சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்
ஐசுவரியவானான சாதுசுந்தர்சிங்கின் தந்தை அவருக்கு அளித்த பணத்தில் சிம்லா மலைகளிலுள்ள சுபத்து என்ற அழகிய இடத்தில் ஒரு பங்களா வாங்கியதையும், அந்த பங்களாவிலேயே அவர் தங்கியிருந்து கிறிஸ்தவ உலகுக்கு ஆசீர்வாதமான அநேக ஆவிக்குரிய புத்தகங்களை எழுதியதையும், நீண்ட மணி நேரங்களையும், நாட்களையும் அந்த பங்களாவில்தான் ஜெபம் உபவாச தியானங்களில் அவர் செலவிட்டதையும், தனது ஊழியங்களை பல மாத காலங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் செய்து முடித்து இறுதியில் இந்த பங்களாவிலேயே வந்து தங்கி நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டதையும் குறித்து நான் புத்தகங்களில் அதிகமாக வாசித்திருந்தேன். அவர் வாழ்ந்த அந்த பங்களாவை காண என் உள்ளம் வெகுவாக வாஞ்சித்து கதறியது. சுபத்து என்ற அந்த இடம் எங்கே இருக்கின்றது? அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது போன்ற விபரங்களை நான் அறிந்து கொண்டேன்.
அதின்படி இமாச்சல் பிரதேசம் சிம்லா மலைகளிலுள்ள சிம்லா பட்டணத்திலிருந்து தரம்பூர் பட்டணம் செல்லும் பேருந்தில் சுமார் 65 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து ஒரு நாள் மாலையில் சுபத்து என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தேன். இந்த சுபத்து ஒரு அழகான கோடை வாசஸ்தலமாகும். சுமார் 6000 அடி உயரத்தில் அது அமைந்துள்ளது. நான் சுபத்து வந்து சேர்ந்து அங்குள்ளதோர் கிறிஸ்தவ வீட்டில் இராத்தங்கினேன். நாங்கள் ஒருவருக்கொருவர் முன்பின் பழக்கம் இல்லாதவர்களாக இருந்த போதினும் கிறிஸ்து இரட்சகரின் அன்பின் நிமித்தம் அவர்கள் என்னை அன்போடு ஏற்றுக்கொண்டு எனக்கு உணவு அளித்து தங்கள் இல்லத்தில் இரவு இளைப்பாற இடம் அளித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
எல்லா தேவ மக்களின் வாழ்விலும் ஒரு கண்ணீரின் பிரச்சினை இருப்பதைப்போன்று அந்த கிறிஸ்தவ வீட்டிலும் ஒரு மாபெரும் துயரப் பிரச்சினை இருந்தது. அந்த வீட்டுப் பெற்றோரின் மூத்த வாலிப மகன் வீட்டை விட்டுச் சென்று பல ஆண்டுகளாகியும் இன்னும் வீடு வந்து சேராத வியாகுலத்தின் பிரச்சினை அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அன்று இரவு அவர்கள் வீட்டுக் குடும்ப ஜெபத்தில் அவர்களுக்கு ஆறுதல்கூறி ஆண்டவருடைய வார்த்தைகளை வாசித்து ஜெபித்தேன். அவர்கள் வீட்டிலிருந்த இந்தி மொழி வேதாகமத்தை வாங்கி இந்தியிலேயே நான் வாசித்தேன். ஓ, அந்த அன்பான குடும்பத்தினர் நான் வாசித்ததைக் கேட்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள். கர்த்தருக்கே துதி உண்டாகட்டும்.
அடுத்த நாள் காலையில் நான் சாது சுந்தர்சிங்கின் வீட்டை நோக்கி விரைந்தேன். முந்தின இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்த மழை அந்த நாள் காலையிலும் தூறல் போட்டுக் கொண்டுதான் இருந்தது. நான் தங்கியிருந்த வீட்டின் மக்கள் சுந்தருடைய பங்களா எந்த திசையில் உள்ளது என்றும் அதற்கு எப்படி செல்ல வேண்டும் என்றும் எனக்கு விபரம் சொன்னார்கள். நான் காலையில் மழைத் தூறலில் நனைந்து கொண்டே தெருக்களைக்கடந்து ஊருக்கு கடைசியிலிருந்த கல்லறைத்தோட்டத்திற்கு அப்பாலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று சுந்தருடைய பங்களா எங்கிருக்கின்றது என்று கேட்டேன்? அந்த வீட்டின் கிறிஸ்தவ சகோதரி வெளியே வந்து சற்று தொலைவில் கானக மரங்களின் ஊடாகத் தெரியும் பெரிய பங்களா ஒன்றை எனக்குக் காண்பித்தார்கள். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை. சாது சுந்தர்சிங் என்னைத் தம்மண்டை அழைத்தால் நான் எத்தனை ஆசை ஆவலோடு அவரண்டை ஓடிச்செல்லுவதுபோல அந்த பங்களாவை நோக்கி துரிதம் துரிதமாகச் சென்றேன். இரட்டை, இரட்டை தூண்களாக மொத்தம் 34 தூண்கள் அந்த பங்களாவின் வெளி வராந்தாவைச் சுற்றி இருந்தன. ஆட்கள் எவரும் குடியில்லாத பாழடைந்த பங்களாவாக அது இருந்தது. பங்களாவின் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டிருந்தன. எப்படியாயினும் பங்களாவிற்குள் சென்று கண்ணீரைக் கொட்டி ஜெபிக்கத் துடிதுடித்து நின்றேன். ஒவ்வொரு கதவாகத் தட்டினேன். ஒரு கதவும் திறக்க வழியில்லை. கடைசியாக ஒரு பழைய கதவு திறந்தது. அந்த அறையினுள் எந்த ஒரு பொருட்களும் இல்லை. நான் அந்த அறையில் முழங்கால்படியிட்டு தேவ சமூகத்தில் என் கண்ணீரைக் கொட்டி “ஆண்டவரே, இந்த இடத்தில் வாழ்ந்த உம்முடைய அன்பின் தாசன் சாதுசுந்தர்சிங்கைப் போல பாவியாகிய என்னையும் நீர் உம்முடைய நாமத்திற்கு மகிமையாக எடுத்துப் பயன்படுத்தும். சுவிசேஷம் எட்டாத பகுதிகளுக்கெல்லாம் அவரைப்போல என்னையும் எடுத்துச் சென்று உம்முடைய நல்ல நாமத்தை பிரசித்தப்படுத்தும்” என்று உள்ளமுருகி ஜெபித்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தேன். பின்னர் அந்த பங்களாவை ஜெப நிலையில் சுற்றி சுற்றி வந்தேன். சுந்தரும் அப்படியேதான் சுற்றி சுற்றி வந்து ஜெபித்திருப்பார் என்று நான் என் உள்ளத்தில் எண்ணிக் கொண்டேன். சுந்தருடைய பங்களாவில் நான் ஏறெடுத்த அந்த என் கண்ணீரின் கதறுதல் அன்றைய தினமே பரம தகப்பனின் செவிகளில் பட்டிருக்கின்றது. அதை நான் அறியேன். நேப்பாள தேசம் சென்று முதல் தடவையாக தேவனின் சுவிசேஷத்தை அறிவித்துவிட்டு வந்த பின்னர் ஒரு நாள் அதிகாலையில் நான் ஜெபித்துக்கொண்டிருந்த போது என் உள்ளத்தில் “சுந்தர்சிங்கைப்போல என்னைப் பயன்படுத்தும் என்று சொல்லி உன் கண்ணீரை சிந்தி என் தாசனின் பங்களாவில் நீ ஜெபித்த ஜெபத்தை நான் மறந்துவிடவில்லை. அதின் முதல் கட்டமாக இப்பொழுது நான் உன்னை நேப்பாளம் கொண்டு சென்றேன். இன்னும் சுந்தரைப்போல பல இடங்களுக்கும் உன்னைக் கொண்டு செல்லுவேன்” என்று கர்த்தர் என் உள்ளத்தில் பேசினார்.
அப்படியே பின் வந்த நாட்களில் தம்முடைய வாக்கை தேவன் நிறைவேற்றினார். 1981 ஆம் ஆண்டிலிருந்து 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அந்த அன்பின் கண்மணி என்னை நேப்பாள நாட்டிற்கு கொண்டு சென்று தம்முடைய சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்தினார். சிக்கிம், பூட்டான், மேற்கு தீபெத் என்று அழைக்கப்படும் லடாக், காஷ்மீரத்திலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள ஸன்ஸ்கார் என்ற இரத்தத்தை உறைய வைக்கும் பனிப் பாலைவனம் (Cold Desert) போன்ற இடங்களுக் கெல்லாம் அவர் என்னை அழைத்துச் சென்று சுவிசேஷத்தை அறிவிக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்தார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? நான் எனது கண்ணீரை சிந்தி ஜெபித்த சுந்தரின் கானக பங்களாவை நீங்கள் இந்த செய்தியில் காணலாம்.
அந்த கானக பங்களாவை வாங்குவதற்கு முன்பாக அவர் தங்கியிருந்து ஊழியம் செய்த மற்றொரு வீட்டையும் கூட நீங்கள் காண்பீர்கள்.
அந்த வீட்டிலும் அவர் சில காலம் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.