தேவ எக்காளம் பத்திரிக்கையை தமது ஜனத்திற்கு ஆசீர்வாதமாக எழுதி வெளியிட தமது ஞானத்தால் என்னை இடைகட்டிய அன்பின் தேவன்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. தேவ எக்காளம் பத்திரிக்கையை ஆரம்பித்த துவக்க ஆண்டுகளில் தேவ எக்காளத்திற்கான மொழிபெயர்ப்பு வேலைகளை மதுரையைச் சேர்ந்த கர்த்தருடைய பரிசுத்த பிள்ளையும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமான D.மனுவேல் ஐயா B.A., L.T., அவர்கள் நமக்குச் செய்து தந்தார்கள். எந்த ஒரு ஆங்கிலப் பகுதியை மொழி பெயர்ப்புக்கு அனுப்பினாலும், கால தாமதமின்றி உடனே மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்து முடித்து எனக்கு அனுப்பிவிடுவார்கள். ஐயா அவர்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர், தலை சிறந்த தமிழ் அறிஞர், நாவலர். “திருமூலர் திருமந்திரத்தில் கிறிஸ்தவ போதனைகள்” என்ற தலைப்பில் ஐயா அவர்கள் அந்த நாட்களில் நமது தேவ எக்காளத்தில் எழுதின ஆராய்ச்சிப் பகுதிகள் அநேகருக்கு விசேஷமாக அதை வாசித்த இந்து நண்பர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்துடன் “தேவனின் குடும்பம்” “வாலிபத்தின் அபாயங்கள்” “கிறிஸ்துவினிமித்தம் சித்திரவதைகள்” போன்ற அவர்களின் மொழிபெயர்ப்பு வேலைகள் தேவ எக்காள சந்தாதாரர்களின் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்க்கைக்கு மிகவும் ஆசீர்வாதமாகவிருந்தது.
அந்த ஆரம்ப ஆண்டுகள் ஒன்றில் நான் ஐயா அவர்களை காண்பதற்காக முதன் முதலாவதாக மதுரையிலுள்ள அவர்கள் வீட்டிற்கு ஒரு மாலை நேரம் சென்றிருந்தேன். அப்பொழுது எனக்கு சுமார் 32 வயதிருக்கலாம் என்று நினைக்கின்றேன். அந்த இராக்காலத்தையும் நான் அவர்களுடைய வீட்டில்தான் செலவிட்டேன். என்னைக்கண்ட அவர்கள் முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்களை நான் தேவ எக்காளம் பத்திரிக்கையின் ஆசிரியராக நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். காரணம், தேவ எக்காளம் ஆசிரியர் மிகவும் வயது முதிர்ந்தவர், வாலிபனான நீங்கள் அவர்களின் பெயரைச் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள்” என்று பிடிவாதமாக சாதித்து நின்றார்கள். எனினும், பரதேசியாகிய நானே தேவ எக்காளத்தை எழுதி வெளியிடுபவன் என்பதை சீக்கிரத்தில் நிரூபித்தேன். அவர்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. மனுவேல் ஐயா அவர்களின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
தேவ எக்காளத்தின் எழுத்து நடையை வாசிப்போர் யாராயினும் அதை எழுதுபவர் ஒரு வயது முதிர்ந்த விருத்தாப்பியன் என்றே நான் வாலிபனாக இருந்த ஆரம்ப காலத்திலிருந்தே திட்டமாக நினைத்து வந்தனர். பரதேசியாகிய என்னைத் தமது ஜனத்தை தமது நித்திய ஜீவ பாதையில் வழிநடத்தும் தமது பரிசுத்த பாத்திரமாக தெரிந்து கொண்ட அன்பின் ஆண்டவர் தேவ எக்காளத்தை அந்தவிதமான பரிசுத்த முதிர்ச்சியோடு நான் எழுதத்தக்கதான ஒரு அற்புத கிருபையை ஆரம்பத்திலிருந்தே எனக்குக் கொடுத்திருந்தார். தேவ எக்காளத்தின் பரிசுத்தமான எழுத்து நடையை வாசித்து பிரமிப்படைந்த கல்விமான்களும், ஞானவான்களும் ஏராளம் ஏராளமான பேர்கள் ஆவார்கள். ஆனால், ஏழைப் பரதேசியின் படிப்பு அடிமட்டக் கல்வியான வெறும் 10 ஆம் வகுப்பு மாத்திரமே என்பது அநேகருக்குத் தெரியாது. எல்லா துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே.
நான் அப்படி ஒரு வித்தியாசமான நடையில் எழுதுவதானால் அது கர்த்தர் எனக்கு கிருபையாக கொடுத்த வரமாகும். நான் சிறுவனாக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே எனது கட்டுரை நோட்டைப் பார்த்த ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து என்னைப்போல எழுதும்படியாக மற்ற சக மாணவர்களுக்கு அறிவுரை கூறியதை நான் இன்றும் என் நினைவில் வைத்திருக்கின்றேன். நான் E.S.L.C. படிக்கும்போது நான் எழுதின கட்டுரை நோட்டை மாத்திரம் ஆண்டின் இறுதியில் என்னிடம் தராமல் எனக்கு கற்பித்த எனது வகுப்பு ஆசிரியை செல்வி மார்த்தாள் அவர்கள் அது தனக்கு வேண்டும் என்று ஆசை ஆவலாக எடுத்துச் சென்றதை நான் மறக்கவில்லை. நான் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு ஆசிரியராக இருந்த ஏழாயிரம்பண்ணை என்ற ஊரைச் சேர்ந்த திரு. வில்லியம்ஸ் என்பவர்கள் ஒரு நாள் “நமது வகுப்பில் கட்டுரை எழுத்துப் போட்டி வைக்க நான் பெரிதும் ஆசைப்படுகின்றேன். அப்படி ஒரு எழுத்துப்போட்டி வைத்தால் அதின் முதற் பரிசை பெறுவது நமது வகுப்பின் என்.சாமுவேலை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. ஆகையால் நான் அந்த எண்ணத்தைக் கைவிடுகின்றேன்” என்று சொன்னதை நான் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன்.
சிறு பிராயத்திலிருந்தே அன்பின் தேவன் என்னை தமது தேவ எக்காள பத்திரிக்கை எழுத்து வேலைக்காக மிகவும் திட்டமாக பயிற்சி அளித்து வழிநடத்திக்கொண்டு வந்தார். எனது புத்திசாலித்தனமோ, இல்லை எனது சுய ஞானமோ இதில் கொஞ்சமும் இல்லாமல் தேவனே எனது எழுத்தாற்றலை தமது பரிசுத்த நாம மகிமைக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு கிரியை நடப்பித்தார். அதின் காரணமாக தாவீது இராஜாவுடன் நானும் சேர்ந்து “முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்” (சங்கீதம் 119 : 100) என்று சொல்லத்தக்கதான சிலாக்கியத்தை எனது இளம் பருவத்திலேயே எனக்கு அருளிச் செய்தார். துதி, புகழ், கனம், மகிமை நம் நேசர் ஒருவருக்கே!