உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் கடந்த கால நினைவுகள் (4)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. கர்த்தருடைய கிருபையால் உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள குமான் பகுதிகளில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை முடித்துவிட்டு சவுக்குட்டியா என்ற இடத்திலிருந்து 35 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து கட்வால் மலைகளிலுள்ள கேர்சேண் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த கேர்சேண் என்ற இடம் மலை உச்சியில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. இந்த இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே கட்வால் மலைப்பகுதி ஆரம்பித்துவிடுகின்றது. உத்தராஞ்சல் மாநிலத்தின் குமான் மற்றும் கட்வால் பகுதிகள் இரண்டு தனித்தனி மாநிலங்களைப்போல செயல்படுகின்றன. கட்வால் பகுதிக்குள் வரும் வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. அங்கு வாகனங்களை ஓட்ட வேண்டுமானால் அதற்குரிய அரசாங்க வரி கட்டித்தான் ஓட்ட வேண்டும். நமது வாகனங்களுக்கும் நாம் ஏற்கெனவே அதற்குரிய வரிகளை செலுத்தி அனுமதி பெற்றிருந்தோம்.
கேர்சேண் என்ற அந்த இடம் மலை உச்சியில் இருப்பதால் குளிர் அதிகமாக இருந்தது. அந்த இடத்தில் தங்குவதற்கு நாங்கள் முதலில் அங்குள்ள அரசாங்க ஓய்வு விடுதியை அணுகினோம். நாங்கள் எல்லாரும் அந்த இடத்தில் ஒரு நாள் தங்குவதற்கே சில ஆயிரங்களைக் கேட்டார்கள். நாங்கள் அதைவிட்டுவிட்டு மற்றொரு தனியார் லாட்ஜ்க்கு வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் எல்லாரும் தங்குவதற்கு அறைகள் தனித்தனியாக குறைந்த வாடகைக்கு கிடைப்பதாக இருந்தாலும் அந்த லாட்ஜ் இருந்த இடம் சூரிய ஒளி படாத இருளான இடத்தில் இருந்ததுடன் சுத்தமும் இல்லாதிருப்பதை நாங்கள் கவனித்தோம். சூரிய ஒளி இல்லாததால் குளிரும் அதிகமாகக் காணப்பட்டது.
இந்த இக்கட்டான நேரத்தில் தேவன் நமக்கென்று அந்த கேர்சேண் என்ற அந்த இடத்தில் ஒரு அழகான இடத்தை மலை உச்சியில் ஆயத்தம் செய்து வைத்திருந்தார். நாங்கள் எல்லாரும் இரண்டு இரண்டு பேர்களாக தனித்தனி அறைகளில் தங்க வசதியாக அந்த லாட்ஜ் இருந்தது. நமது சகோதரர்கள் அந்த இடத்தை எப்படியோ தேடி கண்டுபிடித்துவிட்டனர். கோலோக் என்ற அந்த லாட்ஜில் பகல் முழுவதும் சூரிய ஒளி வீசிக் கொண்டிருந்ததுடன் அறைகளும் மிகவும் சுத்தமாக இருந்தன. எங்கள் மனதுக்கு விருப்பமான ஆகாரங்களை ஏற்ற நேரத்தில் தயார் செய்து தர நல்ல பணியாட்களும் அங்கிருந்தனர். நாங்கள் தங்குவதற்கும், ஆகாரங்களுக்கும் மிகவும் நியாயமான பணத்தையே அவர்கள் எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர். அந்த இடத்தில் நாங்கள் தொடர்ச்சியாக 10 நாட்கள் தங்கியிருந்து அந்த இடத்தைச் சுற்றியிருந்த பல இமயமலை கிராமங்களுக்குச் சென்று தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. கோலோக் லாட்ஜின் உரிமையாளரின் நிறை கர்ப்பிணியான மனைவியே எங்களுடைய சமையல் பொறுப்பை ஏற்று எங்களுக்கு ஏற்ற நேரங்களில் ஆகாரங்களை தயார் செய்து கொடுத்தார்கள். அவர்கள் வீடு லாட்ஜ்க்கு கீழாகவே இருந்தது. இவை யாவுக்கும் மேலாக தேவன் எங்களுக்குஅந்த இடத்தை ஆயத்தம் செய்து கொடுத்ததில் முக்கியமான மற்றொரு காரியமும் இருந்தது. அந்த கோலோக் லாட்ஜின் உரிமையாளரின் சகோதரன் நமது தமிழ்நாட்டின் சென்னையில் படித்தவர். அவர் அந்த கேர்சேண் பட்டணத்திலுள்ள பெரிய மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்வதால் அவர் மூலமாக நாங்கள் அவர்கள் வேலை பார்க்கும் பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் யாவருக்கும் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை இலகுவாகக் கொடுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஆ தேவன் எத்தனை ஆச்சரியமானவர்! ஞானமுள்ள தகப்பன் பாருங்கள்!
கட்வால் மலைகளின் மூடப்பழக்கம்
நாங்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் ஒன்றில் மேலே குறிப்பிட்ட கோலோக் லாட்ஜின் உரிமையாளரின் மனைவிக்கு பிரசவம் நேரிட்டது. ஒரு நாள் இரவு 10 மணிக்கு அந்த உரிமையாளர் எங்களுடைய வாகனங்களில் ஒன்றை தன்னுடைய மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க நமது டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்களை கேட்டுக்கொண்டார்கள். சகோதரனும் அவர்களை அழைத்துச் சென்று அந்த இரவிலேயே சுகமான பிரசவம் ஆகி அதே வாகனத்தில் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டார்கள். கட்வாலி மலைப் பெண்கள் மிகவும் பெலசாலிகளும், சுகதேகிகளுமாக இருப்பதால் பிரசவம் அவர்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?
ஆனால் கொடுமையான காரியம், குழந்தையை பிரசவித்ததும் தாய்க்கு வீட்டில் இடம் கிடையாது. அவர்களையும், குழந்தையையும் ஒரு கடையாந்திரமான மாட்டுக் கொட்டகையில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அந்த இடத்தில் அவர்கள் 10 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டுமாம். எந்த ஒரு காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத இருள் சூழ்ந்த அந்த குளிரான இடத்தில் தாயையும், சேயையும் வைத்து விட்டார்கள். எங்களுக்கு பணிவிடை செய்து ஆகாரங்களை அருமையாக நேரத்துக்கு நேரம் தயார் செய்து கொடுத்த அந்த அன்பு சகோதரியை அவர்களின் முன் அனுமதி பெற்று நாங்கள் எல்லாரும் ஒரு நாள் சென்று பார்த்து இனிப்புகளைக்கொடுத்து, குழந்தையின் கையில் ஒரு சிறிய அன்பளிப்பையும் கொடுத்து வந்தோம். அவர்களுக்கிருந்த சந்தோசத்திற்கு அளவில்லை. நாங்கள் எல்லாரும் அங்கு செல்லும்போது நெருப்பை மூட்டி மாட்டுக் கொட்டகை முழுவதும் ஒரே புகை மண்டலமாகவிருந்தது. கொசுவை விரட்டுவதற்காகவா அல்லது குளிரைப் போக்குவதற்காகவா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் தங்கியிருந்த கோலோக் லாட்ஜ்ஜையும், அதின் அருகில் நாங்கள் நிறுத்தியிருந்த எங்கள் இரு வாகனங்களையும், எங்களுக்கு அருமையாக 10 நாட்கள் பணிவிடை செய்து எங்களை போஷித்த பணியாட்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் காண்பதுடன் பிரசவத்துக்குப் பின்னர் மாட்டுத் தொழுவத்துக்கு அனுப்பப்பட்ட தாய் சேய் இருவரும் தங்கியிருந்த மாட்டுத் தொழுவத்தையும் கூட நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.
ஹோட்டல் பணியாளர்கள், உரிமையாளர் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை வகைக்கு ஒன்றாக ஜெபத்துடன் கொடுத்து அவர்கள் யாவருக்கும் தேவனுடைய சுவிசேஷத்தையும் அறிவித்து வந்தோம். ஏற்கெனவே ஒரு ஆண் மகவு மேற்கண்ட சகோதரிக்கு இருப்பதால் இப்பொழுது பிறந்தது பெண் குழந்தையானதால் எங்களுடைய வரவின் காரணமாக அந்த பாக்கியம் கிடைத்ததாக அவர்கள் எண்ணி மகிழ்ந்தார்கள். எங்களுடைய அன்பான நடத்தை, எங்கள் பரிசுத்த ஒழுங்குகள் எல்லாம் நாங்கள் அவர்களுக்குப் படிக்கும்படியாக கொடுத்த தேவனுடைய பிரசுரங்களுக்கு மிகவும் கனம் சேர்த்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. எல்லா துதியும் ஆண்டவருக்கே.
ஆகர்சட்டியில் நடைபெற்ற தேவ ஊழியம்
அந்த நாளின் முந்திய இரவில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. காற்று மேற்கிலிருந்து வீசியதால் மேற்கு திசையில் இருந்த அறைகளில் படுத்திருந்த நமது சகோதரர்கள் எல்லாரும் மிகவும் சிரமப்பட்டார்கள். மழைத் தண்ணீர் அவர்களுடைய அறைகளுக்கே வந்து விட்டது. அத்துடன் இரவு முழுவதும் மின்சாரமும் போய்விட்டது. எங்களில் அநேகருக்கு இரவில் நல்ல இளைப்பாறுதலும் இல்லாமற் போயிற்று. எனினும், அடுத்து வந்த நாளில் அன்பின் ஆண்டவர் எங்களுக்கு கிருபையாக நல்ல அருமையான ஊழிய வாய்ப்புகளை தந்து எங்களின் உடல் களைப்புகள், ஆயாசங்கள் எல்லாவற்றையும் மாற்றி எங்களை மகிழ்ச்சிப்படுத்தினார். அந்த அன்பின் ஆண்டவருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?
கேர்சேணிலிருந்து நாங்கள் காலை 9 மணிக்கு புறப்பட்டு 4 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து ஆகர்சட்டி என்ற இடத்திற்கு வந்தோம். அந்த இடத்தில் ஒரு உயர்நிலை பள்ளி இருந்தது. பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்கள் சென்று உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து நாங்கள் கொண்டு சென்றிருந்த தேவனுடைய பிரசுரங்களை எல்லாம் அவரிடம் காண்பித்து அவைகளை பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுப்பதற்கு அன்பாக அனுமதி கேட்டோம். அவரும் உடனே எங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார். அந்த அன்பான மனிதர் பெயர் சாத்தி என்பதாகும்.
நாங்கள் கொடுக்கப்போகும் தேவனுடைய பிரசுரங்களைக் குறித்து அசெம்ளியில் (Assembly) கூடி வரும் பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை கூறிவிட்டு பிரதிகளைக் கொடுக்க தலைமை ஆசிரியர் எங்களைக் கேட்டுக்கொண்டார். அதின் படியே காலையில் அசெம்ளி கூடியது. 251 பிள்ளைகளும், 15 ஆசிரியர்களும் கூடி வந்தனர். நமது பாஸ்டர் சகோதரன் சாமுவேல் தனக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாங்கள் கொண்டு சென்றிருந்த பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் 3 கைப்பிரதிகளைக் குறித்து விளக்கமாக கூறினார்கள். இந்து வேதங்கள், ரிக் வேதம் போன்றவைகளில் ஆண்டவர் இயேசுவின் பாவப்பரிகார சிலுவை மரணத்தைக் குறித்தும், பாவ மன்னிப்பைக் குறித்தும், அவரால் நமக்கு உள்ள உலகம் தரக்கூடாத தேவ சமாதானம், மற்றும் நித்திய ஜீவனைக்குறித்தும் கூறப்பட்டவைகளை சுருக்கமாக அழகாக சொன்னார்கள்.
ஒரு ஆச்சரியமான காரியம் என்னவெனில் அந்த நாளில் அந்தப் பள்ளியை பார்வையிட வந்த பள்ளி இன்ஸ்பெக்டர் கூட (Inspector of Schools) அசெம்ளிக்கு வந்து நமது சகோதரனின் செய்தியை ஆர்வமாகக் கேட்டு தேவனுடைய பிரசுரங்களையும், ஹிந்தி வேதாகமத்தையும் நம்மிடமிருந்து அன்புடன் பெற்றுக் கொண்டதுதான். கர்த்தர் ஒருவருக்கே எல்லா துதி, கனம், மகிமை உண்டாவதாக. அசெம்ளி முடிவுற்றதும் பள்ளியின் அனைத்து பிள்ளைகளுக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம்.
ஆகர்சட்டி உயர்நிலைப் பள்ளியின் முகப்பு வளைவையும், அந்த வளைவிற்கு முன்பாக தேவனுடைய பிரசுரங்களை மிக விரைவில் துரிதம் துரிதமாக ஆசை ஆவலோடு கொடுக்கும் நமது குழுவின் மிக இளைஞரான நிர்மல்சிங் அவர்களையும், பள்ளியில் நுழைய ஆவலோடு காத்திருக்கும் நமது குழுவின் மற்ற சகோதரர்களையும், பள்ளியின் அசெம்ளியையும், மாணவ மாணவியருக்கு தேவனுடைய நற்செய்தியை அசெம்ளி முன் நின்று வழங்கும் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களையும் இந்தச் செய்தியில் நீங்கள் காணலாம்.
ஆகர்சட்டியிலிருந்த ஒரு பப்ளிக் பள்ளியிலும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். 70 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் இருந்தனர். அதின் பிரின்சிபால் பிஷ்ட் என்பவராவார். எங்களுக்கு அன்பாக அனுமதி வழங்கினார்.
அதே இடத்தில் ஒரு ஆரம்ப பள்ளியும் இருந்தது. அதின் தலைமை ஆசிரியை சந்திரகலா எங்களுக்கு அவர்கள் பள்ளி பிள்ளைகளுக்கு ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுக்க இணக்கம் தெரிவித்தார்கள். அவர்கள் பள்ளியில் 4 ஆசிரியர்களும் 48 மாணவர்களும் இருந்தனர்.
கேர்சேண் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேவ ஊழியம்
கேர்சேண் பட்டணத்தில் உள்ள பெரிய மேல் நிலைப் பள்ளியில் உயர் பட்டாதாரி ஆசிரியராக பணி புரியும் மனிதர் நாங்கள் கேர்சேணில் 10 நாட்கள் தங்கியிருந்த கோலோக் லாட்ஜின் உரிமையாளரின் சகோதரன் என்று ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டேன். அந்த அன்பான மனிதரின் அன்பால் நாங்கள் அந்த மேல் நிலை பள்ளியில் உள்ள 350 மாணவ மாணவியருக்கும் 26 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். ஆசிரிய பெருமக்களுக்கு ஹிந்தி மொழி வேதாகமங்களையும் கொடுத்தோம். அந்த மேல் நிலைப் பள்ளியின் பிரின்சிபால் பட்டோடா மிகவும் அன்பான மனிதர். அவருடைய ஒத்துழைப்பும் ஆண்டவருடைய பிரதிகளைக் கொடுக்க எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. நாங்கள் கொண்டு சென்ற அனைத்து தேவனுடைய பிரசுரங்களிலும் வகைக்கு ஒன்று வீதமும் அத்துடன் ஒரு ஹிந்தி வேதாகமுமாக ஒவ்வொரு பங்காக பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கு நமது சகோதரர்கள் அன்பாகக் கொடுத்தனர்.
கேர்சேண் மேல் நிலைப்பள்ளி முகப்பு வளைவையும், அதின் பெரிய கட்டிடத்தையும், அன்றைய தினம் எங்கள் கரங்களில் இருந்து ஆண்டவருடைய பிரதிகளை வாங்கிய அனைத்து மாணாக்கரையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பிள்ளைகள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பது அவர்களுடைய பாடங்களை மட்டுமே. சற்று முன்னர் நாங்கள் கொடுத்த பிரசுரங்களை எல்லாம் அவர்கள் பத்திரமாக தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். கர்த்தருக்கே மகிமை.
மேகல்சோரியில் மேற்கொள்ளப்பட்ட தேவ ஊழியங்கள்
ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் இரு வாகனங்களையும் தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த கேர்சேணிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மேகல்சோரி என்ற ஒரு இடத்திற்கு ஜெபத்துடன் புறப்பட்டோம். அங்குள்ள மலை உச்சியில் ஒரு மேல் நிலைப்பள்ளி இருக்கின்றது. பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்கள் சென்று அந்தப் பள்ளியின் பிரின்சிபால் டாக்டர் வர்மா என்பவரிடம் அவருடைய பள்ளி பிள்ளைகள் அனைவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை கொடுக்க அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டோம். பொதுவாக ஒரு உயர்நிலைப்பள்ளியிலோ அல்லது மேல் நிலைப் பள்ளியிலோ அதின் மாணவர்களுக்கு ஆண்டவருடைய பிரதிகளை வழங்குமுன்னர் நாங்கள் எந்தெந்த பிரதிகளையும், புத்தகங்களையும் அவர்களுக்கு கொடுக்கப் போகின்றோம் என்று அந்த பிரதிகளை எல்லாம் வகைக்கு ஒவ்வொன்றாக எங்கள் கரங்களில் எடுத்துச் சென்று அவரிடம் காண்பித்து அவருடைய அனுமதியைப் பெறுவோம். அவரும் நாங்கள் கொண்டு சென்ற பிரதிகளை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துத்தான் தனது சம்மதத்தை வழங்குவார். அப்படியே அந்த மேல் நிலைப் பள்ளியின் பிரின்சிபாலிடமும் காண்பித்து அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொண்டோம்.
அந்த மேல் நிலைப் பள்ளியில் 350 மாணாக்கரும் 13 ஆசிரியர்களும் இருந்தனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே நமது சகோதரர்கள் தேவனுடைய பிரசுரங்களை தங்கள் தோள் மேல் எடுத்துக் கொண்டு செங்குத்தான ஏற்றம் ஏறி பள்ளிக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டனர். டிரைவர் சகோதரன் நரேஷ் தனது தோளில் ஒரு பெட்டியைச் சுமந்து கொண்டு செல்லுவதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பள்ளியின் அசெம்ளிக்குப் பின்னர் அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆண்டவருடைய பிரதிகளை ஜெபத்துடன் வழங்கினோம். ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு ஹிந்தி மொழி வேதாகமங்களும் கொடுக்கப்பட்டன. மேகல்சோரி மேல்நிலை பள்ளியின் முகப்பு வளைவையும், பிள்ளைகள் சாரை சாரையாக அந்தக் காலை நேரம் பள்ளிக்குச் செல்லுவதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
மால் கோட், மேகான், லாட்டுகேர் என்ற இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் வாகனங்களுடன் கட்வால் மலைகளிலுள்ள கேர்சேண் என்ற இடத்திலிருந்து மேகல்சோரி என்ற இடத்திற்கு வந்து அந்த இடத்திலிருந்து எங்கள் இடது கைப்பக்கமாக அடர்ந்த கானகத்துக்குள் நுழைந்தோம். அந்தக் கானகப் பகுதிகளுக்குள்ளும் கிராமங்களும், பள்ளிகளும் இருப்பதை நமது சகோதரர்கள் குறிப்பாக நமது டிரைவர் சகோதரர்கள் கேட்டறிந்து எங்களுக்குத் தெரிவிக்கவே அந்த இடங்களுக்கும் சென்று தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க ஜெபத்துடன் தீர்மானித்தோம்.
மேகல்சோரியை நாங்கள் கடந்து கொஞ்ச தூரம் வரவும் ஒரு பழைய இரும்பு பாலம் எங்கள் வழித்தடத்தில் வந்தது. அதைக் கடந்து நாங்கள் சென்றபோது இருண்ட கானகப்பகுதிகளுக்குள் எங்கள் வாகனங்கள் வந்தன. நாங்கள் சென்ற பாதையும் செங்குத்து மலை ரஸ்தாவாகவிருந்தது. சற்று தவறுகள் ஏற்படினும் வாகனம் கெடு பாதாளத்திற்குள் சென்று மறைந்துவிடும். அந்த சாநிழலின் பள்ளத்தாக்கிலும் உன்னதமான நம் தேவனே தமது செட்டைகளின் நிழலில் எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.
இந்தக் கானகங்களில் ஒரு காலத்தில் மனிதர்களை மட்டுமே உணவாக அடித்துக் கொன்று தின்று கொண்டிருந்த நரமாம்ச பட்சிணிகளான புலிகளைப் பற்றி நாம் புத்தகங்களில் கதை கதையாக வாசித்திருக்கின்றோம். மக்களை இரவில் வீடுகளுக்கே வந்து கதவைத்தட்டி இந்த புலிகள் கடித்து இழுத்துச் சென்றன. இந்த கொடிய விலங்குகளிடமிருந்து அப்பாவி கட்வால், குமான் மாநில மக்களைக் காப்பாற்றும் பாதுகாவலனாக ஜிம் கார்ப்பெட் என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய வேட்டைக்காரர் வந்து அவைகளை சுட்டு வீழ்த்தினார். அவருடைய சாகச் செயல்களை நாம் புத்தகங்களில் கதை கதையாக வாசித்தோம். அந்த சம்பவங்களை வாசிக்கும் போது உலகில் இப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சினர்களும் இருக்கவே தான் செய்கின்றனர் என்று கண்டு ஆச்சரியமடைந்தோம்.
இன்றைக்கும் இந்த கட்வால், குமான் மலைகளில் ஆங்காங்கு நரமாம்ச பட்சிணிகளான கொடிய புலிகள் இருக்கத்தான் செய்கின்றன. நாங்கள் சென்ற இதே வழித்தடத்தில் ஓரிடத்தில் இப்படிப்பட்ட புலிகளைப் பிடிப்பதற்காக இரும்பு கூண்டு வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். கூண்டின் ஒரு பகுதிக்குள் ஒரு ஆட்டுக்குட்டியை நிறுத்திவிடுவார்கள். ஆட்டுக்குட்டியை பிடிக்க புலி கூண்டினுள் நுழையவும் கூண்டு தானாக மூடிக் கொள்ளும். தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் அந்த இரும்புக் கூண்டை காண வேண்டும் என்பதற்காக ஒரு படம் எடுத்து வந்தோம்.
நாங்கள் சென்ற அடர்ந்த கானப்பாதையில் காடுகளுக்குள்ளாக இருக்கும் பள்ளிகளிலும் நாங்கள் இறங்கி தேவனுடைய பிரசுரங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களையும் அத்துடன் அவர்களுடைய தனிமையில் அவர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் அடங்கிய ஹிந்தி மொழி வேதாகமங்களையும் ஜெபத்துடன் கொடுத்தோம். அப்படி நாங்கள் சந்தித்த இரண்டு கானகப்பள்ளிகளையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
நாங்கள் லாட்டு கேர் என்ற இடத்திற்கு வந்தோம். அந்த இடத்திலும் கானகத்தின் நடுவில்தான் ஒரு மேல்நிலைப் பள்ளி இருந்தது. பள்ளியின் முகப்பில் இருந்த டீ கடையில் நமது சகோதரர்கள் தேயிலைப் பானம் அருந்திய பின்னர் மேல் நிலைப்பள்ளி பிரின்சிபாலிடம் சென்று அவருடைய அனுமதியைப் பெற்றார்கள். பின்னர், மிகுந்த சந்தோசத்துடன் தேவனுடைய பிரசுரங்களை தங்கள் தோளில் சுமந்து மேட்டின் மேல் இருந்த பள்ளிக்குச் சென்றார்கள். அந்த மேல் நிலைப்பள்ளியின் அன்பான பிரின்சிபால் தீப் பிஷ்ட் என்பவராவார். அவருடைய அனுமதிக்குப் பின்னர் அந்தப் பள்ளியிலிருந்த 320 மாணாக்கர்களுக்கும் 18 ஆசிரியப் பெரு மக்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். அந்தப் பள்ளியில் தாகமுள்ள ஆசிரியர்கள் 7 பேர்களுக்கு ஹிந்தி மொழி வேதாகமங்களையும் கொடுத்தோம். பள்ளியின் குமஸ்தா ராவத் அவர்கள் மிகவும் விருப்பம் காண்பித்தார்கள்.
லாட்டுகேர் மேல் நிலைப் பள்ளியின் முகப்பு வளைவையும், வளைவுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த நமது இரு வாகனங்களையும், மலை உச்சியிலுள்ள மேல்நிலைப் பள்ளியையும், பிள்ளைகளின் நடமாட்டத்தையும் நீங்கள் காணலாம்.
நாங்கள் எங்கள் ஊழியங்களை லாட்டுகேர் என்ற இடத்தில் முடித்துவிட்டு மேகான் என்ற இடத்திற்குச் சென்றோம். மேகான் ஊரிலும், அங்கிருந்த நடுநிலைப்பள்ளியிலும் தேவனுடைய பிரசுரங்களை கொடுத்தோம். நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நீலம் டிம்ரி. அந்தப் பள்ளியில் 69 மாணாக்கர்களும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். அந்த இடத்தில் ஒரு ஆரம்ப பள்ளியும் இருந்தது. அதில் 70 மாணாக்கர்களும் 4 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கும் கர்த்தருடைய பிரதிகளை கொடுத்தோம்.
அந்த நாளில் நாங்கள் இருண்ட கானகப் பாதையில் மொத்தம் 50 கி.மீ. தூரம் பிரயாணம் செய்திருந்தோம். அன்பின் ஆண்டவர் எங்களை கண்ணின்மணி போல பாதுகாத்துக் கொண்டார். அத்துடன் எங்களுக்கு நல்ல சுவிசேஷ ஊழிய வாய்ப்புகளையும் கிருபையாக அருளிச் செய்தார்.
மால்சி, கேத்தி, ரவிபூர், ஜங்கல்சட்டி, ஆதிபத்திரி, சிமிலி, கர்ணபிரயாக் என்ற இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
கேர்சேணிலிருந்து ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் காலை ஆகாரத்திற்குப்பின்னர் எங்கள் இரண்டு வாகனங்களையும் தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு தேவன் அந்த நாளின் ஊழியங்களை ஆசீர்வதித்துத் தரும்படியாக அவரது கையில் எங்களை ஒப்புவித்து ஜெபித்துவிட்டு கேர்சேணிலிருந்து இறங்குமுகமாகப் புறப்பட்டோம். எங்கள் பாதையானது பசுமை குலுங்கும் கட்வால் பள்ளத்தாக்குக் காட்சிகளாகவே இருந்தன. அந்தப் பள்ளத்தாக்கின் காட்சியை நீங்களும் இந்தச் செய்தியில் காணலாம்.
நாங்கள் எங்கள் வழித்தடத்தில் முதலாவதாக மால்சி என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். உத்தராஞ்சல் மாநில அரசாங்கம் அந்த கிராமத்தின் பெயர் பலகையை ரஸ்தா ஓரமாக நிறுத்தியிருக்கின்றது. உங்களில் ஹந்தி மொழி தெரிந்தவர்கள் அதை வாசித்துப் புரிந்து கொள்ளலாம்.
மால்சி கிராமத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளியிருக்கின்றது. அதில் 115 மாணாக்கர்களும் 10 ஆசிரியர்களுமிருந்தனர். அங்குள்ள 10 ஆசிரியர்களும் தங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹிந்தி வேதாகமம் வேண்டுமென்று எங்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். அதின் பின்னர் நாங்கள் அங்கிருந்த பள்ளி பிள்ளைகள் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். அந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் பெயர் போடியால் என்பதாகும். மால்சி கிராமத்தின் உயர்நிலைப்பள்ளியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அதையடுத்து கேத்தி என்ற கிராமத்திலும் கர்த்தருடைய ஊழியத்தை செய்து அங்கிருந்த ஆரம்ப பள்ளியில் உள்ள 68 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அங்குள்ள 4 ஆசிரியர்களும் எங்களிடமிருந்து ஆளுக்கொரு ஹிந்தி வேதாகமங்களை ஆசையாக வாங்கிக் கொண்டனர். கேத்தி ஜண்டா என்ற இடத்தில் ஒரு மேல் நிலைப் பள்ளி இருந்தது. அதில் கல்வி பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சுவிசேஷ பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. அங்கிருந்த ஆசிரியர்கள் 9 பேர்களும் ஹிந்தி மொழி வேதாகமங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதின் பின்னர் ரவிபூர் என்ற இடத்திலும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அங்கிருந்த பப்ளிக் பள்ளியிலுள்ள மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கர்த்தருடைய பிரதிகளைக் கொடுத்தோம். அங்கிருந்த 9 ஆசிரியர்களும் ஹிந்தி மொழி வேதாகமங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
அங்கிருந்து நாங்கள் ஜங்கல்சட்டி என்ற கிராமத்திற்குச் சென்று அந்தக் கிராமத்தில் சுவிசேஷ ஊழியம் மேற்கொண்டோம். அந்தக் கிராமத்திலிருந்த ஆரம்ப பள்ளியில் 60 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள்அனைவருக்கும் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் 3 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரதிகளைக் கொடுத்தோம். ஜங்கல்சட்டி ஊர் பெயர் பலகையையும், மலையின் மேலுள்ள அந்த ஊரையும் நீங்கள் செய்தியில் காணலாம்.
அங்கிருந்து நாங்கள்சல்லியன் என்ற இடத்திலிருந்த ஒரு இமயமலை கிராமத்திற்கு வந்து அந்த கிராமத்திலிருந்த ஆரம்ப பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 40 பிள்ளைகளுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தோம். அங்கிருந்த ஒரு நடு நிலைப்பள்ளியிலும் பிரசுரங்களை விநியோகித்தோம். அங்கு 19 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் இருந்தனர். 2 பள்ளிகளிலுமாகச் சேர்த்து 8 வேதாகமங்களைக் கொடுத்திருந்தோம்.
எங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்து ஆதிபத்திரி என்ற இமயமலை கிராமத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். இந்து மக்களுக்கு இது ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இப்பொழுதிருக்கும் பத்ரிநாத் என்ற புகழ்பெற்ற இந்து புண்ணிய ஸ்தலம் ஒரு காலத்தில் இங்கிருந்ததாக கருதப்படுகின்றது. எனவேதான் ஆதி பத்ரி என்று அது அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டு இங்கும் சுவிசேஷ ஊழியம் மேற்கொண்டோம். இந்து மக்களின் புண்ணிய ஷேத்திரமாக இது விளங்குவதால் இங்குள்ள கடைவீதியில் நாங்கள் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுக்கவில்லை. இங்கு ஒரு பெரிய இந்து கோயில் இருப்பதால் போலீசாருடைய பாதுகாப்பு உள்ளது. எனினும், ஆதிபத்திரி ஊருக்கு கீழாக உள்ள ஒரு பள்ளிக்குச் சென்று அங்குள்ள பள்ளியில் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்தோம். ஆதிபத்திரி ஊரையும் நாங்கள் சென்ற பள்ளியையும், பள்ளத்தில் தங்கள் துணிகளை துவைத்துக்கொண்டிருந்த சிலர் நாங்கள் கொடுத்த பிரதிகளை ஆவலோடு படித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
ஆதிபத்திரியிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணாக்கர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்தோம். ஆதிபத்திரியிலுள்ள மேல் நிலைப்பள்ளி மாணாக்கர்கள் மேட்டின் மேல் உட்கார்ந்த நிலையில் தங்களுடைய தேர்வுகளை எழுதிக் கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அதின் பின்னர் நாங்கள் சிமிலி என்ற இடத்திற்கு வந்து அங்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். அங்கிருந்து நாங்கள் இந்து மக்களின் புண்ணிய ஸ்தலமான கர்ணபிரயாக் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இங்கும் ஓரிடத்தில் நாங்கள் எங்கள் வாகனத்தை நிறுத்தி கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். எங்கள் கரங்களிலிருந்து தேவனுடைய வார்த்தைகளைப் பெற்ற மக்கள் ஒரு குழுவாக அவைகளைப் படிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பஞ்சியானி, நாக்ஜூலாக்கால், சிந்தோலியில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
அன்பின் ஆண்டவர் எங்கள் எல்லாருக்கும் கிருபையாக முந்தின இரவில் நல்ல இளைப்பாறுதலை தந்தார். சில தினங்களுக்கு முன்பிருந்த கடுமையான குளிர் நன்றாக குறைந்திருந்தது. அந்த நாளின் காலையில் நாங்கள் எங்கள் காலை ஆகாரத்தை சற்று முன்பே முடித்துக் கொண்டு சரியாக காலை 8 : 30 மணிக்கெல்லாம் எங்கள் வாகனங்களை தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு நாங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி ஜெபித்த பின்னர் கேர்சேணில் நாங்கள் தங்கியிருந்த கோலோக் லாட்ஜிலிருந்து புறப்பட்டோம். சுமார் 20 கி.மீ. தூரம் நாங்கள் பிரயாணப்பட்டு தாராபானி என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து வலது கைப்பக்கமாகத் திரும்பி ஓரிரு கி.மீ. தூரம் வரவும் பஞ்சியானி என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம்.
அந்தக் கிராமத்தில் நாங்கள் மகேஷ்சிங் என்பவரைச் சந்தித்தோம். தேவனுடைய சுவிசேஷத்தை அவருடன் பகிர்ந்து கொண்ட பின்னர் அவருக்கு சுவிசேஷ பிரசுரங்களையும், புதிய ஏற்பாடு, பைபிள்சார் போன்ற புத்தகங்களைக் கொடுத்தோம். நம்முடைய சகோதரன் விஜயசிங் அவர்கள் மகேஷ்சிங் அவர்களுக்கு கர்த்தரைப் பற்றிக் கூறுவதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
மகேஷ்சிங்கை நாங்கள் சந்தித்த சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப்பக்கமாக ஒரு மனிதர் வந்தார். அவருடைய பெயர் கேசர்சிங் என்பதாகும். அவருடைய வயது 78 ஆகும். அவர் நாங்கள் ஆரம்பத்தில் மகேஷ்சிங்குடன் பகிர்ந்து கொண்ட காரியங்களை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் எங்களண்டை வந்து கிறிஸ்தவத்தில் எனக்கு மிகுந்த விசுவாசமும், அன்பும் உண்டு. நான் ஒழுங்காக ஹிந்தி விஷ்வவாணி நிகழ்ச்சிகளை தவறாது ரேடியோவில் கேட்டு மிகுந்த ஆசீர்வாதம் பெற்று வருகின்றேன் என்று கூறினார். எங்கள் எல்லாருக்கும் இருந்த சந்தோசத்திற்கு அளவில்லை. நம்முடைய சகோதரர்கள் நார்ட்டன் அவர்களும் விஜய்சிங் அவர்களும் இரட்சிப்பின் நற்செய்தியை கேசர்சிங் அவர்களுக்கு மிகவும் விபரமாகக் கூறி எங்கள் வசமிருந்த பிரசுரங்கள் யாவிலும் வகைக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்து அத்துடன் விலைமதிப்பிடமுடியாத பொக்கிஷமான ஹிந்தி மொழி வேதாகமத்தையும் நாங்கள் அவருக்குக் கொடுத்தோம். கேசர்சிங்கைப்போலவே மகேஷ்சிங் அவர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களையும் வேதாகமமும் கொடுத்தோம். நம்முடைய சகோதரர்கள் கேசர்சிங்குடன் தேவனுடைய சத்தியத்தைப் பகிர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பஞ்சியானி கிராமத்தின் உச்சியில் ஒரு நடுநிலைப்பள்ளி இருந்தது. அதில் மொத்தம் 41 பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் யாவருக்கும் அவர்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மூவருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். ஆசிரியர்கள் மூவருக்கும் வேதாகமங்களும் கொடுத்தோம்.
அதின்பின்னர் நாங்கள் நாக்ஜூலாக்கால் என்ற இடத்திற்குப் பிரயாணப்பட்டுச் சென்று கொண்டிருந்த வழியில் கனவானான ஒரு மனிதர் ரஸ்தா ஓரமாக தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி ஆண்டவருடைய நற்செய்தியை அவருடன் பகிர்ந்து கொண்டோம். இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணி புரிந்து ஓய்வுபெற்ற அவரின் பெயர் பகாதூர்சிங் என்பதாகும். தேவனுடைய பிரசுரங்கள் அனைத்திலும் வகைக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்து ஒரு வேதாகமத்தையும் அவருக்குக் கொடுத்தோம். அவர் அடைந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. நிச்சயமாக அவர் நமது தேவனுடைய பிரசுரங்களை பகல் முழுவதும் மாடு மேய்க்கும் சமயங்களில் கருத்தோடு வாசிப்பார் என்று நாம் கர்த்தருக்குள் உறுதியாக நம்பலாம். பகாதூர்சிங்குடன் நம்முடைய சகோதரர்கள் சத்தியத்தை பகிர்ந்து கொள்ளுவதை நீங்கள் பார்க்கலாம்.
அதின் பின்னர் நாங்கள் நாக்ஜூலாகால் என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்த கடைவீதியில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். தனிப்பட்ட பலருக்கும் அந்த இடத்தில் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம்.
தவனமுள்ள சில ஆத்துமாக்களுக்கு வேதாகமங்களையும் ஜெபத்துடன் வழங்கினோம். நம்முடைய வாகனங்களை நாக்ஜூலாக்கால் சிறிய கடைவீதியில் நிறுத்திவிட்டு நம்முடைய சகோதரர்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அங்கிருந்த ஆரம்ப பள்ளியில் 137 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்து 3 வேதாகமங்களும் வழங்கினோம். அங்கிருந்த நடுநிலைப்பள்ளியில் 271 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் இருந்தனர். அனைவருக்கும் ஆண்டவருடைய பிரதிகளைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியானது ஊரைவிட்டு சற்று தொலைவில் தூரத்தில் தெரிவதை நீங்கள் காணலாம்.
நமது சகோதரர்கள் அந்த இடத்திற்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொண்டு சென்று கொடுத்து வந்தனர். ஆசிரியர்கள் அனைவரும் தேவனுடைய வேதாகமங்களை விரும்பி வாங்கிக் கொண்டனர். அங்கிருந்து நாங்கள் சிந்தோலி என்ற இடத்திலிருந்த உயர்நிலைப் பள்ளியிலும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். பள்ளியின் முகப்பு வளைவையும், மாணவர்கள் பள்ளி மைதானத்தில் காணப்படுவதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
2010 ஆம் ஆண்டில் நாம் உத்தராஞ்சல் மாநிலத்தின் குமான் மற்றும் கட்வால் பகுதிகளில் நமது வாகனங்கள் மூலமாக சுவிசேஷத்துடன் சந்தித்த இமயமலைக் கிராமங்களும், ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகள் ஏராளம் ஏராளமாகும். எத்தனையோ ஆயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்து வந்திருக்கின்றோம். அவைகளைப் பற்றிய தெளிவான விபரணங்களை எழுத இந்தச் சிறிய பத்திரிக்கையில் இடம் போதாது. அவைகளை விபரமாக எழுத உங்கள் சகோதரனாகிய எனக்கும் பெலன் கிடையாது. ஏதோ சில ஊழியங்களை மட்டும் உங்கள் முன்பு ஜெபத்துடன் வைத்தேன். கர்த்தருடைய கிருபையால், கர்த்தருடைய பெலத்தைக் கொண்டு ஒரு பயனுள்ள தேவ ஊழியத்தை கர்த்தருக்கு மகிமையாக நாங்கள் செய்து திரும்பியிருக்கின்றோம். நாம் செய்த தேவ ஊழியத்தின் பலனைக்காண வேண்டுமானால் நாம் தொடர்ந்து நாம் விதைத்த ஜீவ வித்துக்களுக்காக உள்ளத்தின் பாரத்தோடு தேவ கிருபையால் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த அருமையான தேவ ஊழியம் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக நடைபெற தியாக அன்பின் உதவிக்கரம் நீட்டிய தேவப்பிள்ளைகள் நீங்கள். நீங்கள் எங்கள் கரத்தில் ஒப்புவித்த இந்த கனமான தேவ ஊழியத்தை நாங்கள் எங்களால் முடிந்த அளவு ஜெப நிலையிலேயே செய்து திரும்பியிருக்கின்றோம். இந்த ஊழியத்திற்கு முன்பாகவும், ஊழியத்தின் நாட்களிலும் பாவிகளாகிய எங்கள் முழங்கால்கள் இந்த ஊழியத்தின் ஆசீர்வாதத்திற்காக எத்தனை மணி நேரங்கள் ஜெபநிலையில் காணப்பட்டன என்பதை நம் அன்பின் தேவன் ஒருவரே அறிகின்றவராக இருக்கின்றார்.
நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியர்கள். செய்ய வேண்டிய கடமையை மட்டும் ஆத்தும பாரத்தோடும், தேவ பெலத்தோடும் ஜெபநிலையில் நிறைவேற்றினோம். இந்த ஊழியத்தின் முழுமையான ஆசீர்வாதங்களும் தேவப்பிள்ளைகளாகிய உங்களையே சார்ந்தது. அதின் பலனை பரலோகில் நீங்கள் ஓர் நாள் காண்பீர்கள். அல்லேலூயா.