பாழான நிலத்திலும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் என்னை கண்டுகொண்ட தேவன் (உபாகமம் 32:10)
தூத்துக்குடி மாவட்டத்தில் இங்கிலாந்து தேச மிஷனரி மர்க்காசிஸ் ஐயர் அவர்கள் தோற்றுவித்த நாசரேத் என்ற கிறிஸ்தவ பெருங்கிராமத்திற்கும், மற்றொரு ஆங்கிலேய மிஷனரி ஜாண் தாமஸ் ஐயர் அவர்கள் தோற்றுவித்த மெய்ஞ்ஞானபுரம் என்ற கிறிஸ்தவ கிராமத்திற்கும் நடுவில் உள்ள பிள்ளைவிளை என்ற மிக வறட்சியான ஒரு சிறிய ஊரில் நான் பிறந்தேன். எங்கள் ஊரின் வட பகுதியில் “குதிரைமொழி தேரி” என்ற வறண்ட செம்மண் பிரதேசமும், தென் பகுதியில் சிறு சிறு வயல் வெளிகளும் உண்டு. வயல்களில் விவசாயம் செய்ய நிலச் சொந்தக்காரர்கள் தனித்தனியாக கிணறுகளை தோண்டி வட்டி போட்டும், கமலை மாடுகளின் உதவியாலும் தண்ணீரை வெளியே எடுத்து நெல், ராகி, சோளம் போன்ற தானிய வகைகள், காய்கறிகள், போன்ற விவசாய பொருட்களை பயிரிட்டு வந்தனர். அந்த வயல்வெளிக்குச் சென்றால் ஆங்காங்கு கிணறுகளில் கமலை மாடுகள் வாயில் நுரை தள்ளிக்கொண்டு முன்னும் பின்னும் பரிதாபமாக நகர்ந்து தண்ணீரை இழுத்துக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருப்பதையும், சில கிணறுகளில் ஜவானான இருவர் எதிரும் புதிருமாக நின்று கொண்டு வட்டி என்ற பனை நார் பெட்டியின் மூலமாக கீழே உள்ள கிணற்றுத் தண்ணீரை பனை நார் கயிறுகள் மூலமாக மேலே துரிதம் துரிதமாக இழுத்து கொட்டுவதையும் நாம் காணலாம். நெல் பயிர்கள் நடப்பட்ட தண்ணீர் நிறைந்த வயல்களில் கொக்குகள் பரவலாக நின்று கொண்டு இரை பிடிப்பதையும், அவைகள் சிறு சிறு கூட்டமாக ஆங்காங்கு ஆகாயத்தில் பறந்து செல்லுவதையும், வயல்களில் வேலை செய்யும் மக்களையும் சிறுவனான நான் கண்டு பரவசமடைந்த நாட்கள் உண்டு.
ஆனால், அதற்கு நேர் மாறாக எங்கள் ஊரின் வட பகுதி செம்மண் தேரியானது பாலைவன அனல் காற்று வீசும் வெப்பமான இடமாகும். முட்புதர்களும், வறட்சியான இடங்களில் மட்டும் வளரக்கூடிய மரம் செடிகளும் உள்ள இடம் அது. அந்த இடத்தில் எந்த ஒரு தானியத்தையும் நாம் உற்பத்தி செய்ய இயலாது. அது தண்ணீரற்ற பாழான நிலம். எங்கு பார்த்தாலும் செம்மண் நிலப்பரப்பே நமது கண்களில் படும். அந்த செம்மண் தேரியின் உட்பகுதிக்குள் நாம் தொலை தூரம் செல்லுவோமானல் பாலைவன காட்சிகளையே தான் நாம் அங்கு காணலாம். நரிகள், முயல்கள், முள்ளம் பன்றிகள், கவுதாரிப்பறவைகள், விஷப்பாம்புகள் போன்ற கானக ஜீவராசிகள் வாழும் இடம் அது. முயல்களை கூட அப்படியே அடித்துப்பட்சிக்கக்கூடிய பெரிய ராஜாளிப் பறவைகள் வானில் வட்டமிடுவதை அங்கு நாம் பார்க்கலாம்.
மறக்கமுடியாத இராக்காலங்கள்
நான் சிறுவனாக இருந்தபோது இரவு நேரங்களில் செம்மண் தேரிக்காட்டில் வாழ்கின்ற நரிகள் தென் பகுதியிலுள்ள வயல் நிலங்களுக்கு ஊளையிட்டுக் கொண்டு செல்லுவதை எனது படுக்கையிலிருந்தபடியே பயத்துடன் நான் கவனித்திருக்கின்றேன். வயல்களில் வாழ்கின்ற நண்டுகளை வேட்டையாட அவைகள் அப்படிச் செல்லும். நண்டுகள் நரிகளுக்கு மிகவும் சுவையான இரையாகும். அதுமட்டுமல்ல, நண்டுகள் அதற்கு மிகவும் இலகுவான இரையும் கூடத்தான். நண்டுகள் வாழும் வயல் வரப்பு பொந்தினுள் நரி தனது அடர்த்தியான வாலை நுழைத்து செலுத்தி சற்று நேரத்திற்கு பின்னர் தனது வாலை வெளியே எடுத்தால் ஒன்றிரண்டு நண்டுகள் அதின் வாலை கவ்விக்கொண்டு வெளி வரும். உடனே அவைகளை தங்களுக்கு ஆகாரமாக்கிக்கொள்ளும். இரவின் பிந்திய பகுதியில் நண்டு வேட்டைக்குச் சென்ற நரிகள் பொழுது விடிய விடிய தங்கள் வேட்டையை முடித்துக்கொண்டு, தங்கள் வயிற்றை முழுமையாக நிரப்பிக்கொண்டு தாங்கள் வாழும் செம்மண் தேரிக்காட்டுக்கு திரும்பவுமாக ஆனந்தமாக ஊளையிட்டுக்கொண்டு திரும்பிச் செல்லும்.
என்னை பேராச்சரியத்தில் மூழ்க்கடித்த ஓர் நிகழ்ச்சி
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் காலையில் நான் கண்ட ஓர் காட்சி என்னால் என்றுமே மறக்கவியலாது. தூக்கத்திலிருந்து கண் விழித்து வீட்டின் கதவைத் திறந்து வெளியே நான் வந்து பார்த்தபோது சில நரிக் குறவர்கள் செம்மண் தேரிக்காட்டிலிருந்து எங்கள் வீட்டைக்கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய தோளிலும் ஒரு செத்த நரி தொங்கிக் கொண்டிருப்பதையும் அந்த நரியின் சிதறுண்ட தலையிலிருந்து வடிந்த இரத்தம் அவர்கள் முதுகில் தாராளமாக வடிந்து கொண்டிருப்பதையும் நான் ஆச்சரியத்துடன் கண்டேன். இரவில் தேரிக்காட்டுக்குள் சென்ற நரிக் குறவர்கள் தங்கள் உடம்பை நரித்தோலால் மூடி மறைத்து தங்களை நரிகளாக காண்பித்து நரிகள் வாழ்கின்ற இடத்தில் நரிகளைப்போன்று துள்ளிக் குதித்து அவைகளைத் தங்களண்டை வரவைத்து மணமான ஆட்டுக் கொழுப்பால் மூடப்பட்ட பயங்கரமான கல்வெடிகளை தரையில் போட்டு அவைகளை தாங்கள் கடிப்பது போல தந்திரமாக அவைகளுக்கு முன்பாகப் பாசாங்கு செய்து அந்த அப்பாவி நரிகளை கடிக்க வைத்து அவைகளின் தலைகளை நொடிப்பொழுதில் சிதறப்பண்ணி அவைகளை தங்களுக்கு நல்லதொரு வேட்டையாக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டுவிட்டார்கள்.
தந்திர சாத்தானாம் பிசாசு லோக மாந்தருக்கும் இதையே செய்கின்றான்.
நமது ஆத்தும அழிம்பனாகிய சத்துருவாகிய பிசாசும் கவர்ச்சியான இந்த உலக மாயாபுரி சந்தைச் சரக்குகளால் நமது பரலோக நாட்டத்தையும், வாஞ்சையையும், தாகத்தையும் தணியப்பண்ணி, நம்மை முழுமையாக திசை திருப்பி ஆட்டுக் கொழுப்பாகிய மணம் வீசும் உலக மாயையை நாம் நக்கி ருசித்துக் கொண்டிருக்கும் வேளையில்தானே அதினுள்ளிருக்கும் மரணமாகிய கல்வெடியை வெடிக்கப்பண்ணி நமது முடிவில்லாத நித்தியத்தை எரி நரகத்தில் நாம் யுகாயுகமாக செலவிட மகா தந்திரமாக வகை செய்துவிடுகின்றான்.
நரிகள் ஊளையிடும் வெறுமையான அவாந்திர வெளியாகிய பிள்ளைவிளை என்ற ஒரு வறட்சியான சின்னஞ்சிறிய ஊரில்தான் அன்பின் கன்மலை என்னைத் தமது சொந்தமாகத் தெரிந்து கொண்டார். அங்கேதான் நான் 1937 ஆம் ஆண்டு ஒரு ஏழைப் பெற்றோருக்கு மூத்த மகனாகப் பிறந்தேன். எனக்குப் பின்னர் 3 தங்கைமார்கள் பிறந்தனர். அங்கேயேதான் அன்பின் தேவன் என் பாவ அக்கிரமங்களை எல்லாம் எனக்கு மன்னித்து, உலகம் தரக்கூடாததும், உலகம் எடுத்துக்கொள்ளக்கூடாததுமான இரட்சிப்பின் சந்தோசத்தையும், பொங்கி பூரிக்கும் தேவ சமாதானத்தையும் எனக்குத் தந்து ஆத்துமாவின் நேசராக எனது உள்ளத்திற்குள் வந்து பிரவேசித்தார். அன்று பிரவேசித்த அந்த அன்பின் நேசர் இன்றும் மாறாத கர்த்தராக என் உள்ளத்தில் வாசஞ்செய்து என்னோடு உறவாடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும்!