[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 3]
ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கின் பிரதான கேந்திர ஸ்தானமான பாதம் என்ற இடத்திலிருந்து “சனி” என்றதோர் கிராமத்திற்கு ஒரு நாள் தேவ ஆலோசனைப்படி ஆண்டவரின் பாதங்களில் அதிகமான நேரம் ஜெபத்தில் செலவிட்டதன் பின்னர் கடந்து சென்றேன். காலை 8:30 மணிக்கு என் பிரயாணம் ஆரம்பமாயிற்று. வழியில் ஒரு பள்ளி ஆசிரியரைச் சந்தித்தேன். மிகவும் அன்புள்ளம் கொண்டஅந்த தீபெத்திய மனிதனின் பெயரை நான் குறித்து வைத்து கொள்ளத் தவறிவிட்டேன். அவருக்கு “மனுஷனின் இருதயம்” “சாது சுந்தர்சிங்” “காரணம் என்ன” என்பது போன்றச் சுவிசேஷ சிறிய பிரசுரங்களுடன் சுவிசேஷ பங்கு ஒன்றையும் ஜெபத்துடன் அளித்தேன். மிகுந்த சந்தோசத்துடன் அவர் அவற்றைப் பெற்றுக்கொண்டார். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். வழியில் சிலர் அவரைச் சந்தித்தார்கள். அவருடைய கரத்திலிருந்ததான நான் கொடுத்த பிரசுரங்களை அவர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் அவற்றைக் கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் நான் அந்த மக்களுக்கு என் கைவசமிருந்தவற்றைக் கொடுத்தேன்.
அவருடைய பள்ளி, திறந்த வெளி பள்ளியாகும். 14 மாணவர்களுள்ள அவரது பள்ளிக்கு அன்றைய தினம் 10 மாணவர்கள்தான் வந்திருந்தனர். கரும் பலகை ஒன்றும் அங்கில்லை. மாணாக்கர் தங்களுடைய பாடங்களை தங்கள் சிலேட்டுகளில் எழுதிக் கொள்ள வேண்டும். எழுதுவதற்கு அவர்களிடம் எந்தவித எழுதுகோல்களும் கிடையாது. அங்குள்ள ஒருவித காய்ந்த முட் கிளையின் சிறிய குச்சிகளை ஆசிரியர் எழுதும் கோல்களாக தனது கத்தியால் சீவிக்கூராக்கிக் கொடுக்கின்றார். அந்த பேனாக்களை வெள்ளை மையில் தொட்டு எழுதுகின்றனர். வெள்ளை மை என்றதும் கடையில் விற்கும் மை என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அங்கு கிடைக்கும் ஒரு வித வெள்ளை நிற களிமண்ணைத் தண்ணீரில் கரைத்து மையாகப் பயன்படுத்துகின்றார்கள். அந்த களிமண் மையினால் எழுதப்பட்ட எழுத்துக்களை அவர்களின் சிலேட்டுகளில் நான் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமடைந்தேன். ஆ, எத்தனை வெண்மையான நிறம் அது! வெள்ளை பெயிண்ட் போல அத்தனை தூய நிறத்தில் அது பளிச்சிட்டது. அந்த திறந்த வெளி பள்ளிக்கூடத்தையும், அதின் ஆசிரியரையும், மாணாக்கரையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
“சனி” கிராமம் செல்லுவதற்கு நான் இன்னும் அதிக தூரம் நடக்க வேண்டியதாயிருந்தது. போகும் வழியில் ஒரு பனி ஆறு பெருஞ் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. சற்று தூரத்தில் பளிச்சிடும் வெள்ளியை அள்ளி பூசியதுபோலக் காலைச் சூரியனின் கதிர்களால் தனித்த ஒரு பனி மலை வெட்டிப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. தனிப்பட்ட ஒவ்வொரு தேவப்பிள்ளைகளாகிய நாமும் இருள் சூழ்ந்த பாவ உலகில் ஒரு ஜீவனுள்ள சுடராக எரிந்து பிரகாசிக்க வேண்டும் என்பதை அந்தப் பனிமலை எனக்கு நினைப்பூட்டிற்று.
இறுதியாக நான் சனி கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன். சனி கிராமத்தின் மத்தியில் ஒரு பெரிய புத்த மார்க்க கோயில் இருந்தது. அரச மரங்களைப் போன்ற சில பெரிய மரங்களும் அக்கோயிலண்டை நின்று கொண்டிருந்தன. தன்னந் தனியனாக அந்தக் கிராமத்திற்குள் சென்றிருந்த நான் உடனடியாக எனது பணியில் இறங்காமல் நேராக அந்தப் புத்த மதக் கோயிலுக்குச் சென்று அந்தக் கோயிலுக்குள் பிரவேசிக்கும் வழி வாய்ப்பை அங்குள்ள ஒருவரிடம் கேட்கலானேன். அந்தக் கோயிலுக்குள் பிரவேசிக்க சுமார் 50 ரூபாய் நன்கொடை செலுத்த வேண்டுமென்றும், அதற்குள் கலை வேலைப்பாடுகள் நிறைந்த அபூர்வ விக்கிரகங்கள் இருப்பதாகவும் அந்த மனிதன் என்னிடம் கூறினான். அதற்குள்ளாக அந்தக் கோயிலை பராமரிக்கும் புத்த மார்க்க ஸ்திரீயே அங்கு வந்துவிட்டாள். அவள் கரத்தில் கோயிலின் பெரிய சாவி இருந்தது. என்னுடைய பணத்தில் 50 ரூபாயைப் பறிக்க அவளும் ஆசையாகத்தான் இருந்தாள். இதற்குள்ளாக ஒரு சிறிய கூட்டம் புத்த மார்க்க கிராம மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டனர்.
சந்தர்ப்பத்தை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டு அந்த அன்புள்ள மக்களுக்கு என் கை வசம் எடுத்துச் சென்றிருந்த தீபெத் மொழிச் சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினேன். அவர்கள் எல்லாரும் சந்தோசத்துடன் அவற்றைப் பெற்று வாசித்தனர். நான் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து கிராமத்தின் மற்ற சிறிய சந்துக்களில் நான் சந்தித்த மக்களுக்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தேன். அந்தச் சிறிய கிராமத்தில் நான் எனது ஊழியத்தை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, என்னைக் கூப்பிட்டுக் கொண்டு ஒரு ஆள் பின்னால் ஓடி வந்தது. பயத்துடன் நான் பின்னுக்கு திரும்பிப் பார்த்தேன். என் ஆச்சரியத்திற்கு அளவில்லை. ஒரு தீபெத்திய வாலிப பெண்மணி என் பிறகே ஓடி வந்தாள். நான் அவளது கிராமத்தில் விநியோகித்திருந்த தீபெத் மொழிசுவிசேஷ பிரசுரங்களை மற்றவர்கள் படிப்பதை அவள் பார்த்திருந்தாள். தனக்கும் அவற்றைத் தரும்படி வேண்டி நின்றாள். அந்த தவனமுள்ள ஆத்துமாவுக்கு கைவசமிருந்த புத்தகங்களில் வகைக்கு ஒன்றாக ஜெபத்துடன் வழங்கினேன். தீபெத் மொழியை நன்கு அறிந்திருந்த அவள் மிகவும் கருத்துடன் அதின் தலைப்புகளை மனதிற்குள்ளேயே வாசித்துக் கொண்டே அவற்றை என்னிடமிருந்து மிகுந்த சந்தோசத்துடன் வாங்கிச் சென்றாள். இவ்விதமான தவனமுள்ள ஆத்துமாக்கள் கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தைகளால் கட்டாயம் சந்திக்கப்பட்டே ஆவார்கள் என்பதை நான் நன்கறிவேன். நான் ஊழியம் செய்த “சனி” என்ற அந்த தீபெத்திய கிராமத்தை படத்தில் நீங்கள் காணலாம்.
மற்றொரு நாள் காலையில் அதிக ஜெப நிலையில் ஹர்ஷா என்றதொரு தீபெத்திய கிராமத்தை நோக்கி நான் நடந்து சென்றேன். ஹர்ஷா கிராமம் வெகு தொலைவில் ஒரு செங்குத்தான மலையில் உள்ளது. மரஞ்செடி கொடிகளற்ற வறண்டதொரு செங்குத்து மலையின் சரிவான மத்திய பகுதியில் ஹர்ஷா கிராமம் அழகாக அமைந்திருக்கின்றது. ஹர்ஷா கிராமத்திற்குச் செல்லும் வழியில் அன்பின் பரம தகப்பன் நல்ல ஊழியங்களை எனக்குத் தந்தார். “இரட்சிப்பின் வழி” “மனுஷனின் இருதயம்” மற்றும் சுவிசேஷ பங்குகளை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டே சென்றேன். வழியில் ரெக்சீன், ஹாரு என்ற இரு மனிதர்கள் தேவனின் செய்தியில் மிகவும் உற்சாகம் காண்பித்தனர். வழியில் நான் சந்தித்த ஒரு தவனமுள்ள ஆத்துமா சோனாம் டாண்டூப் என்பவராவார். கோதுமை வயல் வெளியில் நான் அவரைச் சந்தித்தேன். அருமை இரட்சகர் இயேசுவின் அன்பை நான் அவருடன் விரிவாகப் பகிர்ந்து கொண்டேன். தனது மாடுகள்இரண்டை கோதுமை வயல் வெளியில் மேய்த்துக் கொண்டிருக்கும் சோனாம் டாண்டூப் தனக்களிக்கப்பட்டத் தேவனின் வார்த்தைகளை ஆசை ஆவலோடு வாசித்துக் கொண்டிருப்பதை படத்தில் நீங்கள் காணலாம்.
கோதுமை வயல்களில் நான் சந்தித்த ஒரு தீபெத்திய பெண்மணி தன் முதுகில் பழுவான கோதுமைக் கதிர் கட்டுடனும் தனது கரத்தில் நான் அளித்த தேவனுடைய வார்த்தைகளுடனும் நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் படத்தில் காணக்கூடும்.
வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் என்றும் நிலைத்திருக்கும் கர்த்தாவின் வசனம் அந்தப் பெண்ணின் உள்ளத்தில் தொடர்ந்து பேசவும், நித்திய ஜீவனை அவர்கள் முடிவில் சுதந்தரிக்கவும் தேவன் தயை புரிவாராக.
தேவன் வனாந்திரத்தில் போஜன பந்தியை ஆயத்தப்படுத்தக் கூடுமோ!
(சங் 78 : 19)
ஹர்ஷா கிராமத்திற்குச் செல்லும் பாதையில் உபிதி என்ற கிராமம் வந்தது. அந்தக் கிராமத்திலும் ஆண்டவருடைய சுவிசேஷ பிரசுரங்களைக் கிராமவாசிகளுக்கு ஜெபத்துடன் அளித்தேன். அவர்கள் அவற்றை மிகவும் மனமகிழ்ச்சியுடன் பெற்று வாசித்தனர். உபிதி கிராமத்திற்குள் நான் வருவதற்கு முன்னர் ஒரு சிறிய குடிசையினுள் ஒரு கல் திரிகை தண்ணீரால் சுழன்று ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அந்தக் கல் திரிகை தசாம்பா என்ற தீபெத்திய மக்களின் மிகவும் விருப்பமான மாவைத் திரித்துக்கொண்டிருந்தது. வெயில் அகோரமாக அடித்துக் கொண்டிருந்ததாலும், நீண்ட தூரப் பயணத்தின் களைப்பின் காரணமாகவும் நான் மிகவும் பசியோடிருந்தேன். குடிசையினுள் சென்று தேவையான மாவை அள்ளிப் புசிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அது தவறு என்பதை என் உள்ளத்தில் உணர்ந்து அங்கேயே தாமதித்து நின்றேன். சற்று நேரத்தில் தூரத்தில் ஒரு பாட்டி அம்மா கூனிகூனி மெதுவாக குடிசையை நோக்கி நடந்து வருவதைக் கண்டேன். அந்த ஏழைப் பாட்டியிடம் என் தேவையை ஹிந்தியில் எடுத்துக் கூறினேன். அவர்களுக்கு ஹிந்தி தெரியாதபடியால் என் விருப்பத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தீபெத் மொழியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் கோபத்துடன் காணப்பட்டது. பின்னர் நான் பசியோடிருப்பதையும், தசாம்பா மாவு எனக்குத் தேவை என்பதையும், அதற்குத் தேவையான காசை நான் தருவதாகவும் சைகை மூலமாக அவர்களிடம் தெரிவித்தேன். உடனே அவர்கள் அன்புடன் தசாம்பா மாவை உள்ளே சென்று எனக்கு அதிகமாகவே அள்ளித் தந்தார்கள். ஆனால், நான் கொஞ்சம் மாத்திரமே அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு அந்த ஏழைத்தாய்க்கு அன்பு செய்துவிட்டு வந்தேன். அவர்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாவுக்கு என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதை எண்ணி மிகவும் விசனம் அடைந்தேன்.
இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் வானத்தின் அதிசய மன்னாவால் போஷித்து வழிநடத்திய அந்த ஞானக்கன்மலை பாவியாகிய என்னையும் ஆங்காங்கு நான் சென்ற இடங்களிலெல்லாம் எனக்கு உற்ற துணையாகவிருந்து மிகுந்த கருத்துடன் என்னைப் போஷித்து வழி நடத்தினார். அவருக்கே துதி உண்டாகட்டும்.
ஹர்ஷா கிராமத்திற்காக ஏறெடுக்கப்பட்ட மன்றாட்டு
உபிதி கிராமத்தை கடந்து வெகு தூரம் வரைக் கடுமையான வெயிலில் நான் நடந்து சென்றபோதினும் ஹர்ஷா கிராமத்தை நான் அடைந்தபாடில்லை. கானல் நீரை உண்மை நீர் என்று எண்ணி ஏமாந்த மானைப்போல நான் ஹர்ஷாவை சென்றடைவதும் அமைந்தது. கடைசியாக ஹர்ஷா கிராமத்திற்கு இடையில் ஓடும் ஸ்டோட் (STOD) என்ற ஆற்றினுக்குள் இறங்கி அதின் வியாபித்துக் கிடந்த மணற்படுகையில் வந்தமர்ந்து எனக்கு எதிரேயிருந்த ஹர்ஷா கிராமத்தை வியாகுலத்துடன் உற்று நோக்கினேன். வைராக்கியமும், மூட நம்பிக்கையும் கொண்ட அந்த தீபெத்திய மக்களின் மனக்கண்களை கர்த்தர் திறக்கவும், தாம் ஒருவரே மனுக்குலத்தின் ஒரே நம்பிக்கையும், மீட்பும், ஜீவிக்கின்ற மெய் தேவன் என்பதை அந்த அநாகரீகமான மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஆற்று மணலில் முழங்காலூன்றி ஜெபித்த பின்னர் நான் திரும்பிச் செல்லலானேன். ஹர்ஷா கிராமத்திற்கு நான் வந்த பாதையில் ஒரு தீபெத்திய மனிதனை சந்தித்தேன். அந்த மனிதனைச் சந்திப்பதற்காகவே அன்பின் ஆண்டவர் என்னை ஹர்ஷா கிராமத்திற்கு ஒருக்கால் அனுப்பியிருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். அவன் ஏற்கெனவே என்னிடம் சுவிசேஷ பங்கு ஒன்றைப் பெற்றிருந்திருக்கின்றான். அவன் என்னைப்பார்த்து “இதோ நீங்கள் கொடுத்த அருமையான புத்தகம் இது. இதை நான் முற்றும் வாசித்து முடித்துவிட்டேன். படிப்பதற்கு மிகவும் மனமகிழ்ச்சி யாயிருந்தது. அன்புகூர்ந்து நீங்கள் எனக்கு மேற்கொண்டு வேறு புத்தகங்களைத் தாருங்கள்” என்று என்னிடம் வேண்டினான். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்குண்டான சந்தோசத்தை உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? கர்த்தருக்குத் துதி செலுத்தி ஜெபத்துடன் அவனுக்கு மேற்கொண்டும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்தேன். மிகுந்த குதூகலத்துடன் அவன்அவற்றை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்றான். ஹர்ஷா செல்லும் வழியில் பரம தகப்பன் இன்னும் சில நல்ல சந்திப்புகளை தந்தார்.
மற்றொரு நாள் காலையில் தோந்தே (THONDE) என்றதொரு தீபெத்திய கிராமத்திற்கு நான் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் கடந்து சென்றேன். சமவெளிப் பிரதேசங்களில் நாம் பிரயாணம் செய்வது போல இந்தப் பனி மூடிய மலைப்பிராந்தியங்களில் பிரயாணம் செய்வது சற்று கடினம் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சற்றேறக் குறைய 13000 அடிகள் உயரமான இந்த மலைப்பிராந்தியத்தில் நாம் சுவாசிக்கக்கூடிய பிராணவாயுவின் அளவு சற்று குறைவாகத்தான் உள்ளது. அதின் காரணமாக சுவாசித்தல் சிரமமாக இருக்கின்றது. அதிலும், புதிதாக அங்கு செல்லுபவர்களுக்கு கஷ்டம் அதிகமேதான். தோந்தே கிராமத்திற்குச் செல்லும் பாதை கற்களும், மணலும் நிரம்பிய பாதையாகும். எனது செருப்புடன் கூடிய பாதங்கள் அந்த மணலில் சேற்றில் புதைவது போலப் புதைந்தது. காலை ஒவ்வொரு முறையும் வெளியில் தூக்கி எடுப்பது சிரமமாக அமைந்தது. அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தங்கள் பிரயாணத்திற்குக் குதிரைகளையே பயன்படுத்துகின்றார்கள். இந்தச் செய்தியில் குதிரை மீது பயணம் செய்யும் தீபெத்திய மனிதன் ஒருவனை நீங்கள் காணலாம். நான் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் பிரயாணப்பட்டுச் சென்ற பாதைகள் எத்தனை கடினமானது என்பதனை நீங்கள் இந்தப் படத்திலிருந்து ஒருவாறு நன்கு யூகிக்கலாம்.
காலையில் ஆரம்பமான என் சுவிசேஷ பயணம் மத்தியானத்திற்கு மேலும் நீண்டு சென்றது. ஆயினும், தோந்தே கிராமத்தை என்னால் எட்டிப் பிடிக்க இயலவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்ணும், மலைகளும்தான் தெரிந்தது. வழியில் எனக்கு எதிர்ப்பட்ட குதிரைச் சவாரிக்காரர்கள் அனைவரையும் “ஜ்ஜூலேசூ” என்ற தீபெத்திய “வணக்கம்” வார்த்தையைக்கூறி நிறுத்திப் பரம தகப்பனின் சத்திய வசனங்களை அவர்களுக்கு ஜெபத்துடன் அளித்தேன். அவர்கள் எல்லாரும் தோந்தே கிராமம் அதோ வந்துவிட்டது, வந்துவிட்டது என்று சொன்ன போதினும் தோந்தே வருவதாகத் தெரியவில்லை. ஆனால், நான் சோர்படையாமல் என் நடையை கைவிடாமல் முன் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். இறுதியாக நான் தோந்தே கிராமத்தைக் கண்டு பிடித்தேன். இன்னும் வெகு தொலைவில் உயரமான மலை உச்சியில் அது கழுகு கூட்டைப்போல அமைந்திருந்தது. வான வீதியில் மேகக் கூட்டங்கள் அதனைத் தொட்டுச் சென்றது. அந்தக்காட்சியைக் கண்ட நான் மிகவும் மனச் சோர்படைந்துவிட்டேன். பசியோடும், தாகத்தோடும் இருந்த எனக்கு அத்தனை மலை உச்சிக்கு ஏறுவது என்பது முற்றும் கூடாத காரியமாயிற்று. எனது கால்கள் இரண்டும் தோந்தேயைக் கண்டதும் தன்னில் தானே நடுக்கமடையத் தொடங்கிற்று. ஹர்ஷா கிராமத்திற்கு நான் செய்தது போல இந்த தோந்தே கிராமத்தையும் கண்ணேறிட்டுப் பார்த்து ஜெபித்துவிட்டு துக்கத்துடன் திரும்பினேன்.
பாதையில் சந்தித்த கடும் இன்னல்கள்
நான் திரும்பவும், அந்த வறண்ட, புல் பூண்டுகளற்ற மலைகளுக்கே உரித்தான கொடிய ஊதற் காற்று கடும் வேகத்துடன் வீசத்தொடங்கிற்று. அப்படிப்பட்டதொரு பலத்த காற்றை நான் என் வாழ்வில் கண்டதே இல்லை. நான் நடந்து சென்ற பாதைக்கு அருகாமையிலிருந்த மலையிலிருந்து அந்தக் காற்று கடல் அலைபோல அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தது. மலை உச்சியில் ராட்சதன் ஒருவன் நின்று கொண்டு தன் கரங்களில் நீளமான எஃகு சுருள் கம்பிகளைப் பலமாக சுண்டிச்சுண்டி வீசி வலுமையான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அவ்விதமான வீச்…………… வீச்………………….. என்ற ஒலி சாரை சாரையாக வந்து கொண்டிருந்தது. அந்த ஒலியுடன் கூடிய காற்றை நான் சுவாசிக்க முடியாமல் திணறினேன். எனது கைக்குட்டையால் வாயையும், மூக்கையும் மூடிச் சிறிது சிறிதாகப் பிரயாண வாயுவை உட்கொண்டேன்.
உயரமான பனி மூடிய மலைச் சிகரகங்களில் ஏறும் மலை ஏற்ற வீரர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் போல நானும் உணர்ந்தேன். எவ்வளவு விரைவாக நான் நடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நான் நடந்து கொண்டிருந்தேன். அந்த நாளில் நான் பட்ட பாடுகளை வெறும் வார்த்தைகளில் மாத்திரம் என்னால் எழுத முடியாது. என் ஜீவன் தப்ப என்னால் முடிந்த அளவு துரிதமாக நான் என் நடையைத் துரிதப்படுத்தி ஓட்டம் பிடித்தேன். ஒரு குறிப்பிட்ட எல்கை வரை நான் இந்தக் கொடுந் துயருக்குள்ளானேன்.
ஹர்ஷா கிராமத்திற்கும் தோந்தே கிராமத்திற்கும் அன்பின் ஆண்டவர் ஏன் என்னைக் கொண்டு செல்லவில்லை என்பதைக் குறித்து நான் இன்றும் யோசித்துப் பார்க்கின்றேன். ஒருக்கால் நான்அந்த வைராக்கியமான ஏகாந்த தீபெத்திய கிராமங்களுக்குச் சென்றிருந்தால் மிகுந்த மூட நம்பிக்கையும், மத வெறியும் கொண்ட புத்த லாமாக்கள் என் உயிருக்கு கட்டாயம் தீங்கிழைத்திருப்பார்கள் என்று கர்த்தரில் நான் உறுதியாக நம்புகின்றேன். ஏனெனில், அதற்குப்பின்னால் எனது ஊழியத்தில் எனக்கு நேரிட்டப் பயங்கர அனுபவங்கள் அதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.
மரண நிழலின் பள்ளத்தாக்கிலே நான் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்
ஊழியத்தின் பாதையில் நாட்கள்கடரக் கடர வைராக்கியமான புத்த மார்க்கத்தினர் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்க்க ஆரம்பித்தார்கள். சில சமயங்களில் சிலர் ஒன்றாகக் கூடி என்னைப் பார்த்து ஏதேதோ பேசுவதை நான் கண்டேன். இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்ததுபோல ஒரு நாள் ஒரு காரியம் நிகழ்ந்தது. ஒரு நாள் மத்தியானம் நான் எனது அழுக்கான துணிகளை துவைத்துச் சுத்தம் செய்வதற்காக நான் தங்கியிருந்த பாதம் கிராமத்தின் வழியாக ஓடும் லூநாக் ஆற்றிற்குச் சென்றிருந்தேன். அந்த பனி ஆறு பள்ளத்தாக்கிலே ஓடிக்கொண்டிருந்தது. நான் பெரிய மேட்டிற்கு ஏறிச் சென்று பள்ளத்தாக்கில் இறங்கி நதியண்டை சென்று அங்கு கிடந்த பெரிய பாறைகளண்டை அமர்ந்து என் துணிகளை சோப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரெனக் கற்கள் என் தலைக்கு மேலாகச் சென்று ஆற்றுக்குள் விழுந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். முதலில் நான் அதைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. பின்னர் சில கற்கள் என் கால்களின் பக்கம் வந்து விழுந்தன. தலைக்கு மேலாகச் சென்ற கற்கள் பயங்கரமான வேகத்தில் பாய்ந்து சென்று தண்ணீரில் விழுந்தன. கற்கள் வரும் திசையை நோக்கி நான் பா;ரத்தபோது மிகுந்த கலக்கம் அடைந்தேன். ஆற்று மேட்டில் மூவர் நின்று என்னை நோக்கி கற்களை வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். நான் என்னை நோக்கி வரும் கற்களை சமாளித்துக்கொண்டு அபயக் குரல் எழுப்பினேன். ஒரு கணம் அவர்கள் கல் எறிவதை நிறுத்தியதன் பின்னர் மறுபடியும் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்தனர். தெய்வாதீனமாக பெரிய பாறைகள் ஆற்றண்டை கிடந்தன. அவற்றில் ஒன்றிற்குப் பின்னர் நான் ஓடி ஒளிந்து கொண்டேன். ஆனாலும், அவர்கள் என்னை விட்டபாடில்லை. பாறைக்குப் பின்னாலிருந்து நான் மறைந்து சற்று என் முகத்தை திருப்பி அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் இன்னும் கற்களை எறிந்தவண்ணமாக இருப்பதைக் கண்டேன். ஜீவன் தப்ப வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிமட்டுமே எனக்கு முன்பாகவிருந்தது. அது என்னவெனில், எனக்கு முன்னாலுள்ள லூநாக் நதியில் குதிப்பதுதான். அதற்குள் குதித்தால் உடனே சாகவேண்டியதைத் தவிர வேறு வழி கிடையாது. காரணம், நதியின் தண்ணீர் பனிக்கட்டித் தண்ணீராகவிருந்தது. சரீரம் உடனே விறைத்துப் போய்விடும்.
இந்த இக்கட்டான நிலையில் மற்றொரு ஆபத்து எனக்குக் காத்திருந்தது. ஆற்றின் மறுபக்கம் இருந்து உயரமான பாறையிலிருந்து மற்றொரு மனிதன் என்னை நோக்கி கல் எறிந்தான். இந்த நிலையில் நான் ஜீவன் தப்ப மார்க்கமே எனக்கு இல்லாதிருந்தது. அங்கிருந்து நான் சத்தம் போட்டாலும் என் சத்தம் மேலே கேளாது. கற்கள் என் தலைக்கு மேல் வீர்……….வீர்…………….. என்று வந்து கொண்டிருந்தன. ஒரு கல் தவறாக என் தலையில் பட்டிருந்தாலும் நான் அந்த நதியண்டை செத்து விழுந்திருப்பேன். ஆனால், என்னைத் தம்முடைய மகிமையின் சுவிசேஷத்தைப் பிரசிங்கிப்பதற்காக அழைத்துச் சென்றிருந்த சர்வ வல்ல தேவன் அந்தக் கொடியவர்களின் கரங்களில் என்னை விழ அனுமதிக்கவில்லை. அல்லேலூயா.
இந்த மரண நிழலின் நேரத்தில் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. நான் என் துணிகளைத் துவைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்த அதே நதிக்கு சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திடீரென்று வந்துவிட்டனர் அதைக் கண்டதும் என்னைக் கல் எறிந்த அந்தக் கொடியவர்கள் ஓட்டம் பிடித்துவிட்டனர். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. என்னைக் கல் எறிந்த இடத்தின் புகைப்படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். எனக்குப் புகலிடம் தந்த பிளவுண்ட பாறைகளையும், லூநாக் நதியையும் கூட நீங்கள் அதில் காணக்கூடும்.
யார் இவர்களை என்னைக் கல் எறியத் தூண்டிவிட்டது? தங்கள் புத்த மார்க்கத்தில் மிகவும் வைராக்கியமான மக்கள்தான். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் நான் என் ஊழியத்தின் பாதையில் மிகவும் விழிப்பாகவும், ஞானமாகவும் இருந்தேன். பகற்காலங்களில் என் ஊழியங்களை மிகவும் ஞானத்தோடு முடித்துக்கொண்டு இருள் சூழுமுன்னர் என்அறைக்கு ஓடோடி வந்தேன். இரவு நேரங்களில் அதிகமாக நான் என்அறையை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்து கொண்டேன்.
இந்த வைராக்கியமான புத்த மக்கள் என் மேல் எத்தனையானதொரு மனக்கசப்பையும், பகைமையையும் கொண்டிருந்தார்கள் என்பதை “ரங்க்டம்” என்ற இடத்தில் வைத்து நான் கண்டேன். ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நான் எனது தேவ ஊழியங்களை முடித்த பின்னர் ரங்க்டம் என்ற இடத்திற்கு நான் வந்து சேர்ந்திருந்தேன். அதிகமான பனிப்பொழிவின் காரணமாக பேருந்து போக்குவரத்து ஏற்கெனவே நின்று போயிற்று. ஒரு டிரக்கின் மூலமாக பாதம் என்ற இடத்திலிருந்து நான் ரங்க்டம் வந்திருந்தேன். ரங்க்டம் வந்ததும் என்னுடன் பாதம் என்ற இடத்திலிருந்து வந்திருந்த தீபெத்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர். அவர்கள் ரங்க்டம் என்ற இடத்திலுள்ள புத்த மத பிரதான லாமாவிடம் சென்று என்னைப் பற்றி புகார் கொடுத்தார்கள். பின்னர் அந்த லாமாவும், தீபெத்திய மக்களும் ஒரு கூட்டமாக என்னண்டை நெருங்கி வந்தனர். அவர்கள் அனைவரும் லாமாவிடம் என்னை விரல் நீட்டிக் காட்டிக் கொடுத்து ஏதேதோ பேசினார்கள். தங்கள் புத்த மார்க்கத்திற்கு எதிராக கிறிஸ்தவ மார்க்கத்தை ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கு எங்கும் சென்று பிரச்சாரம் செய்து முடித்து வந்திருக்கின்றான் என்று அவர்கள் தங்கள் லாமாவிடம் சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன். அந்த லாமா என்னை கோபாவேசத்துடன் அப்படியே உற்று நோக்கினான். எனக்கு ஏதோ துன்பம் நேரிடப் போகின்றது என்பதை நான் நன்கு உணர்ந்தேன்.
தெய்வாதீனமாக அங்குள்ள சூழ்நிலையை தனக்குள்ளாகக் கண்டு கொண்ட நான் பயணித்து வந்த டிரக்கின் டிரைவரான காஷ்மீரி முகமதிய மனிதன் உடனடியாக வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்படவே அந்த பொல்லாத மக்களால் என்னை எதுவும் செய்ய இயலாமற் போயிற்று. அல்லேலூயா.