சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்
பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை ஆண்டாண்டுதோறும் தனது வாழ்நாட் காலம் முழுவதும் இருளடர்ந்த, அநாகரீகமான, சுத்தமற்ற புத்த மக்கள் வாழ்கின்ற கடையாந்திர தீபெத் நாட்டிற்கு தனது ஜீவனையே பணயம் வைத்து மிகவும் ஆபத்தான பனி மூடிய மிக உயரமான இமயமலைப் பாதைகளில் பல நாட்கள் நடந்து சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்த செய்திகளை எல்லாம் நான் கவனமாக வாசித்து தெரிந்து கொண்டேன்.
சுந்தர் பெரும்பாலும் இமாச்சல் பிரதேசத்திலுள்ள கோட்கர்ட் (KOTGARH) என்ற சிறிய இமயமலை கிராமத்தின் வழியாகவே தீபெத் நாட்டிற்குள் கால் நடையாக நடந்து சென்ற செய்தியை நான் அவருடைய புத்தகங்களின் மூலமாக அறிந்தேன். அவர் சென்ற ரஸ்தாவின் பெயர் “இந்துஸ்தான் தீபெத் ரஸ்தா” (Hindustan Tibetan Road) என்பதாகும். எப்படியும் சுந்தர் தங்கிய அந்த கோர்ட்கர்ட் என்ற இமயமலை கிராமத்தில் தங்கி அவர் தீபெத்துக்குச் சென்ற பாதையில் நாமும் நமது பாவப் பாதங்களை பதித்துவிட வேண்டும் என்ற தணிக்க முடியாத தாகத்தில் சிம்லா பட்டணத்திலிருந்து 82 கி.மீ. தொலைவிலுள்ள கோட்கர்ட் என்ற அழகான இமயமலை கிராமத்திற்கு ஒரு நாள் மாலையில் நான் வந்து சேர்ந்தேன். கோட்கர்ட் மிகவும் அழகான இடம். 6500 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள அந்த இடம் முழுவதும் ஆப்பிள் மரங்களால் நிறைந்ததாக காணப்பட்டது. நான் சென்ற சமயத்தில் மரங்களில் ஆப்பிள் பழங்கள் பழுத்து குலுங்கிக்கொண்டிருந்தன.
கீழேஅடிவாரத்தில் இருந்த பேருந்து ரஸ்தாவிலிருந்து நான் கிராமத்திற்குள் மலை ஏறி வந்தேன். கிராமத்தின் முகப்பில் ஒரு மலைக் குகையைக் கண்டேன். அந்த நாளின் இரவை அந்தக் குகையில் களித்துவிட்டு மறுநாள் காலையில் ஊருக்குள் செல்ல நான் பெரிதும் விரும்பினேன். காரணம், சாது சுந்தர்சிங் அந்தக் குகையில் தங்கியிருந்ததை நான் ஏற்கெனவே புத்தகத்தில் வாசித்திருந்தேன். ஆனால், நான் அந்த இரவில் அங்கு தங்க ஆவியானவர் என்னை சற்றும் அனுமதிக்கவில்லை. சற்று நேரத்தில் நான் எனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டு மாலை மயங்கும் நேரத்தில் கோட்கர்ட் என்ற அந்த கிராமத்தில் எனக்கு முன்பின் தெரியாத ஒரு வீட்டண்டை வந்து நின்றேன். அந்நியனான என்னைக் கண்ட அந்த வீட்டின் அன்பான மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னைத் தங்களுடன் இராத்தங்க அழைத்தார்கள். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை அறிந்த அந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் என்னை அன்போடு ஏற்று உபசரித்து, இரவு ஆகாரத்தை எனக்கு அளித்து, எனது படுக்கையை தங்கள் சிறிய வீட்டின் சூடான அடுப்பங்கரையில் ஆயத்தப்படுத்திக் கொடுத்தார்கள். ஆ, அந்த தேவ மக்களின் அன்பை என்ன வென்று சொல்லுவது! அந்த இடத்தின் குளிர் அதிகமாக இருந்தது. நான் அவர்களுக்கு ஆண்டவருடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்காக ஜெபித்தேன். தேவன் அந்த அன்பான குடும்பத்தினரை ஆசீர்வதிப்பாராக.
அந்த வீட்டின் சகோதரன் தனது மனைவியை எனக்கு சுட்டிக்காண்பித்து “இவர்கள் எனது மனைவி, எனது ஆப்பிள் பழத்தோட்டத்திற்கு ஆப்பிள் பழங்களை கூலிக்காக பறிக்க வந்த இடத்தில் நான் அவர்களை நேசித்து திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறினார்கள். அதைக்கேட்ட அந்த பெண்மணி சிரித்துக் கொண்டார்கள். ஊருக்கு ஆரம்பத்தில் இருந்த மலைக் குகையில் நான் இன்றிரவு இராத்தங்க அதிகமாக விரும்பினேன் என்று நான் அந்த சகோதரனிடத்தில் சொன்னபோது அவர்கள் மிகவும் பதறிப் போனார்கள். தேவ செயலாக நீங்கள் அந்தக் காரியத்தை செய்யவில்லை. எங்கள் ஊர் ஆப்பிள் மரங்களிலுள்ள பழங்களை பறித்து உண்ண வரும் கரடிகள் முதலில் அந்த குகைக்கு வந்து கும்மாளமிட்டுவிட்டுத்தான் இரவின் பிந்திய நேரத்தில் அந்த குகையிலிருந்துதான் புறப்பட்டு வந்து ஆப்பிள் மரங்களிலுள்ள பழங்களை சூறையாடும். நீங்கள் அங்கு தங்கியிருந்தால் உங்களை நிச்சயமாக அவைகள் அங்கேயே பீறிப்போட்டிருக்கும் என்று சொன்னார்கள்.
நான் அந்த கோட்கர்ட் கிராமத்தில் 5 நாட்கள் தங்கியிருந்து சுற்றியிருந்த மலைக் கிராமங்களுக்கெல்லாம் சென்று சுவிசேஷ பிரதிகளை மக்களுக்கு கொடுத்து ஊழியம் செய்தேன். கோட்கர்டில் இருந்த கிறிஸ்தவ மக்கள் ஒன்றாகக் கூடி ஒரு கூட்டம் ஒழுங்குசெய்து என்னை தேவச் செய்தி கொடுக்க அழைத்தார்கள். நான் மிகுந்த ஜெபத்தோடு தேவ சமூகத்தில் காத்திருந்து அவர்களுக்கு ஆண்டவருடைய செய்தியைக் கொடுத்தேன். ஆங்கிலத்தில் பேசிய எனது செய்தியை அவர்கள் ஹிந்தியில் மொழிபெயர்த்தார்கள். அவர்கள் யாவருக்கும் அது மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். என்னை திரும்பவும் தங்கள் மத்தியில் வந்து தேவ ஊழியம் செய்ய அவர்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். எல்லா துதிக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே. நான் தங்கியிருந்த அழகான கோர்ட்கர்ட் ஊரின் இரு படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
சாதுசுந்தர்சிங் இந்த கோட்கர்ட் கிராமத்திற்கு வந்து இங்கிருந்துதான் சுவிசேஷத்திற்கு தனது கதவுகளை அடைத்துக் கொண்ட தீபெத் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். சுந்தர் வேறு மாற்றுப் பாதைகளின் வழியாகவும் தீபெத்துக்குச் சென்றபோதினும் இந்த கோட்கர்ட் கிராம மார்க்கமாவும் அவர் பயணப்பட்டிருக்கின்றார். அவர் கோர்ட்கர்ட் வரும்போது அங்குள்ள அழகான சிறிய ஆலயத்திலும் தேவனுடைய செய்தியை மக்களுக்கு பிரசங்கித் திருக்கின்றார். அந்த அழகிய ஆலயத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
இமாச்சல் பிரதேசத்தை பொன் விளையும் பூமியாக மாற்றிய பெருமை அமெரிக்காவிலிருந்து மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த சாமுவேல் ஈவான்ஸ் ஸ்ட்ரோக்ஸ் Samuel Evans Strokes என்பவரையே சாரும். இமாச்சல் பிரதேசம் ஆப்பிள் பழ மரங்களை வளர்க்க ஏற்ற சீதோஷ்ண நிலை கொண்டது என்று கண்டு அமெரிக்காவிலிருந்து ஆப்பிள் மரங்களை கொண்டு வந்து பயிரிட்டது அவர்தான். அவருடைய தகப்பனார் பெரும் செல்வந்தனாவார். தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை இந்தியாவில் பிரசங்கித்து அநேகரை நீதிக்குட்படுத்த வந்த சாமுவேல் ஸ்ட்ரோக்ஸ் பக்த சுரோன்மணி சாதுசுந்தர்சிங்குடன் சேர்ந்து சுபத்து என்ற இமாச்சல் பிரதேச கிராமத்தில் ஆரம்பத்தில் கொஞ்ச காலம் சுவிசேஷ ஊழியம் செய்தார். சுந்தரைப்போல அவரும் ஒரு கிறிஸ்தவ சந்நியாசியாகவே எளிமையாக வாழ்ந்தார். அதின் பின்னர் சுந்தரை விட்டுவிட்டு கோட்கர்ட் என்ற கிராமத்திற்கு வந்து அங்குள்ள ஒரு இமாச்சல் பிரதேச இந்துப் பெண்ணின் அழகில் வீழ்ந்து அவளை மணம் புரிந்து கொண்டு முழுமையான இந்துவாக மாறி ஜீவனுள்ள தேவனை உதறித்தள்ளிவிட்டார். பின் வந்த நாட்களில் அவர் தனது பெயரை சத்தியானந்த் ஸ்ட்ரோக்ஸ் என்று மாற்றிக்கொண்டு கோட்கர்ட் கிராமத்தில் தனக்கென ஒரு இந்துக் கோயிலையும் கட்டிக்கொண்டார். அதின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள்.
“பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” என்ற பழமொழிக்கு இணங்க மணம் பெறாமல் சுந்தரை விட்டு விலகி இருளின் பாதையைத் தெரிந்து கொண்டு தன்னை ஆட்கொண்ட தன் அன்பின் கன்மலை கிறிஸ்துவை உதறித்தள்ளிவிட்டார். அந்தோ பரிதாபம்! சாமுவேல் ஸ்ட்ரோக்ஸ் உடைய மூத்த மகனை தானேதார் என்ற பக்கத்து கிராமத்தில் நான் சந்தித்து ஜீவனுள்ள அன்பின் ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வருந்தி கேட்டுக்கொண்டேன்.
நான் கோர்ட்கர்ட் கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் மழை பெய்து கொண்டிருந்தபடியால் மழையில் நனைந்து கொண்டே சேரும் சகதியுமான பாதைகளில் நடந்து தேவ ஊழியத்தை செய்தேன். கோட்கர்ட் கிராமத்திற்கு மேலே மலை உச்சியில் சாதுசுந்தர்சிங் நடந்து சென்ற தீபெத் ரஸ்தாவில் நானும் நடந்து சென்றேன். பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் பாதங்கள் பட்ட அந்த பாதையில் என் பாவ பாதங்கள் பட்டது என்னைப் பரவசப்படுத்துவதாக இருந்தது. நான் நடந்து சென்ற பாதையையும் (மைல் கல்லும் தேவதாரு மரங்கள் நிற்கும் பாதை) பள்ளத்தாக்கில் சட்லெஜ் நதி ஓடுகின்ற பயங்கரமான தீபெத் பாதையையும் நீங்கள் படங்களில் காணலாம்.