ஒரு மெய்யான பரிசுத்த தேவ பிள்ளை பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை
தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே (லூக்கா 17 : 21)
1190 – 1280 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மாபெரும் பரிசுத்தவான் ஆல்பெர்ட் (Albert, the great Saint) என்ற பண்டைய தேவ பக்தன் “தேவனுடைய ராஜ்யம்” என்பது “இயேசு கிறிஸ்துவானவராகும்”. இயேசுவானவர் இருக்கும் இடமே மோட்சம். உன்னுடைய உள்ளத்தில் தேவனுடைய ராஜ்யம் இருக்கின்றது என்பதின் பொருள் உன் உள்ளத்தில் இயேசு இரட்சகர் என்ற மோட்சம் இருக்கின்றது என்பதுவே. உனது வாழ்க்கை முடிவில்லாத நித்தியமாகிய இயேசுவுடன் இணைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையாகும். அந்த வாழ்க்கையின் ஒரே தேவை அந்த இயேசுவின் பாதங்கள் மாத்திரமே (லூக்கா 10 : 42 ) அந்தப் பொற் பாதங்கள் மேல் உள்ள ஒரே வாஞ்சையைத் தவிர உலகத்தில் வேறு எந்த ஒரு காரியத்தின் மேலும் நீ விருப்பமும் வாஞ்சையும் வைப்பது என்பது நித்திய நஷ்டமாக உனக்கு முடியும்” என்று மேற்கண்ட ஆல்பெர்ட் என்ற பரிசுத்தவான் எழுதுகின்றார்.
அன்பின் ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்று அவருடைய அன்பின் ஐக்கியத்தில் நாள்தோறும் திடமாக முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு தேவப்பிள்ளையின் இருதயத்தில் மோட்சம் இருக்கின்றது. நாள்தோறும் சில மணி நேரங்களை ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் ஒழுங்காக ஜெபத்தில் செலவிட்டு வாருங்கள். நிச்சயமாக மோட்சத்தின் முன் ருசியை நீங்கள்அனுபவித்து ஆனந்தித்து வருவீர்கள். அந்தப் பரலோக ருசியை நீங்கள் கண்டு கொண்டுவிட்டால் அதற்கப்பால் தொலைக்காட்சி பக்கமே உங்கள் காலை எடுத்து வைக்கமாட்டீர்கள். அதைக் கண்ணேறிட்டுக்கூட பார்க்க மாட்டீர்கள். “இன்றைக்கு இருக்கும் 24 மணி நேர கிறிஸ்தவ ஒளிபரப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரலோகத்திலிருந்து ஒரு தேவ தூதன் இறங்கி வந்து தேவச்செய்தி கொடுக்கின்றார், வாருங்கள், வந்து கேளுங்கள்” என்று யாராவது உங்களுக்குச் சொன்னால் கூட அதற்கு நீங்கள் நிச்சயமாக செவி கொடுக்கமாட்டீர்கள், போய்ப் பார்க்கவும் மாட்டீர்கள். உண்மைதான், நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். மரியாள் அம்மையாரைப் போல ஆண்டவரின் பரிசுத்த பாதங்களில் அமரும்போது அவரே நமக்கு எல்லாக் காரியங்களையும் போதித்து நம்மைத் தமது நித்திய ஜீவப்பாதையில் அருமையாக கரம் பிடித்து வழிநடத்தும்போது நாம் எந்த ஒரு செய்தியையும் கேட்க தொலைக்காட்சி பெட்டி பக்கம் செல்லவே மாட்டோம். உங்கள் வாழ்நாள் காலத்தில் இதுவரை தேவாலயங்களிலும், உயிர்மீட்சி கூட்டங்களிலும், விசுவாச ஜெப வீடுகளிலும் எத்தனை ஆயிரம், பதினாயிரம் பிரசங்கங்களைக் கேட்டுவிட்டீர்கள். ஆனால், நம் வாழ்வில் எந்த ஒரு பரிசுத்த மாற்றமும் ஏற்படவில்லையே. ஆர்தர் பிங்க் என்ற பரிசுத்த தேவ மனிதர் தனது புத்தகம் ஒன்றில் எழுதினதின்படி தண்ணீரில் போடப்பட்ட கருங்கல்லாக ஒரு அணுவளவும் மாற்றமின்றி நாம் நமது வாழ்க்கையில் அனலுமின்றி, குளிருமின்றி அப்படியே கிடக்கின்றோம். ஆனால் அதே நேரம் தொடர்ந்து தேவச் செய்திகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். அன்றைக்கே தேவன் இதைக்குறித்து எச்சரித்துப் பேசினார். “ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள் போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை” (எசேக் 33 : 21 ) என்று எழுதி வைத்திருக்கின்றார்.
இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவப்பிள்ளையே, தேவனுடைய ராஜ்யமாகிய மோட்சத்தின் முன் ருசி உன் இருதயத்தில் தெரிகின்றதா? அந்த முன் ருசி உன்இருதயத்தில் இருக்கும்பட்சத்தில் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் அவரைப் பாடித் துதித்துக்கொண்டும், அவருடைய வார்த்தைகளை வாசித்து தியானித்துக்கொண்டும் அப்படியே ஜெபத்தில் அமர்ந்திருப்பாய். கர்த்தர் உனக்குக் கிருபையாகக் கொடுத்த உன் விலையேறப்பெற்ற வாழ்நாட் காலத்தின் மணி நேரங்களை மற்ற மக்களோடு சேர்ந்து வீண் வார்த்தைகள் பேசி செலவிடவோ, செய்தித்தாட்களை வாசித்து நேரத்தைப் பாழாக்கவோ, டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்துக் காலத்தை விரயமாக்கவோ மாட்டாய்.
நீ உன் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் இந்த மோட்சத்தின் முன் ருசி நீ விரைவில் உன் வாழ்க்கையில் சந்திக்கப்போகும் உனது துயரமான விருத்தாப்பியத்தை மிகுந்த களிப்புடையதாக்கும். “நீ முதுமை அடைந்துவிட்டாய், இனி உன்னோடு எங்களுக்கு ஒட்டும் உறவும் என்னத்திற்கு” என்று இந்தப் பொல்லாத உலகம் உன்னைப் புறம்பாக்கித் தள்ளும்போதும், உன்னைத் தெருவில் காண்பவர்கள் உனது விருத்தாப்பியம் காரணமாக உன்னோடு பேச மனமற்று உன்னை அற்பமாக நினைத்து எரிகோவிற்குச் செல்லும் பாதையில் குற்றுயிராகக் கிடந்த மனிதனைக் கண்டு கொள்ளாமல் வழி விலகிச் சென்ற ஆசாரியன், லேவியனைப்போல உன்னையும் கண்டு கொள்ளாமல் வழிவிலகிச் செல்லும் நாட்களிலும், உன்னோடு பேசி மகிழ இந்த உலகத்தில் எவரும் உன்னண்டை வராத போதினும் சாரோனின் ரோஜாவாம் உன் அன்பின் ஆண்டவர் உன்னைவிட்டு ஒரு கண நேரம் கூட பிரியாத நேசராக உன்னோடு கூட என்றும் நிலைத்திருப்பார். அந்த அன்பரோடு நீ இடைவிடாது உன் உள்ளத்தில் பேசி மகிழ்ந்து கொண்டே இருக்கலாம். அவரும் உன்னோடு தமது அமர்ந்த மெல்லிய குரலால் உன் உள்ளத்தில் அனுதினமும் பேசிக்கொண்டேயிருப்பார். அவர் உன்னை ஆற்றித் தேற்றித் தமது மார்போடு உன்னை அரவணைத்துக் கொள்ளுவார். அப்பொழுது நீ:-
“லோகம் என்னை எதிர்த்துப் போவென்று சொல்லிடினும் சோகம் அடைவேனோ நான் என் ஏகன் எனக்கிருக்க”
என்று பாடிய பக்தனைப் போல நீயும் பாடி மகிழ்ந்து அவரோடுள்ள உனது பரிசுத்த உறவை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளுவாய். “சமாதானத்தோடு படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்” (சங் 4 : 8) என்ற சங்கீதக்காரரின் வார்த்தையின்படி உனது இராக்கால இளைப்பாறுதல்கள் இன்பமாக இருக்கும். பரலோக தரிசனங்களைக் கண்டு நீ ஆனந்திப்பாய். அன்பின் ஆண்டவர் இயேசுவையும், அவர் தம்முடைய ஜனத்துக்காக உலகம் உண்டானது முதல் ஆயத்தம் செய்து வைத்துள்ள (மத் 25 :34 ) மோட்சானந்த பாக்கியங்களையும் எண்ணிக் களிகூருவாய்.
காலஞ்சென்ற என் அருமைப் பரிசுத்த தகப்பனார் தனது முதுமையின் அனைத்து நாட்களையும் தன் அன்பின் ஆண்டவர் இயேசுவின் பாதங்களிலேயே ஜெபத்தில் செலவிட்டார்கள். எந்த நேரம் அவர்களுடைய அறைக்குச் சென்று பார்த்தாலும் தேவனுக்கு முன்பாக முழங்கால்களிலேயே அவர்கள் நின்று ஜெபித்தார்கள். இரவில் சென்று பார்த்தாலும் ஒரு மண்ணெண்ணெய் அரிக்கன் லாந்தர் விளக்கு அவர்களுக்கு அருகில் மங்கிய நிலையில் எரிந்து கொண்டிருக்க அப்பொழுதும் முழங்கால்களிலேயே நின்று கொண்டிருந்தார்கள். பூர்வ காலத்து பரிசுத்த பக்தர்களைப்போல அவர்களின் பூலோக வாழ்வின் கடைசி நாட்களும், மரணமும் அத்தனை மாட்சியாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை.
நாம் நாடிச் செல்லும் மோட்ச இன்ப வீட்டில் நமது அருமை இரட்சகருடைய ஆணி கடாவுண்ட பாதங்களைச் சுற்றி நாம் எல்லாரும் அமர்ந்து அவரை நித்திய நித்திய காலமாகப் பாடித் துதித்து ஆனந்திக்கப்போகின்றோம். மோட்சத்தில் நாம் செய்யக்கூடிய காரியம் அதுவேதான். இந்த உலகத்தில் ஆண்டவருடைய பாதங்களண்டையில் உட்கார்ந்து அவருடைய இன்ப சத்தம் கேட்டு மனமகிழவும், அவரைப் பாடித்துதித்து ஆனந்திக்கவும் மனமற்று 24 மணி நேரம் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும், இதர டி.வி. நிகழ்ச்சிகளையும் பார்க்க ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு பரலோகத்தில் கர்த்தாவின் பாதங்கள் ஆனந்தக் களிகூருதலாக இருக்கும் என்பது வேடிக்கைக் கூத்தாகும். இந்தப் பூவுலகத்தில் ஆண்டவரின் பாதங்களண்டை உட்கார மனமற்றிருக்கும் உனக்கு பரலோகத்தில் அவருடைய பாதங்களண்டை உட்கார ஆசையும், ஆவலும் திடீரென எங்கிருந்து வரும் என்று நான் உன்னைப் பார்த்துக் கேட்கின்றேன். தேவ ஜனமே, வஞ்சிக்கப்பட்டுப் போகாதே. ஏற்ற சமயத்தில் விழிப்படைந்து கொள். மரித்த பின்னர் மோட்சமா அலலது நரகமா என்ற சந்தேகத்துக்கிடமான கேள்வி அல்ல, மெய்யான தேவ மக்களுக்கு இந்த உலகத்திலேயே அவர்கள் இருதயத்தில் மோட்சம் ஆரம்பித்து அவர்கள் மரித்த பின்னர் அந்த மோட்ச வாழ்வு பரலோகத்திற்கும் தொடருகின்றது. ஆண்ட்ரூ போனர் என்ற பரிசுத்தவான் சொன்னது போல “உனக்கு இரண்டு மோட்சம் இல்லையேல் ஒரு மோட்சமும் இல்லை. பூலோகத்தில் உனக்கு மோட்சம் இல்லையெனில் பரலோகத்திலும் மோட்சம் கிடையாது”.
இந்த மோட்ச வாழ்வை நீ இதுவரை உன் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளாதிருந்தால் இன்றே உன் ஆண்டவரண்டை வந்து உன் பாவங்களை நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடும், புலம்பலோடும், கண்ணீரோடும் தேவ சமூகத்தில் அறிக்கை செய்து பாவ மன்பிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், மோட்சானந்த பாக்கியத்தையும் உன் இருதயத்தில் பெற்றுக் கொள். அதற்கான தேவ கிருபைகளை தேவன்தாமே நமக்குத் தந்தருள்வாராக.