நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்
எனது பரிசுத்த தகப்பனார்
ஒரு சமயம் ஒரு கிறிஸ்தவ வாலிபத் தம்பி என்னண்டை வந்து தனது தகப்பனாரின் துன்மார்க்க ஜீவியம் காரணமாக தானும் தனது உடன் பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் தெருவில் தலை குனிந்து நடக்க வேண்டிய அவமானமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மிகுந்த வேதனையுடன் என்னிடம் சொன்னார்கள். அந்த தம்பி ஒரு குருவானவருடைய மகன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் தாயார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உயிரோடு இருக்கும்போது அவர்களின் குருவானவர் தந்தை ஆலயங்களில் ஆராதனைகள் நடத்திக்கொண்டும், சபை மக்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த இராப்போஜனத்தைப் பரிமாறிக் கொண்டும் அதே சமயம் ஒரு வாலிபப் பெண்ணுடன் அருவருப்பான தகாத உறவை வைத்திருப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன். பெற்ற தகப்பனுடைய துன்மார்க்கமான வாழ்க்கையின் காரணமாக பிள்ளைகள் சமுதாயத்தில் தலை குனிந்து வெட்கத்துடன் நடக்க வேண்டிய துயர நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எத்தனை கொடும் வேதனையான காரியம் பாருங்கள்!
ஆனால், அதே சமயம் பரிசுத்தமுள்ள பெற்றோர்களின் தேவபக்தியான வாழ்க்கையால் பிள்ளைகள் அடையும் ஆசீர்வாதம் எத்தனை அனந்தம் என்பதையும் நாம் நன்கு அறிவோம். இந்த உலகத்தை கடந்து சென்ற ராட்சத தேவ மனிதர்கள் பலரும் தங்கள் தாய் தந்தையரின் உருக்கமான ஜெபங்களாலும், அவர்களது பரிசுத்த ஜீவியத்தாலும் இரட்சிப்பைக் கண்டடைந்து கர்த்தருக்காக பலத்த காரியங்களை செய்தவர்கள் ஆவார்கள். ” நீங்கள், எப்படி ஆண்டவருடைய இரட்சிப்பைக் கண்டடைந்தீர்கள்?” என்று ஒருவர் ஒரு கிறிஸ்தவ சகோதரனிடம் கேட்டபோது “நான் எந்த ஒரு பிரசங்கத்தினாலோ அல்லது எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டதினாலோ இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய பரிசுத்தமும், பக்தியுமுள்ள தாயாரின் பரிசுத்த வாழ்க்கை என்னை ஆண்டவரை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள என்னை வழிநடத்தியது ” என்று சொன்னார்களாம். எத்தனை உண்மையான வார்த்தை!
உங்கள் சகோதரனாகிய எனக்கு இந்த உலகத்தில் ஒரு பரிசுத்த பெற்றோரின் புதல்வனாகப் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதற்காக நான் என் ஆண்டவரின் பொற்பாதங்களை முத்தமிட்டுத் துதித்து வருகின்றேன். எனது பரிசுத்த தப்பனார் தான் மரணமடைவதற்கு முன்னர் கடைசியாக எனக்கு எழுதிய இரண்டு கடிதங்களில் “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை” ( 1யோவான் 2 : 15 ) என்ற தேவ வாக்கும் அடுத்தபடியாக “மகனே, நம் அன்பின் நேசர் பரிசுத்தமுள்ள பரம தகப்பன். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவருடைய உள்ளத்தை உனது பாவச் செயல்களால் கொஞ்சம் கூட துக்கப்படுத்திவிடாதே” என்றும் எழுதியிருந்தார்கள். தன் பரிசுத்த கர்த்தரை என் தகப்பனார் தன்னைப் பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து பெற்ற தனது தாயிலும் மேலான தாயாக (உபாகமம் 32 : 18 ) வைத்து தன் வாழ்வில் அந்த அன்பரை நேசித்து கனப்படுத்தி வந்திருந்தார்கள். ஒரு சிறு பிள்ளை தன்னைப் பெற்ற தாயுடன் எப்பொழுதும் சேர்ந்து இருப்பது போல எனது தந்தையும் அன்பின் ஆண்டவரோடு செடியும் கொடியுமான பாசப்பிணைப்போடு முடிவுபரியந்தம் இருந்தார்கள்.
பெற்றோரின் கடைசி புதல்வன்
எனது தகப்பனார் அவர்களுடைய பெற்றோருக்கு கடைசி புதல்வனாவார்கள். தாத்தா பாட்டிக்கு மொத்தம் 9 பிள்ளைகள். 1905 ஆம் ஆண்டின் புத்தாண்டு முதல் தினத்தன்று என் தகப்பனார் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தபடியால் பிள்ளைக்கு நவமணி என்ற பெயர் சூட்டி அதினுடன் தாவீது என்ற துணைப் பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள். எனது தாத்தாவின் பெயர் கோவில் பிள்ளை, பாட்டியின் பெயர் மேரி என்பதாகும். இருவரும் ஆசிரியர்களானபடியால் பெற்றோரோடு பிள்ளைகள் ஆசிரிய வேலை மாற்றம் காரணமாக பற்பல ஊர்களுக்கும் சென்றிருக்கின்றார்கள். விருதுநகர், ஆனந்தபுரம், பழங்குளம், கல்லுவிளை, பிள்ளைவிளை போன்ற பல ஊர்களில் ஆசிரியர்களாக வேலை பார்த்திருக்கின்றனர். ஆங்காங்கு செல்லுமிடங்களிலுள்ள பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு அங்குள்ள தேவ ஆலயத்தில் தாத்தா ஆலய திருப்பணிவிடையையும் செய்து வந்திருக்கின்றார்கள். கோவில் பிள்ளை உபதேசியார் என்றே தாத்தா அழைக்கப்பட்டிருந் திருக்கின்றார்கள். கதாகாலஷேபம் நடத்தி தேவனுடைய சுவிசேஷத்தை சபையினருக்கு அறிவிப்பதில் தாத்தா பெயர் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றது. தாத்தாவின் குரல் வளம் மிகவும் இனிமையாக இருக்கும் என்றும் வயலின் வாத்தியம் வாசிப்பதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்றும் தன்னுடைய இனிய குரலில் பாட்டுப்பாடி வயலின் வாத்தியத்தை அதற்கிசைந்தாற்போல் இசைத்துவிட்டால் “மயிலும் குயிலும் இலங்கும்” என்று சொல்லுகின்றார்கள். கதா காலஷேபத்திற்கு வேண்டிய பாடல்களை எல்லாம் தாத்தாவே தேவ கிருபையால் யூகித்து எழுதி அதற்கு இசைந்த இராகத்தையும் அவர்களே உருவாக்கிக் கொள்ளுவார்களாம். என்னுடைய தந்தையின் குரலும் இனிமையான குரலானதால் கதாகாலஷேபத்தின் போது சிறுவனானக இருந்த என் தந்தை தன்னுடைய தகப்பனாருக்கு ஒத்தாசையாக பாடல்கள் பாடுவதுண்டாம்.
தனக்கு கடைக்குட்டி பிள்ளை என்பதால் எனது தாத்தா எனது தந்தையை செல்லப் பிள்ளையாக வளர்க்கவில்லை. பிள்ளைகளின் மேல் தகப்பனுக்குரிய அன்பும் பாசமும் உண்டு. ஆனால் குறும்பு செய்தால் அடி நன்றாக கொடுப்பார்களாம். அடிபட்ட முதுகுக்கு எனது பாட்டியம்மா நல்லெண்ணெய் போட்டு தடவிக் கொடுத்து கண்ணீரைத் துடைத்து ஆறுதல்படுத்துவார்களாம். எனது இளைய மகன் சால்ஸ் ஃபின்னியுடன் என் பரிசுத்த தகப்பனார் நின்று கொண்டிருக்கும் ஒரு படத்தை நீங்கள் காணலாம்.
எனது தகப்பனாரைக் குறித்த எனது பாலிய நினைவுகள்
எனது தகப்பனாரைக் குறித்த சில குழந்தைப் பிராய நினைவுகள் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று எனது தகப்பனாரின் உண்மையாகும். எனது தகப்பனார் நாசரேத்திலிருந்து ஆழ்வார்திருநகரி என்ற இடத்திற்கு ரயிலில் பயணம் செய்து தாம்பிரவர்ணி ஆற்றைக்கடந்து ஆழ்வார்தோப்பு என்ற எனது தாயாரின் ஊருக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது நான் சிறுவனாக எனது தாயாருடன் ஆழ்வார்தோப்பில் இருந்தேன். இரயில் பயணத்தின் போது அவர்களோடு பயணம் செய்த சக பயணி ஒருவர் தன்னுடைய பண முடிப்பை தவறுதலாக பெட்டியிலே விட்டுவிட்டு இறங்கிப் போய்விட்டார். அதைக் கண்டெடுத்த என் தகப்பனார் அதை அப்படியே தான் இறங்கிய ஆழ்வார்திருநகரி இரயில்வே நிலயத்தின் ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுத்து விபரம் சொல்லிவிட்டு வந்திருக்கின்றார்கள். அந்தச் செய்தியை பாட்டி(எனது தாயாரின் தாயார்) வீட்டிற்கு வந்து என் தகப்பனார் சொன்ன போது மனந்திரும்பாத, உலக ஆசை கொண்ட எனது தாய் மாமன்மார்கள் போன்றவர்கள் என் தகப்பனாரின் மேல் கசந்து கொண்டு அவர்களை மிகவும் கடிந்து கொண்டார்கள். “கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு உங்களுக்குக் கொடுத்தது, ஆனால் அதை நீங்கள் காலால் உதைத்து தள்ளிவிட்டீர்கள்” என்பது போன்ற வார்த்தைகளை எல்லாம் கூறினார்கள். ஆனால், என் தகப்பனார் அதைஎல்லாம் தனது காதிலே போட்டுக் கொள்ளாமல் அமைதியாக இருந்து கொண்டார்கள்.
அந்த நாட்களில் பக்கத்து ஊரிலுள்ள ஒரு மனிதன் ஓரிரு பேரைக் கொன்று பெரிய கொலை பாதகனாகவும், கொள்ளையனாகவும் சுற்றித் திரிந்தான். ஒரு சமயம் அவன் என் ஏழை தகப்பனாருக்கும், எங்கள் ஊரிலுள்ள மற்றொரு மனிதருக்கும் ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் இருவருடைய வீடும் தீக்கொழுத்தப்படும் என்றும் அவன் மிரட்டிக் கடிதம் போட்டிருந்தான். அவனுடைய மிரட்டலுக்குப் பயந்து எனது தகப்பனாரும், அடுத்த அந்த மனிதரும் ஒரு மாலை மயங்கும் நேரத்தில் பணத்தை அவன் குறிப்பிட்ட எங்கள் ஊரின் வடக்குப் பக்கத்திலுள்ள பாழடைந்த ஒரு வீட்டில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்தனர். அந்த நாட்களில் எனது தகப்பனார் இரட்சிக்கப்படவில்லை. இரத்த வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை சத்துரு எப்படியாய் தன்னிடமிருந்து அபகரிக்கின்றான் என்று தனக்குள்ளாக புலம்பிக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய கண்ணீரின் சம்பாத்தியத்தை இந்தவிதமாக இழந்து வந்தது எனது தகப்பனாருக்கும் அந்த மனிதருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத கொடும் வேதனையாக இருந்தது. அந்தோ! அந்த நாட்களில்தானே அந்த கொலை பாதகனை அவனுடைய சொந்த ஊர் மக்களே திடீரென ஒரு நாள் வெட்டிக் கொன்று போட்டனர். அத்துடன் அந்த கொலை பாதகனின் சரித்திரம் முற்றுப்பெற்றது. அந்த குழந்தைப் பருவ நினைவும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.
பிள்ளைகளாகிய நாங்கள் சிறு வயதில் இருந்தபோது என் தகப்பனார் எங்களுக்கு பக்தசிரோன்மணி சாதுசுந்தர்சிங்கைப்பற்றி விபரமாக கதை கதையாக கூறியிருக்கின்றார்கள். அந்த நாட்களில் அவர்கள் சொன்னது என் உள்ளத்தில் பசு மரத்தாணி போல் பதிந்து கொண்டுவிட்டது. காலப்போக்கில் சாதுசுந்தர்சிங்கின் பரிசுத்த பக்தி வாழ்க்கை என் கிறிஸ்தவ வாழ்க்கையை அதிகமாகத் தொட்டது.
தந்தையின் மனந்திரும்புதல்
என் தகப்பனார் எப்பொழுது, எப்படி மனந்திரும்பினார்கள் என்பது போன்ற தெளிவான விபரங்கள் எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், அவர்கள் சிறு பையனாக எங்கள் பக்கத்து ஊர் மெய்ஞ்ஞானபுரத்தில் உள்ள சி.எம்.எஸ். கிறிஸ்தவ மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே கர்த்தர் தன்னுடைய உள்ளத்தில் கிரியை செய்ததாக கூறுவார்கள்.
அந்த நாட்களில்தான் பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங் அவர்கள் என் தகப்பனார் படித்த அந்த பள்ளிக்கு விஜயம் செய்தார். அந்த சம்பவத்தை என் தகப்பனார் துலாம்பரமாகக் கூறுவார்கள். போக்கு வரத்து வாகன வசதிகள் இல்லாத அந்த நாட்களில் சாதுசுந்தர்சிங் மாட்டு வண்டியில் வந்தார் என்றும், அவர் வந்த வண்டியைவிட அவருடைய பிரசங்கத்தை உருது மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வந்த மொழி பெயர்ப்பாளனுடைய வண்டிதான் அழகாக இருந்ததென்றும் சொல்லுவார்கள். பள்ளிக்கு வந்த சுந்தர்சிங் ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து மாணவர்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் மட்டும் செலுத்தினார் என்றும், அவருடைய முகம் தேவ மகிமையால் பிரகாசித்தது என்றும் அவரைப் பார்த்தபோது ஏதோ ஒரு தேவ பிரசன்னத்தின் ஒளி தன்னுடைய உள்ளத்தை தொட்டுச் சென்றது என்றும் கூறுவார்கள். ஆண்டவர் என் தகப்பனாரை தம்முடைய சொந்த பிள்ளையாக அந்த நாளில்தானே தெரிந்து கொண்டார் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.
என் தகப்பனார் மனந்திரும்பாத ஆரம்ப நாட்களில் சுருட்டு அதிகமாக புகைப்பார்கள். “சந்திர விலாஸ்” என்ற பெயர் கொண்ட அவர்கள் புகைத்த கருஞ் சுருட்டின் பெயர் இன்றும் என் நினைவில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு கட்டு சுருட்டு புகைத்து விடுவார்கள். வேறு எந்த தீய பழக்கமும் அவர்களிடம் கிடையாது. வாலிப நாட்களில் தேவனுக்கு விரோதமான தனது பாவங்களால் அவருடைய உள்ளத்தை நன்கு புண்படுத்தியதுண்டு. ஆனால் என்று ஆவர்கள் ஆண்டவருடைய அடிமை ஆனார்களோ அன்றே சுருட்டு புகைக்கும் பழக்கம் அவர்களுடைய வாழ்விலிருந்து அடியோடு மறைந்தது.
என் தகப்பனார் இரட்சிப்பைக் கண்டடைந்ததும் தேவன் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் “செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 2 : 23 ) என்ற தேவ வார்த்தையின்படி கடைசி வரை தேவன் தம்முடைய பிள்ளையாகிய என் தகப்பனாரை தம்முடைய முத்திரை மோதிரமாக வைத்துக் கொண்டார். அல்லேலூயா.
உலகப்பிரகாரமான பிழைப்பினிமித்தம் என் தகப்பனார் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்கள். அவர்கள் மனந்திரும்பின உடன் தன் மளிகைக் கடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்த பீடி, சுருட்டு, சிகரெட், வெற்றிலை, பாக்கு, புகையிலை, கள்ளச் சாராயம் வடிக்க தேவையான தேவனுக்கு பிரியமற்ற பொருட்கள் அனைத்தின் விற்பனையும் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதினால் ஏற்படும் கடும் எதிர்ப்புகளை எல்லாம் என் தகப்பனார் சட்டை செய்யவில்லை. அதைப்போல அவர்கள் இரட்சிப்பைக் கண்டடைந்ததும் ஓய்வு நாளை மிகுந்த பரிசுத்தமாக ஆசரித்தார்கள். அந்த நாளில் தகப்பனாரின் மளிகைக் கடை முழு நாளும் அடைக்கப்பட்டிருக்கும். அந்த கர்த்தருடைய நாளில் பிள்ளைகளாகிய நாங்கள் வெளியே சென்று விளையாட அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் அன்று வேத வசனங்களை மனப்பாடமாகப் படித்து ஒப்புவிக்க வேண்டும். மற்ற நாட்களைப்போல வீண் வார்த்தைகள் எதுவும் வீட்டில் இருக்காது. கடை வியாபாரம் நடக்காது. அதின் காரரணமாக எரிச்சலடைந்த ஒரு சில பொல்லாத மக்கள் எங்கள் வீட்டில் கற்களை வீசி எறிந்தார்கள். ஆனால், என் தகப்பனார் அதற்கெல்லாம் சற்றும் அஞ்சவில்லை.
பண ஆசையின் வாசனையே அறியாத தேவ பக்தன்
உலகப்பிரகாரமான மக்களைப் போல பணம் காசுகளை சம்பாதிக்க வேண்டும், நிலபுலங்களை வாங்க வேண்டும், ஆஸ்தி ஐசுவரியங்களை சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் என் தகப்பனாருக்கு கிஞ்சித்தும் கிடையாது. அவர்கள் இரட்சிக்கப் படுவதற்கு முன்புகூட அந்த நாட்டம் அவர்களுக்கு இல்லை.
தன்னுடைய தகப்பனார் (என்னுடைய பாட்டனார்) அவர்களுக்கு விட்டுச் சென்ற நல்ல செழிப்பான வயல் நிலங்கள், பதனீர் தரக்கூடிய நிறைய பனை மரங்கள், பயிர் வகைகளை விளைவிக்கக்கூடிய உடை மரங்கள் நிறைந்த காட்டுப்புற நிலங்களை எல்லாம் குடும்பச் செலவுகளுக்காக ஒவ்வொன்றாக விற்று விட்டார்கள்.
ஆஸ்தி, ஐசுவரியம், வீடு வாசல் போன்ற மாய லோக காரியங்களை யாரும் அவர்களிடம் பேசுவதைக்கூட அவர்கள் விரும்புவதில்லை. யாரும் அப்படிப்பேசினாலும் அந்த வார்த்தைகளைக் கேளாமல், சொல்லப்படும் வார்த்தைகள் எதற்கும் மறுமொழி கொடாமல் மௌனமாக இருந்துவிடுவார்கள். ஆசையோடு பேச வந்தவர்கள் வெட்கத்துடன் செல்லுவதைத் தவிர வேறு வழி இருக்காது. தன்னுடைய பிள்ளைகளாகிய எங்களிடமும் அந்த மாயாபுரி சந்தைச் சரக்குகளின் மாய ஆசை இருக்கக் கூடாது என்று அவர்கள் மனதார விரும்பினார்கள். ஒரு சிறிய உதாரணத்தைக் கவனியுங்கள்:-
எங்கள் வீட்டை ஒட்டி தென் பக்கமாக ஒரு பெரிய தரிசு நிலம் நெடுங்காலமாக பயிரிடப்படாமல் சும்மா கிடந்தது. அதை ஒரு மனிதர் விலைக்கு வாங்கி அதைப் பண்படுத்தி முதன் முதலாவதாக அந்தப் பூமியில் வாழைக்கன்றுகளை நட்டினார். அவருடைய நல்ல பிரயாசங்களின் காரணமாக வாழைகள் மடமடவென்று செழிப்பாக வளர்ந்து யாவரும் ஆச்சரியப்படும் வகையில் அது ஒரு பசுமை குலுங்கும் தோட்டமாகக் காட்சி அளித்தது.
அநேக மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் நான் என் பெற்றோரைக் காண்பதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். வறண்ட தரிசு நிலமாகக் கிடந்த அந்த பூமி வாழைகள் நிரம்பிய பசுமையும், செழிப்புமான தோட்டமாக மாறிவிட்டிருப்பதை நான் கண்டு ஆச்சரியமுற்று அதை என் உள்ளத்திற்குள் வைத்துக்கொண்டேன். என் தகப்பனாரிடம் நான் அதுபற்றி எதுவும் பேசவில்லை. என் பெற்றோரிடம் சில தினங்கள் நான் தங்கிவிட்டு மலைகளுக்குப் புறப்படும் சமயம் என் தகப்பனார் என்னிடம் “மகனுக்கு நான் ஒரு பரீட்ஷை வைத்திருந்தேன். அதில் நீ வெற்றி பெற்றுவிட்டாய்” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் அதின் விபரம் கேட்டபோது “நம் வீட்டுக்கு தென் பக்கத்தில் தரிசாகக் கிடந்த நிலத்தில் வாழைகள் பயிரிட்டு அந்த இடமே பசுமையான தோட்டமாக மாறியிருந்த போதினும் மகனுடைய உள்ளத்தில் அதைப் பற்றிய எந்த ஒரு கண்ணோட்டமும் செல்லவே இல்லை. உன் உள்ளம் அதில் ஈடுபாடு கொண்டு அதில் நீ கவர்ச்சிக்கப்பட்டு நீ வந்ததும் அதைக் குறித்து பரவசத்துடன் என்னிடம் பேசுவாய் என்று நான் பெரிதும் எதிர்நோக்கினேன். அதிருந்து உன்ஆவிக்குரிய வளர்ச்சியைக் கணக்கிட நான் பெரிதும் விரும்பினேன். ஆனால், நீ அதைக் குறித்து ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. மெய்யாகவே உனக்கு உலகக் காரியங்களில் நாட்டமில்லை” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னார்கள்.
கர்த்தருடைய வைராக்கிய விசுவாச மாந்தன்
எப்பொழுது தேவன் என்னுடைய தந்தையை தனது சொந்த பிள்ளையாக தெரிந்து கொண்டாரோ அன்றைக்கே மருந்து எடுப்பதை அவர்கள் விட்டுவிட்டார்கள். மரணபரியந்தம் அதின் பின்னர் அவர்கள் மருந்தை தொடவே இல்லை. இடைப்பட்ட நீண்ட ஆண்டு காலங்களில் எத்தனையோ தடவைகள் மரணத்திற்கேதுவான வியாதிகள் அவர்களைச் சந்தித்ததுண்டு. ஆனால் மருத்துவ சிகிட்சையையும், மருந்தை உட்கொள்ளுவதையும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள். தன்னுடைய விருத்தாப்பிய நாட்களில் கண் பார்வை மங்கினபோது கண்களை ஆப்பரேஷன் செய்து கொண்டால் நல்ல தெளிவான பார்வை கிடைக்கும் என்பதையும் கூட அவர்கள் புறக்கணித்து தன்னுடைய கண் பார்வைக்காக கர்த்தரையே எதிர் நோக்கி அவரிடமிருந்தே கடைசியாக பார்வையையும் அற்புதமாகப் பெற்றுக் கொண்டார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தேவ மைந்தனின் சிலுவைப்பாடுகளை நினைவுகூர்ந்து லெந்து கால நாட்களான 40 நாட்களும் மரக்கறி ஆகாரத்தை மாத்திரம் உட்கொண்டு அந்த நாட்களை மிகுந்த பக்தி விநயமாக செலவிட்டார்கள். அது மாத்திரமல்ல, வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் எளிமையான காய்கறி ஆகாரம்தான் கடைசி வரை எடுத்தார்கள். மேற்கண்ட நியமத்திலிருந்து அவர்கள் சற்றும் விலகவே இல்லை. அது நீங்கலாக அவர்கள் உணவின்றி உபவாசித்த நாட்களும் ஏராளம் உண்டு. பக்கத்து ஊர்களுக்கு தேவ ஊழியம் செய்யச் செல்லும் போதும் ஊழியம் முடியும் வரை ஒரு துளி தண்ணீர் தானும் குடியாமல் வீட்டிற்கு வந்தே ஆகாரம் புசிப்பார்கள். ஊழியத்திற்குச் செல்லும் இடங்களில் கொடுக்கப்படும் காணிக்கைகளை அவர்கள் ஒருக்காலும் வாங்க மாட்டார்கள்.
பெற்றோரை நேசித்து கனப்படுத்திய அன்பான மகன்
மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்று வளர்த்த தாய் தந்தையரை அடித்து மிதித்து அவமானமாகப் பேசும் காலம் இது. சமீபத்தில் ஒரு மகள் எனக்கு எழுதிய கடிதத்தில் “ஐயா, எனது அண்ணன் எனது அம்மாவை அடித்துக் கீழே தள்ளியதால் அம்மா 28 நாட்கள் சுகயீனமாக கட்டில் கிடையாகக் கிடந்தார்கள்” என்று எழுதியிருந்தார்கள். பத்து மாதம் சுமந்து பெற்று பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்ததின் பிரதி பலன் அது. பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் அன்புப் பெற்றோருக்கு செய்யும் மைம்மாறு அதுவேதான்.
என் தகப்பனார் தன்னுடைய அருமைத் தாய் தந்தையரை அதிகமாக நேசித்தார்கள். தாய் தந்தையரின் மரணபரியந்தம் அவர்களோடிருந்து அவர்களுக்கு ஒரு மகனைப்போல அல்ல, ஒரு பாசமுள்ள மகளைப்போல பணிவிடை செய்தார்கள். அவர்களின் தாயாருக்கு சர்க்கரை வியாதி காரணமாக தலையில் வந்த புண் சுகமாகாமல் சீழ் வைத்து அதிகக் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். கட்டில் கிடையாகக் கிடந்த தாயாரின் துர் நாற்றம் வீசும் அந்தப் பெரிய புண்ணின் சீழை எல்லாம் சற்றும் முகம் கோணாமல் தன் கரங்களால் சுத்தம் செய்து மருந்து போட்டுக் கட்டி பராமரித்து வந்திருக்கின்றார்கள். அந்தக் காட்சியை அருகில் வந்து பார்க்க மனமில்லாமலும், கட்டில் கிடையாகக் கிடக்கும் தனது பெற்ற தாயையே பார்க்க விரும்பாமலும் வெளியே நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு என் தகப்பனாரின் மூத்த அக்கா கடந்து செல்லும்போது எனது தந்தை, தனது தாயை விட்டு நீங்காமல் அவர்களோடு இரவும் பகலும் இருந்து அவர்களைக் கடைசி வரை கவனித்திருக்கின்றார்கள். “பிள்ளைகள் எல்லாரிலும் கர்த்தர் உன்னைத்தான் அதிகமாக ஆசீர்வதிப்பார்” என்று அவர்கள் என் தகப்பனாரை ஆசீர்வதித்தார்களாம். அந்த ஆசீர்வாதம் மெய்யாகவே எனது தந்தைக்கு வந்து பலித்தது. “என் அருமைத் தாயார் என்னை மிக மிக அதிகமாக பாசத்தோடு நேசித்தார்கள். அந்த தாயின் அன்பை நான் ஒருக்காலும் மறக்கவியலாது. ஆனால், நான் அவர்களை மோட்சத்தில் காண மாட்டேன். காரணம், அம்மா ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வரவில்லை” என்று என் தகப்பனார் மிகவும் துக்கப்பட்டுச் சொல்லுவார்கள்.
என்னுடைய தாத்தா கோவில் பிள்ளை உபதேசியார் மரணத்துக்கு ஏதுவான சுகயீனமாகி எங்கள் ஊரிலிருந்து 4 மைல்கள் தொலைவிலுள்ள நாசரேத் ஊர் மிஷன் ஆஸ்பத்திரியில் இருந்திருக் கின்றார்கள். அவர்களின் வியாதிப்படுக்கையில் என் தகப்பனார் அவர்களோடிருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்திருக்கின்றார்கள். ஆனால், நோயின் கடுமை காரணமாக தாத்தா ஒரு நாள் இரவிலேயே மரித்துப்போனார்கள். போக்குவரத்து வாகன வசதியில்லாத அந்த நாட்களில் ஒரு வில் வண்டியில் தன்னுடைய தந்தையின் சரீரத்தை வைத்து இரவோடிரவாக தேரிக்காட்டுப் பாதை வழியாக வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். வண்டிக்காரன் மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கையில் என் தகப்பனார் வண்டிக்குப் பின்னர் தன் தகப்பனாரின் ஜீவனற்ற சடலத்தைக் கண்டு கண்ணீர் வடித்து அழுது கொண்டே வண்டிக்குப் பிறகே நடந்து சென்றதாகச் சொல்லுவார்கள். என் தாத்தா ஒரு மெய்யான தேவ பக்தன் என்றும், தன் மரணம் எப்பொழுது இருக்கும் என்பதை தான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே ஒரு நாள் மத்தியானம் எனது தகப்பனாரை எழுதுவதற்கு ஒரு நோட்டுப்புத்தகம் கொண்டு வரச் சொல்லி அனைத்துக் காரியங்களையும் திட்டமும் தெளிவுமாக எழுதச் சொல்லி கடைசியாக தனது கல்லறை எங்கே கட்டப்பட வேண்டும் என்றும் கூறிய பொழுது என் தகப்பனார் அழுது கொண்டே அந்தக் காரியங்களை தனது கரத்திலிருந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதினதாகச் சொல்லுவார்கள்.
வயதான பெற்றோரைக் கவனித்து அவர்களுக்கு பணிவிடை செய்வதற்காகவும், அவர்களுடைய வாழ்வின் இறுதி நாட்களில் அவர்களோடிருப்பதற்காகவும் உலகப்பிரகாரமான எந்த ஒரு தொழிலுக்கும் செல்லாமல் பெற்றோரது மரணபரியந்தம் அவர்களோடிருந்ததாக என் தகப்பனார் சொல்ல ஆச்சரியத்துடன் கேட்டிருக்கின்றேன்.
பெற்றோரை இத்தனையாக நேசித்து கனப்படுத்தின என் தந்தையை தேவனும் கனப்படுத்த தவறவில்லை. பாவியாகிய நானும், என் உடன்பிறந்த சகோதரிகளும் எங்களது தாய் தந்தையரை அவர்களுடைய விருத்தாப்பிய நாட்களில் வெகு அருமையாக வைத்துக் கொண்டோம்.
களங்கமில்லாத திருவசனமாகிய ஞானப்பாலின் மேல் வாஞ்சை கொண்ட தேவ பக்தன்
“உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி” (சங் 119 : 174 ) என்றார் சங்கீதக்காரர். என் பரிசுத்த தகப்பனார் கர்த்தருடைய வேதத்தை அதிகமாக வாசித்து தியானித்தார்கள். வேதத்தை பல தடவைகள் வாசித்து முடித்திருந்தார்கள். சங்கீதம் 38, 63, 84, 90, 91, 121 ஏசாயா 53 ஆம் அதிகாரம் புலம்பல் 3 ஆம் அதிகாரம் போன்றவைகள் அவர்களுக்கு மிகவும் விருப்பமான பகுதிகளாகும். வேதாகமத்தின் குறிப்பிட்ட பகுதிகளை எல்லாம் அவர்கள் மனப்பாடமாக படித்து வைத்திருந்தார்கள். வேதாகமத்தை மிகவும் பக்தி விநயமாக கரத்தில் எடுத்து ஜெபித்து வாசிக்க அமர்ந்தால் அப்படியே அதின்சத்தியங்களில் மூழ்கிவிடுவார்கள். அப்படி ஆசை ஆவலாக வாசிக்கும் சில காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
வயது சென்றுபோய் கண் பார்வை இழக்கப் போகின்றோம் என்பதை அறிந்த என் தகப்பனார் வேத புத்தகத்தை துரிதம் துரிதமாக வாசித்து முடித்தார்கள். கடைசியாக கண் பார்வை வேத புத்தகத்தை வாசிக்க இயலாத வகையில் தடைப்பட்டுப்போயிற்று. அந்த நாட்களில் வேத புத்தகத்தை அவர்கள் கரத்தில் எடுத்து வைத்து தான் மனப்பாடமாகப் படித்த பகுதிகளை சொல்லி கர்த்தருக்குள் மகிழ்ந்தார்கள். வேத புத்தகத்தை கரத்தில் எடுத்து ஜெபித்த பின்னர் அதை முத்தமிட்டே வாசிக்கத் தொடங்கி அதை முத்தமிட்டே மூடி வைப்பார்கள். அப்படி முத்தமிட்டுப் படித்ததின் காரணமாக கறைபடிந்த அவர்களின் பரிசுத்த வேதாகமம் இறுதியில் எனக்குக்கிடைத்தது. வேதத்தின் எந்தெந்த பகுதி எங்கே உள்ளது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கண் பார்வை குன்றியிருந்த நாட்களில் தான் படித்த பகுதிகள் மறந்து போகக்கூடாது என்பதற்காக அவ்வப்போது மற்றவர்களைக்கொண்டு அந்த வேத பகுதிகளை வாசிக்கச் சொல்லி திரும்பவும் அவற்றை தன் நினைவில் பசுமையாக்கிக் கொண்டார்கள்.
கண் பார்வை இழந்திருந்த அவர்களுக்கு தேவன் திரும்பவும் கண்ஒளியைகிருபையாக அளித்தார். கண் ஒளி கிடைக்கப் பெற்ற அவர்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே கிடையாது. காரணம், தேவனுடைய ஜீவ வார்த்தைகளை வாசிக்கும்படியானதோர் சந்தர்ப்பம் தனக்கு மறுபடியும் கிடைத்துக் கொண்டது என்பதுதான். தனக்கு கிடைத்த பாக்கிய சந்தர்ப்பத்iப் பயன்படுத்திக் கொண்டு வேதாகமத்தை துரிதம் துரிதமாக வாசிக்கத் தொடங்கி முதலாவது அவர்களுடைய இருதயத்திற்குப் பிடித்தமான ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் பின்னர் சங்கீதப் புத்தகம் இப்படியாக வாசித்து வாசித்து வேதாகமத்தை முற்றுமாக வாசித்து முடித்துவிட்டார்கள். மரணக்கட்டிலில் பெலன் இழந்து படுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அவர்களுக்கு வேதம் வாசிக்க இயலாது போய்விட்டது. தான் படுத்திருந்த கட்டிலிலிருந்து வீட்டின் சுவரை பிடித்துக் கொண்டே போய் தான் நேசித்து வாசித்த வேதாகமம் இருக்கும் மேஜைக்கு வந்து வேதாகமத்தின் மேல் கையை வைத்து ஜெபித்த பின்னர் அதை தன் கரத்தில் எடுத்து பாசத்தோடு திறந்து முத்தமிட்டு அப்படியே மூடி மேஜை மீது வைத்துவிட்டுத் திரும்பவும் சுவரைத் தடவிப் பிடித்தவாறே தன் மரணக்கட்டிலின் படுக்கைக்குச் சென்று படுத்ததை நான் கண்டு கண் கலங்கினேன். தேவனுடைய வார்த்தைகள் மேல் என் பரிசுத்த தகப்பனாருக்கு அத்தனையானதொரு வாஞ்சையும், தவனமும், ஏக்கமும் இருந்தது.
என் தகப்பனார் சிறந்த ஜெப மாந்தன். அவர்களின் வாழ்வே ஒரு ஜெப வாழ்வாக அமைந்துவிட்டது. ஒரு நாளில் பல தடவைகள் அவர்கள் ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். வீட்டைவிட்டு வெளியிடங்களுக்கு செல்லுவதற்கு முன்பு அதிகமாக ஜெபித்துச் செல்லுவது அவர்கள் வழக்கம். அதே போல வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் தேவனுக்கு நன்றி கூறி ஜெபிப்பார்கள். அதின் காரணமாக தனக்கு நேரிடவிருந்த நிச்சயமான மரண ஆபத்து நேரங்களில் அவர்கள் ஜீவன் தப்பினார்கள். அதை நான் இந்தச் செய்தியின் கடைசிப் பகுதியில் எழுதியிருக்கின்றேன்.
என்னுடைய உலகப்பிரகாரமான அலுவலில் நான் இருந்த நாட்களில் என் ஏழைப் பெற்றோரைப் பார்ப்பதற்காக நீலகிரி மலைகளிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை நான் நெல்லை மாவட்டத்திலுள்ள என்னுடைய பிறந்த ஊருக்குச் செல்லுவேன். வருடாந்திர லீவு நாட்களான ஒரு மாதத்தை பெற்றோருடன் செலவிட்டு விட்டு மீண்டும் நான் மலைகளுக்குத் திரும்பும்போது என் அன்புத் தகப்பனார் எங்கள் ஊருக்குப்பக்கத்து ஊர் நாசரேத் ரயில் நிலையம் வரை வந்து என்னை வழி அனுப்பி வைத்துவிட்டுச் செல்லுவார்கள். ரயில் புறப்பட புறப்பட என் தந்தை என்னைப் பார்த்து கடைசியாக சொல்லும் ஒரே வார்த்தை “மகனே, ஜெபம் விசேஷம்” என்பதுதான்.
நான் என் பெற்றோரை காண வீட்டிற்கு வருகின்ற நாட்களில் நான் தனி ஜெபம் செய்கின்றேனா என்று என் பக்தியுள்ள தகப்பனார் என்னை அதிகமாக கவனிப்பார்கள். நான் ஜெபம் செய்ய தவறும் பட்சத்தில் “மகனை நான் கவனித்தேன். இந்த நாளில் ஒரு தடவை கூட தனி ஜெபம் பண்ணவில்லை” என்று மிகவும் விசனத்துடன் கூறுவார்கள். நான் அறையில் தனித்து ஜெபம்பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்களின் உள்ளம் கர்த்தருக்குள் அதிகமாக மகிழ்ந்து களிகூரும்.
தன்னுடைய உடன் பிறந்த மூத்த அண்ணன் ஆரோன் அப்பாத்துரை அவர்களும் நல்ல ஜெபமாந்தன் என்றும் இலங்கை தேசத்திலே அவர்கள் வேலை பார்த்த அலுவலகத்துக்கு பக்கத்து அறையில் அவர்கள் தன்னுடைய இரு கரங்களையும் வைத்து ஜெபித்த இடமானது அப்படியே ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் தன்னுடைய அண்ணனுடைய ஜெப வாழ்க்கையை பிள்ளையாகிய என்னிடம் பரவசத்துடன் சொல்லியிருக்கின்றார்கள். ஜெபமும், ஜெபிக்கும் மாந்தர்களும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
கர்த்தருடைய பரம வாசஸ்தலத்தை அடைவதற்காக மரண கட்டிலில் என் தகப்பனார் படுப்பதற்கு முன்பாக ஒவ்வொரு நாளும் பெரும்பாலான நேரத்தை அவர்கள் ஆண்டவரோடு ஜெபத்திலேயே செலவிட்டார்கள். எந்த நேரம் அவர்களைப் பார்த்தாலும் முழங்கால்களிலேயே நின்றார்கள். எந்த ஒரு சிறிய பேச்சுக்கும் அவர்கள் இடம் கொடுக்கவில்லை. ஆ, அவர்கள் எத்தனையான ஆயத்தத்தோடு தன்னுடைய பரம எஜமானரின் சமூகத்துக்குக் கடந்து சென்றார்கள்! அவர்கள் அப்படி ஜெப நிலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒன்றிரண்டு படங்களை நீங்கள் காணலாம்.
என் தகப்பனாரின் ஜெப அறை
தன்னை தன்னுடைய பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்த தன்னுடைய இரட்சா பெருமானை எப்பொழுதும் பாடித் துதித்து மகிமைப்படுத்துவதற்காகவும் அவரைச் சந்தித்து அடிக்கடி அளவளாவி ஆனந்திப்பதற்காகவும் என் தகப்பனார் எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு எளிமையான ஜெப அறையைக் கட்டியிருந்தார்கள். அங்கு புதன், வெள்ளி தோறும் ஜெபக்கூட்டமும் நடைபெறும். ஒரு சிறிய கூட்டம் அதில் கூடும். அவ்வப்போது அங்கு வந்து தேவ ஆசீர்வாங்களைப் பெற்றுச் சென்றோர் பலராவார்கள். வியாதிகளிலிருந்து நல்ல சுகத்தையும், குழந்தை பாக்கியங்களையும் மற்றும் ஆவிக்குரிய நன்மைகளையும் பெற்றுச் சென்றோர் அநேகர் உண்டு. எல்லா துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே.
ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல என் தகப்பனாரின் குரல் இனிமையான குரலாகும். கீர்த்தனை, ஞானப்பாட்டு (பாமாலை) கைப்பிரதி பாடல்கள் பலவும் அவர்களுக்கு மனப்பாடமாக தெரியும். அட்டவணையைப் பாராமல் பாடல்களின் எண்ணைச் சரியாகச் சொல்லிவிடுவார்கள். இந்த புத்தகங்களின் பாடல்களைத்தான் அவர்கள் மிகவும் விரும்பிப் பாடுவார்கள். தற்பொழுது கிறிஸ்தவ உலகத்திற்கு அறிமுகமான பாடல்களை அவர்கள் விரும்புவதில்லை. காரணம் கேட்டால், கீர்த்தனை, ஞானப்பாட்டு பாடல்களை பாடியவர்கள் யாவரும் மெய் தேவ பக்தர்கள் என்றும், தங்கள் அனுபவத்திலிருந்து அவற்றைப்பாடினார்கள் என்றும், அவர்கள் தங்களின் கிறிஸ்தவ பக்தி வாழ்வைக் கடைசி வரை தேவ நாம மகிமைக்காகக் காத்து விண் கிரீடம் பெற்றவர்கள் என்றும் சொல்லுவார்கள்.
ஒவ்வொரு நாளிலும் அவ்வப்போது தேவன் தன்னுடைய உள்ளத்தில் ஏவுகிறபடி தன்னுடைய ஜெப அறைக்குச் சென்று ஜெபித்து வந்தார்கள். இந்தச் செய்தியில் அவர்கள் ஜெப அறையையும், ஒரு ஜெபக்கூட்டத்தின் முடிவில் ஜெபக் கூட்டத்திற்கு வந்த சில தவனமுள்ள தேவப்பிள்ளைகளையும், என் தகப்பனார் அவர்களுடன் நிற்பதையும் படத்தில் நீங்கள் காணலாம்.
என் தகப்பனாரின் கண் பார்வை குறைந்திருந்த நாட்கள் அவை. தன்னுடைய ஜெப அறைக்கு ஜெபிக்கச் சென்ற அந்த நாட்களில் ஒரு ஓணான் அவர்களுக்கு மிகுதியும் தொல்லை கொடுத்து வந்தது. ஜெப அறையினுள் ஜெபிக்கும்படியாக சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பாயினுள் அந்த ஓணான் மறைந்து இருக்கும். என் தகப்பனார் ஜெபிக்கும்படியாக அந்தப் பாயை எடுத்து விரிக்கும்போது அந்த ஓணான் அவர்களின் சரீரத்தில் ஓடி அவர்களை பெரிதும் பயப்படுத்தி வந்தது.
கண் பார்வை குன்றியிருந்த என் தகப்பனாருக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் தெரியவில்லை. ஒத்தாசையின் பர்வதத்திற்கு நேராக தன் கண்களை கண்ணீரோடு ஏறெடுத்தார்கள். “ஐயா, இந்த ஓணானுடைய தொல்லையிலிருந்து எனக்கு ஒரு விடுதலை தாரும்” என்று மன்றாடினார்கள். சில நாட்கள் சென்றன. அன்று வழக்கம்போல ஜெபிப்பதற்காக ஜெப அறைக்குச் சென்றார்கள். அங்கே ஜெப அறைக்குள் என் தகப்பனாருக்கு தொல்லை கொடுத்து வந்திருந்த ஓணான் செத்துக்கிடந்தது. அதை ஒரு கொம்பேறி மூக்கன் பாம்பு கடித்து துண்டித்துப் போட்டிருந்தது. தன்னுடைய ஜெபத்தைக் கேட்ட கருணாமூர்த்திக்கு என் தகப்பனார் துதி ஸ்தோத்திரம் ஏறெடுத்தார்கள்.
இந்தக் காரியத்தை என் தகப்பனார் மறவாமல் தன் மனதில் வைத்திருந்து நான் ஊருக்குச் சென்றிருந்த சமயம் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். தன்னுடைய ஜெப அறையிலிருந்து அவர்கள் ஏறெடுத்த விண்ணப்பங்கள் பலவும் தேவனால் அற்புதமாக பதிலளிக்கப்பட்டன.
பாவத்தைக் கண்டித்து உணர்த்திய தேவ பக்தன்
ஆசிரியராக பணி செய்த என் தாத்தா கோவில்பிள்ளை உபதேசியார் தான் தேவ ஊழியம் செய்த சபைகளில் கர்த்தருடைய கட்டளைகளை மீறி பாவத்தில் ஜீவிப்போரையும், ஓய்வு நாட்களை பரிசுத்த குலைச்சல் ஆக்குவோரையும் ஆலயத்தில் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டே அவர்களுடைய பெயர்களைச் சொல்லியே எச்சரித்து புத்தி சொல்லுவார்களாம். அதைத்தான் சொல்லப் போனால் என் தகப்பனாரும் செய்தார்கள். எங்கள் ஊரிலுள்ள ஒரு பணக்கார கிறிஸ்தவ மனிதர் என் தகப்பனாரிடத்தில் அவ்வப்போது வந்து ஜெபித்துப் போவார். அந்த மனிதர் திருநெல்வேலி ஜங்ஷனில் சாராயக்கடை ஏலம் எடுத்து சாராய வியாபாரம் செய்வதை குறித்த காரியங்களை என் தகப்பனார் எப்படியோ கேள்விப் பட்டிருக்கின்றார்கள். அந்த நாளிலும் அந்த மனிதர் வழக்கம்போல என் தகப்பனாரிடத்தில் அவர்களுடைய ஜெபத்திற்காக வந்திருக்கின்றார். வந்த மனிதரிடத்தில் அவர் சாராயக்கடை எடுத்து நடத்தும் காரியம் குறித்து கேட்டிருக்கின்றார்கள். அவர் உண்மைய ஒப்புக்கொண்ட போது “எனது ஜெபம் உங்களுக்கு nண்டுமானால் முதலாவது நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் நெல்லை ஜங்ஷனிலுள்ள உங்கள் சாராயக்கடையை மூடிவிட்டு வாருங்கள். சாராயக்கடையை நீங்கள் நடத்தும் வரை நான் உங்களுக்காக இனி ஜெபிக்கப்போவதில்லை” என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்கள்.
என் தந்தை ஜெபிக்க முடியாது என்று கூறவே பக்கத்து ஊரிலுள்ள ஆசீர்வாதப் பிரசங்கியார் ஒருவரிடம் போய் அந்த மனிதர் ஜெபித்து வந்தார். ஆசீர்வாத பிரசங்கியார் அவரிடமிருந்து தசமபாகம், காணிக்கைகளை வாங்கிக்கொண்டு ஊக்கமாக ஜெபித்து அனுப்பிக்கொண்டிருந்தார். அந்தோ, ஒரு நாள் அந்த மனிதர் சடுதியாக மாரடைப்பினால் மரித்துப்போனார். மரிக்கவே ஆசீர்வாத பிரசங்கியார் தமது ஊழியக்கார சகோதரர்களை அடக்க ஆராதனையில் கலந்து கொள்ள அனுப்பினார். ஆனால், வீட்டுக்கார மக்கள் வந்தவர்களை வீட்டிற்குள் சேர்க்காமல் கோபத்தில் துரத்தி விட்டிருக்கின்றார்கள். பாவத்தில் ஜீவிப்போர், ஜோசியம், குறி கேட்போர், வட்டிக்கு தங்கள் பணங்களை கொடுத்து தொழில் நடத்துவோர், அஞ்ஞான கிரியைகளை செய்வோர் யாவரையும் என் தகப்பனார் தேவ நாமத்திற்கு மகிமையாக கடிந்து கொண்டு எச்சரித்துப் புத்தி சொன்னார்கள்.
கர்த்தருடைய ஆவியானவர் என் தகப்பனாருடன் இருந்து அவர்களைக் கொண்டு பேசினார்.
பரிசுத்த ஆவியானவர் என் தந்தையின் மேல் தங்கியிருந்து காரியங்களை வெளிப்படுத்திப் பேசினார். அவர்கள் ஆவிக்குள் நிரம்பியிருக்கும் சமயம் தலைமேல் கை வைத்து ஜெபித்தால் ஜெபிக்க முழங்காலூன்றியிருக்கும் நபரின் இருதயத்திற்குள்ளிருக்கும் காரியங்களை அப்படியே சொல்லிவிடுவார்கள். என் தலைமேல் கை வைத்து என் இருதயத்தின் நிலவரத்தை அப்படியே பல தடவைகள் சொல்லியிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கேட்டிருக்கின்றேன்.
எங்கள் ஊருக்கு மேற்கு திசையில் திருவரங்கநேரி என்றதோர் கிராமம் உண்டு. கர்த்தருடைய செய்தியை கொடுப்பதற்காக என் தகப்பனார் அந்த ஊருக்கு ஒரு சமயம் சென்றிருந்தார்கள். அந்த ஊரின் தேவாலயத்திற்கு முன்பாக திறந்த வளாகத்தில் அன்றைக்கு
இரவு ஜெபக்கூட்டம் நடந்தது. ஜெப நேரத்தில் என் தகப்பனார் ஆவியில் நிறைந்தவர்களாக இந்த வளாகத்திலேயே சீக்கிரம் ஒரு கொலை விழப்போகின்றது என்று கூறியிருக்கின்றார்கள். அதைக் கேட்ட மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்திருக்கின்றார்கள். அவர்களால் அந்த வார்த்தையை அப்பொழுது நம்ப இயலவில்லை. ஜெபக்கூட்டம் முடிந்ததும் ஒரு மனிதன் என் தகப்பனாரிடம் தனித்து வந்து “ஐயா, இந்த இடத்தில் கொலை விழப்போகின்றது என்று யார் உங்களிடம் சொன்னார்கள்?” என்று கேட்டிருக்கின்றான். என் தகப்பனார் அவனுக்குப் பிரதியுத்தரமாக “எனக்கு யாரும் வந்து சொல்லவில்லை. பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினதை தான் சொன்னேன்” என்று பதில் கொடுத்திருக்கின்றார்கள். இப்படி என் தகப்பனாரிடம் வந்து கேட்டவன் சரியாக ஒரு வாரத்தில் அதே ஆலய வளாகத்தில் இரவு ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ வாலிபனை வெட்டிக் கொன்று போட்டான். கொல்லப்பட்ட வாலிபனின் தாயார் அதின் பின்னர் தன் மரணபரியந்தம் என் பரிசுத்த தகப்பனாரின் ஜெபத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்கள்.
ஒரு சமயம் துக்கசாகரத்தில் மூழ்கியிருந்த ஒரு இளம் விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி ஜெபிக்கும்படியாக என் தகப்பனார் அவளுடைய வீட்டிற்குச் சென்றிருக்கின்றார்கள். அவளுடைய கணவனை சமீபத்தில்தான் சில மனிதர்கள் வன்கொலையாகக் கொன்றிருந்தார்கள். அந்தப் பெண்ணுக்குஆறுதல் கூறி அவளுக்காக ஜெபித்த பின்னர் என் தகப்பனார் அவள் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வரவும் கர்த்தருடைய ஆவியானர் என் தந்தையின் உள்ளத்தில் துயரத்தில் மூழ்கியிருக்கும் அந்தப் பெண்ணுக்குச் சொல்லும்படியாக ஒரு வேத வசனத்தைக் கொடுத்துவிட்டார். வீட்டைவிட்டு சில அடிகள் தூரம் சென்றுவிட்ட என் தகப்பனார் திரும்பவும் வந்து அந்தப் பெண்ணை பெயர் சொல்லிக் கூப்பிட்டு “பாக்கியம், எரேமியா தீர்க்கத்தரிசியின் புத்தகம் 5 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனத்தை நீ எடுத்து வாசிக்கும்படியாக கர்த்தர் சொல்லுகிறார்” என்று கூறவே அவள் உடனே வேதாகமத்தை எடுத்து வந்து அந்த வசனத்தை வாசித்தாள். அதில் இவ்விதமாக எழுதப்பட்டிருந்தது. “அவர்கள் கொழுத்த குதிரைகளைப் போல் காலமே எழும்பி, அவனவன் தன் தன் அயலானுடைய பெண் ஜாதியின் பின்னால் கனைக்கின்றான்”
இந்த வசனத்தை அந்தப் பெண் வாசித்ததும் “உன் புருஷனிடத்தில் தவறு இருந்திருக்கின்றது. மற்றவனுடைய மனைவியினிடத்தில் விபச்சாரப் பாவத்தில் அவன் ஈடுபட்ட காரணத்தால் அவன் வன் கொலையாக மரிக்க நேர்ந்திருக்கின்றது. ஆவியானவர் அதை உனக்கு தெளிவுபடுத்திவிட்டார்” என்று கூறி என் தந்தை கடந்து வந்திருக்கின்றார்கள்.
கர்த்தரைத் தன் பெற்ற தாயாக நேசித்துக் கனப்படுத்திய உத்தம பக்தன்
“கர்த்தர் பரிசுத்தர், அவரை யாராலும் அத்தனை இலகுவாகப் போய் தரிசிக்க இயலாது. பரிசுத்தத்தின் பாதை நூல் ஏணிப் பாதை. வெகு சிலர் மாத்திரமே அந்தக் கடினமான பாதையில் சென்று அவருடைய பரம இளைப்பாறுதலைக் கண்டடைய முடியும்” என்று என் தகப்பனார் சொல்லுவதை பல தடவைகள் நான் கேட்டிருக்கின்றேன்.
அந்த பரிசுத்த கர்த்தரை என் தகப்பனார் தன் வாழ்வில் அதிகமதிகமாக நேசித்து அவரை வாழ்த்திப்போற்றி வந்தார்கள். அவர்களின் இரட்சிப்புக்குப் பின்னர் குடும்ப ஜெபம் ஒவ்வொரு நாளும் தவறாமல் நடைபெற்று வந்தது. காலை மாலை குடும்ப ஜெபம் தவறிய நாட்கள் வெகு அபூர்வமாகும். எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையானாலும் சரியே, குடும்ப ஜெபத்தில் என் தகப்பனார் மூன்று பாடல்கள் பாடிவிடுவார்கள். பகல் முழுவதும் மாடாக உழைத்து மிகுந்த களைப்பின் ஆயாசத்தோடு படுக்கைக்குச் சென்றிருந்தபோதினும் தன்னை தன் பாவ அடிமைத் தனத்திலிருந்து மீட்டு இரட்சிப்பின் சந்தோசத்தை தனக்குக் கொடுத்த தன் அன்பின் இரட்சகரை பாடித் துதிப்பதற்கு வெகு அதிகாலையிலேயே சரியான நேரத்திற்கு எழும்பி விடுவார்கள். அவர்கள் ஜீவ காலம் முழுமையிலும் எங்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது. அதிகாலை எழுந்து முதல் வேலையாக முகத்தை நன்றாகக் கழுவி மண் எண்ணெய் லாந்தர் விளக்கைக் கொளுத்தி பாயை விரித்து பாமாலை பாடலைத் தொடங்குவார்கள். உடனே பிள்ளைகளாகிய நாங்கள் நால்வரும், என் அருமைத் தாயாரும் அவர்களுடன் கலந்து கொள்ளுவோம்.
எந்த ஒரு வீட்டிற்கும் சென்று தேவையற்ற விதத்தில் என் பரிசுத்த தகப்பனார் பேசிச் சம்பாஷித்துக் கொண்டிருந்ததை நான் ஒருக்காலும் கண்டதில்லை. எங்கள் வீட்டுக்கு யாராவது வாயாடி பேச்சுக்காரர் வந்துவிட்டால் உடனே எழும்பி போய்விடுவார்கள். தனது பேச்சின் மூலமாக தன் ஆண்டவரின் இருதயத்தை துக்கப்படுத்த அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. தன் ஆண்டவருடைய உள்ளத்தை தன்னுடைய தேவையற்ற வாயின் வார்த்தைகளின் மூலமாக வேதனைப்படுத்தாமல் தன்னை மிகவும் விழிப்போடு காத்துக் கொண்டார்கள். தன் அருமை இரட்சகரை தன்னைப் பெற்ற தாயாக என் தகப்பனார் தன் உள்ளத்தில் வைத்து நேசித்து கனப்படுத்தினார்கள்.
என் பக்தியுள்ள தந்தை மிகவும் துக்கமடைந்த ஒரு காரியம்
என் தகப்பனார் தன்னுடைய பக்தி வாழ்வில் தனக்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பைக் குறித்து எப்பொழுதும் துக்கப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். தான்இழந்து போனதை அவர்கள் தன் மரணபரியந்தம் திரும்பப் பெற்றுக்கொள்ளவே இல்லை. என்ன காரியம் என்று கேட்கின்றீர்களா? என் தகப்பனார் தனது இரட்சிப்பை இரட்சகரில் கண்டு கொண்ட நாள் முதல் இயேசு பெருமானின் கல்வாரி அன்பை நினைத்துவிட்டால் அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டே இருக்குமாம். அது மாத்திரமல்ல மற்ற நேரங்களிலும் அதாவது ஜெப நேரங்களில் தன்னை அறியாமல் தேவ அன்பின் பெருக்கினால் கண்ணீர் பொங்கி வழியுமாம். கர்த்தருடைய செய்தியை கொடுப்பதற்காக ஜெபத்தில் முழங்கால்படியிட்டிருக்கும் சமயங்களிலும் கண்களிலிருந்து ஊற்று நீர் பொங்குவது போல கண்ணீர் பெருகி வருமாம்.
ஒரு சமயம் ஒரு குறிப்பிட்ட ஊரில் கர்த்தருடைய செய்தியை ஆலயத்தில் மக்களுக்கு கொடுப்பதற்கு முன்னர் தேவனுடைய அசைவாடுதலுக்காக என் தந்தை ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததாம். என் தகப்பனாரால் அந்த ஆனந்த கண்ணீரை அடக்கவே முடியவில்லையாம். உடனே அவர்கள் ஆண்டவரைப் பார்த்து “ஐயா, என் கண்களிலிருந்து இப்படி கண்ணீரை வடியச் செய்கின்றீரே, மக்கள் பார்த்தால் என்னை என்ன நினைப்பார்கள்? கண்ணீர் தேவைதான், ஆனால் ஒரு அளவோடு அது இருக்க வேண்டுமல்லவா?” என்று சற்று விசனத்துடன் தேவனுக்குச் சொன்னார்களாம். அன்றைக்கு அந்த ஆலயத்தில் அவர்கள் சிந்திய கண்ணீருக்குப் பிறகு அவர்கள் கண்களிலிருந்து ஒருக்காலும் கண்ணீர் முன்புபோல வரவே இல்லையாம்.
ஆண்டவரிடத்தில் அதற்கப்பால் அவர்கள் எவ்வளவோ மன்னிப்பெல்லாம் கேட்டு கெஞ்சி மன்றாடி கதறினபோதினும் பழைய ஆனந்த கண்ணீர் ஊற்று திரும்பவே இல்லை என்று மட்டற்ற துயரத்துடன் அவ்வப்போது கூறுவார்கள். தான் அன்றைய தினம் முட்டாள்தனமாக தேவ சமூகத்தில் ஏறெடுத்த தனது ஞானமற்ற வேண்டுதலுக்காக அவர்கள் தனது மார்பின் மேல் அடித்துக் கொண்டார்கள். ஆனால் தேவன் தம்முடைய தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.
மரணத்தின் நிச்சயமான பிடியிலிருந்து உயிர் தப்பிய இரண்டு சம்பவங்கள்
கொலைகாரனின் கூர் அரிவாளுக்கு தப்பிப் பிழைத்தது
உலகப்பிரகாரமான பிழைப்பினிமித்தம் என் தகப்பனார் ஒரு சிறிய மளிகைக் கடை வைத்திருந்தார்கள். வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை எங்கள் ஊரிலிருந்து 4 மைல்கள் தொலைவிலுள்ள நாசரேத் என்ற பெரிய கிராமத்தில் கூடும் சந்தைக்கு தன்னுடைய மளிகைக்கடைக்கு தேவையான பொருட்களை கொள் முதல் செய்வதற்காக தன்னுடைய சைக்கிளில் பயணப்பட்டுச் செல்லுவார்கள். அப்பொழுது அவர்கள் கரத்தில் ஒரு கணிசமான தொகை இருக்கும். சந்தைக்கு புறப்படு முன்னர் முழங்காலூன்றி தேவ சமூகத்தில் நன்கு ஜெபித்துவிட்டுத்தான் எப்பொழுதும் கடந்து செல்லுவார்கள்.
அப்பாவின் கரத்தில் பணம் இருப்பதையும், அவர்களைக் கொன்று அந்தப்பணத்தை எடுத்துக்கொண்டு செல்லவும் ஒரு கொலைகாரன் திட்டம் தீட்டினான். தன்னுடைய அரிவாளை அன்றைய தினம் அந்தக் கொலைகாரன் எவ்வளவு கூர்மையாக தீட்ட முடியுமோ அவ்வளவு கூர்மையாகத் தீட்டி எடுத்துக் கொண்டு எங்கள் ஊருக்கு வட பக்கத்தில் உள்ள செம்மண் தேரிக்காட்டை ஒட்டியிருக்கும் பிரதான ரஸ்தா ஓரத்திலுள்ள ஒற்றைப் பனை மரம் ஒன்றில் ஏறி எனது தந்தையின் வரவை அந்தக் கொலைகாரன் கருத்தோடு கவனித்துக் கொண்டிருந்தான். சைக்கிளில் சென்ற தகப்பனார் தூரத்திலேயே கொலைஞன் தன் அரிவாளுடன் பனை மரத்தில் ஏறி அமர்ந்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். ஆனால், என் தகப்பனாருக்கு தன்னை சங்காரம் பண்ணி தனது பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு செல்லும் நோக்கத்தோடு அவன் பனை மரத்தில் ஏறி அமர்ந்திருப்பதை சற்றும் எண்ணிப் பார்க்கவில்லை. காரணம், அவன் அப்படிச் செய்வான் என்பதை அப்பொழுது அவர்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவன் தனக்கு நன்கு தெரிந்த உள்ளூர் ஆள் ஆனபடியால் அவனை அவர்களுக்கு நன்கு தெரியும்.
என் தகப்பனாரின் சைக்கிள் அந்தப் பனை மரத்தை நெருங்க நெருங்க பனை மரத்தில் ஏறியிருந்த அந்த கொலைகாரன் மடமடவென்று பனை மரத்திலிருந்து கீழே இறங்கி நடு ரோட்டில் வந்து நின்று கொண்டான். அவன் கரத்தில் கூர்மையான அரிவாள் மின்னிக் கொண்டிருந்தது. உடனே அப்பா, சைக்கிளிலிருந்து கீழே இறங்கி அவன் முகத்தை நோக்கி அவன் பெயரைச் சொல்லி “பாண்டி, ஏன் இப்படி நின்று கொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டிருக் கின்றார்கள். அவன் முகம் பேய் அறைந்தவனின் முகம் போல கருகருவென்று கருத்து ஈ கூட ஆடாதபடி சலனமற்று காணப் பட்டிருக்கின்றது. சற்று நேரம் அவன் ஒன்றும் பேசாமல் அப்படியே அமைதியாக நின்று கொண்டிருந்திருக்கின்றான். பின்னர் அவன் வாய் திறந்து எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் என் தகப்பனாரை கையினால் சைகை காட்டி போகும்படியாக கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டான். உடனே எனது தந்தை தனது சைக்கிளில் ஏறி தனது பாதையில் அன்று நடந்த அவனது நூதனமான நடபடிக்கையை குறித்து ஆச்சரியத்துடன் சிந்தித்தவர்களாகப் போய்விட்டார்கள். மாலை வீடு திரும்பியதும் அன்று மத்தியானம் நடந்த காரியத்தை எங்கள் எல்லாரிடமும் அப்பா பகிர்ந்து கொண்டார்கள். அது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்தக் காரியம் நடந்த அந்த வாரத்திலேயே ஒரு நாள் காலையில் மேற்கண்ட அதே கொலைகாரன் மோர் விற்பதற்காக எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரான கல்லுவிளை என்ற இடத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்த ஒரு இடைச்சிப் பெண்ணை நொச்சி செடிகள் சூழ்ந்த ஊருக்கு ஒதுக்கமான ஒரு மறைவான பாதையில் வைத்து தனது கூரான அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்று அவளுடைய நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு யாருக்கும்தெரியாமல் ஓடிப்போய் விட்டான். அந்தப் பெண்ணைக் கொல்லுவதற்கு முன்னால் அவளிடம் முதலாவது அவன் வயிறு நிறைய மோரும் வாங்கிக் குடித்திருக்கின்றான். எத்தனை கொடுமை பாருங்கள்! அந்த இடைச்சி பெண் சில மாத கர்ப்பிணி என்பதும் பின்னர் தெரிய வந்தது. கடைசியாக அந்த கொலைகாரன் பிடிபட்டான். அரசாங்கம் அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்புக்கூறி இறுதியில் மதுரை நகரத்தில் அவனை தூக்கிலிட்டுக் கொன்றது. அந்தச் செய்தி தினசரி செய்தி தாட்களிலும்அந்த நாட்களில் வெளி வந்தது.
என் தகப்பனார் மேற்கண்ட சம்பவத்தை அவ்வப்போது நன்றியோடு நினைவுகூர்ந்து தன் ஜீவனை கொலைஞனின் கரத்தினின்று ஆச்சரியமாக பாதுகாத்து மீட்டு இரட்சித்த தன் கர்த்தாவுக்கு முழு மனதோடு நன்றி செலுத்தி துதித்து வந்தார்கள்.
வண்டி சக்கரம் கழுத்தில் ஏறி சாகவிருந்த சாவிலிருந்து பாதுகாத்த கன்மலையாம் தேவன்
என் அருமைத் தந்தை மிகவும் கடினமான உழைப்பாளி. மொத்தம் 6 பேர் கொண்ட எங்கள் ஏழை குடும்பத்தைக் காப்பாற்ற அவர்கள் அதிகக் கஷ்டப்பட வேண்டியதாகவிருந்தது. தன்னுடைய தொழிலினிமித்தம் அவர்கள் அடிக்கடி சைக்கிளிலே அங்குமிங்கும் பிரயாணம் செய்ய வேண்டியதாயிருந்தது. தன்னுடைய சைக்கிளிலே 80 அல்லது 90 கில்லோ அரிசி மூட்டையை கூட அவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள். பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் சென்று தன்னுடைய மளிகைக்கடைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு தனது சைக்கிளிலேயே வருவார்கள். அவர்களுடைய கடின உழைப்பின் காரணமாக அவர்களின் சட்டை வியர்வையால் கறைப்பட்டிருக்கும். அந்தக் கறை பூமியிலே எந்த ஒரு வண்ணானாலும் போக்க முடியாத அளவிற்கு அத்தனை கட்டியாகப்பிடித்திருக்கும். ஓ, என் பாசமுள்ள தகப்பனார் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தன்னையே தகன பலி பீடத்தில் வைத்து பாடுபட்டு மாடாக உழைத்தார்கள்.
இப்படி ஒரு தடவை தனது சைக்கிளில் பழுவான மூட்டை ஒன்றை ஏற்றி வந்து கொண்டிருந்த வேளையில் எப்படியோ நிலை தடுமாறி ரஸ்தாவில் சென்று கொண்டிருந்த ஒரு கட்டை மாட்டு வண்டியின் அடியில் சைக்கிளுடன் என் தந்தை விழுந்துவிட்டார்கள். கீழே விழுந்த அவர்களின் கழுத்துக்கு நேராக கட்டை வண்டியின் பெரிய சக்கரம் நகர்ந்து வந்து கொண்டிருந்ததை கவனித்த என் தகப்பனார் அதுதான் தனது வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணி தனது பரம தந்தையை நோக்கி அபயமிட்டிருக்கின்றார்கள். என்ன ஆச்சரியம்! கழுத்திற்கு நேராக உருண்டு வந்து கொண்டிருந்த வண்டியின் பெரிய மரச்சக்கரம் கழுத்துப் பக்கம் வரவும் அப்படியே நின்றுவிட்டது. ஆம், வண்டிக்காரன் தன் பெலன் கொண்ட மட்டும் மாடுகளின் சரட்டுக் கயிறுகளை வலுவாக இழுத்துப்பிடித்து வண்டியை அப்படியே நிறுத்திவிட்டான். தந்தையின் ஜீவன் மயிரிழையில் தப்பிப் பிழைத்தது. கர்த்தருடைய நல்ல நாமத்துக்குத் துதி உண்டாகட்டும். தேவனுடைய அந்த அதிசய பாதுகாவலுக்காகவும் என் தகப்பனார் ஆண்டவருக்கு சதா துதி ஏறெடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சி
பலசரக்கு கடை (மளிகைக் கடை) வைப்பதற்கு முன்னான நாட்கள் அவை. செவ்வாய் கிழமை தோறும் கூடும் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் நாசரேத் சந்தையில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி ஒரு ஓலைப் பெட்டியில் (பனை ஓலைப் பெட்டி) வைத்துக் கொண்டு தலை சுமையில் அதை சுமந்து கொண்டு தேரிக்காட்டுப் பாதை வழியாக என் தகப்பனார் நடந்து வந்து கொண்டிருந்திருக்கின்றார்கள். சூரியன் அஸ்தமித்து இருள் சூழும் மாலை நேரம் அது. தேரிக்காட்டிலே அந்த நாட்களில் திருடர் பயம் உண்டு. திருடர்கள் ஊர் பக்கமாக வந்து பெண்கள் காது கழுத்திலே கிடக்கும் நகை நட்டுகளைப் பறித்துக் கொண்டு தேரிக்காட்டுக்குள் போய் மறைந்துவிடுவார்கள். அந்த தேரிக்காட்டு பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த என் தகப்பனார் அங்கு உள்ள இடர்களை நினைத்துப் பார்த்தார்கள். திருடர்களால் தனக்குப் பொருட் சேதம் ஏற்படலாம் என்று உணர்ந்த அவர்கள் தேரிக்காட்டிலுள்ள ஒரு பள்ளத்தில் தன்னுடைய பெட்டியை ஒரு பக்கமாக வைத்துவிட்டு முழங்காலூன்றி கர்த்தரை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார்கள்.
தகப்பனார் முழங்காலூன்றி ஜெபிப்பதை மேட்டில் நின்ற திருடர்கள் இருவர் கவனித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என் தகப்பனார் தன் தேவனை நோக்கி பாதுகாவலுக்காக பிரார்த்திக்கின்றார்கள் என்பது தெரியாது. ஜெபத்தை முடித்து தன் பெட்டியை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு திரும்பவும் என் தகப்பனார் தன் பிரயாணத்தை தொடர்ந்திருக்கின்றார்கள். மேடு ஏறி வரவும் இரண்டு பேர் தங்கள் கைகளில் அரிவாளுடன் நின்று கொண்டிருப்பதை என் தந்தை கவனித்திருக்கின்றார்கள். அவர்கள் திருடர்கள் என்பது என் தந்தைக்கு கொஞ்சமும் தெரியாது. அவர்களுடனான சம்பாஷணையைக் கவனியுங்கள்:-
திருடன்:- கீழே பள்ளத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
தகப்பனார்:- பொழுது சாய்ந்து இருளாகிவிட்டபடியால் எனது தனிமையான பயணத்தில் ஆண்டவர் என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அவரை நோக்கி ஜெபம் செய்தேன்.
திருடன்:- அப்படியா, நீங்கள் அங்கு ஜெபமா செய்து கொண்டிருந்தீர்கள்!
தகப்பனார்:- ஆம் ஐயா, இந்த மாலை மயங்கிய நேரத்தில் நீங்கள் இருவரும் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கின்றீர்கள்?
திருடன்:- எங்கள் வயிற்று கஞ்சிக்கு வழியில்லாமல்தான் இங்கு ஏதாவது கிடைக்குமா என்று எதிர் நோக்கி நின்று கொண்டிருக்கின்றோம்.
அதின் பின்னர்தான் அவர்கள் இருவரும் திருடர்கள் என்பது என் தகப்பனாருக்கு தெரிய வந்தது. திருடர்கள் என் தந்தையை ஒன்றும் செய்யாமல் அப்படியே போகும்படி விட்டுவிட்டார்கள். ஒரு வேளை அந்தப் பள்ளத்திலே என் தகப்பனார் முழங்காலூன்றி ஜெபிக்காமல் இருந்திருந்தால் திருடர் அந்தப் பெட்டிப் பொருட்கள் யாவையும் அன்றைய தினம் அப்படியே எடுத்துக் கொண்டு என் தந்தையை வெறுமையாக அனுப்பிவிட்டிருப்பார்கள். ஆ, ஜெபத்தின் மாட்சியை என்னவென்று சொல்லுவது!
என் தகப்பனாரிடம் நான் கண்ட சில அருமையான தேவ சீலங்கள்
உலகப்பிரகாரமான பிழைப்பினிமித்தம் என் தகப்பனார் ஒரு சிறிய மளிகைக்கடை எங்கள் வீட்டில் வைத்திருந்ததை நான் ஏற்கெனவே குறிப்பிட்டேன். தனது வியாபாரத்தில் என் தகப்பனார் மிகவும் உண்மையோடிருந்தார்கள். அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படியாக வாடிக்கையாளர்களுக்கு அளந்து போடுவார்கள். ஆண்டுக்கு ஒரு முறை கடையின் படிக்கற்கள், முகத்தல் அளவை உபகரணங்களை எல்லாம் திருச்செந்தூர் என்ற இடத்திலுள்ள தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று அரசாங்க முத்திரை குத்திக் கொண்டு வந்து விடுவார்கள். சொற்ப லாபத்தை மட்டும் எதிர்நோக்கினார்கள்.
ஊரிலுள்ள வீடுகளுக்கு பனங்கருப்புகட்டி கொள் முதலுக்காக என் தகப்பனார் செல்லுவார்கள். அப்பொழுது சிறுவனான என்னையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுவார்கள். அந்த நாட்களில் இழுவை தராசு (Spring Balance) வழக்கத்தில் இருந்தது. அதை கையினால் அழுத்திப் பிடிக்கும் பிடியிலேயே வாடிக்கையாளரின் கருப்புகட்டி எடையை குறைவாக காண்பிக்கும் தந்திரம் உண்டு. ஆனால் என் தகப்பனார் அந்த இழுவை தராசை ஒருக்காலும் கையினால் பிடிக்கவே மாட்டார்கள். ஒரு விட்டத்தில் அதை கட்டி தொங்கவிட்டு கருப்புகட்டியை எடை போடுவார்கள். திருட்டு வியாபாரிகள் செய்யும் மோசடியை கருப்புகட்டியை என் தலைச் சுமையில் எடுத்துக் கொண்டு வர அவர்களுடன் செல்லும் சிறுவனாகிய எனக்கு சொல்லியிருக்கின்றார்கள்.
பண ஆசைக்கு அவர்களிடம் இடமே கிடையாது. பெரும்பாலான மக்கள் அவர்களின் மளிகைக் கடையில் கடன் வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவே இல்லை. எனினும் கஷ்டம், கண்ணீர், வறுமை என்று வரும் மக்களுக்கு இல்லை என்று சொல்லவே மாட்டார்கள். தனது வறுமையிலிருந்து அவர்களுக்கு உதவி செய்தார்கள், தனது தரித்திரத்தில் இருந்து அவர்களை ஆதரித்தார்கள். அவர்களுடைய கொடுக்கல், வாங்கல் காரியங்கள் மிகவும் நேர்மையும், உண்மையானதுமாகவிருக்கும். அவர்கள் கொடுக்க வேண்டிய கடன்கள் யாவையும் கொடுத்து தீர்த்து விட்டார்கள். மரணத்திற்கு பல மாதங்களுக்கு முன்னர் அவர்கள் தனது கடைசி கடனை கொடுத்து தீர்த்தபோது அவர்கள் அடைந்த சந்தோசம் மட்டற்றதாக இருந்தது.
தேவ ஊழியத்தின் பாதையில் என் தகப்பனார் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றால் எவரிடமும் காணிக்கை வாங்கமாட்டார்கள். அங்குள்ள வீடுகளில் ஆகாரம் புசிக்கவும் மாட்டார்கள். ஊழியம் முடித்து வீட்டிற்கு வந்த பின்னர் வீட்டில்தான் சாப்பிடுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதம் கடைசி தேதிகளில் நான் என் பெற்றோருக்கு வரப்போகின்ற புதிய வருஷத்திற்கான ஒரு தினசரி காலண்டர் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிடுவேன். மிகவும் பெரிய எழுத்துக்களான அந்தக் காலண்டரில் அவர்கள் ஒவ்வொரு நாளும் தேதி தாள் கிழிப்பதே ஒரு ஜெபமாக இருக்கும். காலை ஜெப தியானங்களை முடித்தவுடன் தினசரி காலண்டருக்கு முன்பாக வந்து நின்று சற்று நேரம் தலை குனிந்து அந்த நாளை தனக்குக் கிருபையாகத் தந்த தன் கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை செலுத்தியதன் பின்னர் பக்தி விநயமாக தேதி தாளை கிழித்து அதைப்பத்திரமாக ஒரு சிறிய பனை ஓலைப் பெட்டியில் வைத்து விடுவார்கள். அப்படி ஒரு மாதம் முழுவதும் கிழிக்கப்பட்ட தாட்கள் முழுமையையும் தன்னை அன்புடன் பாதுகாத்த கருணாகரக் கர்த்தருக்கு துதி ஏறெடுத்த பின்னர் என் தாயாரிடம் அவற்றைக் கொடுத்து அடுப்பு எரிக்க வைத்துக்கொள்ளும்படியாகச் சொல்லுவார்கள். ஆ, தன் தேவனுக்கு என் தந்தை தன் வாழ்நாள் காலம் முழுமையும் மிகவும் நன்றி நிறைந்தோனாக ஜீவித்தார்கள்.
என் பெற்றோருக்கு நான் ஒரே ஆண் மகன் தான். ஆனால், என் தந்தை உலக மக்களைப்போல என்னைச் செல்லமாக வளர்க்கவில்லை. என் தந்தை என் தவறுகளுக்காக என்னை நன்கு அடித்து, தலையில் குட்டி வளர்த்தார்கள். என்னிடம் காணப்படும் முக்கியமான தவறு என்னவெனில் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டைவிட்டு என் பாலிய நண்பர்களுடன் புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் என்னையே மறந்து பறவைகள் வேட்டையிலோ, தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் காரியங்கள், மற்றும் பாலியத்திற்குரியதான இதர விளையாட்டுகளில் என் நாள் முழுவதும் கழியும். என் காரியத்தை முடித்து மாலையில் வீடு வந்தால் தகப்பனாரின் தண்டனை தப்பாமல் கிடைக்கும். அவர்கள் எனக்குக் கொடுக்கும் தண்டனை நூதனமாக இருக்கும். எங்கள் வீட்டின் முன்பாகத்தான் கொஞ்ச தூரத்தில் பேருந்துகள் செல்லும் ரஸ்தா உள்ளது. என் கீழ்ப்படியாமையின் குற்றங்களுக்காக அந்த ரஸ்தாஅருகில் என்னை முழங்கால்படியிட்டு நிற்கச் சொல்லுவார்கள். அது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கும். ஆனால் அவை யாவும் நண்பர்களைக் கண்டதும் முற்றும் மறந்துவிடும். பின் வந்த கடைசி நாட்களில் என் அன்புத் தந்தை என்னைப்பார்த்து “சிறு பிராயத்தில் பிள்ளையை நான் மிகவும் அடித்து, குட்டி துன்புறுத்தினதற்காக இப்பொழுது பெரிதும் மனம் வருந்துகின்றேன். நீ இவ்வளவுஅருமையான மகனாக இருப்பது அப்பொழுது எனக்குத் தெரிந்திருந்தால் உன்னை என் கையினால் தொட்டிருக்கக் கூட மாட்டேன்” என்று என்னிடம் கூறி மிகவும் மனஸ்தாபப்பட்டார்கள். ” நீங்கள் என்னை அன்று அப்படி சிட்சித்து வளர்த்த காரணத்தால் தான் நான் இப்பொழுது இந்த நல்ல பக்தி வாழ்வில் இருக்கின்றேன். அதையிட்டு நீங்கள் சற்றும் வருத்தப்பட வேண்டாம்” என்று நான் என் தந்தையை ஆறுதல்படுத்தினேன்.
என் தகப்பனார் மெய்யான இரட்சிப்பின் பாத்திரமானதாலும், நல்ல ஜெப மாந்தன் ஆனதாலும், வேத வசன பிரியன் ஆனதாலும் அவர்களின் கிறிஸ்தவ வாழ்வில் எல்லா நற்குணசீலங்களும் சிறப்பாக இடம் பெற்றிருந்தன. கர்த்தருடைய பரிசுத்த அன்பில் வளர வளர உலகம் ஒரு சத்திரமாகவும், இந்த மாய லோகில் தான் ஒரு மோட்ச பிரயாணி என்பதையும் அவர்கள் வெகு திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொண்டார்கள். அதின் காரணமாக இம்மைக்குரிய எல்லா கவர்ச்சிகளும் அவர்கள் கண்களுக்கு குப்பையாகவும், நீர்மேல் குமிழியாகவும் தெரிந்ததால் அதை முற்றுமாக அரோசித்தார்கள். யாராவது அவர்களிடம் உலகக் காரியங்களின் மேன்மைகளைக் குறித்து பேசினால் அந்த வார்த்தைகளைக் கொஞ்சம்கூட காதில் போட்டுக் கொள்ளாமல் காது கேளா செவிடனைப் போல அமர்ந்து இருப்பார்கள். அந்த நேரம் அவர்கள் சிந்தனை யாவும் தான் நாடிச் செல்லும் பரலோகத்தைப்பற்றியதாகவே இருக்கும். தன்னுடைய ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய மளிகைக் கடை வியாபாரத்தை பல்லாண்டு காலத்திற்கு முன்பே நிறுத்திவிட்டார்கள். வருமானம் எதுவும் இல்லாத நிலையிலும் தேவன் அவர்களை ஒரு குறைவும் இல்லாமல் அற்புதமாகப் போஷித்து வழிநடத்தினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையான வாழ்வை என் தகப்பனார் மேற்கொண்டார்கள். அவர்களின் ஆகாரமும் எளிமைதான். வெறும் பருப்பு, மரக்கறி உணவை விரும்பிய தானியேல் பக்தனைப்போல என் தகப்பனாரும் மரக்கறி உணவில்தான் உயிர் வாழ்ந்தார்கள்.
எனது தகப்பனார் எனக்கு எழுதிய கடிதங்கள், விசேஷமாக அவர்களின் பூவுலக இறுதி நாட்களில் எனக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றை இன்று வரை பத்திரமாக வைத்திருக்கின்றேன். அவர்களின் கையெழுத்து மிக அழகாக இருக்கும். அவற்றில் அவர்கள் எனக்கு அருமையான தேவ ஆலோசனைகளை எழுதியுள்ளார்கள். தன்னுடைய பணத் தேவைகளைக் குறித்து அவர்கள் எனக்கு ஒருக்காலும் கடிதம் எழுதினதே கிடையாது.
பூவுலக வாழ்வின் இறுதி நாட்களும், பரம கானான் பிரவேசமும்
எனது தகப்பனார் மிகுந்த ஆயத்தத்தோடு கர்த்தருடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். மரணக்கட்டிலில் படுப்பதற்கு முன்னான நாட்கள் யாவும் ஜெபத்திலேயேதான் கழிந்தன. எப்பொழுது பார்த்தாலும் தேவ சமூகத்தில் முழங்கால்களிலேயே அவர்கள் காணப்பட்டார்கள். அந்த நாட்களில் நான் எடுத்த இரண்டு புகைப்படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். மரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் எங்களிடம் “வான வீதியிலே ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் நானும் எனது நண்பனும் ஓடினோம். இறுதியில் நானே வெற்றிபெற்றதாகக் கனவு கண்டேன்” என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த நண்பர் என் தகப்பனாரைப்போலவே தேவ அழைப்பைப் பெற்று கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருந்தவர்கள் பின் நாட்களில் பாவத்தில் வீழ்ந்து தன் பந்தயப் பொருளை இழந்துவிட்டார்கள். மரணமடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பரலோகத்திற்குச் செல்லுவதற்கான டிக்கெட் தனது கரங்களில் வந்து கிடைத்துவிட்டதாக ஆனந்த பரவசத்தோடு என் தகப்பனார் எங்களிடம் சொன்னார்கள்.
ஒரு நாள் என்னிடம் “நான் மரித்துவிட்டேன், என்னை ஏழு வெண்கல செப்புக்குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து ஸ்நானம் செய்வித்து எனக்கு மாலை அணிவித்து பிரேதப் பெட்டியில் வைத்து நம்முடைய நடு முற்றத்தில் வைத்திருக்கின்றார்கள். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெட்டியிலிருந்து கொண்டு:-
பாடித் துதி மனமே, பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
பாடித் துதி மனமே
என்று பாடிக் கொண்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள். அவர்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளின்படி அவர்கள் மரித்ததும் 7 வெண்கலச் செப்புக்குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அவர்களை ஸ்நானம் பண்ணுவித்ததாக என் தாயார் என்னிடம் சொன்னார்கள். என் தகப்பனார் அடக்க தினத்தன்று தமிழ் நாட்டில் பந்த் இருந்தபடியால் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் ஓடாதபடியால் நான் எனது பரிசுத்த தகப்பனாரின் அடக்க ஆராதனையில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் என் தகப்பனார் மரணக்கட்டிலில் இருந்த நாட்களில் பிள்ளையாகிய நான் அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் என் மனம் குளிரச் செய்து மட்டற்ற சந்தோசம் அடைந்தேன். ஒரு நாள் நானும் என் தாயாரும் அவர்களை ஸ்நானம் பண்ணுவித்து நான் அவர்களை துவாலையால் நன்கு துடைத்து அவர்களைத் தூக்கி ஒரு குழந்தையைப்போல என் முதுகின் மேல் எடுத்துச் சென்று அவர்களைக் கட்டிலில் படுக்க வைத்தேன்.
என் தகப்பனார் மரணமடைவதற்கு முன்பு அதாவது ஒரு மாதத்திற்கு முன்னரே அவர்கள் அடக்கத்திற்குத்தேவையான வேஷ்டி எடுத்து, சேட் எல்லாம் ஆயத்தமாக முன்கூட்டியே தைத்துவிட தேவன் என்உள்ளத்தில் ஏவினபடியால் நான் அப்படியே செய்தேன். அவர்களுடைய அடக்க நாளில் கடைகள் எல்லாம் பந்த் காரணமாக முற்றும் அடைக்கப்பட்டிருந்தபடியால் தேவனுக்கு நான் கீழ்ப்படிந்து செய்த அந்த காரியம் அற்புதமாக அமைந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆ தேவன், தமது உத்தம அடிமையாகிய எனது தந்தைக்கு பாராட்டின அன்பைப்பாருங்கள்!
மரணப் படுக்கையில் என் தகப்னார் சுமார் ஒரு மாத காலம் இருந்தார்கள். எந்த ஒரு வியாதியும் அவர்களுக்கு இல்லை. ஆகாரம் உட்கொள்ள மனமற்றுப் போய்விட்டார்கள். கடினமான எந்த உணவும் அவர்கள் சாப்பிடவில்லை. கஞ்சித் தண்ணீரும் வெறும் தண்ணீரும்தான் அவர்கள் உட்கொண்ட ஆகாரம். அதையும் நாங்கள் கட்டாயப்படுத்தித் தான் கொடுக்க வேண்டியதாகவிருந்தது. மரண நேரம் வரை நல்ல தன்னறிவு அவர்களுக்கு இருந்தது. எனது பரிசுத்த தகப்பனார் மரணக் கட்டிலில் இருப்பதை அறிந்த எனது ஊர் இன ஜன பெந்துக்களும், அவர்களால் சரீர, ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்ற மற்ற மக்களும் அவர்களண்டை வந்து உட்கார்ந்து அழுவதைக் கண்டேன். “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும், குதிரை வீரருமாக இருந்தவரே” என்று எலிசா தீர்க்கன் புலம்பல் பாடினதையே அவர்களுடைய அழுகை எனக்கு நினைப்பூட்டினது. கர்த்தருக்கே மகிமை. மரணப்படுக்கையின் போது ஒரு நாள் நான் என் தகப்பனாரிடம் “அப்பா மரணத்தைக் குறித்து உங்களுக்கு பயம் ஒன்றுமில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பிரதியுத்தரமாக “மரணத்தைக் குறித்து நான் ஏன் பயப்பட வேண்டும்? கடந்த வாரம் தானே பரிசுத்தவான்களின் சங்கத்தை நான் கண்டேன்” என்று கூறினார்கள். “அப்பா, ஆகாரம் ஒன்றும் புசிக்காமல் அப்படியே படுத்துக் கொண்டீர்களே” என்றுநான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் “பிரசங்கி 12 ஆம் அதிகாரத்தில் பசி தீபனம் அற்றுப்போகும் என்று எழுதப்பட்டுள்ளதல்லவா?” என்று விடை பகர்ந்தார்கள்.
1991 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 30 ஆம் நாள் இரவில் தனது தனித்த கட்டிலில் ஜீவன் போய் மரித்திருந்தார்கள். அவர்கள் ஜீவன் பிரியும் போது அவர்களருகில் யாருமில்லாத போதினும் அவர்கள் தனது ஜீவ காலம் முழுமையிலும் நேசித்து கனப்படுத்தின அன்பின் இரட்சா பெருமானும் அவரது பரம சேனையும் அவர்களை அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்தார்கள் என்று நிச்சயமாக நாம் நம்பலாம்.
31-1-1991 ஆம் தேதி எனது தகப்பனாரின் அடக்கம் இருந்தது. தேவ பக்தனாகிய அவர்கள் அடக்க ஆராதனையில் உள்ளூர் வாசிகளும், அக்கம்பக்கத்திலுள்ள கிராமவாசிகளும், தேவப் பிள்ளைகளும் கலந்து கொண்டார்கள். அவர்கள் விருப்பப்படி அவர்களது சரீரம் எங்கள் வீட்டுக்குப் பின்னாலுள்ள வளவிலே அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இரண்டு பனை மரங்கள் உண்டு. அந்தப் பனை மரங்களுக்கு இடைப்பட்ட பூமியிலே என் தகப்பனாரின் சரீரம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இரு பனை மரங்களையும் அந்தப் பனை மரங்களுக்கு முன்பாக நடந்து வந்து கொண்டிருக்கும் என் தகப்பனாரையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
காலமெல்லாம் தன் கர்த்தரை அதிகமாக நேசித்து அவருக்கு ஊழியம் செய்த என் பரிசுத்த தந்தையின் வாழ்வின் மொத்தமான தேவச் செய்தி என்னவெனில் “கர்த்தர் பரிசுத்தர், அவரை பரிசுத்த அலங்காரத்தோடு தொழுது கொள்ள வேண்டும். மாய லோக வாழ்வை வெறுத்து அந்த உலக இரட்சகரை முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் அன்புகூர வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த காருண்யகாந்தனின் உள்ளத்தை நமது கறைப்பட்ட செயல்களால் புண்படுத்திவிடக்கூடாது. இந்த உலகம் வடித்தெடுத்த மாயாபுரி மாயா ஜாலக் கண்காட்சிக்கூடம். அதை நம்பி நமது விலை மதிப்பிட முடியாத நமது நித்திய பேரின்ப வாழ்வை எந்த ஒரு நிலையிலும் கை நழுவ விட்டுவிடக்கூடாது” என்பதுதான். என் பரிசுத்த தகப்பனாருக்கு ஏக புதல்வனாகிய நான் அவர்கள் வாழ்வில் முழுக்க முழுக்க கற்றுக்கொண்ட பரலோக இரகசியம் இது ஒன்றேதான். எல்லா துதி, கனம், மகிமை நம் தேவனுக்கே உண்டாவதாக. அல்லேலூயா.
எனது பரிசுத்த தாயார்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்தோப்பு என்ற அழகான சிறிய கிராமத்தில் எனது பரிசுத்த தாயார் பிறந்தார்கள். எனது தாயின் இந்துப் பெயர் பாப்பாத்தி என்பதாகும். கிறிஸ்தவ ஞானஸ்நானப் பெயர் தேவகிருபை பாப்பம்மாள் ஆகும். தாம்பிரவர்ணி நதி பாயும் இடத்திலுள்ள அந்த அழகான கிராமத்திலே எனது சிறு பிராயத்தின் நாட்கள் பல கழிந்தன. தாயாரின் திட்டமான பிறந்த நாள் எனக்குத் தெரியாது. எனினும் முதலாம் உலகப் போரின் ஆரம்பத்தில் (1914) தாம்பிரவர்ணி ஆற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளத்தின் போது தான் பிறந்ததாக கூறுவார்கள். எனது தாயின் நெருங்கிய இனஜனபெந்துக்கள் இன்று வரை அந்த இடத்தில் வைராக்கியமான இந்துக்களாக வாழ்ந்து வருகின்றனர். எனது தாத்தா (தாயின் தந்தை) இந்துவிலிருந்து கிறிஸ்தவனாக மாறினவர்களாவார்கள்.
தனது நெருங்கிய இந்து இனஜன பெந்துக்கள் தங்களது தெய்வங்களுக்கு முன்பாக ஆடு, கடாக்கள் வெட்டி பலி செலுத்துவதை சிறுமியாக அவர்கள் இருந்தபோது நேரில் பார்த்திருப்பதாக எனது தாயார் கூறியிருக்கின்றார்கள். அப்படி அவர்கள் இந்து இனஜன பெந்துக்கள் சாமி ஆடும்போது இராக்காலங்களில் அகல் விளக்குகளில் நெய், எண்ணெய் போன்றவைக்குப் பதிலாக தண்ணீர் ஊற்றி அந்தத் தண்ணீர்களிலே திரிகள் போட்டு விளக்குகள் எரியுமாம். சாமி ஆடுபவர்கள் மண் தரையை சாப்பிடும் தட்டாகக் கொண்டு சாதம் போட்டுச் சாப்பிடுவார்களாம். சாத்தானாம் பிசாசு, சாப்பிடும் தட்டாக மண் தரையை அவர்களுக்காக மாற்றி விட்டிருப்பான் என்று என் தாயார் கூறுவதுண்டு.
எனது தாயாரின் உள்ளத்திலே தேவன் தமது இரட்சிப்பின் தீபத்தை ஏற்றியது
மலையாள தேசத்தின் பக்த சிரோன்மணி சாது கொச்சு குஞ்சுவின் சிறப்பான ஊழிய நாட்கள் அவை. ஆ, எத்தனையான பரிசுத்த தேவ மனிதர் அவர். அவரால் ஆண்டவர் இயேசுவுக்குள் வழிநடத்தப்பட்ட மக்கள் ஏராளம். “எனது சரீரத்தை சின்னஞ்சிறு துண்டுகளாக வெட்டி, வெட்டிப் போட்டால் அந்த ஒவ்வொரு மாமிச துண்டும் “இயேசு” “இயேசு” என்று துடிக்கும் என்று அந்த தேவ பக்தன் சொல்லுவாராம். அந்த தேவ மனிதர் கொஞ்சம் அரிசி வைத்து சாதம் பொங்கி அந்த சாதத்துடன் தண்ணீர் கலந்து அதைக் குடிப்பதுடன் அந்த சாதத்தை 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்து அத்துடன் தண்ணீர் சேர்த்து குடித்து வருவாராம். அத்தனை எளிமையின் வாழ்க்கை.
ஒரு நாள் அந்த தேவ மனிதர் தன்னால் ஆண்டவர் இயேசுவண்டை வழிநடத்தப்பட்ட கொஞ்சம் தேவ மக்களுடன் எனது தாயார் வாழ்ந்த ஆழ்வார்தோப்பு கிராமத்தின் வழியாக நடந்து சென்றிருந்திருக்கின்றார். வெண் வஸ்திரம் தரித்து கைகளில் வெண்மையான துண்டு துணிகளை பிடித்து அதை தலைக்கு மேலாக உயர்த்தி வீசிக்கொண்டு அந்த தேவ மக்கள் எல்லாரும் சென்றிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் கன்னிப் பெண்களும் இருந்திருக்கின்றனர். அவர்கள் பாடிச் சென்ற பாடல் இதுதான்:-
எந்தன் பூமானைக்காண சிந்தை பெருதையோ
என்றைக்கு காண்பேனோ – ஆ! ஆ!
விண்ணில் இருந்தவர் மண்ணின்மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர்
லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர் – எந்தன் பூமானை
இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ
சொன்ன வாக்கை நினைத்து
அடியேனுந்தன் பாதம் பணிந்து வந்தேன் – எந்தன் பூமானை
கன்னத்தில் அடிபட்டு கண்ணீர் விடும் வேளை
என்னை நினைத்தீரோ நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் – எந்தன் பூமானை
தேவ மனிதர் சாது கொச்சி குஞ்சுவும் அவரது குழுவினரும் வெள்ளைத் துணிகளை கரத்தால் மேலே அசைத்து பாடிச் சென்ற பரலோகக் காட்சியை எனது அருமைத்தாயார் தனது கண்களால் பார்த்து ஆனந்த பரவசம் அடைந்து அந்தப் பெண்களுடன் தானும் போய்விடலாமா என்று வாலிப பெண்ணாக இருந்த எனது தாயார் தீவிரமாக யோசித்திருக்கின்றார்கள். அந்த நாளிலிருந்தே பரிசுத்த ஆவியானவர் எனது தாயார் உள்ளத்தில் இடைப்பட்டு வந்திருக்கின்றார். அவர்களது வாழ்விலே ஒரு பலத்த பரிசுத்த அசைவு அந்த நாளிலிருந்து ஏற்பட்டிருக்கின்றது.
எனது தாயாருடைய கல்வி மிகவும் சொற்பமானது. நெல்லை மாவட்டத்திலுள்ள சுவிசேஷபுரத்திலுள்ள மிஷன் பாடசாலையிலும், மெய்ஞ்ஞானபுரம் கிராமத்திலுள்ள பெண்கள் பள்ளியிலும் அவர்கள் கல்வி கற்றிருக்கின்றார்கள். படிப்பின்மேல் அவர்களுக்கு அதிகமான விருப்பம் இல்லாததால் ஆரம்பக் கல்வியோடு தாயாரின் படிப்புக்கு முற்றுப் புள்ளி விழுந்தது.
மகனுக்காக தாயார் சிந்திய கண்ணீர்
எனது கல்வி ஞானத்திற்காகவும், கர்த்தருக்குப் பிரியமான எனது பரிசுத்த வாழ்வுக்காகவும் எனது அருமைத் தாயார் அதிகமாக அழுது ஜெபித்து வந்தார்கள். “ஆண்டவரே, சாலொமோன் ராஜாவுக்கு கொடுத்த ஞானத்தை எனது மகனுக்கும் கொடும், கல்விமான்களின் நாவை அவனுக்கு அருளிச்செய்யும்” என்று எனது தாய் ஜெபித்த ஜெபம் இன்றும் என் நினைவில் உள்ளது. எனது தாயார் சிறுவனான என்னை தனக்கு முன்பாக நிறுத்தி எனக்காக தாரை தாரையாக கண்ணீர் வடித்த நினைவை என்னால் என்றும் மறக்கவியலாது.
ஒரு சமயம் இரண்டு வாலிப குருவானவர்கள் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள திருமறையூர் வேதசாஸ்திர கல்லூரியிலிருந்து எங்கள் ஊர் தேவாலயத்துக்கு வந்து ஞாயிறு ஆராதனை நடத்தியிருக் கின்றார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த என் தாய் “ஆண்டவரே, எனது மகனை இந்த குருவானவர்களைப்போல உமது ஊழியத்தின் பாதையில் பயன்படுத்தம்” என்று மிகவும் அங்கலாய்ப்போடு ஜெபித்தார்களாம். அந்த ஜெபம் தேவனுடைய உள்ளத்துக்கு உகந்த ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை இப்பொழுது நான் உணருகின்றேன். என் தாயின் கண்ணீரின் ஜெபமே தேவன் என்னை தமது ஊழியத்தின் பாதையில் விசாலமாக எடுத்து பயன்படுத்த வகை செய்திருக்கின்றது. பிள்ளைகளுக்காக பெற்றோர் கண்ணீர் சிந்தி ஏறெடுக்கும் ஜெபங்கள் ஒருக்காலும் வீண்போகாது. எனது தாயார் எனக்காக ஏறெடுத்த கண்ணீரின் ஜெபங்கள் எங்கள் பிள்ளைவிளை என்ற ஊரின் தேவாலயத்தில்தான். அந்த தேவாலயத்தின் படம் இங்கு இடம் பெற்றுள்ளது.
நான் பிறந்து வளர்ந்த ஊர் அதுவேதான். தேவாலயத்திற்கு அருகில் இருப்பது நான் படித்த எனது ஆரம்ப பாடசாலை. அந்த பாடசாலையில்தான் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் என்ற பெரிய கிறிஸ்தவ கிராமத்திற்கு சுமார் நான்கு மைல்கள் தொலைவில் பிள்ளைவிளை என்ற எனது சிறிய ஊர் அமைந்துள்ளது.
எனது தாயாரிடம் காணப்பட்ட பரிசுத்த தேவ பண்புகள்
எனது தாயின் தாயார் (எனது பாட்டியம்மா) வேதமணி அம்மாள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு ஆழ்வார்தோப்பு என்ற தனது ஊரிலிருந்து வந்து பக்கத்து ஊரில் (நாசரேத்) வாரந்தோறும் செவ்வாய் கிழமை கூடும் சந்தைக்கு பிச்சை எடுக்க வரும் ஏழை எளியவர்களுக்கு உணவு அளிப்பார்களாம். அந்த மன உருக்க அன்புதான் எனது தாயாரிடத்திலும் காணப்பட்டது. ஏழைகள் எளியவர்களுக்கு உதவி செய்வதில் மனம் கோணாதவர்கள். அவர்களால் அன்பு செய்யப்பட்டவர்கள் ஏராளம் ஏராளமாகும். வீட்டிற்கு வருபவர்களை உபசரியாமல் விடவேமாட்டார்கள். ஒன்றும் இல்லை என்றால் ஒரு துண்டு கருப்பு கட்டியும் ஒரு செம்பு நிறைய குளிர்ந்த தண்ணீரும் கொடுத்தே அனுப்புவார்கள். எனது தாயாரின் சமையல் மிகவும் சுவையானதாக இருக்கும்.
எனது தகப்பனார் வைத்திருந்த சிறிய பலசரக்கு கடையை எனது தாயாரே நடத்தினார்கள். அமுக்கி, குலுக்கி சரிந்து விழும்படியாக ஏழைத்தாயார் அளந்து போடுவார்கள். தனது நெஞ்சறிய ஒரு ஏமாற்றம் கூட செய்திருக்க மாட்டார்கள். பொய்யும் பேச அறியார்கள். கடையின் பொருட்களை ஏழைகள் எளியவர்கள் போன்றவர்களுக்கு கடன் கொடுத்தே முடித்துவிட்டார்கள். கடன் வாங்கிய மக்கள் திரும்ப பணத்தை செலுத்தவே இல்லை. கடுஞ் சொல் கூறி அவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் கடுமையும் அவர்களிடம் கிடையாது.
யாரையும் மனம் நோகப் பேசமாட்டார்கள். சற்று கடினமாகப் பேசிவிட்டாலும் அதற்காக உள்ளம் உடைந்து அந்த ஆத்துமாவிடம் சென்று உடனே மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுவார்கள். அப்படிச் செய்யாத பட்சத்தில் அவர்களால் தூங்க இயலாது. தனது நான்கு பிள்ளைகளாகிய என்னையும், எனது மூன்று இளைய சகோதரிகளையும் தேவதா பக்தியில் வளர்த்தார்கள். கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் பிள்ளைகளாகிய நாங்கள் எங்கும் செல்லாமல் வீட்டோடேயே இருக்க வேண்டும். தேவனுடைய வசனங்களை நாங்கள் அன்று மனப்பாடமாகப் படித்து ஒப்புவிக்க வேண்டும்.
தனது உள்ளத்திலே கள்ளம்,கபடம், சூது, வஞ்சனை சேர்த்து வைக்கமாட்டார்கள். யாரிடத்தில் குற்றம் குறை இருந்தால் நேருக்கு நேர் சொல்லுவார்கள். ஒரு நாள் ஒரு மனிதர் வந்து தனது மருமகள் தனக்குச் செய்யும் கொடுமையான காரியங்களை எனது தாயாரிடம் சொல்லி வேதனைப்பட்டு நின்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனது தாயார் “உங்கள் அப்பா, அம்மாவை நீங்கள் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் எப்படி நடத்தினீர்கள்? அந்தக் கொடுமையின் பின் விளைவுகளைத்தான் இப்பொழுது நீங்கள் பெற்று அனுபவிக்கின்றீர்கள். அப்பா, அம்மாவை நீங்கள் நன்றாகக் கவனித்திருந்தால் இவை எல்லாம் உங்களுக்கு நேரிட்டிருக்காது” என்று கூறிவிட்டார்கள்.
தாயின் ஆவிக்குரிய பக்தி வாழ்க்கை
ஒரு பரிசுத்தவாட்டிக்குரிய அனைத்து குணாதிசயங்களும் எனது தாயிடத்தில் காணப்பட்டன. எடுத்த எடுப்பில் நாம் அதை கண்டு பிடிக்க இயலாதாயினும் பொறுமையாக நாம் அதை கவனித்தால் கண்டு கொள்ளலாம். தனது இரட்சா பெருமானாம் கர்த்தரை “கண்மணி”என்றே அவர்கள் காலம் முழுவதும் அழைத்தார்கள். கண்மணி என்ற வார்த்தைதான் அடிக்கடி அவர்கள் வாயில் இருக்கும். “நான் நாளைக்கு அங்கே போவேன்” “அதைச் செய்வேன்” “இதைச் செய்வேன்” என்று யாராவது அவர்களுக்கு முன்பாகச் சொன்னால் அந்த வார்த்தைக்கு முன்பாக “கர்த்தருக்குச் சித்தமானால்” என்ற வார்த்தையை பயன்படுத்தவும் நமது அனைத்துக் காரியங்களுக்கும் முன்பாக ஆண்டவருடைய கிருபை நமக்குத் தேவை என்றும் சொல்லுவார்கள். வேதாகமத்தில் சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி ஆகிய மூன்று புத்தகங்களும் அவர்களுக்கு மிகவும் விருப்பமான புத்தகங்கள். பல சங்கீதங்களும் அவர்களுக்கு மனப்பாடமாக தெரியும். மோசே தீர்க்கனின் 90 ஆம் சங்கீதம் அவர்களின் பிரிய சங்கீதமாகும்.
தனது ஒவ்வொரு நாள் குடும்ப வாழ்வையும் ஜெபத்தோடு தொடங்குவார்கள். நெடு முழங்காலூன்றி இரு கரம் கூப்பி தலையையும் முகத்தின் பாதி பகுதியையும் மூடிமுக்காடிட்டு ஜெபிப்பார்கள். பகற் காலங்களிலும் தனக்கு நேரம் கிடைக்கும் போது எங்கள் வீட்டின் அறை ஒன்றுக்குள் சென்று ஒரு பனை ஓலைப்பாயை தனது முழங்கால்களின் கீழ் போட்டுக்கொண்டு தேவனை நோக்கி மன்றாடிக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளாகிய எங்கள் நால்வருக்கும் எனது தந்தைக்கும் எங்கள் வீட்டு சமையல் அறையில் அவர்கள் ஆகாரம் பரிமாறுவதே ஒரு பரிசுத்த காட்சியாக இருக்கும். எங்களுடைய சாப்பாட்டுத் தட்டுகளை தனக்கு முன்பாக வைத்து சூடாக இருக்கும் மண் சாப்பாட்டுப் பானையை திறநது இரு கரம் கூப்பி ஜெபித்து ஆகாரத்தை பரிமாறுவார்கள். நாங்களும் தனித்தனியே ஜெபித்துச் சாப்பிட வேண்டும்.
பெருமை, மனமேட்டிமை, பொருளாசை போன்றவை எல்லாம் அவர்கள் முற்றும் அறியாத காரியங்களாகும். நான் வாலிபனாக இருந்தபோது “நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாம். திருமணம் இல்லாமலே நீ கர்த்தருக்கு ஊழியஞ் செய்” என்று கூறினார்கள். பெற்ற தாய் தனது ஒரே ஆண் மகனுக்கு இப்படியான தேவ ஆலோசனை கொடுப்பது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. அவர்களுடைய உள்ளம் தேவ அன்பால் நிறைந்திருந்தபடியால் அப்படிச் சொன்னார்கள்.
தேவ எக்காளம் பத்திரிக்கை நமக்குக் கிடைத்திராது
கர்த்தருடைய பேரன்பால் தேவ எக்காளம் பத்திரிக்கை அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வதமாக நீண்ட 46 ஆண்டு காலம் அச்சிடப்பட்டு வெளி வந்திருக்கின்றது. இப்படிப்பட்ட ஆசீர்வாதமான தேவ எக்காளம் பத்திரிக்கை நமக்குக் கிடைத்திருக்காமலே போயிருக்கக்கூடும். ஆம், அப்படித்தான் சத்துருவாகிய பிசாசானவன் அது வெளி வராதபடி தடுத்து நிறுத்த ஆரம்பத்திலேயே மகா தந்திரமான திட்டம் தீட்டினான். ஏதேன் பூங்காவில் நாம் இழந்த பரலோக சுதந்திரத்தை திரும்பவுமாக நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மகா அன்பின் வைராக்கியம் தேவ குமாரனை சிலுவை மரத்தில் பாதகன் போல தொங்கி மரிக்கச் செய்தது. அந்தச் சிலுவை மரணத்தை எப்படியாகிலும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற தந்திர சூழ்ச்சியால் சாத்தான், ஏரோதுவை தூண்டிவிட்டான். அவன் 2 வயதுக்குட்பட்ட அனைத்து சிசுக்களையும் பெத்லகேமிலும் அதின் எல்லைகளிலும் கொன்று குவித்தான். காரணம், அந்த சங்காரத்தில் தேவ மைந்தனும் சரியாக சிக்கிக் கொள்ளுவார் என்று அவன் திட்டமாக நினைத்தான். ஆனால் அவனது திட்டங்கள் தேவனால் அடித்து நொறுக்கப்பட்டது.
தேவ எக்காளத்தை எழுதி வெளியிடப்போகும் குமாரனைப் பெறப்போகும் தாயையே கொன்றுவிட்டால் தேவ எக்காளம் எங்கிருந்து வெளியாகும்? அதை முளையிலே கிள்ளி எறிய சாத்தான் திட்டம் தீட்டினான். எனது தாயார் தனது திருமணத்திற்கு முன்பு மிகவும் இளம் பெண்ணாக இருந்த நாட்களில் ராஜகனி என்ற தனது சிநேகிதியோடு சேர்ந்து வந்து தங்கள் ஊருக்கு அருகாமையிலுள்ள தாம்பிரவர்ணி ஆற்றில் ஸ்நானம் பண்ண வந்திருக்கின்றார்கள். ஆற்றில் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்த வேளையில் எப்படியோ தெரியாமல் ஒரு ஆழமான தண்ணீர் பகுதிக்குள் இருவரும் சென்றுவிட்டார்கள். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நீரில் மூழ்கத் தொடங்கினர். எனது தாயார் சற்று பெலசாலியாக இருந்தபடியால் தனது தோழியைப் பிடித்து தண்ணீரில் நன்றாக ஆழ்த்தி உயர எழுந்து நின்று “ஐயா, எங்களைக் காப்பாற்றுங்கள், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கின்றோம்” என்று உரத்த சத்தமிட்டுக் கூக்குரலிடவும், அந்த துயரக் குரல் கேட்டு அருகில் ஆற்றில் தனது துணியை துவைத்துக் கொண்டிருந்த ஒரு அன்பான மனிதர் ஓடோடி வந்து எனது தாயாரையும் அவர்களது சிநேகிதியையும் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கின்றார். தாயார் எழுப்பிய அந்தக் கடைசி குரல் அந்த மனிதனுக்குக் கேட்காமல் இருந்திருக்கும் பட்சத்தில் அந்த இரு பெண்களும் அங்கு ஜல சமாதி ஆகியிருப்பார்கள். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. ஆனால் தேவனுக்கு தனது பிள்ளையின் மேல் அக்கறை இருந்தது. அநேக ஆயிரங்களுக்கு தமது கிருபையின் சுவிசேஷத்தை எடுத்துச் சென்று பிரசங்கிக்கவும், தனது பரிசுத்தமான எழுத்துக்களின் மூலமாக அநேகரை நீதியின் சூரியனாம் கிறிஸ்து இரட்சகரண்டை வழிநடத்தும் பாத்திரத்தை அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் தோன்றச் செய்ய உலகத் தோற்றத்திற்கு முன்பதாகவே அன்பின் தேவன் திட்டம் வைத்திருந்தார். அதின் காரணமாக அவர் அங்கே ஒரு அன்பான மனிதனை எனது தாயாரைக் காப்பாற்ற ஆயத்த நிலையில் வைத்திருந்தார். அல்லேலூயா.
எனது தாயார் ஆனந்தத்தால் வெட்கமடைந்த ஓர் நாள்
ஒரு நாள் ஒரு பரிசுத்த தேவ பிள்ளை எங்கள் ஊருக்கு பக்கத்து ஊருக்கு வந்திருந்த சமயத்தில் தன்னுடன் அழைத்து வந்த தனது தோழிகளான பரிசுத்த தேவ மக்களிடம் “வாருங்கள், நமது உள்ளங்களை தனது பரிசுத்தமான தேவ எக்காள எழுத்துக்கள் மூலமாக பரவசப்படுத்தி எழுதி வரும் சகோதரனுடைய பரிசுத்த தாயாரை பார்க்க வாருங்கள்” என்று கூறி தனது அன்பான தோழிகளை கூட்டிக்கொண்டு எனது தாயாரைப் பார்க்கச் சென்றிருக்கின்றார்கள். அவர்களின் வரவால் எனது தாயார் ஆனந்தமுற்று அந்த ஆனந்தத்தால் வெட்கமடைந்ததாக என் தாயார் என்னிடம் ஓர் தடவை மகிழ்ச்சியோடு கூறினார்கள்.
தாயின் மிக்க பாசம்
என் அருமைத் தாயார் தனது ஒரே மகனாகிய என்னை அதிகமாக நேசித்தார்கள். என்னை அவர்கள் கை நீட்டி அடித்த நினைவே எனக்கு இல்லை. அப்படியே எனது சகோதரிகளையும் அடித்ததை நான் பார்க்கவில்லை. தனது இடுப்பில் என்னை அமர்த்தி எனக்கு உணவு ஊட்டிய நினைவு இன்றும் எனது மனதில் பசுமையாக உள்ளது. இரவோ, பகலோ நான் ஒரு இருமல் எடுத்தாலும் அதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அந்த இருமல் நிற்கும் வரைக்கும் நானாவித நாட்டு மருந்துகள் கொடுத்து விடுவார்கள். அந்த அன்பை பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவரிடத்திலும் காண்பித்தார்கள். நான் உலகப்பிரகாரமான அலுவலில் இருந்த நாட்களில் நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களை வாசித்து முடித்த பின்னர் அவைகளை கிழித்து வீசுவதோ அல்லது அடுப்பில் போட்டு எரிப்பதோ கிடையாது. எனது கடிதங்கள் நிறைய சேர்ந்ததும் முதலாவது அந்தக் கடிதங்களை தண்ணீரில் நனைய வைப்பார்களாம். தண்ணீர்பட்டதும் மையினால் எழுதிய வார்த்தைகள் மறைந்ததும் அதை வெயிலில் உலர்த்தி அந்த வெற்றுத் தாட்களை மண்ணிலே புதைத்து விடுவார்களாம். எனது கரம்பட்ட அந்த தாட்களுக்கு அத்தனையானஅன்பு செய்திருக்கின்றார்கள். ஆ, தாயின் அன்பின் பாசத்தை என்னவென்று சொல்லுவது!
நான் எனது தாயை அவர்களுடைய தனிமையான காலத்தில் ஊர் சென்று பார்த்து வந்த நாட்களை என்னால் என்றும் மறக்கவியலாது. இந்த தேதி இத்தனை மணிக்கு ஊர் வருகின்றேன் என்று தாயாருக்கு முன்கூட்டியே நான் கடிதம் எழுதிவிடுவேன். அநேகமாக அதிகாலை ஐந்து மணிக்கு எங்கள் ஊர் வழியாகச் செல்லும் திருநெல்வேலி – உடன்குடி பேருந்தில்தான் நான் பிரயாணப்பட்டு எங்கள் வீடு போய்ச் சேருவேன். ஏழைத்தாயார் நான் வருகின்ற இரவு முழுவதும் தூங்கியிருக்கவே மாட்டார்கள். அதிகாலையே எழுந்து வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து வைத்து விட்டு எங்கள் வீட்டு வராந்தாவில் அதிகாலை இருட்டான அந்த நேரம் தனது கரத்தில் சிறிய ஒளி வீசும் அரிக்கன் லாந்தருடன் எனது வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். பேருந்து வந்ததும் அந்த விடி பகல் இருட்டு வேளையில் தனது கரத்தில் அரிக்கன் லாந்தர் விளக்குடன் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவாறே ரோட்டில் நடந்து வந்து கொண்டிருப்பார்கள். எனக்காக பண்டம் பலகாரங்களை எல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள். அதே சமயம் நான் எனது சில நாட்களை எனது தாயாருடன் செலவிட்டுவிட்டு நீலகிரி மலைகளுக்குப் புறப்படும் நேரம் கண்ணீரின் காட்சியாகும். அந்த நாளின் காலையிலேயே ஏழைத் தாயின் முகநாடி முற்றும் வேறுபட்டுவிடும்.
நான் அவர்களிடம் விடைபெற்று புறப்படும் கடைசி நேரத்தில் அவர்கள் உள்ளத்திலுள்ள வியாகுலத்தை சொல்லித் தீராது. பேருந்து எங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது பாசமிக்க தாய் நான் ஏறிச்செல்லும் பேருந்தை துக்கத்தோடே ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே இருப்பார்கள். நான் போன பின்னர் அவர்கள் தனிமையில் உட்கார்ந்து கண்ணீர் சிந்தியிருப்பார்கள் என்று நான் எண்ணுகின்றேன். ஆ, தாயின் அன்பு எத்தனை பெரியது! எனது தாயார் சுமார் 58 ஆண்டு காலம் வாழ்ந்த எங்கள் வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
நானும் என் உடன் பிறந்த தங்கையர் மூவரும் பிறந்ததும் இந்த வீட்டில்தான். யாவுக்கும் மேலாக எனது 18 ஆம் வயதில் நான் எனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும் 2 கொரிந்தியர் 5 : 17 ன்படியான புது சிருஷ்டிப்பின் அனுபவத்தையும் கர்த்தருடைய அனந்த அன்பால் நான் பெற்றுக் கொண்டதும் இந்த வீட்டில்தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
மரண நாளை முன்கூட்டியே அறிந்த தாயார்
நான் என் அருமைத் தாயாரை கடைசியாகப் பார்த்த சமயம் தனது மரணத்தை குறித்து என்னிடம் கூறிவிட்டார்கள். எனது தங்கையிடம் தைக்கக் கொடுத்துள்ள சட்டையை தனக்குப் போடும்படியாகவும், சொற்ப விலைக் கிரயத்தில் தனக்கு பிரேதப் பெட்டி செய்ய வேண்டும் என்றும், தனது சரீரத்தை எனது பரிசுத்த தந்தைக்கு அருகில் வைக்கும்படியாகவும் சொன்னார்கள். தனது சரீர அடக்கத்திற்குப் பின்னர் பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் வீட்டில் தங்கி ஸ்தோத்திர கூட்டத்தையும் வைத்துவிட்டு கடந்து செல்லும்படியும் கூறினார்கள். மரணப்படுக்கையில் இருக்கும்போது எந்த ஒரு உலகப்பிரகாரமான பாரமோ, மரண பயமோ, பயங்கள், திகில்களோ சற்றும் அவர்களுக்கு இல்லாதிருந்தது. மிகுந்த தேவ சமாதானத்தோடு கர்த்தருக்குள் அமைதியாகப் படுத்திருந்தார்கள். பிள்ளைகளாகிய எங்களுடைய வருங்காலங்களைப் பற்றிய எந்த ஒரு வார்த்தையும் அவர்கள் வாயிலிருந்து புறப்படவில்லை.
பெலவீனமாக மரணக்கட்டிலில் அவர்கள் இருந்த நாட்கள் ஒன்றில் நானும், எனது தங்கைமாரும் சேர்ந்து அவர்களை நன்கு ஸ்நானம்பண்ணுவித்து நானே எனது தாயாரின் தலையை துவாலையால் நன்றாகத் துடைத்தேன். “அப்பாவை நீயே குளிப்பாட்டியதும் அவர்கள் கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரைவாகக் கடந்து சென்றுவிட்டார்கள். இப்பொழுது நீ என்னை ஸ்நானம் பண்ணுவித்திருக்கின்றாய். அம்மாவும் சீக்கிரம் ஆண்டவரின் சமூகத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுவேன்” என்று சொன்னார்கள். அப்படியே நடந்தது.
எனது தாயாருக்கு கஷ்டமாக இருக்கின்றது என்று எனக்கு தகவல் வந்ததும் நான் புறப்பட்டுச் சென்றேன். அதிகாலையிலேயே வீடு போய்ச் சேர்ந்த நான் எனது அருமைத் தாயார் கண்களை மூடிய நிலையில் படுத்திருப்பதை கவனித்தேன். அவர்களால் வாய் திறந்து பேசவோ அல்லது கண்களைத் திறந்து பார்க்கவோ இயலாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். நான் குனிந்து அவர்களுடைய காதிற்குள்ளாக “அம்மா, உங்கள் மகன் சாமுவேல் வந்துவிட்டேன்” என்று இரண்டு தடவைகள் சொன்னேன். இரண்டுதடவைகளும் தனது தலையை நன்றாக அசைத்து எனது வருகையை தெரிந்து கொண்டார்கள். உடனே நான் போய் முழங்காலூன்றி தேவ சமூகத்தில் ஜெபித்தேன். ஓரிரு மணி நேரத்திற்குள்ளாக எனது தங்கை வந்து எனது தோளில் தட்டி என்னை அழைத்தார்கள். நான் விரைந்து சென்றேன். நான் போகப் போக என் அருமைத் தயாயாரின் ஜீவன் தேவ சமூகத்துக்கு சமாதானத்துடன் பிரிந்து சென்றது. கர்த்தருடைய நல்ல நாமத்திற்கு துதி உண்டாவதாக.
பரலோகத்தில் இளைப்பாறும் தாயார்
எனது பரிசுத்த தகப்பனார் உயிரோடிருந்த நாட்கள் ஒன்றில் ஒரு சொப்பனம் கண்டு எங்கள் எல்லாரிடமும் பரவசத்துடன் சொன்னார்கள். நோவா காலத்திய பெரு வெள்ளத்தைப் போல ஒரு பெரு வெள்ளம் வந்து உலகின் அனைத்து மக்களையும், ஜீவராசிகளையும் அழித்து முடிந்ததும் எனது தகப்பனார் அந்த அழிவிலிருந்து தப்பி ஒரு பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு “தேவன் என்னை அழிவிலிருந்து காத்துக்கொண்டார். ஆனால் ஏழை மனைவி பாப்பாதான் வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டாள்” என்று கண் கலங்கிக் கூறி சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் எனது தாயார் வெள்ளத்தின் தண்ணீர் வழியாக ஏதோ ஒரு திசையிலிருந்து “அப்பா, தேவன் என்னையும் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொண்டார்” என்று மகிழ்ச்சி பொங்க எனது தகப்பனாரிடம் வந்து சேர்ந்ததாகக் கூறினார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
பரிசுத்தவானான ஒரு விருத்தாப்பிய மனிதனை ஒரு இராக்காலம் எனது தகப்பனாரும் தாயும் பேருந்து ரஸ்தாவில் சென்று கொண்டிருந்த அவரை கூட்டாகச் சேர்ந்து எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் சேர்ந்து அவரைக் குளிப்பாட்டி அவருக்கு உணவளித்து அவரைப் படுக்கையில் அமர்த்தியபோது அந்த மனிதர் “உங்கள் இருவரின் பெயர்களும் பரலோகத்தில் எழுதப் பட்டிருக்கிறது” என்று கூறினாராம். பொழுது விடிவதற்குள்ளாக அந்த தேவ பக்தன் எனது தாய் தந்தையரிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் வீட்டைவிட்டுப்புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அத்துடன் நள்ளிரவு நேரத்திலும் வீட்டைத் திறந்து வெளியே வந்து வானத்திற்கு நேராகத் தனது கரங்களை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருந்ததை எனது தகப்பனார் பார்த்திருக்கின்றார்கள்.
மரணத்திற்கு முன்பாக எங்கள் யாருடைய தூண்டுதலும், பலவந்தமும் இல்லாமல் தானாகவே தாயார் போய் முழுகி ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். அத்துடன் எல்லா ஆவிக்குரிய கூட்டங்களிலும், கன்வென்ஷன்களிலும் தவறாது பங்கெடுத்து வந்திருக்கின்றார்கள். தன்னுடைய இறுதி நாட்களிலும் ஆவிக்குரிய காரியங்களில் அதிக நாட்டம் காண்பித்திருக்கின்றார்கள். எல்லா துதி கனம் மகிமை நம் அன்பின் தேவனுக்கே உண்டாவதாக. ஆமென்.