[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 2]
ரங்க்டம் என்ற இடத்திலிருந்து நான் சென்ற பேருந்து சரியான வழித்தடம் இல்லாத கற்கள் நிறைந்த பாதை வழியாக வெகு நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ரங்க்டம் புத்த மடாலத்திலிருந்து 25 கி.மீ. தூரம் ஓடி பென்சி-லா (PENSI-LA) என்ற பனி மலை கணவாயை சாயங்கால நேரம் வந்தடைந்தது. காஷ்மீரத்திலிருந்து கார்க்கில் செல்லும் வழியில் உள்ள மிக உயரமானதும், ஆபத்தானதுமான சோஜிலா பனி மலை கணவாயைவிட இதன் உயரம் சற்று குறைவுதான். 14436 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கணவாய் நித்திய பனியால் மூடப்பட்டிருக்கின்றது. கணவாயின் உச்சியிலிருந்து பூமியின் சமதரை பரப்பு வரை பெரும் பெரும் பனிப்பாளங்கள் தாராளமாக சிதறிக்கிடந்தன. ஒரு பிரமாண்டமான நீர் வீழ்ச்சி அப்படியே தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் போது உறை பனியாகிவிட்டால் எப்படித் தோற்றமளிக்குமோ அவ்விதமான காட்சியை அந்த கணவாய் அளித்துக்கொண்டிருந்தது. மாலை மயங்கும் நேரம் எங்கும் நிசப்தம் நிலவி நிற்க அந்த பனி மலை கணவாயை எந்த ஒரு நாஸ்தீகன் பார்ப்பதாக இருந்தாலும் தேவன் ஒருவர் உண்டென்ற அவரது ஜீவித்தலை அவனால் கடுகளவும் மறுத்துக்கூற முடியாது.
கணவாயின் உச்சியிலிருந்து பேருந்து அநேக குறுகிய ஆபத்தான ரஸ்தா வளைவுகளைக் கடந்து பள்ளத்தாக்கினுள் இறங்குவதும் பயங்கரமாகத்தானிருந்தது. சற்று ஒரு சிறிய கோளாறு பேருந்தினுக்கு ஏற்பட்டாலும் ஒருவர் கூட தப்பிப் பிழைக்க முடியாது. ஆண்டவர் இயேசுவைத்தான் என் உள்ளம் நினைத்துக் கதறிக்கொண்டிருந்தது. ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நான் தேவ ஊழியங்களை முடித்து இதே பன்சிலா பனி மலைக் கணவாயை லாரி ஒன்றின் மூலமாக கடந்து வரும்போது மிகவும் சப்தமாக ஆண்டவரைத் துதித்துக் கொண்டிருந்தேன். என்னோடிருந்த புத்த மார்க்கத்தினர் “நீ என்ன சொல்லிக் கொண்டு வருகின்றாய்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்கள். “நான் கிறிஸ்தவர்களின் மெய் தேவனாகிய என் இயேசுவை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்று பதில் கூறினேன். உடனே அவர்கள் “எங்கள் புத்தரை நோக்கி நீ கூப்பிடுவதில்லையா?” என்று கேட்டனர். “இந்த இடத்தில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது” என்று நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன்.
பேருந்து பன்சிலா கணவாயைக் கடந்து சமவெளியை வந்தெட்டினது. இந்தச் சமவெளிக்கு ஸ்டோட் (STOT) பள்ளத்தாக்கு என்று பெயர். இங்கிருந்தே நாம் தீபெத்திற்குள் முழுமையாக இருக்கின்றோம் என்ற உணர்வு நமக்கு வந்துவிடுகின்றது. ஆங்காங்கு சிற்சில வீடுகளைக் கொண்ட தீபெத்திய கிராமங்கள் தென்படுகின்றன. கற்குவியல்கள், மற்றும் வீடுகளின் கூரைகளில் புத்தமத ஜெபக்கொடிகள் பறக்கின்றன. பேருந்து செல்லும் இருமருங்கிலும் பனி மலைகள் வானளாவ நிமிர்ந்து நிற்கின்றன. வலது கைப் பக்கமாக சின்னு நதி (CHINU) ஓடுகின்றது. இது பன்சிலா பனி மலையிலிருந்து ஓடி வருகின்றது. மிருதுவான புல் வெளிகளும் ஆங்காங்கு காணக்கிடக்கின்றன.
சூரியன் அஸ்தமிக்கும் நேரம் பேருந்து ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கின் முதல் பெரிய கிராமமான அப்ரான் (ABRAN)வந்து சேர்ந்தது. அங்கிருந்து பேருந்து “பி” என்ற கிராமம் வந்து பின்னர் “சனி” என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. இருட்டாக இருந்தபடியால் வெளியே நான் எதனையும் காண முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் பேருந்து நிற்கையில் பிரயாணிகள் பேருந்திலிருந்து இறங்கிச் சென்று பேருந்தின் கூரையின் மீது வைத்துக்கட்டப்பட்டிருக்கும் தங்கள் சாமான்களை எடுத்துச் சென்றனர். அந்தச் சமயங்களில் மற்ற உடன் பயணிகளும் அவர்களுடன் இறங்கித் தங்கள் சாமான்களையும் சேர்த்து திருட்டளவாக அவர்கள் கொண்டு போய்விடாதபடிக் கவனிப்பதை நான் கண்டேன். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முற்றும் இயலவில்லை. காரணம், என் சரீரத்தில் அதிகமான பெலவீனத்தை நான் உணர்ந்தேன். வெளியே குளிரும் கடுமையாக இருந்தது. எனது சாமான்களின் பொறுப்பை ஆண்டவரின் காயப்பட்ட கரங்களில் ஒப்புவித்துவிட்டு நான் தேவ சமாதானத்தோடிருந்தேன். எனினும், சாமான்கள் பேருந்தின் கூரையில் இருக்குமா அல்லது யாராயினும் இருளில் அதை எடுத்துச் சென்றிருப்பார்களா என்ற கவலையின் எண்ணம் மனுஷீகத்தில் என்னைத் தொட்டுத்தான் சென்றது.
கடைசியாக, பேருந்து பாதம் (PADUM) என்ற இடத்தை வந்தடைந்தது. ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கின் பெரிய, முக்கியமான இடம் பாதம் ஆகும். ஏறத்தாழ நூறு வீடுகள் அங்குமிங்கும் மலைமீதும், தாழ்வான பகுதிகளிலும் சிதறி இருக்கின்றன. தீபெத்தியர்களும், முகமதியர்களில் ஒரு பிரிவான சன்னி முகமதியர்களும் இங்கு வாழ்கின்றனர். சில சிறிய கடைகளும், தங்கும் விடுதிகள் சிலவும் உள்ளன. வீடுகள் எல்லாம் சிறிய மாடிகள் வைத்து வெள்ளைக் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளன. நம் தமிழ் நாட்டில் பெய்யும் ஒரு இரவு அடை மழைக்கு அந்த வீடுகள் தாக்குப் பிடிக்க முடியாது. அப்படியே வீடுகள் எல்லாம் கரைந்து போய்விடும். ஆனால் அதிசயம் என்னவெனில் அங்கு மழை அதிகமாக பெய்வதில்லை. மழை அவர்களுக்கு தேவையும் இல்லை. நன்றாக வெயில் அடித்தால் போதுமானது. அருகிலுள்ள பனி மலைகள் உருகி நீரோடைகளாக ஊருக்கு வந்துவிடும். பாதம் என்ற அந்த இடம் ஏகமாக எங்கும் ஒரே வெண் புழுதி மயமாக உள்ளது. தானியத்தை பவுடராக அரைத்தால் எப்படியிருக்குமோ அவ்வண்ணமாக அதின் புழுதி உள்ளது. ஒரு பலத்த காற்று அடித்தால் ஊர் முழுவதும் புழுதியால் நிரம்பி விடுகின்றது. பாதம் என்ற அந்த இடத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பேருந்து பாதம் என்ற இடத்தை வந்து சேரும்போது இரவு 8 மணிக்கு மேலிருக்கும். பேருந்திலிருந்த மற்ற பயணிகள் இறங்கி தங்கள் மூட்டை முடிச்சுகளை பேருந்திலிருந்து கீழே இறக்கினர். நானும் ஜெபத்துடன் பேருந்தின் மேல் ஏறினேன். நமது விலையேறப்பெற்ற பரலோகப் பொக்கிஷங்கள் நிரம்பிய பைகள் பத்திரமாக இருக்குமா அல்லது களவாடப்பட்டிருக்குமா என்ற பயம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்தது. அன்பின் ஆண்டவர் தம்முடைய கல்வாரி இரத்தத்தால் அந்தப் பைகளைப் பத்திரமாக பாதுகாத்துக் கொண்டார். அவருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும்! இருட்டில் தடுமாற்றத்துடன் அந்தக் கனமான பைகளை கஷ்டத்துடன் கீழே இறக்கினேன். இனி எங்கு செல்லுவது? எந்த இடத்தில் போய் இராத்தங்குவது? மிகவும் மலைப்பாக இருந்தது. சரீர பெலவீனமும் ஒரு பக்கம் என்னைத் தாக்கிக் கொண்டிருந்தது. பாதம் என்ற அந்த இடத்தின் உயரம் 13154 அடிகளானபடியால் கடுமையான குளிர் காணப்பட்டது. பேருந்தில் நான் வர வர ஆண்டவர் எனக்கு முன்சென்று நான் தங்குவதற்கு தேவையான எல்லாக் காரியங்களையும் ஒழுங்கு செய்ய வேண்டுமென்று ஜெபித்துக்கொண்டேதான் வந்தேன். அந்தக் கண்ணீரின் ஜெபத்தை அவர் தமது கவனத்தில் வைத்திருந்தார்.
பாதத்தில் நான் தங்கியிருந்த அறையின் கதை
நான் பேருந்திலிருந்து இறங்கியதும் இரண்டு தீபெத்திய சிறுவர்கள் என் பைகளைத் தூக்கிக்கொண்டு எனக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த இருட்டில் என்னோடு பேருந்தில் வந்த சில வெள்ளைக்காரர்கள் இருந்தனர். பனி மலைகளில் ஏறவும், அவ்விடத்தைப் பார்க்கவும் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்கள் சென்ற பாதையில் சென்றேன். ஓரிடத்தில் எங்கள் அனைவருக்கும் இடம் மறுக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் எங்கள் எல்லாருக்குமே தங்க இடம் கிடைத்தது. அந்த இரவில் அந்த வீட்டில் தங்க எனக்கு இடம் கிடைத்திராத பட்சத்தில் நான் எவ்வளவாய் கஷ்டப் பட்டிருப்பேன் என்பதை கர்த்தர் ஒருவரே அறிவார். வீட்டிற்குள் நுழைந்ததும் துர்க்கந்தமான நாற்றம் வீசினது. மூக்கைக் கைக்குட்டையால் நன்கு அழுத்திப் பிடித்துக்கொண்டேதான் உள்ளே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காரணம், வீட்டிற்குள்ளேயே திறந்த வெளி கழிப்பறை (Latrine) இருந்தது. கழிப்பறை என்பது தளமிடப்படாத புழுதி நிறைந்த ஒரு அறை. அந்த அறையில் இரண்டு ஆழமான குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அந்த கழிப்பறையின் கதவைப் பூட்ட இயலாது. அதின் காரணமாக வெளிக்காற்று வீசும் போதெல்லாம் வீட்டின் உட்பகுதி முழுமையும் தாங்கொண்ணா அசுத்தக் காற்றால் நிரம்பிற்று.
நானும் மற்றும் இரண்டு வெள்ளையர்களும் ஒரே அறையில்தான் தங்கினோம். நான் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் தேவ ஊழியம் செய்த நாட்களில் எல்லாம் அந்த அறையிலேதான் தங்கினேன். அந்த அறை பின் வந்த நாட்களில் எனது ஜெப அறையாயிற்று. தினமும் அந்த அறையில் பல மணி நேரங்கள் ஜெபித்து, ஜெபித்து தேவ ஊழியங்களைச் செய்தபடியால் அந்த அறை எப்பொழுதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பியிருந்தது. என்னோடு தங்கின ஒரு வெள்ளைக்காரர் மறு நாளே அறையிலிருந்து போய்விட்டார். மற்றொரு வாலிபன் அடுத்து வந்த இரண்டு நாட்கள் என்னோடு தங்கியிருந்தான். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவனுக்கு ஆண்டவர்இயேசு என் வாழ்வில் செய்ததை நன்றாக விளக்கிக் கூறினேன். அவன் ஒன்றையும் தன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஹிப்பியான அவன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவனாவான். தேவன், பாவம், நியாயத்தீர்ப்பு மோட்சம், நரகம் எதிலும் அவனுக்கு துளிதானும் நம்பிக்கையும், அக்கறையும் கிடையாது.
ஒவ்வொரு சமயமும் நான் அவனுக்கு முன்பாக முழங்காலூன்றி ஜெபித்ததையும், நான் அவனுக்குச் சொன்ன தேவ ஆலோசனை களையும் அவன் ஒருக்காலும் மறந்திருக்கமாட்டான் என்று கர்த்தரில் விசுவாசிக்கின்றேன். அவன் என்னைவிட்டு புறப்படுகையில் சில ஆங்கில சுவிசேஷக் கைப்பிரதிகளை ஜெபத்துடன் அவனுக்கு கொடுத்தனுப்பினேன்.
பாதம் என்ற இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
ஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கில் நான் செய்த தேவ ஊழியங்கள் அனைத்தும் தேவனுடைய திட்டவட்டமான சித்தத்தின்படியும், அவருடைய ஆலோசனைப்படியும் நடந்தேறின. எனது விருப்பம், எனது ஆலோசனை, எனது மாம்சத்தின் தூண்டுதல்கள் எதற்கும் நான் கிஞ்சித்தும் இடமளிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அதிகாலையிலிருந்து சில மணி நேரங்களை ஆண்டவருடன் ஜெபத்தில் செலவிட்டு அவருடைய திட்டமான வழிநடத்துதலின்படி ஊழியத்தின் பாதையில் நான் கடந்து சென்றேன். ஒரு சில நாட்களில் மத்தியானம் வரை கூட ஆண்டவருடைய பாதங்களில் அவரின் சித்தத்திற்காக நான் காத்திருக்க வேண்டியது அவசியமானது. இப்படி நான் ஆண்டவரின் திட்டமான சித்தத்தின்படி அவருடைய ஊழியத்தை மேற்கொண்டபடியால் கர்த்தர், தாம் முன் குறித்த ஆத்துமாக்களைச் சந்திக்கச் செய்ததுடன் தம்முடைய ஊழியத்தையும் ஆசீர்வதித்தார். “பாதம்” சென்றடைந்த பின்னர் முதல் இரு நாட்கள் சரீரத்தின் மிகுதியான பெலவீனம் காரணமாக வெகு தூரம் நான் நடந்து சென்று ஆண்டவருடைய ஊழியத்தை செய்யக்கூடாத நிலையிலிருந்தேன்.
பாதம் சென்றடைந்த மறு நாளில் நான் எனது அழுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு ஊருக்குப் பின்புறமாக ஓடும் “லூநாக்” (LUNAK) பனி ஆற்றிற்குச் சென்று அவற்றைத் துவைப்பதற்காக சென்றேன். ஆற்றுக்கு நான் புறப்படும் வேளை சில தீபெத்திய மொழி தேவனுடைய பிரசுரங்களைக் கைவசம் எடுத்துக்கொண்டு செல்ல ஆவியானவர் என்னைத் தூண்டினபடியால் சிலவற்றை எடுத்துக்கொண்டு போனேன். மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கில் இறங்கி துணிகளை கஷ்டத்துடன் பனித் தண்ணீரில் துவைத்து ஆற்றங்கரையில் பரவலாகக் கிடந்த பாராங்கற்களின் மேல் உலரப்போட்டுவிட்டு ஒரு பாறை மீது உட்கார்ந்து நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். பரிசுத்த ஆவியானவர் நான் புறப்படும் சமயம் சில தீபெத்திய மொழி பிரசுரங்களை எடுத்துக்கொண்டுச் செல்லச் சொன்னாரே இந்தத் தனித்த அமைதியான இடத்தில் ஒருவரும் வரவில்லையே என்று நான் யோசித்தேன். பின்னர் நான் அந்தக் காரியத்தை அப்படியே மறந்து போனேன்.
இப்பொழுது துணிகள் நன்கு உலர்ந்துவிட்டன. அவற்றை எடுத்துக்கொண்டு நான் புறப்படும் சமயம் ஆற்றின் ஒரு பகுதியிலிருந்து ஒரு குள்ளமான மனிதன் மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என் உள்ளம் சந்தோசமுற்றது. நான் அவன் பிறகே கஷ்டத்துடன் ஓடி அவனைக் கைதட்டி நிறுத்தி என்னுடன் எடுத்துச் சென்றிருந்த “மனுஷனின் இருதயம்” “சாது சந்தர்சிங்” மற்றும் ஓரிரு சுவிசேஷப் பங்குகளையும் ஜெபத்துடன் அவனுக்கு அளித்தேன். தனது தாய் மொழியில் தனக்குக் கிடைத்த அரிய பொக்கிஷத்தை மகிழ்ச்சி பொங்கப் பெற்று படித்துக்கொண்டே மலை மீது ஏறிச்சென்றான். அவன் செல்லச் செல்ல நானும் என் இருதயத்தை ஆண்டவருக்கு நேராக ஏறெடுத்து அவர் அந்த மனிதனின் இருதயத்தில் கிரியை செய்யும்படியாக மன்றாடிக் கொண்டிருந்தேன். அவன் பெயர் “வாங்கில்” என்பதாகும். எனது நாட்குறிப்பில் “எனது கண்களுக்கு மறையும் வரை வாங்கில் அந்த சுவிசேஷ பிரசுரங்களை வாசித்துக்கொண்டே சென்றான். கர்த்தர் ஒருவரே அந்த மனிதனை அந்த நேரம் அங்கு அனுப்பினார் என்று நான் திட்டமாக விசுவாசிக்கின்றேன்” என்று எழுதி வைத்திருக்கின்றேன்.
அன்றைய தினம் பாதம் அரசாங்க மருத்துவமனைக்கு (DISPENSARY) சென்று அங்குள்ள கம்பவுண்டருக்கும், சோனம் நாம்கியால், மற்றும் ஷெரிங் என்ற மூன்று தீபெத்தியர்களுக்கும் தீபெத் மொழியில் எழுதப்பட்ட இயேசு இரட்சகரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை கொடுத்தேன். அவர்கள் அவற்றை அளவற்ற மகிழ்ச்சியோடு என்னிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
ஒரு நாள் பாதம் என்ற இடத்திலிருந்து “கிஷாரா” என்ற தீபெத்திய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அந்தக் கிராமத்தில் அன்பின் ஆண்டவர் பாவியாகிய எனக்கு நல்ல ஊழியங்களைத் தந்தார். அந்தக் கிராமத்தில் பலருக்குச் சுவிசேஷ நற்செய்தியினைப் பகிர்ந்து கொண்டேன். சோனம் டாண்டூப் என்ற மனிதன் மிகவும் தாகத்தோடு தீபெத் மொழிப் பிரசுரங்களை வாங்கி வாசிக்கலானான். கிராமத்தில் சில ஏழைகள் இருந்தனர். அந்த ஏழை மக்களுக்கு என்னாலியன்ற சிறிய உதவிகளைச் செய்தேன். லூநாக் ஆற்றங்கரையின் மேட்டின் மேல் கிஷாரா கிராமம் அமைந்துள்ளது.
மற்றொரு நாள் அன்பின் ஆண்டவர் என்னை “பிபிதுங்” என்ற கிராமத்திற்குச் செல்லும்படியாக என் உள்ளத்தில் ஏவினார். அப்பயே நான் மிகுதியான ஜெபத்தோடு பிபிதுங் கிராமத்திற்குப் புறப்பட்டேன். பாதம் கிராமத்திலிருந்து மேலே நான் குறிப்பிட்ட கிஷாரா கிராமம் வந்தேன். கிஷாரா கிராமத்திலிருந்து லூநாக் ஆற்றுக்குச் செங்குத்தாக இறங்கி அந்த ஆற்றுப் படுகை வழியாக நல்ல வெயிலில் பிபிதுங் நோக்கி நடக்கலானேன். வழியில் எதிர்ப்படுவோருக்கு கர்த்தருடைய ஏவுதலின்படி தீபெத் மொழி சுவிசேஷப் புத்தகங்களை ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும் கொடுத்துக்கொண்டே சென்றேன். மயில், தவளை, ஆமை, பன்றி, வெள்ளாடு, சிறுத்தைப் புலி, நாகப்பாம்பு போன்ற படங்களோடு கூடிய “மனுஷனின் இருதயம்” என்ற நான் கொடுத்துக்கொண்டுச் சென்ற சிறிய தீபெத் மொழிப் புத்தகங்கள் அனைவராலும் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்ளப் பட்டன. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். பிபிதுங் செல்லும் வழியில் டவாகெய்ப்பூ, ஷெரிங் ஷாங் பூ போன்ற தீபெத்திய இளைஞர்கள் மிகவும் வாஞ்சையோடு காணப்பட்டனர். இவர்களை நான் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த கோதுமை விளை நிலங்களில் சந்தித்து நீண்ட நேரம் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொண்டேன். இந்த சந்திப்புகளெல்லாம் தற்செயலாயல்ல, உலகத் தோற்றத்திற்கு முன்னர் முன் குறிக்கப்பட்ட ஆண்டவரின் அநாதி தீர்மானத்தின்படி நடந்தது. அல்லேலூயா.
“பிபிதுங்” கிராம புத்த மடாலயத்தில் நடைபெற்ற தேவ ஊழியம்
பிபிதுங் கிராமத்திலுள்ள மலை முகட்டில் ஒரு புத்த மடாலயம் இருந்தது. அந்த மடாலயத்திற்குள் சென்று அங்குள்ளோருக்குச் சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமென்பதே அன்று அதிகாலையில் ஆண்டவர் எனக்கு உணர்த்திய ஒரு காரியமாகும். வியர்த்துக் கொட்டும் வெயிலில் அந்தப் புத்த மடாலயத்திற்கு ஏறினேன். மிகவும் கஷ்டப்பட்டு ஏறி தலை வாசலினுள் நுழைந்தேன். நுழைந்ததுதான் தாமதம் மின்சாரத்தால் தாக்குண்டவனைப்போல ஒரு கணம் திகைத்து நின்று பின்னர் என் கால்களை மெதுவாக எடுத்து வைத்துப் பின் நோக்கி நகர்ந்தேன். ஏன் என்று கேட்கின்றீர்களா? ஒரு பெரிய கருப்பு நாய் ஓநாய் போல வாசலண்டை படுத்திருந்தது. நல்ல வேளை, நல்ல வெயிலானபடியால் அது நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. இல்லையென்றால் அது என்னை கடித்து குதறித் தள்ளியிருக்கும். அங்குள்ள நாய்களின் காரியம் எனக்கு நன்றாகத் தெரியும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். புதையலை பூதம் காத்துக்கொண்டிருக்கும் என்ற மூட நம்பிக்கை அஞ்ஞானிகளிடத்தில் உண்டு. அங்கே அந்த புத்த மடாலயத்தைக் காக்க அந்தக் கடி நாயை பூதமாக வைத்து வளர்க்கின்றனர். விலையுயர்ந்த பஞ்சலோக புத்த விக்கிரகங்களை திருடர்கள் உள் நுழைந்து திருடவிடாதபடி அந்த நாய் அங்கு காவலாளியாகப் படுத்திருந்தது.
நாயைக் கண்டு நான் பயந்து மெதுவாகப் பின் நோக்கி நகர்ந்து பின்னர் சுற்றி வளைத்து நிழலுள்ள ஒரு இடத்தில் அந்த மடத்தண்டை உட்கார்ந்திருந்தேன். என் துக்கம் கடுமையாக அதிகரித்தது. ஐயோ என் ஆண்டவரே, கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே, நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டு வெறுமையாய்த் திரும்பிச் செல்ல வேண்டுமோ ஐயா! என் கண்களில் கண்ணீர் ததும்பினது. துக்கத்தால் சோர்புற்றவனாய் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் அற்புதம் நிகழ்ந்தது. கர்த்தர் மடத்திலிருந்த புத்த லாமாக்களுடன் பேசிவிட்டார். என்ன ஆச்சரியம்! மடத்தில் புறாக்கூண்டு கதவு போலுள்ள ஒரு சிறிய ஜன்னலைத்திறந்து இருவர் என்னை உற்று நோக்கினார்கள். பின்னர் அவர்கள் என்னை மடத்தின் உள்ளே வரும்படி அழைத்தனர். கரிய கடி நாயையும் கடியாதபடி பார்த்துக் கொண்டார்கள். நான் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அந்த இருள் மண்டிக் கிடக்கும், துர் நாற்றம் வீசும் மடத்தினுள் சென்று அங்குள்ள அனைவருக்கும் அநேக தீபெத் மொழி சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் அளித்தேன். மிகுந்த குதூகலத்துடன் அவர்கள் அவற்றை என்னிடமிருந்து பெற்றுப்படித்து ஆனந்தித்தனர். அங்கு கொடுக்கப்பட்ட ஆண்டவரின் ஜீவனுள்ள வார்த்தைகள் அங்குள்ள லாமாக்களின் உள்ளங்களில் பலத்த கிரியைகளை நடப்பித்திருக்கும் என்று கர்த்தரில் நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்காகத்தான் ஆண்டவர் என்னை அங்கு அழைத்துக்கொண்டு சென்றார்.
தங்கள் தீபெத் மொழி எழுத்துக்களை மேன்மையாக மதிக்கும் தீபெத்திய மக்கள்
நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தீபெத் மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் தங்கள் பாஷையில் எழுதப்பட்டிருக்கும் அட்சரங்களை மிகவும் மேன்மையாக மதிக்கின்றார்கள். அந்த மொழி அட்சரங்களை பெரிதும் கனப்படுத்துகின்றார்கள். அவைகள் தங்கள் புத்த மார்க்கத்திற்கு எதிரானதாக இருந்தபோதினும் அவற்றைக் கிழித்து வீசுவதோ அல்லது நாசம் பண்ணுவதோ அவர்களிடம் கிடையவே கிடையாது. அதினால் ஆண்டவரின் ஜீவ வார்த்தைகள் அவர்கள் மத்தியில் மகத்தான கிரியை செய்ய பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
ஸன்ஸ்கார் பள்ளத்தாக்குக்குச் சென்ற நான் அந்த மக்களின் ஒரு வார்த்தையை நன்கு படித்து வைத்துக்கொண்டேன். “ஜ்ஜூலே சூ” என்பதே அந்த வார்த்தை. அந்த வார்த்தையின் பொருள் “நமஸ்காரம் அல்லது வணக்கம்” என்பதாகும். நான் சந்தித்த ஒவ்வொரு மக்களையும் மேற்கண்ட வார்த்தையால் கரங் குவித்து வாழ்த்துதல் கூறித் தேவனது வார்த்தைகளை அவர்களுக்கு ஜெபத்துடன் அளித்தேன். அது அவர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்தது. கிராமத்தின் குழந்தைகளுக்கென்று தின் பண்டங்களை வாங்கி வைத்துக்கொண்டேன். குழந்தைகளுக்கு தின் பண்டங்களைக் கொடுத்து அவர்களின் பெற்றோர்களைக் கிறிஸ்துவுக்கென்று பிடித்தேன். ஆண்டவரின் மகிமையின் சுவிசேஷத்தை எந்த விதத்திலாயினும் அந்த தீபெத்திய மக்களுக்கு அளித்துவிட வேண்டுமென்ற அளவற்ற தாகத்தில் நான் தேவ பெலத்தால் எல்லா ஞான யுக்திகளையும் கையாண்டேன். அதின் முழு விபரத்தையும் அன்பின் ஆண்டவர் ஒரு நாள் உங்களுக்கு பரலோகத்தில் சொல்லுவார். அல்லேலூயா.
தீபெத்தின் தலை நகர் லாசா பட்டணத்திலிருந்து சீன ஆக்கிரமிப்பிற்கு பயந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி ஓடி வந்த ஒரு புத்த மதத்தினனை நான் பாதம் கிராமத்தில் ஒரு நாள் சந்தித்தேன். அவரது பெயர் “நாநாங்” என்பதாகும். அந்த குறிப்பிட்ட நாளில் பாதம் கிராமத்தில் கடுமையான வெண் புழுதிக் காற்று வீசினபடியால் நான் எனது அறையிலிருந்து சில மணி நேரங்கள் வெளியே செல்ல இயலவில்லை. புழுதிக் காற்று விட்டு விட்டு வீசிக்கொண்டிருந்தது. அந்த மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன். புழுதிப் புயல் அடங்கியதும் நான் வெளியே சென்றேன். அப்பொழுதுதான் மேலே குறிப்பிட்ட நாநாங்கை நான் அவரது கடையில் வைத்து சந்தித்தேன். கம்பளி ஆடைகளை கடையில் வைத்து விற்றுக்கொண்டிருந்த அவருக்குச் சில தீபெத்திய சுவிசேஷப் பங்குகளையும், மற்ற அருமையான கிறிஸ்தவ புத்தகங்களையும் கொடுத்தேன். அவற்றில் ஒன்று “மனுஷனின் இருதயம்” என்ற சிறிய புத்தகமாகும். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த நாளின் நாட்குறிப்பில் நான் நாநாங்கைக் குறித்து கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருக்கின்றேன்.
(“நாநாங் என்னிடமிருந்து தீபெத்திய மொழி பிரசுரங்களைப் பெற்றதும் அவரது சந்தோசம் பொங்கி வழிவதாக இருந்தது. “மனுஷனின் இருதயம்” என்ற புத்தகத்தை அவர் என் காதுகள் கேட்கப் பாட்டாகப் பாடிக் கொண்டே படித்தார். சில சமயங்களில் அவர் அதின் ஆழமான சத்தியங்களைக் கண்டுணர்ந்து கொண்டு வாய்விட்டு மகிழ்ச்சி பொங்க சிரித்தார். அவர் தனது எல்லையற்ற சந்தோசத்தின் காரணமாக சில சமயங்களில் தன் கையை இங்குமங்கும் ஆட்டி அசைத்து சைகை காட்டிப் படித்தார்.
அந்த தவனமுள்ள ஆத்துமாவை கர்த்தர் நிச்சயமாக சந்திப்பார் என்று நான் விசுவாசிக்கின்றேன். ஆண்டவரே, உம்முடைய பிள்ளையாகிய எனக்கு இந்த நாளில் தந்த அருமையான ஊழியங்களுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகின்றேன்”) என்று எழுதி முடித்திருக்கின்றேன்.
ஸன்ஸ்கார் பனிப் பள்ளத்தாக்கில் வாழும் தீபெத்திய மக்கள் ஆண்டவரின் ஜீவனுள்ள வார்த்தைகளை வறண்டு வெடித்துக் கிடக்கும் பூமி மழை நீரை ஆவலோடு பருகுவதுபோலப் பருகிக் குடித்தார்கள். அந்த வறண்ட கொடுங் குளிர் பீடபூமிக்கு என்னைக் கொண்டு சென்று அவருடைய ஜீவனுள்ள நாமத்தை அந்த நாகரீகமற்ற, ஏழை மக்கள் மத்தியில் மகிமைப்படுத்துவது அன்பின் ஆண்டவருக்கு பிரியமாகக் காணப்பட்டது. கர்த்தாவுக்கே துதி உண்டாகட்டும்.