நேப்பாள தேசத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் நினைவுகள் (பாகம் 2)
நேப்பாளத்திலுள்ள ஹெலம்பு என்ற இடம் வரை சென்று தேவ ஊழியம் செய்துவிட வேண்டும் என்ற மட்டற்ற தாகத்தின் காரணமாக நேப்பாள தேசத்தின் எல்கைகளைக் குறிக்கும் மிகத் தெளிவான வரை படம் ஒன்றை சுவிசேஷ பிரயாணம் ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் இரவில் காத்மாண்டு பட்டணம் போய் வாங்கிக்கொண்டு வந்தேன். போகவர 15 நாட்கள் செல்லும் வழிப் பயணத்திற்குத் தேவையான உணவு பதார்த்தங்கள் கொஞ்சத்தையும் எடுத்துக் கொண்டு நிறைய நேப்பாள சுவிசேஷ பிரதிகள், சிறுபுத்தகங்கள், போன்றவற்றை எடுத்துக்கொண்டு மிகுந்த ஜெபத்தோடு, என் உள்ளத்தை தேவ சமூகத்தில் ஊற்றி ஜெபித்து விட்டு ஒரு நாள் காலை நேப்பாளத்தின் தலை நகர் காத்மாண்டுவின் எல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் ஜோர்பாட்டி என்ற நேப்பாள கிராமத்திலிருந்து தேவ ஊழியத்திற்காகப் புறப்பட்டேன். மேற்கொள்ளப்போகும் ஹெலம்பு ஊழியத்தை முடித்துவிட்டு சுகபத்திரமமாக திரும்பி வந்து சேர முடியுமா என்ற ஒரு பெரிய கேள்விக்குறியை பிசாசு ஒரு பக்கமிருந்து எனக்கு தந்து கொண்டிருந்தான். காரணம், நான் தெரிந்து கொண்ட இடம் அத்தனை ஆபத்துக்கள் நிறைந்த பயணத்தைக் கொண்டதாகும். அவனுடைய பயமுறுத்துதல்களை எல்லாம் இரட்சகர் இயேசுவின் நாமத்தில் கடிந்து கொண்டு கர்த்தரை என் துணையாகக் கொண்டு பெரும் பாரச் சுமையுடன் அந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டேன்.
என் உள்ளத்தை களிகூரப்பண்ணிய ஒரு நிகழ்ச்சி
காலை எட்டு மணிக்கெல்லாம் வெயில் காட்டமாக அடித்துக் கொண்டிருந்தது. ஜோர்பாட்டியிலிருந்து 8 கில்லோ மீட்டர்கள் தூரம் கால் நடையாக நடந்து சுந்தரிஜால் (Sundari Jal) என்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியிலுள்ள சிறிய நேப்பாள கிராமங்களில் எல்லாம் தேவ வசனத்தைக் கொடுத்துக் கொண்டே வந்தேன். ஒரு சிற்றூரிலுள்ள கடைக்காரருக்கு ஜெபத்துடன் சில சுவிசேஷ பிரதிகளை அளித்தேன். அவர் என் கண்ணெதிரேயே அக்கம் பக்கத்திலுள்ள மக்களைக் கூப்பிட்டுத் தனக்கு முன்பாக அமரப்பண்ணி நான் கொடுத்த பிரதிகளை அவர்களுக்கு சப்தமாக வாசித்துக் காட்டினார். ஆ, அந்த சந்தர்ப்பம் என் உள்ளத்தை எப்படியாகக் களிகூரப்பண்ணினது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! கோடிப் பொன்னை என் உடமையாகக் கொள்ளும் ஆனந்த சந்தோசத்தைக் காட்டிலும் அந்த அதிசயக்காட்சி என் உள்ளத்தில் ஆனந்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. அல்லேலூயா.
கீதா பிரசாத் சர்மாவுக்கு சுவிசேஷம் அறிவித்தது
பாதை ஓரங்களிலுள்ள மரங்களின் நிழல்களில் என் பெரும் பாரச்சுமையை கீழே இறக்கி வைத்து இளைப்பாறி, இளைப்பாறிக் கடும் கஷ்டத்துடன் எரிக்கும் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். கிராமங்களில் கிடைத்த அவுலும், வறுத்த நிலக்கடலையும் எனது மதிய ஆகாரமாயிருந்தது. வழியில் ஒரு கிராமத்தில் கீதா பிரசாத் சர்மா என்ற ஒரு வாலிப இளைஞனுக்கு இரட்சகர் இயேசுவைக்குறித்து ஆங்கிலத்தில் பேசும் வாய்ப்பைப் பரத்திலிருந்து நான் பெற்றேன். கர்த்தர் என்னிலிருந்து பேசும் வார்த்தைகளைக் கேட்க கேட்க அவன் கண்கள் கண்ணீரால் நிரம்புவதைக் கண்டேன். மிகவும் ஆவலாகச் சத்தியத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததுடன் ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராகக் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவன் எனக்கு வாக்களித்தான். சற்று தூரத்தில் தெரியும் தனது கிராமத்திற்கு வந்து தன்னுடைய வீட்டில் ஒரு நாள் இராத்தங்கித் தன் வீட்லுள்ளோருக்கும் தேவச் செய்தி கூற வலுக்கட்டாயமாக அவன் என்னை அழைத்தான். அந்த அழைப்பு அவன் இருதயத்தின் ஆழத்திலிருந்து வந்த மெய்யான அன்பின் அழைப்பு. எனது பிரயாணம் நீண்ட நெடும் பயணம் ஆனதால் எனது இயலாமையைக்கூறி அவனைக் கர்த்தரின் கிருபையுள்ள பராமரிப்புக்கும், பாதுகாவலுக்கும் ஒப்புவித்துவிட்டு நண்பகல் 12 மணி சுமாருக்கு சுந்தரிஜால் என்ற இடம் வந்து சேர்ந்தேன். அது ஒரு மலை அடிவாரக் கிராமமாகும். சமதரையில் அது இருப்பதைப்போலத் தெரிந்தாலும் அது 5000 அடி உயரத்திலிருப்பதாக என்னிடமிருந்த நேப்பாள தேச வரைபடம் காண்பித்தது. காலையிலிருந்து கடும் வெயிலில் நடந்த களைப்பால் வயிற்றுப் பசி மேலோங்கி நின்றது. சுந்தரிஜால் கிராமத்தில் ஏதேனும் ஆகாரம் கிடைக்குமாவென்று முயற்சித்தும் ஒன்றும் கிடைக்கவில்லையாதலால் கர்த்தருக்குத் துதி செலுத்திவிட்டுக் கடையில் கிடைத்த ஒரு சோடா கலர் குடித்துவிட்டு எனக்கு முன்னாலுள்ள செங்குத்து மலையில் ஏறினேன். பெரிய மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு மிகச் செங்குத்தான மலையை ஏறி கடப்பது என்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை. வழியில் நின்ற காட்டு மரங்களின் நிழல்களில் இளைப்பாறி, இளைப்பாறி மெதுவாக நடந்து சென்றேன்.
பரதேசியாகிய என் மேல் கருணை உள்ளம் கொண்ட ஒரு ஏழைப் பெண்மணி
கானகத்தில் ஓரிடத்தில் எங்கும் மயான அமைதி சூழ பெரிய கருங்கடலைப்போல ஒரு நீர்த்தேக்கமிருந்தது. பிரமாண்டமான கரிய இரும்புக்குழாய்கள் அங்குமிங்குமிருந்தும் அந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரைக்கொட்டிக் கொண்டிருந்தன. நேப்பாள நாட்டுத் தலைநகர் காத்மாண்டு பட்டணம் முழுமைக்கும் இவ்விடத்திலிருந்து தான் தண்ணீர் சப்ளை செல்லுகின்றது என்று நான் கேள்விப்பட்டேன். நீர்த்தேக்கத்திற்கு மேலாகக் கட்டப்பட்டுள்ள சிறிய இரும்புப் பாதை வழியாக சர்வ ஜாக்கிரதையாக தலையிலுள்ள மூட்டையை எடுத்து எனது மார்போடணைத்துப் பிடித்துப் பயத்தோடு அடிமேல், அடிவைத்து கடந்து சென்றேன். சற்று கால் இடறினாலும் பெரும் ஆபத்தில் முடியும். சுந்தரிஜால் என்ற கிராமத்தையும் அந்தக் கிராமத்தின் வழியாக பெரிய குழாயின் மூலமாக காத்மாண்டு பட்டணத்திற்கு தண்ணீர் செல்லுவதையும் படத்தில் நீங்கள் காணலாம்.
ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான பிரயாணம் செய்தும் ஊர் எதுவும் தென்படவில்லை. எனது களைப்போ கடுமையாகவிருந்தது. பின்னர் உச்சி மலையில் ஒரு கிராமம் தெரிந்தது. பாரமான சுமையுடன் நான் மலை ஏறுவதை எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த கருணையுள்ளம் கொண்ட வலுவான உடற்கட்டைப் பெற்றிருந்த மாது ஒருத்திக் கண்ணுற்று என்மேல் இரக்கம் கொண்டு தனது தோளிலுள்ள கூடையில் எனது பழுவான பையை வாங்கிப் போட்டுக்கொண்டு முன் சென்றார்கள். நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன். நான் அவர்களிடம் உதவி கேட்கவில்லை. கர்த்தர் எனக்கு உதவி செய்ய அப்பெண்ணின் இருதயத்தில் பேசியிருந்தார். அவருக்கே துதி உண்டாகட்டும். சரியாக மத்தியானம் ஒன்றரை மணிக்கு “மூல்கர்க்கா” (MULKHARKA) என்ற அந்த கிராமத்தை வந்தடைந்தேன். நான் விட்டு வந்த சுந்தரி ஜால் கிராமம் மலை அடிவாரத்தில் வெகு தூரத்தில் தென்பட்டது. மூல்கர்க்கா 6500 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள அழகான கிராமம். அதின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
நல்ல இதமான தென்றற் காற்று அப்பொழுது வீசிக்கொண்டிருந்தது. மிகவும் களைப்புடனிருந்த நான் அந்தக் கிராமத்து வீட்டுத் திண்ணையொன்றில் இராத்தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் பயணத்தைத் தொடங்க ஆசைப்பட்டேன். நந்த வனத்துக் காற்றை நம்பித் துயில் கொண்ட ஏழைக் கிறிஸ்தியான் கடைசியில் தன் கையிலுள்ள தனது விலையேறப் பெற்ற தோற் சுருளை இழந்து துடி துடித்த மோட்ச பிரயாணியின் கதையாகிவிடக்கூடாது என்றெண்ணி உடனே பயணத்தைத் தொடங்கினேன். அந்த மூல்கர்க்கா கிராம மக்களுக்கு நேப்பாளி மொழி துண்டு பிரசுரங்களை ஆத்தும பாரத்தோடு விநியோகித்தேன். மக்கள் முண்டியடித்துக் கொண்டு முன் வந்து அவற்றை வாங்கிச்சென்றுப் படித்து மகிழ்ந்தனர். இந்தக் கிராமத்திலிருந்து இன்னும் செங்குத்தாக மலை ஏறி 2 மைல்கள் தூரம் பயணப்பட்டு 7900 அடிகள் உயரமான “கஸ்ருப்பாஸ்” (Khasrubas) என்ற கிராமத்தை வந்தடைந்து அங்கும் தேவப்பணி செய்துவிட்டு ஊரைத்தாண்டி நல்ல ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தேன்.
பரத்திலிருந்து வந்த ஒரு உதவி
கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் முரம்புக்காடு ஒன்று வந்தது. அக்காட்டில் முட்செடிகள், குத்துச்செடிகள், சிறிய ஈச்ச மரங்கள் போன்றவை காணப்பட்டன. அவற்றைக் கடந்து நான் முன் சென்றபோது சற்று பெரியதோர் கானகம் தென்பட்டது. சுவிசேஷத்தை இருள் சூழ்ந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லுவதே நான் இவ்வுலகில் பிறந்ததன் ஒரே நோக்கம் என்ற தேவ வைராக்கியமானது என்னை மகா துணிச்சலுடன் எங்கெல்லாமோ அழைத்துச் சென்றது. கடும் பசியோடிருந்த நான் பாதையை விட்டுச் சற்று விலகி மேட்டுக்குச் சென்று கானகத்தின் மர நிழல் ஒன்றிலமர்ந்து என் கைவசமிருந்த கொஞ்சம் வேர்க்கடலைகளை உடைத்துச் சாப்பிடத் தொடங்கினேன். சற்று நேரத்தில் இருவர் புதர்களின் ஊடாக என்னை நெருங்கி வருவதை தூரத்தில் நான் கண்டேன். ஒருவன் கையில் ஆயுதங்களிருந்தன. சரிதான், இன்று நம் பொருட்களை இவர்கள் கொள்ளையடித்து ஒருக்கால் நமக்கும் மோசம் செய்வார்கள் என்று நான் என் உள்ளத்தில் அச்சமுற்றேன். ஆனால், என்னண்டை வந்த அவர்கள் மலர்ந்த முகத்துடன் காணப்பட்டனர். இருவரும் என்னண்டை வந்து அமர்ந்து எனது பிரயாணத்தைக் குறித்து வினவினர். அவர்களில் ஒருவன் காட்டில் விறகு வெட்ட வந்தவன், மற்றவன் நான் செல்லும் பாதையிலுள்ள தனது கிராமத்திற்கு செல்லுபவன். நாங்கள் மூவரும் வேர்க்கடலைகளை சேர்ந்து உண்டோம். அவ்விருவருக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள அருமையானதொரு வாய்ப்பும் எனக்குக் கிட்டினது. கர்த்தருக்கே துதி உண்டாகட்டும். என்னண்டை வந்தவர்களில் ஒருவன் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். மற்றவனைப் பின் தொடர்ந்து நான் என் பயணத்தைத் தொடர்ந்தேன். மிகவும் அன்புள்ளம் கொண்ட அவன் எனது பழுவான பெரிய தோள் பையை அவனாகவே கேட்டுப் பெற்றுத் தனது தோள் கூடையில் வைத்துக் கொண்டான். இந்த உதவியை அந்த அன்புள்ள மனிதன் எனக்குச் செய்திருக்காவிட்டால் நான் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன். கர்த்தரே பரத்திலிருந்து இந்த உதவியை எனக்கு அருளினார். அவருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும்!
நாங்கள் இருவரும் பயணப்பட்டு போர்லாங் பஞ்சாங் (Borlang Bhanjyang) என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்தவிடத்தில் இரண்டு மூன்று வீடுகள் மாத்திரமேதானிருந்தன. பூர்வ காலத்து நேப்பாள பாணியில் கட்டப்பட்ட மாடி வீடுகள் அவை. அவ்விடத்தின் உயரம் 8014 அடிகளாகும். சற்று குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்த இடத்தின் அழகையும், ஏகாந்த அமைதியையும் மனித வார்த்தைகளால் அத்தனை எளிதாக வர்ணித்து எழுதிவிட முடியாது. சிருஷ்டிப்புகளில் சிருஷ்டிகர்த்தாவின் அளவற்ற ஞானத்தையும், அன்பையும், ஆச்சரிய ஒழுங்குகளையும் சிந்தித்து, சிந்தித்து அவர் புகழ் பாடும் பாவியாகிய என்னைப்போன்றவர்களுக்கு அது ஒரு அற்புத பூமியாகும். இயேசு அப்பாவின் சமூகத்தில் ஜெபிக்க இந்த இடத்தில் உட்கார்ந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஜெபித்துக் கொண்டேயிருக்கலாம். மிகவும் தாகத்தோடிருந்த நான் மதுரமான அவ்விடத்தின் தண்ணீரை குவளை குவளையாக வாங்கிக் குடித்து என் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். அவ்விடத்திலிருந்த கொஞ்சம் மக்களும் மிகவும் அன்புள்ளம் கொண்டவர்கள்தான். போர்லாங் பஞ்சாங் என்ற அந்த அழகிய கிராமத்தை நீங்கள் படத்தில் காண்பீர்கள்.
பாட்டி பஞ்சாங் கிராமத்தில்
போர்லாங் பஞ்சாங்கிலிருந்து எங்கள் பிரயாணம் அடர்ந்த காடுகளினூடாகவிருந்தது. காடுகள் என்றாலும் நேப்பாளத்தின் காடுகளே ஒரு தனி ரகம்தான். காப்பிக்கோப்பையின் நிறைந்து ததும்பும் சூடான காப்பி பானத்திலிருந்து எழும்பும் நீராவியைப்போல அனல் பறக்கும், விரிந்து வியாபித்துக் கிடக்கும் கன்னிக் காடுகள்(ஏசைபin குடிசநளவள) அவை. குறிப்பாக இந்தக் காட்டு வழிகள் மிகவும் ஆபத்தானவை. நீங்கள் சென்னையிலிருந்து டில்லிப்பட்டணம் சென்றால் ஆக்ரா என்ற பட்டணத்தைக் கடந்து செல்லுவீர்கள். இந்த ஆக்ராவை ரயில் நெருங்குகையில் சம்பல் பள்ளத்தாக்கு என்ற கொள்ளைக்கூட்டத்தினரின் தாபர ஸ்தலமான இடத்தைக் காண்பீர்கள். இந்த சம்பல் பள்ளத்தாக்கின் நில அமைப்பே இங்கும் ஆங்காங்கு காணப்படுகின்றது. இந்த நில அமைப்புகளின் வழியாகச் சென்றால் முன்னால் நமக்கு எதிராக வருபவர்களும் தெரியாது, பின்னால் நம்மைப் பின் தொடருவோரையும் நாம் காணவியலாது. நம்மைச் சுற்றிலும் சாம்பல் கலந்த வெள்ளை நிற பூமியே மதில் போல எழுந்து உயர்ந்து நிற்கும். சில இடங்களில் பாதைகள் பல திசைகளில் பிரிந்து செல்லுகின்றன. சிற்சில சமயங்களில் காட்டு மனிதர்களைப் போல பயங்கரமான காட்சி அளிக்கும் மக்கள் எங்களுக்கு எதிர்ப்பட்டனர். அரை நிர்வாணமான அம்மக்கள் தங்கள் கையில் கூரிய ஆயுதங்களோடும், நாய்களுடனும் எங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர். கர்த்தர் தமது மிகுந்த அன்பின்படி இந்த மனிதனை எனக்கு வழித்துணையாக அனுப்பியிராவிட்டால் அன்று என் காரியம் மிகுந்த துக்ககரமாயிருந்திருக்கும். கட்டாயம் நான் வழி தவறிக் கானகத்தினுட் பகுதியிலுள்ள வனவிலங்குகளுக்கு இரையாகியிருப்பேன் அல்லது திருடர்களால் சூறையாடப் பட்டிருப்பேன். கர்த்தாவின் அந்த அதி அற்புத அன்புச் செயலை இன்று நான் எண்ணினாலும் என் இருதயம் நன்றியால் நிரம்பித் ததும்புகின்றது.
நாங்கள் இருவரும் அந்தப் பெருங்கானகத்தைக் கடந்து வெளி வந்தோம். இங்கிருந்து எங்கள் பாதை இறங்கு முகமாகவே சென்றது. பொழுது அஸ்தமித்துச் செவ்வானமிட்டிருக்கும் நேரத்தில் நாங்கள் செப்பு பஞ்சாங் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். 7600 அடி உயரமுள்ள இவ்விடத்தில் ஒரு தேநீர் கடை மட்டும் இருந்தது. கடையிலுள்ள ஒரு அகல் விளக்கின் வெளிச்சம் மட்டும்தெரிந்தது. நாங்கள் இந்த கிராமத்தை துரிதமாகக் கடந்து மீண்டும் 3 மைல்கள் விரைந்து நடந்து இருள் சூழ்ந்த நேரம் பாட்டி பஞ்சாங் (ஞயவi க்ஷாயதேலயபே) என்ற கிராமத்தை வந்தடைந்தோம். எனக்கு வழித் துணையாகத் தேவன் அனுப்பியிருந்த அன்பான வழிகாட்டி இவ்விடத்திலிருந்து வேறு திசை வழியாகப் பிரிந்து தன் ஊருக்குப் போனான். நான் அந்த அன்புள்ளம் கொண்டோனுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறி விடைபெற்றேன். அவன் என்னைவிட்டுப் பிரிந்து செல்லும்பொழுது எழுதப்படிக்கத் தெரிந்த அவன் வீட்டிலுள்ளவர்களுக்குப் படிக்கும் படியாக சில சிறு புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை ஜெபத்துடன் அவன் வசம் கொடுத்தனுப்பினேன். பாட்டி பஞ்சாங் என்ற கிராமத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.
6500 அடி உயரமுள்ள இந்த பாட்டி பஞ்சாங் கிராமத்தின் சாவடி ஒன்றில் இராத்தங்கினேன். காலையிலிருந்து இரவு வரை மலைகளில் ஏறத்தாழ 18 மைல்கள் அந்த நாளில் பிரயாணம் செய்திருந்த என் சரீரம் இளைப்பாறுதலுக்காக என்னிடம் கெஞ்சியது. சாவடியில் கிடைத்த உணவைப்புசித்து ஓரிடத்தில் சுருண்டு படுத்துக் கொண்டேன். பகலெல்லாம் நடந்திருந்தமையால் கால் சற்று வீக்கம் கண்டிருந்தது. அந்த வேளையில் தேவன் இஸ்ரவேல் மக்களை 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் வழிநடத்திய அதிசயச் செயலை என் உள்ளம் நினைவுகூர்ந்தது. “அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக்கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். இப்படி நாற்பது வருஷமாக வனாந்திரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை” (நெகே 9 : 20, 21)
நான் படுப்பதற்கு முன்பாக சாவடிக்குவந்ததொரு பள்ளி மாணவனுக்கு நேப்பாள சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்திருந்தேன். ஜீத் பகாதூர் என்ற அந்த மாணவன் ஊரிலுள்ள பலரைக்கூப்பிட்டுத் தனக்கு முன்பாக உட்கார வைத்து நான் அவனுக்குக் கொடுத்தவற்றை அவர்களுக்கு சத்தமாக வாசித்துக் காண்பித்தான். என் அழ்ந்த தூக்க நிலையிலும், களைப்பிலும் ஜெபித்துப் படுத்துக் கொண்டேன். சரியாக விடியற்காலம் 3 மணிக்குக் கண் விழித்துச் சாவடிக்கு வெளியே வந்தேன். தேய் பிறை நிலவு கால் வட்டத்தில் வானிலிருந்தது. பக்கத்து மலை உச்சிக் கிராமம் ஒன்றிலிருந்து பெரிய நாய் ஒன்றின் குரைப்பு சத்தம் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டேயிருந்தது. பாட்டி பஞ்சாங் கிராமமே ஆழ்ந்த உறக்க நிலையிலிருந்தது. நான் என் இரு கரங்களையும் வானத்திற்கு நேராக ஏறெடுத்து “என் அன்பே, தமது மகிமையான சுவிசேஷ ஊழியத்தின் பாதையில் என்னை இவ்வண்ணமாகப் பயன்படுத்து வதற்காக நான் உம்மைத் துதிக்கின்றேன். இன்னும் உம்முடைய கரத்தின் கருவியாக நீர் என்னை எடுத்துப் பயன்படுத்தும். மற்றவர்களை உம்மண்டை வழிநடத்தும் பாவியாகிய நானும் முடிவுபரியந்தம் உம் அன்பில் வலது இடது புறம் சாயாமல் நிலைத்து நின்று முடிவில் உம்மண்டை வந்து சேர எனக்கு கிருபை செய்யும்” என்று அவ்விடத்திலிருந்து மன்றாடிவிட்டுத் திரும்பவுமாகக் கண்ணயர்ந்தேன். அன்றைய இரவில் என் சொப்பனத்தில் ஒரு ஆள் எனக்கு முன்பாக வந்து நின்று “நாளைய தினம் உன் பிரயாணம் கற்களின் வழியாகவே இருக்கும்” என்று கூறினார்.
“உன் பிரயாணம் கற்களின் வழியாகவே இருக்கும்”
நான் அதிகாலையில் எழுந்து ஜெபித்து என் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்துவிட்டு நானே சாவடி அடுப்பங்கரைக்குச் சென்று அடுப்பு மூட்டிச் சுடு நீர் ஆயத்தம் பண்ணிப் பல் துலக்கிக் கைகால் முகம் கழுவி என் கைவசம் கொண்டு சென்றிருந்த ஹார்லிக்ஸ் பவுடரின் உதவியால் ஒரு கோப்பைப் பானம் ஆயத்தம் செய்து பருகிவிட்டுப் பிரயாணத்தைத் தொடங்க முற்பட்டேன். சத்திரக்காப்பாளன் இன்னும் படுக்கையிலேயே கம்பளியைப்போட்டு மூடிப்படுத்துக் கொண்டுதான் இருந்தான். நான் அவனை எழுப்பி அவனுக்கு என் நன்றியைக்கூறி விடைபெற முயன்றேன். அவன் படுக்கையிலிருந்து எழுந்ததும் முதல் வார்த்தையாக “நேற்றைய இரவு இங்கு வந்திருந்த ஜீத் பகாதூருக்கு நீங்கள் கொடுத்த ஒவ்வொரு புத்தகத்திலும் எனக்கும் ஒவ்வொன்று கட்டாயம் தாருங்கள்” என்று படுக்கையிலிருந்து குதித்தெழுந்தான். நான் அவற்றை அவனுக்குக் கொடுத்தபோது அவன் அதிக சந்தோசம் அடைந்தான். இரவில் ஜீத் பகாதூர் வாசித்த கர்த்தருடைய வார்த்தைகள் இவன் உள்ளத்திற்கு மிகவும் ஆனந்தத்தை அளித்திருந்தபடியாலேயே இவ்வளவு கருத்தோடு அவன் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். இந்த கடையாந்திர இடங்களுக்கெல்hம் தேவனுடைய சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல யார் முன் வருவார்கள்? சுவிசேஷத்தின் மதுர வாசனை ஒரு முறைகூட சொல்லப்படாத ஏகாந்த பூமி இவை!
பாட்டி பஞ்சாங்கிலிருந்து காலை 6 : 45 மணிக்குப் புறப்பட்டேன். தன்னந்தனியனாக எனது பழுவான தோள் பை மூட்டையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு “தாராமாராங்” என்ற கிராமத்தை நோக்கிப் பயணமானேன். இதுவும் கானகப் பாதைதான். ஆனால் ஒற்றையடிப்பாதை. ஒரே சீராக ஓரிரு மைல்களுக்கு அமைந்திருந்தது. சில இடங்களில் கிளை வழிகள் பிரிந்து சென்றாலும், அன்பின் தேவன் அந்தந்த இடங்களில் எனக்கு வழிகாட்ட மக்களை அனுப்பிக் கொடுத்தார். அவருடைய தாயடைவான அன்பின் நடத்துதல்களை நான் இங்கு விவரிக்க இடம் போதாது. கர்த்தருக்கே மகிமை. எனக்கு எதிர்ப்படும் மக்களுக்கெல்லாம் சுவிசேஷ பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டே 2 மைல்கள் தூரம் பிரயாணம்பண்ணி “தானா பஞ்சாங்” என்ற இடத்தை வந்தடைந்தேன். இந்தக் கிராமத்திலும் தேவப்பணி புரிந்துவிட்டுத் தாராமராங்கிற்கான வழி எப்படி என்று கிராம மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு என் பயணத்தைத் தொடர்ந்தேன். ஊரை அடுத்துள்ள காட்டினூடாகச் சென்று ஒரேயடியாக 2700 அடிகள் மடமடவென்று கீழிறங்கி ஒரு விசாலமான ஆற்றுப் படுகைக்கு வந்தேன். ஆறு முழுவதும் சிறிதும் பெரிதுமான வெண்கற்களால் நிரம்பிக் கிடந்தது. ஒரு ஓரத்தில் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஓடும் ஆற்றையே எனது எல்கையாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். நடக்க, நடக்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே கற்குவியல்கள்தான். ஒரே கனபரிமாண சிறிய கற்களாகவிருந்தால் அதிகக் கஷ்டமின்றிச் சென்றுவிடலாம். ஆனால், இவை அப்படிப்பட்டதல்ல. சில இடங்களில் பெரிய மலையே ஆற்றுப் படுகையை வழிமறித்துக் கிடக்கும். அதில் ஏறிச்செல்ல வேண்டும். சில இடங்களில் வலது, இடது புறங்களிலிருந்து இழுப்பான நீரோடைகள் மலையிலிருந்து ஓடி வந்து ஆற்றுடன் கலக்கும். இந்த நீரோடைகளை மிகவும் கவனத்துடன் கடக்க வேண்டும். சில இடங்களில் ஆறே தனது திசையை மாற்றி நம்மைக் குறுக்கிடும். ஆற்றிலுள்ள பெரும் பாறைகளில் ஒவ்வொரு அடியையும் மிகுந்த ஜெபத்தோடும், ஸ்தோத்திரத்தோடும் எடுத்து வைக்க வேண்டும். ஸ்தோத்திரம் சொல்ல மறந்து ஓரிரு இடங்களில் நான் விழுந்து எழும்ப வேண்டியதாயிற்று. எனினும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களின் ஊக்கமான ஜெபங்கள் என்னைப் பாதுகாத்துக் கொண்டது. எந்த மனுஷ சஞ்சாரமும், ஆள் அரவமுமற்ற அந்தக் கற்பாறைகள் நிரம்பிய ஆற்றுப்படுகை வழியாக கற்களில் ஏறி இறங்கி மணிக்கணக்காகச் சென்று கொண்டிருந்தும் ஜனநடமாட்டமோ, அல்லது எந்த ஊருமோ என் கண்ணுக்குத் தென்படவே இல்லை. என் காதுகளுக்கு கேட்பதெல்லாம் சல, சலவென்ற ஆற்றின் தண்ணீர் ஒலியும், மலைகளிலுள்ள பட்சி பறவைகளின் சப்தமும்தான். ஓரிரு இடங்களில் ஆற்றுப் படுகையிலேயே ஓரிரு குடிசைகள் தெரிந்தன. குடிசையில் யாரும் குடியிருக்கின்றார்களாவென்று நான் அருகில் சென்று பார்த்தபோது பெரிய ராட்சத கற் திரிகைகள் மலை மேலிருந்து வரும் நீரோடைகளின் தண்ணீரின் அசாதாரணமான மோதுதலால் எந்திரத்தைப்போலச் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டேன். மலையின் உயரமான இடங்களில் வாழும் மக்கள் தங்களின் சோளம், ராகி, கோதுமை, கம்பு, தினை போன்றவற்றை மாவாகத் திரிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றனர் என்று நான் மனதில் யூகித்துக்கொண்டேன். அந்தக் குடிசைகளின் படத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.
நான் சென்று கொண்டிருந்த பாதை முடிவின்றிச் செல்லுவதைக் கண்ட நான் எனது கஷ்டம் காரணமாக மலைத்து நின்றேன். என் கடும் அல்லல் காரணமாகக் கண்ணீர் சொரிந்து ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதுவிடலாமா என்று எண்ணும் வேளை என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து “என் அருமைப் பிள்ளையே, இவ்விதமானதொரு கஷ்டத்தின் பாதை இன்று உனக்கு உண்டென்று நான் உனக்கு வெளிப்படுத்தவில்லையா?” என்ற நேசரின் வார்த்தைகளைக்கேட்ட நான் அவரிடம் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு அவருக்கு முன்பாக அமைதியாக நடந்து சென்றேன்.
ஏறத்தாழ 5 மைல்கள் தூரம் நான் கற்களின் மேல் பயணம்பண்ணி 12 மணி சுமாருக்கு “தாராமாராங்” (Taramarang) என்ற கிராமத்தை வந்தடைந்தேன். இது கடல் மட்டத்திற்கு மேலே 4600 அடிகள் உயரத்தில் உள்ளது. கிராமத்திற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய ஆறு ஓடுகின்றது. அதின் மேல் ஒரு அழகான தொங்கு பாலமும் உண்டு. இவ்விடத்திலுள்ள ஒரு சிறிய மண்வீட்டின் சின்னஞ் சிறிய மேல் மச்சியில் நான் அன்று தங்கினேன். நீலகிரி மலை வாழ் தோடர்கள் தங்கள் மிகச் சிறிய வாசலுள்ள வீட்டினுள் நுழைந்து செல்லுவதைப் போலவே இந்த வீட்டிலும் கஷ்டத்துடன் செல்ல வேண்டியதாகவிருந்தது. என் கால்கள் இரண்டும் தொடர்ந்து பயணம் செய்ய இயலாமல் அத்தனை வலியுடனிருந்தபடியால் அன்று இரவு தாராமாரங்கிலேயே நான் தங்கினேன். ஆற்றிற்குச் சென்று துணிகளைத் துவைத்து நானும் குளித்துவிட்டு நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து ஆண்டவர் சமூகத்தில் மிகுதியான நேரத்தை ஜெபத்திலும், சங்கீதப் புஸ்தகத்தை வாசித்து தியானிப்பதிலும் செலவிட்டேன்.
இந்த தாராமாராங்கிலும் தேவப் பணி புரிய தேவ கிருபை பெற்றேன். இங்கு சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களில் னுறயசமைய ளுhசநளவாய என்ற பள்ளி மாணவன் முக்கியமானவன். இவனை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள். நான் தாராமாராங்கிற்கு ஆத்துமாக்களை கர்த்தருக்கென்று பிடிக்கச் சென்றிருக்க மேற்கு ஜெர்மனியிலிருந்து ஒரு பள்ளி ஆசிரியரும், அவரது மனைவியும் நேப்பாள நாட்டின் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்க அங்கு வந்திருந்தார்கள்.
கிறிஸ்தவர்களாகவிருந்தபோதினும் முழுமையாக தேவனற்றவர்களாகவே ஜீவிக்கும் இந்த மக்களுக்கு இயேசு இரட்சகரைப்பற்றி விரிவாகக் கூறி அவர் என் வாழ்க்கையில் செய்த அதிசயங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து இனி ஆண்டவருடைய பிள்ளைகளாக ஜீவிக்கப் போவதாக என்னிடம் உறுதி சொன்னார்கள். தேவன்தான் அவர்களில் கிரியை நடப்பிக்க வேண்டும்.