நேப்பாள தேசத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் நினைவுகள் (பாகம் 4)
இமாலயாவை விட்டுப் புறப்பட்டது
நானும் மகன் சுந்தரும் அதிகாலையிலே எழுந்து கர்த்தருடைய சமூகத்தில் எங்கள் இருதயத்தை உடைத்து ஊற்றி ஜெபித்துவிட்டு சரியாக காலை 7 மணிக்கு சற்று முன்னதாக எங்கள் சுவிசேஷ பயணத்தைத் தொடங்கினோம். எங்கள் பாதை மகா பயங்கரமான ஆபத்து நிறைந்த பாதை என்பதை கேட்டறிந்தோம். கம்பளி ஆடைகளை நல்ல பாதுகாப்பாக உடுத்திக்கொண்டு இமாலயாவிலிருந்து மூங்கில் காடுகளின் ஊடாக நாங்கள் பயணம் செய்தோம். கொஞ்சம், கொஞ்சமாக எங்களின் பாதை உயரத்திற்கே போய்க் கொண்டிருந்தது. வழியில் எந்த ஒரு குடியிருப்பும் மனுஷ சஞ்சாரமும் இல்லை. ஒரே இருண்ட மூங்கில் காடுகள்தான்.
ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான களைப்பான பயணத்திற்குப் பின்னர் நாங்கள் 10300 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள “இங்கோ” என்ற இடத்தை வந்தடைந்தோம். அங்கு வீடுகள் எதுவுமில்லை. மேலும் கீழுமாக இரண்டு பெரிய குகைளைக்கண்டோம். மேலிருந்த குகையின் நுழை வாயில் ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. மேலே ஏறி குகையைப் பார்க்க எங்களுக்கு ஆசையாக இருந்தது. ஆயினும், நாங்கள் அவ்வாறு செய்யத் துணியாமல் விரைவாக எங்கள் பிரயாணத்தை தொடர எண்ணினோம். காரணம், நாங்கள் அன்றைய தினமே எந்த நிலையிலும் நாங்கள் காலையில் புறப்பட்ட இமாலயா என்ற இடத்திற்கே இராத்தங்க வந்துவிட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தோம். இல்லையெனில், அந்த இடத்தின் குளிர் எங்களை பட்சித்துவிடும் என்று நாங்கள் அஞ்சினோம். எனினும் பாதை ஓரத்திலிருந்த குகைக்குச் சென்றோம். அங்கே ஒரு இளவயதிய நேப்பாள மனிதனும் அவன் மனைவியும் தங்கியிருந்தனர். உள்ளே குளிரின் காரணமாக ஒன்றிரண்டு முழுமையான மரத்தடிகள் எரிந்து கொண்டிருந்தன. எங்களைப்போன்ற பயணிகளுக்குத் தேயிலைப் பானம் போட்டுக்கொடுத்துக் காசு சம்பாதிப்பதற்காக அந்த ஏகாந்தமான கானகத்தில் அவர்கள் இருந்தனர்.
“மனுஷனின் இருதயம்” என்ற நேப்பாள கைப்பிரதியையும் ஒரு நேப்பாள மொழி சுவிசேஷப் பங்கையும் நாங்கள் அவர்களுக்கு ஜெபத்துடன் அளித்தோம். அந்த வாலிபனைவிட அவனது மனைவி மிகவும் துடுக்கானவளும், படித்தவளுமாகக் காணப்பட்டாள். நாங்கள் கொடுத்த தேவனுடைய செய்தியை சந்தோசத்தோடும், ஆர்வத்தோடும் எங்களிடமிருந்து பெற்று வாசித்தாள். அவளுடைய கணவனான அந்த வாலிபனின் பெயர் பூம்பகாதூர் என்பதாகும்.”இவற்றை வாசியுங்கள், மனச்சமாதானத்தையும், சந்தோசத்தையும் கண்டடைவீர்கள்” என்று கூறி நாங்கள் அங்கிருந்து கடந்து சென்றோம்.
கன்மலையில் வீட்டைக்கட்டிய குழி முசல்களை அது எங்களுக்கு நினைப்பூட்டிற்று
எங்களின் பாதை தொடர்ந்து உயரம் சென்று கொண்டேயிருந்தது. எங்களின் ஒவ்வொரு பாதத்தையும் நாங்கள் மிகவும் கவனமாக வைத்து வைத்து முன் செல்ல வேண்டியதாயிருந்தது. மேலும் ஒரு மணி நேரப்பயணத்திற்குப் பின்னர் நாங்கள் இருவரும் 10825 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள “பாகரா” என்ற இடத்தை வந்து சேர்ந்தோம். அங்கு எந்த ஒரு மனுஷ சஞ்சாரமுமே இல்லை. அங்கிருந்து நாங்கள் மேலே செல்லவும் எங்கள் இடது கைப்பக்கமாக வானத்தையே தொட்டு நிற்பதைப் போன்ற பிரமாண்டமான கருங்கன்மலை ஒன்றிருந்தது. அந்த மலையின் உச்சியிலிருந்து மூன்று இடங்களில் நீர் மேலேயிருந்து கீழே கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால் காரியம் என்னவென்றால், அந்தத் தண்ணீர் கீழே பூமியை வந்து எட்டுவதற்கு முன்னரே அங்கு அடிக்கும் பலத்த காற்றினால் அடித்துச்செல்லப்பட்டு விடுகின்றது. அடிக்கும் காற்றின் வேகத்தில் தண்ணீரானது வெண் புகைக்காடாக மாறி விடுகின்றது. அந்தக்காட்சியைப் பார்க்க பார்க்கப் பரவசமாக இருக்கின்றது. அந்த மலையில் மரம், செடி, கொடிகள் எதுவுமே கிடையாது. ஆனால் மலையில் குத்து குத்தாகப் புல் பச்சைப்பசேரென்று ஆங்காங்கு முளைத்து வளர்ந்து காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றது. எப்படி அந்தப் புல்லின் வித்துக்கள் அத்தனை உயரம் சென்றன. அப்படிச் சென்றாலும் எப்படி அவைகள் அந்தக் கருங்கல்லான பாறையைத் துளைத்துத் தங்கள் வேர்களை நிலைப்படுத்தி அங்கே வளர்ந்து நிற்கின்றன என்பது மனிதனின் அற்ப அறிவுக்கு எட்டாத புதிராக இருக்கின்றது.
அந்த அற்புதக்காட்சி தேவனுடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட குழிமுசல்களின் காரியத்தை எங்களுக்கு நினைப்பூட்டிற்று. குழி முசல்களின் பாதங்கள் மிகவும் பசுமையும் மிருதுமானவைகள். அவற்றின் நகங்கள்கூட சின்னஞ் சிறியவைகள் தான். ஆனால், அவற்றின் குடியிருப்போ கன்மலையாகும். கற்பாறையை அது தன் நகத்தினால் ஒரு தடவை அழுத்தித் தோண்டினாலும் அதின் நகங்கள் எல்லாம் அப்படியே தனியாக கழன்று போய்விடும். ஆனால், அந்தக் கன்மலையைத்தோண்டித்தான் தங்கள் வீடுகளை அவைகள் அமைப்பதாக கர்த்தருடைய வார்த்தை தெளிவாகக்கூறுகின்றது. (“தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டி வைக்கும் குழிமுசல்களும்” நீதி 30 : 26) எத்தனை ஆச்சரியம்! சத்துவமற்ற அற்ப ஜெந்துக்களாகிய பாவிகளாகிய நாமும்கூட நித்திய கன்மலையாகிய கிறிஸ்துவில் நம்முடைய வாசஸ்தலத்தை அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அமைத்துக்கொண்ட செயலும்கூட குழிமுசல்களின் காரியத்தைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன அல்லவா! கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
உலகின் உயரமான வெண்பனிச் சிகரங்களை நோக்கி
“பாகரா” என்ற இடத்திலிருந்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து முன் சென்று கொண்டிருந்தோம். ஆனால், எங்களால் அத்தனை விரைவாக நடக்க இயலவில்லை. உயரம் அதிகமாக அதிகமாக பிராணவாயு குறைகின்றபடியால் நாங்கள் சுவாசிக்கவும் சில சமயங்களில் கஷ்டமாகத் தெரிந்தது. பாகாராவிலிருந்து நாங்கள் இரண்டு மணி நேர கடினமான பயணத்திற்குப் பின்னர் எங்களுக்கு முன்பாக உயரமான மேட்டில் சில கருவிகள் பொருத்தப் பட்டிருப்பதைக் கண்டோம். விமான தளத்தில் உள்ள கருவிகளைப்போல அவைகள் காணப்பட்டன. ஆனால் உண்மையில் அங்கு விமான தளம் எதுவுமில்லை. தட்ப வெப்ப நிலைகளையும், பனிப்பொழிவுகளைக் கண்டறியவும் பற்பலவிதமான கருவிகள் அங்கிருந்தன. நாங்கள் இறுதியாக அந்த மேட்டிற்கு வந்து சேர்ந்து வலது கைப்பக்கமாகத் திரும்பிப் பார்த்தோம். அங்கே தெரிந்த காட்சியைக்கண்டு எங்களையே மறந்து அப்படியே நின்றோம். அந்த இடத்தின் உயரம் 12150 அடிகளாகும்.. உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றானதும் மலை ஏற்றக்காரர்களுக்கு ஏறுவதற்கு மிகவும் கடினமானதுமான “மீன் வால்” என்ற அர்த்தத்தில் அமைந்துள்ள “மாச்சாபூச்ரே” என்ற வெண் பனிச் சிகரம் அடி முதல் முடி வரை நேருக்கு நேர் காணும் விதத்தில் கெம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்தச் சிகரத்தை நேப்பாளத்தின் பல கிராமங்களிலிருந்து பல கோணங்களில் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், முழுமையாக பூரண ரூபத்தில் அப்படியே பார்த்தது அன்றுதான். படத்தில் அந்த வெண் பனிச்சிகரத்தை நீங்களும் காணலாம்.
“மாச்சா பூச்ரே” என்ற அந்த வெண் பனிச் சிகரத்தின் அடிவாரத்திலிருந்து மேலும் நாங்கள் முன்னேறினோம். இப்பொழுது நாங்கள் நாற்புறமும் பனி மலைகள் சூழ்ந்த பாதை வழியாக போய்க் கொண்டிருந்தோம். வழியிலெல்லாம் பெரிய பெரிய வெண்மை நிறமான முதலைகள் படுத்திருப்பதைப்போன்று பிரமாண்டமான பனிப்பாளங்கள் பற்பல உருவங்களில் கிடந்தன. அந்தப் பனி மலைகளிலிருந்து உருகிவரும் சிறிய நீரோடைகளும்கூட ஆங்காங்கு உறைந்து கிடப்பதைக் கண்டோம். தட்டை வடிவமான பெரிய கண்ணாடிப் பாளங்களாக நீரின் மேல் மட்டம் உறைந்து, அதற்குள்ளாகக் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நேப்பாள தேசத்திலேயே கடுங்குளிரான எவரெஸ்ட் சிகரத்திற்கு அடுத்தபடியாக உள்ள இடத்தில் நாங்கள் இப்பொழுது நின்று கொண்டிருந்தோம். அந்த இடத்தின் உயரம் 13550 அடிகளாகும். எங்களுக்கு முன்பாக அன்னபூரணா என்ற மாபெரும் வெண்பனிச் சிகரம் கண்கொள்ளாக் காட்சியாக பால் போன்ற வெண்மையான ரூபத்தில் சூரிய ஒளிபட்டு வெட்டிப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பனி மண்டலமாக அவ்விடம் காணப்பட்டது. அந்த இடங்களிலிருந்துதான் மலையேற்றக்காரர்கள் தங்களின் முதலாவது அடிவாரக் கூடாரத்தை அமைத்து அன்னபூரணா மற்றும் மாச்சா பூச்ரே சிகரங்களின் உச்சிக்கு ஏறுவதாகக் கூறப்படுகின்றது. அந்தப் பனி மண்டலத்தைக் காண்பவர் எவராயினும் சரியே இரண்டு காரியங்களைக் கவனிக்காமல் இருக்க முடியாது. ஒன்று அந்த இடத்தில் காணப்படும் மகா அற்புதமான அமைதி. மற்றொன்று அந்த இடத்தின் மாட்சிமையான அழகு. அந்த இரண்டையும் காண்பவர் யாராயினும் அவற்றின் சிருஷ்டிகராகிய தேவனை நினைவுகூராமல் அங்கிருந்து வெறுமையாகத் திரும்பி வர முடியாது. மகன் சுந்தர்சிங் அந்த வெண் பனி மலையில் கொஞ்ச தூரம் நடந்து மகிழ்ந்தான்.
பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்த சர்வ வல்ல தேவன்
அந்தப் பனிக்கண்டத்தின் அழகில் நாங்கள் வியப்புற்ற எங்கள் இருவரையும் இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ஆண்டவர் தம்முடைய பறவைகளை அங்கே எங்களுக்குக் காண்பித்தார். நம்முடைய வீட்டின் அடைக்கலான் குருவிகளைக் காட்டிலும் சற்று பெரியதொரு சின்னஞ்சிறு பறவை பனிக்கட்டிகளில் சறுக்கி விளையாடுவதைப் போன்று பனியில் அங்குமிங்கும் துரிதம் துரிதமாக ஓடிக்கொண்டிருந்தது. எந்த ஒரு பூச்சிகளும் உயிர் வாழ முடியாத, பசுமையான எந்த ஒரு தாவரமும் வளர முடியாத அந்த இடத்தில், அவற்றின் சிருஷ்டிகர் அவைகளுக்கு எந்த உணவு கொடுக்கின்றாரோ தெரியவில்லை. மனிதனின் இரத்தத்தையே கட்டியாக உறைய வைத்துவிடக்கூடிய கொடிய குளிரான அவ்விடத்தில் அந்தச்சின்னஞ் சிறு பறவைகளுக்கு தேவன் எந்தவிதமான வெப்ப ஆடையைப் போர்த்தியிருக்கின்றாரோ! அறிந்தவர் ஒருவருமில்லை.
நானும், மகனும் மேற்கண்ட அன்னபூரணா வெண்பனிச் சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பனிகளுக்குள்ளாக ஒரு பாறையைக் கண்டோம். அந்தப் பாறையின் அடியில் முயல் குட்டியைப்போன்ற ஒரு இளம் சிகப்பு எலி அந்த மத்தியான நேரம் தன் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. பனி சூழ்ந்த ஒரு குறுகிய இடத்திற்குள் அது அங்குமிங்கும் சென்று கொண்டு எதையோ துரிதம் துரிதமாகச் செய்து கொண்டிருந்தது. அந்த இடத்தில் அது எப்படி உயிர் வாழ்கின்றது? அங்கே அதற்கு உணவு என்ன என்பது போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை பூச்சக்கரத்தை தமது ஞானத்தினால் படைத்த கர்த்தரிடம்தான் உண்டு. அவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.
வெண்பனிச் சிகரங்களின் பனிக்கண்டத்தில் நடைபெற்ற தேவ ஊழியம்
ஆண்டவர் தம்முடைய மாட்சிமையான படைப்புகளை நாங்கள் கண்டு களிகூர மாத்திரம் எங்களை அங்கு அழைத்துச் செல்லவில்லை. அன்பின் சொரூபி அங்கும் எங்களுக்கு அருமையான ஊழிய வாய்ப்புகளைத் தந்தார். “மாச்சா பூச்ரே” என்ற பனி மலைச்சிகரத்தின் அடிவாரத்திலருந்து “அன்னபூரணா” பனி மலையை நோக்கி நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் இத்தாலி தேசத்திலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுடைய மனிதனை நான் சந்தித்தேன். கத்தோலிக்கரானஅந்த மனிதனுக்கு ஆண்டவருடைய அன்பைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்லதோர் வாய்ப்பை நான் பெற்றேன். ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரமாக நான் மாறின காரியத்தை விபரமாக நான் அவருடன் பகிர்ந்து கொண்டேன். கத்தோலிக்க மதத்தினனாக இருந்த போதினும் இந்தியக் கிறிஸ்தவனான என்னுடைய வார்த்தைகளுக்கு மிகவும் கவனமாக செவி கொடுத்தார். அழகிய நேப்பாள தேசத்தை சுற்றிப்பார்க்க வந்த ஒரு சுற்றுலா பயணியாக அந்த மனிதன் இருந்த போதினும் அந்தப் பனிக்கண்டத்தின் அழகில் அவர் அத்தனை ஈடுபாடு கொண்டதாக நான் அவரைக் காணவில்லை. ஒரு வேளை தன்னுடைய இத்தாலி தேசத்தில் ஏற்கெனவே பனி மூடிய அழகான மலைகளை அவர் பார்த்திருக்கலாம்.
“ஒரு மனிதனுடைய உள்ளத்தில் கர்த்தர் வாசம் செய்கிறவராக இருப்பாரானால் அவர் அவனுடன் பேசுவார். நான் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்டிருக்கின்றேன்” என்று நான் அவருடன் சொன்னபோது அந்த வார்த்தைகள் அவருக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தன. “உண்மைதானா? ஆண்டவர் நம்மோடு பேசுவாரா? அவருடைய குரல் எப்படியிருக்கும்? எப்படி அவர் நம்முடன் பேசுவார்?” என்றெல்லாம் அவர் என்னிடம் விளக்கமாகக் கேட்டார். “ஆண்டவர் என்னுடன் பேச நான் விரும்புகின்றேன்” என்றது அவரது தவனமுள்ள ஆத்துமா. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். தனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும் பெற்றுக்கொள்ளும் ஒரு மறுபடியும் பிறந்த மனிதனில் கர்த்தர் தம்முடைய வாசஸ்தலத்தை ஸ்தாபித்து அந்த மனிதனுடன் தினமும் அவர் இடைபடும் காரியங்களை நான் அவருக்கு தேவ ஒத்தாசையோடு விளக்கமாகக் கூறினேன். எங்களைச் சுற்றிலும் இருந்த எந்த ஒரு காட்சியிலும் தனது கவனத்தை செலுத்தாமல் என்னுடைய வார்த்தைகளையே அவர் மிகுந்த ஆவலாகக் கவனித்தார். நேப்பாள நாட்டிற்குள் நானும், மகன் சுந்தரும் வந்திருக்கும் காரணத்தை அவர் அறிந்தபோது அவருடைய தேவ நாட்டம் இன்னும் அதிகரித்தது. பாவியாகிய நான் பெற்ற அனுபவத்தைத் தானும் பெற்றுக்கொள்ளப் போவதாக அவர் என்னிடம் கூறினார். கர்த்தருக்கே மகிமை.
அந்த தவனமுள்ள ஆத்துமாவை நாங்கள் சந்திக்கும்படியாகவே தேவன் எங்களை அந்தப் பனிக்கண்டத்திற்கு கொண்டு சென்றார் என்றுகூட நான் தைரியமாகச் சொல்ல இடமுண்டு. தம்முடைய ஒரு சிறிய வார்த்தையைக் கொண்டே மனிதனைச் சந்திக்கக்கூடிய சர்வ வல்ல தேவன் அந்த இத்தாலிய மனிதனின் உள்ளத்திலும் பின் வந்த நாட்களில் நான் அவருடன் பகிர்ந்து கொண்ட காரியங்களின் மூலமாகத் தம்முடைய அன்பை வெளிப்படுத்தி அவரைத் தம்முடைய அடியானாக மாற்றக்கூடும் என்று நாம் உறுதியாக நம்பலாம். கர்த்தருக்கே துதி உண்டாகட்டும்.
பனிக்கண்டத்தில் நாங்கள் சந்தித்த மற்றொரு ஆத்துமா தம்பகாதூர் குரூங் என்ற நேப்பாள மனிதனும் அவருடைய நண்பனும் ஆவார்கள். அவர்கள் இருவரும் அங்கு பனிக்கு நடுவில் கூடாரமடித்து துருவப் பிரதேசத்தில் வாழ்கின்ற எஸ்கிமோக்களைப் போன்று வாழ்கின்றனர். தங்களின் பொழுது போக்கிற்காக அவர்கள் அங்கிருக்கவில்லை. தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் அந்தப் பனி பிரதேச கொடிய வாழ்வை கரங்களில் எடுத்திருக்கின்றனர். அந்தப் பனிக்கண்டத்தைக் காண வரும் மக்களுக்கு தேயிலைப் பானம் மற்றும் ஆகாரம் செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கின்றனர். உண்மையில் எல்லாரும் அந்த இடத்திற்குச் செல்ல விரும்பவே மாட்டார்கள். காரணம், மரணம் தனது செட்டைகளை விரித்துப் படுத்திருக்கும் சா நிழலின் பள்ளத்தாக்கு அது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டும் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கூட கால தாமதம் செய்யாமல் உடனே திரும்பி விடுகின்றனர்.
நாங்கள் சரியாக நன்பகல் நேரம் சென்றோம். எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க தம் பகாதூர் குரூங் உடனே கெரசீன் ஸ்டவ்வைப் பற்ற வைத்து சோறு பொங்கி, கொஞ்சம் பருப்பையும் வேக வைத்துக் கொட்டி எங்களுக்கு உணவு அளித்தார்கள். அடுப்பிலிருந்து அப்படியே எங்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்த போதிலும் சூடு என்பது கொஞ்சமும் தெரியவில்லை. அவ்வளவு குளிரான இடம் அது. அந்த வெறும் சோற்றுக்கும், வேக வைத்த பருப்புக்கும் நபர் ஒருவருக்கு ரூபாய் 21 வீதம் ரூபாய் 42 எங்களிடம் வாங்கினார்கள். அவர்கள் தங்கள் ஜீவனையே தியாகம்பண்ணி அந்தப் பனிக்கண்டத்திற்குள் இருக்காதபட்சத்தில் எங்களுக்கு ஆகாரம் ஏது? அந்த அன்பான மக்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறி அந்தப் பணத்தை அளித்தோம். ஒரு கோப்பை தேயிலைப் பானத்தின் விலை ரூபாய் 5 ஆகும். கால் நூற்றாண்டுக்கு முன்னான ரூபாய் மதிப்பை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.
அந்த தனித்த இடத்தில் வாசம்பண்ணும் அவர்களுக்கு “சந்திர லீலாள் சரித்திரம்” “ராமாபாய் அம்மையாரின் சரித்திரம்” “மனுஷனின் இருதயம்” போன்ற சுவிசேஷப் பிரசுரங்களையும், தேவனுடைய சுவிசேஷப்பங்குகளையும் பரத்தை நோக்கி ஜெபித்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்தோம். தம் பகாதூருக்கு நாங்கள் அவைகளைக் கொடுத்த போது அவர் அருகிலிருந்த அவருடய நண்பர் அவை அனைத்தையும் வாங்கி கூடாரத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து அவற்றை வாசிக்கத் தொடங்கிவிட்டார். அவர் வாசித்த பின்னர் தம் பகாதூர்குருங் அந்த தேவனுடைய பிரசுரங்களைக் கட்டாயம் வாசித்திருப்பார். அவைகள் தேவனுடைய வார்த்தைகளானபடியால் அந்த இருவரின் உள்ளங்களில் அவைகள் தப்பாமல் கிரியை செய்திருக்கும் என்று நாம் நிச்சயமாக விசுவாசிக்கலாம். ஏனெனில், என்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் வெறுமையாகத் திரும்பாது என்று தேவன் உரைத்திருக்கின்றார் அல்லவா?
இமாலயாவை நோக்கித் திரும்பினோம்
அன்னபூரணா மற்றும் மாச்சா பூச்ரே பனிமலைச் சிகரங்களைக் கடைசியாக நாங்கள் ஒரு முறை நன்கு பார்த்தோம். இனி ஒரு போதும் இந்தப் பூலோக யாத்திரையில் நாங்கள் அவைகளைக் காணப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்த காரியம்தானே! அவைகளைக் காணக் கிருபைகூர்ந்த அன்பின் இரட்சகருக்கு துதி செலுத்திவிட்டு பொழுது போகும் முன்னர் நாங்கள் இருவரும் எங்களால் முடிந்த அளவிற்கு வேகம் வேகமாக இமாலயாவை நோக்கி விரைந்து வந்தோம். எங்களுக்கு இடது கைப்பக்கமாக நாங்கள் பார்த்து வந்த பனி மலைச் சிகரங்களிலிருந்து உற்பத்தியாகி ஓடி வரும் மோடி கோலா நதி பேரிரைச்சல் போட்டுக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடங்களில் வாழ்கின்ற நேப்பாள நாட்டு விந்தைப் பறவைகள் தங்கள் சிருஷ்டிகர் தங்களுக்கு அளித்த விதவிதமான குரல்களை எழுப்பி அவரைத் துதித்துக்கொண்டே தங்கள் தாபர ஸ்தலங்களை நோக்கிப் பறந்து சென்று கொண்டிருந்தன.
நாங்கள் கர்த்தருடைய கிருபையால் மாலையில் சரியான நேரத்திற்கு நாங்கள் காலையில் புறப்பட்ட இமாலயாவிற்கு வந்து சேர்ந்தோம். அந்த நாள் முழுமையிலும் நாங்கள் கர்த்தருக்காக 9 மணி நேரம் கால் நடைப் பயணம் செய்திருந்தோம். அந்தப் பயணத்தின் பலனை முடிவில்லாத நித்தியம் மாத்திரம் ஓர் நாள் நமக்கு வெளிப்படுத்தும்.