என்னை வெகுவாக கவர்ந்த பரிசுத்த பக்தசிரோன்மணி சாது சுந்தர்சிங்
நம் அன்பின் ஆண்டவர் பாவியாகிய என்னை அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த அவர் என்னில் கண்ட ஒரு சிறிய தேவ ஒளியை மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை அதிகமாக வாசித்து தியானித்ததின் காரணமாக நான் பெற்றுக் கொண்டேன். கர்த்தருடைய கிருபையால் அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் நான் ஒரு தடவைக்கும் கூடுதலாக வாசித்திருக்கின்றேன். அத்துடன் அநேக தேவ மக்களுக்கு அவருடைய புத்தகங்களை நான் வாங்கி இலவசமாகக் கொடுத்துமிருக்கின்றேன். வட மாநில தேவ ஊழியங் களிலும் சுந்தரின் வாழ்க்கை சரித்திர புத்தகத்தை ஹிந்தி மொழியில் ஏராளமாக வாங்கி மக்களுக்கு ஜெபத்தோடு கொடுத்திருக்கின்றோம். எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே. எனது வாழ்க்கை சரிதையில் பரிசுத்த மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கைச் சாயலும் பின்னிப் பிணையாவிட்டால் எனக்கென்று தனியாக ஒரு சுயசரிதை இருக்க வாய்ப்பே கிடையாது. சுந்தரின் வாழ்க்கையில் என்னை வெகுவாக கவர்ந்தது அவருடைய இடைவிடாத பிரகாசமான ஜெப வாழ்க்கையாகும். அவர் எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டே இருந்தார். மக்களிடம் அவர் அதிகமாக பேச விரும்புவதில்லை என்று சொல்லப்படுகின்றது. மனிதரிடம் பேசும் தனது பேச்சைக் குறைத்து தன்னைத் தமக்கென தெரிந்து கொண்ட தன் ஆத்தும மணவாளனுடன் இடைவிடாது உறவாடிக்கொண்டே இருந்தார். அரச அரண்மனைக்கு சிறப்பு விருந்தினனாக அழைக்கப்பட்டிருந்த தருணங்களிலும் கூட அவர் அங்கேயும் தனது பரலோக தகப்பனோடு உறவாட தனது முழங்கால்களை முடக்கினார். எத்தனை ஆச்சரியம் பாருங்கள்!
காலஞ்சென்ற என் பரிசுத்த தகப்பனாருக்கும் சாதுசுந்தர் சிங் மேல் அளவிடக்கரிய அன்பு உண்டு. அவரது பரிசுத்த வாழ்க்கை, அவரது தியாக ஊழியம் அவர்களுக்கு அதிகமாக பிடிக்கும். எனது தகப்பனார் சிறுவனாக எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மெய்ஞ்ஞானபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) என்ற இடத்திலுள்ள சி.எம்.எஸ் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் சின்னஞ் சிறுவனாகப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் அந்த தேவ மனிதர் அவர்களின் பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கின்றார். பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மாணவர்களை தனது இருகரம் கூப்பி வாழ்த்திவிட்டுச் சென்றிருக்கின்றார். மற்றபடி எந்த ஒரு பிரசங்கமும் அவர் அங்கு செய்யவில்லை. சாதுசுந்தர்சிங்கின் முகத்தில் தேவனுடைய பரிசுத்த பிரசன்னம் ஒளி வீசி பிரகாசித்ததை எனது தகப்பனார் கண்டு பிரமித்திருக்கின்றார்கள். அந்த பரிசுத்த ஒளியை அவர்கள் தனது வாழ்வில் என்றுமே மறக்கவில்லை. அதிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
சாதுசுந்தர்சிங் தனது பள்ளிக்கு வந்த அந்த நாளை அவர்கள் ஆனந்தமாக நினைவுகூருவார்கள். ஒரு நாள் மாலையில் அவர் மெய்ஞ்ஞானபுரத்திற்கு வந்திருக்கின்றார். அவரை வரவேற்க மெய்ஞ்ஞானபுரம் என்ற கிறிஸ்தவ கிராமமே திரண்டு சென்றிருக்கின்றது. ஊருக்கு வடக்கே உள்ள செம்மண் தேரிக்காட்டு வழியாக அந்த தேவ மனிதர் மாடுகள் இழுத்து வரும் வில்வண்டி ஒன்றில் அமர்ந்து ஊருக்குள் வந்து கொண்டிருந்திருக்கின்றார். முதலில் ஒரு அழகான வில்வண்டி வந்து கொண்டிருந்திருக்கின்றது. அவரை வரவேற்க செம்மண் தேரியில் திரண்டு நின்று கொண்டிருந்த மக்கள் சுந்தர் நிச்சயமாக அந்த அழகான வில் வண்டியில்தான் வருகின்றார் என்று எண்ணி அந்த வண்டியை எல்லாரும் ஆனந்த மகிழ்ச்சியில் சூழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் அவர் அதில் பயணிக்கவில்லை. அந்த வண்டியில் அவரது உருது மொழி வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் துவிபாஷி (Translator) அமர்ந்திருக்கின்றார். அதைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அழகற்ற சாதாரணமான ஒரு வில் வண்டியில் தனது இரு கரங்களையும் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து சம்மணம் போட்டு உட்கார்ந்தவராக சாந்த சொரூபனாக அவர் தியான நிலையில் அமர்ந்து வந்திருக்கின்றார். அந்த சம்பவத்தை எனது தகப்பனார் என்றும் மறக்கவே இல்லை.
“சாது கயிற்றைப் பிடி, சாது கயிற்றைப்பிடி”
நான் மிகவும் சிறுவனாக இருந்த நாட்களில் எனது தகப்பனார் சாதுசுந்தர்சிங்கைப்பற்றியசாட்சிகளை கதை கதையாக எனக்கு கூறியிருக்கின்றார்கள். அவர் புத்தர்கள் வாழும் தீபெத் நாட்டிற்கு சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்றபோது ஓரிடத்தில் அவரை தலைமை லாமா ஒரு மரணக்கிணற்றுக்குள் தள்ளி கிணற்றின் கதவை பூட்டி சாவியை தானே எடுத்துக் கொண்டதையும், மூன்றாம் நாளில் தனக்கு மேலாக வந்து கொண்டிருந்த ஒரு கயிற்றை சுந்தர் பார்த்தபோது “சாது கயிற்றைப்பிடி, சாது கயிற்றைப்பிடி” என்று தொனிக்கும் தேவ குரலைக் கேட்டு அந்தக் கயிற்றைப்பிடித்தபோது அது அவரை அப்படியே தூக்கி வெளியே கொண்டு வந்துவிட்டதையும், அதின் பின்னர் மரணக் கிணற்றின் கதவு தானாக மூடி பூட்டிக் கொண்டதையும் பரவசமாக என்னிடம் கூறுவார்கள். “சாது கயிற்றைப் பிடி, சாது கயிற்றைப் பிடி” என்று கூறிய எனது தந்தையின் வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் தொனிப்பதாக உள்ளது.
எங்கள் வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த சாதுசுந்தர்சிங்கின் படம்
எனது தகப்பனார் பிழைப்பின் காரணமாக இலங்கை தேசம் சென்று அங்கு சில காலம் பணி செய்தார்கள். இலங்கையில் உள்ள ரத்தினபுரி என்ற இடத்தில் ஒரு கடையில் முதன்மை நிலை கணக்கராக அவர்கள் வேலை செய்தார்கள். என் தகப்பனாரின் கையெழுத்து அழகாக இருக்கும். அங்கிருந்த நாட்களில் ரத்தினபுரியிலுள்ள கிறிஸ்தவ தேவாலய குருவானவரிடமிருந்து சாதுசுந்தர்சிங்கின் படம் ஒன்றைப் பெற்று வந்து அதை எங்கள் வீட்டின் சுவர் ஒன்றில் தொங்க வைத்திருந்தார்கள். அது அங்கு நீண்ட நாட்களாக தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப்படம் எங்கள் வீட்டின் சுவரில் தொங்கிய இடம் கூட இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. பின் வந்த நாட்களில் நான்அந்தப்படத்தை இங்கு எடுத்து வந்து என்னுடைய அறையில் இன்று வரை பத்திரமாக வைத்துப் பாதுகாத்து வருகின்றேன். அந்தப்படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அந்த பரிசுத்த தேவ மனிதரின் அப்பழுக்கற்ற பரிசுத்த வாழ்க்கையும், தேவனுடைய சுவிசேஷம் எட்டாத இடங்களுக்குச் சென்று மிகுந்த கஷ்டங்களின் மத்தியில் தன் ஜீவனையே பணயம் வைத்து அவர் செய்த தேவ ஊழியங்களும் என்னை வெகுவாக கவர்ந்தன. நாமும் சுந்தரைப்போல பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும், அவரைப்போல இமயத்தின் கடையாந்திர இடங்களுக்கு எல்லாம் சென்று சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கஷ்டப்பட்டு சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்ற தணியாத ஆவல் என்னைப் பற்றிப் பிடித்தது.