மேற்கு தீபெத் (லடாக்) சுவிசேஷ பிரயாண நினைவுகள் (3)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கே ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென்.
ஒரு மனிதன் காஷ்மீரத்திலிருந்து மேற்கு தீபெத்தான லடாக் என்ற இடத்திற்குத் தரை மார்க்கமாகச் சென்றுவிட்டு ஜீவனோடு திரும்புவதானால் அது தேவனின் சுத்தக் கிருபையேயன்றிப் பிறிதொன்றுமில்லை. இந்நிலையில் அன்பின் கன்மலையாகிய கர்த்தர் சாது கந்தையானந்து ஐயா அவர்களையும், பாவியாகிய என்னையும் அந்த தீபெத் பீடபூமிக்கு அழைத்துச் சென்று தமது திருவுளச்சித்தத்தை நிறைவேற்றி ஜீவனோடு எங்களை திரும்பப்பண்ணிய அவருடைய எல்லையற்ற அன்புக்காக அவருக்கு அனந்தங்கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக.
மேற்கு தீபெத்திற்குச் சென்ற நாங்கள் அடுத்த நாள் காலையிலேயே எங்கள் ஊழியத்தை ஜெபத்தோடு ஆரம்பித்து விட்டோம். அந்த பூமியின் மக்கள் எப்படிப்பட்டவர்களோ, இவ்விதமான ஊழியத்தினால் ஏதாவது பிரச்சினைகள் எங்களுக்கு எழும்புமா? எங்கெங்கு செல்லுவது? கிராமங்களில் வாழ்வோர் எப்படிப்பட்டவர்கள்? தேவ ஊழியத்தை முதலில் எப்படி ஆரம்பிப்பது? என்பது போன்ற வினாக்கள் எங்கள் உள்ளங்களில் பலமாகக் கிரியைச் செய்யத் தொடங்கிவிட்டன. ஆனால், அவை யாவையும் நாங்கள் தேவ சமூகத்தில் வைத்து கர்த்தாவின் வழிநடத்துதலுக்காக ஊக்கமாக ஜெபித்தோம்.
முதன் முதலாவதாக மேற்கு தீபெத்தின் தலை நகர் பட்டணமான நாங்கள் தங்கியிருந்த “லே” பட்டணத்தில் தேவப்பணியை ஆரம்பிக்க நாங்கள் தீர்மானித்தோம். ஆனால், ஒரு வேளை பட்டணத்திலுள்ளோர் ஏகமாக நமக்கு விரோதமாகக் குரல் எழுப்பினால் நாம் உடனே காஷ்மீரம் செல்ல வேண்டிய நிலை உருவாகலாம் என்று எண்ணி முதலில் தூரமான கிராமங்களுக்குச் சென்று அந்த இடங்களில் சுவிசேஷம் அறிவித்துவிட்டு இறுதியில் லே பட்டணத்தில் தேவ ஊழியம் செய்யலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதின்படி மறு நாள் காலை மிகுதியான ஜெபத்தோடு தீபெத் மொழிப் பிரதிகளால் எங்கள் தோள் பைகளை நிரப்பிக்கொண்டு லே பட்டணத்திற்கு அப்பாலுள்ள “கல்ஸேலிங்” என்ற கிராமத்திற்குச் சென்று அவ்விடத்தில் தீபெத் மொழி சுவிசேஷ பிரதிகளையும், சிறிய புத்தகங்களையும் விநியோகித்தோம். மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்று மிகவும் ஆவலோடு வாசிப்பதை நாங்கள் கண்டு கர்த்தரை ஸ்தோத்திரித்தோம். தீபெத் மக்கள் மத்தியில், அவர்கள் சொந்த நாட்டில் பரிசுத்த கர்த்தருக்கு ஊழியஞ் செய்வதை எண்ணினபோதும், தீபெத்திய மக்கள் மிகுந்த ஆவலுடன் சுவிசேஷத்திற்கு செவிசாய்ப்பதைக் கண்டபோதும் பரலோகத்தில் நாங்கள் இருப்பதுபோன்ற ஆனந்த சந்தோசம் எங்களுக்கு உண்டாயிற்று. அந்தக் கிராமத்தை விட்டுப் பின்னர் நாங்கள் “ஸ்காரா” என்ற கிராமத்தினில் ஊழியம் செய்தோம். கர்த்தர் அவ்விடத்து ஊழியங்களையும் எங்களுக்கு ஆசீர்வதித்துத் தந்தார்.
நேரம் செல்லச் செல்ல சூரியனின் வெப்பம் மிகவும் கொடூரமாக இருப்பதை நாங்கள் கண்ணுற்றோம். கோடை காலத்தில் இராஜஸ்தான், பீஹார், டில்லி வெப்பமெல்லாம் தீபெத் பீடபூமியின் கடும் உஷ்ணத்திற்கு ஈடுகொடுக்க முடியாது. பல மணி நேரங்கள் ஊழியம் செய்திருந்த நாங்கள் வெயிலின் கடும் உஷ்ணம் தாங்காமல் கிராமத்திற்கு அப்பாலிருந்த சில மரங்களின் நிழலில் போய்ப் படுத்திருந்தோம். பக்கத்திலே ஒரு பனி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. எங்கும் ஒரே துர் நாற்றம் வீசியது. காரணம், செத்துப்போன மிருகங்களையெல்லாம் அந்த நீரில்தான் கிராம மக்கள் போட்டுவிடுகின்றனர். அதுமட்டுமல்ல, நாங்கள் படுத்திருந்த இடம் மனிதர்களைப் புதைக்கும் இடம் என்பதைப் பின்னர்தான் நாங்கள் கண்டு பிடித்தோம். அந்த நாற்றத்திற்கு மத்தியில்தான் நாங்கள் இளைப்பாற வேண்டியதாகவிருந்தது. ஏனென்றால், வேறெங்கும் வசதியான நிழல் மரங்களில்லை. நிழல் தேடிச் சென்றால் வெயிலின் உக்கிரகத்தை நம்மால் தாங்க இயலாது. பனி ஆற்றை ஒட்டி தனித்தனியாக இரண்டு சுண்ணாம்பு காளவாயைப் போன்ற இடங்களைக் கண்டோம். அது என்னவென்று எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. சாதுசுந்தர்சிங் தம்முடைய புத்தகத்தில் குறிப்பிட்டபடி புத்தமத லாமா யாராவது உள்ளே உட்கார்ந்து ஜெப மந்திர சக்கரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக்கூடியதான இடமாக இருக்கும் என்று சாது ஐயா என்னிடம் சொன்னார்கள். நாங்கள் சென்று தேவ ஊழியம் செய்த மேற்கு தீபெத் லடாக் கிராமம் ஒன்றை நீங்கள் படத்தில் காணலாம்.
தினமும் நாங்கள் பல மணி நேரங்களை ஆண்டவருடைய சமூகத்தில் செலவிட்டே எங்களுடைய ஊழியங்களைச் செய்ய புறப்பட்டோம். எந்த தீபெத்திய கிராமத்திற்கு செல்ல வேண்டும்? எப்படிச் செல்ல வேண்டும்? என்பதை எல்லாம் தினமும் அதிகாலையில் கர்த்தரிடம் கேட்டறிந்தே பிரயாணத்தை தொடங்கினோம். கர்த்தரும் எங்களைத் தம்மடைய திட்டமான வழியில் வழிநடத்திக் கொண்டு சென்றார்.
தங்களுடைய சொந்த தீபெத்திய பாஷையில் எழுதப் பட்டவைகளாக இருந்தமையால் தீபெத் மக்கள் மட்டற்ற ஆவலுடன் அருமை பெருமையாகப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதை நாங்கள் கண்டு பெரிதும் வியப்புற்றோம். பின் வந்த நாட்களில் சுவிசேஷப் பங்குகளையும், இதர புத்தகங்களையும் மக்களுக்கு இலவசமாகக் கொடுப்பதைவிட ஏதாவது சொற்ப விலைக்கு விற்கக் கர்த்தருக்குள் நாங்கள் தீர்மானித்தோம். காரணம் யாதெனில், மேற்கு தீபெத்தில் நமது இந்தியாவின் மாபெரும் ராணுவ கேந்திரம் இருப்பதால் ராணுவத்திலிருந்தோ அல்லது புத்தமதத்தினரிடமிருந்தோ எந்தவிதமான இடையூறுகளும் வரக்கூடாது என்பதற்காகத்தான். என்ன ஆச்சரியம்! மக்கள் நாங்கள் கேட்ட சில பைசாக்களுக்கும் மிக அதிகமாக பணம் கொடுத்துப் புத்தகங்களை எங்களிடமிருந்து வாங்கினார்கள். நாங்கள் புத்தகங்களுக்கு 10 பைசாக்களைக்கேட்டால் அவர்கள் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்கள் தர ஆரம்பித்துவிட்டார்கள். கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை விநியோகித்தோம். புத்தமத லாமாக்கள் ஒரு சிலரைத் தவிர அநேகமாக எல்லா தீபெத்திய மக்களும் ஆவலோடு கர்த்தருடைய பிரசுரங்களை வாங்கி வாசித்தனர். பல்லாயிரக்கணக்கான பிரதிகளை நாங்கள் விநியோகித்திருந்த போதினும் ஒரு தனிப்பிரதிகூட மக்களால் கிழித்து தெருவில் வீசப்பட்டிருந்ததை நாங்கள் காணவில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
“கலோனி” என்ற தீபெத்திய கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கர்த்தருடைய ஊழியத்தைச் செய்துவிட்டு “சொக்லாம்சர்” என்ற கிராமத்திற்கு நான் மட்டும் தனித்து ஒரு மத்தியானத்தின் கடும் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு தீபெத்திய வாலிபனும் அவனது மனைவியும் வந்து கொண்டிருந்தனர். “தேவனைக் கண்டடையும் வழி” என்பதான தீபெத்திய புத்தகம் ஒன்றை அப்பெண்ணுக்கு இலவசமாகக் கொடுத்தேன். அப்பெண் அதை வாசித்துப் பார்த்துவிட்டு “இதனை நான் வாங்க மாட்டேன்” என்று சாதித்து நின்றாள். “இதோ பாருங்கள் கடவுளைக் கண்டடையும் வழி என்று இதில் எழுதப்பட்டுள்ளதே, நமது மார்க்கத்திற்கு விரோதமாக அல்லவா இது இருக்கின்றது” என்று தனது புருஷனிடம் பதை பதைத்துக் கூறினாள். “அதை வாங்கி வாசிப்பதில் தவறு எதுவும் கிடையாது” என்று கூறி அவ்வாலிபன் இறுதியில் என்னிடமிருந்து அதனை வாங்கிச் சென்றான். அந்தப் பெண் வாங்க மறுத்ததைஎன் உள்ளத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “ஜீவனுள்ள தெய்வமே, நீர் சிருஷ்டித்த இந்த மனுஷ ஜாதியினர் உம்மையே புறக்கணித்துத் தள்ளுகின்றார்களே அப்பா” என்று என் உள்ளத்திற்குள் கூறிக்கொண்டே ஓரிடத்தில் துக்கத்தோடே உட்கார்ந்தேன். எனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடினது. அந்த வேளையில் தூரத்திலிருந்து ஒரு வாலிபன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனுக்கு தீபெத் மொழி பிரதிகளை ஜெபத்தோடு கொடுத்தேன். தனக்குத் தீபெத் மொழி தெரியாது என்றும் உருது மொழியில் ஏதாவது இருந்தால் தான் மிகவும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளுவதாகவும் கூறினான். அந்தச் சமயம் என் கைவசமிருந்த உருது மொழி மாற்கு சுவிசேஷங்களைக் கண்டு அவன் எல்லையற்ற ஆனந்தம் கொண்டான். அவை அனைத்தையும் அவன் என்னிடமிருந்து பெற்றுச் சென்றிருக்கின்றான். தனது கிராமத்திலுள்ள தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகம் கொடுக்கப்போவதாக அவன் என்னிடம் கூறிச்சென்றான். அவனின் பெயர் அமன் உல்லா என்பதாகும். இவன் ஒரு தீபெத்திய முஸ்லீம். உள்ளம் உடைந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த எனக்கு இந்த வாலிபனால் மட்டற்ற மகிழ்ச்சியுண்டாயிற்று. கர்த்தாவின் மாட்சிமை பொருந்திய செயல்களின் விந்தைகள்தான் எத்தனை!
மேற்கு தீபெத் (லடாக்) திருச்சபையின் துயர நிலை
இந்த மேற்கு தீபெத்தில் 1631 ஆம் ஆண்டிலேயே JESUIT மிஷனரிகளான AZEVEDO வும் CLIVERA என்பவரும் ஒன்றிணைந்து வந்து சுவிசேஷத்தைக் கூறிச்சென்ற போதினும், உலகத்திலேயே மிகச் சிறந்த மிஷன் ஸ்தாபனமான மோரேவியர்கள் MORAVIAN 1864 ஆம் ஆண்டில் தங்கள் மிஷனரிப் பணியைத் தொடங்கி இங்கு ஒரு சிறிய தேவ ஆலயத்தைக் கட்டி தங்கள் சபையை ஸ்தாபித்துள்ள போதினும் தேவனின் சுவிசேஷத்தின் வாசனையே இல்லாமல் இந்த இடத்தின் மக்கள் அந்தகாரத்திலேயேதான் இன்றும் தடவித் திரிகின்றனர். எத்தனை சோகமான காரியம்! 25 தீபெத்திய கிறிஸ்தவ குடும்பங்களுள்ள “லே” பட்டணத்தில் ஞாயிறு ஆலய ஆராதனையில் கலந்து கொண்ட தீபெத்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5 (ஐந்து) பேர்கள் மட்டுமே. ஆலயத்தின் மணியை அடித்த நபர் ஆலயத்திற்கு வரவில்லை. நாங்கள் தங்கியிருந்த குருவானவர் வீடடிலிருந்து ஒரு நபர் கூட வரவில்லை. எத்தனை பரிதாபம்! சபை வளர்ச்சிக்காக மேலை நாடுகளிலிருந்து வரும் ஏராளமான பணங்களை மாதந்தோறும் வாங்கிச் சுகமாக வாழ்க்கை நடத்திவிட்டு மந்தையின் ஆடுகளைப்பற்றிக் கவலையற்றிருக்கும் இவர்கள் கர்த்தருக்கு என்ன கணக்கு கொடுப்பார்களோ? “லே” என்ற இடத்திலுள்ள மோரேவிய மிஷனரிகள் கட்டிய தேவாலயத்தை படத்தில் நீங்கள் காணலாம்.
நாங்கள் கொண்டு சென்ற தீபெத் மொழிப் பிரசுரங்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள்ளாகவே கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. காஷ்மீரத்தின் அடிவாரப்பட்டணம் உதம்பூரில் விட்டு வந்த தீபெத் மொழிப் பிரசுரங்களுக்காகப் பெரிதும் கவலை கொண்டேன். எங்கள் கவலையை மாற்ற தேவன் ஒரு பெரிய அதிசயத்தை செய்து வைத்திருந்தார். மேற்கு தீபெத்திலுள்ள மோரேவிய ஆலயத்திற்குள் செக்கந்திரபாத்திலிருந்து தீபெத் மொழி கிறிஸ்தவ சுவிசேஷ பிரதிகள் அடங்கிய அநேக பார்சல்கள் அன்பளிப்பாக அனுப்பியிருக்கின்றனர். சுவிசேஷ வாஞ்சையற்ற அந்த மேற்கு தீபெத் கிறிஸ்தவர்கள் அவற்றை ஏன் திறந்து பார்க்கின்றனர்? ஆலயத்தின் ஒரு மூலையில் தூசிபடிந்து கிடந்த அவற்றை எல்லாம் நாங்கள் சபையினரின் அனுமதியுடன் கேட்டுப் பிரித்தெடுத்தோம். கர்த்தாவின் இந்த அதி அற்புத செயலுக்காக எங்கள் உள்ளங்கள் எல்லையற்ற ஆனந்தம் கொண்டது. தீபெத்திய கிராமம் கிராமமாக சென்று நாங்கள் அவற்றை ஜெபத்துடன் விநியோகித்தோம். கர்த்தருடைய அதிசய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.
தேவன் ஆயத்தப்படுத்திக் கொடுத்த போஜன பந்தி
தொலை தூரங்களிலுள்ள தீபெத்திய கிராமங்களுக்கு நாங்கள் செல்லுகையில் மனுஷீக ரீதியில் எங்கள் உள்ளங்களில் பயம் எழும்பத்தான் செய்தது. சாதுசுந்தர்சிங்கை தூக்கிப்போட்டதுபோல ஏதோ ஒரு இடத்திலுள்ள ஆழப் பாழ்ங்கிணற்றில் நம்மையும் தூக்கிப் போட்டுவிடுவார்களோ என்ற சிறிய அச்ச எண்ணத்தைப் பிசாசு கொண்டு வரத்தான் செய்தான். ஆயினும், அன்பின் ஆண்டவருக்குள் எங்களை திடப்படுத்திக்கொண்டு அந்த புத்தமத கிராமங்களுக் கெல்லாம் சென்று தேவ ஊழியம் செய்து திரும்பினோம்.
இந்த மேற்கு தீபெத்தில் நாங்கள் எங்கள் ஆகாரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டோம். அநேகமாக காலையிலும், மத்தியான வேளைகளிலும் பசி பட்டினியாகவே இருந்தோம். அந்த பாக்கிய சூழ்நிலைகளுக்காக அன்பின் ஆண்டவரை ஸ்தோத்திரித்தோம். ஒரு சிறிய ஆகாரத்திற்கும் மிக அதிகமான காசு தேவைப்பட்டது. ஒரு வேளை உணவை திருப்தியாக சாப்பிடவேண்டுமானால் குறைந்த பட்சம் ரூபாய் 7 தேவைப்பட்டது. வெறும் தக்காளி ரசத்தில் போடப்பட்ட 2 கோழி முட்டைகளுக்கு ரூபாய் 3 வசூலிக்கின்றார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள ரூபாய் மதிப்பை நான் இங்கு குறிப்பிடுகின்றேன். கடையில் சென்று விலை கொடுத்து சுத்தமற்ற ஆகாரம் புசிப்பதைவிட பசியோடிருப்பதையே பாக்கியமாகக் கருதி ஆனந்தம் கொண்டோம். காஷமீரத்திலிருந்து நாங்கள் வாங்கிச் சென்றிருந்த ஹார்லிக்ஸ் பாட்டல் ஒன்று எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது. பசி மிகுதியால் நாங்கள் இருவரும் காய்கறிகள் முதலியவைகளை வாங்கி வந்து ஒரு நாள் இரவு தனி சமையல் செய்யத் தொடங்கினோம். அந்த சமையல் ஆசை ஒரே நாளில் வெறுப்புத் தட்டிப் போயிற்று.
நாங்கள் தங்கியிருந்த குருவானவர் வீட்டில் பின்னர் எங்களுக்கு எவ்வித ஆகாரமும் அளிக்கப்படவில்லை. நாங்கள் தங்கியிருந்த அறைக்கும் எங்களிடம் தினசரி வாடகையை எதிர்பார்த்தார்கள். அதை நாங்கள் சந்தோசமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 5 க்கும் அதிகமாகவே கணக்கிட்டுக் கொடுத்தோம். அருமை ஆண்டவர் இயேசுவைப் பற்றியோ, அவரது மாட்சிமையான சுவிசேஷத்தைப் பற்றியோ துளிதானும் அன்பும், உணர்வுமின்றி உலகத்து மக்களை விட கேடாய் ஜீவிக்கின்றனர். குருவானவரின் மகன் எப்போதும் குடி போதையிலேயே இருப்பதை நாங்கள் மிகுந்த வேதனையுடன் கவனித்தோம். நாங்களும் அந்த கிறிஸ்தவ மக்களுக்கு எவ்வளவோ நற்புத்திகளையும், தேவ பக்திக்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளோம். கர்த்தர்தாமே இந்த மக்களைச் சந்திக்கவும், இவர்கள் மூலமாக அந்த மக்களின் சக புத்த இனத்தவர்களையும் அங்கு அவர்கள் இரட்சிப்புக்குள் வழிநடத்தவும் நாம் ஊக்கமாக ஜெபிப்போமாக.
பசியால் வாடிக்கொண்டிருந்த எங்கள் நிலையறிந்த நம் அன்பின் தேவன் ஒரு பெரிய நன்மையை அங்கு எங்களுக்குச் செய்தார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அன்பான கிறிஸ்தவ வாலிபத் தம்பியை நாங்கள் அங்கு சந்தித்தோம். ராணுவத்தில் பணிபுரியும் அந்த சகோதரன் எங்களை ராணுவத்துக்குள் அழைத்துச்சென்று 4 (நான்கு) நாட்கள் எங்களுக்கு உணவளித்தார்கள். அந்த அன்புள்ள மகனை கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக. அந்த பொன்னான தருணத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து அங்கு வந்திருந்த ராணுவ வீரர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்தோம். சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
பாஷையைக் குறித்த எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு எழும்பவில்லை. இந்த லடாக் பிராந்தியம் நம் இந்திய மாநிலமாகவிருப்பதால் (ஜம்மு-காஷ்மீர்மாநிலம்) ஹிந்தி, ஆங்கிலத்தைக்கொண்டு மிகவும் அருமையாக தேவ ஊழியத்தின் காரியங்களை ஜெபத்துடன் கவனித்துக் கொண்டோம்.
அநேகரைச் சந்தித்து தனிப்பட்ட நிலைகளில் தேவனின் இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கூறினோம். ஒவ்வொரு நாள் ஊழியத்திற்கும் தேவையான சரீர பெலனையும், தேவ ஆலோசனையையும், தேவகிருபைகளையும் கர்த்தர் தாமே எங்களுக்கு அருளினார். அநேகமாக ஒவ்வொரு நாளும் தேவ ஊழியங்களைக் குறித்த வெளிப்பாடுகளை கர்த்தர் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அல்லேலூயா.