[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 4]
“ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” (அப் 9 : 6) அருமை ஆண்டவர் தம்முடைய நாம மகிமைக்காக மகா வல்லமையாக பயன்படுத்திய மாபெரும் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் தம்முடைய மனந்திரும்புதலின்போது தன் அருமை இரட்சகரைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி இதுவாகும். அந்தக் கேள்வியானது ஆண்டவருடைய பரிசுத்த உள்ளத்திற்கு எத்தனையானதொரு ஆனந்த மகிழ்ச்சியை அளித்திருக்குமென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அவருடைய சித்தப்படி இவ்வுலகில் நாம் வாழ்வதும், அவருக்கு ஊழியம் செய்வதுமே அவருக்கு பிரியமான காரியமாகும். அதுவே ஆண்டவருடைய நாமத்திற்கு மகிமையையும், கனத்தையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். நம்முடைய வாழ்வுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.
ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தேவ ஊழியம் அனைத்தும் முற்றுமாகத் தேவ சித்தத்தின்படியே நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தம் மாத்திரமே என்னில் நிறைவேற நான் ஆண்டவருடைய பாதங்களில் நீண்ட நேரத்தை ஜெபத்தில் செலவிட்டேன்.
அந்தக் குறிப்பிட்டதொரு நாளிலும் கர்த்தருடைய ஊழியத்திற்கு நான் புறப்படு முன்னர் சில மணி நேரங்களை ஜெபத்தில் செலவிட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் நான் கர்த்தருடைய திட்டவட்டமான உணர்த்துதலின்படி அவர் காண்பித்த பாதை ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தேன். பாதை நெடுகிலும் ஒரே கற்களாக நிரம்பிக் கிடந்தன. நடுப்பகல் நேரம் வர வர வெயில் அகோரமாக எரித்துக்கொண்டிருந்தது. வழி நெடுகிலும் எவ்வித தாவரங்களுமே கிடையாது. வழியின் இரு மருங்கிலும் மலைகள் வானுற ஓங்கி நின்று கொண்டிருந்தன. வலது புறத்தில் பனி மூடிய மலைகளும், இடது புறத்தில் பனியற்ற வறண்ட மலைகளும் காணப்பட்டன. இடது புறத்தில் கெடு பள்ளத்தாக்கில் லூநாக் நதி ஓடிக்கொண்டிருந்தது. அந்த நதி ஓடிக்கொண்டிருக்கும் சத்தத்தைத் தவிர அந்த தனித்த வழியில் வேறெந்த சத்தமுமே கேட்கவில்லை. இடது கைப்பக்கத்திலிருந்த உயரமான செங்குத்து மலையில் ஒரு கூட்டம் மாடப்புறாக்கள் சிறகடித்து மொத்தமாகப்பறந்து செல்லுவதும், திரும்பவும் அவைகள் ஒன்று சேர்ந்து வந்து அந்த மலையில் அமர்வதும் மறுபடியும் அவைகள் மொத்தமாகச் செட்டைகளை அடித்துப் பறந்து வானவீதியை ஒரு முறை வலம் வந்துவிட்டுத் திரும்புவதுமான சத்தமும் அப்போதைக்கப்போது கேட்டுக்கொண்டேயிருந்தது.
நான் நெடுந்தூரம் வழி நடந்திருந்த போதினும் வழியில் எந்த மனிதர்களையும் நான் சந்திக்கவில்லை. மனுஷ சஞ்சாரத்திற்கான எவ்வித அறிகுறிகளும் அங்கு தென்படவே இல்லை. அது மனதிற்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது. வழி நடக்க, நடக்க வழிகளிலெல்லாம் ஒரே கற்களாகத்தான் கிடந்தன. அதினால் நடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. நீண்ட நேரமாகியும் வழியில் எந்த ஒரு மனிதர்களும் வராததாலும், சமீபத்திலோ அல்லது வெகு தொலைவிலோ எந்த ஒரு கிராமமும் கண்களுக்குத் தென்படாததாலும் நான் மிகவும் மனச்சோர்படைந்து போனேன். வெயில் காட்டமாக எரித்துக்கொண்டிருந்தது. ஆனால் வெயிலுக்கு ஒதுங்க மரங்கள் எதுவும் கிடையாது. வெகு தூரம் சென்றதன் பின்னர் பாதை ஓரமாக ஒரு பிரமாண்டமான மலைப்பாறை சாய்ந்து கிடந்தது. அந்தப் பாறையின் ஒரு சிறிய பகுதியில் மாத்திரம் நிழல் காணப்பட்டது. அந்த நிழல் எனக்கு மட்டற்ற சந்தோசத்தை அளித்தது. யோனாவுக்கு அந்த ஆமணக்குச் செடி அளித்த சந்தோசத்தை இந்தப் பாறையின் நிழல் எனக்கு அளித்தது. அந்தப் பாறையின் நிழலில் அமர்ந்தவாறு நான் ஜெபிக்கத் தொடங்கினேன். “அன்பே, நீர் இதுவரை என்னை அழைத்துக்கொண்டு வந்தீர். இம்மட்டும் நான் ஒருவரையும் நான் சந்திக்க இயலவில்லை. எந்த ஒரு ஆள் அரவமும், ஊர்களும் இங்கு கிடையாது. தொடர்ந்து நான் பிரயாணப்படுவதா? அல்லது வந்த வழியே திரும்பிச் செல்லுவதா?” என்று கர்த்தரிடம் விசாரித்தேன். நான் கண்களை மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் சிறுவர்கள் சிலர் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கும் சத்தத்தை என் காதுகள் கேட்டன. நான் ஜெபத்தை முடித்த பின்னர் பையன்களின் சிரிப்பு ஒலி வந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றபோது அப்படி எந்தவிதப் பையன்களும் அங்கில்லை. என்னை ஆவிக்குள் உற்சாகப்படுத்த அன்பின் பரம தகப்பன் இவ்விதமான அற்புத காரியங்களை எல்லாம் செய்வதுண்டு. நான் பையன்களை தேடி என் நடையைத் துவக்கினேன். கொஞ்ச தூரம் செல்லவும் வெகு தொலைவில் நதியின் உயர்ந்த முகட்டில் அமைந்துள்ள பாதை வழியாக ஒரு சிறிய உருவம் நகர்ந்து வருவதைக் கண்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. நான் அந்த ஆத்துமாவின் வருகைக்காக ஓரிடத்தில் பொறுமையாக தாமதித்துக் காத்திருந்தேன்.
“லாண்டூப் டார்ஜி” என்ற அந்த புத்த மத இளந் துறவி
கடைசியாக அந்த புத்த இளம் லாமா வந்து சேர்ந்தான். அவனுக்கு தீபெத் மொழியில் எழுதப்பட்ட அருமையான தேவனுடைய சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தேன். அவன் அடைந்த சந்தோசம் அதிகமாயிருந்தது. அவைகள் அனைத்தையும் மிகவும் கருத்தோடு வாசிக்கப்போவதாக அவன் என்னிடம் உறுதி கூறினான். என்னால் இயன்ற அளவு தேவனின் அன்பை நான் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். அவனை அந்த நாளில் நான் சந்திக்க வேண்டுமென்பது தேவனின் திட்டவட்டமான ஏற்பாடாகவிருந்தது. அவனின் பெயர் “லாண்டூப் டார்ஜி” (LONDOP DORJEE) என்பதாகும். அவனின் புகைப்படம் இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.
இந்த வாலிப லாமாவைச் சந்தித்ததின் பின்னர் மேற்கொண்டு நான் ஊழியத்தின் பாதையில் முன்னேறிச்செல்ல தேவ ஏவுதல் எதுவும் இல்லாததால் அப்படியே நான் புறப்பட்டேன். அதற்குள் அந்த பீட பூமிக்கே உரித்தான ஊதல் காற்று வீசத் தொடங்கிற்று. சற்று நேரம் நான் பிந்தியிருப்பின் அந்தக் கொடுங்காற்றால் நான் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன். துரிதம் துரிதமாக நான் நடந்து பாதம் என்ற நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.
அந்த நாளில் மேற்கு தீபெத் லடாக்கிலிருந்து வந்திருந்த நாவாங்ஷெரிங் என்ற இளைஞனையும் நான் சந்திக்க தேவன் உதவி செய்தார். அவனுக்கும் சுவிசேஷப்பிரசுரங்களை அளித்துச் சுவிசேஷம் அறிவிக்கும் பாக்கியம் பெற்றேன்.
எனது அறையில் என்னை வந்து சந்தித்த தீபெத்திய இளைஞர்கள்
அன்று மாலை வேளையில் நான் என் அறையில் தனித்திருக்கும்போது இரு தீபெத்திய இளைஞர்கள் ஷெரிங் டாஜியும், சூட்டம் ஜோர்கச்சும் என்னைத் தேடி என் அறைக்கு வந்தனர். கிராமங்களில் நான் கொடுத்துக்கொண்டிருந்த தேவனின் மகிமையான ஜீவனுள்ள வார்த்தைகளை அவர்கள் யாருடைய கரத்திலோ கண்டிருக்கின்றார்கள். அவற்றைத் தங்களுக்குத் தரும்படி அவர்களிடம் இந்த இரு இளைஞர்களும் விரும்பிக் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள்தான் அவற்றைப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றார்களே அவைகள் இவர்களுக்கு எப்படி கிடைக்கும்? அந்த அருமையான தேவ வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவலில் பலரிடமும் கேட்டு நான் தங்கியிருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து வந்து சேர்ந்துவிட்டனர். அவர்களை நான் அன்புடன் வரவேற்று உட்கார வைத்து கிறிஸ்து பெருமானின் இரட்சிப்பின் நற்செய்தியைக்கூறி என் கைவசமிருந்த “மனிதனின் இருதயம்” “சாது சுந்தர்சிங்” “காரணம் என்ன” போன்ற சிறு புத்தகங்களையும், சுவிசேஷப் பங்குகளையும் ஜெபத்தோடு கொடுத்தனுப்பினேன். அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் அவற்றைப் பெற்றுச் சென்றனர். இவர்களின் உள்ளங்களில் பேசி என்னிடம் அனுப்பி வைத்தது யார்? மெய்தான், அந்த இரு இளைஞர்களுக்காக எருசலேம் வீதி வழியாகச் சிலுவை சுமந்து நடந்து பின்னர் அதே சிலுவையில் கபாலஸ்தலத்திலே நாதியற்ற நீசனைப்போல இரத்தம் சிந்தி மாண்ட இயேசு அப்பாதான் அவர்களை என்னிடம் அனுப்பி வருங்கோபத்திற்குத் தப்பிக்கொள்ள வகை காட்டியிருந்தார். அவருக்கே துதி உண்டாகட்டும்.
“பிபிதுங்” ஊரைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
பாதம் என்ற இடத்திலிருந்து சுமார் 2 மைல்கள் தொலைவிலுள்ள “பிபிதுங்” என்ற ஊரின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்கின்றீர்கள்.
பிபிதுங் ஊரிலும் அதைச் சுற்றியுள்ள கோதுமை வயல்களிலும் தேவன் நமக்கு மிகவும் ஆசீர்வாதமான ஊழியங்களைத் தந்தார்.
“ஷெரிங் மோட்டூப்” என்ற பட்சமான தீபெத்திய வாலிபன்
ஒரு நாள் நான் தங்கியிருந்த பாதம் என்ற கிராமத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து “ஸ்த்ரா” என்ற ஊரை வந்தடைந்தேன். இந்த ஊரிலும் தேவனுடைய ஜீவ வித்துக்களைப் பரவலாக விதைக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன். தேவனுடைய வார்த்தைகளை இரு தீபெத்தியர் ஆவலுடன் பெற்றுத் தரையில் அமர்ந்திருந்து கருத்தடன் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை நீங்கள் காண்பீர்கள். ஸ்த்ரா கிராமத்திலுள்ள ஷெரிங் மோட்டூப் என்ற தீபெத்திய வாலிபனும், அவனுடைய மனைவியும் தங்களுடைய கோதுமை வயலில் கோதுமையை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அங்கு நான் அவர்களைச் சந்தித்துச் சுவிசேஷ நற்செய்தியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தீபெத்திய சுவிசேஷ புத்தகங்களையும் அளித்தேன். அவர்கள் அவற்றை என்னிடமிருந்து ஆவலுடன் பெற்று வாசித்தார்கள். அந்த மக்கள் மிகவும் பரவசமடைந்தார்கள். தங்கள் பணிகளை அப்படியே போட்டுவிட்டு என்னைத் தங்கள் வீட்டிற்குத் தங்களுடன் வரும்படியாக மிகவும் கட்டாயப்படுத்தினார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என்னை விட்டபாடில்லை. அவர்களுடைய அன்புக்கு அடிபணிந்தவனாக நான் அவர்கள் பின்னே சென்றேன். சகோதரன் ஷெரிங் மோட்டூப்புடைய அன்பின் பாசம் தனிப்பட்டதாயிருந்தது. அவர்களுடைய வீட்டிற்குச் செல்ல கொஞ்ச தூரம் நடக்க வேண்டியதாயிருந்தது. நாற்றம் வீசும் அவர்கள் வீட்டிற்குள் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் அமரும்படியாக தங்கள் அழுக்கடைந்த தீபெத்திய போர்வையை விரித்தார்கள். அதில் நான் உட்கார்ந்தேன். தீபெத்திய மக்களின் மிகவும் பிடித்தமான பண்டமான தசாம்பா என்ற மாவை எனக்கு அளித்தார்கள். தசாம்பா என்பது நிலத்தில் விளையும் ஒருவித பயிற்றை வறுத்து அதினைத் தண்ணீரால் ஓட்டப்படும் கல் திரிகையால் திரித்து மாவாக்கப்பட்ட ஒரு வஸ்துவாகும். சாப்பிட அத்தனை ருசியாகத் தெரியவில்லை. மத்தியான வெயிலில் பசியோடும், களைப்போடும் இருந்த எனக்கு அந்த அன்புள்ளம் கொண்ட மக்கள் தந்த அந்த தசாம்பா மிகவும் பயனுள்ளதாயிருந்தது. யாக் எருமையின் வெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் உப்புத் தேயிலையை நான் பருகும்படி எனக்கு அவர்கள் அளித்தார்கள். ஆனால், அதின் நாற்றமானது வயிற்றுக் குமட்டலைக் கொண்டு வரக்கூடியதாக இருந்தபடியால் நான் அதினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சாதுசுந்தர்சிங் தம்முடைய ஊழிய நாட்களில் இந்தத் தசாம்பாவையும், உப்புத் தேயிலைப் பானத்தையும் தீபெத்தில் சாப்பிட்டிருப்பதாக அவருடைய புத்தகங்களில் நான் வாசித்திருக்கின்றேன்.
ஷெரிங் மோட்டூப் சகோரதரனுக்கு தீபெத் மொழியில் எழுதப்பட்ட மேலும் சில தேவனுடைய அருமையான சுவிசேஷப் பிரசுரங்களை அளித்தேன். அவன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். என் கண்களுக்கு முன்பாகவே அவற்றைத் தன்னுடைய புத்தமார்க்க வேதபுத்தகமான “தம்மபாதம்” புத்தகத்துடன் மிகவும் பயபக்தியுடன் சேர்த்து வைத்துத் துணியால் சுற்றிக் கட்டிக்கொண்டான். அவைகளை அவன் தனது ஓய்வு நேரத்தின் போது மிகவும் கருத்துடன் வாசிக்கப்போவதாக எனக்கு வாக்குறுதி அளித்தான். தங்களுடன் ஓரிரு நாட்கள் நான் தங்கியிருக்க என்னை அன்புடன் வேண்டினான். எப்படி இந்த அன்பு என்மேல் அவனுக்கு வந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், கர்த்தர் என்மேல் அப்படி அன்புகூர அவனுடைய உள்ளத்தில் கட்டாயம் உணர்த்தியிருக்க வேண்டும். சகோதரன் ஷெரிங் மோட்டூப்பும், அவனுடைய மனைவியும், குழந்தையும் வீட்டிற்குள் அமர்ந்திருப்பதை ஒரு படத்திலும், அவனுடைய வீட்டையும், அவனுடைய தந்தையும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதையும் மற்றொரு படத்திலும் நீங்கள் காணலாம்.
ஷெரிங் மோட்டூப்பின் முகவரியை நான் பெற்று வந்து இங்கிருந்து ஒரு அழகிய தீபேத் மொழி புதிய ஏற்பாட்டை அனுப்பி வைத்தேன்.
சிருஷ்டி கர்த்தாவின் ஆச்சரியமான படைப்புகள்
ஒரு நாள் பாதம் கிராமத்திற்குக் கீழ் செங்குத்துப் பள்ளத்தாக்கில் ஓடும் லூநாக் ஆற்றிற்கு நான் என் வஸ்திரங்களை துவைப்பதற்காகச் சென்றிருந்தேன். வஸ்திரங்களைத் துவைத்த பின்னர் உலர்த்துவதற்காக அங்கு கிடந்த பாறைகளின் மீது போட்டுவிட்டு அப்படியே நின்று கொண்டிருந்தேன். அந்தச் சமயம் பார்த்து ஒரு பிராணியின் சிறிய குட்டி ஒன்று என்னை நோக்கி விரைந்து ஓடி வந்து திடீரென மறைந்து விட்டது. அதைச் சரியாக பார்க்க முடியாமற் போனதையிட்டு நான் வருத்தமுற்று நின்று கொண்டிருந்த சற்று நேரத்திற்குள்ளாக மற்றொரு குட்டி சற்று தூரத்தில் பாறைகளின் இடுக்குகளின் ஊடாக அங்குமிங்கும் சுற்றி வளைத்து என்னை நோக்கி வருவதைக் கண்டேன். என்னைக் கண்டதும் அது பயந்து ஓடிவிடும் என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால், அது நேராக என் பாதங்களண்டை வந்து நின்று என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவண்ணம் சற்று நேரம் தாமதித்து நின்று தனது சிருஷ்டி கர்த்தா தன்னை வடிவமைத்திருக்கும் அற்புத விதத்தை எனக்குக் காண்பித்தது. அணிலைவிடச் சற்று பெரிய அப்பிராணியின் வால் அடர்த்தியாகக் காணப்பட்டது. உடம்பு முழுவதும் செம்பட்டை நிறத்தில் காணப்பட்டது. நம் ஊர்களில் நாம் காண்கின்ற கீரிப்பிள்ளையைவிட உடலமைப்பில் அது முற்றும் வேறுபட்டிருப்பதை நான் கண்டேன். அன்பின் தேவன் தமது சிருஷ்டிப்புகளை எல்லாம் எனக்குக் காண்பிக்கக் கருத்தோடிருந்தார். இந்தக் பீடபூமியில் வாழும் கவுதாரிப் பறவைகளை நான் முதன் முதலில் கண்டேன். அவருடைய படைப்பின் மாட்சிகளில் எல்லாம் அந்த அன்பின் தேவனைத் துலாம்பரமாகக் கண்டு அவரை நான் நன்கு போற்றிப் புகழ முடிந்தது.
பூமியிலிருந்து ஒரு அடி உயரத்திற்கும் சற்று உயரமான ஒருவிதமான அதிசய மலை ஆடுகளை லூநாக் நதிக்கரையில் நான் கண்டேன். மிகவும் செங்குத்தான உயரமான மலைப்பாறையின் உச்சியில் இந்த ஆடுகளில் சில நின்று கொண்டு தங்களுக்கே உரித்தான பாணியில் துள்ளித் துள்ளி விளையாடும் பாங்கினை நான் கண்டு வியப்படைந்தேன். ஒவ்வொரு சமயமும் பாறையின் மகா பயங்கரமான விழிம்பினுக்கே அவைகள் வர ஆசைப்படுவதையும், அந்த விளிம்பிற்கு வந்ததும் அங்கிருந்து ஒரு துள்ளல் போட்டுக்கொண்டு ஓடுவதையும், திரும்பவும் அது பாறை விளிம்பிற்கு வருவதையும் அங்கிருந்து கொண்டு செங்குத்தான கெடு பள்ளத்தாக்கு பூமியை எட்டிப்பார்த்து மகிழுவதையும் மறுபடியும் தங்கள் பின்னங்கால்கள் இரண்டையும் உயரத் தூக்கி ஒரு துள்ளல் போட்டுக்கொண்டு ஓடிச்செல்லுவதையும் நான் கண்டு மிகவும் வியப்படைந்தேன்.
சற்று கால் தடுமாறினாலும் கீழே உள்ள கெடு பள்ளத்திலுள்ள பாறைகளில் விழுந்து அது நொறுங்கிப்போய்விடும். ஆனால் தேவன் அவற்றிற்கு மிகவும் பாதுகாப்பான பாதங்களையும், மிகவும் உறுதியான கால்களையும், மட்டற்ற துணிச்சலையும் அளித்திருக்கின்றார்.
மேற்கண்ட ஆடுகளைப்போலத்தான் தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய நமக்கும் அற்புதமான பாதங்களையும், நடுக்கமடையாது வலுவான கால்களையும் அளித்திருக்கின்றார். “……………..அவர் என் கால்களை மான் கால்களைப்பேலாக்கி உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3 : 19) என்றார் தேவ மனுஷன். நம்முடைய ஜீவிதப் பாதை முழுவதும் இடர்களும், இன்னல்களும், கண்ணீர்களும் நிறைந்த செங்குத்தான மலைப்பாறைகள்தான். ஆனால், நாம் அவற்றைக்குறித்து கொஞ்சமும் அஞ்சவேண்டியதில்லை. அதுதான் மெய்யான தேவப்பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரின் நித்திய ஜீவப்பாதையுமாகும்.
“லோப்ஸங்” என்ற புத்த இளைஞனை சந்தித்தது
பாதம் கிராமத்தில் நான் சந்தித்த ஒரு அருமையான இளைஞன் லோப்ஸங் என்பவனாவான். அவன் தீபெத் மொழி பேசுபவன். ஹிந்தி மொழியையும் புரிந்து கொள்ளக்கூடியவன். பாதம் கிராமத்திலிருந்து மூன்று நாட்கள் பிரயாண தூரத்திலுள்ளதோர் மலைக் கிராமத்தில் வாழ்பவன். அவனை என்அறைக்கு அழைத்து வந்து இயேசு அப்பாவின் கல்வாரி அன்பை அவனுடன் பகிர்ந்து கொண்டேன். அவன் பெரிதும் சந்தோசம் அடைந்தான். தன்னுடைய வாழ்நாள் முழுமையிலும் அதுவரை இயேசு இரட்சகரைக் குறித்துக் கேள்விப்படவே இல்லை என்று மிகுந்த பரபரப்புடன் அவன் என்னிடம் கூறினான். நான் அவனுக்குக் கர்த்தரின் தயவால் சுவிசேஷம் அறிவித்து என் கைவசமிருந்த அருமையான தீபெத் மொழி பிரசுரங்களைக் கொடுத்தேன். அவற்றின் வாசகங்கள் அவனை மிகவும் கவர்ச்சித்தது. தன் கிராமத்திலுள்ள தன்னுடைய நண்பர்களுக்கும், ஊரிலுள்ளோருக்கும் விநியோகித்து அவர்களும் இயேசுவின் கல்வாரி அன்பை அறிந்து கொள்ளும் பொருட்டாகத் தீபெத் மொழி சுவிசேஷ பிரசுரங்களை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கின்றான். அவன் மூலமாக அனுப்பப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் அவனுடைய கிராமத்தில் பலத்த கிரியைகளை நடப்பிக்கவும் லோப்ஸங் என்ற அந்த அன்பான இளைஞனும் கிறிஸ்து பெருமானின் அன்பின் அடியானாகவும் நாம் நமது ஜெபங்களில் நினைப்போமாக. வாழ்க்கையில் ஒரு தடவைதானும் அதுவரை சுவிசேஷம் கேட்டிராத அந்த லோப்ஸங்கை சந்திக்கும்படியாகத் தேவன் என்னை ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
“உன்னைப் பெற்ற தேவன்” (உபாகமம் 32 : 18)
எனது தினசரிக் குறிப்புப் புத்தகத்தில் ஒரு நாள் இவ்விதமாக எழுதி வைத்திருக்கின்றேன். (“இன்று கர்த்தருடைய ஓய்வு நாள். சில மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன். சுவிசேஷப் பிரசுரங்களை வெளியே கொண்டு சென்று விநியோகிக்க உள்ளத்தில் கர்த்தருடைய உணர்த்துதல் இல்லை. எனவே லூநாக் நதிக்குச் சென்று என் துணிகளைத் துவைப்பதற்காகச் சென்றேன். நதியின் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தபடியால் என் கைகள் இரண்டும் சிவந்து போயிற்று.”)
இந்த நாளின் காலையில் உபாகமம் 32 ஆம் 33 ஆம் அதிகாரங்களை நான் வாசித்துத் தியானித்தேன். 32 ஆம் அதிகாரத்தின் 18 ஆம் வசனம் என்னை மிகவும் கவர்ச்சித்து இழுத்தது. அதில் “உன்னைப் பெற்ற தேவன்” என்ற வரிகள் இந்த நாள் முழுவதும் என் தியானமாக அமைந்தது.. இந்தத் தியானத்திற்குக் கிரீடமாக இன்று மாலை ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ராபர்ட் புரூஸ் என்றதொரு ஆங்கிலேய மனிதனை இங்கு நான் சந்தித்தேன். 44 வயதான அவர் இந்தியாவிற்கு ஆறு வாரங்கள் சுற்றுலா பயணியாக வந்திருந்தார். அவருக்கு மனைவியும், மைக்கேல் என்ற மகனும் செப்நா என்ற மகளும் உண்டு. மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து தனித்த நிலையில் எவ்வாறு இருக்க முடிகின்றது என்று நான் வினவியபோது ராபர்ட் சற்று நேரம் துக்க முகத்தினனானக் காணப்பட்டார். உடனே தனது சட்டைப் பையில் தன் கையைப்போட்டுத் தன் மனைவி, மற்றும் இரு பிள்ளைகளின் புகைப்படத்தை எடுத்து எனக்குக் காண்பித்து இதுவே என் குடும்பம், நினைவு வரும்போதெல்லாம் புகைப்படத்தை எடுத்துப் பார்த்துக் கொள்ளுவேன். உண்மையில் மனைவி, பிள்ளைகளைப்பற்றிய வீட்டுப் பிரிவு நோய் (HOME SICK) கொண்டவனாகவே சதா நான் இருக்கின்றேன் என்றார் அவர். இந்தச் சம்பவம் என் உள்ளத்தை பலமாகத் தொட்டது.
நான் இயேசு அப்பாவிடம் “என் அன்பே, இந்த உலகப்பிரகாரமான தந்தை தன் அருமைப் பிள்ளைகள் மேல் எத்தனை நினைவும், கவலையுமாகவிருந்து தன் கைவசம் அவர்களின் புகைப்படத்தைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றானே, எங்கள் பரலோகத் தந்தையாகிய நீர், “உன்னைப்பெற்ற தேவன்” என்று திருவுளம்பற்றிய நீர் உம்முடைய அன்புப் பிள்ளைகளாகிய எங்களின் புகைப்படத்தை உம் வசம் வைத்திருக்கின்றீரோ?” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தேன்.
அன்று இரவில் கர்த்தாவிடமிருந்து அதற்கான உத்தரவு எனக்குக் கிடைத்தது. “என் அன்புப் பிள்ளையே, நான் என் அருமைப் பிள்ளைகளின் புகைப்படங்களையல்ல, அவர்களின் உருவப்படங்களையே அப்படியே என் உள்ளங்கைகளில் என் ஆணி பாய்ந்த கரத்தால் அழகாக வரைந்து வைத்திருக்கின்றேன். அந்தப் படங்களை நான் நாள் முழுவதும் அன்பொழுகப் பார்த்துப் பார்த்துப் பரவசமுற்றவண்ணமாக இருக்கின்றேன். அவர்களின் உருவங்கள் சதா என் கண்களுக்கு முன்னர் நிழலாடிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது என் பிள்ளைகளின் பால் என் இருதயத்தின் அன்பு ஏகமாய்ப் பொங்கிப் பூரிக்கின்றது” என்றார். அந்த அன்பின் சொரூபிக்கே எல்லா மேன்மையும், மகிமையும் என்றும் உண்டாயிருப்பதாக. ஆமென்.