தேவன் தமது தாசனை கடைசி வரை அவர்கள் கையில் ஒப்புக் கொடுக்கவில்லை.
1815 ஆம் ஆண்டு முதல் கார்டன், பம்பாய் பட்டணத்தின் தெருக்களில் எங்காவது ஓரிடத்தில் காணப்படுபவராக இருந்தார். மும்பா தேவி கோவிலுக்கு வெளியே அவர் தென்படுவார் அல்லது தங்களுக்கு அன்பான மரித்தவர்களை சுடுவதற்காக எடுத்துச் செல்லும் சுடுகாட்டிற்குப் போகும் பாதையில் உள்ள ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் அவர் நின்று கொண்டு அந்த மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி சகல ஆறுதல்களின் தேவனாம் ஆண்டவர் இயேசுவின் சுவிசேஷத்தையும் கூறி அறிவிப்பார்.
பம்பாய் பட்டணத்தை சுவிசேஷத்துடன் சுற்றியலைந்த அவர், தனது முதுகை ஒரு கூர்மையான இரும்பு கொக்கியால் குத்தி அதை ஒரு கயிற்றின் உதவியால் ஒரு மரத்தின் கிளையுடன் இணைத்து ஊஞ்சல் போல பரிதாபகரமாக தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்ப்பார். அல்லது நூற்றுக்கணக்கான கூர் ஆணிகள் செங்குத்தாக நின்று கொண்டிருக்கும் மரப்பலகை படுக்கையில் கோமணம் மாத்திரம் கட்டி முழுமையான வெறும் உடம்புடன் துயரமாகப் படுத்திருக்கும் மற்றொரு மாந்தனைக் காண்பார். தங்களுடைய பாவங்கள் போகவும், தங்களுடைய இஷ்ட தேவதைகளைப் பிரியப்படுத்தவும், அவைகளுடைய கோபங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் தாங்கள் தங்கள் சரீரங்களை அவ்விதமாக வாதித்து வதைப்பது தீராத அவசியம் என்று அவர்கள் கூறும்போது கார்டன் கண் கலங்கி மருகுவார். இவ்விதமான மக்களோடு அவர் மணிக்கணக்கான நேரத்தை செலவிட்டு இயேசு பெருமானின் சிலுவை அன்பை அறியாத அந்த மக்களுக்கு அவருடைய ஜீவாதார பலியை குறித்து விவரித்துப் பேசுவார். விண்ணுலகம் தாண்டி பூவுலகம் வந்து மானுட அவதாரம் எடுத்த அந்த ஆண்டவர் இயேசு இரட்சகர் இந்திய நாட்டுக்கு வெகு அருகாமையிலுள்ள பாலஸ்தீனா தேசத்துக்காரர் என்றும் கார்டன் அவர்களுக்கு கூறுவார்.
கார்டன் ஹாலின் விருப்பமான இடம் பம்பாய் நகரிலுள்ள பூலேஸ்வர் இந்து கோயில் வட்டாரமாகும். அந்த இந்து கோயிலுக்கு பூஜைக்கு வருபவர்கள், கார்டனுடைய சந்திப்பை ஆவலோடு எதிர் நோக்குவார்கள். தனது அச்சகத்தில், தானே மொழிபெயர்த்து தானே அச்சிட்ட மராத்தி மொழி சுவிசேஷ பங்குகளை கார்டன் அந்த தவனமுள்ள ஆத்துமாக்களுக்கு ஜெபத்தோடு வழங்குவார். பம்பாய் பட்டண வாசிகள் இல்லங்களுக்கு தேவனுடைய சுவிசேஷ ஒளி மெள்ள மெள்ள சென்று பிரகாசிக்க ஆரம்பித்தது. மக்கள் தேவனுடைய வார்த்தைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். கார்டன் ஹால் பம்பாய் நகர வீதியில் தேவனுடைய சுவிசேஷத்தை அறிவிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கக் கூடும்.
மரண நிழலின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
1818 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் கார்டன் தம்பதியினருக்கு தேவன் ஒரு பெண் மகவைக் கொடுத்தார். எலிசபெத் ஹால் என்று அதின் பெற்றோர் அதற்கு பெயர் சூட்டி மகிழ்ச்சியுற்றனர். மிஷன் வீட்டில் பிறந்த அந்த சின்னஞ்சிறு மகவைக் காண பலரும் வந்தனர். அயலகத்தாருக்கும், நண்பர்களுக்கும் அந்த பெண் மகவு ஆனந்தத்தைக் கொண்டு வருவதாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1819 ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அந்த அருமை மகவு தனது 19 மாத பூவுலக வாழ்வுக்குப் பின்னர் கர்த்தருடைய அன்பின் கரங்களுக்கு பறந்து சென்றுவிட்டது. பெற்றோரின் துயரத்துக்கு அளவேது!
தேவன் திரும்பவுமாக ஒரு பெண் மகவை அவர்களுக்கு கொடுத்தார். தங்கள் கரங்களை கடந்து சென்ற அன்புக் குழந்தை எலிசபெத் ஹாலின் இடத்தை நிரப்ப வந்த அந்த இரண்டாவது மகவுக்கு மெயிட்லாண்ட் எலிசபெத் என்ற பெயரை வைத்து அந்த அன்புச் செல்வத்தில் அதின் பெற்றோர் ஆறுதலும், தேறுதலும் ஆனந்தமும் அடைந்தனர். ஆனால் அந்த ஆனந்தமும் கூட துரிதமாக இறக்கை கட்டி பறந்து செல்லத்தான் காத்திருந்தது.
சரியாக 20 மாதங்களுக்குள் அந்த சிசுவும் நோய்வாய்ப்பட்டது. மருத்துவத் துறை முன்னேற்றமடையாத காலம் அது. உயிர் காக்கும் மருந்துகளும் இதர மருந்துகளும் கூட கொஞ்சமாகத்தான் கிடைப்பதாக இருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவரைவிட குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு தாயின்கரங்களில்தான் இருந்தது. இதற்கிடையில் குழந்தையின் தந்தை கார்டன் ஹால் புகழ்பெற்ற டாக்டராகத்தான் இருந்தார்.
மிகவும் சுகயீனமான மெயிட்லாண்ட் எலிசபெத்தை அதின் தாயார் தனது மடியில் கிடத்தி அதை உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை தடவிக் கொடுத்து அதின் உயிரைக்காக்க எவ்வளவோ பிரயாசப்பட்டார்கள். தண்ணீரிலுள்ள சிறிய மீன் தான் சாவதற்கு முன்பாக அதின் வாயை இடைவெளி விட்டு விட்டு திறப்பது போல பம்பாயின் வெப்பம் நிறைந்த புழுக்கமான சீதோஷ்ணத்தில் சின்ன எலிசபெத் குட்டி மகள் தான் சுவாசிக்கும் காற்றுக்காக வாயைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது. அதின் அன்புத்தாயார் அதின் சின்னக் கரங்களை எடுத்து பிஞ்சு விரல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக தாங்கொண்ணா துயரத்துடன் நகர்த்தியவாறே தனது அன்பின் இரட்சகர் தன்னுடைய கண்மணி செல்வத்தை எப்படித்தான் தம்மண்டை எடுத்துக் கொள்ளத் துணிவாரோ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
எனினும், தேவனுடைய திருவுளச்சித்தம் அதுவாகத்தான் இருந்தது. மெயிட்லாண்ட் எலிசபெத் 1821 ஆம் வருடம் ஜூலை மாதம் 13 ஆம் நாள் மரித்துப் போனாள். 1 வருடம் 8 மாதங்கள் மட்டுமே அந்த சிசு அதின் பெற்றோர்களுடன் இருந்தது. கார்டன் மற்றும் மார்க்கரெட்டின் வியாகுல பெருமூச்சை என்னவென்று சொல்லுவது! ஏதோ, தேவ கிருபை அவர்களை பாதுகாத்துக் கொண்டது என்றுமட்டும் நாம் கூறலாம்.
மேற்கண்ட இரு பெண் மக்களின் மறைவுக்குப்பின்னர் கார்டன் தம்பதியினருக்கு தேவன் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்தார். பெண் மக்கள் இரண்டும் மரித்துவிட்டபடியால் ஆண் மக்களையாவது எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பேராவல் அவர்களுக்கு ஏற்பட்டது. பம்பாய் பட்டணத்தின் உஷ்ணமான சீதோஷ்ணம் குழந்தைகளுக்கு கொஞ்சம்கூட ஒத்து வராத காரணத்தினால் அந்தக் குழந்தைகள் இருவரையும் இங்கிலாந்து அல்லது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லுவது நலமானது என்று அவர்கள் தங்களுக்குள் திட்டவட்டமாகத் தீர்மானித்தனர்.
மிஷனரிகள் பாதுகாப்பாக வாழ ஒரு இடம் தேடிக் கொண்டு சென்ற தேவ மனிதர்
1823 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் ஸ்காட்லாந்து தேச மிஷனரி சங்கம் தனது ஊழியத்தை பம்பாய் பட்டணத்தில் தொடங்கியது. அதின் மிஷனரியான சங்கை டோனால்ட் மிச்சல் என்பவர் மிகவும் சொற்பமான காலத்திற்குள்ளாக கார்டன் ஹால் நிறுவிய பள்ளிக்கூடங்களுக்கு அருகாமையில் தெற்கு கரைப் பகுதிகளில் 10 கிராமப்புற பள்ளிகளை ஏற்படுத்தினார். ஒரு சமயம் இராணுவத்தில் உயர்ந்த பதவியில் பணிபுரிந்து கொண்டிருந்த அருமையான அந்த டோனால்ட் மிச்சல் என்ற மேற்கண்ட தேவ மனிதர் காலரா நோயினால் திடீரென மாண்டு போனார். 1823 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி மகாபலீஸ்வரர் மலைகளின் அடிவாரத்தில் போலாட்பூர் என்ற கிராமத்தில் அவருடைய மரணம் ஏற்பட்டது. அங்கேதான் அவரது கல்லறையும் உள்ளது.
பம்பாய் பட்டணத்தின் மேற்கு கடற்கரை பகுதிக்கு கார்டன் ஹால் மூன்று தடவைகள் படகில் சென்று வந்திருக்கின்றார். மேற்கு கடற்கரைக்கு மேலாக வானளாவ உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள் கார்டனை வெகுவாக கவர்ந்து இழுத்தது. பம்பாய்க்கு வரும் மேல் நாட்டு மிஷனரிகள், கோடை காலத்தின் கொடிய வெயிலால் அடையும் தாங்கொண்ணா துயரங்களை நேரில் கண்டிருந்த கார்டன், உயர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் அந்த மிஷனரிகளுக்கு ஒரு நிரந்தர விடுதலையை அளிக்குமா என்று தனக்குள் ஆழ்ந்து சிந்திக்கலானார். அந்த நாட்களில் பம்பாயிலிருந்த மக்கள் எவருக்கும் அந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் உச்சியில் என்ன இருக்கிறதென்றே தெரியாது. ஆனால் கார்டனுக்கோ தன் மட்டாக அந்த மலைகளின் உச்சிக்கு ஏறி பார்த்துவிடவேண்டுமென்ற தணியாத ஆவல் ஆழமாக வேர் கொண்டிருந்தது. தான் நிறுவிய தென் மாவட்ட மிஷன் பள்ளிகளை பார்ப்பதற்கான வேளை அதுவாக இருந்த போதினும் முதலாவது அந்தக் கானக மலைத் தொடர்ச்சியை தன் மட்டாக கண்டு வந்துவிடவேண்டும் என்ற ஆசை அவரை அங்கே செல்லப் பண்ணிற்று.
மேற்கு தொடர்ச்சி மலை உச்சிகளில் என்ன இருக்கின்றது என்பதை அதிகாரிகள், வியாபாரிகள், யாத்ரீகர்கள் போன்ற பலரை கார்டன் சந்தித்து கேட்டபோதும் ஒருவரும் சரியான பதில் சொல்லாததால் 1824 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் நாள் அந்த பிரயாணத்தை தானே ஆரம்பித்தார். ஒரு சிறிய பாய் மரக்கப்பலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பம்பாயிலிருந்து பான்கோட் என்ற இடத்திற்கு முதலாவது பயணமானார். அவர் சென்ற கப்பற் பாதை தாழ்வான கடற்கரை பகுதியும், ஆங்காங்குள்ள கடற்கரை உட்பகுதிகளில் கொள்ளைக்காரர்கள் பாதுகாப்பாக வாழும் இடங்களாகவும் இருந்தன. இறுதியாக அவர் சாவித்திரி என்ற நதியின் முகத்துவாரத்துக்கு வந்து சேர்ந்தார். அந்த முகத்துவாரத்தில்தான் பான்கோட் என்ற இடமும், விக்டோரியா கோட்டையும் இருப்பது கார்டனுக்கு நன்கு தெரியும். 1823 ஆம் ஆண்டு அந்த இடத்தில்தான் ஸ்காட்லாந்து தேச மிஷனரி சங்கம் தனது ஊழியத்தை முதலாவது இந்தியாவில் ஸ்தாபித்தது. அங்குள்ள ஸ்காட்லாந்து தேச நண்பர்களோடு கார்டன் கொஞ்ச நேரம் செலவு செய்து அவர்களுடன் அளவளாவி மகிழ்ந்த பின்னர் நவம்பர் 17 ஆம் நாள் தனது கப்பலை அங்குவிட்டுவிட்டு ஒரு சிறிய படகில் 30 மைல்கள் தொலைவிலுள்ள மகாத் என்ற இடத்திற்குப் புறப்பட்டார். மகாத் வந்து சேர்ந்த கார்டன் போலாட்பூர் என்ற கிராமத்திற்கு நடந்து சென்றார். அங்கிருந்து ஒற்றையடிப் பாதை வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குஏறத் தொடங்கினார். இந்த போலாட்பூர் கிராமத்தில்தான் ஸ்காட்லாந்து தேச முதல் மிஷனரி டோனால்ட் மிச்சல் என்பவரின் கல்லறை இருப்பதை கார்டன் கவனித்தார். அந்த மிஷனரியின் கல்லறை வாசகம் கீழ்க்கண்டவாறு எழுதப் பட்டிருந்தது:-
“இந்தியாவுக்கான ஸ்காட்லாந்து தேச மிஷனரி சங்கத்தின் முதல் மிஷனரி, சங்கை டோனால்ட் மிச்சல் என்பவரின் கல்லறை இது. இந்திய தேசத்தில் இருளில் உள்ளவர்களுக்கு சுவிசேஷ தீபத்தை ஏற்றுவதற்காக கமிஷனர் அந்தஸ்திலுள்ள தனது உயரிய ராணுவ பதவியை பம்பாய் நகரத்தில் உதறித் தள்ளி விட்டு டோனால்ட் மிச்சல் சுவிசேஷகனானார். தாம் தெரிந்து கொண்ட சுவிசேஷ ஊழியத்தை நிறைவேற்ற ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே தேவன் அவரை தமது விண் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு விட்டார். 1822 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் இந்த கிராமத்தில்தான் மரித்தார்”
டோனால்ட் மிச்சலின் கல்லறையை கடந்து சென்ற கார்டன் பெரிய பெரிய முதலைகளுக்கு வாழ்விடமான சாவித்திரி நதி ஓரமாகச் சென்றார். தக்காணத்திற்கு தங்கள் வியாபாரப் பொருட்களை கூட்டம் கூட்டமான கோவேறு கழுதைகளில் கொண்டு சென்ற வர்த்தகர்களோடு நமது கார்டனும் ஆரம்பத்தில் சில மைல்கள் தூரம் சென்றார். மலைகளின் ஒரு பக்கமாக அவர் ஏறியதன் பின்னர் அம்மலைகளின் அடுத்த பக்கமாகவும் ஏறி ஆக மொத்தம் 15 மைல்கள் மலை ஏற்றத்திற்குப் பின்னர் புகழ்பெற்ற “பிரதாப் கோட்டை” யை வந்தடைந்தார். வலுமையானதும், நீண்டதும், உயர்ந்ததுமான அந்தக் கல் மதில் கோட்டைகளை கண்ட கார்டன் அதைக்கட்டிய சிவாஜி மகாராஜாவின் அரசாட்சி காலத்தை ஒரு கணம் நினைவுகூர்ந்தார். மேலும் 10 மைல்கள் மலை ஏறியதன் பின்னர் அவர் மலைகளின் உச்சிக்கே வந்துவிட்டார். எத்தனை அழகு குலுங்கும் காட்சி அது. தன்னைச் சுற்றிலும் மனதைக் கொள்ளை கொள்ளும் கடற்கரை காட்சிகளும், நதிகளின் முகத்துவார காட்சிகளும் அவரை பிரமிக்க வைப்பதாக இருந்தன. அவர் ஏறியிருந்த 4600 அடிகள் உயரமான அந்த இடத்திற்கு “மகாபலீஸ்வரர்” அதாவது “பெரிய கடவுளின் பெரிய பெலன்” என்று பொருளாகும். கார்டன் அன்று இரவும், அதற்கு அடுத்து வந்த நாளின் பகற் காலத்திலும் அந்த இடத்தில் தங்கி தன்னால் ஆனமட்டும் அந்தப் பீட பூமியைச் சுற்றித் திரிந்து கண்டு மனமகிழ்ந்தார்.
அந்த இடத்தின் சீதோஷ்ணம் அவருக்கு மிகவும் இதமாக இருந்தது. பம்பாய் பட்டணத்தின் வெயிலை தாங்க இயலாமல் தவியாகத் தவித்து தங்கள் சொந்த நாடான அமெரிக்காவுக்குச் செல்ல யோசிக்கும் தனது சக ஊழியர்களான மிஷனரிகளுக்கும், இதர மிஷனரி ஸ்தாபனங்களின் மிஷனரிகளுக்கும் அந்த “மகாபலீஸ்வரர்” என்ற இடத்தில் கோடை வாசஸ்தலம் அமைத்துக் கொடுக்க தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டார் கார்டன். பின்னர் அவர் அங்கிருந்து கிழக்குத் திசை வழியாக சத்தாரா என்ற இடத்திற்குச் செல்ல பெரிதும் ஆசைப்பட்டார். ஆனால், அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டதொரு வலுமையான தூண்டுதலால் உடனடியாக அவர் வீட்டிற்கே திரும்பினார். பின் வந்த நாட்களில் “மகாபலீஸ்வரர்” என்ற அந்த அழகிய மேற்கு தொடர்ச்சி மலைகளின் உச்சியானது அநேக மேல் நாட்டு மிஷனரிகளின் கோடைகால வாசஸ்தலமாக விளங்கியது. எல்லாம் தேவ கிருபையாலும், கார்டன் ஹாலின் அயராத முயற்சியாலும் அப்படி நடந்தது.
சுகயீனமான குழந்தைகளோடு மார்க்கரெட் கார்டன் பட்ட ஜீவ மரண போராட்டங்கள்
கார்டன் தனது மேற்கு தொடர்ச்சி மலைகளின் பயணத்தில் இருக்கையில் பம்பாயில் அவரது மிஷன் இல்லத்தில் அவருடைய அன்பு குழந்தைகள் அதிகமான நோய்வாய்ப்பிடியில் சிக்கித் தவித்தன. ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் மரித்துவிட்டிருந்த நிலையில் சின்ன மகன் கார்டன் தனது உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தான். மார்க்கரெட் கார்டன் தனது சிறிய மகனின் உயிரை எவ்விதத்திலும் பாதுகாக்க துடியாகத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அம்மையாரின் தினசரி நாட் குறிப்பில் காணப்படும் கண்ணீர் நிறைந்த வரிகளைக் கவனியுங்கள்.
1824 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள்
எனது ஏழை குழந்தை கார்டன் இரவு முழுவதும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டான். இன்று அவன் மிகவும் பெலவீனமாக இருந்தான். நான் அவனுக்கு “ரப்பர்ப்” மற்றும் “மக்னீஷியா” கொடுத்தேன். ஆனால், அவன் அதை வாந்தி பண்ணிவிட்டான்.
நவம்பர் 20 ஆம் நாள்
என் அருமைச் செல்வம் கடந்த இரவில் காய்ச்சலின்றி அமைதியாக தூங்கி கண் விழித்தான். இன்று நல்ல சுகத்தோடு இருப்பதாக காணப்படுகின்றான். எனது சின்ன மகன் கார்டனும் நலமுடன் உள்ளான்.
நவம்பர் 21 ஆம் நாள்
எனது கைக் குழந்தை அமைதியாக இரவைக் கழித்தது. ஆனால் சின்ன கார்டன் மகன் நன்றாகத் தூங்கவில்லை. நான் அவனுக்கு 5 கிரைன்ஸ் “கலோமல்” என்ற மருந்தைக் கொடுத்தேன். நான் என்னளவில் மிகவும் சோர்ந்து களைப்புற்றிருந்ததால் எனக்கு நல்ல சுகம் இல்லை. என் கணவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
நவம்பர் 22 ஆம் நாள்
எனது அருமை சின்ன மகன் கார்டன் இரா முழுவதும் தூக்கமின்றி தவித்தான். காய்ச்சலும் அதிகமாக இருந்தது. அவனுக்கு நான் இன்று காலை எண்ணெயைக் கொடுத்தேன்.
நவம்பர் 23 ஆம் நாள்
எனது கைக் குழந்தை நன்றாகத் தூங்கின போதினும் எனது சின்ன கார்டன் பகல் எல்லாம் சோர்போடேயே காணப்பட்டான். இரவில் காய்ச்சல் பொரிந்து கொட்டியது. இரவு இப்பொழுது சரியாக 9 மணியாக இருந்தபோதினும் காய்ச்சலின் வேகம் இன்னும் தணிந்தபாடில்லை. ஆ, எனது கணவர் இந்த நேரம் என்னோடிருப்பதின் அவசியத்தை நான் எத்தனையாக உணருகின்றேன். அவரில்லாமல் நான் இங்கே தனித்திருப்பது எனக்கு எத்தனை கஷ்டமாக தெரிகின்றது. எனது குழந்தைகள் இருவரும் அதிகமாக கஷ்டப்படுகின்றனரே!
அந்த நாட்களில் தாய்மையின் கிரயம் மிகவும் அதிகமாக விருந்தது. அக்காலத்தில் எழுதப்பட்ட மிஷனரி ஸ்தாபனங்களின் நாட் குறிப்புகள் மிஷனரிகளின் ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகளின் மரணங்களால் நிரம்பிக் கிடக்கின்றன. அந்த ஒவ்வொரு குழந்தையின் மரணத்தைக் குறித்து எழுதப்பட்ட நடபடிகளும், துயரமான வர்ணனைகளும் வாசிக்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தைக் கண்ணீர்விட்டுக் கதற வைப்பதாக இருக்கின்றன.
1824 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் நாள் அதிகாலை கார்டன் தமது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் அவரது மனைவிக்கும் அவரது இரண்டு பச்சிளம் பாலகர்களுக்கும் சொல்லொண்ணா ஆனந்தமாக இருந்தது.
குழந்தைகளின் ஜீவனைப் பாதுகாக்க மார்க்கரெட் அம்மையார் அமெரிக்கா சென்றது
ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் மரித்துவிட்டதால், ஆண் குழந்தைகள் இருவரது ஜீவனையாவது எப்படியும் பாதுகாத்துவிட வேண்டும் என்ற பேராவலில் 1825 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கார்டன் தம்பதியினர் ஒரு திட்டமான தீர்மானம் எடுத்தனர். அதின்படி மார்க்கரெட் ஹால் அம்மையார் தனது குழந்தைகள் இருவருடன் அமெரிக்கா சென்றுவிடுவதென்று தீர்மானித்தார்கள். தனது அன்பு மனைவி தன்னைவிட்டு பிரிந்து குழந்தைகளுடன் செல்லப் போவதை அறிந்து கார்டன் ஹால் அளவற்ற துயரம் அடைந்தார். எனினும், குழந்தைகளின் ஜீவனைக் காக்க அருமை மனைவியை பிரிய வேண்டியது அவருக்கு தீராத அவசியமாயிற்று. பம்பாயிலுள்ள பைகுலா என்ற இடத்தில் தனது மனைவி மற்றும் தனது அருமை கண்மணி செல்வங்களுடன் கொஞ்ச நாட்களை செலவிட்டு கர்த்தருக்குள் சந்தோசம் அடைந்தார். அந்தச் சொற்பமான நாட்களுக்குப் பின்னர் திரும்பவும் அவர் இந்த பூலோகத்தில் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அதுதான் அவர்களின் கடைசி கூடுகையாக இருந்தது.
அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னர் மார்க்கரெட் தனது கணவர் கார்டனுடன் மிகவும் பரிந்து மன்றாடி எப்படியாகிலும் அவரும் தன்னுடனும், குழந்தைகளுடனும் அமெரிக்கா தேசம் வந்து சிறிது காலம் ஓய்வு எடுத்து பின்னர் இந்தியா திரும்பி வரும்படியாக எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் ஒன்றும் பயனளிக்கவில்லை. அதற்காக அவர் தனது மனைவியை மிகவும் கடிந்து கொண்டார். தனது கரங்களில் தான் எடுத்துக்கொண்ட கர்த்தருடைய வேலையையும், சுவிசேஷ நற்செய்தி, இருளான இந்திய தேசத்தில் விரைந்து பரவ வேண்டியதன் தீராத அவசியத்தையும், கலப்பையின் மேல் கை வைத்தவன் எந்த ஒரு சூழ் நிலையிலும் அதிலிருந்து தனது கரங்களை எடுக்கக்கூடாதென்று கூறுகின்ற தேவனுடைய வார்த்தையையும் மனைவிக்கு நினைவுபடுத்தினார். மிகவும் கண்ணீரான ஒரு நிலையில் கார்டன் அப்படிப் பேசி மனைவியையும் இரு சின்னஞ்சிறு பாலகர்களையும் தனியாக அனுப்பி வைத்தது பிற மிஷனரிகள் பலருக்கும் ஆறாத துயரத்தை அளிக்கத்தான் செய்தது.
1825 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் மார்க்கரெட் ஹால் தனது 4 வயது குமாரன் கார்டன் மெயிட்லாண்டுடனும், சின்ன கைக்குழந்தையான மகனுடனும் அமெரிக்கா செல்லுவதற்காக “ஆன்” என்ற கப்பலில் ஏறினார்கள். அருமை மனைவிக்கும், அன்புக் குழந்தைகளுக்கும் இறுதிவிடை கொடுத்து பிரிவதற்காககார்டன் ஹால் ஒரு சிறிய படகின் மேல் ஏறி தனது உள்ளத்தில் எழுந்த அலைமோதும் ஆறாத கவலையின் துயரங்களை தனது கல்லூரி நாட்களில் தன்னை தமக்கென ஆட்கொண்ட தன் அருமை நேசருக்காக அடக்கி அமரப்பண்ணிக் கொண்டு தனது கைகளை உயர்த்தி கப்பலின் மேல் தட்டில் நின்று கொண்டிருந்த தனது மனைவி தனது 4 வயது அன்பு மகன் கார்டன் மெயிட்லாண்டிடம் கை அசைத்து பூலோகத்தில் கடைசி விடை பெற்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக வழிந்தோடினது. மழை காலம் ஆரம்பித்துவிட்டபடியால் அதிகமான நேரம் தனது திறந்த வெளி படகிலே நின்று மனைவியையும் மகனையும் பார்த்துக் கொண்டிருக்க அவரால் இயலாத நிலையில் தனது இரு கைகளையும் அசைத்து இறுதி விடை அளித்து கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை துடைத்தவாறே பம்பாய் துறைமுகத்தை நோக்கி கார்டன் படகில் திரும்பினார். அப்படியே அவரது அன்பு மனைவியும் அழுகையும் கண்ணீருமாக கப்பல் அறைக்குள் தனது பாலகனுடன் சென்றார்கள். அந்த ஆறாத சோகக் காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அன்றைய காலக்கட்டத்தில் மிஷனரிகள் அவ்வண்ணமாகத் தான் தங்களை ஆட்கொண்ட தங்கள் இரட்சா பெருமானுக்கு தங்களை அர்ப்பணித்து தேவ ஊழியம் செய்தனர். அவர்கள் தங்கள் ஆண்டவருக்காக தங்களைப் பலி பீடத்தில் ஒப்புவித்து எரித்து சாம்பலாக்கிக் கொண்டனர். “இனிவரும் காலம் குறுகினதான படியால் மனைவிகள் உள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள் போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை தகாதவிதமாக அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்” ( 1 கொரி 7 : 29 – 31 ) என்ற தேவ வசனத்தை அதின் முழுமையான விலைக் கிரயத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறவர்களாக இருந்தனர்.
துயரப் புலம்பலோடு அமெரிக்காவில் கரை இறங்கிய மார்க்கரெட் கார்டன்
1825 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி கப்பலேறிய மார்க்கரெட் கார்டன் மூன்றரை மாதத்திற்கும் மேலான கடினமான கப்பல் யாத்திரைக்குப் பின்னர் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி அமெரிக்காவில் தரையிறங்கினார்கள். அவர்கள் கப்பலை விட்டு இறங்கும்போது அவர்களுடைய கடைசி பாலகன் மட்டும்தான் அவர்களது கரத்தில் இருந்தான். அவர்கள் தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தவனும் தனது தந்தைக்கு பம்பாய் துறைமுகத்தில் கரம் அசைத்து வழி அனுப்பி வைத்தவனுமான 4 வயது பாலகனான கார்டன் மெயிட்லாண்ட் நாளாக நாளாக கப்பலிலே வியாதிப்பட்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கப்பலிலேயே இறந்து போனான். பரலோகத்தின் தேவன் தமது மென்மையான கரங்களில் அந்த சிசுவை வாங்கிக் கொண்டார்.
மார்க்கரெட் கார்டன் அமெரிக்காவிலுள்ள சாலேம் என்ற பட்டணத்தின் துறைமுகத்தில் வந்து கரை இறங்கும்போது அவர்களை வரவேற்க யாருமே கிடையாது. எனினும் சீக்கிரமாகவே அங்குள்ள திருச்சபையின் மக்கள் அவரது வருகையைக் குறித்து கேள்விப்பட்டு துறைமுகம் சென்று அம்மையாரையும், அவர்களுடைய அன்புப் பாலகனையும், அவர்கள் கொண்டு வந்த சிறிய மூட்டை முடிச்சுகளையும் எடுத்து அழைத்து வந்தனர். அந்த திருச்சபையின் மக்கள் அவரை மனதார நேசித்தனர். அதற்குக் காரணம் இல்லாமலில்லை. பம்பாயில் 20 ஆண்டு காலம் வாழ்ந்த மார்க்கரெட் கார்டன், ஒரு நாள் கூட தனது சுகத்துக்காக லீவு எடுக்காமல் தனது கணவரின் பரிசுத்தமான தேவப் பணியில் தோளோடு தோள் கொடுத்து தேவனுடைய திருச்சபையைக் கட்டி எழுப்ப உறு துணையாக இருந்த பரிசுத்தவாட்டி அல்லவா அவர்கள்!
தனது சொந்த தேசமான இங்கிலாந்து தேசத்தை விட்டுச் சென்ற மார்க்கரெட் அம்மையார் பின்னர் ஒருக்காலும் தனது தாய் நாடு திரும்பவே இல்லை. தனது ஆண்டுகளை இந்தியாவிலும், மீதமுள்ள தனது வாழ்நாட்காலத்தை அமெரிக்க நாட்டிலுமாக செலவிட்டு விட்டார்கள். அந்த பரிசுத்தவாட்டி வாலிப பெண்ணாக இருந்த சமயம் ஒரு ஐசுவரியமுள்ள கப்பல் தளபதி அவர்களை முழு மனதார நேசித்தார். ஆனால், அவரால் மார்க்கரெட் அம்மையாரை எதிர்பாராத காரணங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அவர் வயதிலும் அதிக மூப்பான மனிதர். எனினும் அவர் அதுவரை திருமணமே செய்யவில்லை என்பது ஆச்சரியமான காரியமாகும். அவர் தனது மரண சாசனத்தில் ஒரு பெரிய தொகையை மார்க்கரெட்டுக்கு எழுதி வைத்துவிட்டு மரித்துப் போனார்.
அமெரிக்காவுக்கு வந்த மார்க்கரெட் கார்டன் அம்மையார், தனது கடைசி மகனை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்க பணம் பற்றாக் குறையால் கஷ்டப்பட்ட சமயம் ஒரு சிறிய பள்ளியை நடத்தி அதின்மூலமாக தனது மகனுடைய கல்லூரி செலவுகளை சந்தித்து வந்தார்கள். அந்த பணக்கஷ்டமான நாட்களில்தான் கப்பல் தளபதி தனக்காக விட்டுச் சென்ற உயிலின் பெரும் பணம் அம்மையாருக்கு ஆச்சரியமாக வந்து கிடைத்தது. அதைக் கொண்டு அவர்கள் தனது ஒரே கடைசி மகனை நல்லவிதமாக படிக்க வைக்கமுடிந்தது. ஆ, தேவனுடைய அதிசயமான வழிநடத்துதல்களை என்னவென்று சொல்லுவது!
ஊழியத்தின் எல்லைகளை விசாலமாக்கிக் கொண்டு
1822 ஆம் ஆண்டு கார்டன் ஹாலின் மிஷனரிப் பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வருஷமும் தேவ ஊழியம் சிறப்பாக முன்னேறுவதாக இருந்தபோதினும் மிஷனரிகளின் இறப்புகளும், மிஷனரிகளுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் பம்பாய் பட்டணத்தின் கடும் உஷ்ணமான சீதோஷ்ணத்திற்கு 2 ஆண்டுகள் கூட உயிர் வாழ இயலாத நிலையும் மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது.
கார்டனுடைய பெரிய அச்சுக்கூடம் இராப்பகலாக தேவனுடைய திருவசனங்களையும், சுவிசேஷப் பங்குகள், புதிய ஏற்பாடுகள், இதர இரட்சிப்பின் சுவிசேஷ பிரதிகளையும், மனித வாழ்வுக்கு பயன் அளிக்கக்கூடிய சுகாதார சம்பந்தமான புத்தகங்கள், பள்ளிப் பிள்ளைகளுக்கு தேவையான கணிதப் புத்தகங்கள் போன்றவற்றையும் அச்சிட்டுக் குவித்தன. அச்சுக்கூடத்தில் அச்சுக்கோப்பவர்களும், அச்சு எழுத்துக்களை உருவாக்குகிறவர்களும், புத்தகங்களை பைண்ட் செய்பவர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் மிஷனரிகள்தான். அச்சுக்கூடத்தின் கீழ் மாடியில் அச்சுப் பணிகளும் மேல் மாடியில் மாலை வேளைகளில் தேவ ஆராதனைகளும், ஜெபக்கூட்டங்களும் நடைபெற்றன. புத்தகங்கள் அச்சுக் கூடத்திலிருந்து வெளி வந்ததும் உடனேயே அவைகள் மக்களுடைய கரங்களை சென்றடைந்துவிட வேண்டும் என்பதில் கார்டன் வெகு தீவிரமாக இருந்தார். இந்த பரிசுத்த பணிக்காக அவர் மராத்தி மொழி தெரிந்த யூதர்களை நியமித்தார். 1823 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் கார்டன் அவ்விதமாக அனுப்பிய இரண்டு யூதர்கள் பூனா பட்டணத்தில் மாத்திரம் 5788 புத்தகங்களை விநியோகித்திருந்தனர். இதில் பெரும்பாலும் தேவனுடைய சுவிசேஷ பங்குகளே கொடுக்கப்பட்டிருந்தன.
கார்டன் தோற்றுவித்த பள்ளிக்கூடங்கள் யாவும் கர்த்தருக்கு மகிமையாக நடந்து கொண்டிருந்தன. கார்டனுடன் இணைந்த மிஷனரிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இப்பொழுது தொடர்பு கொண்டிருந்தனர். அதற்கு அச்சாணியாக பள்ளிக் கூடங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. உலகக் கல்வியுடன் தேவனுடைய சுவிசேஷத்தையும் புகுத்துவதே கார்டனின் குறிக்கோளாக இருந்தது.
கார்டன் ஹாலின் இந்திய மிஷனரிப் பணியில் கிரீடம் போன்ற தொண்டு என்னவெனில், அவர் நமது இந்திய நாட்டுத் திருச்சபைக்கு மராத்தி மொழியில் புதிய ஏற்பாட்டைக் கொடுத்ததுதான். இந்த மொழி பெயர்ப்பு வேலையில் கார்டன் ஹாலுடன், நியூவெல், பார்ட்வெல், நிக்கோலஸ், கிரேவ்ஸ் ஆகிய நால்வருடைய கூட்டாண்மை முயற்சியாக இருந்தபோதினும் நமது கார்டன் மட்டுமேதான் இந்த மராத்தி மொழி பெயர்ப்புக்கு காரண கர்த்தனும் அதில் நீண்ட காலம் உழைத்த மனிதருமாவார். தேவ மனிதர் வில்லியம் கேரியும் வேதாகமத்தை ஏற்கெனவே மராத்தி மொழியில் மொழி பெயர்த்திருந்தார். ஆனால், அந்த மொழி பெயர்ப்பு மத்திய இந்தியா மற்றும் நாகபுரி பகுதிகளில் பேசப்படும் மராத்தி மொழி பேச்சு வழக்கத்திற்கு ஏற்றவாறு மட்டும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கார்டனுடைய மொழி பெயர்ப்பு பம்பாய் பட்டணம் முழுமையிலும் இதர இடங்களிலுமுள்ள மராத்தி மொழி பேசும் மக்களுடைய பேச்சு நடைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைந்திருந்தது.
மராத்தி மொழி புதிய ஏற்பாடு அச்சுக்கூடத்தைவிட்டு வெளி வந்த நாள் திருச்சபை சரித்திரத்தில் ஒரு பொன்னான எதிர்பார்ப்பு நாளாக இருந்தது. பள்ளியில் ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு வந்ததும் மராத்தி மொழி பேசும் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒரு மராத்தி மொழி புதிய ஏற்பாடு இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி தேனாக இனிப்பதாக இருந்தது. லண்டனிலுள்ள வேதாகம சங்கம் தனது புனிதமான தேவ வசனங்களின் சேமிப்புப் பெட்டகத்தில் கார்டன் ஹால் மொழி பெயர்த்த மேற்கண்ட மராத்தி மொழி புதிய ஏற்பாட்டின் ஒரு பிரதியையும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டது.
மராத்தி மொழி புதிய ஏற்பாடு அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த நாளின் இராக்காலத்தில் கார்டன் தனது அறையில் தேவனுக்கு முன்பாக முழங்காலூன்றி அந்த ஆனந்தமான நாளை காண கிருபை செய்த தன் அன்பின் கர்த்தரின் பாதங்களைக் கண்ணீரால் நனைத்தார். தனது நேச கர்த்தருக்கு அனந்தங்கோடி நன்றி செலுத்தி உள்ளம் பூரித்தார். கார்டன் முதன் முறையாக பம்பாய் வந்து இறங்கியபோது அந்தப்பட்டணத்து வாசிகளான மராத்தியர்களுக்கு அவர்களது சொந்த மொழியில் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் எதையுமே கொடுக்க இயலாத நிலை குறித்து அன்று அங்கலாய்த்த அவர் இப்பொழுது அவர்களின் சொந்த மராத்தி மொழியிலேயே புதிய ஏற்பாட்டைக் கொடுக்கக்கூடிய களிகூருதலின் நிலையில் இருந்தார். அந்த மராத்தி மொழியை அவர் பம்பாய் பட்டணத்தின் தெருக்களில் செல்லும் மராத்தி பாஷை பேசும் மக்களிடமிருந்தே அவர் பேசக் கற்றுக் கொண்டார். அவர் பம்பாய்க்கு வந்த ஆரம்பத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். ஆனால், இப்பொழுதோ ஆயிரக்கணக்கான மக்கள் எழுத்தறிவு பெற்றுவிட்டனர்.
கார்டன் தோற்றுவித்த மிஷன் பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவர்கள், மாணவியருக்கு இயேசு இரட்சகர் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டார். கீழை நாடுகளின் மார்க்கமான கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசு இரட்சகர் கிழக்கிந்திய பாலஸ்தீனா தேசத்தின் கிராமம் ஒன்றில் பிறந்து அங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு நன்மை செய்கிறவராகவும், அவர்கள் பிணிகள் யாவும் போக்கும் பரிகாரியாகவும் எங்கும் சுற்றித் திரிந்து இறுதியில் மனுக்குலத்தின் பாவம் போக்கும் பலி ஆட்டுக்குட்டியாக எருசலேம் பட்டணத்துக்கு வெளியே சிலுவையில் தொங்கி மரித்ததின் மூலம் பூவுலகத்தோர் யாவரும் தங்களது வாழ்வில் பாவ மன்னிப்பு, தேவ சமாதானம், உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை பெற்று வாழ பரலோகப் பாதையை திறந்துவிட்டார் என்பதை மிஷன் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் நன்கு அறிந்திருந்தனர்.
பெண் பிள்ளைகளுக்கென்று தனியாக 9 பள்ளிகளை கார்டன் இப்பொழுது பம்பாயில் ஸ்தாபித்திருந்தார். இந்தப் பெண் பாடசாலைகளில் உயர் குலத்தைச் சேர்ந்த பிராமணப் பெண்களும் கல்வி கற்றனர். இந்தப் பள்ளிகளின் தரம் திறம்பட்ட ஒன்றாக இருந்தது. இங்கு கல்வி பயின்ற மாணவிகள் தங்கள் பள்ளிப் பாடங்களுடன் சமையல், தையல், சுற்றுப் புறங்களைச் சுத்தமாகப் பேணுதல் போன்றவற்றிலும் பயிற்சி அளிக்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மெய் தேவன் இயேசு இரட்சகர் ஒருவர் மாத்திரமே என்ற சத்தியத்தையும் திட்டமும், தெளிவுமாகக் கற்றுக் கொண்டனர். இந்தவிதமான மிஷன் பள்ளிகளில் கல்வி பயின்ற பெண்களைத் திருமணம் செய்ய அந்த நாட்களில் ஆண்கள் நடுவில் பெரிய போட்டா போட்டி இருந்தது. இந்தப் பெண்கள் தாங்கள் செல்லும் இல்லங்களில் கிறிஸ்தவ தீபத்தை ஏற்றி வைத்து தங்கள் உள்ளத்தில் தாங்கள் ஏற்றுக்கொண்ட தங்கள் உலக இரட்சகரை தங்கள் வாழ்விலும், வார்த்தையிலும் உயர்த்திக் காண்பித்தனர்.
மராத்தி மொழி புதிய ஏற்பாடு அச்சுக்கூடத்திலிருந்து வெளி வந்ததும் பம்பாய் பட்டணம் முழுவதிலும் அவைகள் விநியோகிக்கப்பட்டன. பூனா, நாக்பூர் மற்றும் இறங்குமுகமாக கிழக்கு கடற்கரை பகுதி பட்டணங்கள் பலவற்றிற்கும் அவைகள் பரவலாக மக்களுக்கு ஜெபத்தோடு கொடுக்கப்பட்டன. இரவின் பிந்திய மணி நேரங்களில் கூட பட்டணங்களின் தெருக்களில் நின்று கோல்போர்ட்டர்கள் அந்த மராத்தி மொழி புதிய ஏற்பாடுகளை ஆத்துமாக்களுக்கு அளித்தனர். அந்தப் புதிய ஏற்பாடுகளை தங்கள் சொந்த மொழியில் பெற்ற மராத்தி மக்கள் பலரும் அதின் மூலம் எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தையும், இரட்சிப்பையும் கண்டு ஆனந்தித்து மகிழ்ந்தனர்.
இந்திய நாட்டிற்கு அமெரிக்காவின் முதல் மிஷனரியாக வந்த கார்டன் ஹால் இந்தியாவில் சாதித்த காரியம் ஒன்றுமில்லை என்று யாராகிலும் கூறினால் அதை ஒருக்கால் நாம் ஒத்துக்கொள்ள முயன்றாலும் அவர் நம் இந்திய நாட்டில் மராத்தி மொழியில் புதிய ஏற்பாட்டை தான் கற்றறிந்து பாண்டித்தியம் பெற்ற எபிரேயு, கிரேக்க மொழியிலிருந்து மொழி பெயர்த்து மக்களுக்கு அளித்ததையும், அதினால் தேவ நாமம் மகிமைப்பட்ட விதத்தையும் எவரும் மறுக்கவியலாது. அந்த தேவ மனிதரின் மாபெரும் சாதனை அது. அவர் இந்தியாவுக்கு மிஷனரியாக வந்த தனது முழு நோக்கத்தையும் அந்த ஒரு காரியத்திலேயே முழுமையாக சாதித்துவிட்டார். அதைவிட அவர் செய்ய வேண்டிய வேறொரு பெரிய பணி இல்லவே இல்லை.
கார்டன் ஹாலின் இறுதிப் பயணம்
மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள மகாபலீஸ்வரர் என்ற இடத்துக்கு சாகசமான பயணம் மேற்கொண்டு திரும்பிய கார்டன் மற்றொரு பயணத்தை செய்ய எண்ணினார். அதுதான் அவரது வாழ்வின் கடைசிப் பயணமாக அமையப்போகின்றது என்பது அப்பொழுது அந்த தேவ மனிதருக்குத் தெரியாதிருந்தது. நாசிக் என்ற பட்டணத்துக்கு அவர் அந்த பிரயாணத்தை மேற்கொண்டார். அதற்கு இரண்டு அடிப்படையான காரணங்கள் இருந்தன. ஒன்று, அந்தச் சமயம் காலரா என்ற கொள்ளை நோய் நாசிக் பட்டணத்தில் தலை விரித்தாடிக் கொண்டிருந்தது. காலரா நோயால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிப்பதற்காக அவரை அங்கு அழைத்திருந்தனர். மற்றொரு காரணம், நாசிக் பட்டணத்திலுள்ள அவரது மிஷன் பள்ளிகள் நல்லவிதமாக நடக்கின்றதா என்பதை அவர் பார்க்க பெரிதும் ஆசை கொண்டிருந்தார். மூன்றாவது காரணம் கூட ஒன்று இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது என்னவெனில், நாசிக் பட்டணத்திற்கு அப்பால் தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்கப்படாதிருக்கும் சுவிசேஷம் எட்டாத பகுதிகளுக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டுமென்பதுடன் அதற்கு அடிப்படையாக அமையக்கூடிய மிஷன் பள்ளிகளை புதிதாக அங்கு தோற்றுவிக்கவேண்டும் என்ற இதயக் கதறலும் அவருக்கு இருந்தது.
1826 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் நாள் அவர் அந்த இறுதி பயணத்தை தொடங்கினார். கார்டன் தன்னுடன் ஜேம்ஸ் ராபின்சன் மற்றும் தாமஸ் கிரஹாம் என்ற இரண்டு இளம் மிஷனரிகளை அழைத்துச் சென்றார். பம்பாயில் தனது மிஷன் பணிகளை கவனிக்கும்படியாக காரட் என்ற அமரிக்க மிஷனரியை மாத்திரம்தான் அவர் விட்டுச் சென்றார். கார்டன் இந்தப் பூவுலகத்தின் இறுதிப் பயணத்துக்கு ஆயத்தமாகிவிட்டோம் என்பதை தன்னளவில் அவர் ஒருக்காலும் சிந்தித்துப் பார்த்திருக்கவே மாட்டார். தான் பிரயாணப்படுவதற்கு முன்பாக பல ஆண்டு காலம் வாழ்ந்த தனது மிஷன் வீட்டை மிகவும் ஆழ்ந்த அமைதியில் கடைசியாகப் பார்த்து மகிழ்ந்தார். தான் விட்டுச் செல்லும் பம்பாய் பட்டணத்தில் தனது காலடிகள் திரும்பவும் படப் போவதில்லை என்பது அந்த ஏழை மனிதருக்கு அப்பொழுது தெரியாது.
கார்டன் தன்னுடைய நாசிக் யாத்திரையை தொடங்கும் சமயம் கட்டுமஸ்தான திடகாத்திர ஜாம்பவனாக இருந்தார். பூரண சுகம் அவருடைய சரீரத்தை ஆளுகை செய்து கொண்டிருந்தது. ஒல்லியான உடல்வாகு, நடுத்தர உயரம், கூர்ந்து நோக்கும் விழிகள், அவரது பிரகாசமான முகம் யாவும் அவரது சிருஷ்டிகரால் அருமையாகப் படைக்கப்பட்டிருந்தன. எங்கு சென்றாலும் தான் பார்க்கும் காரியங்களை தெளிவான பரிமாணத்தில் வகையறுத்துப் பார்க்கும் பார்வை அவருக்கிருந்தது.
கார்டன் தனது பயணத்துக்கும் தனது மருத்துவ சேவைக்கும் தேவையான எல்லாவற்றையும் மிகுந்த கவனமாக பொறுக்கி எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட தனது இரண்டு மிஷனரி இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு மூவருமாக முழங்காலூன்றி ஜெபித்த பின்னர் தங்களை கர்த்தாவின் பாதுகாவலின் கரங்களுக்கு ஒப்புவித்துவிட்டு தங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தனர். அதின் பின்னர் நடந்த காரியங்களை கார்டனுடைய தினசரி நாட் குறிப்பில் காணப்படும் பக்கங்களிலிருந்து கீழே குறிப்பிடுவது உசிதமானதாக இருக்கும்.
மார்ச் 3 ஆம் நாள்
டிரிம்பகேஷ்வரிலிருந்து மாலை 4 மணிக்கு படகில் புறப்பட்டு மறு நாள் காலை தாணா வந்து சேர்ந்தோம். அங்குள்ள மிஷன் பள்ளியில் 54 மாணவர்களும் 2 மாணவிகளும் இருந்தனர். தாணா நகரத்துக்குள் சென்று இரட்சகர் இயேசுவைக்குறித்து தெளிவாகப் பேசி 50 சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம். தாணாவிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய படகு சரியான நேரத்திற்குப் புறப்படவில்லை. படகிலிருந்த இந்து யாத்ரீகர்களுடன் ஆண்டவர் இயேசுவைக் குறித்து பேசி அவர்களோடு சம்பாஷித்தேன். பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்துவிட்டபடியால் படகின் மேல் தட்டடுக்கில் ஏறிப் படுத்துக் கொண்டேன். தேவனுடைய அளவிடற்கரிய கிருபையால் அதிசயமாக இரா முழுவதும் நன்றாகத் தூங்கியிருந்தேன். பொழுது விடிந்து பார்த்தபோது எங்கள் படகு கல்யாண் என்ற துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம்.
மார்ச் 4 ஆம் நாள்
படகிலிருந்து இறங்கி கல்யாணிலுள்ள எங்களது பள்ளிக்குச் சென்றோம். பள்ளியில் 15 மாணவர்கள் இருந்தனர். பட்டணத்திலுள்ள கொஞ்சம் மக்களுக்கு இயேசுவைக் குறித்துப் பேசி சுவிசேஷ சிறிய புத்தகங்களைக் கொடுத்தோம். அங்குள்ள ஒரு இந்துக் கோயிலுக்குச் சென்றேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக இதே கல்யாணுக்கு நான் வந்திருந்தபோது இதே கோயிலுக்கு வந்திருக்கின்றேன். அப்போதிருந்த அதே பூஜாரிதான் இப்பொழுதும் இருப்பதை ஆச்சரியத்துடன் நான் கவனித்தேன். அந்த மனிதனும் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டான். அந்த இந்து கோயிலில் கூடியிருந்த அனைவருக்கும் அன்பின் ஆண்டவர் இயேசுவைக் குறித்துப் பிரசிங்கித்தேன். அவர்கள் எனது வார்த்தைகளை ஆசை ஆவலுடன் கேட்டனர். அதிகமாகப் பயனடைந்தனர். கடந்த முறை இதே பூஜாரி என் மீது பகைமை காட்டினான். அவனுடைய முகநாடி அன்று வேறுபட்டிருந்தது. ஆனால், இப்பொழுதோ அவன் என் மீது பட்சம் நிறைந்தவனாகக் காணப்பட்டான்.
மார்ச் 7 & 8 ஆம் நாள்
பொழுது புலர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் வைல்கோலி என்ற இடத்திற்கு வந்தோம். இரண்டு கூட்டம் இந்து பக்தர்களுக்கு கர்த்தர் இயேசுவைக் குறித்துப் பிரசிங்கித்தேன். 100 வீடுகளை நாங்கள் சந்தித்து கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் 20 துண்டுப்பிரதிகளை விநியோகித்தோம். மாலை 5 மணிக்கு காசன்னா என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். குடிப்பதற்கு தண்ணீர் கிடையாமல் அதிகமாகக் கஷ்டப்பட்டேன். காலியான ஒரு கூடாரத்தைக் கண்டு அங்கே இராத் தங்கினோம். எங்கள் கூடாரத்தண்டை வந்தோருக்கு 3 சுவிசேஷ பிரதிகளை வழங்கினேன். எங்கள் கூடாரத்துக்கு முன்பாக கூடியிருந்த 15 பேருக்கு தேவனுடைய வசனங்களை வாசித்துக் காட்டினேன். மறு நாள் காலை 3 ஆங்கிலேயர்களுடைய கூடாரங்களண்டை வந்தோம். அவர்கள் எங்களுக்கு வெகு அன்பு செய்தனர். ஒரு வயதான முகமதிய மனிதனை நான் சந்தித்தேன். கடந்த 11 ஆண்டு காலமாக அவர் தனது மனைவி, மகன்கள், ஒரு மகளை விட்டுவிட்டு வெறும் 7 ரூபாய் மாத சம்பளத்திற்காக பிரிந்து வாழ்வதாக என்னிடம் கூறினார். அதைக் கேட்பதற்கு எனக்கு மிகுந்த துயரமாக இருந்தது.
மார்ச் 14 ம் நாள்
கொள்ளை நோயான காலரா மிக விரைவாகப் பரவுகின்றது. மக்கள் அந்த நோயால் வெள்ளம் போல வாரிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பேரழிவுக்கு காரணமான இந்தக் கொள்ளை நோய் கடவுளுக்கு (பெண் தேவதைக்கு) அறியாமை கொண்ட மக்கள் வெகு சிறப்பான காணிக்கைகளை இன்று செலுத்தி பலியிட்டு வழிபாடு செய்கின்றனர்.
ஒரு உயரமான உருளை வடிவமான குதில் போன்ற அமைப்பை மாட்டு வண்டியில் வைத்து அதினுள் மக்கள் தட்டுகளில் கொண்டு வரும் அரிசி சாதங்களைக் கொட்டி ஒரு கொடியையும் அந்த சாதத்தின் மேல் நட்டியிருக்கின்றனர். சாதத்தின் மேல் ஒரு தட்டில் நெருப்பும் எரிந்து கொண்டிருக்கின்றது. தாரை, தப்பட்டை முழங்க, மேள தாள வாத்திய ஒலிகளுடன் மாட்டு வண்டி ஊரைச் சுற்றி வலம் வந்த பின்னர் அந்த சாப்பாட்டை ஊருக்கு வெளியே எடுத்துச் சென்று பூமியிலே வாரிக் கொட்டினர். மக்களின் அறியாமையையும், மூடத்தனத்தையும் என்னவென்று சொல்லுவதென்றே தெரியவில்லை.
நான் மருந்து கொடுத்த ஒரு காலரா நோயாளி பிழைத்துக் கொண்டான். அவன் ஒரு இந்து பூஜாரியின் மகன் என்பது சந்தோசத்துக்குரிய செய்தியாகும். நாங்கள் எங்களுடன் கொண்டு வந்த தேவனுடைய சுவிசேஷப் பிரசுரப் புத்தகங்களில் பாதிப் பகுதியை விநியோகித்து முடித்துவிட்டோம். மக்கள் பெரும்பாலும் புத்தகங்களை ஆவலோடு வாங்குவதைக் காண முடிகின்றது. எனினும், சிலர் அவற்றை வாங்கி வாசித்துவிட்டு கோபத்தில் கிழித்துப் போடுவதையும் நாங்கள் கண்ணீரோடு பார்க்கின்றோம்.
தேவ மனிதரின் டயரியில் காணப்பட்ட கடைசி வரிகள்
1826 ம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள்
அதிகாலை 5 மணிக்கே நாசிக் பட்டணத்தை விட்டு பயணமானேன். சூரிய உதயத்திற்கு முன்பே 80 முதல் 100 வரையான எண்ணிக்கையுள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்தேன். பெல்காம் என்ற கிராமத்தில் சற்று இளைப்பாறி காலை ஆகாரத்தை சாப்பிட்டேன். அந்தக் கிராமத்தின் முக்கியஸ்தர் பலர் ஆர்வத்தோடு ஒரு மரத்தடியில் கூடி வந்து எனது வாயிலிருந்து புறப்பட்ட தேவ வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்தோடு கவனித்துக் கேட்டனர். அந்த கிராமத்திலிருந்த ஒரே ஒரு பிராமணருக்கு நான் 2 சுவிசேஷ புத்தகங்களைக் கொடுத்தேன். இந்தப் பகுதியில் அதிகமான கிராமங்கள் இல்லை. கண்ணுக்குத் தென்படும் கிராமங்களும் பிரதான ரஸ்தாவுக்கு வெகு அப்பால்தான் உள்ளது. மாலை 3 மணிக்கு நாசிக் பட்டணத்தை வந்தடைந்தேன். அங்குள்ள அரசாங்க விருந்தினர் மாளிகையில் எனது மூட்டை முடிச்சுகளை வைத்துவிட்டு தேவனுடைய பணியைச் செய்ய ஆரம்பித்தேன். என் வசமிருந்த தேவனுடைய புத்தகங்கள் மேல் இந்த பட்டணத்திலுள்ள மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தை என்னவென்று சொல்லுவேன்!
மார்ச் 17 ஆம் நாள்
பல இடங்களிலும் ஏராளமான எண்ணிக்கையுள்ள மக்களுக்கு தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். நிறைய துண்டுப் பிரதிகளையும் விநியோகித்தேன். காலரா நோயினால் நேற்று மாத்திரம் 200 பேர் மரித்துவிட்டதாக் கூறுகின்றனர். மரித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கும் என்று வேறு சிலர் பேசிக் கொள்ளுகின்றனர்.
மார்ச் 18 ஆம் நாள்
சூரிய உதயத்திற்கு சற்று பின்னர் கிராமத்திற்குச் சென்று தேவனுடைய சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தேன். புகல்சி, கண்டே என்ற இடங்களிலுள்ள மக்களுக்கும் அங்குள்ள இந்து யாத்ரீகர்களுக்கும் இயேசுவைக் குறித்துப் பேசி இரட்சண்ய மார்க்கத்தை அவர்களுக்கு விவரித்தேன்.
(கார்டன் ஹாலுடைய நாட்குறிப்பில் எழுதப்பட்ட கடைசி வரிகள் இவைகள்தான்)
மார்ச் 19 ஆம் நாள்
பிற்பகலின் பிந்திய நேரம் டோடி தப்போடி என்ற கிராமத்திற்கு கார்டனும் அவரது உண்iமையுள்ள உதவியாளர்கள் தாமஸ் கிரஹாமும், ஜேம்ஸ் ராபின்சனும் வந்து சேர்ந்திருக்கின்றனர். கார்டன் பசியோடும், களைப்போடும் இருந்தபோதினும் உடனடியாக அந்த கிராமவாசிகளை அதிகமாக நேசிக்கின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பைஅவர்களுக்கு கூறியிருக்கின்றார். டோடி கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கு கார்டனை மிகவும் பிடித்துப் போயிருக்கின்றது. அவர்கள் எப்பொழுதும் அவரை சூழ்ந்து நின்று கொண்டிருந்திருக்கின்றனர். அந்த கிராமத்திலுள்ள மராட்டிய குடியானவர்கள் அவர் மேல் நல்ல ஆழ்ந்த அன்பு வைத்திருக்கின்றனர். ஏழ் கடல் தாண்டி தனது பெற்ற வீட்டையும், தான் பிறந்த பொன் நாட்டையும் முற்றிலும் துறந்து தங்களுக்கு ஏதோ சொல்ல வேண்டுமென்று வரும் மனிதன் தன் வசம் ஒரு அற்புதமான கதையைத்தான் கட்டாயம் வைத்திருப்பான் என்று அவர்கள் முழுமையாக நம்பினர். நூற்றுக்கணக்கான மைல்கள் கிராமம் கிராமமாக கால் நடையாக நடந்து வியாதியஸ்தரை தான் அளிக்கும் மருந்துகளால் குணமாக்கிக் கொண்டு வரும் வெள்ளைக்கார மனிதன் எல்லா அன்புக்கும், எல்லா மதிப்புக்கும் பாத்திரவான் என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
அன்று இரவு கார்டனும் அவரது உடன் ஊழியர்கள் இருவரும் டோடி தப்போடி கிராமத்திலுருந்த ஒரு இந்து கோயிலின் வராந்தாவில் முகாமிட்டுத் தங்கினர். அவர்கள் தங்கள் இரவு ஆகாரத்தை கோயிலின் வராந்தாவிலேயே சமையல் செய்து தயார் செய்து கொண்டனர். தேவ மக்கள் மூவரும் நல்ல உற்சாகமாகவும், சந்தோசமாகவும்தான் இருந்தனர். பகலில் மேற்கொண்ட நடை பயணத்தின் களைப்பால் அவர்களது சரீரங்கள் சோர்படைந்திருந்த போதினும் எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் அவர்களின் இருதயங்களை ஆளுகை செய்து கொண்டிருந்தது. “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்ற தங்கள் ஆண்டவரின் கட்டளையை தங்கள் சிரசின் மேல் கொண்டு செல்லும் அந்த அடியவருக்கு தேவனுடைய நிறைவான தேவ சமாதானம் இல்லாமல் போவது எப்படி? அன்று மாலைப் பொழுது மேல் திசையில் மலைகளுக்கு அப்பால் மறையும் செவ்வண்ணமான பெரிய பந்து போன்ற அஸ்தமனச் சூரியனை அந்த தேவ மனிதர் மூவரும் மட்டற்ற பரவசத்தோடு பார்த்து மகிழ்ந்தனர். அந்த மாலைச் சூரியன் அஸ்தமனத்தோடு தனது பூவுலக வாழ்வும் அன்று இரவோடு இரவாக முற்றுப்பெறுகின்றது என்பதை கார்டன் ஹால் கிஞ்சித்தும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
கொழுந்துவிட்டு எரிந்து தணிந்த தேவனின் தியாகச் சுடர்
அது மார்ச் மாதமாக இருந்தபோதினும் இரவின் குளிர் சற்று அதிகமாகத்தான் இருந்தது. அந்தக் குளிரானது கார்டனை இந்துக் கோயிலின் உள்ளே உள்ள அறையில் போய் இளைப்பாறத் தூண்டுவதாக இருந்தது. கோயிலின் உள்ளே சென்றபோது அங்கே இரண்டு மனிதர்கள் காலரா நோயினால் தாக்குண்டு மிகவும் சுகயீனமான நிலையில் படுத்து இருப்பதை கார்டன் கவனித்தார். தன் வசமிருந்த மருந்தை அந்த இருவருக்கும் அவர் உடனடியாகக் கொடுத்த போதினும் அவர்களில் ஒரு மனிதர் ஒரு மணி நேரத்திற்குள்ளாக மரித்துப் போனான். இறந்து போன மனிதனைக் காண கிராம மக்கள் கொஞ்சம் பேர் கோயிலுக்குள் வந்ததால் கார்டன் கோயிலின் முன் வராந்தாவிற்கு மறுபடியும் வந்தார்.
அதிகாலை 4 மணிக்கு கார்டன் தனது படுக்கையிலிருந்து எழுந்து தனது பிரயாணத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார். உடனடியாக ஒரு கொடிய வேதனை அவரை ஆட்கொள்ளவே தனது உதவியாள் ஜேம்ஸ் ராபின்சனை அழைத்து 50 சொட்டுகள் பெப்பர்மிண்டும் கொஞ்சம் கலோமலும் தனக்கு ஊட்டும்படியாக கேட்டுக் கொண்டார். ஏராளமான காலரா நோயாளிகளுக்கு காலரா நோய்க்காக கொடுத்த பின்னர் மீதியாக இருந்தது அவ்வளவுதான். கார்டன் தனக்கு கொடுக்கப்பட்ட மருந்தை தனது வயிற்றுக்குள் வைத்திருக்க இயலாதபடி கடுமையான வாந்தி அவருக்கு ஏற்பட்டது. கொடிய காலரா நோய் தேவ மனிதனை பலமாகத் தாக்கியிருந்தது. திரும்பவும் மருந்தை உட்கொள்ள அவரிடம் மருந்து இல்லாதிருந்தது. ஆரம்பத்தில் சில நிமிடங்களுக்குள்ளாக 2 தடவைகள் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கார்டனின் உண்மையுள்ள உதவி ஊழிய மிஷனரி பணியாளர்கள் அவரை எவ்வளவு சூடாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு சூடாக வைத்திருந்தனர். எனினும் அவருடைய நோயும், வாந்தி பேதியும் அதிகரித்த வண்ணமாகத்தான் இருந்தது. மரிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் தனது உதவி பணியாளர்கள் ஜேம்ஸ் ராபின்சனையும், தாமஸ் கிரஹாமையும் முழங்காலூன்றி ஜெபிக்கும்படியாகக் கேட்டுக் கொண்டு கார்டன் ஹால் அவர்கள் இருவருக்காகவும், அமெரிக்காவிலுள்ள தனது குடும்பத்துக்காகவும், அமெரிக்காவிலுள்ள அனைத்து மிஷன் பணிகளுக்காகவும் தன்னை தமக்கென ஆட்கொண்டு தன்மேல் இத்தனையாக அன்புகூர்ந்து தன்னை தமது நாம மகிமைக்காக அருமையாக பயன்படுத்தினதற்காகவும் தனது இரட்சகருக்கு தனது நெஞ்சார்ந்த இறுதி நன்றியைத் தெரிவித்து உள்ளம் உருகி மன்றாடினார்.
அதின் பின்னர், கார்டன் தான் மரித்ததும் தனது சரீரத்தை உடனடியாக புதைத்து விடும்படியாகவும், தனது கடிகாரம், சாவிகள், தனது எழுத்துக்கள் அடங்கிய காகிதங்கள் அனைத்தையும் பம்பாய்க்கு அனுப்பும்படியாகவும் தன்னுடைய உதவியாளர்களுக்குச் சொன்னார். தனது பரலோகத்தின் தேவனுக்குத் தன்னை முற்றும் ஒப்புவித்தவராக “தேவனுக்கு மகிமை” “தேவனுக்கு மகிமை” “தேவனுக்கு மகிமை” “தேவனுக்கு மகிமை” என்று நான்கு தடவைகள் உரத்த குரலில் ஜெய கெம்பீரமாக கூறிவிட்டு தனது தலையைச் சாய்த்து ஜீவனை விட்டார்.
அநேகரை தொட்டு சுகமாக்கியதும் அநேகரை அரவணைத்து ஆறுதல்படுத்தியதுமான அவரது அன்பின் கரங்களை தேவ ஊழியர்கள் இருவரும் ஒன்று சேர்த்து வைத்தனர். தேவ மைந்தனின் கல்வாரி அன்பை அநேக இந்திய மக்களுக்கு பறைசாற்றினதும், அந்த மீட்பின் செய்தியை கூற எப்பொழுதும் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்ததுமான அவரது கனிவான உதடுகளை அவர்கள் மூடினார்கள். இரட்சா பெருமானின் சுவிசேஷ நற்செய்தியைக் கூறவும், அநேகரின் துன்ப துயரங்களை துடைக்கவும், அநேக ஆயிரக்கணக்கான மைல்கள் கால் நடையாக நடந்து சென்ற அந்த சுவிசேஷகனின் அழகான கால்களை அவர்கள் ஒன்று சேர இணைத்து ஒழுங்குபடுத்தி வைத்தனர். கார்டன் ஹாலின் மரணப் படுக்கையின் கண்ணீரின் காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பம்பாயின் வட கிழக்கே 200 மைல்களுக்கு அப்பாலுள்ள டோடி தப்போடி என்ற ஏகாந்தமான இந்திய கிராமத்தின் ஒரு மூலையில் ஜேம்ஸ் ராபின்சனும், தாமஸ் கிரஹாமும் ஆழமில்லாத ஒரு புதை குழியைத் தோண்டினர். ஒரு சுத்தமான மேல் சட்டையை அவருக்கு அணிவித்து அவரது இறுக்கமான கால் சட்டையையும் அவருக்கு மாட்டி ஒரு சிறிய துண்டு கான்வாஸ் துணியை முதலாவது கல்லறைக்குள் விரித்து அவரது சடலத்தை அதின் மேல் இறக்கி வைத்து சடலத்தை ஒரு போர்வையால் மூடி மறைத்து அதற்குமேல் மண்ணைப் போட்டு குழியை நிரப்பினார்கள். அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த இரு தேவ மக்களின் அழுகையையும், கண்ணீரையும், ஏக்கங்களையும், விம்மல்களையும், பெரு மூச்சையும் யாரே விவரிக்க முடியும்?
அவரது மரணச் செய்தியை ஒரு விசேஷ தூதுவர் மூலமாக பம்பாயிலுள்ள அமெரிக்க மிஷன் ஸ்தாபனத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்தச் செய்தி பம்பாய் போய்ச் சேர 14 நாட்கள் ஆனது. ஜேம்ஸ் ராபின்சனும், தாமஸ் கிரஹாமும் 20 நாட்களுக்குப் பின்னர்தான் பம்பாய் வந்து சேர்ந்தனர். தேவ மனிதர் கார்டன் ஹாலின் துயரக் கதையை அல்ல, அவரது ஜெய கெம்பீரமான பரலோகப் பயணத்தின் களிகூருதலின் கதையை அவர்கள் சொல்லும்படியாக வந்திருந்தனர். தனது வாழ்க்கையின் இறுதி நாள் வரை இந்திய மக்களை நேசித்து அவர்களது தேவையில் அவர்களுக்கு உதவி அளித்து, அவர்களது பிணி நோய் போக்க மருந்தளித்து, தான் தனது இளமை வாழ்வில் இரட்சகர் இயேசு மூலமாகக் கண்ட பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், உலகம் தரக்கூடாததும், உலகம் எடுத்துக் கொள்ளக் கூடாததுமான தேவ சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் அவர்களுக்கு வாரி வாரி வழங்கினார். தனது இரட்சகரைப்போல கார்டனும் மனுக்குலத்தின் ஆத்தும ஈடேற்றத்திற்காகவும், அவர்களது துன்பம் துயரம் துடைப்ப வராகவும் எங்கும் சுற்றித் திரிந்தார். அவர்களை தனது ஆண்டவர் நேசித்ததுபோல மன உருக்கத்தோடு நேசித்தார். அந்த மேலான தேவப் பணியை வெற்றியோடு நிறைவேற்றி முடிக்க தேவ மனிதர் தனது பாசமுள்ள மனைவி, அருமைக் கண்மணி குழந்தைகள், மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்த குடும்ப வாழ்க்கை, பெற்ற வீடு, பிறந்த பொன்னாடு, உற்றார், உறவினர், உறவுகள் யாவையும் ஒருமிக்க கள பலியாக்க வேண்டியதானது. அந்த அற்பமான தியாகம் தனது நேசரின் சிலுவை அன்புக்கு முன் அற்பமும், குப்பையும், தூசியும் மாத்திரமே என்பதை தேவ மனிதர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
கார்டன் ஹால் மரணமடைந்தபோது அவரால் தோற்றுவிக்கப்பட்ட பம்பாய் கிறிஸ்தவ மிஷன் ஸ்தாபனம் நன்கு வேரூன்றி தளைத்திருந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் ஒரு பெரிய எண்ணிக்கையிலான ஆண்களும், பெண்களும் கார்டனுடைய பரிசுத்த தியாக வாழ்க்கையின் சவாலை ஏற்று தங்களது வீடு வாசல், உற்றார் உறவினர் யாவரையும் விட்டுவிட்டு தேவனுடைய மாட்சிமையான சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்க மற்ற நாடுகளுக்கு மிஷனரிகளாக புறப்பட்டுச் சென்றனர்.
கார்டன் ஹால் சடுதியாக காலரா நோயால் மரணமடைந்த டோடி தப்போடி என்ற கிராமத்தில் கீழ்க்கண்டவாறு எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது:-
கார்டன் ஹால் என்ற கிறிஸ்தவ மிஷனரி
1826 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி
தனது 41 ஆம் வயதில் மரித்தார். கிறிஸ்து இரட்சகரின்
அப்போஸ்தலனும், தேவ ஊழியருமான அவரது சரீரம்
இங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரட்சகர் இயேசுவின்
சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கவும், வணங்கப்படத்தக்க ஒன்றான
மெய் தேவனாம் இயேசு கிறிஸ்து மூலமாக உள்ள இரட்சண்யத்தை மாந்தருக்கு கூறி அறிவிக்கவும்
அவர் இங்கே வந்தார்.
அந்த இரட்சிப்பை நீயும் தேடிப் பெற்றுக்கொள்
அது உனக்கு அத்தியந்த அவசியமானது
மார்க்கரெட் கார்டன் ஹாலின் இறுதி நாட்கள்
கார்டன் ஹால் மரணச் செய்தி வரும் போது மார்க்கரெட் கார்டன் அம்மையார் அமெரிக்காவில் மாசாசூட்ஸ் என்ற மாநிலத்தின் டோலண்ட் என்ற இடத்திலுள்ள தனது அன்பு கணவரின் சகோதரனுடைய வீட்டில் இருந்தார்கள். அந்த துயரச் செய்தி அப்படியே அவர்களை உலுக்கிக் குலுக்கி உருக்குவதாக இருந்தது. ஏனெனில், மார்க்கரெட் தனது கணவரிடம் பம்பாய் நகர துறைமுகத்தில் இறுதி விடை பெறும் போது முற்றும் பழுதற்ற திடகாத்திரமான மனிதனாக அவர் இருந்தார். எந்த ஒரு வியாதி, பெலவீனம் அவருக்கு இல்லாதிருந்தது. மார்க்கரெட் அம்மையார் நீண்ட நாட்கள் உயிரோடிருந்து தனது கணவரைக் கொண்டு சென்ற கொடிய காலரா நோய் நூற்றுக்கணக்கான ஐரோப்பிய மக்களையும், மிஷனரிகளையும் மரணத்தின் மூலமாக வாரிக் கொண்டு சென்றதைக் கண்டதுடன் தனது கணவரால் தோற்றுவிக்கப்பட்ட மிஷன் பள்ளிகளும், இதர தேவ ஊழியங்களும் தேவ நாமத்திற்கு மகிமையாக செழிப்புற்று வளருவதைக் கண்டு கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
மார்க்கரெட் அம்மையார், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருந்த அவர்களது நண்பர்களால் நீண்ட நெடுங்காலமாக நினைவில் வைக்கப் பட்டிருந்தார்கள். தனது வாழ்நாட் காலத்தின் எஞ்சிய பகுதி முழுவதிலும் அந்த நண்பர்களோடு அம்மையார் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்கள். 1868 ஆம் ஆண்டு தனது 85 ஆம் வயதில் மார்க்கரெட் கார்டன் அம்மையார் தேவனுடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள்.
கார்டன் ஹால் விரும்பிய பெண் லாரா அவர்கள் எழுதிய சோக கீதம்
இந்திய நாட்டுக்கு அமெரிக்க மிஷனரியாக வந்த கார்டன் எந்த விதத்திலும் தான் விரும்பிய அமெரிக்க நாட்டுப் பெண்மணி லாராவை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று தன்னுடன் அழைத்துக் கொண்டு வர அவர் கொண்டிருந்த ஆசைக் கனவுகள் எல்லாம் அந்தப் பெண்ணின் கோபக்கார தந்தையின் விருப்பமில்லாத காரணத்தால் கல்லின் மேல் இட்ட கலமாக நொறுங்கிப் போனபோதினும், லாரா என்ற அந்தப் பெண்ணுக்கு அதைக் குறித்த ஒரு தாங்க முடியாத கவலையும், கண்ணீரும், மனப் போராட்டமும் கடைசி வரை இருந்தே வந்துள்ளது என்பதை கார்டனுடைய மரணத்துக்குப் பின்னர்தான் கண்டு பிடிக்க முடிந்தது. கார்டன் இந்தியாவுக்கு மிஷனரியாக புறப்பட்டுச் சென்ற பின்னர் லாரா என்ற அந்தப் பெண் சான்ஃபோர்ட் என்ற ஒரு மனிதரை மணம் புரிந்து கொண்டார்கள். ஆனால், அவர்களுடைய உள் நெஞ்சத்தின் அடி அஸ்திபாரத்தில் அவர்கள் கார்டனை மனதார நேசித்தார்கள். அவரை எவ்விதத்திலும் கணவராக அடைய வேண்டும் என்ற தணியாத நேசம் ஆரம்பத்தில் சுடர்விட்டுத்தான் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், தனது தந்தையின் கொடிய சீற்றத்திற்கு ஈடு கொடுத்து நிற்கக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரு இதயக் குமுறுதலால் கார்டன் தனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் கடைசி வரை பத்திரமாக வைத்திருந்து அவர் இறந்து போன செய்தி கேட்டதும் அந்தக் கடிதங்களை அமெரிக்க மிஷனரி சங்கத்துக்கு அனுப்பி அவைகளை திருச்சபை நினைவுச் சின்னமாக பேணிப் பாதுகாக்க கெஞ்சிக் கேட்டுக் கடிதம் எழுதினார்கள். அதுமாத்திரமா? கார்டன் ஹாலைக் குறித்து ஒரு பாடலும் அவர்கள் எழுதி அனுப்பி வைத்தார்கள். அந்தப் பாடலின் வரிகளைக் கவனியுங்கள்:-
துயருரும் மாந்தரின் துக்கம் போக்க வந்த அன்பின் பரிகாரி
தனது தலையைத் தாழ்த்திவிட்டான்,
தனது முற்றும் இயலாமையையும் கூறிவிட்டான்,
மற்றோரின் கொடும் வேதனையை மிருதுவாக்கி
சாந்தப்படுத்திய கருணைக் கரம்,
இப்பொழுது குளிர்ச்சியாகிக் கோலாகிவிட்டது,
அது மண்ணுக்குள்ளும் அடங்கிவிட்டது.
தொலை தூரமான அந்நிய மண்ணில் நித்திய ஜீவ விதைகளை
தூவித் தெளிக்க வந்த அமெரிக்க அன்பின் ஆசான்
அடங்கி அமர்ந்து விட்டான்,
அவன் தனது அயராத பரிசுத்த உழைப்பிலே
மயங்கியே மாய்ந்தும் விட்டான்!