உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் கடந்த கால நினைவுகள் (2)
“கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று அறிந்திருக்கிறேன்………….” (ஏசாயா 50 : 7)
“எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள், அந்தக் குற்றம் அவர்கள் மேல் சுமராதிருப்பதாக. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புற ஜாதியாரெல்லாம் கேட்கிறதற்காகவும் என்னைப் பலப்படுத்தினார்……. ” (2 தீமோ 4 : 16 – 17)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென். இந்த 2008 ஆம் ஆண்டிலும் நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி அக்டோபர் மாதம் முழுவதிலும் பனி படர்ந்த இமயமலைகளின் அநேக கடையாந்திரமான கிராமங்களுக்குச் சென்று தேவனுடைய ஜீவனுள்ள வசனங்களை சாத்தானாம் பிசாசின் பாவ அந்தகார இருளில் மூழ்கியிருக்கும் மக்களுக்குக் கொடுக்கும் கிருபையின் சிலாக்கியத்தை நாங்கள் பெற்றோம். அந்தக் கிருபையின் சிலாக்கியத்தை எங்களுக்குத் தர சித்தம் கொண்ட நம் அன்பின் ஆண்டவரின் பொற் பாதங்களை வாழ்த்திப் போற்றி முத்தமிடுகின்றோம்.
இப்படிப்பட்ட அருமையான ஊழியத்தை பாவிகளாகிய எங்களைக் கொண்டே செய்ய திரும்பத் திரும்ப ஆவல் கொள்ளும் அன்பின் ஆண்டவருக்கு நாங்கள் செலுத்தக் கூடிய ஈடு எதுவும் இல்லை! இப்படிப்பட்ட செலவினங்கள் நிறைந்த தேவ ஊழியங்களை எல்லாராலும் அத்தனை சுலபமாகச் செய்து விட முடியாது. அது மட்டுமல்ல, எந்த ஒரு சூழ்நிலையிலும் மனுஷீக பெலத்தாலும், முயற்சிகளாலும் இப்படிப்பட்ட தேவ ஊழியங்களை செய்வது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல.
இந்த தேவ ஊழியங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவ பாதுகாவலுக்காகவும், இந்த தேவ ஊழியத்தில் உள்ள பெருஞ் செலவினங்களுக்காகவும் உங்கள் சகோதரனாகிய நான் இந்த ஆண்டின் லெந்து கால நாட்கள் முழுமையிலும், அதற்கும் கூடுதலாகவும் கர்த்தருடைய பெலத்தால் உபவாச ஜெபத்தில் தரித்திருந்தேன். வழக்கம் போல பகல் முழுவதும் ஒரு துளி தண்ணீர் முதலாகக் குடியாமல் இருந்து மாலையில் உணவருந்தினேன். இந்த நீண்ட உபவாச ஜெபத்தை நான் மேற்கொள்ளுவதற்கு முன்பாகக் கர்த்தர் எனது உபவாச ஜெபத்தை ஆசீர்வதித்துத் தரும்படியாகவும், சாத்தானுடைய எந்த ஒரு இடையூறுகளும் உபவாச ஜெப நாட்களில் ஏற்படாதவாறு காத்துத் தரும்படியாகவும் நான் தேவ சமூகத்தில் அதிகமாகக் கெஞ்ச வேண்டியதாக இருந்தது. எந்த ஒரு காரியமும் ஆண்டவருடைய கிருபையின்படி நாம் செய்தால் அது நமக்கு ஆசீர்வாதமாக அமையும். இந்த வரிகளை தேவ சமூகத்தில் என்னைத் தாழ்த்தி கர்த்தருக்கு மகிமையாக நான் எழுதுகின்றேன். எந்த ஒரு தேவ ஊழியனானாலும் சரி அவன் தனது தேவ ஊழியத்தை மெய்யான ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும், உபவாசத்தோடும், தன்னை முழுமையாக மறைத்து, கர்த்தருடைய மகிமைக்காகச் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக அந்த ஊழியம் கர்த்தரால் ஆசீர்வாதம் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது.
அவன் தனது ஊழியத் தேவைகளுக்காக எந்த ஒரு மண்ணான மனுஷனையும் எதிர் நோக்க வேண்டிய அவசியமே கிடையாது. தனது தேவைகளை அவன் தனது பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தி எழுதி தனது வங்கிகளின் பெயர்களையும், தனது வங்கிகளின் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு மக்கள் தனது ஊழியங்களுக்காக உதவ வேண்டும் என்று அவர்களைக் கெஞ்ச வேண்டிய தேவையே எழும்பாது. தனது ஊழியத்திற்குக் கொடுத்ததால் மக்கள் பெற்றுக்கொண்ட பூலோக ஆசீர்வாதங்கள் என்ன என்பதைக் கோடிட்டுக் காண்பித்து மற்றவர்களும் தனது ஊழியத்திற்குக் கொடுத்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள அப்பாவி கிறிஸ்தவ மக்களை தந்திரமாக அறைகூவி அழைக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்படாது. காரணம், ஆத்துமாக்கள் கர்த்தருடையவர்கள், ஊழியம் கர்த்தருடையது. தேவன் தம்முடைய ஊழியத்தைக் கைவிடாமல் காத்து நடத்துவார். ஆம், அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. 10024 அநாதைக் குழந்தைகளை வைத்துப் பாதுகாத்து அவர்களைப் போஷித்து எந்த ஒரு தாழ்ச்சியும் இல்லாமல் பல்லாண்டு காலம் அவர்களை வழிநடத்திய மாபெரும் தேவ பக்தன் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் தனது தேவைகளை தன் ஆண்டவர் ஒருவருக்கே தெரிவித்து பரத்திலிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டாரேயல்லாமல் மண்ணான எந்த ஒரு மனிதனுக்கும் தனது தேவைகளை எந்த ஒரு நிலையிலும் கூறவே இல்லை அல்லவா? அந்த ஜியார்ஜ் முல்லரின் தேவனே நமது தேவன். அவர் இன்றும் ஜீவிக்கின்றார். அவர் மாறாத கர்த்தராக இருக்கின்றார் (மல்கியா 3 : 6) ஆம், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (எபிரேயர் 13 : 8) அல்லேலூயா.
இருளிலிருந்து வெளிச்சத்தை உண்டாக்கிய நம் அன்பின் கர்த்தர்
இந்த தடவை வாகன தேவ ஊழியத்தை மேற்கொள்ள எனது சரீர சுகம் கொஞ்சமும் திருப்தியாக இல்லவே இல்லை. சரீரத்தில் நான் மிகவும் பெலவீனத்தை உணர்ந்தேன். எனது பெலவீனத்தின் காரணமாக ரஸ்தாவில் நான் நடந்தால் ஒரு பக்கமாக நான் காற்றினால் தள்ளப்பட்டுச் செல்லுவதைப் போன்ற நிலை எனக்கு ஏற்பட்டது. அதை முன்னிட்டு வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் ரஸ்தாவில் நான் நடந்து செல்லுவதைக் குறித்து மிகவும் விழிப்பாகவிருந்தேன். தூரத்தில் வாகனம் வருவதைக் கண்டாலும் அது கடந்து செல்லும் வரை மிகவும் பொறுமையோடு ரஸ்தாவிலிருந்து கணிசமான தூரத்தில் நான் ஒதுங்கி நின்று கொண்டேன்.
இந்த விதமான சூழ்நிலைகளின் மத்தியில் சுமார் ஒன்றரை மாத காலம் நீண்ட பிரயாணங்கள், வயிற்றுக்கு முற்றும் ஒத்துக் கொள்ளாத ஆகார வகைகள், வசதியற்ற தங்கும் இடங்கள், இராக் கால இளைப்பாறுதல்கள் போன்றவற்றை நான் நினைத்தபோது உண்மையில் மனுஷீகப்பிரகாரமாக கலக்கமாகவே இருந்தது. எனினும், எனது உபவாச ஜெபங்கள் கர்த்தருக்குள் ஆசீர்வாதமாக முடிந்ததும் என் உள்ளத்தில் ஒரு பெரிய தேவ சமாதானத்தை நான் உணர்ந்தேன். எப்படியும் இந்த ஆண்டிலும் கர்த்தர் தம்முடைய ஊழியத்தை கட்டாயம் பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நிச்சயமான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
இந்த தடவை நான் ஊழியத்திற்கு வடக்கே செல்லுவதற்கு எந்த ஒரு நிலையிலும் முடியாவண்ணம் எனக்கு ஏற்பட்ட மற்றொரு பெரிய தடை யாதெனில் எனது இளைய மகன் சார்லஸ் ஃபின்னி அவர்கள் எதிர்பாராதவிதமாக மூல வியாதியால் தாக்குண்டு இரண்டு தடவைகள் அறுவை சிகிட்சை செய்யப்பட்டு மருத்துவ மனையில் படுக்கையில் இருந்ததுதான். அவர்களைக் கவனிக்க அவர்கள் அருகில் யாரும் இல்லாத ஒரு சூழ்நிலை. எந்த ஒரு நிலையிலும் நான் அவர்களின் அருகில் இருக்க வேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. நான் வடக்கே பிரயாணப்படுவதற்கு முன்பாக அன்பின் ஆண்டவர் பூரணமாக சுகம் அளித்துவிடுவார் என்று நான் எவ்வளவோ ஆவலாக எதிர்பார்த்தும் கடைசி வரை சுகம் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அன்பின் ஆண்டவரை மகனுக்கு பாதுகாவலராக வைத்துவிட்டு தேவ ஊழியத்தை முதன்மையான ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு நான் வடக்கே பயணப்பட்டேன்.
நான் வடக்கே ஊழியத்தின் பாதையில் இருந்த நாட்களிலும் மகன் தனது பெலவீனத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தகவல் எனக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது. அது எனது உள்ளத்தை மிகவும் பாரப்படுத்துவதாக இருந்தது. “ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்கீதம் 50 : 15) என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி ஒத்தாசை வரும் கன்மலையை நோக்கித்தான் வடக்கே இருந்து கொண்டே என் முகத்தை இராக்காலங்களில் ஜெபத்தில் ஏறெடுத்தேன். சில தினங்கள் அன்னம், தண்ணீர் இல்லாத முழுமையான உபவாச ஜெபங்களையும் தேவ பெலத்தால் நான் மேற்கொண்டேன். இந்த நாட்கள் ஒன்றில் மகனுக்கு சுகம் கிடைத்துவிட்டது என்ற வார்த்தை எனது சொப்பனத்தில் எனக்கு கிடைத்தது. அதே சமயத்தில் மகனும் தனது சொப்பனத்தில் தனக்கு சுகம் கிடைத்து தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்லுவதாக தான் கண்டதாக என்னிடம் கூறினார்கள். தேவன், தாம் கிருபையாக எங்கள் இருவருக்கும் வெளிப்படுத்தினபடி மகன் சுகம்பெற்று தனது ஆசிரிய பணிக்குத் திரும்பினார்கள். கர்த்தர் அவர்களுக்கு வெளிப்படுத்தினபடி தனது மோட்டார் சைக்கிளையும் பின் நாட்களில் ஓட்டிக் கொண்டு சென்றார்கள். கர்த்தருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக. அவர் கர்த்தர், அவர் நல்லவர்.
வழக்கம்போல இந்த தடவையும் முற்றும் வெறுமையிலிருந்தே தேவன் நமது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து தம்முடைய நாமத்தை அற்புதமாக மகிமைப்படுத்தினார். சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் எனக்கு ஒரு தொலை பேசி செய்தி வந்தது. அதில் ஒரு பரிசுத்த தேவ பிள்ளை தனக்கென்று ஒரு நிலத்தை சென்னையில் பல ஆண்டு காலங்களுக்கு முன்பாக வாங்கிப்போட்டதாகவும், அதை விற்றபொழுது தான் எதிர்பாராத ஒரு நல்ல தொகை கிடைத்தாகவும் அதின் தசமபாக காணிக்கையில் சில உண்மையான தேவ ஊழியங்களுக்கு பணங்களைக் கொடுத்தாகவும் அதில் தேவ எக்காள ஊழியங்களுக்கும் ஒரு பகுதியை அனுப்புவதாகவும் கூறினார்கள். அந்த தேவப்பிள்ளை அனுப்பிய காணிக்கையிலிருந்து படிப்படியாக ஒத்தாசையின் பர்வதத்திலிருந்து ஆதரவுகள் வரத் தொடங்கின. காணிக்கைகளை அனுப்ப விரும்புகிறவர்கள் பணமாக அதை என் பெயருக்கு அனுப்பாமல் நம்முடைய ஊழியங்களுக்குத் தேவையான இந்தி மொழி சுவிசேஷ பிரசுரங்களை அச்சிட்டுத் தரும் அச்சகத்தாருடைய பெயரிலும், நமக்கு இந்தி மொழி சுவிசேஷ பங்குகளைக் கொடுக்கும் அலகாபாத்திலுள்ள இந்திய வேதாகம சங்கத்தின் பெயரிலும், தங்கள் வாகனங்களை ஒரு மாத காலத்திற்கு நமக்கு வாடகைக்குவிடும் வாகனங்களின் உரிமையாளரின் பெயரிலும் டிராப்ட் எடுத்து அனுப்பித் தரும்படியாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அப்படி வங்கிக்குச் சென்று டிராப்ட் எடுக்க முடியாத தேவ மக்களுக்கு அவர்களின் காணிக்கை எப்படியாக செலவிடப்பட்டது என்பதை காண்பிக்க நானே இங்கு டிராப்ட் எடுத்து அதின் நகல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
கர்த்தருடைய மட்டற்ற அன்பின் கிருபையால் நான் வடக்கே தேவ ஊழியத்தின் பாதையில் பிரயாணப்படுவதற்கு முன்பாக எனது சரீர சுகத்தில் ஒரு அற்புதமான விடுதலையை நான் உணர்ந்தேன். எனது பெலவீனங்கள் மாறி கர்த்தருக்குள் புது பெலனை நான் பெற்றுக் கொண்டேன். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.
முன்பு எந்த ஒரு தடவையும் இல்லாதவிதத்தில் இந்த தடவை நாங்கள் இந்திய வேதாகம சங்கம், அலகாபாத்திலிருந்து 80 ஹிந்தி மொழி வேதாகமங்களை குறிப்பிட்ட ஆர்வமுள்ள மக்களுக்குக் கொடுப்பதற்காக வாங்கிச் சென்றோம். இந்த வேதாகமங்களை 2 தேவனுடைய விதவை மக்களின் காணிக்கையிலிருந்து வாங்கினோம். ஒரு விதவை, ஒரு பாஸ்டர் அவர்களின் இளம் மனைவி, அவர்களுக்கு 2 அருமைக் கண்மணி பெண் குழந்தைகள் உண்டு. மற்றொரு பரிசுத்த விதவைத் தாயார் காலஞ்சென்ற எனது அருமை மனைவி கிரேஸ் அவர்களின் வகுப்பு தோழி. அவர்கள் இருவரும் ஒன்றாக பாளையங்கோட்டையிலுள்ள பிஷப் சர்ஜன்ட் ஆசிரியை பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர்களாவார்கள்.
இந்த தடவை நாங்கள் 200 குமானி மொழி கிறிஸ்தவ சி.டி.க்களையும்(ஒலி நாடாக்களையும்) தேவ ஊழியத்தில் கொடுப்பதற்காக இந்திய வேதாகம சங்கத்தினரிடமிருந்து வாங்கிச் சென்றோம். அதற்குக் காணிக்கை கொடுத்த தேவ பிள்ளைக்கு விபரம் எழுதி அதில் ஒரு சி.டி ஐயும் அவர்களுக்கு அனுப்பி அதை அவர்கள் போட்டுக் கேட்கும்படியாக எழுதினோம். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.
ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷ பிரசுரங்கள்
கடந்த தடவைகளைப் போல இந்த தடவையும் எங்களுடைய வாகன சுவிசேஷ ஊழியத்திற்குத் தேவையான ஆண்டவருடைய பிரசுரங்களை முன்கூட்டியே நன்கு ஆயத்தம் செய்து கொண்டோம். பரிசுத்த லூக்கா என்பவரின் சுவிசேஷம் ஆரம்பம் முதல் முடிவு வரை படிப்போருக்கு தேனிட்ட பணியாரம் போல வெகு அருமையாக இருப்பதால் அதையே இந்த தடவையும் நாங்கள் எங்களுடன் எடுத்துச் சென்றோம். இந்தி மொழியில் “சாந்தி மார்க்கம்” என்ற தலைப்பில் நமது இந்திய வேதாகம சங்கம் இதை அச்சிடுகின்றார்கள். அவர்களிடமிருந்து 15000 சாந்தி மார்க்கம் சுவிசேஷ பங்குகளை நமது தேவ ஊழிய சகோதரன் பாஸ்டர் சாமுவேல் அவர்களின் முகவரியை அதின் உள் பக்க முகப்பில் அச்சிட்டுப் பெற்றுக் கொண்டோம். பெங்களூரில் அவைகளை நமக்கென்று தனிப்பட்ட விதத்தில் ஒரு அச்சகத்தாரிடம் வேதாகமச் சங்கத்தினர் கொடுத்து அச்சிட்டுத் தந்தார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அலகாபாத் பட்டணத்தில் கூடும் கும்ப மேளா என்ற இந்து மக்களின் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்து மக்களுக்குக் கொடுக்க வசதியாக இந்திய வேதாகம சங்கத்தினரால் அழகான படங்கள், அருமையான விளக்கங்களுடன் 158 பக்கங்களில் அச்சிட்ட யோவான் சுவிசேஷத்தை “சத்திய மார்க்கம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். கூடுதலான விலைக்கிரயம் கொண்ட இந்தப் புத்தகங்களை நமது தேவ ஊழியத்திற்காக வெறும் 5 ரூபாய் வீதம் 2000 பிரதிகள் நமக்குத் தந்தார்கள். பெங்களூரிலிருந்து உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள பித்தோர்கார்ட் என்ற நீண்ட தொலை தூரமான இடத்திற்கும், அலகாபாத்திலிருந்து மேற்கண்ட இடத்திற்கும் முற்றும் இலவசமாக போக்குவரத்துச் செலவு எதுவும் நம்மிடம் வசூல் செய்யாமல் அனுப்பிக் கொடுத்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. நாம் நம் அன்பின் ஆண்டவருக்காகச் செய்யும் வாகன தேவ ஊழியம் இந்திய வேதாகம சங்கத்தினருக்கு மிகவும் விருப்பமான தேவ ஊழியமாகும். கடந்த முறை அவர்களில் சிலர் நமது ஊழியத்தில் வந்து கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்கள். நாங்களும் அவர்களது வரவை ஆவலோடு எதிர் நோக்கினோம். ஆனால், கடைசியில் அது அவர்களுக்கு வசதிப்படாமற் போயிற்று.
ஒட்டன்சத்திரத்தில் கர்த்தருடைய ஊழியத்தை விசாலமாகச் செய்து கொண்டிருக்கும் கர்த்தருடைய தாசனும், வேத விற்பன்னருமான டாக்டர் செல்வின் ஐயா அவர்கள் எழுதிய “இயேசு கிறிஸ்து” என்ற சிறு புத்தகப் பிரதியை இந்தி மொழியில் மொழி பெயர்த்து அதற்கு “சாந்தி தாத்தா” (சமாதான காரணர்) என்று பெயர் சூட்டி 11600 பிரதிகளும், “நீங்கள் அறியவேண்டுமென்று தேவன் விரும்பும் நான்கு காரியங்கள்” என்ற இந்தி மொழி கைப்பிரதி 11600 பிரதிகளும், “உங்கள் வாழ்வின் உற்ற நண்பன்” என்ற இந்தி மொழி கைப்பிரதி11600 பிரதிகளும் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் முகவரி போட்டு நாங்கள் அச்சிட்டு எடுத்துக் கொண்டோம். வழக்கம்போல இந்தக் கைப்பிரதிகளை சிவகாசியிலுள்ள ஓரேப் அச்சுக்கூடத்தினர் நமக்கு அழகான காகிதத்தில் சொற்பமான பணத்தில், நாம் கேட்டுக் கொண்டதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பிரசுரங்களை ஏற்ற சமயத்தில் அச்சிட்டு நாங்கள் அவைகளைக் கஷ்டமின்றித் துரிதமாக வகைப்படுத்திக் கொள்ள வசதியாக மூன்று பிரசுரங்களையும் ஒவ்வொரு பார்சலிலும் வைத்து வடக்கே அனுப்பிக் கொடுத்தார்கள். மற்ற தடவைகளைவிட இந்த தடவை நமது கைப்பிரதிகளை இன்னும் அழகான விதத்தில் அச்சிட்டிருந்தார்கள். மக்களுக்கு அவர்கள் அச்சிட்டுக் கொடுக்கும் பிரதிகளைக் கொடுக்கும் போது அதின் அழகையும், தரத்தையும் கண்டு அதைக் குறித்து சிலாகித்துப் பேசிய மக்கள் பலர் உண்டு. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஓரேப் அச்சுக்கூடத்தின் உரிமையாளரும், பரிசுத்த தேவ பிள்ளையுமான தர்மராஜ் ஐயா அவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்குள் நாங்கள் அவர்களுக்குப் பெரிதும் நன்றி கடன்பட்டவர்களாக இருக்கின்றோம்.
வழக்கம் போல இந்த தடவையும் நாங்கள் டில்லியிலுள்ள கிறிஸ்தவ நற்செய்தி பணி இயக்கமான Operation Mobilization என்ற உலகளாவிய ஸ்தாபனத்தாரிடமிருந்து போதுமான அளவிற்கு ஹிந்தி மொழி கிறிஸ்தவ பிரசுரங்களை சொற்பமான விலைக் கிரயத்திற்குப் பெற்றுக் கொண்டோம். நமது தேவ ஊழியரான பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுக்கு மேற்கண்ட ஸ்தாபனத்துடன் நெருங்கிய நட்பு இருப்பதால் இந்த அன்பு நமக்குக் கிடைத்தது. நம்மைப் போல வேறு யாருக்கும் அவர்கள் இப்படி தங்கள் பிரசுரங்களை விலைக்குக் கொடுப்பதில்லையாம். காரணம், அவர்களே தங்களுடைய பிரசுரங்களை தங்கள் ஊழியத்தின் தேவையில் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள். “கெட்ட குமாரன்” மற்றும் “சுவிசேஷ நற்செய்தி” என்ற இரு தலைப்பிலுள்ள 200 அழகான படச் சுருள் காசட்டுகளையும் அவர்கள் நமக்கு குறைந்த விலையில் கொடுத்தார்கள். பள்ளி ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தங்கள் வீடுகளில் டி.வி. வைத்திருப்போருக்கு இந்தக் கிறிஸ்தவ படச் சுருள்கள் மிகவும் பயன் உள்ளவைகளாக இருந்தன. கர்த்தருக்கு துதி உண்டாவதாக.
நமது சகோதரன் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்களே டில்லிக்குச் சென்று மேற்கண்ட O.M. ஸ்தாபனத்தினரின் அலுவலகத்தில் ஒரு நாள் இராத் தங்கி நம்முடைய ஊழியத்திற்குத் தேவையான பிரசுரங்களைப் பெற்று லாரி மூலமாக அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து திரும்பி வரும் பாதையில் மொராதாபாத் என்ற வட இந்திய பட்டணம் சென்று அங்குள்ள ஒரு கர்த்தருடைய பிள்ளை நீலாம்பர் டாட் என்பவர்களிடமிருந்து 300 கிதியோன் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளை முற்றும் இலவசமாகப் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள்.
இவ்விதமாக ஒரு மாத கால ஊழியத்திற்குத் தேவையான கிறிஸ்தவ பிரசுரங்கள் யாவையும் நாங்கள் தேவ கிருபையால் சவதரித்துக் கொண்டோம். அவைகள் அனைத்தும் அந்தந்த நேரத்தில் மிகவும் பாதுகாப்பாக பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் கரங்களுக்கு வந்து சேர்ந்தது. எல்லாம் தேவ கிருபையே.
இந்த தடவை நாங்கள் எங்கள் வாகன தேவ ஊழியத்தில் மக்களுக்குக் கொடுத்த சுவிசேஷப் பிரசுரங்கள் ஒவ்வொன்றின் படங்களையும் நீங்கள் காணலாம். இவை நீங்கலாக வேறு ஓரிரு பிரதிகளும் உண்டு. அவைகளை நான் பத்திரப்படுத்தி வைக்கத் தவறிவிட்டதால் அவைகளின் படங்கள் இங்கு இடம் பெறவில்லை.
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் உத்தராஞ்சல் மாநிலத்திலிருந்து பாஸ்டர் சகோதரன் எம்.சின்னப்பன் ஜேம்ஸ் அவர்களும், பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், டனக்பூர் பட்டணத்திலிருந்து விஜயகுமார் சிங் அவர்களும், ருத்ரப்பூர் என்ற இடத்திலிருந்து சகோதரன் பாக்கேலால் அவர்களும், சகோதரன் டி.ற்றி.நார்ட்டன் அவர்களும், என். சாமுவேல் அவர்களும், ஹல்த்வானி பட்டணத்திலிருந்து சகோதரன் நரேந்தர் சிங் அவர்களும், நாம் வாடகைக்கு அமர்த்திய பித்தோர்கார்ட் பட்டண வாகன ஓட்டுனர்கள் மனேஜ் அவர்களும், நரேஷ் அவர்களும் எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் விரும்பும் இடங்களுக்குத் தங்கள் வாகனங்களை கொண்டு வந்து விடுவதுடன் அவர்கள் காரியம் முற்றுப் பெற்றதாக எண்ணாமல் அவர்களும் எங்களோடு ஒன்றாக நின்று தோளோடு தோள் கொடுத்து கர்த்தருடைய பிரசுரங்களை மக்களுக்கு ஆர்வத்துடன் கொடுத்தனர். சுவிசேஷ கைப்பிரதிகளைத் தங்கள் தோளில் சுமந்து கொண்டு வந்தனர். எங்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தி எங்களோடு ஒன்றாக இரவில் துயில் கொண்டு, நாங்கள் கர்த்தரை ஆராதிக்கும் வேளையில் அவர்களும் எங்களோடு முழங்காலூன்றி ஆண்டவரை கரந்தட்டி ஆராதித்து அவரை மகிமைப்படுத்தினார்கள். தங்களை முழுமையாக ஊழியத்தின் பாதையில் இணைத்துக் கொண்டார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. இந்த தடவை ஊழியத்தில் கலந்து கொண்ட தேவ பிள்ளைகளின் படங்களையும், நமது வாடகை வாகனங்களையும், வாகனங்களின் டிரைவர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் அவர்களின் படங்களையும் நீங்கள் செய்தியில் காணலாம்.
வடக்கு நோக்கிய எங்கள் பிரயாணப் பாதை
ஆண்டு தோறும் சகோதரன் நார்ட்டன் அவர்களும் பாவியாகிய நானும் மேட்டுப்பாளையம் என்ற நீலகிரி மலைகளின் அடிவாரப் பட்டணமாகிய மேட்டுப்பாளையம் என்ற இடத்திலிருந்து எங்கள் ரயில் பிரயாணத்தை நீலகிரி துரித ரயிலில் ஆரம்பிக்கையில் எனது பிள்ளைகள் இருவரின் குடும்பங்களும் ரயில் நிலையம் வந்திருந்து ரயில் புறப்படும் வரை எங்கள் அருகில் நின்று அனைவரும் மிகவும் கலகலப்புடன் கரம் அசைத்து எங்களை வழி அனுப்பிவிட்டுச் செல்லுவார்கள். ஆனால் இந்த தடவை இளைய மகன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் மூத்த மகன் மட்டும் தனித்து வந்திருந்து எங்களை வழி அனுப்பி வைத்துவிட்டுச் சென்றார்கள். அது எங்களுக்கு அதிக கவலையாக இருந்தது. எனினும், ஆண்டவருடைய வழிகள் எப்பொழுதும் ஞானமும், செவ்வையுமாக இருந்து முடிவில் ஆசீர்வாதமாகவிருக்குமாதலால் கர்த்தருக்குள் எங்களை நன்கு திடப்படுத்திக் கொண்டோம்.
நாங்கள் சென்னை சென்று இறங்குகையில் மழைத் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்தின் அருகில் இருந்த லாட்ஜ்க்குச் செல்லுகையில் முந்தின நாள் இரவு பெய்திருந்த மழையின் காரணமாக இரயில் நிலையத்தை ஒட்டியிருந்த ரஸ்தா முழுவதும் மழைத் தண்ணீரால் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. மழைத் தண்ணீர் வழியாக நாங்கள் கஷ்டத்துடன் சென்று குளித்து, எங்கள் காலை ஆகாரங்களை முடித்துக் கொண்டு நண்பகல் வாக்கில் புறப்படும் டேராடூன் துரித ரயிலில் நாங்கள் பயணமானோம். நாங்கள் அந்த ரயிலில் பயணப்படுவதை அறிந்த 2 அருமையான தேவ பிள்ளைகள் கஷ்டப்பட்டு இரயில் நிலையம் வந்திருந்து வழிப்பயணத்தில் நாங்கள் சாப்பிட தின்பண்டங்கள் கொடுத்து எங்களை வழி அனுப்பி வைத்து விட்டுச் சென்றனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
எங்களை ஏற்றிச் சென்ற டேராடூன் துரித இரயில் இரண்டு பகல்களும், மூன்று இரவுகளும் ஓடி போதுமான கால தாமதத்துடன் உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள டேராடூன் பட்டணத்தை வந்தடைந்தது. சென்னையிலிருந்து டில்லி வரை அந்த வண்டி சரியான நேரத்தில் சென்று கொண்டிருந்த போதினும், டில்லியிலிருந்து டேராடூன் சென்ற அதின் இராக்கால பிரயாணத்தில் கணிசமான கால தாமதம் ஆகிவிட்டது. உத்தராஞ்சல் பட்டணத்தின் தலை நகர் டேராடூன் பட்டணமாகும். டேராடூன் பட்டணத்திற்கு முன்பதாக இந்து மக்களின் புண்ணிய ஸ்தலமான ஹரித்துவாரம் பட்டணம் வருகின்றது. கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள இந்த பட்டணத்தில் சிறிதும், பெரிதுமான திரளான இந்துக் கோயில்கள் உள்ளன. இரயிலில் இருந்தவாறே நாம் அவைகளைக் காணலாம். நமது தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான இந்து யாத்ரீகர்கள் நாங்கள் வந்த இரயிலில் பிரயாணம் பண்ணி வந்து ஹரித்துவாரம் இரயில் நிலையத்தில் இறங்கி கங்கையில் நீராட பட்டணத்துக்குள் செல்லுவதை நாங்கள் கவனித்தோம். அந்தக் காட்சி எங்கள் உள்ளத்தை அதிகமாக அசைப்பதாக இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் சாட்சியின் ஜீவியம் இல்லாத காரணத்தால் இந்து மக்கள் இந்தப் பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆம், அதையேதான் இந்த தேவ எக்காள இதழின் தலையங்கச் செய்தியில் நான் குறிப்பிட்டேன். சென்னையிலிருந்து ஹரித்துவாரம் வந்து கொண்டிருந்த ஒரு இந்து பக்தரின் அனுபவ சாட்சி அது.
அதிகாலை வந்து சேர வேண்டிய எங்கள் இரயில் அதிகமான கால தாமதத்துடன் டேராடூன் பட்டணம் வந்து சேர்ந்தது. நாங்கள் ரயில் நிலையத்திலுள்ள ஓய்வு அறையில் பகல் முழுவதும் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு இரவில் புறப்படும் “காதகோடம்” விரைவு இரயிலில் பிரயாணப்பட்டு அடுத்த நாள் காலை சரியான நேரத்தில் காதகோடம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். திரும்பவுமாக ஒரு தடவை எங்கள் பூவுலக வாழ் நாட் காலத்தில் ஒரு சிறிய குழுவாக நாங்கள் ஒன்று கூடி தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை உலகின் மாபெரும் மலையான இமயமலைகளின் சிறிதும் பெரிதுமான கிராமங்களிலும், பட்டணங்களிலும் அறிவிக்கும் பாக்கியத்தையும், சிலாக்கியத்தையும் தந்த அன்பின் ஆண்டவருக்கு நாங்கள் எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தோம்.
காதகோடம் இரயில் நிலையம் வந்ததுமே நாம் முழுமையாக நாற்புறமும் வானளாவ ஓங்கி நிற்கும் அழகான இமயமலைகளின் அரவணைப்புக்குள் வந்து விடுகின்றோம். அங்கிருந்துதான் இந்து யாத்ரீகர்கள் தங்கள் பாவங்களைப் போக்கி முக்தியடைவதற்காக பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி, கைலயங்கிரி, மான்சரோவர் தீர்த்தம் போன்ற இமயமலைகளின் பனி மூடிய சிகரங்களில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களை நாடிச் செல்லுகின்றனர். இந்த இடத்திலிருந்து தொன்று தொட்டு கால்நடையாகச் சென்ற மக்கள் பலரும் மீண்டும் இங்கு வந்து சேரவே இல்லை. அப்படியே சென்ற இடங்களில் மாண்டு மடிந்து விட்டனர். ஆனால், இந்த நாட்களில் நவீன போக்குவரத்து சாதனங்களின் காரணமாக அந்த இடங்களை துரிதமாகச் சென்றடைந்து பார்த்து மீண்டும் திரும்பிவிடுகின்றனர். அந்த காதகோடம் என்ற இடத்தை நான் பார்க்கும் சமயங்களில் எல்லாம் தேவனுடைய மகிமையின் சுவிசேஷம் மக்களுக்கு எத்தனை அத்தியந்த தேவை என்பதைக் கண்ணீரோடு உணருகின்றேன். அந்த மக்களுடைய கண்களைக் கர்த்தர் கிருபையாகத் திறக்கும்படியாகக் கெஞ்சுகின்றேன்.
சகோதரன் நார்ட்டன் அவர்களும், நானும் காதகோடம் இரயில் நிலையம் சென்றடையவும் அங்குள்ள தேவ பிள்ளைகள் எங்களை மிகுந்த மகிழ்ச்சியோடே சந்தித்தனர். பாஸ்டர் என்.சாமுவேல் சகோதரனும், டிரைவர் சகோதரர்கள் மனோஜ், நரேஷ் ஆகியோர் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து முந்திய நாள் அதிகாலை முதல் மாலை வரை 225 கி.மீ. தொலைவு பிரயாணம் செய்து காதகோடம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் இராத்தங்கி எங்கள் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்படியே சகோதரன் விஜயசிங், பாக்கேலால், நரேந்தர் சிங் மூவரும் அதே ஓய்வு இல்லத்தில் முந்தின இரவு இராத் தங்கி அடுத்த நாள் காலை எங்களைச் சந்திக்க இரயில் நிலையம் வந்திருந்தனர். பாஸ்டர் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் காதகோடத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள ஹல்த்தவானி என்ற பட்டணத்தில் தேவ ஊழியம் செய்து கொண்டிருப்பதால் அவர்களும் சரியான நேரத்தில் வந்திருந்தார்கள். நாங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் கண்டு ஆனந்த சந்தோசம் அடைந்தோம். ஒரு வருட கால இடை வெளிக்குப் பின்னர் நாங்கள் எல்லாரும் திரும்பவும் ஒன்றாகக் கூடவும், அருமை இரட்சகரின் ஜீவனுள்ள நாமத்தை அவரை அறியாத இடங்களில் அறிவிக்கவும் கிடைத்த அற்புத வாய்ப்புக்காக அவருக்குத் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தோம். அடுத்து வரும் ஒரு முழுமையான மாதம் முழுவதும் நாங்கள் எல்லாரும் ஒன்றாகப் புசித்து, ஒன்றாக ஓரிடத்தில் தங்கி இளைப்பாறி ஒன்றாக அருமை இரட்சகருக்கு ஊழியம் செய்யப்போகும் பாக்கிய நாட்களை எண்ணி ஆண்டவருக்குள் அளவற்ற ஆனந்தம் அடைந்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாங்கள் அனைவரும் உடனடியாக காதகோடம் இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஓய்வு விடுதிக்குச் சென்று, கர்த்தர் எங்கள் எல்லாருடைய பிரயாணங்களையும் வாய்க்கச் செய்து திரும்பவும் எங்களை ஒன்று கூடி வரப்பண்ணிய அவருடைய மேலான தயவுக்காக அவருக்கு துதி ஏறெடுத்து வரப்போகும் தேவ ஊழியங்களையும் ஆண்டவர் பாதங்களில் ஒப்புவித்து ஜெபித்துவிட்டு எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் எங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
ஆம், அங்கிருந்து 225 கி.மீ. தொலைவிலுள்ள பித்தோர்ட்கார்ட் பட்டணத்தை நோக்கி பிரயாணப்பட்டோம். எங்கள் இரண்டு வாகனங்களும் இமயமலைகளின் அடிவாரத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மலை ஏறி உச்சிப்பகுதியை வந்தடைந்து சுமார் 20 கி.மீ. ஓட்டத்திற்குப் பின்னர் பீம்தால் என்ற அழகிய இடத்தை வந்தடைந்தது. இங்கு ஒரு அழகான ஏரி உள்ளது. விசாலமான இந்த ஏரியில் மக்கள் உல்லாச படகு சவாரி செய்கின்றனர். இந்த இடத்தை நாங்கள் எங்கள் ஊழியத்தின் பாதையில் பல தடவைகளும் கடந்து சென்றிருக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் இந்த இடத்தின் அழகைக் கண்டு கர்த்தருக்குள் பரவசம் அடைந்திருக்கின்றோம். உத்தராஞ்சல் மாநிலத்தில் மிகவும் பெரிய ஏரி இந்த பீம்தால் ஏரி என்று சொல்லப்படுகின்றது. இங்கிருந்து நாங்கள் பிரயாணப்பட்டு கேர்னா என்ற இடத்தை வந்தடைந்தோம். கடந்த ஆண்டுகளில் நாங்கள் இங்கு வந்து இந்த இடத்திலுள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் சில நாட்கள் தங்கி இந்த இடத்திலும் இதைச் சுற்றி பல இடங்களுக்கும் சென்று கர்த்தருடைய கிருபையால் ஒரு அருமையான தேவ ஊழியம் செய்த விபரங்களை கடந்த கால தேவ எக்காள இதழ்களில் நீங்கள் வாசித்திருப்பீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இந்த இடத்தில் நாங்கள் எங்கள் நண்பகல் ஆகாரத்தை அருந்திவிட்டு அல்மோரா பட்டணம் வந்து சேர்ந்தோம். அல்மோரா பட்டணத்தை நெருங்க நெருங்க கடந்த ஆண்டில் எங்கள் சுவிசேஷ பிரதிகளை ஏற்றி வந்த வாகனமும், அரசாங்க பேருந்தும் மோதினதும், அந்த இடத்தில் கர்த்தர் எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்து நின்று செய்த அன்பின் காரியமும் எங்கள் நினைவுக்கு வந்தது. தேவ எக்காளத்தை மிகவும் கருத்தோடு வாசித்து வருகின்ற தேவப்பிள்ளைகளாகிய உங்களுக்கும் அந்த விஷயம் தெரியும் என்று நினைக்கின்றேன். அவர் பாராட்டின தயவை திரும்பவும் நினைத்துப் பார்த்தவர்களாகச் சென்று கொண்டிருந்தோம். அங்கிருந்து தனியா என்ற இடம் வந்தோம். அந்த இடத்திலும் நாங்கள் கடந்த ஆண்டுகளில் தங்கியிருந்து அங்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நல்ல தேவ ஊழியம் செய்திருக்கின்றோம். அந்த இடத்தில் நாங்கள் டீ குடித்துவிட்டு தொடர்ந்து பயணப்பட்டு மாலைப் பொழுது பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்தோம். மலை உச்சியில் அமைந்துள்ள அந்த அழகிய பட்டணம்தான் நமது தேவ ஊழியர் சகோதரன் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் ஊழியம் செய்து கொண்டிருக்கும் இடமாகும். தமிழ் நாட்டில் உள்ள ஓசூரில் மிகவும் வைராக்கியமான இந்துக் குடும்பத்தில் பிறந்து தனது வாலிப நாட்களில் இரட்சகர் இயேசுவையும், அவரது ஊழியர்களையும் கேலி பரிகாசம் செய்து நிந்தித்த அவர்களை தேவன் கிருபையாக சந்தித்து தமது பிள்ளையாக்கினார். அதின் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள உதயபூர் பட்டணத்திலுள்ள பிலதெல்பியா வேதாகமக் கல்லூரியில் வேதாகம கல்வி கற்று அந்த பாலைவன மாநிலத்தில் சுவிசேஷம் அறிவித்ததின் காரணமாக நன்கு அடி, உதைகள் எல்லாம் பட்டு, அதின் பின்னர் தனது இன ஜன பெந்துக்கள் யாவரையும் ஊரில் விட்டுவிட்டு இந்த மலை நாட்டில் வந்து கடந்த பல ஆண்டுகளாக நல்லதோர் தேவ ஊழியம் செய்து வருகின்றார்கள். இந்தி மொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்ற தேவப்பிள்ளை அவர்கள். அவர்களுடைய ஊழியங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.
அடுத்து வந்த 10 நாட்களுக்கு நாங்கள் அந்தப் பட்டணத்தில் இருந்து கொண்டே சுற்றியுள்ள இடங்களில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து வந்தோம். எங்களில் மொத்தம் 7 பேர்கள் தங்குவதற்கு பட்டணத்தில் ஒரு வசதியான லாட்ஜ் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்களும், டிரைவர் மனோஜ் அவர்களும் இராத் தங்க தங்கள் வீடுகளுக்கே சென்று விட்டார்கள். டிரைவர் நரேஷ் அவர்களின் சொந்த ஊரான படாலூ என்ற இடம் பட்டணத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால் அவர்கள் எங்களுடன் லாட்ஜிலேயே தங்கிக் கொண்டார்கள்.
கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்தில் இருந்த நாட்களில் எல்லாம் எங்களுக்கான ஆகாரத்தை பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களே நல்லவிதமாக கவனித்துக் கொண்டார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் இருந்த லாட்ஜ்க்கும் சகோதரனுடைய வீட்டிற்குமான தூரம் சுமார் 2 கி.மீ. இருந்ததால் ஒவ்வொரு தடவையும் எங்களுடைய ஆகாரத்திற்காக எங்களுடைய வாகனங்களையே பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.
எங்களுடைய தேவ ஊழியத்திற்காக தனது முகவரிக்கு வந்த அனைத்து சுவிசேஷப் பிரசுரங்களையும் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தாங்கள் வாரந்தோறும் கூடி ஆராதிக்கும் தங்களுடைய ஜெப வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் கூடி ஆராதித்த அந்த இடம் பித்தோர்கார்ட் பட்டணத்தின் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. நாங்கள் பித்தோர்கார்ட் சென்ற மறு நாளிலிருந்தே அடுத்து வந்த 2 நாட்களுக்கு அந்த ஜெப அறைக்குச் சென்று காலை முதல் மாலை வரை தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்குக் கொடுக்க வசதியாக ஒழுங்குபடுத்தினோம். இரண்டு முழுமையான நாட்களுக்கு அந்த வேலை எங்களுக்கு இருந்தது. தேவ ஊழியத்திற்காக வந்த ஏராளமான சுவிசேஷப் பிரசுர பார்சல்களையும், அவைகளை மக்களுக்குக் கொடுக்கும் விதத்தில் நாங்கள் பிரிக்கும் வேலையில் நாங்கள் முழு மூச்சாக ஈடுபட்டிருந்த காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள். அன்பின் ஆண்டவருடைய இருதயத்திற்கு உகந்த இந்த எளிய தேவ ஊழியத்தைச் செய்யும்படியாக உங்களைத் தியாகித்து எங்களை அனுப்பி வைத்த உங்களுக்கு எங்கள் நடபடிகள் யாவையும் ஒளிவு மறைவின்றி தெரிவித்து, கர்த்தரை மகிமைப்படுத்தும் விதத்தில் இந்தப் படங்களை வெளியிட்டிருக்கின்றோம். எல்லா துதி, கனம், மகிமை நமக்காக அடிக்கட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.