பூட்டான் நாட்டில் நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் (பாகம் 2)
புன்ஸோலிங்கிலிருந்து காலையில் புறப்பட்ட பேருந்து மத்தியானவாக்கில் சுக்கா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த சுக்கா என்ற இடத்தில் பூட்டானிய போலீசார் என்னைப் பரிசோதித்தனர். இந்திய அரசாங்கம் எனக்களித்திருந்த பாஸ்போர்ட்டைப் பார்த்ததும் பூட்டானின் தலை நகர் திம்புவுக்குச் செல்ல என்னை அனுமதித்தனர். இந்த சுக்காவைச் சுற்றிலும் பெருங்காடுகள் இருக்கின்றன. இங்கு ஓடும் ஆற்றின் ஓரமாக ஒரு பெரிய நீர் மின் நிலையமும், தொழிலாளரின் குடியிருப்புப் பகுதிகளுமிருந்தன. சுக்காவின் சிறிய கடை வீதியில் பேருந்து நின்றது. இங்கு நான் எனது மதிய உணவை அருந்தினேன். சுத்தம் போன்றவைகளை எல்லாம் நாம் கவனித்தால் பட்டினியாகத்தான் கிடக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு கிடைத்த ஆகாரத்தை வாயில் போட்டுச் சுவைத்துப் பார்க்காமல் அப்படியே மருந்தாக விழுங்கி தண்ணீரைக் குடித்து பேருந்து ஏறினேன்.
மத்தியானத்தி]ற்கு மேலான பயணப்பாதை மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. டிரைவர் சற்று ஏமாந்தாலும் பேருந்தில் ஒரு பிரயாணி கூட தப்பிப் பிழைக்கவியலாது. மிகவும் செங்குத்தான மலைச் சரிவுகளின் வழியாக பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. மலைகளில் இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தீபெத்தியர்களின் முறைப்படி கட்டப்பட்ட பூட்டானியர்களின் வீடுகள் தென்பட்டன. சில இடங்களில் பூட்டானிய சின்னஞ்சிறுவர், சிறுமியர் ரஸ்தா ஓரமாக வந்து நின்று பேருந்தின் டிரைவரையும், பயணிகளையும் தங்கள் கை அசைத்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பாவம், அந்தச் சின்னஞ்சிறார்களுக்கு இதைவிட இவ்வுலகில் வேறென்ன பொழுது போக்கு இருக்கின்றது? காலையிலிருந்து மாலை வரை அவர்கள் காண்பதெல்லாம் கருங்கானகங்களும், மலைகளும், வேளாவேளைகளில் ரஸ்தாவில் செல்லும் வாகனங்களுமே தவிர பிறிதொன்றுமில்லையே! சில சமயங்களில் தனித்த ஒரு குழந்தை மாத்திரம் ரஸ்தா ஓரமாக வந்து காத்து நின்று மகிழ்ச்சி பொங்க கை அசைத்துவிட்டுக் கடந்து செல்லுகின்றது. டிரைவரும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தனது அன்பைப் பிரதிபலிக்கும் விதத்தில் கை அசைத்து புன்னகை பூத்துச் செல்லுகின்றார். மலையின் எங்கேயோ ஒரு மூலையிலுள்ள தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு கரடு முரடான மேடு பள்ளம் நிரம்பிய மலைப்பாதை வழியாக எவ்வளவு தூரமோ நடந்து வந்து இந்தப் பிள்ளைகள் ரஸ்தா அருகில் வந்து காத்து நிற்கின்றனர். அவர்களைப் பார்க்க நமக்குப் பரிதாபகரமாக இருக்கின்றது. அன்பின் ஆண்டவர் நம்முடைய பிள்ளைகளுக்கு எத்தனை அருமையான ஜன சமூக சூழ் நிலைகளையும், இன்பப்பொழுது போக்கு வாய்ப்புகளையும் அளித்திருக்கின்றார். அவருக்கு நாம் எத்தனை துதி ஸ்தோத்திரங்களை தினமும் ஏறெடுக்க வேண்டும்!
நேரம் செல்லச் செல்லப் பூட்டானின் குளிர் காற்று வீசத் தொடங்கிற்று. மேலே ஏற்றப்பட்டிருந்த மாட்டுக்கறி சாக்கு மூட்டைகளில் சில இடையேயுள்ள பூட்டானிய கிராமங்களில் இறக்கப்பட்டுவிட்டமையால் காலை வேளையைப் போல அத்தனை அதிகமாக மேலேயிருந்து இரத்த ஒழுக்கு இல்லாதிருந்தது. அந்த சீக்கிய வாலிபன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். அவனுடைய துன்பத்தை நான் கண்டு அப்படியே ஒதுங்கிவிடவில்லை. அவனுக்கு உதவி செய்பவனாகவும், சில சமயங்களில் நான் அவனுடைய இருக்கையில் அமர்ந்து இரத்த ஒழுக்கை என் மீது வாங்கினேன். கிறிஸ்துவின் அன்பை நான் அவனிடம் பகிர்ந்து கொள்ள இந்த எனது அன்புச் செயல் வெகுவாக வழி வகுத்துக்கொடுத்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
எனது அனுபவ சாட்சியையும், சீக்கிய தேவ பக்தனான சாதுசுந்தர்சிங்கின் மனமாற்றத்தையும் நான் அவனிடம் பகிர்ந்து கொண்டேன். சாது சுந்தர்சிங்கின் வாழ்க்கைத் தன்னை முன்னரே கவர்ந்திருப்பதாகவும், அவருடைய வாழ்க்கைச் சரித்திரப் புத்தகங்கள் இரண்டு தன்னிடம் இருப்பதாகவும் அவன் என்னிடம் கூறினான். கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கைகள், குறிப்பாக மேல் நாட்டு கிறிஸ்தவர்களின் வாழ்க்கை தனக்கு கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொள்ள விடாமல் தடுப்பதாக கூறினான். இங்கிலாந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்துக் கோயில்களாகவும், சீக்கியர்களின் குருத்துவாராக்களாகவும் மாறி வருவதை அவன் எனக்கு சுட்டிக்காட்டி கிறிஸ்தவத்தின் வெறுமையை அவன் எனக்கு கூற முயற்சித்தான். பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு அவனது கேள்விகளுக்கெல்லாம் நான் தக்க பதில் அளித்தேன். இறுதியாக கிறிஸ்து பெருமான் உலகிலுள்ள பல தெய்வங்களில் அவரும் ஒருவர் என்றான். “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கூறிய கிறிஸ்து பெருமான் ஒருவரே மெய் தேவன். அவருக்கு ஒப்பானவர் வேறொருவருமில்லை என்றும் மனுக்குலத்தின் பாவ மீட்புக்காக இரத்தம் சிந்திய அன்பின் இரட்சகர் அவர் ஒருவரே என்று நான் கூறியபோது தனது குருவான தேஜ்பஹாதூரும் மனிதர்களுக்காக இரத்தம் சிந்தினார் என்று கூறினான். “உனது குரு புரட்சிக்காகவும், மொகலாய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையில் இரத்தம் சிந்தினாரே தவிரப் பிறிதொன்றிற்குமில்லை” என்றேன். அதிகமான வாக்குவாதத்திற்குள் நான் செல்லவில்லை. அவன் என்னோடு விடுதியில் தங்கியிருந்த இரு நாட்கள் கிறிஸ்தவ மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை அவனுக்கு ஓரளவு ரூபகாரமாக்கியிருக்கும். நான் அவனை அதிகமாக நேசித்துக் கிறிஸ்துவுக்குள்ளான எனது அன்பின் மூலம் இயேசு இரட்சகரை அவனுக்கு வெளிப்படுத்தினேன். எனது நடபடிகள் அவனை அதிகமாக கவர்ந்தது. அவனுக்கு முன்பாகவே நான் முழங்காலூன்றி ஜெபிப்பதையும், உணவு அருந்துமுன் தேவனுக்கு நன்றி செலுத்துவதையும் அவன் ஆழ்ந்து கவனித்தான். அவனுடைய தந்தை ஹரியானாவிலுள்ளதொரு பனிக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர் என்று கூறினான். ஜெபத்தோடு நான் அவனுக்குக் கொடுத்த ஆங்கில சிறு கிறிஸ்தவ புத்தகங்களையும், துண்டுப் பிரதிகளையும் பத்திரமாகத் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கின்றான். பிரதீப் என்ற அந்த சீக்கிய வாலிபன் எப்படியாகிலும் இயேசு இரட்சகiக் கண்டு கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு ஜெபித்து வருகின்றேன்.
நான் பிரயாணம் செய்த பேருந்தில் ஒரு பூட்டானிய என்ஜினியருக்கும், பூட்டானிய அரசு அதிகாரி ஒருவருக்கும் ஆங்கில துண்டு பிரதிகள், சிறு புத்தகங்களை மிகுந்த ஜெபத்தோடு வழங்கினேன். நல்ல வழவழப்பான காகிதத்தில் அழகான படங்களுடன், சிறப்பாக லண்டனில் அச்சிடப்பட்டிருந்த அப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டது அவர்களுக்கு மிகுந்த சந்தோசமாகவிருந்தது. அதைக் கண்ட நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. கர்த்தருக்கே மகிமை. இதற்குத்தானே இத்தனை பாடுகள். கிறிஸ்தவ பிரதிகளை அவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னர் அவர்களின் பூட்டான் நாட்டைக் குறித்து சில வினாக்களை எழுப்பி நான் ஒரு சுற்றுலா பயணி என்பதை அவர்களுக்கு நன்கு நிரூபித்துக்கொண்டேன். அப்பப்பா, தேவ ஊழியங்களில்தான் நாம் எத்தனை விவேகத்தோடும், மகா ஞானத்தோடும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது!
சாயங்காலம் ஆக ஆக கடுங் குளிர் காற்று வீசத் தொடங்கியது. பேருந்தை ஓரிடத்தில் நிறுத்தியிருந்தார்கள். மலை உச்சியில் மேகக்கூட்டங்களைத் தொட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த காவற் கோபுரம் போல தீபெத்திய முறையில் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தை நான் கண்டேன். அது என்னவென்று என்னுடன் பயணம் செய்ததொரு பூட்டானிய மனிதனிடம் கேட்டபோது அதுதான் சிறைக்கூடம் என்று பதிற் கூறினான். அதைக் கேட்டதும் மனுஷீக நிலையில் எனக்குச் சற்று பயம் உண்டாகத்தான் செய்தது. சுவிசேஷத்தினிமித்தம் பூட்டானிய போலீசார் நம்மைக் கைது செய்தால் இங்குதானே கொண்டு வந்து சிறை வைப்பார்கள் என்று நான் எண்ணினேன். நீதிமன்ற விசாரணையின்றி பல ஆண்டு காலம் நம்மை சிறை வைத்துவிட்டால் நம் காரியம், குறிப்பாகப் பிரதி மாதமும் தேவ எக்காளத்தை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கும் அநேக தேவப்பிள்ளைகளின் ஏமாற்றத்தை நினைவுகூர்ந்தேன்.
இந்தியாவில் பட்டணங்களுக்குள் உயரமான கோட்டைச் சுவர்களுக்குள் சிறைக்கூடங்கள் இருப்பதைப் போன்று பூட்டானில் சிறைச்சாலைகள் இல்லை. பட்டணத்தைவிட்டு வெகு தூரத்தில் மிகவும் செங்குத்தான மலைகளின் உச்சியில் தனித்து அவைகள் அமைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு கைதி தம்பிச் செல்ல எந்த வழியிலும் மார்க்கமே கிடையாது. பின் பக்கமாகவோ, அல்லது பக்கவாட்டிலோ அவன் தப்பியோட நினைத்தால் மலையிலிருந்து உருண்டு விழுந்து சிதறி சின்னா பின்னமாகிப்போவான். சிறையின் முன் பக்கமாகத் தப்பி ஓடினால் சிறைக்காவலரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாவான்.
பேருந்து, பூட்டானின் தலை நகரத்தை நெருங்க, நெருங்க பயங்கரமான பனிக்காற்று, பனி உறைந்த சிகரங்களிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. சூரியன் அஸ்தமித்து வெகு நேரம் ஆகிவிட்டது. தொடர்ச்சியாகத் திடீரென சில கிராமங்களை பேருந்து கடந்து சென்று கொண்டிருந்த சற்று நேரத்தில் ஒரு பள்ளத்தாக்கு வந்தது. அங்கே பசுமை கொழிக்கும் வயல் வெளிகளும் சில வீடுகளும் தென்பட்டன. சில நிமிடங்களில் நாற்புறமும் வானளாவிய மலைகள் சூழ்ந்த பிராந்தியத்தில் மலைச் சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகளும், தீபெத்திய பாணியில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களும் தெரிந்தன. பட்டணத்தின் மையத்தில் ஒரு பிரமாண்டமான புத்தமத பகோடாபொன் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. இந்தச் சிறிய பட்டணம்தான் திம்பு. ஆம், பூட்டானின் தலை நகரம். திம்புவை நீங்கள் படத்தில் காணலாம். பட்டணத்தின் முகப்பில் ஒரு ஆறு இரைச்சல் போட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. அதின் பெயர் வாங்-சூ (WONG-CHU) என்பதாகும். நதியின் ஓரமாக வில்லோ (WILLOW) மரங்கள் அப்பொழுது வீசிக் கொண்டிருந்த கடுங்காற்றில் இங்குமங்கும் வளைந்து, வளைந்து ஊளையிட்டுக் கொண்டிருந்தன. பேருந்து நதியின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த மரப்பாலத்தைக் கடந்து சென்றது. மரப்பாலத்தின் இருமருங்கிலும் நீண்ட கயிறுகளில் சலவைத் தொழிலாளி வீடுகளின் அழுக்குத் துணிகளைத் துவைத்து உலர வைப்பதற்காகப் போட்டிருப்பதைப் போன்று திரளான வெண் துணிகள் காற்றில் பட படத்துப் பறந்து கொண்டிருக்கின்றன. இவை என்ன? இவைகள் புத்த மார்க்க ஜெப மந்திரம் எழுதப்பட்டக் கொடிகள். பூட்டான் அரசரையும், அதின் குடி மக்களையும் பேய்கள், பூதகணங்களிலிருந்து பாதுகாக்கும் பாதுகாவலர்கள் இவை. பின் நாட்களில் நான் ஆங்காங்கு இவற்றைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளமுடைந்து நின்றேன். என்னே மனிதனின் மதியீனம்!
பேருந்து மரப்பாலத்தைக் கடந்ததும், திண்மையான கம்பளி யூனிபாரங்களை அணிந்த பூட்டானிய போலீசார் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்களைக் காணவும் என் இருதயம் விரைந்து துடித்தது. பூட்டான் நாட்டில் நான் இருந்த நாட்களிலெல்லாம் பூட்டானிய போலீசாரைக் காணும்போதெல்லாம் காட்டு யானையைக் கானகத்தில் நேருக்கு நேர் தனியனாய்ச் சந்திப்பது போல எனக்கிருந்தது. அவர்களைத் தூரத்தே கண்டதும் அவர்களிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருந்தேன். தெய்வாதீனமாக நான் அவர்களின் கரங்களில் கடைசி வரை விழவே இல்லை. அந்த நாட்டுச் சட்டப்படி நான் பயங்கர குற்றவாளி. உடனடியாக மலை உச்சி சிறைக்கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு இரும்பறைக்குள் தள்ளப்பட்டு அடைக்கப்பட ஏதுவானவன். ஆகிலும், அன்பின் கர்த்தர் தமது மிகுந்த கிருபையின்படி நான் அவர்கள் கரங்களில் விழாதபடி கடைசி வரைக் காத்துக் கொண்டார். அவருடைய பரிசுத்த நாமத்துக்கே மகிமை உண்டாவதாக. சிறை வாழ்க்கைக்கோ, போலீசாரின் துன்புறுத்துதலுக்கோ இல்லை மரணத்துக்கோ எனக்குச் சற்றும் அச்சமில்லை. அப்படியிருந்தால் இந்த நாட்டுக்கு இவ்வளவு துணிச்சலாக நான் வந்திருக்க மாட்டேன் அல்லவா? ஆனால், நாம் மிகவும்ஞானமாக நடந்து கொண்டால் கால நஷ்டமின்றி ஆண்டவருக்கு எவ்வளவோ ஊழியம் செய்யலாமே என்ற கவலைதான் என்னை வாட்டியது.
பேருந்து, திம்புவின் கடைவீதியில் போய் நின்றது. அந்த இடத்தின் குளிரோ பல்லாயிரம் ஊசிகளை ஏக காலத்தில் உடம்பில் குத்துவதைப் போலிருந்தது. உறைபனி மலைகளிலிருந்து வீசிக் கொண்டிருந்த காற்று என் பற்களை ஒன்றோடொன்று மோதச் செய்தது. பூட்டானின் குளிரில் நான் எக்காலத்துமில்லாத அளவில் கடும் அல்லலுற்றேன். பேருந்துவிலிருந்து ஜெபத்தோடு இறங்கினேன். அடுத்துச் செய்வது யாது? உடனே ஓரிடத்தில் போய் இராத்தங்க வேண்டும். இல்லை, கடுங் குளிர் உயிரைக் குடித்துவிடும். தமிழ்நாட்டில் வாட்டி வறுக்கும் வெயில் பூட்டானிலும் அப்படியே இருக்கும் என்ற எண்ணத்தில் குளிர் ஆடைகள் எதுவுமே என் வசம் கொண்டு வராமலிருந்த நான் உடனடியாக குளிர் ஆடைகளை வாங்குவது அவசியமாயிற்று.
பேருந்தில் நான் தேவ வசனங்களைக் கொடுத்த அந்த பூட்டானிய என்ஜினியரும், அரசு ஊழியரும் அந்த இரவில் இராத்தங்க ஒரு விடுதியில் எனக்கு ஒழுங்கு செய்து கொடுத்தார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். முன்பின் அறிமுகமற்றதோர் நாடு. முற்றும் மாறுபட்ட மொழி பேசும் மக்கள். யாரைப்போய் உதவிக்காக அணுகுவது? எனினும், அன்பின் பரம தகப்பன் தம்முடைய பிள்ளைகளை எத்தனை அன்புடனும், கரிசனையுடனும் அவர்களை வழிநடத்துகின்றார் என்பதை நினைக்கையில் என் உடம்பு சிலிர்க்கின்றது. நமது வாழ்க்கைப் போராட்டத்தில் நமது அநேக இன்னல்களின் சமயங்களில் நாம் நமது ஆத்தும நேசரை நோக்கிக் கதறினாலும் அந்த அன்பின் சொரூபி கேளாதவர் போல மவுனமாகவிருப்பவராக நமக்குத் தெரிகின்றார். ஆனால் இங்கோ அப்படியல்ல, அவருடைய உத்தரவுகள் எல்லாம் தந்தியின் மூலமாகத்தான் தருகின்றார். அல்லேலூயா. பூட்டானின் தலை நகரம் திம்புவின் படத்தை நீங்கள் காணலாம்.
நான் தங்கியிருந்த விடுதியில் அந்த சீக்கிய வாலிபனும் தங்கினான். பகலெல்லாம் அவன் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்க சென்றுவிடுவான். நான் எனது ஊழியத்தின் பாதையில் அதிகமதிகமாக ஜெபித்து என் உள்ளத்தை தேவ சமூகத்தில் உடைத்து ஊற்றிக் கொண்டிருந்தேன். புத்தமத நாட்டின் தலை நகரத்தில் தேவ ஊழியத்தை எப்படி ஆரம்பிப்பது? மக்களுடன் முதலில் எவ்வாறு பேசி தேவனுடைய வார்த்தைகளைக் கொடுப்பது? என்ற கேள்விக் குறிகள் என்னில் கலக்கத்துடன் எழுந்தன. இந்த நாட்டில் நாம் நம் இஷ்டப்படி செயல்பட முடியாது. சுவிசேஷத்திற்கு கடும் தடை விதிக்கப்பட்ட நாடு. எனக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரம் ஆண்டவரின் பொற்பாதங்களில் பல மணி நேரம் முகங்குப்புற விழுந்து கிடப்பதையன்றி வேறெதுவும் செய்ய என்னால் கூடாது போயிற்று. “என்னை இந்த பூட்டானுக்கு வழிநடத்திய அன்பே, உமது திருவுளச் சித்தப்படி என்னைப் பயன்படுத்தும். உம்முடைய அநாதி தீர்மானத்தின்படி நீர் முன் குறித்த மக்களிடம் என்னை எடுத்துச் செல்லும். நான் என்ன செய்வதென்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை ஐயா” என்று தேவ சமூகத்தில் மன்றாடினேன்.
ஒரு நாள் மாலை வேளையில் நான் மிகுதியாகப் போராடி ஜெபித்துவிட்டு எனது தோள் பையில் ஆங்கிலம், தீபெத் மொழி துண்டு பிரசுரங்களை எடுத்துக் கொண்டு திம்புவின் தெரு வழியாக நீண்ட தூரம் நடந்து சென்று கொண்டிருந்தேன். படித்தவர்களைப் போல இரு வாலிபர்கள் ஜன நடமாட்டமில்லாத தனித்த ஓர் இடத்தில் சென்று கொண்டிருந்தார்கள். நம்மை யாராகிலும் பார்க்கின்றார்களாவென்று சுற்றுமுற்றும் ஒரு முறை நன்கு பார்த்துவிட்டு விரைவாக அவர்களண்டை சென்று ஜெப நிலையில் அவர்கள் இருவருக்கும் என் வந்தனத்தை முதலில் சொல்லிவிட்டு ஆங்கிலக் கைப்பிரதிகளைக் கொடுத்து படிக்கச் சொன்னேன். உடனே இருவரும் ஹிந்தியில் “ஜேய் மஸிஹி” (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்) என்று மகிழ்ச்சி குரல் எழுப்பினார்கள். அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள். அவர்களில் “தாமாங்” என்பவர் பூட்டானியர் மற்றவர் நேப்பாளி. நாங்கள் மூவரும் கிறிஸ்துவுக்குள்ளாக மனம்விட்டு மகிழ்ச்சி பொங்க பேசிக் கொண்டோம். நான் திம்புவுக்குள் நுழைந்ததன் காரியத்தை அவர்களிடம் கூறியபோது அவர்கள் மட்டற்ற ஆச்சரியம் அடைந்தனர்.
திம்புவில் கடிதத்தின் மூலம் நான் ஏற்கெனவே தொடர்பு கொண்டிருந்த ஒரு மேல் நாட்டு சகோதரன் (தன் பெயரை நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் குறிப்பிட வேண்டாம் என்று கடிதம் எழுதியிருந்தபடியால் இங்கு நான் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை) தங்கியிருக்கும் இடத்தை நான் மேற்கண்ட தேவப்பிள்ளைகளிடம் கேட்டேன். அவர்கள் என்னை அவருடைய வீட்டிற்கே அழைத்துச்சொண்டுச் சென்றார்கள்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவர்கள் பூட்டான் அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள். என்னைக் கண்டதும் அந்த சகோதரனும் அவர்களின் மனைவியும் அதிக சந்தோசம் அடைந்தார்கள். திம்புவில் நான் ஒரு சுத்தமற்ற விடுதியில் மிகுந்த வசதிக்குறைவுகள் மத்தியில் தங்கியிருப்பதைக் கேட்டதும் மிகுந்த துக்கமடைந்தார்கள். நான் திம்புவில் தங்கியிருக்கும் நாட்களில் தங்களுடனேயே மாத்திரம் தங்கியிருக்கும்படி மிகவும் அன்புடன் என்னை வருந்திக் கேட்டார்கள். அந்த சகோதரனின் மனைவி நிறை கர்ப்பிணியாக இருந்தமையால் அவர்களுக்கு நான் சிறியதொரு தொந்தரவையும் கொடுக்க விரும்பவில்லையாதலால் அவர்களின் வேண்டுகோளுக்கு நான் இணங்கவில்லை. எனினும் அந்த அன்புள்ள மக்கள் என்பேரில் மிகுந்த அன்பு பாராட்டினார்கள்.
நான் அவர்களிடம் சென்ற அன்றைக்கே ஒரு கூட்டத்தில் தேவனுடைய செய்தியை நான் கொடுக்க ஒழுங்கு செய்தார்கள். அந்த நாளின் இரவில் நான் திம்புவில் கடைக்கோடியான ஏதோ ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எங்குதான் நாம் போய்க்கொண்டிருக்கின்றோம் என்று எனக்கே ஒன்றும் தெரியாதவனைப்போலப் பேதுருவை, தேவதூதன் சிறையிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றது போலத் தேவ மக்கள் இருவர் என்னை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இறுதியாக நெடுந்தூரம் வந்தபின் ஒரு பாழடைந்த புத்த மடாலயம் இருந்தது. அதிலிருந்து கொஞ்ச தூரம் நடந்து ஒரு மாடி வீட்டை நாங்கள் அடைந்தோம். மாடி வீட்டின் மேலறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் பார்த்த காட்சி எனக்கு அளவற்ற ஆனந்தத்தை கிறிஸ்துவுக்குள் அளித்தது. அந்த அறையில் சுமார் 20 பேர்கள் கர்த்தருடைய வசனத்தைக் கேட்க மிகுந்த ஆவலுடன் கூடியிருந்தனர். சில பூட்டானிய கிறிஸ்தவர்களும் அதிலிருந்தனர். ஏனையோர் பூட்டானிய நேப்பாளிகள். கம்மியூனிஸ நாடுகளில் அரசாங்கத்திற்குப் பயந்து தேவ மக்கள் இரகசியமாகக் கூடி தேவனை ஆராதிக்கும் நிலையே இவர்களின் நிலையுமாகும். தனிப்பட்ட வீடுகளில் கூட ஒன்று கூடி தேவனைத் தொழுது கொள்ளக்கூடாது என்பது இந்த நாட்டின் சட்டமாகும். அரசாங்கத்தின் கெடுபிடியான சட்டங்கள் குறித்து சற்று பின்னர் நான் எழுதுகின்றேன்.
பரிசுத்தமும், அன்பும், ஒருமைப்பாடும், தேவ நாட்டமும், சமாதானமும் அந்தச் சிறிய கூட்டத்தில் நிலவியிருந்தது. அங்கு சபைப் பிரிவுகள், பாகுபாடுகள் எதுவும் கிடையாது. ஒரு குண்டூசி விழுந்தாலும் காதிற்குக் கேட்கும் விதத்தில் பரிசுத்த அமைதி அங்கு நிலவியிருந்தது.. மிகுந்த அமைதியுடன் ஒன்றிரண்டு நேப்பாள மொழிப் பாடல்களை அவர்கள் தேவப்பிரசன்னத்தின் உணர்வோடு பாடினார்கள். பின்னர் நான் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு தேவச் செய்தியை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டேன். எனது செய்தியை ஒரு சகோதரன் நேப்பாளியில் மொழி மாற்றம் செய்தார்கள். எந்த ஒரு கல்லூரியும் சென்று எவ்வித உயர் கல்வியையும் பெறாத நிர் மூடனாகிய என்னைத் தம் உன்னத ஆவியால் அபிஷேகித்து தமது அருமை மக்களுக்கேற்றதோர் தேவச் செய்தியை அந்த இராக்காலத்தில் தேவன் அருளினார். அல்லேலூயா. கர்த்தாவின் கிருபையால் கொடுக்கப்பட்ட அச்செய்தி தங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாகவிருந்ததாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். எல்லா துதியும், கனமும், மகிமையும் ஆண்டவர் ஒருவருக்குத்தான். இதைத் தொடர்ந்து நான் பூட்டானிய கிராமங்களில் தேவ ஊழியங்களைச் செய்துவிட்டு தலைநகருக்கு வரும்பொழுதெல்லாம் தங்கள் வீடுகளில் இரகசியமாகக் கூட்டங்களை ஒழுங்கு செய்து அவர்கள் என்னைப் பேசச் செய்தார்கள். அன்பின் தேவன் என்னை இக்கூட்டங்களில் தம்முடைய நாமத்திற்கு மகிமையாகப் பயன்படுத்தினார். ஆண்டவரை அதிகமாக நேசிக்கவும், தங்கள் பரிசுத்த சாட்சியின் ஜீவியத்தின் மூலமாக தங்களைச் சுற்றியுள்ள பூட்டானிய மக்களை இயேசுவண்டை கொண்டு வரவும் நான் அவர்களுக்கு தேவ ஆலோசனை கூறினேன். கிறிஸ்துவுக்குள்ளான எனது தாழ்மையான அனுபவங்கள் அவர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாகவிருந்தன.
இந்த ஏழைக் கிறிஸ்தவ மக்கள், நான் பூட்டான் தேசத்தை விட்டுக் கடைசியாக நேப்பாளத்திற்கு ஊழியத்தின் பாதையில் புறப்பட்டுச் செல்லுகையில் தங்கள் கஷ்ட சம்பாத்தியத்திலிருந்து ரூபாய் 175/- தேவ ஊழியத்திற்காக எனக்களித்தனர். குளிரில் பெரிதும் கஷ்டப்பட்ட எனக்கு ஒரு சகோதரி துரிதம் துரிதமாக ஒரு கம்பளித் தலைக் குல்லாவைப் பின்னி தங்கள் அன்பளிப்பாக எனக்குக் கொடுத்தார்கள். தங்கள் வீட்டிற்கு என்னைஅழைத்து உபசரிக்கவும் அவர்கள் தவறவில்லை. என்னே, தேவ மக்களின் பரிசுத்த அன்பு! அன்பின் கர்த்தர்தாமே அந்தச் சிறு மந்தையை ஆசீர்வதித்துக் காப்பாராக.
அன்பின் பரம தகப்பன் புத்தமத நாடான பூட்டானுக்கு என்னைக் கொண்டு சென்றதன் நோக்கத்தில் ஒன்று அங்குள்ள கிறிஸ்தவ மக்களை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்தவும், எதிர்ப்புகள் மத்தியிலும் அன்பின் ஆண்டவருக்கு உண்மையான சாட்சிகளாக காணப்பட தேவ ஆலோசனை கூறவுமே என்பதையும் நான் விசுவாசித்து ஆண்டவரை ஸ்தோத்திரிக்கின்றேன்.