தேவன் அருவருக்கும் கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்
“ஸ்திரீயுடனே விபச்சாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்” (நீதிமொழிகள் 6 : 32)
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுய சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” (1 கொரி 6 : 18)
ஒரு காலத்தில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக தேவனுக்கென்று ஜொலித்த பரிசுத்தவான்களை தந்திர சாத்தான் விபச்சார பாவத்தின் மூலமாக மடங்கடித்து அவர்களின் சுவடே இல்லாமல் செய்து விட்டானே! நம் தமிழ் நாட்டிலும் பரிசுத்தமான தேவ ஊழியர்கள் பலர் இந்த கொடிய பாவத்தில் வீழ்ச்சியடைந்தார்கள் என்பது நமக்கு தெரியும்.
என்று ஒரு தேவ ஊழியன் தேவன் அருவருக்கும் விபச்சார பாவத்தில் வீழ்ந்துவிட்டானோ அன்றே அவனுடைய மாட்சியான கிரீடமும் அவன் தலையிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிடும். கடந்த நாட்களில் அவன் தேவதூதனைப்போல பிரசிங்கித்த அவனது வல்லமையான பிரசங்கங்கள் எல்லாம் தேவ மக்களின் மனதிலிருந்து பகலவனைக்கண்ட பனி போல அப்படியே மறைந்துவிடும். அவைகளை அவர்கள் திரும்பவும் நினைத்துப் பார்த்து மகிழ விரும்புவதில்லை. அவன் எழுதிய ஆவிக்குரிய அருமையான புத்தகங்களை தங்களுடைய இதர நல்ல புத்தகங்களுடன் இப்பொழுது வைக்க விரும்பாமல் அவைகளை எடுத்து பழைய பேப்பர் கடைக்கு அனுப்பி விடுகின்றார்கள். அந்த மனிதரின் தேவச் செய்திகள், மற்றும் அவருடைய ஆவிக்குரிய ஆழமான வேதபாட போதனைகள் அடங்கிய C.Ds., DVDs குறுந்தட்டுகள், நெடுந்தட்டுகள் எல்லாம் குப்பைக் குழியை தாங்களாகவே போய்ச் சுதந்தரித்துக் கொள்ளுகின்றன. உண்மைதான் பண ஆசை, பொய், களவு, பெருமை, மாய்மாலம் போன்ற பாவங்களைச் செய்தால் கூட தேவ மக்களின் தாராள மன்னிப்பு உண்டு. ஆனால், விபச்சாரம், வேசித்தனம் செய்த கர்த்தருடைய ஊழியனை எந்த ஒரு நிலையிலும் தேவ மக்கள் ஏற்றுக் கொள்ளுவதுமில்லை, மன்னிப்பதுமில்லை, அவர்களின் முகங்களைக் கூட அதற்கப்பால் ஏறெடுத்துப் பார்க்கவும் கூட விரும்புவதில்லை.
இந்த கடைசி நாட்களில் அநேகர் இந்தக் கொடிய பாவத்தை மறைவாக செய்து கொண்டே தங்கள் மனச்சாட்சியை மழுக்கி தேவ ஊழியங்களையும் பெரிய பரிசுத்தவான்களைப் போலச் செய்து கொண்டிருக்கின்றனர். எத்தனை பயங்கரம் பாருங்கள்! அந்தோ, இந்த மாய்மாலக்கார மக்களை சங்கரிக்க தேவன் தம்முடைய பட்டயத்தை கருக்காக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது இவர்களுக்குத் தெரியாது. வேசிக்கள்ளரான பேலியாளின் மக்களாகிய ஓப்னி, பினெகாஸ் என்பவர்களை சங்கரிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த கர்த்தர் இப்படிப்பட்டவர்களுக்கும் எதிராக உருவின பட்டயத்தோடு நின்று கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு பரிசுத்த தேவ பிள்ளையை, விசேஷமாக தேவனுக்கு ஊழியம் செய்யும் கர்த்தருடைய ஊழியனை மனுஷ கொலைபாதகன் விபச்சாரம், வேசித்தனத்தில் வீழ்த்த இரவும் பகலும் கண் விழித்துப் போராடிக் கொண்டிருக்கின்றான் என்பது அநேகருக்குத் தெரியாது. பாவியாகிய என்னை இந்தக் கொடிய பாவத்தில் வீழ்த்தி அழிக்க சாத்தான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. அவை யாவிலும் தேவனுடைய பலத்த கரமும், பாதுகாவலும், பூரண தேவ கிருபையும் என்னோடிருந்தபடியால் நான் அதிசயமாக, அற்புதமாக பாதுகாக்கப்பட்டேன். ஜீவன் தப்பினேன். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
காசிப்பட்டணத்தில் என்னுடன் நேருக்கு நேர் மோதிய ஆத்தும அழிம்பன்
தேவ ஊழியத்தின் பாதையில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு நான் வடக்கே சென்றிருந்த போது காசி என்ற பட்டணத்திற்கும் சென்று சில நாட்கள் அங்கு தேவ ஊழியம் செய்தேன். அவ்விடத்தின் காரியங்களை நான் இங்கு விளக்க விரும்பவில்லை. அந்தச் சமயம் நான் ஊழியத்திற்காக இங்கிருந்து புறப்பட ஆயத்தமான போது முழுமையான ஒரு மாத காலம் உபவாசம் எடுத்து ஜெபித்துக் கடந்து செல்ல தேவன் என் உள்ளத்தில் பலமாக உணர்த்தவே அவருக்கு அப்படியே கீழ்ப்படிந்தேன். இரவில் மட்டும் ஒரு ஆகாரம் சாப்பிட்டு பகலில் தண்ணீர் கூட குடியாமல் உபவாசத்தை மேற்கொண்டேன். நான் என் உபவாச நாட்களை முடித்ததும் வடக்கே புறப்பட்டு விட்டேன். சரீரப்பிரகாரமாக அப்பொழுது நான் மிகவும் பெலவீனமாக இருந்தேன். ஆனால், ஆவிக்குள்ளாக மிகவும் வல்லமையாக காணப்பட்டேன்.
அந்த ஊழியத்தின்போது நான் என் ஓய்வு நேரங்களில் வாசிக்க “அன்பரின் அடிச்சுவடுகளில்” (In His Steps) என்ற ஒரு அருமையான ஆங்கில புத்தகத்தின் சுருக்கிய பதிப்பை (Abridged Edition) என்னுடன் எடுத்துச் சென்றேன். அது ஒரு அற்புதமான புத்தகம். “இயேசு என்ன செய்வார்?” (What would Jesus do?) என்பதே அந்தப் புத்தகத்தின் மையப் பொருளாகும். சார்லஸ் ஷெல்டன் என்பவர் எழுதிய ஒரு கிறிஸ்தவ புதினம் (Fiction) அது. 1935 ஆம் ஆண்டு வரை அந்த புத்தகம் 21 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 3 கோடி புத்தகங்கள் விற்பனையாயின என்றால் அந்தப் புத்தகத்தின் சிறப்பை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். “எந்த ஒரு காரியத்தை செய்தாலும் இயேசு என்ன செய்வார்என்று முதலில் கேள்வி எழுப்பாமல் அதைச் செய்யாதே” (Do not do anything without first asking, what would Jesus do?) என்பதுதான் அதின் சாராம்சமாகும். அந்த அருமையானபுத்தகம் அமெரிக்காவில் தீவிரமான விற்பனையில் இருந்த நாட்களில் “இயேசு என்ன செய்வார்?” What would Jesus do? WWJD என்ற நான்கு எழுத்துக்கள் கொடிகட்டி பறந்திருக்கின்றது.
நான் பகற் காலங்களில் சுவிசேஷ பிரதிகளை காசி பட்டணத்தின் தெருக்களில் கொடுத்து ஊழியம் செய்துவிட்டு இராக்காலங்களில் அங்குள்ள ஒரு லாட்ஜின் மேல் மாடி அறை ஒன்றில் தனித்து தங்கியிருந்தேன். நான் அந்த என்னுடைய அறைக்குச் செல்லும் சமயத்தில் எல்லாம் ஒரு வாலிப பெண் என்னை அதிகமாக கவனிப்பதை நான் கண்டேன். நான் அதைக் குறித்து ஒன்றும் நினைக்கவில்லை. ஒரு நாள் இராக்காலத்தில் மேலே நான் குறிப்பிட்டுள்ள “அன்பரின் அடிச்சுவடுகளில்” என்ற அந்த அருமையான புத்தகத்தை நான் மிகுந்த ஆசை ஆவலோடு படித்துக் கொண்டிருந்த வேளையில் எனது அறையின் கதவு தட்டப்படுவதை நான் கவனித்தேன். அப்பொழுது ஆண்டவர் என் உள்ளத்தில் “உன்னை அதிகமாக கவனித்த அதே பெண்தான் கதவை தட்டுகின்றாள். நீ அவளுக்கு என்னைக்குறித்து சொல்லு” என்று உள்ளத்தில் உணர்த்தினார். நான் கதவைத்திறந்தபொழுது அந்தக் குரலின்படியே அந்தப் பெண்தான் நின்று கொண்டிருந்தாள். நான் அந்தப் பெண்ணை என் அறைக்குள் அழைக்கு முன்னரே அவள் என் கட்டிலில் எனக்கு அருகில் வந்து தைரியமாக அமர்ந்து கொண்டாள். நான் சற்று நேர அமைதிக்குப் பின்னர் “பஹின்” (சகோதரி) என்று இந்தியில் அவளை அழைத்தேன். அப்பொழுது அவள் “நான் உங்களுக்கு சகோதரி அல்ல, பணத்திற்காக நான் இங்கு வந்திருக்கின்றேன்” என்று கூறினாள். “உன் அழகான சரீரத்தை அழித்து பணம் சம்பாதிப்பது சரியல்லவே. ஆண்டவர் இயேசுவைக் குறித்து நீ கேள்விப்பட்டிருக்கின்றாயா?” ஆண்டவர் இயேசு என்ற வார்த்தையைக் கேட்கவும் அவள் “நீங்கள் இயேசுவின் ஊழியரா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். நான் “ஆம்” என்று கூறவே அவள் அழுது கொண்டே “என்னைக்கட்டிய கணவன் என்னைக் கைவிட்டுவிட்டான். எனக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. அதைக்காப்பாற்ற வழியில்லாமல் இந்த இழிவான பாவ காரியத்தை செய்து வருகின்றேன்” என்று அவள் சொன்னாள். இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து அவளது சிவந்த கன்னங்களின் வழியாக ஓடுவதை நான் கண்டேன். அவள் அழுவதைக் கண்ட நான் எனது உள்ளத்திற்குள்ளாக நானும் அழுதேன். அன்பின் ஆண்டவர் இயேசுவை உறுதியாகப்பற்றிக் கொள்ளவும், இந்த அசுத்தமான பாவ வாழ்வுக்குள் எந்த ஒரு நிலையிலும் திரும்பவும் வரக்கூடாது என்றும் நான் அவளை அன்புடன் கேட்டுக் கொண்டேன். தன் அருமை இரட்சகரின் பாதங்களை தனது கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து பரிமளதைலத்தைப் பூசின (லூக்கா 7 : 38 ) பாவியான ஸ்திரீ மரியாளைக் குறித்து ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அப்பொழுது என்னிடம் இருந்தது. அதை அவளுக்கு ஜெபத்துடன் கொடுத்தேன். அந்தப் புத்தகத்தின் மூலமாக ஆண்டவர் அவளுடன் நிச்சயமாக பேசியிருப்பார் என்று நான் விசுவாசிக்கின்றேன். காரணம், அவளுடைய பாவ வாழ்க்கைக்கு பொருத்தமான மரியாளின் வாழ்க்கை அவளுடைய உள்ளத்தை கட்டாயம் தொட்டிருக்கும்.
அந்த ஏழைப் பெண்ணுக்கு நம்மால் இயன்ற ஒரு சிறிய பண உதவியை செய்யாமல் அவளை வெறுமையாக அனுப்பிவிட்டோமே என்ற மட்டற்ற கவலை இந்நாள் வரைக்கும் என் உள்ளத்தில் உண்டு.
ஒரு ஆச்சரியமான காரியத்தை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும். அந்தப் பெண் என் அருகில் வந்து உட்காரவும் “தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்வது எப்படி?” (ஆதி 39 : 9) என்ற கர்த்தருடைய வார்த்தை என் உள்ளத்தில் இடைவெளிவிடாமல் தொடர்ந்து தொனித்துக் கொண்டே இருந்தது. அந்த தேவ வசனத்தை நான் அந்த வேளை கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால் என்னை எனது 18 ஆம் வயதில் தமக்கென தெரிந்து கொண்ட கர்த்தர் எந்த ஒரு நிலையிலும் நான் அந்த கொடிய பாவச்சேற்றில் வீழ்ந்து தமது பரலோக உறவிலிருந்து நான் நித்தியமாக துண்டிக்கப்பட்டுப்போகக் கூடாது என்பதற்காக கரிசனையுள்ள கர்த்தராக என்னை எச்சரித்த வண்ணமாக இருந்தார். அவள் என்னைவிட்டுப் போன பின்பும் அந்தக் குரல் தொடர்ந்து ஒலித்து நின்றது. ஆ, விபச்சாரப்பாவத்தைக் குறித்து பரிசுத்த தேவன் எத்தனை விழிப்புள்ளவராக இருக்கின்றார் பாருங்கள்!
நேப்பாளத்தின் தான்சேன் பட்டணத்தில் என்னைச் சந்தித்த பாவச் சோதனை
தான்சேன் என்ற அழகிய பட்டணம் மேற்கு நேப்பாளத்தில் இருக்கின்றது. இது நேப்பாளத்தின் பண்டைய ராஜ சமஸ்தானங்களில் ஒன்றாகும். நேப்பாளத்தின் தலை நகர் காத்மாண்டு என்ற பெரிய பட்டணத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது பொக்ரா என்ற பட்டணமாகும். இந்த பொக்ரா பட்டணத்திலிருந்து 6 மணி நேர பேருந்து பயண தூரத்தில் தான்சேன் பட்டணம் உள்ளது. தான்சேன் மலையின் மேல் கட்டப்பட்டதோர் அழகிய பட்டணமாகும். பட்டணத்தை ஒட்டி ஒரு அகன்ற புல் மைதானம் உண்டு. மைதானத்தில் ஒரு மூலையிலே நேப்பாள மன்னரின் உருவச் சிலை கெம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றது. மக்கள் அதனை வணங்கி கௌரவிப்பதை நான் கண்டேன். அழகான தான்சேன் பட்டணத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
நான் ஒரு நாள் பொக்ரா பட்டணத்திலிருந்து பிரயாணப்பட்டு இந்தப்பட்டணத்திற்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்திருக்கின்றேன். அங்கிருந்த ஒவ்வொரு நாளும் மிகுதியான ஜெபம், தேவ ஆலோசனையுடன் தான்சேனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று தேவ ஊழியம் செய்து வந்தேன். எந்தெந்த இடங்களுக்கு நான் செல்ல வேண்டும், யார் யாரை சந்திக்கவேண்டும் என்பதையெல்லாம் ஆண்டவரே எனக்குப் போதித்து வழிகாட்டி நடத்திச் சென்றார்.
ஒரு நாள் நான் வழக்கம்போல அதிகாலையில் எழுந்து எனது தோள் பையை நேப்பாள மொழி சுவிசேஷ துண்டுப்பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு எதிர்ப்படும் சிறு, சிறு கிராமங்களிலுள்ள மக்களுக்கு அவற்றை ஜெபத்துடன் விநியோகித்துக்கொண்டே என் மட்டாகச் சென்று கொண்டிருந்தேன். அருமை இரட்சகரே என் கரம்பற்றி என்னை எங்கேயோ கூட்டிக்கொண்டு செல்லுவதைப் போலிருந்தது. நமது முற்பிதாவாகிய ஆபிரகாம் தேவனால் அழைக்கப்பட்டபோது தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனதைப்போன்று (எபி 11 : 8 ) என் பயணமும் இருந்தது. ஒரு நாள் தான்சேனிலிருந்து கால்நடையாக நான் வெகு தூரம் வந்துவிட்டேன். மத்தியான நேரம், வெயில் காட்டமாக அடித்துக்கொண்டிருந்த வேளை அது. களைப்பின் மிகுதியால் ரஸ்தாவின் ஓரத்தில் இருந்ததோர் சிறிய மரத்தின் நிழலில் அங்கிருந்தவொரு சின்னஞ்சிறு பாலத்திலுள்ளதான சுவரின் மேல் நான் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் தூரத்தில் ஒரு வாலிபன் வந்து கொண்டிருந்தான். ஆண்டவருடைய அன்பை அவனுடன் பகிர்ந்து கொள்ள எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மனம் மகிழ்ந்தேன். ஆனால், துக்கத்திற்குரிய காரியம் என்னவெனில், அவன் தன் மட்டாக விரைவாக என்னைக் கடந்து போய்விட்டான். வலிய நாம் அவனைக் கூப்பிட்டு சுவிசேஷத்தைச் சொல்லியிருக்காமல் இந்த ஆத்துமாவை கைநழுவ விட்டுவிட்டோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு அவன் தூரத்தில் போவதை சோக உணர்வுடன் நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். இப்பொழுது ஆச்சரியம் நிகழ்ந்தது. என்னைக் கடந்து சென்ற அவன் சற்று தூரம் போய்விட்டுத் திரும்பவுமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். என்னண்டை வந்த அவன் தன் கரத்தில் அணைந்து போயிருந்த பீடிக்கு நெருப்புப் பெட்டி என்னிடம் கேட்டான். நான் அவனை என்னண்டை அமரும்படி கூறினேன். அப்படியே என் பக்கம் அமர்ந்தான். புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கில்லையென்று நான் அவனிடம் கூறவே அவன் தனது கரத்திலிருந்த பீடியை எனக்கு முன்பாக வீசி எறிந்துவிட்டான்.
“நீ இந்த மத்தியான வெயிலில் எங்கே சென்று கொண்டிருக்கின்றாய்?” என்று நான் அவனிடத்தில் கேட்டபோது அவன் தன் சோக வரலாற்றைக் கீழ்க்கண்டவாறு என்னிடம் கூறினான்:-
“என் உள்ளம் இப்பொழுது மிகுந்த வேதனையால் நிரம்பியிருக்கின்றது. என் தகப்பனார் காத்மாண்டுவிலுள்ள மன்னரின் ராணுவத்தில் ஒரு மேஜராகப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். என் அருமைத்தாயார் சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னையும், என் சகோதரியையும் தனித்துப்புலம்ப விட்டுவிட்டு மரித்துப்போனார்கள். எனது தகப்பனார் மீண்டும் மணம் புரிந்தார். மாற்றாந்தாய் என்னைக் கொடுமைப்படுத்துகின்றாள். அவளுக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு. அப்பாவும் அவளுடன் சேர்ந்து கொண்டு என்னை இம்சிக்கின்றார். என் சகோதரியை அதோ அந்தக் கிராமத்தில்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றது. என் துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலாத கடுஞ்சஞ்சல நாட்களில் நான் அவளிடமே போய் என் உள்ளத்தை அவளிடம் கொட்டி ஆறுதல் அடைவேன். இன்றும்கூட நான் அதற்காகவே சென்று கொண்டிருக்கின்றேன். இந்த உலகில் என்னை நேசிக்க ஒருவருமே கிடையாது” என்ற வார்த்தைகளுடன் அவன் தனது துயர சரிதத்தை முடித்தான்.
பரிசுத்த ஆவியானவர் அந்தச் சமயம் என் உள்ளத்தில் மிகுந்த பிரசன்னத்தோடு கிரியை செய்து கொண்டிருந்தார். அந்த திவ்விய பிரசன்னத்தோடு நான் அவனுக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்தேன்:-
“உன் தகப்பனும், உன் தாயும் உன்னை நேசிக்காவிட்டாலும் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகர் உன்னை அதிகமாக நேசிக்கின்றார். அவரே உலகின் மெய்யான தேவன்” என்றேன்.
“நீங்கள் சொல்லுவது உண்மையான வார்த்தைகள்தானா?” என்று அவன் என்னைத் திருப்பிக் கேட்டான்.
“உண்மையோ உண்மை. அப்பட்டமான உண்மை. அந்த அன்பின் ஆண்டவர் என் உள்ளத்திலும்கூட இன்றும் ஜீவிக்கின்றார். அந்த மாமகிமையான எல்லையற்ற தேவ அன்புதான் என்னை இந்தியாவிலிருந்து உங்கள் நேப்பாள நாட்டிற்கு துரத்தி விட்டிருக்கின்றது. இந்த மத்தியான வெயிலில் தனித்த ஒரு பரதேசியாக நிர்கதியாய் இந்த இடத்தில் என்னை அமர்ந்திருக்கப் பண்ணியிருப்பதும் அந்த தேவ அன்புதான்” என்று நான் அவனிடம் கூறினேன்.
“உங்களின் வார்த்தைகள் என் இதயத்தைப் பரவசப் படுத்துவதாக இருக்கின்றது. இவ்வுலகில் என்னை நேசிக்க ஒருவர் உண்டா? அப்படியானால் நான் எவ்வளவு சந்தோசமாக இருக்க வேண்டும்” என்று அவன் சொன்னான்.
நேப்பாள மொழி புதிய ஏற்பாடு ஒன்றை நான் அவனுக்கு ஜெபத்துடன் கொடுத்து தினமும் அதில் ஒரு அதிகாரம் ஒழுங்காக வாசித்து வரும்படியாகவும், அப்படிச் செய்யும்பட்சத்தில் உள்ளத்தில் மிகுந்த தேவ சமாதானம் கிடைக்குமென்றும், கிறிஸ்து இரட்சகர் அதின் மூலம் அவனுடன் கட்டாயம் பேசுவார் என்றும் நான் அவனிடம் சொன்னேன்.
நான் பேசியது மனுஷீக வார்த்தைகளாக இருந்திருந்தால் அவன் உள்ளத்தில் ஒருக்காலும் அசைவு உண்டாயிருக்காது. ஆண்டவரே என்னிலிருந்து வல்லமையாய்க் கிரியை நடப்பித்துக் கொண்டிருந்த படியால் என் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் அவன் உள்ளத்தை அசைத்தது.
என்னை நேசிக்க இவ்வுலகில் ஒரு கடவுள் இருக்கின்றாரே என்று அவன் கூறிக்கொண்டு கண்ணீர் சிந்தி சப்தமாக அழ ஆரம்பித்துவிட்டான். இந்த அருiமையான செய்தியை சொன்ன உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று கூறி என் கரத்தைப் பற்றிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அழுவதையும், கண்ணீர் அவன் கண்களிலிருந்து பொங்கி வருவதையும் கண்ட என்னால் சும்மாயிருக்க இயலவில்லை. என் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடினது. நாங்கள் இருவரும் அந்த இடத்தில் அழுதோம். ஆண்டவருடைய பரிசுத்த ஊழியத்தின் பாதையில் அற்புதமானதொரு வேளை அது!
தான்சேனிலுள்ள திரிபுவன் கல்லூரியில் கல்வி பயிலும் அந்த வாலிபனின் பெயர் பிரசாத் கௌதம் என்பதாகும். ஆங்கிலம் தெரிந்த அவனுடன் நான் ஆங்கிலத்திலேயே பேசினேன். நாங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து செல்லும் வேளை இன்னும் கண்ணீரைக் கொட்டும் வேளையாயிருந்தது. இன்னும் சில பயனுள்ள நேப்பாளி மொழி கிறிஸ்தவ வெளியீடுகளையும் நான் அவனுக்குக் கொடுத்தேன். இரட்சகர் இயேசுவைப்பற்றியும் அவரது கல்வாரி அன்பைப்பற்றியும், இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையையும் நான் அவனுக்கு ஜெபத்தோடு சொல்லியிருக்கின்றேன். இந்த இளைஞனை உங்கள் ஜெபங்களில் அன்பாக நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் நான் தேவ ஏவுதலின்படி தான்சேன் பட்டண கடைவீதிக்குச் சென்றேன். ஆண்டவர் என்னைக் குறிப்பாக கடிகாரங்கள் ரிப்பேர் செய்யும் கடை ஒன்றுக்கு நேராக வழிநடத்தினார். அக்கடையின் உரிமையாளனுக்கு ஒரு நேப்பாள மொழி புதிய ஏற்பாட்டை கொடுக்க என் உள்ளத்தில் உணர்த்துதல் ஏற்படவே அவ்வாறே ஒரு நேப்பாளி புதிய ஏற்பாட்டை ஜெபத்துடன் கொடுத்தேன். அந்த மனிதர் அடைந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. அந்த மனிதர் பேசத் தொடங்கினார் “நான் இந்தப்புத்தகத்திற்காக அநேக நாட்கள் எவ்வளவோ ஆவலாகக் காத்திருந்திருக்கின்றேன். எனது ரேடியோவில் “மசிகா வந்தனா” என்ற கிறிஸ்தவ ஹிந்தி மொழி ஒலி பரப்பை ஒழுங்காக நான் தினமும் ரேடியோவில் கேட்டு வந்திருக்கின்றேன். அது எனக்கு மிகுந்த சமாதானத்தையும், ஆறுதலையும் அளிக்கின்றது. இந்த அருமையான புத்தகத்திற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகின்றேன். இதோ அதற்கான பணம்” என்று கூறி பணம் எடுத்துக் கொடுத்தான். “அது உங்களுக்கு எனது அன்பளிப்பாகும்” என்று நான் சொன்னபோது தன் கை நிறைய மிட்டாய்களை தனது கடையிலிருந்து அள்ளி என் கரத்தில் கட்டாயமாக திணித்து “அப்படியானால் எனது அன்பளிப்பாக இதனை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்” என்று அன்பொழுகக் கூறினார். அந்த தவனமுள்ள ஆத்தமாவின் பெயர் பிரேம் என்பதாகும்.
இந்த தான்சேன் பட்டணத்தை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் நான் பகற்காலங்களில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவிட்டு இரவில் பட்டணத்தின் ஒரு லாட்ஜின் மாடியில் ஒரு அறையில் தனித்து தங்கியிருந்தேன். ஒரு நாள் நான் தேவ ஊழியத்தை முடித்து வந்து எனது அறையில் படுத்துவிட்டேன். நடுநிசியாகிவிட்டது. அந்த நடுநிசி வேளை என் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தால் நீதிமொழிகள் 7 ஆம் அதிகாரத்தில் 10 ஆம் வசனம் முதல் 18 ஆம் வசனம் வரை நாம் காண்கின்ற அந்தப் பெண்ணைப்போன்று தன்னை அழகாக அலங்கரித்து, தன் சரீரத்தை வாசனை தைலத்தால் மணமூட்டி எனக்கு முன்பாக ஒரு அழகான நேப்பாள பெண் வந்து நின்று கொண்டிருந்தாள். அவள் என்னைப்பார்த்து “உங்களுக்கு ஏதாகிலும் வேண்டுமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். அதின் மறைவான பொருள் என்னவெனில் “நான் உங்களுக்கு வேண்டுமா?” என்பதுதான். “எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்று கூறி நான் கதவை மூடிக்கொண்டேன். அசுத்த ஜீவிகள் அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளுவார்கள்.
“நேப்பாளம் மிகவும் ஏழ்மை நாடு. அழகான ஏழைப் பெண் மக்கள் தங்களுடைய ஒருவேளை ஆகாரத்திற்காகக்கூட வழியில்லாமல் தங்கள் சரீரத்தை பணத்திற்காக கையளித்து விடுவார்கள்” என்று அங்குள்ள ஒரு மனிதர் துக்கத்துடன் என்னிடம் கூறினார். அந்த இடத்தில் என்னை கிருபையாகப் பாதுகாத்த அன்பின் ஆண்டவருக்கு நன்றி துதி ஏறெடுத்துவிட்டு மறு நாளே லாட்ஜை காலிபண்ணிவிட்டு வேறு இடத்திற்குப் போய்விட்டேன்.
நேப்பாளத்தில் என்னைச் சந்தித்த மற்றுமொரு கடும் பாவச் சோதனை
நேப்பாள நாட்டில் பல்லாயிரக்கணக்கான அழகான நேப்பாள கிராமங்கள் இருக்கின்றன. பெரும்பாலான கிராமங்கள் நித்திய பனி மூடிய உலகின் மிக உயரமான சிகரங்களின் கீழ் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இவைகளைக் காணவும் மனமகிழவும் உலகம் முழுமையிலுமிருந்து திரளான மக்கள் சுற்றுலா பயணிகளாக நேப்பாள நாட்டிற்கு வருகின்றனர். நித்திய பனி மலைகளுக்குக் கீழாக அமைந்துள்ள ஒரு நேப்பாள கிராமத்தை நீங்கள் படத்தில் காணலாம்.
இப்படி நேப்பாள கிராமங்களுக்கு வருகின்றவர்களுக்கு கிராமத்திலுள்ள மக்களே அவர்களை அன்புடன் ஏற்று உபசரித்து தங்களுடைய வீடுகளில் தங்க வைத்து உணவும் அளித்து விடுகின்றனர். அதற்காக அவர்கள் ஒரு சிறிய தொகையை மட்டும் அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுகின்றனர். அதின் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாதக்கணக்காக நேப்பாளத்தின் கடையாந்திர கிராமங்களில் தங்கியிருப்பதை நான் என் கண்களால் கண்டிருக்கின்றேன்.
எனது நேப்பாள சுவிசேஷ பயண யாத்திரையின்போது ஒரு தடவை இப்படிப்பட்ட சுற்றுலா பயணிகள் இருவரை நான் நேப்பாளத்தில் சந்தித்தேன். அவர்கள் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமல்ல அத்துடன் அவர்கள் நண்பர்களும் அல்லர். எப்படியோ இருவரும் ஒன்றாக சேர்ந்து நேப்பாள நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக வந்திருந்தனர். என்னுடைய சுற்றுலா பயண நோக்கம் வேறு, அவர்களின் பிரயாண நோக்கம் வேறு. நாங்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து நேப்பாள கிராமங்களின் வழியாக பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தோம். தொடர்ச்சியான கால் நடைப் பிரயாணம் காரணமாக அந்தப் பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டு அது அவளுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்த படியால் அவளால் தனது பொருட்களை சுமந்து கொண்டு நடந்து செல்ல இயலவில்லை. அவளுடைய பரிதாபகரமான நிலையை உணர்ந்த நான் தேவ அன்பின் காரணமாக அவளுடைய பாரச்சுமையை நானே வாங்கிச் சுமந்தேன். அவள் என்னை அதிகமாக நேசித்தாள். என்னை பாரீஸ் பட்டணத்துக்கு எல்லாம் கூட்டிச் செல்லுவதாகச் சொன்னாள். நான் அதை எல்லாம் எனது காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு நாள் இரவு அவள் என்னை பாவத்தில் வீழ்த்த அதிகமாக முயற்சித்தாள். அதை நாங்கள் தங்கியிருந்த வீட்டின் நேப்பாள மனிதன் நன்கு கண்டு கொண்டு என்னிடம் தனித்து வந்து “அந்தப் பெண் உங்களை அதிகமாக விரும்புகின்றாள். அவளுடைய விருப்பத்தை இன்று இரவே நிறைவேற்றுங்கள்” என்றான். இது விஷயத்தில் கூடுதலாக நான் எழுத விரும்பவில்லை.
என்னோடு இரவும் பகலும் உறவாடிக்கொண்டிருக்கும் நம் அன்பின் பரம தகப்பன் அந்தப் பெண்ணைக் குறித்த ஒரு சிறிய பாவ எண்ணத்தைக்கூட என் உள்ளத்தில் அனுமதிக்கவே இல்லை. அவளை என் உடன் பிறந்த தங்கையாக மனதார எண்ணி அவளுக்கு அனைத்து அன்பும் செய்தேன். இரவில் தன்னுடன் பாத்ரூம் செல்லுவதற்காக அருகிலுள்ள காட்டிற்கு என்னை அழைத்தாள். அதற்கும் நான் மறுப்பு தெரிவிக்காமல், எனது டார்ச் விளக்கை எடுத்துச் சென்று அவளுக்கு வழிகாட்டி மீண்டும் அழைத்து வந்தேன். ஆ, ஒரு தேவ மனிதனை பாவத்தில் வீழ்த்த சாத்தானும், அவனது சர்வ சேனையும் ஒன்றாகச் சேர்ந்தாலும் அவனண்டை நெருங்கவே முடியாது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆண்டவர் இயேசுவின் கல்வாரி அன்பையும், அவர் மூலமாகவுள்ள பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், பரிசுத்த ஜீவியத்தையும் தேவ ஒத்தாசையோடு அவளுக்கு நான் நன்றாக விளக்கிக் கூறினேன்.
“உன்னுடைய பழுவான மூட்டையை நாள் முழுவதும் நான் சுமந்து உன்னில் அன்பு கூர்ந்ததுபோல சர்வலோக மாந்தர் யாவரின் பாவப்பாரத்தையும் ஆண்டவர் இயேசு தமது தோளில் சுமந்து அன்புகூர்ந்ததை நீ மறப்பதற்கில்லை. அவருடைய கல்வாரி அன்புதான் இந்த அற்பமான அன்பை உனக்குச் செய்ய என்னை ஏவிவிட்டது. அந்த அன்பர் இயேசுவை உனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்” என்று அன்போடு அவளைக் கேட்டுக் கொண்டேன். எனது பரிசுத்தமான நடபடிகள் அவளது வாழ்க்கையை நிச்சயமாக தொட்டிருப்பது மட்டுமல்ல அவள் தனது ஜீவகாலம் முழுவதும் எனது பரிசுத்த நடக்கையையும், தேவ அன்பையும் மறவாது நினைவு கூருவாள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை.
அடுத்து வந்த நாளும் நான் அவளது மூட்டையை நானே சுமந்து மாலையில் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு பிறிதொரு நேப்பாள கிராமத்திற்கு போய்விட்டேன். அவர்கள் இருவரும் வேறு ஒரு நேப்பாள பட்டணத்திற்குப் போய்விட்டனர். பாவியாகிய எனது தேவ அன்பை எண்ணினவளாக தனது கண்களில் கண்ணீர் பொங்கிவந்த நிலையில் அவள் என்னைவிட்டுப் பிரிந்து சென்றாள். எனக்கும் கண்களில் கண்ணீர் தேங்கிற்று.
இங்கு கோத்தகிரியிலும் நாங்கள் எங்கள் இரண்டாம் வாடகை வீட்டில் இருந்தபோது அருகில் ஒரு வீட்டில் வாழ்ந்த அரசாங்க உத்தியோகத்தில் இருந்த ஒரு அன்பான கிறிஸ்தவ குடும்ப பெண் என்னை அதிகமாக விரும்பினாள். தேவ பெலத்தால் நான் அவளுக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. துரிதமாகவே அடுத்த ஒரு மனிதனை அவள் தெரிந்து கொண்டு அவனுடன் பாவ வாழ்வில் வீழ்ந்தாள். அந்த கிறிஸ்தவ மனிதனை நான் அதிகமாக கடிந்து கொண்டு எச்சரித்தேன். இரவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்லும் அந்த பொல்லாத கிறிஸ்தவனை தேவ வைராக்கியத்தோடு இடைமறித்து கடிந்து கொண்டேன். ஆனால் அவன் மனந்திரும்ப வழியில்லை. இறுதியாக தேவ கோபம் அவர்கள் இருவரின் குடும்பங்களிலும் வந்து இறங்கிற்று. அதின் பயங்கரமான முடிவு, இரு குடும்பங்களும் அழிந்தன. பெண்ணும், அவள் கணவனும், துன்மார்க்கத்தில் வீழ்ந்த அந்த மனிதனும் அவனது மனைவியும் , அந்த மனிதனின் ஒரே வாலிப புதல்வனும் ஒருவர் பின் ஒருவராக துரிதமாக மாண்டு மறைந்தனர். இன்னும் பல்லாண்டு காலம் நம்முடன் வாழவேண்டிய மக்கள் பாவப்பாதையை தெரிந்துகொண்டு பரிசுத்த கர்த்தரைவிட்டு வழி விலகி அழிவை தாங்களாகவே தேடிக் கொண்டனர்.
பாவியாகிய எனது தேவ ஊழியங்கள் நாளுக்கு நாள் நடுப்பகல் வரைக்கும் அதிகம் அதிகமாக பிரகாசிக்கும் சூரியப் பிரகாசம் போல (நீதி 4 : 18 ) அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்க காரணமாக இருந்தது நான் எனது அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் தேவபெலத்தால் கண்ணின்மணிபோல கடைசி வரை காத்துக் கொண்டதுதான். ஒரே ஒரு இடத்தில் நான் சாத்தானின் அந்த கொடிய அசுத்தப் பாவத்திற்கு இடம் கொடுத்திருந்தாலும் எனது அனைத்து தேவ ஊழியங்களும் அழிந்து, வீணும் வியர்த்தமுமாகி நானும் எப்பொழுதோ எரி நரகத்திற்குச் சென்றிருப்பேன். ஆனால், நான் என் தாயின் வயிற்றில் உருவாகு முன்னே என்னைத் தெரிந்து கொண்ட கர்த்தர் என்னைக் கண்ணின்மணி போல இறுதி வரை பாதுகாத்துக் கொண்டார். அவருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்!