சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்
பக்த சிரோன்மணி சாது சுந்தர் சிங் பிறந்த பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராம்பூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டை எப்படியாவது சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல் பிரதேசத்திற்கு தேவ ஊழியத்தின் பாதையில் சென்றிருந்த இடத்தில் உன்னா என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இடத்திலிருந்து அருகிலுள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராம்பூருக்குச் சென்று சுந்தர்சிங் பிறந்த வீட்டைப்போய் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்ற ஆவலில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி காலை நேரம் நானும் சகோதரன் நார்ட்டன் அவர்களும் உன்னாவிலிருந்து நேரடியாக லூதியானாவுக்குச் செல்லும் துரிதப் பேருந்துவில் ஜெபத்தோடு புறப்பட்டோம். பேருந்து புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் அது பழுதாகிவிட்டது என்று சொல்லி அதை பணி மனைக்கு கொண்டு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பின்னர் அது திரும்பவும் புறப்பட்டது. நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பேருந்தின் வேகம் எதுவும் அதில் காணப்படவில்லை. அது எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது. காரணம், நாங்கள் அந்த நாளிலேயே நாங்கள் புறப்பட்ட உன்னா என்ற இடத்திற்கு வந்தாக வேண்டும். இராத்தங்குவதற்கான எந்த ஆயத்தத்துடனும் நாங்கள் செல்லவில்லை. செல்வச் செழிப்புமிக்க பஞ்சாப் மாநிலத்தின் சிறிதும் பெரிதுமான அநேக கிராமங்களை எங்கள் பேருந்து கடந்து சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான கோதுமை விளை நிலங்களையும், அந்த விளை நிலங்களில் பஞ்சாப் மாநிலத்தின் ஆண்களும் பெண்களுமான சீக்கிய மக்கள் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண முடிந்தது. தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கிராமங்கள் தோறும் காணப்படுவது போல அந்த பஞ்சாப்பிலும் கிராமத்தின் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு சிறிதும் பெரிதுமான அழகிய சீக்கிய குருத்துவாராக்கள் கிராமங்கள் தோறும் காணப்படுகின்றன. ஓரிடத்தில், அங்கு விளைந்த கோதுமையை அநேக லாரிகள் ஏற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு கிலோ மீட்டர் தூரம் வரை ரஸ்தாவின் ஓரங்களில் ஆயிரக்கணக்கான கோதுமை மூட்டைகள் மலைபோல அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டு அதிசயித்துப்போனோம். நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒரு பெரிய பட்டணத்திற்குள் வந்ததும் அங்கே நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த பேருந்து ஒன்றைப் பிடித்து லூதியானா பட்டணத்திற்கு செல்லும்படியாக பேருந்தின் நடத்துனர் பயணிகளைக் கேட்டுக்கொண்டார். நாங்கள் உடனே அடுத்த பேருந்து ஒன்றைப் பிடித்து நண்பகல் ஒன்று அல்லது இரண்டு மணி சுமாருக்கு லூதியானா பட்டணம் வந்து சேர்ந்தோம். லூதியானா பேருந்து நிலையம் புழுதி நிறைந்த இடமாகக் காணப்பட்டதுடன் அப்பொழுது அடித்த வெயிலும் கடுமையாக இருந்தது. சாதுசுந்தர்சிங் பிறந்த ஊரான ராம்பூருக்குச் செல்ல எந்த ஒரு பேருந்து ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் சரியான பேருந்தை எங்களுக்கு காண்பிக்க இயலவில்லை. நாங்கள் இருவரும் மனம் சோர்ந்தவர்களாக எங்கள் திட்டத்தை கைவிட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லுவதென்ற திட்டமான தீர்மானத்திற்கு வந்த நேரம் அன்பின் ஆண்டவர் பல்லாண்டு காலத்திற்கு முன்பாக சாதுசுந்தர்சிங் வாழ்ந்த சுபத்துவிலுள்ள அவருடைய பங்களாவிற்கு என்னை வழிநடத்தினதைப்போன்று இந்த தடவை அவர் பிறந்த இடத்திற்கும் வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று ஜெபித்துவிட்டு லூதியானாவில் இருக்கின்ற ஒரு தேவ ஊழியரின் முகவரியைப்பெற்று அவருக்குப் போன் செய்தேன். அந்த சகோதரன் ஓரளவு எங்களுக்குக் கொடுத்த ஆலோசனையின் காரணமாக நாங்கள் அம்பாலா பட்டணம் செல்லும் பேருந்தில் ஏறி 20 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து தூரகா என்ற இடத்தில் நாங்கள் வந்து இறங்கினோம்.
அந்த தூரகாவில் ஒரு டிராக்டர் போன்ற டக்கரில் ஏறி மிகுந்த கஷ்டத்துடன் 2 கி.மீ. தூரம் பயணம் செய்து ராம்பூர் வந்து சேர்ந்தோம். சுமார் 8 பேர்கள் சற்று சிரமத்துடன் அமரக்கூடிய அந்த வாகனத்தில் 30 பேர்களை வைத்து திணித்துவிட்டனர். வாகனத்தின் மேலேயேயும் மக்கள் ஏறிக்கொள்ளுகின்றனர். நாம் ராம்பூர் என்று சொல்லுவதை அந்த இடத்திலுள்ள மக்கள் ராம்பூரா என்று அழைக்கின்றனர். ஒரு வேளை நாங்கள் லூதியானாவிலுள்ள பேருந்து நிலையத்தில் ராம்பூரா செல்லும் மார்க்கம் கேட்டிருந்தால் நாங்கள் இலகுவாக வழி கண்டு பிடித்திருப்போம். மெய்யாகவே, அன்பின் ஆண்டவர் எங்களுக்கு தயவும் இரக்கமும் பாராட்டியிருக்காத பட்சத்தில் நிச்சயமாக நாங்கள் ராம்பூர் வந்து சேர்ந்திருக்கவே முடியாது. ராம்பூர் கிராமத்திற்குள் நாங்கள் ஏறி வந்த டக்கர் வரவில்லை. அது எங்களை சற்று தொலைவில் பிரதான ரஸ்தாவில் இறக்கிவிட்டுவிட்டு வேறு வழியாகச் சென்றுவிட்டது. நாங்கள் அங்கிருந்து கிராமத்திற்குள் கொஞ்ச தூரம் நடக்க வேண்டியதாக இருந்தது. தூரத்தில் ராம்பூர் என்ற சீக்கிய கிராமத்தைப் பார்த்ததும் எனது உள்ளம் கர்த்தருக்குள் களிகூர்ந்தது. கிராமத்திற்கு முன்பாக ஒரு பெரிய நதி ஓடுகின்றது. அந்த நதியின் பெயர் நீலோ என்பதாகும். நமது சுந்தர் சிறுவனாக இருந்த நாட்களில் அந்த நீலோ ஆற்றுக்கு வந்து கட்டாயம் ஸ்நானம் செய்திருப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணிக் கொண்டேன். அந்த நதிக்கு மேலாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் என்ற அந்த சீக்கிய கிராமத்தை நீங்கள் படத்தில் காணலாம். நீலோ நதியைக்கூட நீங்கள் பார்ப்பீர்கள்.
நதியைக் கடந்து அப்பால் ஊர் எல்லைக்குள் வந்ததும் நிழல் தரும் ஒரு பெரிய விசாலமான மரம் பச்சை பசேரென்று நிற்பதையும், அதின் அடியில் உட்காருவதற்கு வசதியாக வட்டமாகச் சுற்றிக்கட்டப்பட்டிருந்த சுவரின் திட்டில் ஊரின் பெரியோர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் நாங்கள் கவனித்தோம். அந்த ராம்பூர் சீக்கிய கிராமம் நல்ல செல்வந்தமான கிராமம் என்பதைக் காண முடிந்தது. ஒரு பெரிய கூட்டம் எருமை மாடுகள் எங்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தன. பார்வோன் தனது சொப்பனத்தில் கண்ட அழகும், புஷ்டியுமான பசுக்களைப் போல அந்த எருமை மாடுகளும் மிகுந்த கொழுமையுடன் காணப்பட்டன. நிறைய பால் கொடுக்கும் அந்த ஒவ்வொரு எருமையும் பல்லாயிரம் ரூபாய் மதிப்புடையவளாக இருக்கும் என்று நாங்கள் யூகித்துக்கொண்டோம். ராம்பூர் கிராமத்தின் மூதாட்டி ஒருவர் தனக்கு முன்பாக ஒரு பெரிய வாளியை வைத்து தனது எருமை மாட்டில் பால் கறந்து கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
ஊரில் எந்த ஒரு ஆளிடத்தில் கேட்டாலும், ஏன் ஒரு சிறு பிள்ளையிடம் கேட்டாலும் கூட சுந்தர்சிங் பிறந்த வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்டால் உடனே அந்த இடத்திற்கு நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். அவர் பிறந்த அந்த வீட்டைக்காண உலகின் பல்வேறு இடங்களிலிருந்து கர்த்தருடைய பிள்ளைகள் வருகின்றனர் என்பதை அதின் மூலம் எங்களால் கண்டு கொள்ள முடிந்தது. நாங்கள் இருவரும் சுந்தருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். அது மிகவும் பழமையான வீடு. அந்த வீட்டைக்கண்ட எனக்கு உண்டான மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. நல்ல விசாலமான நீண்ட ஒரு பெரிய வீடாக மாடியிலும் அறைகள் வைத்துக்கட்டப்பட்டுள்ளது. கீழ் வீட்டிலிருந்து மேல் தளத்திற்கு ஏறிச்செல்ல நிறைய படிக்கட்டுகள் ஏற வேண்டும். சுந்தர்சிங் தினமும் அந்தப்படிக்கட்டுகளில் ஏறித்தான் மேல் மாடியிலிருந்த அவரது படுக்கை அறைக்கு வந்திருக்க வேண்டும். அங்கிருந்த அவரது அறையில்தான் கர்த்தர் அவருக்கு தம்மை ஜீவனுள்ள ஆண்டவராக வெளிப்படுத்தி அவரை தமது அடிமையாக்கினார். அந்த அறையை தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் காண்பதற்காக ஒரு புகைப்படம் எடுத்து வந்தேன். அந்த வீட்டின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகத்தையும் நீங்கள் காணலாம்.
சுந்தர்சிங் பிறந்த அறையில் அவரது தாயார் பயன்படுத்திய நூல் நூற்கும் ராட்டினமும், அவர் பானம் பண்ணிய பெரிய டம்ளரும் வைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் செய்யப்பட்ட அந்த கனமான டம்ளர் நிறைய ஊற்றப்படும் எந்த ஒரு பானத்தையும் ஏன்? தண்ணீரைக்கூட நம்மில் எவராலும் முழுமையாக குடிக்கவே முடியாது. அத்தனைபெரிய உயரமான டம்ளர் அது. அந்த டம்ளரை எங்களது கரங்களால் தூக்கி மகிழ்ந்தோம். சுந்தருடைய தாயார் பயன்படுத்திய ராட்டினத்தையும், அந்த டம்ளரையும் நீங்கள் இங்குள்ள படத்தில் காணலாம்.
சுந்தர் பிறந்த அறையின் சுவரில் காணப்படும் அவரது 2 புகைப்படங்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்க முடியும்.
அவரது வீட்டிற்கு மேலாக மாடியில் 2 பளிங்குக் கற்களான சிலுவைகள் நாட்டப்பட்டுள்ளன. ராம்பூரிலுள்ள எல்லா மக்களும் அந்தச் சிலுவைகளை காணும்படியாக அவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தச் சிலுவைகளில் ஒன்றை நீங்கள் படத்தில் காணலாம்.
சாதுசுந்தர்சிங் பிறந்த இடத்திலும், கர்த்தர் அவருக்குக் காட்சி அளித்த அறையிலும் நான் முகங்குப்புற விழுந்து கர்த்தருக்கு என்னை ஒப்புவித்து ஜெபித்தேன். சகோதரன் நார்ட்டன் அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள்.
காலையிலிருந்து எந்த ஒரு ஆகாரமும் சாப்பிடாமல் மிகுந்த பசியோடு இருந்த எங்களுக்கு சாதுசுந்தர்சிங்கின் வீட்டிலிருந்து கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கும் பாஸ்டர் பிலிப் மசி என்பவரின் அன்பான மனைவி ஐலின் அவர்களும், பாஸ்டரின் உடன் பிறந்த சகோதரன் ஜாண் மசி என்பவரும் சேர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் சுவையான ஆகாரம் தயார் செய்து எங்களுக்கு அருமையான உணவளித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அன்று இரவு அந்த வீட்டில் தங்களுடன் விசேஷமாக ஆண்டவர் சுந்தருக்கு தம்மை வெளிப்படுத்திய அறையிலேயே நாங்கள் தங்கும்படியாக எங்களை அதிகமாக வற்புறுத்தினார்கள். எங்களுக்கும் அப்படித்தங்கத்தான் அதிக ஆவலாக இருந்தது. ஆனால் இரவில் மாற்றுவதற்கு எந்த ஒரு மாற்றுடைகளும் நாங்கள் எங்களுடன் கொண்டு செல்லாத ஒரே காரணத்தால் இரவோடு இரவாக நாங்கள் எங்கள் இருப்பிடம் திரும்ப வேண்டியதாயிற்று.
அந்த பிலிப் மசி என்ற சகோதரன் சுந்தர் சிங் பிறந்த அந்த வீட்டில் நல்ல அருமையானதோர் தேவ ஊழியம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு ஓய்வு நாளிலும் 70 சீக்கிய மக்கள் ஆராதனையில் வந்து கலந்து கொள்ளுவதாகவும், அவர்கள் எல்லாருக்கும் மதிய உணவு ஓய்வு நாளில் அளிக்கப்படுவதாகவும், அதற்கான உணவுப் பொருட்களை எல்லாம் அதில் கலந்து கொள்ளும் சீக்கிய மக்களே கொடுப்பதாகவும் சகோதரன் ஜாண் மசி(பிலிப் மசியின் சகோதரன்) எங்களிடம் சொன்னார்கள். தங்களுக்கு ஆவிக்குரிய தந்தையாக இருந்து தங்களை ஜீவ பாதையில் வழிநடத்திக்கொண்டிருக்கும் தங்கள் பாஸ்டர் பிலிப் மசியின் குடும்பத்திற்குத் தேவையான அரிசி, கோதுமை, பால், காய்கறி எல்லாம் அந்த அன்பான சீக்கிய மக்களே கொடுத்து வருகின்றார்கள் என்றும் சொன்னார்கள். மொத்தம் 6 சீக்கிய குடும்பங்கள் ஞானஸ்நானம் எடுத்திருப்பதாக எங்களிடம் சொன்னது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவர்களுடைய ஊழியங்களின் மூலமாக ஆண்டவர் அந்த ராம்பூர் கிராமத்தில் பெரிய அற்புதங்களைச் செய்து வருவதாகவும் எங்களிடம் சொன்னார்கள். கர்த்தருக்கே மகிமை. பாஸ்டர் பிலிப் மசி அவர்களின் குடும்ப புகைப்படத்தையும், அவர்கள் நடத்தும் ஆராதனையில் வந்து கலந்து கொண்ட சீக்கிய பெண்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
சுந்தர்சிங் பிறந்த வீட்டைப்பார்த்து விட்டு அவருடைய வீட்டின் அருகிலுள்ள செங்கல்கள் பதித்துள்ள ஒடுக்கமான பாதை வழியாக நாங்கள் நடந்து வரும்போது தேவனுடைய பிரசன்னத்தை நாங்கள் அதிகமாக உணர்ந்தோம். அந்தப் பாதை வழியாக சுந்தர் சிறுவனாக இருந்தபோது எத்தனை தடவையோ நடந்திருப்பார், ஆடி, ஓடி விளையாடியிருப்பார் அல்லவா? ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
சாதுசுந்தர்சிங் பிறந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்த எனக்கு என் மனக்கண்களுக்கு முன்பாக எப்பொழுதும் நிழலாடிக் கொண்டிருப்பது எல்லாம் அவர் வீட்டின் மாடியில் நாட்டப் பட்டிருக்கும் 2 வெண் பளிங்குச் சிலுவைகள்தான். காரணம், சாதுசுந்தர்சிங் அதிகமாக நேசித்தது அந்தச் சிலுவையைத்தான். “சிலுவையே மோட்சம்” (Cross is Heaven) என்று அவர் அடிக்கடி சொல்லுவார். தனது புத்தகங்களில் அதைத் திட்டமாக எழுதினார். மிகுந்த செல்வந்தனான பெற்றோருக்கு பிள்ளையாக அவர் பிறந்த போதினும் தன்னை ஆட்கொண்ட தன் அன்பின் இரட்சகருக்காக அவர் தன்னை முற்றும் தரித்திரனாக்கி சிலுவையைத் தனது தோளின் மேல் எடுத்துக்கொண்டார். தேவனுக்கே மகிமை.