மேற்கு தீபெத் (லடாக்) சுவிசேஷ பிரயாண நினைவுகள்
கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென்.
காஷ்மீரத்தில் நான் தங்கியிருந்த கிறிஸ்தவ மிஷன் பள்ளியில்தான் கர்த்தருடைய பரிசுத்த தேவப் பிள்ளையாகிய சாது கந்தையானந்து ஐயா அவர்களை நான் வாழ்க்கையில் முதன் முதலாவதாக சந்தித்தேன். (இலங்கை தேசத்தின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவர்கள் வைராக்கியமான இந்து மார்க்கத்திலிருந்து சின்னஞ் சிறு வயதிலேயே இரட்சகர் இயேசுவின் சிலுவைக்காட்சி கிடைக்கப் பெற்று ஆண்டவரின் அடிமையாகி பின்னர் இந்தியா வந்து இமயமலைகளிலுள்ள ரிஷிகேசம் என்ற இந்து சாதுக்கள், சந்நியாசிகள் வாழும் இடத்தில் முற்றும் காவி உடை அணிந்த கிறிஸ்தவ துறவியாக நீண்ட நெடுங்காலம் அங்குள்ள சொர்க்க ஆச்சிரமம் என்ற இந்து ஆச்சிரமத்தில் இந்து துறவியைப்போல வாழ்ந்து கொண்டு மறைமுகமாக தனது அன்பின் ஆண்டவர் இயேசுவுக்கு பலத்த தேவ ஊழியங்களைச் செய்து வந்த தேவ பக்தன். அவர்களின் விரிவான வாழ்க்கைச் சரித்திரத்தை நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் கடந்த நாட்களில் நான் எழுதியதை உங்களில் அநேகர் வாசித்து கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பீர்கள். காலஞ்சென்ற அந்த தேவ பக்தனின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்) கர்த்தரே நாங்கள் ஒருவரை யொருவர் சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை எங்களுக்கு அமைத்துக் கொடுத்திருந்தார். அது அந்த சர்வ வல்லவரின் அநாதி கால ஏற்பாடாக இருந்தது. மேற்கு தீபெத்தில் தான் மேற்கொள்ளவிருக்கும் சுவிசேஷப் பணியைப் பற்றியும், அந்த இடத்தின் காரியங்களைக் குறித்தும் சற்று விளக்கமாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். காஷ்மீரத்திலுள்ள குருவானவர் ஒருவரிடமிருந்து மேற்கு தீபெத் குறித்த போதுமான தகவல்களையும் அவர்கள் கேட்டு விசாரித்து வைத்திருந்தார்கள். தேவன் எல்லாக் காரியங்களையும் தமது திருவுனச்சித்தப்படி நேர்த்தியாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்த தினங்களில் ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதிலும் நகரத்தை ஒட்டியிருந்த புகழ்பெற்ற “தால்” ஏரிக் கரையில் சாது கந்தையானந்து ஐயா அவர்களும், நானும் சென்று உட்கார்ந்து கர்த்தருடைய இரகசிய வருகையில் நாம் எப்படி எடுத்துக்கொள்ளப்படுவோம், மோட்சத்தில் நம்முடைய பரலோக வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது போன்ற மோட்சானந்த காரியங்கள் பற்றியும், சீக்கிரமாக நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் மேற்கு தீபெத் சுவிசேஷ பயணத்தைக் குறித்தும் நாங்கள் கலந்து பேசிக் கொண்டிருந்தோம். பகற் காலங்களில் அநேகமாக நாங்கள் இருவரும் மேற்கு தீபெத் ஊழியங்களுக்காக கூடி ஜெபித்துக் கொண்டிருந்தோம், தேவனுடைய வசனங்களைத் தியானித்தோம். பிரயாண ஆயத்தங்களையும் செய்தோம்.
கர்த்தாவின் மட்டற்ற அன்பின் தயவால் லடாக் என்ற மேற்கு தீபெத்திற்கு செல்லுவதற்கான எனது பயணச்சீட்டு இரண்டு நாட்கள் இடை வெளியில் கிடைத்துவிட்டது. எனவே, நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரே பேருந்துவில் செல்லக் கர்த்தர் வழி திறந்து கொடுத்துவிட்டார். மிகுதியான ஜெபத்தோடு நாங்கள் எங்கள் மேற்கு தீபெத் பயணத்தை ஆரம்பித்தோம். ஸ்ரீநகரிலிருந்து ஒரு நாள் காலை வேளை நாங்கள் எங்கள் மூட்டை முடிச்சுகளுடனும், ஏராளமான தீபெத் மொழிக் கைபிரதிகள், சாது ஐயா அவர்கள் கொண்டு வந்திருந்த உருது மொழி கைப்பிரதிகள், வேதாகமங்கள், சுவிசேஷப் பங்குகள் ஆகியவைகள் சகிதம் பேருந்து நிலையம் சென்றோம். எங்கள் பொருட்கள் எல்லாம் பேருந்து நிலைய அதிகாரிகளால் எடையிடப் பட்டு பேருந்துவின் மேலே ஏற்றப்பட்டது. கைப்பிரதிகள் இருந்த பெட்டியில்தான் ஒரு காஷ்மீர் உத்தியோகஸ்தனின் கண்ணோட்டம் அதிகமாக இருந்தது. ஓரிரு கேள்விகளுக்குப் பின்னர் அதை நாங்கள் எடுத்துச் செல்ல அனுமதித்துவிட்டான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆண்டவருக்கு துதி செலுத்தினோம்.
எங்கள் பேருந்து சிறிதான ஒன்றுதான். பேருந்து பயணிகளில் அநேகர் மேல் நாடுகளிலிரந்து வந்தவர்களே. அநேகருடைய கரங்களில் நூதனமான புகைப்படக் கருவிகள் இருந்தன. ஸ்ரீநகர் பட்டணத்தைக் கடந்து பேருந்து நெடுஞ்சாலை மார்க்கமாக விரைந்து சென்றது. இருபுறமும் செழிப்பான வயல்வெளிகளும், ஆப்பிள் உட்பட பலவகையான பழத்தோட்டங்களுமிருந்தன. பல மைல்கள் ஓட்டத்திற்குப் பின்னர் பேருந்து மலை ரஸ்தா மீது ஏறத் தொடங்கினது. ஏறத்தாழ காலை 11 மணிக்கு பேருந்தை ஒரு மலைக்கிராமத்தில் தேநீருக்காக நிறுத்தியிருந்தார்கள். இவ்விடத் திலிருந்து பேருந்து சற்று கரடு முரடான மலைப்பாதை வழியாக ஓடி வானளாவ ஓங்கி நிற்கும் இமயமலைகளின் ஊடாகச் சென்று கொண்டிருந்தது. சிம்லாவிலுள்ள இமயமலைகளையும், பத்ரிநாத், கேதார்நாத், உத்தர்காசி போன்ற இடங்களிலுள்ள இமயமலைத் தொடர்களையும் நான் கண்டிருக்கின்றேன். ஆனால், இந்த காஷ்மீர் இமயமலைகளில் தேவனது சிருஷ்டிப்பின் மகத்துவத்தை இன்னும் அதி அற்புமாகக் கண்டு ஆண்டவரை ஸ்தோத்திரித்தேன். எத்தனை விதமான இமயத்தாவரங்கள், எத்தனை வண்ண, வண்ண மலர்கள், இதுவரைப் பார்த்திராத விந்தைப் பறவையினங்கள். ஆ, நமது தேவன் எத்தனை மகத்துவமுள்ளவர்! நாம் எத்தனை பாவ தூசிகள்!
நண்பகல் சுமார் ஒரு மணிக்கு எங்களை ஏற்றி வந்த பேருந்து சோனாமார்க் என்ற அழகான இடத்தில் வந்து நின்றது. பேருந்து பயணிகள் அனைவரும் இங்கு தங்கள் மத்தியான உணவை அருந்தினர். இந்த சோனாமார்க் மிக மிக அழகான ஓரிடம். மலைகளின் உச்சியில் பனி உறைந்து கிடக்கின்றது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமைப் புல்வெளிகள் பரவிக் காணப்படுகின்றது. கூட்டம் கூட்டமாக காஷ்மீரி ஆடுகள், மட்டக்குதிரைகள் புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன. கண்கொள்ளாக் காட்சி. அந்த அழகிய சோனாமார்க் என்ற இடத்தை படத்தில் நீங்கள் காண்கின்றீர்கள்.
நண்பகல் உணவுக்குப்பின்னர் எங்கள் பேருந்து பிரயாணம் தொடர்ந்தது. சில மைல்கள்தான் பேருந்து சென்றது. அதற்குள்ளாகப் பேருந்தின் எந்திரத்தில் பழுதுள்ளது என்று வண்டியைத் திருப்பி மீண்டும் சோனாமார்க் என்ற இடத்திற்கே டிரைவர் கொண்டு வந்து சேர்த்தார். அங்குள்ள பேருந்து பழுதுபார்க்கும் இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அது செப்பனிடப்பட்டது. நேரம் அதிகமாவிட்டதால் பயணிகள் அனைவரையும் சோனாமார்க்கிலேயே இராத்தங்க டிரைவர் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்ட போதினும் சில பயணிகள் விரும்பாதபடியால் உடனே பேருந்து புறப்பட்டது. பல மைல்கள் வந்ததும் ஓரிடத்தில் பேருந்து ஒவ்வொரு திருப்பமாக மேலே வளைந்து, வளைந்து ஏறத் தொடங்கிற்று. ஒவ்வொரு திருப்பமாக ஏறிக் கடைசியாகச் செங்குத்தான மகா உயரமான மலை விழிம்பிற்கு வந்து, அதன் பின்னர் நகர ஆரம்பித்தது. வழியில் பனிக்கட்டிகள் பெரும் பெரும் பாளங்களாக உறைந்து கிடந்தன. கீழே செங்குத்தான பள்ளத்தாக்கிலும் பனி மலைகள் அப்படியே மேலிருந்து சரிந்து விழுந்து முதலைகள் இரைக்காக தங்கள் வாயை விரிவாகத் திறந்து கொண்டிருப்பது போலக் கிடந்தன. சில பிரமாண்டமான பனிப்பாறைகளின் ஊடாக தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால் இருண்ட கெபிகளான சுரங்கப் பாதையை தண்ணீர் அவற்றில் உருவாக்கியுள்ளன. அந்தவிதமான கெபிக்குள் பேருந்து விழுந்துவிட்டால் அவ்வளவுதான், அப்படியே சென்ற இடம் தெரியாமல் மறைந்தே போய்விடும். அந்தவிதமான பெரும் பனிப்பாறைகளின் அருகில் பேருந்து வரும்போது குளிர்பதனப்பெட்டிகளுக்குள் (Refrigerator) நாம் இருப்பது போலத் தெரிகின்றது. உயரமான மலைகளிலிருந்து வரும் பனிக்கட்டித் தண்ணீர் ரஸ்தாவைக்கடந்து பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்தது. இவ்விதமான ஒவ்வொரு தண்ணீர் ஓட்டத்தை பேருந்து கடந்து செல்லுகையில் டிரைவர் தனது முழுத்திறமையையும், முழு பெலத்தையும் செயல்படுத்துவது நமக்கு நன்றாகத் தெரிகின்றது. அந்த நேரம் மரண நிழலின் பள்ளத்தாக்கு ஒன்றை நாம் மயிர் இழையில் கடந்து செல்லுவதைப் போன்றிருக்கின்றது.
ஸ்ரீநகர்-லடாக் ரஸ்தாவில் மகா பயங்கரமான இடங்களில் இதுவே பிரதான ஒன்றாகும். இங்கு அநேகர் மாண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இங்குதான் நாங்கள் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென இரண்டு தடவைகள் சரிந்து விழுவதைப்போன்று முழுமையாக ஆடிற்று. இதைத்தொடர்ந்து பேருந்தில் உள்ள அத்தனை பயணிகளும் சத்தமிட்டுக் கோவென்று அழ ஆரம்பித்துவிட்டனர். சில பெண்கள் ஏங்கி ஏங்கி அழுதனர். அவர்களின் ஏக்கம் சற்று நேரம் வரை நீடித்தது. அந்த மகா பயங்கரமான உச்சியில் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கு ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. நமது இந்திய கேப்டன் ஒருவரும், அவரது முழுக்குடும்பமும் அந்த செங்குத்தான விழிம்பிலிருந்து ஜீப் உருண்டு விழுந்ததில் உருத்தெரியாமல் போய்விட்டனராம். அவர்கள் அணிந்திருந்த துணிகளில் சில துண்டுகள் மாத்திரமேதான் இறுதியில் கிடைத்ததாம். அங்கு எழுப்பப்பட்டுள்ள அந்த நினைவுச் சின்னத்தை தெய்வமாக வழிபட்டுச் செல்லுகின்றனர். நாங்கள் சென்ற நேரம் அந்த இடத்தில் ஊதுபத்திகள் நிறையக்கொழுத்தப்பட்டிருந்தன. சிகப்புக் கொடிகள் அதில் பறக்கின்றன. அந்தப் பாதையில் செல்லும் மோட்டார் வாகன ஓட்டிகள் அந்தக் கேப்டனின் ஆவி தங்கள் வாகனத்திற்கு ஏதாவது தீங்கிழைத்தவிடக்கூடாது என்பதற்காகப் பயந்து இப்படிச் செய்கின்றனராம். ஏனெனில் அந்த ஆவி இன்னும் அங்கேயே உலாவுவதை மோட்டார் ஓட்டிகள் அடிக்கடிப் பகலிலும், இரவிலும் பார்க்கின்றார்களாம். அந்த ஆவி சில சமயங்களில் மோட்டார் வாகனங்களுக்கு சமிக்ஞை (Signal) கூட காட்டுகின்றதாம்!
உண்மையில் எந்த ஒரு தைரிய நெஞ்சினனையும் நிலைகுலையப் பண்ணிவிடும் மரண நிழலின் பள்ளத்தாக்கு அது. “தெய்வாதீனமாகவே நாம் யாவரும் அந்த இடத்தில் உயிர் பிழைத்தோம். நிச்சயமாகவே நாம் அனைவரும் அங்கு செத்து மடிய இருந்தோம்” என்று டிரைவரும், கண்டக்டரும் பின்னர் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் பிரயாணம் செய்த சா நிழலின் திகிலூட்டும் ஸ்ரீநகர்-லடாக் ரஸ்தாவையும், வாகனங்கள் எத்தனையான மலை விழிம்புளில் ஊர்ந்து செல்லுகின்றன என்பதையும் இங்குள்ள படங்களில் நீங்கள் காணலாம்.
இந்த மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடந்ததும் சில மைல்கள் பேருந்து ஓட்டத்திற்குப் பின்னர் புகழ்பெற்ற ஜோஜிலா கணவாய் (Zojila Pass) வருகின்றது. இவ்விடத்தின் உயரம் 11,578 அடியாகும். எங்கும் பனி மூடிய சிகரங்களாக இருண்டு கிடக்கின்றன. சில இடங்களில் பெரும் மலைகள் கம்பீரமாக வானளாவ எழுந்து நிற்கின்றன. இந்த ஜோஜிலா கணவாயை நாங்கள் கடந்து செல்லுகையில் இரவு மணி சுமார் 8 ஆகியிருந்தபோதினும் நல்ல ஒளியுடன் மந்தாரம் காணப்பட்டது. பொதுவாக இந்த வடக்குப் பிராந்தியங்களில் பூரண இருள் சூழ இரவு சுமார் ஓன்பது மணி ஆவதை நான் கவனித்தேன்.
மேற்கண்ட ஜோஜிலா கணவாய் வழியாக சத்துருக்கள் நம் நாட்டிற்குள் நுழைந்துவிடாமலிருக்க நமது இந்திய ராணுவத்தினர் கூடாரமடித்து அக்கடுங்குளிரில் கணவாயைக் கண்காணித்து வருவதைக் கண்டேன். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய நமது ஐம்புலன்களாகிய கணவாய்களையும் பாவம் உட்பிரவேசியாமல் நாம் எத்தனை விழிப்போடு பாதுகாக்க வேண்டுமென்று ஆண்டவர் அந்த மாலை நேரம் எனக்கு நினைப்பூட்டினார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ஜோஜிலா கணவாயைக் கடந்து சென்ற சிறிது நேரத்திற்கப்பால் சாது கந்தையானந்து ஐயா அவர்களும், நானும் பாட்டுப்பாடத் தொடங்கிவிட்டோம். ஐயாவுக்கு பழைய காலத்து மலையாள பரிசுத்தவான் “சாது கொச்சு குஞ்சு” வுடைய பாடல்கள்தான் பிடித்திருந்தன. எனவே, அவருடைய பாடல்களையும், கீர்த்தனைப் பாடல்களையும் வெகு நேரம் வரை நாங்கள் பாடினோம். பின்னர் நான் சில ஆங்கில பல்லவிகளையும் பாடினேன். எனக்குப் பின்னாலிருந்த ஒரு பிரெஞ்சு நாட்டு கிறிஸ்தவ இளம் பெண்ணின் உள்ளத்தில் இது உணர்த்துதலை உண்டாக்கவே அவள் அடுத்த நாளில் என்னுடன் அன்பாகப் பழகத்தொடங்கினாள். அதை நான் அனுகூலமாக்கிக் கொண்டு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக உள்ள இரட்சிப்பின் வழியையும், நித்திய ஜீவனையும் குறித்து ஓரிரு தடவைகள் அவளுக்குக்கூறினேன். அவளும், ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதாக என்னிடம் உறுதி கூறினாள். பின்னர் லடாக்கிலும் (மேற்கு தீபெத்) நான் பல முறை அவளைச் சந்திக்க நேரிட்டது. நான் அவளைக் காணும்போதெல்லாம் இரட்சகர் இயேசுவை அவளுக்கு நினைப்பூட்டிக் கொண்டே யிருந்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இரவின் இருள் அதிகரிக்கவே வலது, இடது பக்கத்திலுள்ள அதல பாதாள பள்ளத்தாக்குகளை நாங்கள் அதிகமாகக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. எனினும், சில இடங்களில் எங்களது ஆபத்தான மரண நிலையை நாங்கள் நன்கு உணர முடிந்தது. கெடு பாதாளத்தில் பெரிய நதியான சிந்து நதி ஓடுவதைக் கண்டோம். அநேக சமயங்களில் என்னை முற்றுமாக ஆண்டவருடைய கரங்களில் ஒப்புவித்து நான் எனது மரணத்தை சந்திக்க ஆயத்தமானேன். “ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்ற சிலுவைக்கள்ளனின் கடைசி வாசகமே என் உதடுகளில் இருந்தது. உண்மைதான், அடுத்து வரும் ஒரு நொடிப் பொழுதில் என்ன சம்பவிக்கும் என்பதை யாராலும் உறுதி சொல்ல முடியாது.
பல மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் பேருந்து ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ஒரு இராணுவ அதிகாரி பேருந்திற்குள் ஏறி வந்து பயணிகள் எல்லாரையும் அப்படியே ஒரு பார்வை பார்த்தார். இந்தியரல்லாத வெளிநாட்டுக்காரர்களின் கரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பாரம் கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் பூர்த்தி செய்து கொடுத்த பின்னர் அந்தப் பாரத்துடன் அவர்களது பாஸ்போர்ட்டுகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் பேருந்து போக அனுமதிக்கப்பட்டது.
சரியாக இரவு 11:30 மணிக்கு எங்கள் பேருந்து கார்க்கில் (KARGIL) என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது. பேருந்திலுள்ள அனைவரும் ஆங்காங்குள்ள சிறிய விடுதிகளில் படுக்கச் சென்றனர். பரதேசிகளாகிய நாங்கள் இருவரும் ஒரு விடுதிக்காரனண்டை சென்றோம். அவன் “உங்களுக்கு இங்கே இடமில்லை” என்றான். ” நீங்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கின்றோம். தயவுசெய்து இடம் கொடுங்கள்” என்று கெஞ்சினோம். அவன் உறுதியாக மறுத்து நின்றான். இனி எங்கே செல்லுவது? மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்று கூறிய தந்தை வழி வந்த மக்களுக்குத் தங்க இடமேது என்று எண்ணிக்கொண்டு அந்தக் கொடுங்குளிரில் கார்க்கில் என்ற அவ்விடத்து வெண் புழுதி நிறைந்த தெரு ஓரமாக நாங்கள் இருவரும் ஓரிடத்தில் படுத்துக்கொண்டோம். வானம் கடுங்குளிர் பனியைக் கொட்டும்போது எங்கள் கண்களுக்கு தூக்கமேது? இருவரும் தூக்கமின்றி இரவைக் கழித்தபோதினும், எங்கள் உள்ளம் தேவ சமாதானத்தாலும், சந்தோசத்தாலும் நிறைந்தது. பரிசுத்தவான்களும், பக்தர்களும் அருமை இரட்சகர் இயேசுவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்திருக்கையில் இந்த நீசப்பாவத் தூசிகளாகிய எங்களுக்கு இந்த பரலோக பாக்கியமாவது கிடைத்ததே என்று எண்ணி மட்டற்ற ஆனந்தம் கொண்டோம். அகமகிழ்ந்தோம்.