பூட்டான் நாட்டில் நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் (பாகம் 4)
பூட்டானிய வாலிபன் “டாஷி” யைச் சந்திக்க வழிநடத்திச் சென்ற கன்மலை
பூட்டானின் தலைநகர்திம்புவிலும், சுற்றியுள்ள கிராமங்களில் சிலவற்றிலும் அன்பின் பரம தகப்பன் தனிப்பட்ட முறையில் ஆங்காங்கு அநேக பூட்டானியர்களை சந்தித்துத் தேவனின் மகிமையின் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்ளத்தக்கதான கிருபைகளை எனக்குத் தந்தார். இவ்விதமான சந்திப்புகளை எனக்குத் தந்தருளும் பொருட்டாக நான் நீண்ட மணி நேரம் அவரின் பரிசுத்த பாதங்களில் விழுந்து கிடப்பது எனக்கு மிகவும் அவசியமாகவிருந்தது.
அன்று ஒரு ஓய்வு நாள். அந்த நாளில் ஆண்டவர் மிகவும் ஆசீர்வாதமான ஊழியத்தை எனக்குத் தரும்படியாக உள்ளம் உருகி அந்த நாளின் விடிபகலில் நெடுநேரம் ஜெபித்திருந்தேன். திடீரென்று பரிசுத்த ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி செல்லும்படியாக என் உள்ளத்தில் பலமாக உணர்த்தவே எனது தோள் பையில் சுவிசேஷப் பிரதிகளை எடுத்துக்கொண்டு அவர் காண்பித்த திசையில் அக்காலை வேளை புறப்பட்டுச் சென்றேன். தூரத்தில் மைதானத்தில் காலைச்சூரியனின் ஒளியில் ஒரு பூட்டானிய வாலிபன் பூமியில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை ஆழ்ந்த சிந்தையோடு படிப்பதை நான் கவனித்தேன். அவனருகில் நான் சென்று அவன் படிக்கும் புத்தகத்தை நான் கவனித்தபோது அது ஒரு ஆங்கில புத்தகமாக இருந்தமையால் என் மனதிற்கு மிகவும் மனமகிழ்ச்சியாக விருந்தது. பூட்டானிய அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் (P.W.D) பணிபுரியும் அவன் தன் ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்ளும்படியாக அந்த ஆங்கில புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். பரத்தின் ஒத்தாசையுடன் நான் என் சம்பாஷணையை அவனுடன் தொடங்கினேன். ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்ளும் வழிமுறைகளை முதலில் நான் அவனுக்கு எடுத்துக்கூறிவிட்டுச் சுற்றி வளைத்து அவன் கவனத்தை இயேசு இரட்சகருடைய எல்லையற்ற அன்பின் பிரவாகத்துக்குள் கொண்டு வர முயற்சித்தேன். கிறிஸ்துவுக்குள்ளான எனது வார்த்தைகள் அவனுடைய இருதயத்திற்கு மிகவும் பரவசமாக இருந்தபடியால் என்னைத் தன்னுடன் வரும்படி எங்கேயோ அழைத்துக்கொண்டு சென்றான். நான் அவன் பின்னால் சென்று கொண்டிருந்தேன். பின்னர் நாங்கள் இருவரும் ஒரு மேல் மாடியில் ஏறினோம். அவன் தன்னுடைய அறைக்கு என்னைக் கூட்டிக்கொண்டு சென்றான். அங்கு புத்தருடைய சிறிய சிலையும் மற்றும் புத்தமார்க்க வழிபாட்டுப் பொருட்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். இயேசு இரட்சகரின் கல்வாரி அன்பையும், அவர் மனுக்குலத்திற்கு அருளியிருக்கும் இரட்சிப்பையும், மனுப்புத்திக்கு எட்டாத தேவ சமாதானத்தையும், அந்த அன்பின் நேச கர்த்தர் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைவேற்றியிருக்கும் இரட்சிப்பின் கிரியையும் நான் அவனுக்கு விவரித்துக்கூறினேன். தேவ தயவால், நான் கூறிய எந்த வார்த்தைகளுக்கும் அவன் மறுப்போ, வாக்குவாதமோ பண்ணாமல் மிகவும் பொறுமையோடு நீண்ட நேரம் அதனை ஆவலாகக் கேட்டான். இடைக்கிடையே தனது உள்ளத்தில் எழுந்த சந்தேகங்களை என்னிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டான். இயேசு இரட்சகரின்வாழ்க்கை, அவருடைய போதனைகள் குறித்த புத்தகங்களைத் தனக்கு அனுப்பித்தரும்படியாக விரும்பிக் கேட்டான். அவனுடைய விருப்பப்படியே நல்ல அருமையான கிறிஸ்தவ புத்தகங்கள் இங்கிருந்து அவனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நானும் அவனுக்கு ஆண்டவருடைய உவமைகள் மற்றும் இதர ஆங்கில கிறிஸ்தவ துண்டுப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்து வந்திருக்கின்றேன். இந்த தவனமுள்ள ஆத்துமாவின் பெயர் “டாஷி” என்பதாகும். இந்த ஆத்துமாவை தேவன் கட்டாயம் சந்தித்து தம்முடைய பிள்ளையாக மாற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில், அவர்தாமே என்னை அவனண்டை வழிநடத்திச் சென்றார்.
“டென்ஷின்” என்ற பூட்டானிய அரசு ஊழியருக்கு சுவிசேஷம் கொடுத்தது
கிழக்குப் பூட்டானின் டாஷியாங்பூ என்றவிடத்திலுள்ள அரசாங்க ஆட்டுப்பண்ணையில் உயர் அலுவலராகப் பணிபுரியும் டென்ஷின் என்ற பூட்டானிய வாலிபனுக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்படியானதொரு நல் வாய்ப்பை ஒரு இரவில் நான் பெற்றேன். புத்த மார்க்கத்தினனாகவிருந்தபோதினும் மிகவும் தாகத்தோடு சுவிசேஷத்தைக் கேட்டான். அந்த நாளில் ரஸ்தாவில் கொலையுண்டு கிடந்த பூட்டானிய மனிதன் ஒருவனின் கோரக்காட்சி தன் கண்களுக்கு முன்னர் சதா நிழலாடித் தன்னை வேதனைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவன் என்னிடம் சொன்னான். அவனுடைய முகமும் திகிலுற்றதாகக் காணப்பட்டது. நீண்டநேர சுவிசேஷ சம்பாஷணைக்குப் பின்னர் அவனது பயமெல்லாம் நீங்கி முகத்திலும் தெளிவு பெற்று மனமகிழ்ச்சியுடன் கடந்து சென்றான். நான் ஜெபத்துடன் அளித்த மிகவும் பயனுள்ள ஆங்கில பிரதிகளையும், சிறு புத்தகங்களையும் தாகத்தோடு அவன் எடுத்துச் சென்றிருக்கின்றான்.
பூட்டானின் தலைநகர் திம்புவைவிட்டு நான் நேப்பாளத்திற்கு புறப்பட்ட நாளின் முந்தின நாள் மாலை வேளையில் நான் சுவிசேஷத்துடன் சந்தித்தது பூட்டான் அரசு பொது நூலகத்தின் கண்காணிப்பாளரான ஒரு பூட்டானிய சகோதரியாவார்கள். நான் ஆங்கிலத் துண்டு பிரதிகளை அவர்களிடம் கொடுத்த போது அவர்கள் அவற்றை அன்பொழுகப் பெற்றுக்கொண்டதுடன், இந்தியாவின் டார்ஜிலிங் பட்டணத்தில் சிறுமியாகப்படித்துக்கொண்டிருந்தபோது இயேசு இரட்சகரைப்பற்றிப் படித்திருப்பதாகவும், அவரிடம் தனக்கு நிறையவே அன்புண்டு என்றும் கூறினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை அனுகூலமாக்கிக்கொண்டு ஆண்டவர் இயேசுவுக்குத் தன்னை முற்றுமாக ஒப்புக்கொடுத்து அவரைத் தன் சொந்த ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதன் அவசியத்தை நான் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறி கடந்து வந்தேன்.
“புனாக்கா” நோக்கிய பயணப்பாதையில்
கர்த்தாவின் அநாதி தீர்மானத்தின்படி நான் அடுத்தபடியாகச் சென்றதொரு இடம் “புனாக்கா” (PUNAKHA) என்பதாகும். திம்புவிலிருந்து ஏறத்தாழ 50 க்கும் அதிகமான மைல்கள் தொலைவில் இந்த இடம் இருக்கின்றது. புனாக்கா முன்பு பூட்டானின் தலைநகர் பட்டணமாக இருந்திருக்கின்றது. 4800 அடிகள் உயரத்தில் மாத்திரமே இந்தச் சிறிய இடம் அமைந்துள்ளது. பூட்டான் தேசத்தின் பிரதம லாமாவின் குளிர்கால வாசஸ்தலம் இவ்விடத்திலேயே உண்டு. இந்த புனாக்காவுக்கு நான் சென்றது தேவனுடைய கிருபை என்றேதான் சொல்ல வேண்டும். பூட்டான் தேசத்தில் நாம் நினைத்த இடங்களுக்கெல்லாம் சுற்றித்திரிய இயலாது. ஒரு நாளின் பிற்பகல் சுமார் 3 மணிக்கு அதிகமான ஜெபத்துடன் நான் இந்த இடத்திற்குப் புறப்பட்டேன். அங்கு செல்ல ஒரு லாரிதான் எனக்கு கிடைத்தது. பூட்டானிய மக்கள் நிரம்பிய லாரியில் நானும் ஒருவனாக அமர்ந்து கொண்டேன். அந்த ஏழை மக்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரயாணம் செய்வது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அவர்கள் சரீரங்களிலிருந்து எழும்பும் துர்க்கந்தம் நம்மை வாந்திபண்ணச் செய்துவிடும்.
திம்புவிலிருந்து எங்களை ஏற்றிக்கொண்டு லாரி வெகு விரைவாக எங்கேயோ ஒரு திசை வழியாக மலைகளின் மேலே ஓடிய வண்ணமாகவிருந்தது. பூட்டான் தேச அமைப்பிற்கேற்ற அடர்ந்த கானகங்களை லாரி கடந்து சென்று கொண்டிருந்தது. விந்தை விந்தையான மரங்கள், தாவரங்கள், அதிசயமான பறவைகள் இவைகளெல்லாம் நம் சிருஷ்டி கர்த்தாவை நான் என் இதயப்பூர்வமாகத் துதித்துப்போற்ற வகைசெய்து கொடுத்தது. ரஸ்தாவின் ஓரமாக “ரஸ்தா மூழ்கிக்கொண்டிருக்கின்றது” “பனிப்பாறைகள் சரிந்து வந்து கொண்டிருக்கின்றன” என்பது போன்ற எச்சரிப்பின் வாசகங்கள் அடங்கிய பலகைகளைக்கண்டதும் நம் உள்ளம் சற்று பதைத்துக்கொள்ளத்தான் செய்தது. சற்றுத் தவறினாலும் பயங்கர ஆபத்து நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடும். அப்படியான ஆபத்தான பாதை அது. பெரும் bரும் பனிப்பாறைகள் உயர்ந்த மலையிலிருந்து அப்படியே பாளம், பாளமாக சரிந்து வந்து ரஸ்தா ஓரமாக பெரிய முதலைகளைப் போலத் தலைகளை நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சில இடங்களில் உயரத்தில் உள்ள ஒருவித சொரி மணல் திட்டுகள் மேலேயுள்ள பெரிய மரங்களுடன் லாரி மேலேயே விழுந்து மூடிக்கொள்ளும் ஆபத்தான நிலையில் தொங்கு தோட்டத்தைப்போல ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. உலகில் மனிதன் ஒவ்வொரு வினாடியும் உயிர் பிழைத்திருப்பது கர்த்தாவின் சுத்தக் கிருபை என்பதை அவைகள் வாய்திறந்து சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.
ஏறத்தாழ ஒரு மணி நேர பயணத்திற்குப் பின்னர் லாரி மலையிலிருந்து கீழே சமதரையை நோக்கி இறங்கத்தொடங்கிற்று. ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கை அமைப்புகள் மாற்றமடைந்து சிருஷ்டிகரின் அற்புத கரத்தின் கிரியையை அறிவித்துக் கொண்டிருந்தது. அந்த அடர்ந்த கானகத்தில் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு வரவும் எங்கும் ஏகமாகத் திரள் திரளான புத்தமார்க்க ஜெப மந்திரக் கொடிகள் கட்டித் தொங்கவிட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அதையொட்டி ஒரு புத்தக் கோயில் இருந்தது. அந்த புத்தக் கோயிலை எங்களை ஏற்றிச்சென்ற லாரி சில தடவைகள் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. லாரிக்குள் இருந்தவர்கள் அக்கோயிலை வணங்கினர். பின்னர் லாரி தன் பாதையில் ஓடினது. இந்தக் கோயிலிலிருந்து இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் ஓட வேண்டியதாகவிருந்தது. திறந்த லாரியான படியால் லாரியில் பயணித்தவர்களை மேலும், கீழும் தூக்கித்தூக்கி அடித்துக்கொண்டு சென்றது. அதின் காரணமாக சிலர் வாகனத்துக்குள்ளேயே வாந்தி எடுத்தனர். மிகவும் கஷ்டமான வேதனையான சுவிசேஷ பிரயாண அனுபவம் அது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
ரஸ்தாவில் இடையிடையே சிற்சில வீடுகளைக்கொண்ட பூட்டானிய கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் புத்தமார்க்க ஜெபக்கொடிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. அருமை இரட்சகர் இயேசுவை, தங்கள் பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்த தங்கள் ஜீவிக்கின்ற கிறிஸ்து பெருமானைத் தங்கள் முழு வாழ்விலும் ஒரு தடவை கூட கேள்விப்பட்டிராத மக்கள் வாழும் கிராமங்கள் அவை. அம்மக்களின் வாழ்வுகள் நம்பிக்கையற்ற நிலையில் அப்படியே சமாதியாகிக் கிடக்கும் காட்சி நமது கண்களில் கண்ணீர்த்துளிகளை கொண்டு வரக்கூடியவைகளாக இருக்கின்றன. நம் தமிழ் நாட்டில் ஒரு சிறிய குக்கிராமத்தில் கூட ஒரு டஜன் கிறிஸ்தவ சபைப்பிரிவுகள் ஒருவருக்கொருவர் கீரியும் பாம்புமாகப் பகைமை உணர்வுடன் மிகவும் துடிதுடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கு வந்து சபையைத்தோற்றுவிப்பது யார்? சுவிசேஷ ஒளி தீபத்தை இந்த இருண்ட கிராமங்களில் ஏற்றிவைக்க முன் வருவோர் யார்? கர்த்தர் தாமே நமது ஆவிக்குரிய கண்களைத் திறந்து இந்த மக்களுக்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தை கொண்டு செல்லும் அத்தியந்த தேவையை நமக்கு கிருபையாக உணர்த்துவாராக.
புனாக்கா வந்து சேர்ந்தேன்
லாரி துரிதமாக மலையைச் சுற்றிச் சுற்றி அடிவாரத்தையே நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. சூரியன் அஸ்தமித்து மங்கலான ஒளி எங்கும் பரவியிருந்தது. கீழே அடிவாரத்தில் வெகு தொலைவில் ஓரிரு பூட்டானிய வீடுகள் – ஒரு வீட்டினருகில் சில கருமையான யாக் எருதுகள் கட்டப்பட்டுத் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இராக்காலப் புல்லைத் தின்று கொண்டிருப்பதை என் கண்கள் நோக்குகின்றன. “எருதுகளே, உங்களுக்கு தாபரிக்க நல்ல பத்திரமான இடம் கிடைத்துக்கொண்டது. ஆனால், இதோ நான் இன்று இரவு எந்த இடத்தில் இராத்தங்குவது என்ற ஒரு சிறிய நம்பிக்கையின்றித் துக்கத்தோடும், கலக்கத்தோடும் போய்க் கொண்டிருக்கின்றேன்” என்று என் உள்ளத்தில் கூறிக்கொண்டேன். இறுதியாக என்னை ஏற்றி வந்த லாரி மலையின் அடிவாரம் வந்து சேர்ந்து சமதரை வழியாக ஓடிற்று. திடீரென்று ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டது. அதின் பெயர் சாங்கோஷ் என்பதாகும். சாங்கோஷ் நதியின் மேல் கட்டப்பட்ட பாலத்தின் வழியாக லாரி சென்று இரவின் மங்கிய இருட்டில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேர ஓட்டத்திற்குப் பின்னர் தொலைவில் மலைச்சரிவில் மின் மினி பூச்சிகளைப்போன்ற விளக்கொளிகளும், ஆங்காங்கு பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் தெரிந்தன. ஆம், புனாக்கா வந்தாயிற்று. இன்றைய நாளின் இரவைக் கழிப்பது எங்கே? ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக நான் என் கண்களை மட்டற்ற மனபாரத்தோடு ஏறெடுத்து ஜெபத்துடன் லாரியிலிருந்து இறங்கினேன். அநேக நூற்றாண்டு காலங்களாக கண்ணும் கருத்துமாக கட்டிப் பாதுகாத்து ஒரு ஆத்துமாவைக்கூட தப்பவிடாமல் பல்லாயிரம் பூட்டானியர்களை நித்திய தீச்சூழைக்கு அத்தனை அருமையாக அனுப்பிக்கொண்டிருக்கும் சத்துருவாகிய பிசாசு இந்தியாவின் தென் கோடியிலிருந்து தன் கோட்டையைத் தாக்க வந்திருக்கும் என்னை ஊர் நாய்களுடன் சந்தித்து வரவேற்று அழைத்துச் செல்லக் காத்திருந்தான். லாரியிலிருந்து இறங்கியதும் ஊர் நாய்கள் எல்லாம் என்னைச்சுற்றி வளைந்து கொண்டு பலமாக குரைக்க ஆரம்பித்தன. சத்துருவின் செயல் என்று திட்டமாகக் கண்டு கொண்டு ஸ்தோதிரத்துடன் கடந்து சென்றேன்.
புனாக்காவில் இராத்தங்க இடம் அளித்த கருணைக் கடலாம் கர்த்தர்
லாரியிலிருந்து இறங்கியதும் அந்த லாரியை ஓட்டி வந்த வாலிபனிடம் புனாக்காவில் இராத்தங்க இடம் கிடைக்குமா? என்று கேட்டேன். அவன் என் வார்த்தைகளைக்கேட்டும் தன் வழியாக அவன் மட்டில் போய்விட்டான். என் கவலைக்கு அளவில்லை. ஆனால் என்ன ஆச்சரியம்! எனது வார்த்தைகளை மற்றொரு இரக்கமுள்ள வாலிபன் கவனித்துக் கேட்டு என்னண்டை வந்து “வாருங்கள், என் வீட்டில் படுக்க உங்களுக்கு இடம் தருகின்றேன்” என்று கூறி என்னை அழைத்துச் சென்றான். “நான் ஒரு புது வீடு கட்டிக்கொண்டிருக்கின்றேன். அதில் ஒரு அறையில் நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதில் வசதி எதுவும் இராது” என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு சென்று தன் புதிய வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் என்னை தங்க வைத்தான். மாத்திரமல்ல, மிகவும் பசியோடிருந்த எனக்கு ரொட்டியும், ஊறுகாயும் அந்த அன்புள்ள வாலிபன் கொடுத்தான். அவனுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பின் வந்தனத்தைத் தெரிவித்து அந்த அறையில் அன்றைய இரவைக் கழித்தேன். உயரமான மேல் மாடியானமையால் காற்று மிகவும் பலமாக அடித்தது. மெழுகுவர்த்தியைப் பற்றவைத்து வேதம் வாசிப்பது என்பது மகா கடினமாயிற்று. அந்த அறையின் கதவுகள், ஜன்னல்கள் எதுவும் பலகைகளால் அடைக்கப்படவில்லை. எல்லாம் ஏகமாகத் திறந்தேதான் கிடந்தன. அருமை ஆண்டவருக்கு நான் துதி செலுத்திவிட்டு அவரின் மார்பிலேயே சாய்ந்து படுத்துக்கொண்டேன். ஆ, எத்தனை அருமையான இளைப்பாறுதல் அது! இரட்சகர் இயேசுவுக்காக நாம் பாடுகளை அனுபவித்து ஊழியம் செய்வது என்பது எத்தனை களிகூருதலை நம் உள்ளத்திற்கு அளிக்கின்றது! அல்லேலூயா ஒரு சிசுவைப்போலத் தூங்கி அடுத்த நாள் விடியற்காலம் வழக்கம்போல எழுந்து ஜெபித்து வரப்போகும் புதிய நாளின் தேவப்பணிக்காக என்னைக் கர்த்தருக்குள் ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.
புனாக்காவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
நான் தங்கியிருந்த அந்தப் புனாக்கா என்ற இடம் என் உள்ளத்தைக் களிப்புறச்செய்யும் ஒரு அழகிய இடமாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் தாம்பிரவரணி ஆறு பாயும் ஆற்றங்கரையிலுள்ள கிராமங்களில் ஒன்றினைப்போல அது இருந்தது. நான் தங்கியிருந்த இடத்திற்குப்பக்கத்தில்தான் பாங்கா-சூ ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றிற்கு மறு புறத்தில் மிகப் பிரமாண்டமான புத்த மடாலயம் ஒன்றிருந்தது. இந்தச் செய்தியில் அந்த மடாலயத்தை நீங்கள் காணலாம். ஆற்றங்கரையின் ஓரத்தில் சில பெரிய ஆல மரங்கள் படர்ந்து விரிந்து நின்று கொண்டிருந்தன. ஆற்றங்கரை வழியாக சற்று தூரம் சென்று வெண்மையான ஆற்று மணலில் நான் முழங்காலூன்றி என் நெற்றி ஆற்று மணலில் படும்படியாக என்னைத் தாழ்த்திக் கண்ணீர் சிந்தி ஜெபித்தேன். நான் ஜெபித்த நேரம் அந்தப் புத்த மடாலயத்தின் மணிகள் ஏகோபித்த நிலையில் ஒலித்துக்கொண்டிருந்தன. “ஆண்டவரே, இந்தப் புனாக்காவில் உமது பரிசுத்த தேவாலயத்தின் மணி ஓசை ஒரு நாள் கேட்கச் செய்யும். உமது திருச்சபையை நீர் இங்கு ஸ்தாபித்து உமது உன்னத நாமத்தை இவ்விடத்தில் மகிமைப்படுத்தும்” என்று அழுதேன்.
புனாக்காவில் அருமை இரட்சகரின்அன்பை விரிவாகப் பகிர்ந்து கொண்டதான ஒரு ஆத்துமா யாரெனில் எனக்கு இராத்தங்க இடமளித்து, உணவளித்த பாரூப் டார்ஜி என்ற பூட்டானிய வாலிபன்தான். ஓரளவு நன்றாக ஆங்கிலம் தெரிந்த அவனுக்குத் தேவ அன்பை என்னால் நன்கு விளக்கிக் கூற முடிந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நல்ல பயனுள்ள சில ஆங்கில, தீபெத்திய மொழி கிறிஸ்தவ பிரசுரங்களையும், சிறு புத்தகங்களையும் ஜெபத்துடன் அவனுக்குக் கொடுத்தேன். நான் இந்தியா திரும்பியதும் போதுமான கிறிஸ்தவ புஸ்தகங்களை ஜெபத்துடன் அவனுக்கு அனுப்பி வைத்தேன். பாரூப் டார்ஜியுடன் நான் கடித தொடர்பும் கொண்டிருந்தேன். இந்த ஆத்துமாவை ஆண்டவர் கட்டாயம் சந்திப்பார் என்ற விசுவாசம் எனக்குண்டு.
ஆங்கிலம் கற்ற சில பூட்டானிய மக்களையும் நான் சந்தித்து சுவிசேஷ பிரதிகளை மிகவும் இரகசியமாக ஜெபத்துடன் கொடுத்தேன். பூட்டானிய குடியுரிமை பெற்றிருந்ததொரு நேப்பாளி வாலிபனை நான் இங்கு சந்தித்தேன். பூட்டானிய காடுகளுக்குச் சென்று அவற்றை சர்வே பண்ணும் அரசாங்க குழுவினரின் பொருட்களைத் தூக்கிக் கொண்டு செல்லும் பணியாள் அவன். தீபெத்திய மொழி கைப்பிரதி ஒன்றை நான் அவனுக்கு கொடுத்த போது தனக்கு நேப்பாளி மொழி மாத்திரமே தெரியுமென்றும் அதில் தனக்குப் புத்தகம் ஏதாகிலும் தரும்படியாகவும் கேட்டான். என் தோள் பையை நான் தேடினபோது ஒரே ஒரு நேப்பாள மொழி சுவிசேஷ பங்கிருந்தது. அப்புத்தகத்தை நான் அவனுக்கு அளித்த போது அவன் மிகவும் சந்தோசம் அடைந்தான். அதை வாங்கவும் அதைப் படித்துக்கொண்டே தன் குழுவினருடன் காட்டிற்கு மூட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டுச் சென்றுவிட்டான். அந்த தவனமுள்ள ஆத்துமாவுக்குத் தேவன் தம்மை கட்டாயம் அந்தச் சுவிசேஷ பங்கின் மூலம் வெளிப்படுத்துவார் என்ற நிச்சயமான நம்பிக்கை எனக்குள்ளது.
இந்தச் செய்தியின் படத்தில் காணும் புத்த மடாலயத்திற்குள் நான் சென்றிருந்தேன், பத்து வயதுக்கும் குறைவான சிறு பாலகனிலிருந்து குடு, குடு கிழப்பருவமுடைய வயோதிபர்கள் வரை இங்கு லாமாவுக்கான குருப் பயிற்சியைப் பெறுகின்றனர். மிகவும் சிறுவனான ஒரு லாமாவை நான் கண்டேன். தலையை மொட்டையடித்து சாக்லெட் நிற உடுப்பை உடுத்தியிருந்த அவனைக் கண்டதும் எனக்குப் பரிதாபமான உணர்வே உண்டானது. தனது அருமை மகவை ஜீவனற்றதோர் மார்க்கத்தினுக்கு மனப்பூர்வமாக கை அளித்து விட்ட அப்பாலகனின் தாயை அதிகமாக சிந்தித்துப் பார்த்தேன். நான் உள்ளே சென்றதும் சில மாணவ லாமாக்கள் என்னை அங்குள்ள சில பகுதிகளைக்கூட்டிச் சென்று காண்பித்தனர். ஓரிடத்திற்கு வரவும் அந்த மடாலயத்தை கண்காணிக்கும் பிரதான லாமா பட்டாடை உடுத்தி மிக உயரமான, நூதனமான வளைந்த செருப்புகளை கால்களில் அணிந்து பின்னிப்பிணைந்திருக்கும் நீண்ட வார்களைக் கொண்ட சவுக்கால் படார்………. படார்………. என்று பட்டாசு வெடித்தது போல ஆகாயத்தை அடித்துக் கொண்டிருந்தான். அவனது உருவமும், பார்வையும் மிகவும் குரூரமாகவிருந்தது. தங்கள் மதத்திற்காக எந்த பஞ்சமா பாதகத்தை வேண்டுமானாலும் இவர்கள் செய்யக்கூடியவர்கள். சாது சுந்தர்சிங்கை பாழ்ங் கிணற்றில் தள்ளியவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான். பிரதான லாமாவின் சவுக்கடி சத்தம் கேட்டதும் சின்னஞ்சிறு குட்டி லாமாக்கள் பயத்தால் ஓடி மறைந்து கொண்டிருந்தனர். நானும் துரிதமாக அங்கிருந்து நடந்து வெளியே வந்துவிட்டேன்.
எனது சுவிசேஷப் பிரச்சார நடபடிகளில் நான் அந்த லாமாக்களால் பிடிபட்டால் அந்த மடாலயத்திற்குள்ளிருக்கும் இருண்ட பாதாளச் சிறையிலேயே என்னை நிரந்தரமாக அடைத்து வைத்துவிடுவார்கள். அந்த மடாலயத்திற்கு முன்னால் ஒரு பெரிய அறிவிப்பு பலகையில் பூட்டானிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் எழுதியுள்ள அறிவிப்பை நான் வாசித்த போது மிகவும் கலக்கமுற்றேன். புத்த மார்க்க விதிகளை மீறுவோருக்கு அளிக்கப்படும் கடும் தண்டனையின் விபரம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு பலகையை நான் ஆரம்பத்தில் பார்த்திருந்தால் அந்த மடாலயத்திற்குள் நான் சென்றிருக்கவே மாட்டேன்.
தீபெத்தில் “டாஜிஹாங்” என்ற இடத்தில்தான் புத்த லாமாக்கள் சாதுசுந்தர்சிங்கை மரணக்கிணற்றில் தள்ளினார்கள். அந்த டாஜிஹாங்குக்குச் செல்லும் ரஸ்தா இந்த புனாக்கா என்ற இடத்தின் வழியாகத்தான் செல்லுகின்றது. நீங்கள் இந்திய தேசப்படத்தை எடுத்துப் பார்ப்பீர்களானால் தீபெத்தின் தலைநகர் லாசா என்ற இடம் பூட்டான் நாட்டுக்குச் சற்று மேலே இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
அந்த டாஜிஹாங் ரஸ்தா வழியாகக் கொஞ்ச தூரம் நடந்து சென்று பெயரையும், புகழையும், மக்களின் ஆரவாரத்தையும் கொஞ்சமும் விரும்பாமல் தன்னை முற்றுமாக உலகத்துக்கு மறைத்துத் தன்னை ஆட்கொண்ட தன் பரம நாயகனுக்காகத் தனிமையில் அகோரக்கஸ்திகள் அநேகம் அனுபவித்து அநத் அன்பரின் சேவையிலேயே தன்னை எரித்துச் சாம்பலாக்கிக்கொண்ட அந்த உத்தம தேவ பக்தனை அந்தவிடத்தில் மிகுந்த அன்புடன் நினைவுகூர்ந்து அந்த பக்தனின் பரிசுத்த பாதையிலேயே நானும் தேவ பெலத்தால் முன்செல்லுவதென்று கர்த்தருக்குள் என்னை அந்த இடத்தில் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டேன்.