சர்வ வல்ல தேவன் ஏழைப் பரதேசியாகிய என்னை சுவிசேஷ ஊழியத்தின் பாதையில் பயன்படுத்திய நீங்காத நினைவுகள்
மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் காட்சிகள்
“நம்முடைய நாசியில் சுவாசமுள்ள காலம் வரை நாம் நம் ஆண்டவராகிய இயேசு இரட்சகருக்கு ஊழியம் செய்வதில் ஈடுபடுவோமாக. சிந்திக்கக்கூடிய அறிவாற்றல் நம்மிடம் இருக்கும் வரை, பேசக்கூடிய பெலன் நமக்கு உள்ள காலம் வரை, உடலை வளைத்து வேலை செய்யக்கூடிய உயிரோட்டம் நம்மிலிருக்கும் வரை நாம் நம் அன்பின் கர்த்தருக்கு தொண்டு புரிவோம். நாம் மரித்து இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்ற பின்பும் கூட நமக்குப்பின்னர் ஆண்டவருடைய பரிசுத்த நாமம் மகிமைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய தொரு தேவ ஊழியத்தை நமக்குப் பின் விட்டுச் செல்ல ஜாக்கிரதையாயிருப்போம். ஊரை ஒட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் நமது கல்லறையில் நாம் நித்திய உறக்க நிலையில் இருப்பதற்கு முன்னர்நாம் சில தேவ வசனப் பயிர் வித்துக்களை பரவலாக விதைத்துவிடுவோம். ஓ, எனக்கு அருமையானவர்களே, நாம் நம்முடைய தலைகளை கீழே சாய்த்து நம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கும் நாள் வரை கிறிஸ்பெருமானுக்காக செய்யும் தேவ சேவை நமக்கு முன்னர் இருந்து கொண்டேதானிருக்கின்றது. எத்தனை விருத்தாப்பியர்களாக நீங்கள் ஆகிவிட்ட போதினும் பரம எஜமானருக்கு நீங்கள் செய்யக்கூடிய சிறிய தேவப்பணி கட்டாயம் இருக்கவே இருக்கத்தான் செய்கின்றது (பரிசுத்த தேவ பக்தன் சார்லஸ் ஸ்பர்ஜன்)
காஷ்மீரின் தலை நகர் ஸ்ரீநகர் பட்டணத்திலிருந்து நான் பயணப்பட்டு கார்க்கில் என்ற இடத்திற்கு பயணப்பட்டு வருவதற்கு முன்னர் ஸ்ரீநகர் பட்டணத்திலேயே ஒரு திடீர் சுகயீனம் எனது சரீரத்தை தாக்கப்போவதற்கான நிச்சயமான அறிகுறிகள் காணப்பட்டது. தாங்கொண்ணா இருமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஸ்ரீநகர் பட்டணத்திலிருந்த பரிசுத்த தேவ மனிதர் சாது கந்தையானந்து ஐயா அவர்கள் எனது இருமலுக்கு நாட்டு வைத்திய முறைப்படி ஓரிரு மருந்துகளை எனக்கு தந்தபோதினும் அவை ஒன்றும் பலனளிக்கவில்லை. ஸ்ரீநகரிலிருந்து 440 கி.மீ. தூரம் பேருந்தில் நான் பயணம் செய்து சுமார் 9000 அடி உயரமான கார்க்கில் என்ற சிறிய பட்டணத்திற்கு இரவு சுமார் 8 மணிக்கு வந்து சேர்ந்தேன். இந்த கார்க்கில் என்ற சின்னஞ்சிறிய பட்டணம் இஸ்லாமிய நாடுகளின் பட்டணம் ஒன்றைப் போல இருக்கின்றது. அங்கு நாம் நமது இஷ்டப்படி சுவிசேஷம் அறிவிக்க இயலாது. அத்தனை வைராக்கியமான முகமதியர்கள் வாழ்கின்றனர். கிறிஸ்தவத்தையும், யூத மக்களையும் உக்கிரமமாகப் பகைக்கும் அம்மக்களின் வீடுகளில் ஈரான் நாட்டின் அதிபரான கோமேனியின் படமே அலங்கரித்துக்கொண்டிருக்கின்றது. அந்த ஊரின் சுவர்களில் “இஸ்ரவேல் ஒழிக” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நான் கண்டேன். நான் அங்குள்ள “எவர் கிரீன் ஹோட்டலில்” (Ever Green Hotel) தங்கியிருந்தேன். அந்த ஹோட்டலின் உரிமையாளனான அலி உசேன் என்ற முகமதிய வாலிபன் தனது சொந்த ஊரான கார்க்கிலைக் குறித்து கீழ்க்கண்டவாறு சொன்னான்:-
“எங்கள் கார்க்கில் மிகவும் அருமையான ஊராகும். இங்குள்ளவர்கள் மிகவும் உண்மையுள்ள மக்கள். இந்த ஊரில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக தங்கிச் செல்லலாம். உங்கள் உடமைகளுக்கும், பொருட்களுக்கும் எந்தவித சேதமும் உண்டாகாது. இந்த ஊரில் நீங்கள் உங்கள் கவனக்குறைவால் உங்கள் பொருட்கள் எதையும் இழந்துவிட்டால் கூட அதனைக் காண்போர் உடனே அதை எடுத்துக் கொண்டு போய் எங்கள் ஊர் முகமதிய பள்ளிவாசலில் (Mosque) சேர்த்துவிடுவார்கள். நீங்கள் அங்கு சென்று அதனைப் பெற்றுக்கொள்ளலாம். அதுபற்றி பள்ளி வாசலிலிருந்து ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பார்கள். தற்பொழுது எங்கள் பள்ளிவாசலில் அவ்விதமாகக் கொண்டு வரப்பட்ட 10 கைக்கடிகாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் அவைகளின் உடையதாரர்கள் வந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளுவார்கள். எங்கள் வீடுகளை நாங்கள் திறந்து போட்டுவிட்டுச் சென்றாலும் எந்த ஒரு திருட்டும் அங்கு நடக்காது” என்று சொன்னான். அவன் என்னிடம் சொன்னபடியே விலையுயர்ந்த பொருட்கள் நிறைந்த அவனது ஹோட்டல் அறை எப்பொழுதும் திறந்துதான் கிடந்தது. அலி உசேனுடைய அந்த அழகான கார்க்கில் பட்டணத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அதைக் கேட்ட, கண்ட எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நமது கிறிஸ்தவக் கிராமங்களைக் குறித்து நாம்இப்படித் தைரியமாக சாட்சி கொடுக்க முடியுமா? கிறிஸ்தவ கிராமங்களில் நீங்கள் உங்கள் பொருட்களில் எதையாயினும் இழந்துவிட்டால் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஒருக்காலும் இல்லவே இல்லை. கிறிஸ்தவ கிராமங்களில் வாழும் நீங்கள் உங்கள் வீடுகளைத் திறந்து போட்டுவிட்டு மன நிறைவோடு வெளிச் செல்லக் கூடுமா? எத்தனை வெட்கத்திற்குரிய காரியம்! ஓ, நாம் நம் ஆண்டவரைப் போலாவதற்கு எவ்வளவு வளர்ச்சியடைய வேண்டும். நம்முடைய ஜீவியங்களில் எவ்வளவு பரிசுத்த மாறுதல்கள் காணப்பட வேண்டும். கர்த்தர் நமக்கு இரங்குவாராக.
“எவர்கிரீன் ஹோட்டல்” உரிமையாளன் அலி உசைன் என்ற அந்த வாலிபனுக்கு நான் என்ன நோக்கத்தோடு அங்கு சென்றிருக்கின்றேன் என்பது நன்கு தெரிந்துவிட்டது. நான் அவனிடம் ஆண்டவர் இயேசுவைப்பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் அவன் எனது நடபடிகளை கவனித்து அவனே என்னிடம் என் அறைக்கு வந்து ஆண்டவர் இயேசுவைப்பற்றி உருது மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகங்களை தனக்குக் கொடுக்கும்படி கேட்டான். அவன் விருப்பப்படி நான் அவற்றை அவனுக்கு ஜெபத்துடன் கொடுத்தேன். அவற்றைப் படித்த பின்னர் அவை நன்றாக இருப்பதாகவும் தன் நண்பர்களுக்கும், தனது ஹோட்டலில் வந்து தங்குவோருக்கும் கொடுப்பதற்காக சற்று அதிகமான எண்ணிக்கையில் பிரதிகளையும், சிறு புத்தகங்களையும் என்னிடம் கேட்டான். அவனது வேண்டுகோளின்படி அந்த நல்ல முகமதிய வாலிபனுக்கு நான் கொடுத்தேன். அவனுடைய பேச்சு வார்த்தைகள், நடபடிகள் எல்லாம் அவன் ஒரு நற்குணசாலி என்பதை விளக்கிக்கூறினது. தனது ஹோட்டலில் நான் தங்கியிருந்த நாட்களுக்கான வாடகையைக்கூட அவன் என்னிடம் உறுதியாக வாங்க மறுத்தான். ஆயினும், நான் வலுக்கட்டாயமாக அவனுடன் போராடி அதை அவனுக்குக் கொடுத்துவிட்டேன். நான் இங்கு வந்த பின்னர் கடிதத்தின் மூலமாக அலி உசைனுடன் தொடர்பு கொண்டு இங்கிருந்து உருது மொழி சுவிசேஷ பங்குகளை அனுப்பினேன். கர்த்தர் அந்த முகமதிய வாலிபனை தம்முடைய ஜீவனுள்ள வசனங்களின் மூலமாகத் தொட்டுத் தமது இரட்சிப்பின் பாத்திரமாக்க வேண்டும் என்பதே எனது இருதயத்தின் வாஞ்சையாகும்.
யாதுமற்ற ஏழை நான் நாதியற்ற நீசன்தான்
கார்க்கில் வந்து சேர்ந்து அந்த இரவில் படுக்கைக்குச் சென்ற நான் குளிர் காய்ச்சல், தலைச்சுற்று, கடுமையான மயக்கம் போன்றவற்றால் பெரிதும் கஷ்டப்பட்டேன். என் உதடுகள் காய்ந்து போயிற்று. ஆகாரத்தின் மேல் முற்றும் மனமில்லாமல் போய்விட்டது. மறு நாள் என் படுக்கையில் பல மணி நேரம் தன்னறிவிழந்த நிலையிலேயே நான் படுத்துக் கிடந்தேன். சுய நினைவு வரும்பொழுதெல்லாம் கர்த்தருடைய ஊழியத்தை ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையால் கண்ணீர் என் கண்களை வந்து நிரப்பிற்று. பல நூற்றுக்கணக்கான தீபெத் மொழி பிரசுரங்களால் அடங்கிய பெரிய பையைப் பார்த்தபோது நான் மிகவும் இதய வேதனை அடைந்தேன். அந்த தனித்த இடத்தில் நான் நாதியற்றவனாகக் கிடந்தேன். என்னைக் கவனிக்க யாருமே கிடையாது. அந்த வைராக்கியமான முகமதிய பட்டணத்தில் யாரே எனக்கு உதவி செய்ய முன்வருவார்? ஆனால், அன்பின் பரம தகப்பன் என்னை மறந்துவிடவில்லை.
பரத்திலிருந்து வந்த தாயடைவான ஆச்சரிய அரவணைப்பு
வனாந்திரத்திலே வழியையும், அவாந்திர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குகிற அதிசய தேவன் (ஏசாயா 43 : 19 ) எனது பெற்ற தாயார் என்னைக் கவனிப்பது போல என்னைக் கவனிக்கும்படியாகத் தம்முடைய அருமைப்பிள்ளை ஒருவரை என்னண்டை அனுப்பியிருந்தார். அவர்களின் பெயர் P.N.கோல் (P.N.KAUL) என்பதாகும். ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தில் மின் பொறியாளராக பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். அநேக ஆண்டு காலம் அவர்கள் அரசாங்கத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களது அசாதாரணமான நேர்மையையும், உண்மையையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் திரும்பவும் அவர்களை தனது நிர்மாணப்பணிகளில் ஈடுபடுத்தியிருக்கின்றது.
அந்த நாளிலும் அவர்கள் என்னைச் சந்தித்தது ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும். ஸ்ரீநகரிலிருந்து கார்க்கிலுக்கு அவர்கள் ஒரு சில தினங்களுக்கு முன்பே வந்து விட்டார்கள். காரணம், கார்க்கிலுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு மின்சாரப்பணிக்கென அரசாங்கம் அவர்களை அனுப்பியிருந்தது. எதிர்பாராத விதமாக அவர்களின் உதவி ஆட்கள் ஸ்ரீநகரிலிருந்து வரக் கால தாமதமானபடியால் தனது உதவியாட்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். ஒருக்கால் அந்த உதவியாட்கள் குறிப்பிட்ட நாளில் வந்திருந்தால் நமது சகோதரன் கோல் அவர்கள் தனது பணியை முடித்து எப்பொழுதோ ஸ்ரீநகருக்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். ஆனால் அன்பின் பரம தகப்பன் பாவியாகிய என்னைக் கவனிக்கும் பொருட்டாக அந்த உதவியாட்களை தாமதிக்கப்பண்ணியிருந்தார். என்னே தேவ அன்பு! சகோதரன் கோல் அவர்களே பின்னர் இதை என்னிடம் சொல்லி ஆச்சரியம் அடைந்தார்கள்.
கார்க்கிலில் நான் தங்கியிருந்த “எவர் கிரீன் ஹோட்டல்” மிகவும் சிறியதொன்றாகும். இந்தச் சிறிய ஹோட்டலில் கோல் அவர்கள் வந்து தங்கக் காரணம் என்னவெனில் அதின் உரிமையாளனான அலி உசேனின் அன்புதான். அதைக் குறித்து நான் சற்று முன்னர் குறிப்பிட்டேன். நான் கொடும் விஷக்காய்ச்சலால் தாக்குண்டு தன்னறிவிழந்த நிலையில் படுத்திருந்தபோது அன்பின் ஆண்டவரே சகோதரன் கோல் அவர்கள் உள்ளத்தில் என் அறைக்கு வந்து என்னைப் பார்க்கும்படியாகப் பேசினாராம். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. ஆண்டவரின் அந்த அற்புத நடத்துதலைக் குறித்து நான் எனது தேவ ஊழியத்தை முடித்து தமிழ் நாட்டிற்கு வந்த பின்னரும் பரவசத்துடன் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.
மறு நாள் மாலைப் பொழுது கோல் அவர்கள் என்அறைக்கு வந்து கதவைத்தட்டினார்கள். புசியாமலும், குடியாமலும் பெலவீனமாகப் படுத்திருந்த நான் மிகவும் கஷ்டத்துடன் எழுந்து கதவைத் திறந்தேன். நல்ல உயரமான, பிரகாசமான முகத்தையுடைய சகோதரன் கோல் அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்ட முதற் கேள்வி “ஹலோ சகோதரனே, நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்றதுதான். நான் “ஆம்” என்று விடை பகர்ந்ததும் “நீங்கள் ஒரு விசுவாசியா? ” என்ற தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தார்கள். அதற்கும் நான் “ஆம் சகோதரனே” என்றதும் என்னை அப்படியே கட்டிப் பிடித்து அரவணைத்துக் கொண்டார்கள். நானும் ஒரு விசுவாசிதான் என்று தன்னை எனக்கு அறிமுகப்படுத்திய பின்னர் எனது சுகயீன நிலை உணர்ந்து மிகவும் துக்கமுற்றார்கள். நான் கார்க்கிலுக்கு வந்த நோக்கத்தை அறிந்ததும் அவர்களின் சந்தோசம் எல்லை தாண்டிச் சென்றுவிட்டது.
சற்றும் நிற்கமுடியாத பெலவீன நிலையிலிருந்த நான் திரும்பவும் என் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்திற்குப்பின்னர் என் முகத்தண்டை குனிந்து ஒரு கையில் கரிய காஷ்மீரித் தேயிலைப்பானம் அடங்கிய தம்ப்ளரும் அடுத்த கையில் மாத்திரையுடன் அந்த அன்பு சகோதரன் வந்து நின்று மாத்திரையை உட்கொள்ள என்னை அன்புடன் வேண்டினார்கள். தேயிலைப் பானத்தில் சிறிய வாதுமைப் பருப்பு துண்டுகள் நிறையப் போடப்பட்டிருந்தன. பின்னர் அவர்களே டாக்டரை அணுகி என் நிலையை எடுத்துக்கூறி தேவையான மாத்திரகைளை எனக்கு வாங்கிக் கொடுத்தார்கள். கர்த்தருடைய கிருபையால் அன்று இரவில் நல்ல இளைப்பாறுதல் எனக்குக் கிடைத்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கோல் சகோதரன் அவர்கள் தனது அனுபவ சாட்சியை பின்னர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். கர்த்தருடைய நாம மகிமைக்காகவும், உங்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கு அனுகூலமாகவும் அதை நான் கீழே தருகின்றேன்:-
கர்த்தர் தம் வலக்கரத்தால் தாங்கிய அற்புத பாத்திரம்
சகோதரன் கோல் அவர்கள் இந்தியாவின் அழகு குலுங்கும் மாநிலமான ஜம்மு காஷ்மீரத்தின் தலை நகரான ஸ்ரீநகரில் பிறந்தவர்கள். வைராக்கியமான காஷ்மீரிப் பிராமண பண்டித குலத்தை அவர்கள் சேர்ந்தவர்கள். நல்ல ஐசுவரியமுள்ள தந்தைக்கு மகனாகப் பிறந்தபடியால் எல்லா வசதிகளோடும் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் தந்தைக்கு ஆப்பிள் பழத் தோட்டங்களும், ஏராளமான நிலபுலங்களும் ஸ்ரீநகரில் இருந்தன. காலப்போக்கில் காஷ்மீரி முகமதியர்களின் தொல்லைகளின் காரணமாக பெரும்பாலான சொத்துக்களை அவர்கள் விற்க வேண்டியதானது.
கோல் அவர்கள் பாக்கிஸ்தான் நாட்டிலுள்ள ராவல் பிண்டி என்ற நகரத்திலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மின் பொறியாளர் (Electrical Engineering) பட்டம் பெற்று தேர்ச்சியடைந்தார்கள். அந்த நாட்களில் பாக்கிஸ்தான் இந்தியாவுடன் ஒன்றாக இணைந்தேதான் இருந்தது. ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் மின்சார இலாக்காவில் பல்லாண்டு காலம் பணியாற்றிய அவர்கள் எக்காரணத்தையிட்டும் தனது சேவை முழுவதிலும் லஞ்சம் வாங்கியதே கிடையாது. அவர்களோடு வேலை செய்த பல பொறியாளர்கள் லஞ்சம் வாங்கி கோடீஸ்வரர்கள் ஆனபோதினும் நமது சகோதரன் தனக்குக் கர்த்தர் கொடுத்ததில் திருப்தியடைந்து மிகுந்த மனச்சமாதானத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அந்த உத்தமத்தை மனதில் கொண்டுதான் அரசாங்கம் அவர்களை வேலை ஓய்வுக்குப் பின்னரும் திரும்பவும் அழைத்துப் பணியில் அமர்த்திக் கொண்டது.
தேவனது ஆச்சரிய படைப்பில் அடைந்த ஆழ்ந்த மயக்கம்
அவர்கள் சிறுவனாகவிருந்தபோது கிறிஸ்தவப் பள்ளியில் கல்வி கற்றார்கள். பள்ளியின் மிஷனரி அம்மையார்களின் அன்பும், நட்பும் அவருக்கு அதிகமாகக் கிடைத்தது. சிறுவனாக இருந்தபோதே தனது காஷ்மீர் மலை நாட்டின் அழகிய பனி மலைகளும், புல் வெளி பள்ளத்தாக்குகளும், ஏரிகளும், நீரோடைகளும் அவர்களின் பிஞ்சு மனதை மிகவும் கவர்ந்திழுத்தன. அவற்றை மணிக்கணக்காக கண்ணேறிட்டுப் பார்த்துப் பார்த்து பரவசமடைவார்.
அவர் 14 வயதினனாகவிருந்தபோது மிஷனரி ஆசிரியையான விஸ் ஹார்ட் (Miss.Wishhart) அம்மையாருடன் உல்லாசமாகப் பொழுதைப் போக்கி பனி மலைகளைக் கண்டு களிக்க ஒரு நாள் சென்றார். விஸ்ஹார்ட் மிஷனரி அம்மையார் பனி மலை அடிவாரத்தில் கூடாரம் அடித்து அங்கிருந்து கொண்டே தனது தொலை நோக்கி கண்ணாடி மூலம் (Binocular) தேவனுடைய படைப்பின் மாட்சியை கண்டுகளித்து தன் ஆண்டவரை போற்றிக் கொண்டிருந்தார்கள். நம்முடைய சிறுவனான கோலுக்கு அம்மையாரை விட இயற்கை காட்சிகளைக் கண்டு களிப்பது அதிக மனமகிழ்ச்சியை அளிப்பதாகவிருந்தது. அதின் காரணமாக கோல் அவர்கள் தனக்கு எதிரேயுள்ள அழகிய பனி மலை மீது கொஞ்சம், கொஞ்சமாக ஏறத் தொடங்கினார்கள். அதிக தூரம் செல்லக்கூடாது, சீக்கிரமாகவே திரும்பி வந்துவிட வேண்டும் என்று மிஷனரி அம்மையார் அவருக்கு ஆலோசனை கூறினபோதினும் தன் இஷ்டப்படி வெகு தூரம் சென்றுவிட்டார். “மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமோ?” அந்த மலை நாட்டிற்கென்று பிறந்தவர்களான அவர்கள் துரிதம் துரிதமாக ஏறி மலையின் உச்சிப் பகுதியை அடைந்துவிட்டார்கள். அங்கிருந்து சுற்றியுள்ள மலைக்காட்சியையெல்லாம் மனங்குளிர கண்டானந்தித்தார்கள்.
“என் மகனே அமரிக்கையாயிரு, என்னில் நம்பிக்கை வை, முன்னேறிச் செல்”
இனி உச்சியிலிருந்து கீழே இறங்கவேண்டும். மலை உச்சியிலிருந்து கீழே இறங்கத் தொடங்கிய போது திடீரென கால் தடுமாறிக் கீழே விழுந்து அடிவாரம் வரை உருண்டு உருண்டு வந்து பெரிய ஆபத்துக்குள்ளாகும் நிலைக்குள்ளாகவிருந்தபோது ஒரு வலுமையான கரம் வந்து அவரைக் கட்டியாகப் பிடித்து மலை உச்சியிலேயே நிறுத்திற்று. அல்லேலூயா. அந்தச் சமயம் ஒரு அசரீரீயான சப்தம் அவரது காதண்டை தொனித்தது. “என் மகனே, அமரிக்கையாயிரு, என்னில் நம்பிக்கை வை, முன்னேறிச் செல்” என்ற வார்த்தைகளை அவர் கேட்டுச் சொல்லொண்ணா ஆனந்தப் பரவசம் அடைந்திருக்கின்றார். கர்த்தராகிய இயேசு இரட்சகரின் பரலோக வார்த்தைகளைக் கேட்ட அன்றே ஆண்டவரின் வலுமையான கரத்தின் தொடுதலை தன் சரீரத்தில் உணர்ந்த அந்த நாளிலேயே கோல் அவர்கள் தனது வாழ்க்கையை கிறிஸ்து பெருமானுக்கு முற்றுமாகத் தத்தம் செய்து அவருடைய அன்பின் அடிமையானார்கள்.
மலை உச்சிக்குச் சென்ற தனது அன்பு மாணவன் கோலை தொலை நோக்கிக் கண்ணாடி மூலம் உற்று கவனித்துக் கொண்டிருந்த மிஷனரி விஸ்ஹார்ட் அம்மையார் மலை உச்சியில் தேவனின் ஏதோ ஒரு அற்புத செயல் நிகழ்ந்துவிட்டதை தன் உள்ளத்தில் திட்டமாக உணர்ந்து கொண்டுவிட்டார்கள். இறுதியில், கோல் கூடாரத்திற்குள் வந்ததும் அவர்கள் அவரைத் தனது மார்போடு அணைத்துக் கொண்டார்கள். அவரைப் பத்திரமாகப் பாதுகாத்த கர்த்தருக்குத் துதி செலுத்தினார்கள். கோல் தன்னுடன் பேசிய கர்த்தரையும், அவருடைய அன்புக் கரம் தன்னை ஒரு கொடிய கோர விபத்திலிருந்து தடுத்துப் பாதுகாத்துக் கொண்டதையும் விபரமாகக் கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த நாளிலிருந்து கோல் அவர்கள் தனது வாழ்வைக் கர்த்தருக்கு அர்ப்பணித்ததுடன் தனது வைராக்கியமான இந்துக் குடும்பத்தினர் பலரையும் ஆண்டவருடைய இரட்சிப்பின் சந்தோசத்துக்குள் வழிநடத்தினார்கள். சகோதரன் கோல் அவர்களின் இரட்சிப்பின் காரியத்தில் அவர்களுக்கு அதிகமாக உதவிசெய்த மிஷனரி அம்மையார் விஸ்ஹார்ட்டும், சால்மன் என்பவரும் ஆவார்கள்.
கர்த்தருடைய பிள்ளையான கோல் சகோதரனின் பிரபை ஜொலிக்கும் முகமும், அமர்ந்த மெல்லிய குரலும், அவர்களின் அன்பின் செயல்களும் அவர் ஒரு மெய்யான கர்த்தருடைய பிள்ளை என்பதை உறுதி செய்தன. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். சகோதரன் கோல் அவர்களின் புகைப்படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
தமது வசனத்தால் என்னை பெலப்படுத்திய அன்பின் ஆண்டவர்
அடுத்த நாள் காலையில் காய்ச்சலின் அகோரமும், தலைச்சுற்று மயக்கமும் வெகுவாய்க் குறைந்துவிட்டது. இருப்பினும், ஆகாரம் சாப்பிட மனமில்லாமலிருந்தமையால் அதிகமான பெலவீனத்தை சரீரத்தில் உணர்ந்தேன். சில நாட்களாகவே சரியான ஆகாரம் சாப்பிட எனக்கு விருப்பமில்லாதிருந்தமையால் எனது உடல் நடுக்க முற்றுக்கொண்டிருந்தது. அந்த நாளின் காலையிலும் சரீரத்தின் பெலவீனத்தைக் கூடுதலாக அறிந்த நான் வரப்போகும் நாட்களில் எப்படி நாம் ஊழியம் செய்யப்போகின்றோம் என்ற கவலையால் தாக்குண்டேன். எனக்கு முன்பாகவிருந்த நூற்றுக்கணக்கான தீபெத் மொழிப் பிரதிகள், சிறு புத்தகங்கள், சுவிசேஷப் பங்குகள் கொண்ட பெரிய பையைப் பார்த்த போது என் மனதின் துக்கம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. இருதயத்தின் விசாரத்தால் கண்களில் கண்ணீர் பெருகினது.
ஜெபத்தில் என் இருதயத்தை ஆண்டவர் சமூகத்தில் ஊற்றியதன் பின்னர் நடுங்கும் பெலவீனமான கரத்துடன் என் வேதாகமத்தை நான் திறந்தேன். ஆனால், அதைப்படிக்க முடியாத காரணத்தால் அதனை திறந்த நிலையில் அப்படியே வைத்துவிட்டு மறுபடியும் கண்களை மூடிப் படுத்திருந்தேன். கொஞ்ச நேரம் சென்ற பின்னர் திரும்பவும் வேதாகமத்தை எடுத்துப் படிக்க முயற்சித்தேன். என் கண்கள் அதின் திறந்த பக்கத்தை உற்று நோக்கின. என்ன ஆச்சரியம், கர்த்தரே என்னுடன் நேரிடையாகப் பேசுவதாக நான் அறிந்தேன். தேவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்:-
“………………………அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலது கையைப் பிடித்துக் கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கல கதவுகளை உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்……………..” (ஏசாயா 45 : 1 -4) கர்த்தாவின் இந்த அருமையான தேவ வார்த்தைகள் எனக்கு புதிய பரலோக கிருபையையும், தெய்வீக ஆறுதலையும் அளித்தது. நிச்சயமாக கர்த்தர் எனக்கு முன்பாகச் சென்று பெரிய காரியங்களைச் செய்யப் போகின்றார் என்ற மிகவும் திட்டமான நம்பிக்கை எனக்கு உண்டாயிற்று. கர்த்தருக்குள் என்னை திடப்படுத்திக்கொண்டு அன்று மாலையிலேயே அடுத்த நாள் விடியற் காலம் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கின் தலைமை இடமான பாதம் (PADUM) என்ற இடத்திற்குச் செல்லும் பேருந்துக்கு டிக்கெட் பதிவு செய்து கொண்டேன். அத்தனை சுகயீனத்தின் மத்தியில் இத்தனை துணிச்சலுடன் பிரயாணத்தை தொடங்க வேண்டுமென்ற விருப்பத்தை ஆண்டவர்தான் எனக்குத் தந்திருந்தார். அது மெய்யாகவே தேவனுடைய ஏற்பாடாகும். பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதிக்கும் தேவனல்லவா அவர் (ஏசாயா 48 : 17 ) நாம் செய்ய வேண்டிய காரியத்தை நமக்கு அறிவிக்கும் அன்பின் கண்மணி அல்லவா அவர் (1 சாமு 16 : 3) நான் எனது சுகயீனம் காரணமாக அந்தப் பேருந்தில் பயணிக்க தவறியிருக்கும் பட்சத்தில் வேறொரு பேருந்தில் நான் அதற்கப்பால் பிரயாணம் செய்திருக்கவே முடியாது. காரணம், நான் சென்ற அதே பேருந்துதான் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கிற்கு சென்ற கடைசி பேருந்தாகும். அல்லேலூயா. கடுமையான பனிப்பொழிவின் காரணமாகப் பேருந்து போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டுப் போயிற்று.
மிகவும் குளிரான அதிகாலை 3 : 30 மணிக்கெல்லாம் நான் எழும்பி பிரயாணத்திற்கு ஆயத்தமானேன். அந்த அதிகாலை நேரம் நான் இருந்ததான எனது பெலவீனத்தின் துயரத்தைக் கர்த்தர் ஒருவர் மட்டுமே அறிவார். சகோதரன் கோல் அவர்கள்தான் எனக்கு மிகவும் உதவி செய்தார்கள். அதிகாலையிலேயே அவர்களும் எழுந்து மிகவும் கஷ்டத்துடன் என் பையை சுமந்து கொண்டு பேருந்துக்கு வந்தார்கள். பிரயாணத்தை தொடங்கு முன்னர் நாங்கள் இருவரும் ஹோட்டல் அறையில் முழங்காலூன்றி ஜெபித்தோம். எனது பெலவீனத்தோடு பேருந்தின் கூரையில் ஏறி என்னுடைய பாரமான பையை மிகவும் கஷ்டத்துடன் வைத்துக் கட்டினேன். விடியற்காலம் 4 : 30 மணிக்கெல்லாம் பேருந்து புறப்பட்டது. பேருந்திலிருந்த புத்தமத பயணிகள் பலர் தங்கள் புத்தமத சுலோகங்களை ஏகோபித்த குரலில் எழுப்பினார்கள். குளிரான அந்த அதிகாலை நேரம் பேருந்து கார்க்கிலிலிருந்து எங்கேயோ ஒரு திசையை நோக்கி விரைந்து ஓடினது. சுமார் ஒரு மணி நேர ஓட்டத்திற்குப்பின்னர் ஒரு கிராமத்தில் பேருந்து வந்து நின்றது. அங்கு நமது அன்பு சகோதரன் கோல் அவர்கள் என்னிடம் அன்பொழுக விடை பெற்று இறங்கிக் கொண்டார்கள். அந்த கிராமத்தில்தான் அவர்களது மின்சாரப் பணியும் இருந்தது.
பொழுது விடிந்து வருகிற நேரம் பேருந்து அழகிய முகமதிய கிராமங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. சாங்கு, குர், பார்த்திக், யோல் ஜோக், நாம் சுரு போன்ற அழகிய கிராமங்கள் எல்லாம் வழிப்பாதையில் வந்தன. மிகவும் ஆபத்தான மலை வழிப்பாதைகளில் எல்லாம் அது ஓடினது. மத்தியான நேரம் பேருந்து ரங்க்டம் (RANGDUM) என்ற இடத்தை வந்தடைந்தது. ரங்க்டத்தில் சில தீபெத்திய வீடுகள் இருந்தன. அவ்விடத்தில் சாப்பாட்டுக் கடைகள் எதுவுமே கிடையாது. பேருந்திலிருந்த பயணிகள் தங்களுடன் கொண்டு வந்த ஆகாரங்களை எடுத்துப் புசித்தனர். நான் என்னுடன் கொண்டு சென்றதொரு சிறிய பிஸ்கட் பாக்கெட்டைச் சாப்பிட்டேன். ரங்க்டத்தில் ஒரு சிறிய அறையில் கம்பியில்லாத் தந்தித் தொடர்பு நிலையம் ஒன்றிருந்தது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தஒரு சீக்கிய வாலிபனுக்கு உருது மொழியில் எழுதப்பட்டதொரு சுவிசேஷ பங்கு ஒன்றை ஜெபத்தோடு கொடுத்தேன். எவ்வித பொழுது போக்குமில்லாமல் பனி மலைகளால் சூழப்பட்ட ஏகாந்தமான இடத்தில்இருக்கும் அவன் நான் கொடுத்த புத்தகத்தை மிகவும் ஆவலுடன் ஏற்றுக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தான். ரங்க்டம் என்ற புத்தமார்க்க கிராமத்தை நீங்கள் படத்தில் காண்கின்றீர்கள்.
ரங்க்டத்திலிருந்து ஓரிரு கில்லோ மீட்டர் தொலைவில் ஒரு மலை உச்சியில் புத்த துறவிகளின் மடமும் அவர்களின் வழிபாட்டு ஸ்தலமான கோம்பாவும் இருக்கின்றது. எங்கள் பேருந்து அந்த மடாலயம் அமைந்துள்ள மலை உச்சியின் அடியில் நிறுத்தப் பட்டிருந்தது. பேருந்தில் இருந்த புத்த பயணிகள் எல்லாரும் புத்தரைத் தொழுது கொள்ளுவதற்காக பேருந்திலிருந்து இறங்கி மலை உச்சிக்குச் சென்றனர். நானும், முகமதிய பேருந்து டிரைவரும், முகமதிய கண்டக்டரும் மாத்திரம் பேருந்தில் இருந்தோம். சற்று நேரத்தில் அந்த புத்த மடாலயத்தில் புத்த துறவிகளாக கல்வி பயிலும் இளைஞர்களான இரண்டு சிறிய புத்தமத லாமாக்கள் எங்கள் பேருந்து பக்கம் வந்தனர். சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இயேசு இரட்சகரின் பிறப்பு முதல் இறப்பு, உயிர்த்தெழுதல் வரைக்கும் அநேக படங்களுடன் எழுதப்பட்டிருந்த இரண்டு பெரிய தீபெத் மொழிப் புத்தகங்களை ஆளுக்கொரு புத்தகமாக நான் ஜெபத்துடன் அவர்களுக்கு அளித்தேன். ஒரு புதையலைப் பெற்றுக்கொள்ளுவதுபோல அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு என்னிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள்அந்த இரு புத்தகங்களையும் அவர்கள் மலை உச்சியிலுள்ள புத்த மடாலயத்திற்கு வாசித்துக்கொண்டே எடுத்துச் சென்றனர். அந்த இரண்டு புத்தகங்களும் அந்த மடாலயத்தில் புத்தமத கல்வி பயிலும் அநேக இள வயது லாமாக்களால் கட்டாயம் கருத்துடன் வாசிக்கப்பட்டிருக்கும் என்று நான் கர்த்தரில் உறுதியாக நம்புகின்றேன். கர்த்தர் அந்தப் புத்தகங்களின் மூலமாக அந்த மடத்திலுள்ள ஒவ்வொருவரோடும் பேசவேண்டுமென்று நான் பேருந்திலிருந்து ஜெபித்துக்கொண்டே சென்றேன். ரங்க்டம் என்ற இடத்தின் மலை உச்சியிலுள்ள புத்தமார்க்க துறவிகளின் மடாலயத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.
மத்தியானத்திற்கு மேல் பேருந்து பிரயாணம் மிகவும் கடினமாக இருந்தது. புழுதி நிறைந்த கற்களின் மேலேயே வெகு தூரம் வரை பேருந்து சென்றபடியால் பேருந்து முழுவதும் புழுதியால் நிரம்பியதுடன் குலுக்கமும் அதிகமாகவிருந்தது. இந்த துயரமான பயண நேரத்தில் அன்பின் ஆண்டவர் என் கவனத்தை தமது அற்புத சிருஷ்டி ஒன்றின் பக்கம் திருப்பினார். அந்த பனி மலைகளிலே ஒரு அற்புத விலங்கினம் ஆங்காங்கு புற்களை கத்தரித்துத் தின்று கொண்டிருந்தன. கீரியை விட இரண்டு அல்லது மூன்று மடங்குகள் பெரிதான அந்த சிறிய விலங்கினம் எங்கள் பேருந்து வருவதைக் கண்டதும் தங்கள் பொந்திற்குள் போய் மறைந்து கொள்ளுவதும், சற்று நேரத்தில் மீண்டும் பொந்துகளிலிருந்து வெளி வந்து தனது கடைக்கண்ணால் பார்ப்பதும், மலை மீது அந்தச் சிறிய விலங்கினம் அங்குமிங்கும் ஆடி அசைந்து ஓடுவதும், மேட்டிலே தனது பின் கால்கள் இரண்டின் மேல் கங்காருவைப்போல உட்கார்ந்து கொண்டு முன் கால்கள் இரண்டையும் சேர்த்து நம்மைப் பார்ப்பதும் தங்கள் சிருஷ்டி கர்த்தாவின் எல்லையற்ற ஞானத்தை பிரதி பலிப்பதாயிருந்தன. அந்த சிறிய விலங்கினத்தின் படத்தை நீங்கள் காணலாம்.
இந்த ஆள் அரவமற்ற ஏகாந்தமான மலைப் பிராந்தியங்களில் என்னைக் கவர்ந்ததொரு சிறப்பான மிருகம் காட்டுக் கழுதையாகும். ஒரு முறைதான் நான் அதனைக் கண்டேன். வெகு தொலைவில் அது தன்னிச்சைப்படி சுதந்திரமாகப் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதற்கென்ன கவலை? எஜமானனின் பழுவான மூட்டையைக் குறித்த கவலையா? அல்லது இரக்கமற்ற அவனின் தாற்றுக்கோல் அடிகளைக் குறித்த கவலையா? அல்லது வீடு சென்றால் முன்னங்கால்கள் இரண்டையும் அவன் ஒன்றாகப் பிணைத்துக் கட்டித் தத்தித் தத்தித் திரியப்பண்ணிவிடுவான் என்ற கவலையா? ஒரு கவலையுமில்லை. புல் இருக்கும் இடத்தில் வயிறு நிரம்பப் புல்லை மேய்ந்து தண்ணீர் இருக்கும் இடத்தில் தன் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு தன் மனம்போல வனத்தின் வெளிகளில் சுற்றியலைய வேண்டியதுதான். அதைக் கேட்க யாருண்டு? எத்தனை சுதந்திரமமான, சொகுசான ஆனந்த வாழ்க்கை! ஆனால் அங்குதான் தனக்கு கொடிய ஆபத்து காத்துக் கொண்டிருக்கின்றது என்பது பாவம் அதற்குத் தெரியாது. எனது அந்த வழித்தடத்தில் ஒரு ஆட்டைக் காட்டு விலங்கு ஒன்று முற்றுமாகப் பட்சித்துப் போட்டிருப்பதை நான் கண்டேன். தான் காட்டு மிருகம் ஒன்றால் திடீரென்று ஒரு நாள் பட்சிக்கப்படும் வரை அக்காட்டுக் கழுதையின் வாழ்க்கை ராஜபோக வாழ்க்கைதான். அந்தப் பனிப் பாலைவனத்தில் வாழ்கின்ற காட்டுக் கழுதைகளின் படம் ஒன்றை நீங்கள் காண்பீர்கள்.
பாவியாகிய எந்தனின் வாழ்வும் கூட எனது 18 ஆம் வயது பிராயம் வரைத் தன்னிச்சைப்படி புல் மேய்ந்து கொண்டிருந்த மேற்கண்ட காட்டுக் கழுதையின் வாழ்வாகத்தானிருந்தது. இவ்வகண்ட லோக வனத்தின் கொடிய காட்டு விலங்காம் மனுஷ கொலை பாதகனான கெர்ச்சிக்கிற சிங்கத்தால் நான் பீறுண்டு மடிவதற்குள் என் அன்பின் பரம எஜமானர் என்னைத் தேடி வந்து தமது பாதுகாப்பான பரம தொழுவத்தினுள் பத்திரமாகக்கூட்டிச் சென்றார். அந்த நல்ல எந்தன் மேலோக எஜமானருக்கே துதி, ஸ்தோத்திரம், கனம், மகிமை இன்றும் என்றும் சதா காலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.