தேவனுடைய சுவிசேஷத்திற்கு தனது கதவுகளை மூடிக்கொண்டுள்ள நேப்பாள தேசத்தில் சர்வ வல்ல தேவன் என்னைக்கொண்டு நடத்திய தேவ ஊழியங்களின் சில நீங்காத நினைவுகள்
கடந்த கால நாட்களில் ஆண்டவரின் அளவற்ற அன்பின் கிருபையால் நேப்பாள நாட்டின் கடையாந்திர கிராமங்கள் வரை நான் ஆண்டாண்டு தோறும் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களுடன் இரகசியமாகத் தனியனாகச் சென்று சொல்லொண்ணா பாடுகள், கஷ்டங்களுடன் கால் நடையாக நடந்து சென்று தேவ ஊழியங்களைச் செய்தேன். அப்படி நான் சென்று ஊழியம் செய்த ஊழியங்களின் தெளிவான விவரணங்களை நான் நமது “தேவ எக்காளம்” பத்திரிக்கையில் ஒழுங்காக அந்த நாட்களில் எழுதி வந்ததை தேவ மக்கள் நன்கு அறிவார்கள். ஆண்டுகள் பல கடந்து சென்று விட்டபடியால் அநேக கர்த்தருடைய பிள்ளைகள் அதை வாசிக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
எனது சுய சரிதையை எழுதும் இந்த நேரத்தில் கடந்த காலத்தில் நேப்பாளத்தில் நான் தேவ கிருபையால் மேற்கொண்ட ஊழியங்களின் ஒரு சில பகுதிகளை மாத்திரம் கர்த்தருக்கு மகிமையாகவும், உங்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும் இங்கு குறிப்பிடுகின்றேன். ஜெபத்துடன் வாசித்து அன்பின் பரம தகப்பனுக்கு துதி செலுத்துங்கள். அங்கு அந்த நாட்களில் விதைக்கப்பட்ட ஜீவ வித்துக்களின் பலனை பரலோகில் நாம் ஓர் நாள் காண அன்பாக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
நியூ ஜல்பாய்குரி ரயில் நிலையத்தில் செலவிடப்பட்ட இராக்காலம்
என்னை ஏற்றி வந்த “டின்சுக்கியா” விரைவு இரயில் வண்டி நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்திய நேரத்தில் மேற்கு வங்காள மாநிலத்தின் நியூ ஜல்பாய்குரி ஜங்ஷனைச் சென்றடையும் என்று நான் பயணம் செய்த இரயில் பெட்டியிலுள்ள பிரயாணிகள் பேசிக்கொண்டனர். எனவே, நான் அந்த இரவு முழுமையையும் தூக்கமின்றி கண் விழித்து இருக்க வேண்டியதானது. இரயில் வண்டி சற்று நீண்ட நேரம் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷன்களையும் நான் கருத்துடன் கவனித்து அதின் பெயரைக்கேட்க வேண்டியதாயிருந்தது. நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனை ஏமாந்து விட்டுவிடுவோமா என்று மிகவும் கவனமாகவிருந்தேன். பரம தகப்பனுடைய கிருபையால் இரவு 2 மணிக்கு வண்டி நியூஜல்பாய்குரி ஜங்ஷனை வந்தடைந்தது. ஜெபத்துடன் வண்டியிலிருந்து இறங்கினேன்.
இரவின் அந்தப் பிந்திய நேரத்தில் ஸ்டேஷனிலிருந்து சிலிகுரி என்ற இடத்திற்குச் செல்ல இயலவில்லை. ஸ்டேஷனிலிருந்து எந்த ஒரு வாகனப்போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இல்லாதபடியால் எனது மூட்டை முடிச்சுகளுடன் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே அங்கு படுத்திருந்த மக்கள் கூட்டத்தினருடன் நானும் ஒருவனாகப் படுத்துக் கொண்டேன்.
இரயில் நிலையத்தில் என்னைக் கவர்ந்த ஓர் காட்சி
இரயில் நிலையத்தில் எனக்கு அருகில் படுத்திருந்த ஒரு மனிதனை நான் கண்ணோக்கினேன். அவன் ஆழ்ந்த தூக்கத்தி லிருந்தான். அவன் தனது செருப்புகளை யாரும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள் என்று எண்ணிப் பயந்து அவற்றைத் தனது கரத்தால் இறுகப்பற்றிப் பிடித்திருந்தான். அந்தக் காட்சி என் உள்ளத்தில் ஆழமாகக் கிரியை செய்தது. கையில் இறுகப்பற்றி பிடிக்க அந்த மனிதனுக்குக் கடைசியாகக் கிடைத்ததெல்லாம் இரண்டு பழஞ் செருப்புகள்தான். எத்தனை அருமையான ஆவிக்குரிய போதனை நமக்கு அதில் அடங்கிக் கிடக்கின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! இந்தப் பாழுலகிலும் மண்ணான மாந்தர் கிறிஸ்து இயேசுவிலுள்ள நித்திய ஜீவனைப்பற்றிப்பிடிப்பதற்குப் பதிலாக அழிந்து போகும் பொன், வெள்ளி, மற்றும் உலகத்தின் ஆசாபாசங்கள், லோகப்புகழ்ச்சி போன்ற பழந்தோல் செருப்புகளைத்தான் இறுகப்பற்றிப் பிடித்திருக்கின்றார்கள். எத்தனை பரிதாபம் பாருங்கள்!
“சிலிகுரி” வந்து சேர்ந்தேன்
நியூஜல்பாய்குரி இரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் படுத்திருந்த நான் அதிகாலை நேரத்தில் எழுந்து ஜெபித்துவிட்டு சிலிகுரி பட்டணத்திற்கு சைக்கிள் ரிக்ஷாவில் வந்து சேர்ந்தேன். இரவு முழுவதும் தூக்கமில்லாதிருந்த நான் மறு நாள் நன்கு ஸ்நானம் செய்து பூரணமான ஓய்வை எடுத்துக் கொண்டேன். அடுத்த நாள் எனது நேப்பாள பிரயாணத்தை தொடங்கத் தீர்மானித்தேன். பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நேப்பாள எல்கையில் அந்த நாட்டிற்குச் செல்லும் மக்கள் எவ்விதமாக பரிசோதனைக்குட்படுத்தப் படுகின்றார்கள் என்பதனைக் கண்டறிந்து வருவதற்கு நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஒருக்கால் சோதனை மிகவும் கெடுபிடியாக இருக்கும்பட்சத்தில் இரவோடிரவாக நேப்பாளத்திற்குள் திருட்டளவாகச் சுவிசேஷத்துடன் நுழைந்துவிட வேண்டுமென்று நான் வெகு திட்டமாகத் தீர்மானித்துக்கொண்டேன். இப்படித்தான் நான் செய்யப்போவதாக டில்லியிலுள்ள கர்த்தருடைய பிள்ளைகளிடமும் நான் சொல்லிவிட்டு வந்தேன். இவ்விதமான எனது யோசனைகள் எத்தனை முட்டாள்தனமும், பெரிய ஆபத்துமானவை என்பதை பின்னர் நான் அறிந்து உணர்ந்து கொண்டேன். நான் எவ்வளவோ விரும்பியும் அன்பின் ஆண்டவர் நேப்பாள எல்லைக்குச் சென்று அங்கு நடக்கும் போலீசாரின் கெடுபிடியான சோதனைகளைக் கண்டு வர அனுமதிக்கவே இல்லை. அப்படி நான் போய் பார்த்து வந்திருந்தால் பின் வந்த நாட்களில் மிகவும் கஷ்டங்களுக்கும், கண்ணீர்களுக்கும் நான் ஆளாகியிருக்க வேண்டியதாயிருந்திருக்கும்.
“நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” (ஏசாயா 36 : 4)
நான் நேப்பாளத்திற்கு புறப்பட்ட அந்த நாளில் என் மனதில் ஒரு விதப் போராட்டம் குடிகொண்டிருந்தது. அந்த தினத்தில் ஏதோ ஒரு காரியம் கட்டாயம் எனக்கு வந்து சம்பவிக்கப்போவதைப்போல நான் திட்டமாக உணர்ந்தேன். கர்த்தருடைய திட்டவட்டமான பரிசுத்த ஏவுதலின்படி அந்த நாளை புசியாமலும், குடியாமலும் நான் உபவாசத்தில் செலவிட்டேன். அந்த நாளில் நான் அதிகமாக ஜெபித்தேன். அந்தக் குறிப்பிட்ட நாளின் காலை தியான சமயம் நான் எனது வேதாகமத்தைத் திறந்தபோது ஏசாயா 36 ஆம் அதிகாரம்தான் சற்றும் எதிர்பாராதவிதமாக எனது தியானத்திற்கு வந்து சேர்ந்தது. எசேக்கியா ராஜாவுக்கு எதிராக அசீரியா ராஜா தனது சேனாபதியான ரப்சாக்கேயை பெரிய சேனையுடன் எருசலேமுக்கு அனுப்பி வைத்த காரியத்தையும், ரப்சாக்கே, எசேக்கியா ராஜாவுக்கு எதிராக “நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” என்று சவால் விடும் செயலும் என் உள்ளத்தைப் பெரிதும் தொட்டு நிற்பதாயிருந்தது. அசீரிய அரசனாகிய சனகெரிப்பும், ரப்சாக்கேயும் அவர்களது அனைத்து சேனைகளும் இறுதியில் கர்த்தரால் அழிக்கப்பட்டு முறியடிக்கப் பட்டது போலத் தேவன் தம்முடைய மகிமையின் சுவிசேஷத்திற்கு எதிர்த்து நிற்கும் சகல அந்தகார தீய சக்திகளையும் அழித்தே தீருவார் என்று நான் மிகவும் திட்டமாகக் கர்த்தருக்குள் விசுவாசித்தேன்.
நான் மேற்கு வங்காளத்திலிருந்து நேப்பாள எல்லைக்குள் பிரவேசித்த அந்த நாளின் அதிகாலையிலிருந்து ஆண்டவருடைய சமூகத்திற்கு நேராக மிகுந்த ஆத்தும வியாகுலத்தோடு என் இருதயத்தை தொடர்ந்து ஏறெடுத்த வண்ணமாகவே இருந்தேன். என்னையறியாமல் ஒரு வல்லமையான ஜெப ஆவி என் இருதயத்தை முற்றுகையிட்டிருந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகுந்த ஜெபத்துடன் மேற்கு வங்காளத்திலிருந்து என் நேப்பாளப் பிரயாணத்தைத் தொடங்கினேன்.
நேப்பாள நாட்டின் “காக்கர்பிட்டா” என்ற இடத்திற்குள் பிரவேசித்தேன்
மாலை 3 : 30 மணி சுமாருக்கு நான் நேப்பாளத்தின் எல்கைக்குள் இருக்கும் காக்கர்பிட்டா என்ற இடத்திற்குள் பிரவேசித்து விட்டேன். இந்த இடம் இந்தியாவிற்கும், நேப்பாளத்திற்கும் எல்கையில் அமைந்த ஒரு இடமாகும். காக்கர்பிட்டா என்ற அந்த நேப்பாள நுழை வாயிலை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
நேப்பாளத்திற்குள் செல்லக்கூடிய பயணிகளின் உடமைகளை நேப்பாள போலீசார் துருவித் துருவி ஆராயும் விதத்தைப் பார்த்தவுடன் நான் திகிலுற்றேன். காக்கர்பிட்டா என்ற அந்த நேப்பாள எல்லைக்குள்ளிருந்த கிராமத்தின் போலீஸ் நிலைய சிறிய மைதானத்தில் பயணிகளின் பொருட்கள் எல்லாம் வெளியே எடுத்துப் போடப்பட்டிருந்தன. பாவம், ஒரு நேப்பாள மனிதனின் மூட்டைக்குள் இருந்த உப்புகூட வெளியே கொட்டப்பட்டிருந்தது. இவற்றை எல்லாம் கண்ட நான் திகைத்துப் போனேன். அவ்விடத்தில் ஆறு நேப்பாள போலீசார் நின்று பொருட்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். எனக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை. இந்த இக்கட்டான நேரமானது அசீரியா ராஜாவின் சேனாதிபதியான ரப்சாக்கே எசேக்கியா ராஜாவிற்கு எதிராக எழுப்பின “நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” என்று அறை கூவின வண்ணம் சத்துருவாகிய பிசாசும் எனக்கு எதிராக சவால்விடும் நேரமாகவிருந்தது.
என்னை முற்றிலும் ஆண்டவருடைய காயப்பட்ட கரங்களில் ஒப்புவித்தவனாக என்னுடைய இரண்டு பைகளையும் பரிசோதனைக்கு ஒப்புக்கொடுத்தேன். அங்கு இரண்டு நேப்பாள போலீசார் நின்று கொண்டிருந்தனர். இரண்டு போலீசாரில் ஒருவர் மட்டும் என்னுடைய பைகளைப் பரிசோதித்தார். ஒரு பையில் எனது துணிமணிகளையும், அடுத்த பையின் அடிப்பரப்பில் நேப்பாள சுவிசேஷப் பிரசுரங்களையும் அதற்கு மேலாகச் சில அற்பமான பொருட்களையும், முகப்பில் எனது மலை ஏற்றத்திற்குத் தேவையான 2 ஜோடி செருப்புகளையும் நான் வைத்திருந்தேன். துணிப்பையை அப்படியே நன்கு பரிசோதித்த போலீசார் மறு பையின் மேலுள்ள எனது செருப்புகள் போன்றவற்றைப் பார்த்ததும் அதற்கு மேல் பரிசோதனையைத் தொடராமல் பைகளை எடுத்துக்கொண்டு போகும்படிச் சொல்லிவிட்டனர். அப்பப்பா, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்குமிங்கும் சுற்றிப்பார்த்துப் பரலோகத்திற்கு நேராக ஒரு துதி ஏறெடுத்துவிட்டு மனமகிழ்ச்சியுடன் நேப்பாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்குச் செல்ல ஆயத்தமாயிருந்த பேருந்தை நோக்கி எனது இரண்டு பைகளையும் தூக்கிக்கொண்டு விரைந்து சென்றேன். என் நினைவு அதற்குள்ளாக நேப்பாளத்தின் தலை நகர் காத்மாண்டுவுக்கே சென்றுவிட்டது. நேப்பாளத்தில் நான் செய்யப் போகின்ற தேவ ஊழியங்களைப்பற்றிச் சிந்தித்து மனமகிழ்ந்தேன். ஆனால் அந்தோ! எனது மனமகிழ்ச்சி, ஆனந்த பரவசம் எல்லாம் கல்லின் மேல் இட்ட கலமாக ஒரு கணப்பொழுதில் நொறுங்கிப்போய்விட்டது. எங்கிருந்தோ இரு கரத்தையும் தட்டி ஒலி எழுப்பிச் சத்தமிட்டுக் கூப்பிடும் குரலைக் கேட்டுப் பின்னுக்கு திரும்பிப் பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப இயலவில்லை. போலீசார் இருவர் என்னைக் கைதட்டி அழைத்தனர். நான் பயத்துடன் அவர்களை நோக்கி நடந்தேன். “உன் பைகளை சோதனை போட வேண்டும். காவல் நிலயத்துக்கு நட” என்று அவர்கள் கூறினர். “ஏற்கெனவே என் பைகள் இரண்டும் போலீசாரால் நன்கு பரிசோதனை செய்யப்பட்டாயிற்று. இப்பொழுது தான் நான் அங்கிருந்து வருகின்றேன்” என்று நான் பதிற் கூறினேன். “அது வேறே சோதனை, இங்கும் சோதனை உண்டு” என்று என்னைக் கூட்டிச்சென்றார்கள்.
அங்கு என் பைகள் இரண்டையும் அப்படியே வைத்துப் பையிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே வெளியே எடுத்து வைத்தனர். துணிப் பையிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்த பின்னர் அடுத்த பையிலுள்ள சுவிசேஷப் பங்குகள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்துப் பைகள் இரண்டையும் காலி செய்து போட்டிருந்தனர். மழையில் சுவிசேஷப் பிரதிகள் நனைந்து பழுதுபட்டுவிடாமலிருக்கும்படியாக நான் பாலிதீன் பிளாஸ்டிப் பைகளைத் தைத்து பிரதிகளை அதற்குள் வைத்துக் கட்டுக்கட்டாகக் கட்டி வைத்திருந்தேன். கட்டு கட்டாக அவற்றைப் பரவலாகத் தரையிலே போட்டிருந்தபடியால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அவற்றைக் காணக் கூடிவிட்டனர். அவைகள் என்னவென்று நேப்பாள போலீசார் என்னிடம் கேட்டனர். கிறிஸ்தவப்பிரசுரங்கள்என்று சொன்னதும் அவர்கள் முகங்கள் வேறுபட்டது. வாத்துக்களை கழுத்தைப்பிடித்து தூக்கிக் கொண்டு போவது போல சுவிசேஷப் பிரதிக் கட்டுகளைப் பிளாஸ்டிக் பையின் நீண்ட காம்புகளைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு ஒரு அறைக்குள் கொண்டு சென்றனர். அனைத்தையும் கொண்டு சென்றதன் பின்னர் நான் எனது துணிமணிகளை எல்லாம் மற்றப் பையில் எடுத்துக் கொள்ள அவர்கள் சொன்னார்கள். என்ன நடக்கப் போகின்றது என்று எனக்கு ஒன்றும் தெரியாது. பிடிபட்ட கள்ளனைச் சுற்றி நிற்பது போல மக்கள் கூட்டம் என்னை வளைத்து நின்றது. கூட்டமான மக்களைக்கண்டதும் நான் வியர்த்துப்போனேன். வியர்வை என் முகத்திலிருந்து தாராளமாக வழிந்தோடிக் கொண்டிருந்தது. புசியாமலும், குடியாமலும் உபவாசத்திலிருந்த நான் என் இருதயத்தை தேவனுக்கு நேராக சதா ஏறெடுத்தவண்ணமாகவிருந்தேன்.
இப்பொழுது என்னைப் போலீசார் உயர் போலீஸ் அதிகாரிக்கு முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அவருடைய மேஜையில் அடுக்கடுக்காகச் சுவிசேஷப் பிரதிகளடங்கிய கட்டுகளைக் குவித்துப்போட்டிருந்தனர். அந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்கள் கொஞ்ச நேரம் என்னை அப்படியே ஏற இறங்கப் பார்த்துக் கொண்டேயிருந்தன. அந்தக் கண்கள் எப்படிப்பட்டக்கண்கள் என்பதனை நான் உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் என்று நினைக்கின்றேன். அவருடைய முகம் அப்படியே சிவந்தது. அவருடைய அதிகாரம் அங்கு மேலோங்கி நின்றது. தனக்கு முன்பாக என்னைக் கைகட்டி நிற்கும்படிச் சொன்னார். அப்படியே நான் கைகட்டி நின்றேன். எங்கள் இருவரின் சம்பாஷணை கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:-
போலீஸ் அதிகாரி:- “இவைகள் எல்லாம் என்ன?”
பதில்:- “கிறிஸ்தவ நற்செய்தி பிரசுரங்கள்”
அதிகாரி:- “இவைகள் உனக்கு எங்கு கிடைத்தன?”
பதில்:- “இந்தியாவிலுள்ள செக்கந்திராபாத் என்ற இடத்தில்”
அதிகாரி:-“இவற்றை இந்த நாட்டிற்குள் எதற்காகக் கொண்டு வந்தாய்?”
பதில்:- “நேப்பாளத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு கொடுப்பதற்காக” (இங்கு நான் எனது உண்மையான நோக்கத்தைச் சொல்லவில்லை)
அதிகாரி:-“நேப்பாளத்தில் கிறிஸ்தவர்களா, என்ன வேடிக்கை! அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்?”
பதில்:- “எங்கிருக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நேப்பாளத்தில் கிறிஸ்தவர்கள் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்”
அதிகாரி:-“அவர்களின் தலைவனுடைய பெயரை நீ எனக்குச் சொல்லுவாயா?”
பதில்:- “தலைவர் யார் என்று எனக்குத் தெரியாது”
அதிகாரி:- “அங்குள்ள கிறிஸ்தவர்கள் கடவுளைக்கும்பிட வருகின்ற இடம் உனக்குத் தெரியுமா?”
பதில்:- “எனக்குத் தெரியாது”
அதிகாரி:- “இந்த நாட்டிற்குள் வந்து இந்தக் காரியத்தைச் செய்ய உனக்குப் பணம் கொடுப்பது யார்? “
பதில்:- “நான் என் இஷ்டப்படி என்னளவில் வந்தேன்”
அதிகாரி:- “நீ ஒரு முகமதியனா?”
பதில்:- “நான் ஒரு இந்திய கிறிஸ்தவன்” அதற்கு அத்தாட்சியாக நான் எனது பாஸ்போர்ட்டைக் காண்பித்தேன்.
அதிகாரி:- “பாஸ்போர்ட்டை எல்லாம் இந்தக் காலத்தில் நம்புவதற்கில்லை. பணம் கொடுத்தால் பாஸ்போர்ட் கிடைத்து விடுகின்றது.”
(அதிகாரி என்னை “நீ ஒரு முகமதியனா?” என்று கேட்டதில் அர்த்தம் இருக்கத்தான் செய்தது. அது என்னுடைய தவறுதான். தாடி முடியுடன் நேப்பாளத்திற்குள் நுழைந்தால் சீக்கிய பயங்கரவாதி என்று நம்மைத் தப்பிதமாக எண்ணி வீண் தொந்தரவு கொடுப்பார்கள் என்று நான் என் மாம்சபிரகாரமாகச் சிந்தித்து காஷ்மீரின் தலை நகர் ஸ்ரீநரில் வைத்து எனது தாடியின் ரோமத்தைச் சற்று கட்டையாக வெட்ட ஆவல் கொண்டு காஷ்மீரின் முஸ்லீம் பார்பரிடம் உட்கார்ந்தேன். அவன் என் முகரூபத்தை முஸ்லீமைப் போலாக்கிவிட்டான். கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்காமல் நம்முடைய சுயசித்தத்தின்படிக் காரியங்களை நாம் செய்யத் துணியும்போது அவர் நம்மை வெட்கப்படுத்திவிடுவார். எப்பொழுதும் நாம் அப்போஸ்தலனைப்போல அவர் சித்தம் கேட்டறிந்து (அப் 9 : 6) அதையேதான் செய்தல் நமக்கு ஆசீர்வாதமாக அமையும்)
அதிகாரி:- “நேப்பாளம் ஒரு வைராக்கியமான இந்து நாடு என்று உனக்குத் தெரிந்திருந்தும் இத்தனை துணிச்சலோடு எப்படி இங்கு வந்தாய்?”
பதில்:- …………………. பதில் சொல்லாமல் அமைதியாகவிருந்தேன்…………………..
இப்பொழுது அந்த போலீஸ் உயர் அதிகாரியின் முகத்தில் ஒரு அதிசய மாற்றத்தை நான் கண்டேன். அவருடைய காரசாரமான முழு சம்பாஷணையும் வெறும் வேடிக்கை வித்தை போல எனக்குத் தெரிந்தது. அவர் வாயிலிருந்து அதிசயமான விதத்தில் கீழ்க்கண்ட வார்த்தைகள் வெளி வந்தன. அவர் ஆங்கிலத்தில் பேசினார். (I release you and allow you to go to Nepal with your books. Be careful. Save yourself. You will be arrested at any time in Nepal as long as these books are with you. Remember you are in a Hindu Kingdom) “நான் உன்னை விடுவித்து நேப்பாள நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கின்றேன். இந்த கிறிஸ்தவ பிரசுரங்களை எல்லாம் நீ உன்னுடன் கொண்டு செல்லலாம். நேப்பாளத்தில் நீ மகா விழிப்பாயிரு. உன்னை நீயே பாதுகாத்துக்கொள். எந்த நிமிஷத்திலும் நேப்பாள போலீசார் உன்னைக் கைதுபண்ணக்கூடும். நீ ஒரு இந்து நாட்டிற்குள் இருக்கின்றாய் என்பதை உனது நினைவில் வைத்துக்கொள்” என்று தாம் சொன்ன வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப இரண்டு முறை கூறி என்னை விடுவித்து அனுப்பிவிட்டார். அல்லேலூயா.
நேப்பாள சிறைக்கூடத்திற்குச் செல்ல இருந்த என்னை அன்பின் பரம தகப்பன் அற்புதமாக விடுவித்தது மாத்திரமல்ல, அந்த நாட்டிற்குள்ளேயே நான் சென்று தேவ ஊழியம் செய்து மகிழ்ச்சியோடு திரும்பவும் கூட அத்தனை பெரிய அதிசயமும் செய்துவிட்டார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்! இந்த அற்புதச் செயலை ஆண்டவர் உங்களின் உருக்கமான ஜெபங்களைக் கேட்டுத்தான் நிகழ்த்தியிருந்தார்.
இந்த அற்புத மாற்றம் அந்த உயர் போலீஸ் அதிகாரியிடம் அத்தனை சடுதியாகக் காணப்படுவதற்கு மற்றொரு காரணத்தையும் நான் கவனித்தேன். அது என்னவெனில், அவர் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த சுவிசேஷப் பிரசுரங்களில் ஒன்றான “இன்று நீ மரித்தால் உன் நித்தியத்தை எங்கே கழிப்பாய்?” என்ற நேப்பாள மொழி பிரதி ஒன்றை நான் அவருக்கு முன்பாக நிறுத்தப்படுவதற்கு முன்பாக அவர் எடுத்துப் படித்து முடித்து தனக்கு முன்னர் வைத்திருப்பதை நான் கவனித்தேன். அல்லேலூயா. அவர் அதை தனக்கென்று வைத்துக் கொண்டார். கடைசிவரை அது அவருக்கு முன்பாகவேதானிருந்தது. என்னிடம் அதைத் தரவே இல்லை. நிச்சயமாகவே அன்பின் கர்த்தர் அந்தச் சுவிசேஷ பிரதியின் மூலமாக அவர் உள்ளத்தில் பேசியிருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன். இல்லையென்றால் அவர் என்னைக் கட்டாயம் சிறைக்கூடத்திற்கே தள்ளியிருப்பார். அதில் சந்தேகமே இல்லை.
நேப்பாள தேவ ஊழியத்தில் முதன் முதலாவதாகச் சுவிசேஷ பிரசுரத்தைப் பெற்றுத் தேவ ஊழியத்தை ஆரம்பித்து வைத்த பாக்கியம் அந்த போலீஸ் அதிகாரியைத்தான் சேரும். அந்த அன்புள்ளம் கொண்டோனுக்கு என் ஆழ்ந்த அன்பின் நன்றியைத் தெரிவித்துவிட்டு என் இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு இரவில் காத்மாண்டு செல்லும் பேருந்து பயணத்திற்கான எனது டிக்கெட்டை எடுக்கச் சென்றேன். அந்த நாள் முழுவதும் எதுவும் புசியாமலுமிருந்த நான் என் உபவாசத்தை முடித்து ஏதாகிலும் புசிக்கலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்ததோர் சின்ன ஹோட்டலுக்குள் சென்றேன். எனது இரண்டு பைகளையும் கண்ணுற்ற அந்த ஹோட்டல்காரர் “உங்கள் பைகளை போலீசார் சோதனை போடவில்லையா?” என்று என்னிடம் கேட்டார். “இரண்டு இடங்களில் போலீசார் சோதனை போட்டுவிட்டார்கள்” என்று நான் பதிற் கூறினேன். “சோதனை போட்டதற்கு அடையாளம் என்ன இருக்கின்றது? உடனடியாகப்போய் பைகளைப் போலீசாரிடம் கொடுத்து சீல் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் வழியில் கடும் துன்பங்கள் அனுபவிக்க நேரிடும்” என்று சொன்னார். அதின்படி நான் உடனடியாகப் போலீசாரிடம் சென்றேன். அவர்கள் என் இரு பைகளுக்கும் நல்ல முறையில் அவற்றின் முகப்புப் பாகத்தில் நேப்பாள அடையாள அட்டைகளைப் பொருத்தி அரக்கு சீல்களை வைத்துக் கொடுத்தனர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அந்தச் சீல்கள் என் பைகளுக்கு வைக்கப்பட்டிராத பட்சத்தில் நான் நேப்பாளத்திற்குள் பிரவேசித்திருக்க முடியாது. இடையிலேயே நேப்பாள போலீசார் என்னைக் கைது செய்து பையினுள்ளிருந்த கிறிஸ்தவ பிரசுரங்களின் காரணமாக என்னைச் சிறைக்கூடத்திற்குள் போட்டிருப்பார்கள்.
அன்று இரவில் பேருந்து காத்மாண்டுவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் என் இரு பைகளிலும் அரசாங்க முத்திரை உள்ளதா என்று போலீசார் வந்து பரிசோதித்தனர். என்னை ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூங்கில் தட்டியால் அடைக்கப்பட்ட சிறிய குடிலுக்குள் என்னைப்போகச் சொன்னார்கள். உள்ளே இரண்டு போலீசார் ஜவான்களைப்போல நின்று கொண்டிருந்தனர். தரையிலே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு புகையைத் தாராளமாக விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் என்னை உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் தடவிச் சோதித்த பின்னர் காத்மாண்டு செல்ல அனுமதித்தனர். பேருந்து புறப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு என் தோள் பையை நான் தவற விட்டிருந்த நினைவு எனக்கு வந்தது. அதற்குள்ளே தான் எனது பாஸ்போர்ட் மற்றும் பணம் போன்றவை இருந்தது. திருடப்பட்டப் பால் கட்டியைத் தந்திரப் பூனைகள் இரண்டு பங்கு வைப்பதற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்த கதையைப் போல எனது பணத்தை நேப்பாள போலீசார் பங்கிடச் சமயம் பார்த்துக்கொண்டிருந்த நேரம் நான் போய்ச் சேர்ந்தேன். அவர்கள் இருவரும் அதினைத்தர மறுத்தார்கள். உன்னுடைய பை அல்ல என்று அவர்கள் என்னிடம் வாதாடினார்கள். “அது என்னுடைய பை, அதற்குள்ளாக எனது புகைப்படத்துடன் கூடிய பாஸ்போர்ட் உள்ளது” என்று கூறினேன். பாஸ்போர்ட் புகைப்படத்தையும் என்னையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தெய்வாதீனமாக என் பையை அவர்கள் என்னிடம் திரும்பத் தந்தார்கள். பையைப் பெற்று வந்து ஜெபத்துடன் பேருந்தில் அமர்ந்தேன்.
இரவு 7 மணி சுமாருக்கு பேருந்து காத்மாண்டுவுக்குப் புறப்பட்டது. அன்று பகற்காலத்தில் எனக்கு நிகழ்ந்த காரியங்களையும், அவை யாவற்றிலும் அருமை நேச இரட்சகர் எனக்குத் துணையாக நின்று என்னை வழி நடத்திப் பாதுகாத்து வந்த ஆச்சரிய செயல்களையும் நான் எண்ணி அவருக்குத் துதி செலுத்தினேன். ஆனால், அடுத்த கோணத்தில் மனுஷீக நிலையில் நான் கடந்து வந்த துயரத்தை எண்ணிக் கண் கலங்கி நின்றேன். கண்ணீர் என் கண்களை மறைத்து நின்றது. அந்த நேரம் என் பரலோக அன்புத்தந்தையின் தேவ சமாதானம் என் உள்ளத்தை நிறைத்தபடியால் அவரில் ஆறுதல் அடைந்தேன்.
“கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள். அள்ளித் தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்” (சங்கீதம் 126 : 5, 6)