பூட்டான் நாட்டில் நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் (பாகம் 3)
பூட்டானில் நிறைய கிறிஸ்தவ மக்கள் இருக்கின்றனர் போலும் என்ற ஒரு எண்ணம் உங்கள் மனதில் தானாக எழும்பக்கூடும். ஆனால் அது சரியான கணிப்பல்ல. முழு பூட்டானிலும் இருக்கக்கூடிய கிறிஸ்தவ மக்கள் மிக, மிக குறைந்ததொரு சிறிய எண்ணிக்கையாகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சுயாதீனமாக இந்தக் கிறிஸ்தவ மக்கள் தங்கள் ஆண்டவரைத் தொழுது கொள்ளுவதற்குக் கூடப் பூட்டானிய புத்த மார்க்க அரசாங்கம் கடும் தடை விதித்திருக்கின்றது. 1-7-1980 மற்றும் 5-8-1980 தேதியிட்ட பூட்டானிய அரசாங்க சுற்றறிக்கைகள் கீழ்க்கண்டவாறு உள்ளன:-
“பூட்டான் நாட்டுக்குள் சில மக்கள் ஜெபத்திற்காக கூடி வருவதனையும், தங்கள் மதங்களுக்காக கமிட்டிக் கூட்டங்கள் கூடுவதையும் அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. அரசாங்கத்திற்கு இது முற்றுமாக எதிரிடையானதொரு செயலாகும். பூட்டான் நாடு, புத்த மார்க்கத்தை தவிர்த்து வேறெந்த ஒரு மார்க்கத்தையும் தனது பிராந்தியத்திற்குள் ஒருபோதும் அனுமதியாது. யாராவது ஜெபிக்க விரும்பினால் அல்லது தனது மார்க்க சம்பந்தமாக எந்த ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினால் அதனைத் தனது வீட்டில் தன் குடும்பம் மட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அங்கும் கூட்டங்கூடுதல் அனுமதிக்கப்படமாட்டாது. பிரசங்கித்தல், மற்றும் கிறிஸ்தவம், இந்து. முஸ்லீம் மார்க்க சம்பந்தமான இலவச துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தல் கடுமையாக தடைசெய்யப்படுகின்றது. புத்த மார்க்கம் தவிர்த்து பிற மத சம்பந்தமான காரியங்களை திறந்த வெளிகளில் ஜன சமூகத்திற்கு முன்னர் அப்பியாசிப்பதும் கடுங்குற்றமாகும்.
மேற்கண்ட ஷரத்துக்களுக்கு எதிரிடையாக யாராகிலும் செயல்பட்டுக் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கம் எவ்வித கருணையும் காட்டாமல் புத்தமத விதி முறைகளின்படி சிறைவாசம், அபராதம், தண்டனை போன்றவற்றை அளிக்கும்”
தீமோத்தேயு: விரல்விட்டு எண்ணக்கூடிய பூட்டானியக் கிறிஸ்தவர்களில் தீமோத்தேயுவும் ஒருவன். 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் அவன் தனது 20 ஆம் பிறந்த தினத்தில் மாண்டு போனான். அவன் இரத்த சாட்சியாகவே மரித்திருப்பான் என்று கருதப்படுகின்றது. மரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அவன் எழுதிய வரிகள் இவை:-
“எனது வாழ்க்கையின் கப்பல் தலைவராம் என் ஆண்டவரையே என்னை நடத்தும்படியாகவும், எனது நடைகளை செவ்வைப்படுத்தும்படியாகவும் நான் மன்றாடுகின்றேன். பரத்திலிருந்து வரும் ஒத்தாசையைத் தவிர பிறிதொரு உதவியையும் நான் எதிர் நோக்கவில்லை”
தீமோத்தேயு தனது ஜனத்திற்காக மிகுதியும் ஜெபித்தவன். விசேஷமாக கர்த்தராகிய இயேசுவைக் குறித்து தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவை கூட கேள்விப்பட்டிராத பூட்டானியர்களுக்காக அவன் அதிகமாக ஆண்டவரிடம் மன்றாடியிருக்கின்றான்.
மற்றொரு பூட்டானிய கிறிஸ்தவ வாலிபனைக் குறித்து நான் கேள்விப்பட்டேன். கர்த்தருக்காகப் பலத்த சாட்சியாக விளங்கிய அவனை வைராக்கியமுள்ள புத்தமத லாமாக்கள் அப்படியே இருந்த இடம் தெரியாமல் ஒரே நாளில் தீர்த்துக்கட்டிவிட்டனராம். அந்த வாலிபனுக்கு என்ன ஆனது என்று இன்று வரை எவருக்குமே ஒன்றும் தெரியாதாம்.
பூட்டானிய கிறிஸ்தவ தேவ மக்களின் உருக்கமான மன்றாட்டு
பூட்டான் அப்படிப்பட்ட மதவைராக்கியமிக்க நாடு. பூட்டானின் தலைநகர் திம்புவிலுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் என்னிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்ட காரியம் இதுதான்:-
“இவ்விடத்திலே நாங்கள் சொற்ப கிறிஸ்தவர்களாக ஆண்டவரை மிகவும் இரகசியமாக கூடி ஆராதித்து வருகின்றோம். உங்களுடைய ஊழியம் எங்களை எவ்விதத்திலும் பாதித்துவிடாதபடி நீங்கள் மிகுந்த விவேகத்துடன் கிறிஸ்துவுக்குள் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பூட்டானின் கிராமப்புறங்களுக்குச் செல்லும் ஊழியம் மகா ஆபத்தானது. அநேகமாக போலீசார் உங்களை கைது செய்ய வாய்ப்புண்டு. அப்படி போலீசார் உங்களை கைது செய்து சிறைக்கூடத்தில் போட்டாலும், உங்களை அடித்துத் துன்புறுத்தினாலும் எங்களுடனான உங்கள் தொடர்பைக் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசி எங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது. இந்த நாட்டில் நீங்கள் நினைப்பது போன்று அத்தனை எளிதாக சுவிசேஷப் பணி செய்ய இயலாது. தலை நகர் திம்புவைவிட்டு நீங்கள் மற்றெந்தவிடங்களுக்கும் போக அனுமதிக்கப்படமாட்டீர்கள். எங்களுடைய நடமாட்டங்களையே அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. நாங்கள் ஒன்று கூடி ஆராதிப்பதையே அது தடை செய்திருக்கின்றது. மிகவும் இரகசியமாக நாங்கள் ஆண்டவரை ஆராதித்து வருகின்றோம். எந்த இடத்தில், எப்பொழுது நாங்கள் கர்த்தரை ஆராதிப்பதற்காக கூடுகின்றோம் என்பதெல்லாம் எங்களுக்குள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்படுகின்றது. ஏன் தெரியுமா? அரசாங்க அதிகாரிகள் எங்களுடைய கிறிஸ்தவ சிறு பிள்ளைகளைக்கூடத் தனித்து அணுகி எங்கள் நடபடிகள் குறித்துக் கேட்கின்றனர். ஆனபடியால் எந்தவிதமான அறிவிப்புகளையும் எங்கள் கூட்டங்களில் நாங்கள் ஒருபோதும் அறிவிப்பதில்லை.
உங்களுடைய தேவ ஊழியங்கள் எங்களுடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துகின்றன. நாங்கள் உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். ஆனால், நீங்கள் மாத்திரம் எங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் எவ்வித உபத்திரவமும் உண்டாகிவிடாத நிலையில் மிகவும் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
திம்புவிலுள்ள தேவ மக்களின் இவ்வித வார்த்தைகள் என்னை மிகவும் சோர்படையப் பண்ணியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலை என் உள்ளத்தை அதிகமாகத் தாக்கிற்று. பூட்டானுக்குள் நுழைந்த நாம் அதில் ஊழியம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று என் உள்ளம் அங்கலாய்த்தது. நேராக எனது விடுதிக்கு வந்து நீண்ட நேரம் ஆண்டவரின் பாதங்களில் போதுமான தைரியத்திற்காகவும், தேவ சமாதானத்திற்காகவும், அவருடைய வழிநடத்துதல்களுக்காகவும் ஊக்கமாக மன்றாடினேன். இறுதியாக என் உள்ளம் கர்த்தருடைய சமாதானத்தால் நிரம்பியது. என்ன வந்தாலும் பரவாயில்லை பூட்டானின் தொலை தூரமான இடங்களுக்கு சென்று கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய வேண்டுமென்ற திட்டமான தீர்மானத்தை எடுத்துக்கொண்டேன். “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்” (சங் 29 : 11) என்ற தேவ வாக்கின்படி தேவ பெலன் பெற்றுக் கொண்டேன். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
பூட்டானின் “பாரூ” கிராமம் நோக்கிய பயணப் பாதையில்
ஆண்டவருடைய மகிமையின் சுவிசேஷத்தை எடுத்துக் கொண்டு பூட்டானில் பாரூ (PARO) என்ற இடத்திற்குச் செல்லத் தீர்மானித்தேன். ஆண்டவருடைய சமூகத்தில் அதிகமதிகமாக மன்றாடிவிட்டு அந்தவிடத்திற்குப் புறப்பட்டேன். அந்த இடத்திற்குச் செல்லும்படியாக தேவனால் நான் திட்டமாக வழிநடத்தப்பட்டேன். தலை நகர் திம்புவிலிருந்து எத்தனை மைல்கள் தூரத்தில் பாரூ இருக்கின்றது என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் சுமார் 3 மணி நேர பேருந்து ஓட்டத்தில் அந்த இடம் இருக்கின்றது. ஒரு நாள் மாலை சுமார் 3 மணிக்குப் பூட்டானின் சிறிய டப்பா பேருந்தில் பாரூ செல்லுவதற்காக ஜெபத்துடன் நான் ஏறினேன். பூட்டானிய மக்கள் தங்கள் அழுக்கடைந்த மூட்டை முடிச்சுகள், குழந்தைகளுடன் பேருந்தை நிரப்பியிருந்தனர். பாவம் ஏழை மக்கள் குளித்து எத்தனை மாதங்கள் கடந்திருக்குமோ நமக்குத் தெரியாது! அவர்களின் உடல்களிலிருந்து எழும்பும் துர்நாற்றம் நமக்கு மிகவும் சிரமமாக விருக்கின்றது. அவர்களின் வஸ்திரங்கள் அழுக்குகளால் அடைபற்றிக் காணப்படுகின்றது. பேருந்து முழுமையையும் ஒரு காலியிடம்கூட விடாமல் மூட்டைகளை அடுக்குவது போல மக்களை அடுக்கியதன் பின்னர் பேருந்து புறப்பட்டது. நல்ல வேளை, நான் என் தலையை வெளியே வைத்துச் சுத்தமான ஆகாயத்தை சுவாசிப்பதற்கு வசதியாகப் பேருந்தின் ஓரத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்திருந்தது. இந்த ஏழை பூட்டானிய மக்கள் தங்களை ஒரு அன்புள்ள இரட்சகர் நேசிக்கிறார் என்பதனையும், அவர் தங்களுக்காகத் தம்மையே சிலுவையில் தியாக பலியாக ஒப்புவித்தார் என்பதனையும் அறியாத மக்கள். கர்த்தருடைய வேத எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பற்ற மக்கள். இந்த சோகமான நிலையிலேயே மரிக்கப்போகும் மக்கள். இதைச் சிந்திக்க சிந்திக்க நான் உள்ளம் உருகினேன்.
பேருந்து பூட்டானின் ஏதோ ஒரு பகுதி வழியாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதிகமான தாவரங்களும், மரங்களும் இல்லாத உயர்ந்த மலைகள் வானளாவ எழுந்து நிற்கின்றன. திம்புவில் ஓடும் வாங்-சூ நதியின் கிளை நதி “பா-சூ” சல சலவென்று ஒலி எழுப்பியவாறு கீழே ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆண்டவரின் சிருஷ்டிப்பின் மாட்சிமையானது நாட்டிற்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபட்டு அழகுடன் விளங்குவதைக் கண்டு ஆண்டவரை ஸ்தோத்தரித்தேன். சில பூட்டானிய கிராமங்களை பேருந்து கடந்து சென்று கொண்டிருந்தது. திடீரென்று முன்னாலுள்ள ரஸ்தாவை நோக்கினேன். நதியின் ஓரமாக சில பூட்டானிய வீடுகள் இருந்தன. அங்கே சில போலீசார் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களைக் கண்டதும் என் இருதயம் விரைந்து துடித்தது. அவர்களின் கரங்களில் நான் விழுந்துவிடாதபடிக் காத்துக் கொள்ளும்படியாக கர்த்தரை நோக்கி என் உள்ளத்தில் ஜெபித்தேன். பேருந்து அவர்களின் அருகில் வரவும் போலீஸ் ஒருவர் தனது கையைக் காட்டி பேருந்தை நிறுத்தினார். பேருந்து நின்றதும் அந்த போலீஸ்காரர் பேருந்தின் பின்பக்கத்தில் ஏறிப் பயணிகள் அனைவரையும் அப்படியே ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவிட்டார். அப்பப்பா, காரியம் முடிந்தது என்று நான் பெருமூச்சு விட்டேன். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அதே போலீஸ்காரர் பேருந்தின் முன்பாக டிரைவர் அமரும் ஆசனத்தின் வழியாக ஏறி மீண்டும் பயணிகளை அப்படியே ஒவ்வொருவராகப் பார்வையிட்டார்.
என்னைக் கண்டதும் கை அசைத்துக் கீழே இறங்கி வா என்று கூறினார். அந்த முழு பேருந்திலும் நான் ஒருவன் மாத்திரமே போலீசாரின் கரங்களில் விழுந்தேன். என் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. பேருந்திலுள்ள பையில் தேவனுடைய துண்டுப் பிரசுரங்கள் எல்லாம் இருக்கின்றன. பையைச் சோதனை போட்டுவிட்டால் நான் கைது செய்யப்படுவேன். இந்த இக்கட்டான நேரத்தில் ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கிப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாதவனானேன். போலீஸ்காரர் என்னை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு போலீஸ் அதிகாரியின் முன்னர் நான் நிறுத்தப்பட்டேன். அவர் என்னை கீழும் மேலும் ஏற இறங்க நன்றாகப் பார்த்தார். நான் எந்த நாட்டைச் சேர்ந்தவன், எங்கே போகின்றேன் என்ற விபரம் எல்லாம் என்னிடம் கேட்டார். நான் பாரூ போகின்றேன் என்றதும், அங்கு போக வேண்டிய அவசியமில்லையே, அவ்விடத்தில் பார்க்க ஒன்றுமே இல்லையே என்று அவர் என்னிடம் கூறினார். பாரூவில் ஒரு மியூசியம் இருப்பதாக ஏற்கெனவே நான் கேள்விப்பட்டிருந்தபடியால் அங்குள்ள மியூசியத்தைக் காணச் செல்லுகின்றேன் என்று நான் அவரிடம் சொன்னேன். இவ்விதமான எனது பதிலும் அவருடைய உள்ளத்திற்கு திருப்திகரமானதாக தெரியவில்லை. பாஸ்போர்ட் இருக்கின்றதா என்று என்னிடம் கேட்டார். பாஸ்போர்ட்டைக் கொடுத்ததும் அதிலுள்ள விபரங்களையெல்லாம் விபரமாக எழுதிக்கொண்டார். அதன் பின்னர் அவர் என்னை பாரூ செல்ல அனுமதித்தார். அவர் எனது பையை தெய்வாதீனமாகப் பார்க்கவில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நான் வரும் வரை பேருந்து நின்று கொண்டிருந்தது. மீண்டும் பிரயாணம் ஆரம்பமாயிற்று. உயரமான மலைகளில் மலையைக் குடைந்து புத்த மடாலயங்கள் கட்டப்பட்டிருப்பதைக் கண்ணுற்றேன். பூர்வ கிரேக்க நாட்டில் தேவதைகளின் கோயில்களைப்போல் அவைகளிருக்கின்றன. கொஞ்ச நேர ஓட்டத்திற்குப் பின்னர் ஒரு செழிப்பான பள்ளத்தாக்கு வந்தது. முதலில் குறிப்பிட்ட பா-சூ நதிதான் இந்தப் பள்ளத்தாக்கை செழிப்படையச் செய்து கொண்டிருந்தது. பள்ளத்தாக்கில் பசுமையான கோதுமை வயல்களும் இதர காய்கனி தோட்டங்களுமிருந்தன. ஆங்காங்கு தீபெத்திய பாணியில் கட்டப்பட்ட பூட்டானிய வீடுகளுமிருந்தன. பேருந்து இந்தப் பள்ளத்தாக்கை ஊடுருவி சில மைல்கள் தூரம் ஓடிக்கொண்டிருந்தது. சூரியன் மேல் வானத்தில் தன் செங்கதிர்களை வீசி மறைந்து கொண்டிருந்தது. இனத்தையும், ஜனத்தையும், நாட்டையும் நலனையும் விட்டுப் புறப்பட்டுச் சென்ற நம் முற்பிதாவாகிய ஆபிரகாமைப்போல் அடுத்து எங்கு சென்று இராத்தங்குவது என்ற நிச்சயம் கூட இல்லாதவனாக மனுஷீகத்தில் கலக்கத்துடன் சென்று கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் உயர்ந்த மலையில் ஒரு பிரமாண்டமான புத்த மடாலயம் தெரிந்தது. பூட்டானில் இவ்விதமான மடாலயத்தை ஜோங் (DZONG) என்றழைக்கின்றனர். இந்தச் செய்தியில் நீங்கள் அந்த ஜோங்கைக் காணலாம். ரஸ்தாவின் இருமருங்கிலும் பெரிய பெரிய வில்லோ மரங்கள் கெம்பீரமாக நின்று கொண்டிருந்தன. அவற்றைக் கடந்ததும் ஒரு சிறிய கிராமம். அதின் மத்தியில் ஒரு புத்தமதக் கோயில், வீடுகள் எல்லாம் வரிசையாக அமைந்திருந்தன. வீடுகள் கரடு முரடான கற்களால் கட்டப்பட்டிருந்தன. வீட்டின் கூரையில் தகரத்தைப் போட்டு பாளம் பாளமான கற்களை (SLATE STONES) பரப்பியிருந்தனர்.
பூட்டானிய கிராமம் “பாரூ”வில் செலவிடப்பட்ட மறக்க முடியாத ஓர் இராக்காலம்
மேற்கண்டவிடம்தான் பாரூ. ஆம், பாரூ வந்தாயிற்று, பொழுதும் அஸ்தமித்தாயிற்று. கடுங்குளிரோ இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கின்றது. இரவில் எங்கு போய் இராத்தங்குவது? வானத்தை அண்ணாந்து பார்த்துப் பரத்தில் வீற்றிருப்பவரை நோக்கி அபயத்துக்காக கெஞ்சிவிட்டு ஒரு வீட்டை அணுகினேன். ஒரு இரா மாத்திரம் தங்க இடத்திற்காக அந்த வீட்டுக்கார மனிதனை உள்ளமுருகிக் கேட்டேன். நான் கேட்டதும் சற்று நேரம் யோசித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார். மிகுந்த மனமகிழ்ச்சியுடன் எனது பெரிய தோள் பையை அந்த வீட்டிற்குள் வைத்து அமர்ந்தேன். அந்த மனிதனுக்கு இரண்டு மனைவிகள். தான் அதிகமாக நேசிக்கின்ற மனைவி ஒருத்தியிடம் என்னை அந்த இரவு தங்க அனுமதித்த காரியத்தைக் கூறியிருக்கின்றான். சற்று நேரத்தில் அவள் தன் புருஷனுடன் என்னண்டை வந்து என்னை நன்கு பார்த்தாள். அவ்வளவுதான், பூட்டானிய மொழியில் முகம் சிவக்க, சிவக்க ஏதேதோ அவள் தன் புருஷனிடம் கூறினாள். உடனே அவள் கணவன் துக்கம் தோய்ந்தவனாக இங்கே நீங்கள் இராத்தங்க வசதியில்லை, வேறு எங்காவது போய்விடுங்கள் என்றான். உடனே நான் வீட்டைவிட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன். குளிரோ நடுக்குகின்றது. இந்த இக்கட்டான நிலையில் துக்கத்தின் காரணமாக சத்தமிட்டு அழுதுவிடலாம் போலிருந்தது. ஆனால், என்ன ஆச்சரியம், என் உள்ளத்தில் கர்த்தருடைய சமாதானம் ததும்பிக்கொண்டிருந்தது. அப்பொழுது நான் அந்த வீட்டுக்கார மனிதனிடம் சற்று அப்பால் தெரிகிற புத்தக் கோயிலில் நான் படுத்துக் கொள்ளும்படியாக இடம் பெற்றுத் தரும்படியாகக் கேட்டேன். இரக்கமுள்ள அந்த மனிதன் புத்தமதக்கோயிலின் கண்காணிப்பாளரான ஒரு பாட்டியிடம் என்னைக் கூட்டிச் சென்று அவளிடம் அனுமதி கேட்டான். அவளும் மறுத்துவிட்டாள். மற்றொரு வீட்டிற்குக் கூட்டிச் சென்று அங்கும் விசாரித்தான். அங்கும் இடம் மறுக்கப்பட்டது. இவற்றிற்குப் பின்னர் அந்த மனிதன் வீட்டிற்குப் போய்விட்டான். நான் சற்று நேரம் அவனது வீட்டிற்கு வெளியே நின்று குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன். என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. கிராமத்தின் வீடுகள் வெளி வராந்தா வைத்துக் கட்டப்பட்டிருந்தாலாவது வெளித் திண்ணையில் படுத்துக் கொள்ளலாம். தேவ ஊழியத்தின் போது அப்படி நேப்பாள கிராம வீட்டின் திண்ணையில் நான் படுத்திருந்ததும் உண்டு. ஆனால், பூட்டானிய வீடுகள் இதற்கு முற்றும் விதி விலக்காகவிருந்தது.
இந்தச் சமயம் சற்று தூரத்தில் ஒரு வெறுமையான தகரக் கொட்டகை தெரிந்தது. அங்கு நான் சென்று பார்த்தேன். அங்கு ஊர் நாய்கள் பல குளிருக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்து படுத்திருந்தன. அந்த இடத்தில் இரவில் இராத்தங்க திட்டமிட்டேன். நாய்களைத் துரத்தினேன். அவைகள் எழுந்து ஓடின. அவைகளில் ஒரு நாய் எழுந்து ஓடி சோகமாக வானத்தை அண்ணாந்து பார்த்துத் துயரமாக ஊளையிட்டது. ஐயோ, நாங்கள் குளிருக்கு அஞ்சி அனலுக்காகப் படுத்திருந்த இடத்தை நீ வந்து அபகரித்துக் கொண்டாயே, நாங்கள் எங்கு செல்லுவோம் என்று கூறி ஒப்பாரி வைத்து அழுவதைப் போன்று அதின் ஊளைச்சத்தம் எனக்கு கேட்டமையால் என் உள்ளத்தில் நான் மிகவும் துயருற்றேன். அந்தக் கொட்டகையானது மேலேயிருந்து வரும் பனியை மட்டும் தடுக்குமே தவிர நாற்புறமும் அது முற்றும் அடைப்பு எதுவும் இல்லாமல் சுடுகாட்டில் பிணங்கள் எரிக்கும் கொட்டகை போலிருந்தது. அந்த வேளை நமது நேச கர்த்தரின் மானுடவதார அன்புதான் என் உள்ளத்தை நிரப்பி நின்றது. என்னைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் பொருட்டாக மட்டற்ற அன்புடன் சுத்தமற்றதும், அழுக்கடைந்ததும், ஈக்கள், கொசுக்கள் மொய்க்கின்றதுமான மாட்டுத் தொழுவத்தைத் தெரிந்துகொண்ட அன்புக் கண்மணிக்காக ஒரு இராக்காலத்தை அவ்விடத்தில் களிக்க மட்டற்ற ஆனந்தத்துடன் தீர்மானித்துத் திட்டம்பண்ணிக் கொண்டேன். பாரூ என்ற அந்த பூட்டானிய கிராமம் 7500 அடிகள் உயரத்தில் அமைந்திருந்தது. இமயமலைகளில் சுமார் 10000 அடிகள் உயரமான பத்திரி நாராயணன் என்ற இடத்தில் கூடக் கர்த்தாவின் மகிமையின் சுவிசேஷத்தின் பொருட்டு நான் இராத்தங்கியிருக்கின்றேன். அந்த இடத்தில்கூட இந்தக் கொடுங்குளிர் கிடையாது. அத்தனையான கடுங்குளிர் பாரூவிலே வீசிக் கொண்டிருந்தது. ஆண்டவருக்காக இந்த அற்பமான பாடுகளையாவது அனுபவிக்கும் பரிசுத்த பாக்கியம் கிடைத்ததே என்று எண்ணி ஆனந்தித்தேன்.
நான் என் உள்ளத்திற்குள் ஆண்டவரை ஸ்தோத்திரித்துக் கொண்டே அந்த வீட்டிற்குள் சென்று நான் வைத்த எனது பையை எடுத்துக்கொண்டு வெளியேயுள்ள தகரக் கொட்டகைக்குச் செல்லப் புறப்பட்டேன். என்ன ஆச்சரியம், முதலில் நான் தங்கியிருக்க இடம் தர மறுத்த அந்த வீட்டின் பெண் தனது கணவனுடன் ஓடோடி வந்து என்னைத் தடுத்து நிறுத்தி “நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். இங்கே எங்கள் வீட்டிலேயே படுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டனர். அருமை இரட்சகர் ஒருவரே அவர்களின் கடின உள்ளத்தில் பேசிக்கிரியை நடத்தியிருக்கின்றார் என்பதை நான் திட்டமாகக் கண்டு கொண்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
எனக்குத் தங்க இடமளித்த அந்த அன்பான பூட்டானிய தம்பதியினருக்கு நான் என் அன்பின் நன்றியைத் தெரிவித்துவிட்டு ஆண்டவருடைய பரிசுத்த வேதாகமத்தை வாசித்த பின்னர் அவர்களின் கண்களுக்கு முன்னரே நெடும் முழங்காலூன்றி கரம் குவித்து ஜெபித்துவிட்டுப் படுத்துக் கொண்டேன். நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அந்தப் பூட்டானிய குடும்பத்தினர் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தனர். நான் முழங்காலூன்றி இரு கரம் குவித்து ஜெபித்த நிகழ்ச்சி அவர்கள் உள்ளத்தை நன்கு தொட்டிருக்குமென நான் நினைக்கின்றேன். அதின் காரணமாக சற்று நேரத்தில் அவ்வீட்டு மனிதர் கீழே மண் தரையில் நான் விரித்துப் படுத்துக்கொள்ளும் படியாக ஒரு கனமான கம்பளியைக் கொண்டு வந்து எனக்கு தந்தார்.
நான் படுத்திருந்த இடத்திற்கு நேராக மேலாக கூரையில் ஒரு பெரிய மாட்டுத் தொடைக்கறி தொங்கிக் கொண்டிருந்தது. எத்தனை நாளுக்கு முன்னர் வெட்டிய கறியோ நாமறிவோம். ஆனால், அதின் நாற்ற வாடை பலமாக அடித்தது.
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்த ஏழைப்பாவியாகிய என்னை என் நேச கண்மணி இப்படி இந்த ஏகாந்தமான இமாலய புத்தமத நாட்டிற்கு அழைத்து வந்து எங்கேயோ உள்ள தனித்ததொரு பூட்டானிய கிராமத்தில் தமது மகிமையின் சுவிசேஷத்தின் பொருட்டு இராத் தங்கப்பண்ணியிருப்பதை எண்ணி, எண்ணி என் உள்ளம் பூரித்து மகிழ்ந்தேன். தமிழ் நாட்டின் தம்முடைய பெரும் பக்த சிரோன்மணிகளுக்கெல்லாம் கூட இந்தப் பரம பாக்கியத்தை அன்பின் நேசர் விலக்கி இந்த அற்ப குப்பைமேட்டுக் கழுதைக்கு கொடுக்கச் சித்தம் கொண்டாரே என்று எண்ணியதும் என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.
அந்த பூட்டானிய வீட்டிற்குள் நான் படுத்திருந்தபோதினும் இரவு முழுவதும் ஒரு கண்ணுக்கும் தூக்கமின்றிக் கடுங்குளிரில் நடுநடுங்கிக்கொண்டுதான் இருந்தேன். அதிகாலையே வழக்கம் போல எழுந்து ஜெப தியானங்களை முடித்துவிட்டுக் கதவைத்திறந்து வெளியே பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப இயலவில்லை. தெரு முழுவதும் வெண் பனி மூடியிருந்தது. தூரத்திலிருந்த மலைகளெல்லாம் இரவோடிரவாக வெள்ளிப் பனி மலைகளாகி விட்டன. இரா முழுவதும் கொடும் உறை பனி மழைபோலக் கொட்டியிருந்தது. ஒரு வேளை நான் முதலில் குறிப்பிட்ட தகரக் கொட்டகையில் வெளியே படுத்திருந்தால் தாங்கொண்ணாக் கடுங் குளிரில் விறைத்து மடிந்திருப்பேன். ஆனால் இரக்கமுள்ள அன்பின் தேவன் அவ்விதமான கொடிய காரியம் எதுவும் நிகழாது என்னைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டார். அவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக.
இரவோடிரவாக அந்தப் பூட்டானிய மனிதனும் அவரது இரண்டு மனைவிகளும், பிள்ளைகளும் என்னோடு மிகவும் அன்புடன் பழகிக்கொண்டனர். பின்னர் நான் அவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினனாகிவிட்டேன். அவர்களின் வெதுவெதுப்பான சமையலறைக்குள்ளேயே என்னை அன்புடன் அனுமதித்து உணவெல்லாம் தந்தார்கள். வீட்டில் கண்ட இடத்திலும் எச்சில் துப்பும் அருவருப்பான பழக்கமுடைய அந்த அன்புள்ள மக்களின் ஆகாரத்தை மிகவும் கஷ்டத்துடனேயே புசிக்க வேண்டியதானது.
பாரூவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
அந்த பாரூ கிராமத்தில் ஆண்டவர் எனக்கு நல்ல ஊழியங்களைத் தந்தார். உயரமான மலை உச்சிப் பகுதிகளுக்கெல்லாம் ஏறிச்சென்று தீபெத், நேப்பாளி மற்றும் ஆங்கில மொழி கைப்பிரதிகளை மிகுந்த ஜெபத்தோடு விநியோகிக்கும் பரிசுத்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பூட்டானிய வீடுகள் மலைகளிலே எப்படி அமைந்திருக்கும் என்பதை இச்செய்தியிலுள்ள படத்தில் நீங்கள் காணலாம். ஒரு வீட்டை நோக்கி நான் இவ்விடத்தில் சென்று கொண்டிருந்தபோது சிங்கங்களைப்போல அத்தனை பெரிய இரண்டு சடை நாய்கள் உறுமிக்கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தன. உடனே அந்த வீட்டின் மக்கள் துரிதமாக வீட்டினுள்ளிருந்து வெளியே வந்து நாய்களைக்கூப்பிட்டு தடுத்துவிட்டனர். தவறியிருக்கும் பட்சத்தில் அவைகள் என்னைக் கடித்துக் குதறியிருக்கும். தேவனின் அடைக்கலப்பாதுகாவல் வினாடிதோறும் மனுமக்களாகிய நமக்கு எத்தனையாக தேவைப்படுகின்றது!
இந்தப் பாரூவிலுள்ள பெரிய புத்த மடாலயத்திற்குள்(ஜோங்) (DZONG) சென்று அங்குள்ள புத்த லாமாக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகிக்க எண்ணிக்கொண்டு ஒரு நாள் ஜெபத்துடன் புறப்பட்டேன். மலையிலுள்ள பெரிய வில்லோ மரங்களுக்கு ஊடாக நடந்து, நடந்து நல்ல உயரத்திற்கு ஏறினேன். இடையே ஒரு விசாலமான நதி இரைச்சல் போட்டு வெண் நுரையை வெளியிட்டுக்கொண்டு விரைந்து ஓடிக்கொண்டிருந்தது. இது நான் முன்னர் குறிப்பிட்ட “பா-சூ” நதிதான். இந்த நதியின் குறுக்காகப் பூர்வீக சீனர்களின் பாணியில் ஒரு அழகிய தொங்கு பாலம் ஒரு நீண்ட வீட்டைப்போலவே அழகாக கட்டப்பட்டிருந்தது. பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் அது கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த அழகான தொங்கு பாலத்தையும், புத்த மடாலயத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
இறுதியாக நான் அந்த புத்த மடாலயத்திற்கு வந்து சேர்ந்தேன். மேற்கு தீபெத்திலுள்ள “லடாக்” என்ற பட்டணத்தில் நான் கண்ட புத்த மடாலயத்தை விட இது மிகவும் உயரமானதாயும், தீபெத்திய கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஒன்றாகவுமிருக்கின்றது. நூற்றுக்கணக்கான புறாக்கள் சிறகடித்துக்கொண்டு இந்த மடத்திலிருந்து ஏக காலத்தில் பறந்து செல்லுவதும், அவை பறக்கவும், நூற்றுக்கணக்கான புறாக்கள் அக்கட்டிடத்தில் வந்து இறங்குவதும் பார்க்க அழகாகவிருந்தது. காகத்தைப்போல கரிய நிறத்தை யுடையதும், ஒருவிதம நுதனமான ஒலி எழுப்பக்கூடிய சிவந்த அலகுடைய பறவைகளும் புறாக்களைப்போலவே இந்த மடாலயத்தின் பொந்துகளுக்குள் தங்கியிருப்பதைப் பார்த்தேன். மாட்டு வண்டிச் சக்கரங்களைப்போலத் தேன் கூடுகளும் மடத்தின் கூரையில் தொங்கிக் கொண்டிருந்தன. தேவனின் சிருஷ்டிப்பின் மாட்சியை யார்தான் அளவிடல் இயலும்! அந்த மடாலயத்தின் பிரதான வாயிலுக்கு முன்னரே பூட்டானிய போலீசார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும் நான்அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். எனினும், என் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தைரியமாக மடாலயத்தினுள் நுழைந்தேன். அதின் சுவர்களில் அழகிய வண்ண, வண்ணக் கலவைகளால்பற்பலவிதமான புத்த மார்க்கப் படங்கள் வரைந்திருந்தன. அந்த மடாலயம் லாமாக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பெரும் கலாசாலை என்றே நான் எண்ணுகின்றேன். ஏராளமான லாமாக்கள் அங்கு தங்கியிருந்து கல்வி பயிலுகின்றனர். உயரமான பல மாடிகளைக்கொண்ட அந்தச் சதுரக்கட்டிடத்தில் லாமாக்களும், பூட்டானிய போலீசாரும் இணைந்து இருக்கின்றனர். அவ்விடத்தில் அந்தச் சூழ்நிலையில் நான் எவ்வித ஊழியமும் செய்ய இயலவில்லை. அவர்கள் அனைவரின் கண்களும் ஏக காலத்தில் என்னையே உற்று நோக்கின. ஒளியற்று, இருளடர்ந்து, நாற்றம் வீசும் அவ்விடத்தை பேய்களும், பூதங்களும், கூழிகளும் ஆக்கிரமித்து வைத்திருந்தன.
மிகவும் துயரத்தோடு நான் அங்கிருந்து புறப்பட்டு மலை உச்சிக்கு ஏறிச்சென்றேன். அங்கு ஒரு மியூசியம் இருந்தது. நான் அங்கு சென்ற நேரத்தில் அது அடைபட்டுவிட்டபோதினும் என்னிமித்தமாக அங்கிருந்த பூட்டானிய அலுவலர்கள் அதைத் திறந்து எனக்குக் காண்பித்தனர். பூட்டான் நாட்டின் அரும் பொருட்கள் எல்லாம் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நான் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது. நான் அங்கு சென்றிருப்பதன் ஒரே இதயக் கதறலின் நோக்கம் நீங்கள் கர்த்தருக்குள் நன்கு அறிந்தபடி, என் அருமை இயேசு இரட்சகரை அங்குள்ள மக்களுக்கு அளிக்கத்தானே! ஓரளவு ஆங்கிலம் தெரிந்த மூன்று மேற்பார்வையாளர்கள் அவ்விடத்திலிருந்தனர். பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு நான் என் வாழ்வில் இரட்சகர் இயேசுவில் கண்டடைந்த பரலோக சந்தோசத்தையும், சமாதானத்தையும் அந்த அருமை மக்களுடன் பகிர்ந்து கொண்டு அழகான ஆங்கில கிறிஸ்தவ சிறு புத்தகங்களையும், துண்டுப் பிரதிகளையும் ஜெபத்துடன் அவர்களுக்குக் கொடுத்தேன். அந்த அன்புள்ள மக்கள் அதைக் கண்டு அதிக மகிழ்ச்சியடைந்தனர். நான் சென்று ஊழியம் செய்து வந்த பூட்டானின் மியூசியத்தை நீங்கள் படத்தில் காணலாம்.
அங்கிருந்து நான் கீழிறங்கி வந்தபோது ஒரு விருத்தாப்பிய வயதினளான பாட்டி எண்ணெய்ச் செக்கு போன்றதொரு பெரிய புத்த ஜெபச்சக்கரத்தை (PRAYER WHEEL) பெருங் கஷ்டத்துடன் தள்ளாடித் தள்ளாடிச் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு என் உள்ளத்தில் மட்டற்ற துயரம் அடைந்தேன். அந்தப் பாட்டியையே நான்அப்படியே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். அவர்களும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஐயோ, கொடிய பிசாசு மனுமக்களை எப்படியெல்லாமோ வஞ்சித்து அவர்களைக் குருட்டாட்டத்தில் தடவித் திரியப்பண்ணிவிட்டானே என்று நான் எண்ணியபோது எனக்குள்ளே அங்கலாய்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே அந்தப் பாட்டியைப் பார்த்துக் கொண்டு மலைப்பள்ளத்தில் இறங்கிக் கடந்து சென்றேன்.
பூட்டானிய கிறிஸ்தவர் ஷெர்ரிங் டார்ஜியைச் சந்தித்தது
இந்தப் பாரூவில்தான் ஷெர்ரிங் டார்ஜி என்றதொரு பூட்டானிய கிறிஸ்தவ சகோதரரை நான் சந்தித்தேன். அவர் பூட்டானிய அரசு மருத்துவமனையில் ஆடர்லியாகப் பணிபுரிபவர்கள். எங்களின் சந்திப்பு தேவனின் அநாதி தீர்மானமாகவிருந்தது. நாங்கள் இருவரும் பல் வேறு விதங்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமற்றவர்களாக விருந்தபோதினும் இயேசு இரட்சகரின் விலையேறப்பெற்ற கல்வாரிப் புண்ணியத்தின் காரணமாக ஒரே பரம தகப்பனின் அன்புப் பிள்ளைகளாக இருவரும் ஒன்றாக இணைந்தோம். சகோதரன் தன் இதயம் திறந்து தன் குடும்ப காரியங்களை எல்லாம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களின் மட்டற்ற ஆவலின்படி சில நூறு நேப்பாளி மற்றும் ஹிந்தி மொழி சுவிசேஷ துண்டுப் பிரதிகள் நான் இந்தியா வந்ததும் இங்கிருந்து அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். இந்தப் பிரதிகள் ஏற்ற கரங்களில் சேர்ப்பிக்கப்பட்டு அதின் பலனை நாம் ஓர் நாள் நித்தியத்தில் கண்டு கர்த்தரில் மகிழ்ச்சியடைவோம்.
பாரூவில் நான் என் தேவ ஊழியங்களை முடித்துக்கொண்டு திம்புவிற்குப் புறப்பட்டேன். நான் தங்கியிருந்த வீட்டின் மக்கள் அதற்குள்ளாக என்னுடன் மிகவும் அன்புடன் பழகிக்கொண்டனர். இந்த அன்புள்ள மக்களுக்கும் தேவனுடைய சுவிசேஷத்தை நான் கொடுக்கத் தவறவில்லை. தங்களுடைய வீட்டில் ஓரிரு நாட்கள் கட்டாயம் தங்கிவிட்டுச் செல்ல அவர்கள் என்னை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். இனி நான் இந்தியாவிலிருந்து பூட்டான் தேசத்திற்கு வந்தால் அவர்கள் வீட்டில்தான் நான் வந்து தங்கியிருக்க என்னை உள்ளத்தின் பாசத்தோடு விரும்பிக்கேட்டனர். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
மீண்டும் திம்புவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
பாரூவில் நான் என் ஊழியத்தை முடித்து திரும்பியதும் பூட்டானின் தலைநகர் திம்புவிலுள்ள தேவ மக்கள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து அதில் என்னைப்பேசச் செய்தனர். இம்முறை மேல் நாட்டினர் சிலரும் அக்கூட்டத்தில் கலந்து தேவச்செய்தியைக் கேட்டனர். எனது ஆங்கிலச் செய்தியைக் கூட்டத்தினருக்கு மொழி பெயர்த்தவரும் ஒரு ஆங்கிலேயர்தான். அல்லேலூயா.
அன்பின் ஆண்டவர் பாவியாகிய என்னுடைய வாழ்வில் இப்படிப்பட்டதான மேன்மையான சந்தர்ப்பங்களை யெல்hம் ஓர் நாள் தருவார் என்று நான் கனவிலும்கூட நினைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஆண்டவருடைய தாயார் மரியாள் அம்மையாருடன் நானும் சேர்ந்து “வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார், அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது” (லூக்கா 1 : 49) என்று என் தேவனை வாயார வாழ்த்திப் போற்றுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாத பாவியாயிருக்கின்றேன்.
பூட்டானில் நான் தேவ நாம மகிமைக்காக மேற்கொண்ட எல்லா ஊழியங்களும் தேவ ஆலோசனைப்படியே நடைபெற்றவைகளாகும். எனது சுய ஆலோசனை, எனது சொந்த விருப்பம் எதற்கும் அங்கு இடமில்லாது போயிற்று. ஊழியங்கள் யாவும் நீண்ட மணி நேரங்கள் தேவனுடன் தனித்து உறவாடின தன் பின்னர் செய்யப்பட்டன. யார் யாரை சந்திக்க தேவன் திருவுளச்சித்தம் கொண்டாரோ அந்த ஆளிடத்திலேயே அவர் என்னை வழிநடத்திக்கொண்டு சென்றார். இது எனது அற்ப அறிவிற்கும், ஞானத்திற்கும் இன்றும்கூட எட்டாத உயரமாகத்தான் இருக்கின்றன.
ஈஷிபெம் என்ற பூட்டானிய கிறிஸ்தவ பெண்ணைச் சந்திக்கச் செய்த தேவ கிருபை
திம்பு கடைவீதியில் ஒரு ஸ்டேஷனரிப் பொருட்கள் விற்கும் கடையில் ஒரு பூட்டானிய இளம் பெண் இருந்தாள். அவளிடம் தனித்துச்சென்று தேவ அன்பைப் பகிர்ந்து கொள்ள ஆண்டவர் என் உள்ளத்தில் மிகவும் பலமாக உணர்த்தினார். ஆனால், நான் ஆவியானவரின் ஆலோசனைக்குக் கீழ்ப்படியாமல், அவளைச் சந்திக்காமல் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தேன். ஒரு நாள் தேவ ஆவியானவரின் உணர்த்துதல் மிகவும் பலமாகவிருந்ததினால் கையில் ஆங்கிலப் பிரதிகளை எடுத்துக்கொண்டு ஜெபத்துடன் அவள் தனிமையாக இருக்கும்போது நான் அவளைச் சென்று சந்தித்தேன்.
புத்த மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்த அவளின் பெயர் “ஈஷிபெம்” என்பதாகும். தனக்கென்று ஒரு ஆங்கில வேதாகமத்திற்காக அவள் பல இடங்களிலும் முயற்சித்ததாகவும், ஒருவரும் தனக்கு உதவவே இல்லை என்றும் என்னிடம் கூறினாள். ஒரு ஆங்கில வேதாகமம் பெற்றுத்தர என்னைக்கேட்டாள். அவள் விருப்பப்படியே ஒரு அழகான விலையுயர்ந்த வேதாகமத்தை நான் இந்தியா வந்ததும் முதல் வேலையாக வாங்கிப் பதிவுத் தபாலில் ஜெபித்து அனுப்பி வைத்தேன். தன்னுடைய மாமியார் இன்னும் மனந்திரும்பவில்லையென்றும், எப்பொழுதும் அவர்கள் புத்த மார்க்க ஜெப மாலையையே உருட்டிக் கொண்டிருப்பதாகவும் என்னிடம் ஈஷிபெம் வருத்தத்துடன் கூறினதுடன் தன் மாமியார் மனந்திரும்பி இயேசு இரட்சகரை தன் சொந்தமாக ஏற்றுக்கொள்ள ஜெபிக்கும்படியாகவும் அவள் என்னிடம் கேட்டாள்.
ஒரு நாள் முதலில் நான் குறிப்பிட்ட ஈஷிபெம்முடைய கரத்தில் ஒரு ஆங்கில நாவல் புஸ்தகத்தை கண்டேன். அதை வாசிக்கக்கூடாது என்றும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபிப்பதும், ஆண்டவருடைய வேதத்தை வாசித்து தியானிப்பதுமே கிறிஸ்தவ வாழ்க்கையை ஆசீர்வாதமுடையதாக்கி உள்ளத்தில் சமாதானத்தை பெருக்கெடுத்தோடச்செய்யும் என்று கூறினதுடன், கடைக்கு வருவோரிடமும் முடிந்த அளவு இயேசு இரட்சகருடைய அன்பை பகிர்ந்து கொள்ளத் தவறக்கூடாது என்றும் திட்டமாக தேவ ஆலோசனை கொடுத்தேன். நான் அவளைச் சந்திக்கும்போதெல்லாம் அநேக அருமையான தேவ ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டேன். தன் கடைக்கு சாமான் வாங்க வருவோரைக்கூடக் கவனியாமல் என்னால் கூறப்பட்டத் தேவ வார்த்தைகளுக்கு ஆவலாக அவள் செவி சாய்த்தாள். திம்புவில் நானிருந்த நாட்களில் இந்த அன்புள்ள சகோதரியின் வசத்தில்தான் நான் என் பொருட்களை ஒப்புவித்து விட்டு பூட்டானின் தொலை தூரமான இடங்களுக்கு ஊழியத்தின் பாதையில் நான் கடந்து சென்றேன். இந்தப்பெண்ணை சந்தித்து தமது கல்வாரி அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது அருமை ஆண்டவரின் திருவுளச்சித்தமாக இருந்தமைக்காக அவருக்கு துதி செலுத்துகின்றேன்.
“இந்த நாட்களில் நான் ஆண்டவரின் வேதாகமம் காட்டும் பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றேன். நீங்கள் பூட்டானுக்கு வந்த சமயம் நான் உங்களுக்கு எந்த ஒரு அன்பும் செய்யவில்லையே என்று மிகவும் மன துயரம் அடைகின்றேன். எனது கண்டிப்பு நிறைந்த மாமியாருக்கு பயந்து உங்களுக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலும். காரணம், நான் இந்த கடையைவிட்டு விட்டு அரசாங்கப் பணியில் சேரப்போகின்றேன்” என்று பூட்டானிலிருந்து வந்த ஈஷிபெம் என்ற அந்த சகோதரியின் கடிதம் தெரிவிக்கின்றது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
“உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” – ஈஷிபெம்மின் மாமியார் இரட்சிப்பைக் கண்டடைந்த ஆச்சரிய வரலாறு
1984 ஆம் ஆண்டு நான் திரும்பவுமாக பூட்டான் தேசத்திற்கு இரண்டாம் தடவையாக தேவ ஊழியத்தின் பாதையில் சென்றிருந்தபோது மேலே குறிப்பிட்ட ஈஷிபெம் என்ற சகோதரியின் வீட்டிற்கு ஒரு இரவில் சென்றிருந்தேன். 1983 ஆம் ஆண்டில் வைராக்கியமான புத்த மார்க்கத்தினளாகவிருந்து எப்பொழுதும் ஜெபமாலை உருட்டிக்கொண்டிருந்த ஈஷிபெம்மின் மாமியார் இப்பொழுது இயேசு இரட்சகரின் பரிசுத்த பிள்ளையாக மாற்றம் பெற்றிருந்ததைக் கண்டு நான் மட்டற்ற ஆச்சரியமடைந்தேன். என்னை அந்த அம்மாள் தங்கள் அறைக்கே அழைத்துச்சென்று ஆண்டவர் தனக்குச் செய்த அற்புதத்தை விவரித்துக்கூறினார்கள். கர்த்தரைத் தனது சொந்த இரட்சகராக கண்டு கொண்ட விபரத்தைக் கூறும்படியாக நான் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதிலின் மொத்தக் கருப்பொருளை உங்களின் ஆசீர்வாதத்திற்காக நான் கீழே தருகின்றேன்:-
(“நான் ஒரு வைராக்கியமுள்ள புத்த மதத்தினளாகவே நீண்ட நெடுங்காலம் இருந்தேன். எனது பிறப்பு வளர்ப்பெல்லாம் தீபெத் நாடாகும். எனது வாழ்வின் அநேக ஆண்டுகள் தீபெத்தின் தலை நகரான லாசா பட்டணத்தில்தான் கழிந்தது. எங்கள் கடவுள் அரசரான தலாய் லாமா இந்த லாசா பட்டணத்தில்தான் வாழ்ந்தார். என் சகோதரனே, இந்த லாசா நகரம் எத்தனை அழகானது என்பது உங்களுக்குத் தெரியுமா? கடவுள் அரசரான தலாய் லாமா வாழும் பொற்றாலா (POTALA) தங்க அரண்மனையைக் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். அரண்மனையின் அழகிய தடாகங்களில் அன்னப்பறவைகள் கூட உண்டு. உலகிலுள்ள மகா அழகு இடங்களில் லாசாவையும் ஒன்றாகக் கொள்ளலாம். என் உடன்பிறந்த சகோதரர்கள் மூவர் இன்றும் லாசாவில்தான் இருக்கின்றனர். சீன ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து நாங்கள் தீபெத்திலிருந்து பூட்டானுக்குள் நுழைந்தோம். சமீப நாட்கள் வரை நான் எனது புத்தமத கொள்கைகளில்தான் மிகவும் தீவிரமான பற்றுடையவளாகவிருந்தேன். புத்தமத சடங்காச்சாரங்களை வெகு கண்டிப்போடு அனுசரித்து வந்தேன். புத்தக் கோம்பாக்களுக்கு (கோயில்களுக்கு) தவறாது சென்று புத்தருக்கு வழிபாடு செய்து வந்தேன். இவை எல்லாம் நான் செய்த போதினும் என் இருதயத்தில் சமாதானம் அற்றவளாகக் காணப்பட்டேன். என் இருதயத்தில் ஒரு பெரிய வெற்றிடம் இருந்தது. இருதயத்தில் சமாதானம் இல்லாதபடியால் எப்பொழுதும் நான் ஒரு தடுமாற்றமான நிலையிலேயே காணப்பட்டேன். இந்த மெய்ச்சமாதானத்தை எனது புத்த மார்க்கம் எவ்விதத்திலும் அளிக்கும் என்று நான் இன்னும் நம்பிக்கை கொண்டு பல இடங்களிலுள்ள பெரிய பெரிய புத்த வழிபாட்டு ஸ்தலங்களை அணுகினேன். ஆனால், அவைகள் எனக்குப் பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. அந்த வழிபாடுகள் எல்லாம் வெறும் போலியானவை என்பதையும், மனிதனின் ஆன்மீக உயிர் மீட்சிக்கு அவை எதையுமே செய்யத் திராணியற்றவை என்பதையும் நான் நன்கு கண்டு கொண்டேன். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியாமல் திகைத்தேன். அப்பொழுதுதான் எனக்கு கிறிஸ்து பெருமானை முயற்சித்துப் பார்க்கும்படியாகக் கூறப்பட்டது. அந்த ஆலோசனையை நான் ஏற்று இரட்சகர் இயேசுவண்டை வந்தேன். என் மனதின் போராட்ட நிலையை நான் அவருக்கு எடுத்துக்கூறி என் ஆத்துமத்தின் தேவையான நிரந்தர சமாதானத்தை எனக்கு தந்தருளும்படியாக ஒரு குழந்தையைப்போல நான் அவரிடம் கேட்டேன். நான் என்னை முற்றுமாக அவருக்கு கையளித்தேன். எத்தனை அற்புதம்! உடனடியாக அன்பின் ஆண்டவர் என்னைத் தம்முடைய பிள்ளையாக அங்கீகரித்து உலகம் எந்த நிலையிலும் தரக்கூடாத பொங்கி வழியும் தேவ சமாதானத்தை என் உள்ளத்தில் ஊற்றினார். அவருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? என் அருமையான வாழ்நாட்காலத்தின் பெரும் பகுதி பிசாசின் அர்த்தமற்ற வழிபாட்டில் வீணடிக்கப்பட்டு பாழாய்ப்போனதே என்ற கவலைதான் இப்பொழுது என்னை வாட்டுகின்றது.
நான் பெற்ற இந்த என் பரலோக சந்தோசத்தையும், இரட்சிப்பின் மகிழ்ச்சியையும் என் உடன் பிறந்த மூன்று சகோதரர்களான CHAMLA, COCO, SHUNGIT என்ற மூவரும் பெற்றுக்கொள்ளவில்லையே என்ற கவலை என்னைப் பெரிதும் தாக்குகின்றது. தீபெத்தின் தலைநகரான லாசாவில் சீன ஆளுகைக்குள் இருக்கும் அவர்களுக்கு நான் பெற்ற சந்தோசத்தையும், கிறிஸ்து இரட்சகர் எனக்களித்துள்ள நித்திய ஜீவனையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற அளவற்ற தாகம் எனக்குள்ளது. அவர்கள் எப்படியாயினும் இயேசு இரட்சகரின் பிள்ளைகளாகிவிட வேண்டும் என்பதே என் அன்றாடகக் கவலை)
ஈஷிபெம்மின் மாமியார் மேற்கண்ட தனது சாட்சியைக் கூறி முடித்தபோது ஒரு குழந்தையைப்போலக் கண்ணீர்விட்டு தேம்பி தேம்பி அழுதுவிட்டார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே என்னிடம் தீபெத் மொழியில் எழுதப்பட்ட தேவனது சுவிசேஷப் பிரசுரங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார்கள். அவர்கள் விரும்பிய வண்ணம் நான் தீபெத்திய பிரசுரங்களை அவர்களுக்குக் கொடுத்த போது மிகவும் மனமகிழ்ச்சி அடைந்தார்கள். மனந்திரும்பாமலும், இயேசு இரட்சகரைக் குறித்துக் கேள்விப் படாமலும் இருக்கும் லாசா பட்டணத்திலிருக்கும் முதலில் குறிப்பிட்ட தனது மூன்று சகோதரர்களுக்கும் அவற்றை தபாலில் அனுப்பி வைக்கப்போவதாக என்னிடம் கூறினார்கள். அன்பின் ஆண்டவரால் பிடிபட்டதும் மனந்திரும்பாத மற்ற மக்களையும் ஆண்டவருக்கென்று பிடிக்க வேண்டுமென்ற ஆவல் தானாக உண்டாகிவிடுவது இயல்புதானே! நான் அவர்களிடமிருந்து ஜெபித்து விடைபெற்றபோது அந்த அன்பின் சகோதரி வலுக்கட்டாயமாக என் கரத்தைப் பற்றிப் பிடித்து அதில் ஐம்பது ரூபாய் நோட்டைத் திணித்து வைத்துவிட்டார்கள். சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்னர் அதின் மதிப்பு என்னவென்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். நான் முதன் முறையாக அவர்களைச் சந்தித்தபோது ஏன் இந்த அன்பு வரவில்லை? ஆம், அப்பொழுது அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவில்லை. மெய்தான், “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான், பழயவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி 5 : 17 )