உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் கடந்த கால நினைவுகள் (3)
“வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரை சேவித்தேன்” (அப் 20 : 19)
கர்த்தருடைய பரிசுத்தமான தேவ ஊழியம் மிகுந்த கண்ணீரோடு செய்யப்பட வேண்டிய ஊழியம் என்பதை அப்போஸ்தலன் இங்கு நமக்கு கோடிட்டுக் காண்பிப்பதை நாம் காண்கின்றோம். கொஞ்சமான கண்ணீரோடு அல்ல மிகுந்த கண்ணீரோடு தேவ சமூகத்தில் அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக அழுது ஜெபித்து தமது ஆண்டவருடைய ஊழியத்தை நிறைவேற்றியதை அவர் நமக்கு தமது அனுபவத்திலிருந்து கூறுவதை நாம் காண்கின்றோம். ஏன், எதற்காக, இத்தனை மிகுதியாக ஆத்துமாக்களுக்காக அழ வேண்டும்? அதின் ஒரே காரணம் நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா எரி மலை குழம்பான தேவ கோபாக்கினைச் சூழையில் முடிவில்லா காலமாக, நித்தியமாக வெந்து துடி துடித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்ற காரணத்திற்காகத்தான். நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா இந்தக் கொடிய வேதனையை நித்திய காலமாக அனுபவிக்க வேண்டும். நித்தியம் எவ்வளவு நீளமானது? கடந்த கால பக்த சிரோன்மணிகள் முடிவில்லாத நித்தியத்தைக் குறித்து பல உதாரணங்களாலும் விவரித்துக் காண்பித்திருக்கின்றனர். அதில், 1618 க்கும் 1651 க்கும் இடைப்பட்ட 33 வருட கால வாழ்வில் இங்கிலாந்து தேசத்தில் உள்ள வேல்ஸ் என்ற இடத்தில் வாழ்ந்து இரத்த சாட்சி மரணத்தை தன் இள வயதிலேயே கர்த்தருக்காக அடைந்த பரிசுத்த தேவ பக்தன் கிறிஸ்டோபர் லவ் (Christopher Love) என்பவர் நித்தியத்தை நமக்கு ஒரு அசாதாரணமான உதாரணத்துடன் விளக்குகின்றார். அவர் அதை இவ்வண்ணமாக விளக்குகின்றார் “உலகத்திலுள்ள அனைத்துக் குன்றுகளும், அனைத்து பிரமாண்டமான மலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டு மணலாக அரைக்கப்பட்டு வானத்திற்கும், பூமிக்கும் நடுவாக விண்ணை முட்டும் உயரத்திற்கு குவியலாக குவித்து வைக்கப்பட வேண்டும். இந்த கற்பனைக்கு எட்டாத மாபெரும் மணற் குவியலுக்கு ஒரு சிறிய பறவை 1000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து வந்து அந்த மணற் குவியலில் ஒரே ஒரு சிறு அணு அளவான மண்ணை தனது அலகில் கொத்திக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு 1000 ஆண்டுகளுக்கும் ஒரு தடவை அந்த சிறிய பறவை பறந்து வந்து வந்து அந்த மாபெரும் மணல் மா மலையை ஒரு மணல் கூட இல்லாமல் எடுத்து துடைத்து முடித்துவிட்ட நாளே முடிவில்லாத நித்தியத்தின் ஆரம்ப நாள் அதாவது முதல் நாள் ஆகும்” என்கின்றார். நித்தியத்திற்கு முடிவில்லை என்பதை காண்பிக்கவே இந்த அதிசயிக்கத்தக்க உதாரணங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றது.
18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பரிசுத்தவான் வில்லியம் பர்ன்ஸ் (William Burns) என்பவர் சிறுவனாக இருந்த சமயம் அவரது தாயார் அவரை தனது சிறிய கிராமமான கில்லிசித்திலிருந்து ஜனப் பெருக்கமான கிளாஸ்கோ என்ற பட்டணத்திற்கு ஒரு தடவை அழைத்துச் சென்றிருந்தார்கள். அந்தப் பட்டணத்தில் இருந்த கடைகளில் அவரது தாயார் சாமான் வாக்கிக் கொண்டிருந்த போது எப்படியோ வில்லியம் பர்ன்ஸ் காணாமற் போய்விட்டார். கடைசியாக அவருடைய தாயார் கடைத் தெருக்களில் அங்குமிங்குமாகத் தேடி அவரைக் கண்டு பிடித்தார்கள். வில்லியம் பர்ன்ஸ் அதிகமாக ஏங்கி, ஏங்கி அழுது கண்ணீர் சிந்தி மிகுந்த துயரத்தோடு இருந்ததை அவருடைய தாய் கண்டறிந்தார்கள். அவர்கள் தனது மகனைப் பார்த்து ” வில்லி என் அருமை மகனே, உனக்கு ஏதாவது உடல் சுகயீனமா? உனக்கு என்ன செய்கின்றது? இப்படியாக அழுது கன்னங்கள் வீங்கியிருக்கின்றதே என்று கேட்ட போது “ஓ என் அருமை அம்மா, அப்படி எல்லாம் எனக்கு ஒன்றுமில்லை. நீங்கள் இங்கே பார்க்கின்ற தேவனற்ற மக்கள் கூட்டத்தின் பாதங்கள் எல்லாம் எரி நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்ற காலடிச் சப்தம் என் இருதயத்தை சுக்கு நூறாக உடைத்து நொறுக்குகின்றதால் அவர்களுக்காக அழுது கண்ணீர் சிந்தினேன்” என்று கூறினாராம்.
பின் நாட்களில் இந்த வில்லியம் பர்ன்ஸ் என்ற தேவ பக்தன் அழியும் ஆத்துமாக்களுக்காக மணிக்கணக்காக அழுது அழுது ஜெபித்ததின் காரணமாக அவருடைய கில்லிசித் கிராமத்தில் பெரியதோர் உயிர் மீட்சி ஏற்பட்டதுடன், அநேகர் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரங்களானார்கள். பின் நாட்களில் இந்த வில்லியம் பர்ன்ஸ் என்ற பரிசுத்தவான் ஹட்சன் டெயிலர் என்ற மாபெரும் சீன மிஷனரி பரிசுத்தவானுடன் சேர்ந்து சீன தேசத்தில் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்தார். கர்த்தருக்கே மகிமை. நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா நரக பாதாளத்தில், அக்கினியும் கந்தகமும் கலந்து எரியும் சமுத்திரத்தில், முடிவில்லாத நித்தியமாக அனுபவிக்கப் போகும் கொடிய பாடுகளையும், வேதனைகளையும் தங்கள் உள்ளத்தில் முழுமையாக உணர்ந்து ஆத்தும பாரத்தோடு தேவ ஊழியம் செய்வோர் யாராயினும் சரியே தேவன் அவர்களுடைய ஊழியங்களை கனப்படுத்தி தமது பரிசுத்த நாமத்தை அவர்கள் மூலமாக மகிமைப்படுத்துவார். அல்லேலூயா.
நேப்பாள, சீன எல்லைப்புற இந்திய பட்டணம் டார்ச்சுலா
கர்த்தருடைய பெரிதான கிருபையால் நாங்கள் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை வகைப்படுத்திக் கொண்டு அன்றைய தினம் காலையில் நாங்கள் யாவரும் கூடி ஜெபித்து எங்களையும் எங்கள் இரு வாகனங்களையும், வரப் போகும் தேவ ஊழியங்களையும் கர்த்தருடைய கரங்களில் ஒப்புவித்துவிட்டு பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து சுமார் 95 கி.மீ தொலைவிலுள்ள டார்ச்சுலா என்ற இடத்தை நோக்கி பிரயாணப்பட்டோம். டார்ச்சுலா கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 4000 அடி உயரத்தில் நாற்புறமும் வானத்தை எட்டும் பசுமையான மலைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய பட்டணமாகும். உத்தராகாண்ட் அல்லது உத்தராஞ்சல் மாநிலத்தின் ஒரு கடைக் கோடி எல்லையில் அது அமைந்துள்ளது. இது இந்திய ராணுவ முக்கியத்துவமான இடமுமாகும். காரணம், இந்த இடத்தை ஒட்டி சீனா மற்றும் நேப்பாள நாடுகளின் எல்லைகள் உள்ளன. காளி கங்கை என்ற ஒரு பெரிய நதி இந்தப் பட்டணத்தின் ஒரு ஓரத்தில் பேரிரைச்சல் போட்டுக் கொண்டு ஓடுகின்றது. நதியின் அடுத்த பக்கத்தில் நதியின் ஓரமாகவும், மலைகளிலும் நேப்பாள நாட்டின் ஒரு சிறிய பட்டணம் உள்ளது. அதுவும் டார்ச்சுலா என்றே அழைக்கப்படுகின்றது. நேப்பாள நாட்டின் டார்ச்சுலா பட்டணம் காளி கங்கா நதிக்கரை ஓரமாக அமைந்திருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
இந்திய மக்களும், நேப்பாள மக்களும் ஒருவர் நாட்டிற்குள் மற்றவர் எந்த ஒரு அனுமதி சீட்டுகளும் இல்லாமல் தாராளமாக வந்து சென்று இருக்கின்றனர். எனினும், நேப்பாளத்தின் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளின் காரணமாக இந்திய பகுதியில் தீவிரமான கண்காணிப்பு இருப்பதை நாம் காணலாம்.
டார்ச்சுலா பட்டணத்திற்கு நாங்கள் வந்து சேரும் போது மாலை நேரமாகிவிட்டது. அங்கிருந்த அரசாங்க ஓய்வு விடுதியில் நாங்கள் எல்லாரும் ஒரே அறையில் தங்கிக் கொள்ள வசதியாக பொது அறை (Dormitory) ஒன்றை நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் வெகு முன்னதாகவே முன் பணம் செலுத்தி ஒழுங்கு செய்திருந்தார்கள். எங்கள் இரண்டு வாகனங்களையும் கூட நாங்கள் தங்கியிருந்த ஓய்வு விடுதிக்கு அருகில் எங்கள் அறையை ஒட்டியே நிறுத்திக் கொள்ள முடிந்தது. அதின் காரணமாக இரவில் எந்த வேளையிலும் எங்கள் அறையின் ஜன்னல் கண்ணாடி மூலமாகவே எங்கள் வாகனங்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கின்றதா என்பதை எங்களால் பார்த்துக் கொள்ள வசதியாக இருந்தது. டார்ச்சுலாவில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதிக்கு முன்பாக ஆண்டவரின் அற்புத சிருஷ்டி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஓய்வு விடுதியின் ஒரு பக்கத்தையும், எதிர் பக்கம் இமயமலை சாரலையும், எங்கள் கண்களுக்கு முன்பாக அழகிய மரங்கள் மற்றும் செடி கொடிகள் படர்ந்து காணப்படுவதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
கர்த்தருடைய பேரன்பால் நாங்கள் டார்ச்சுலாவில் தங்கியிருந்த 7 நாட்களும் எங்கள் ஆகார காரியங்களுக்காக கஷ்டப்படவில்லை என்றே சொல்லலாம். காரணம், நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதிக்கு அருகாமையிலேயே மோகன்சிங் என்ற நேப்பாள மனிதர் ஹோட்டல் வைத்திருந்தார். எங்களுக்கு விருப்பமான ஆகாரத்தை நாங்கள் கேட்கும் சரியான நேரத்தில் மிகவும் சுத்தமாக, நாங்கள் விரும்பும் விதத்தில், குறைவான விலையில் எங்களுக்கு சமைத்துக் கொடுத்தார்கள். பரதேசிகளாகிய எங்களை தங்களது சொந்த குடும்பத்தினரைப் போன்று நினைத்து மிகவும் இன் முகத்துடன் ஏற்று உபசரித்தார்கள். நல்ல புதிய காய் கறிகள் கிடைக்கும் இடங்களில் நாங்கள் அவற்றை வாங்கி வந்து மோகன்சிங்கிடம் கொடுக்க எந்த ஒரு மறுப்புமின்றி அவைகளை ஏற்று எங்களுக்கு சமையல் செய்து உணவளித்தார்கள். எங்களுக்கு அன்பு செய்த மோகன்சிங்கிற்கும் அவர் மனைவிக்கும் நாங்கள் டார்ச்சுலாவை விட்டுப் புறப்படும் சமயம் சத்தியத்தை அறிவித்து நாங்கள் கொண்டு சென்ற சுவிசேஷ பிரசுரங்களில் எல்லாம் வகைக்கு ஒவ்வொன்றாக ஜெபத்துடன் கொடுத்தோம். அத்துடன் எங்கள் குழுவின் சார்பாக அவர்களுடைய அன்புக்கு கைம்மாறாக கொஞ்சம் இனிப்பு பதார்த்தங்கள் வாங்கிக் கொடுத்தோம். அந்த அன்பான மோகன்சிங் அவர்களையும் அவரது மனைவியையும் நீங்கள் இந்தச் செய்தியில் நீங்கள் காணலாம்.
தோபாட், தவாகாட், பாங்லாவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
குறிப்பிட்ட அந்த நாளின் அதிகாலையில் நாங்கள் எழுந்து எங்கள் ஜெப தியானங்களுக்குப் பின்னர் நாங்கள் குளித்து எங்களை சுத்தப்படுத்திக் கொண்டு அந்த நாள் ஊழியத்திற்கான தேவனுடைய பிரசுரங்களை எங்கள் இரண்டு வாகனங்களிலும் ஏற்றிக் கொண்டோம். எங்களுடைய காலை ஆகாரங்களை சாப்பிட்டுவிட்டு எல்லாரும் கூடி ஜெபித்த பின்னர் தவாகாட் என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டோம். டார்ச்சுலா பட்டணத்தை நாங்கள் முழுமையாகக் கடந்து ஓரிரு கி.மீ. தொலைவு வந்த பின்னர் நமது இந்திய ராணுவ பாசறை உள்ளதான முகாமுக்கு முன்னாலுள்ள ரஸ்தா வழியாக எங்கள் வாகனங்கள் மலை மேலுள்ள ரஸ்தாவில் முன்னேறின. நாங்கள் சென்ற ரஸ்தாவுக்கு முன்னால் சற்று தொலைவில் ரஸ்தாவின் இரு பக்கங்களையும் இணைத்த வண்ணமாக ஒரு அரை வட்ட வளைவில் “கைலாசம், மான்சரோவர் செல்லுகின்ற புனித யாத்திரீகர்களே, உங்களை நாங்கள் வாழ்த்தி வரவேற்கின்றோம். உங்கள் யாத்திரை மங்களகரமாக முடிவுறுவதாக” என்ற எழுத்துக்களை நாங்கள் கவனித்தோம். அந்த வார்த்தைகள் என் உள்ளத்தில் அந்த நேரத்தில் அதிகமாக பேசுவதாக இருந்தது. நம்முடைய இந்திய நாட்டிலிருந்து தொன்று தொட்டு எத்தனையோ ஆயிரம், ஆயிரம் இந்து பக்தர்கள் எங்கள் வாகனங்கள் சென்ற இதே வழியாகத்தான் கைலாசம் சென்றார்கள். இப்பொழுதுள்ள ஓரளவு நல்ல பிரயாண வசதிகள் அந்த நாட்களில் முழுமையாக கிடையாது. அதின் காரணமாக கைலாசம் சென்ற பெரும்பாலான மக்கள் மீண்டும் திரும்பி வராமல் வழியிலேயே அப்படியே அங்குள்ள கடுங் குளிரிலும், திடீரென ஏற்படும் மலைச் சரிவுகளின் காரணமாகவும், உயரமான இடங்களில் பாதங்கள் பனிப்பாறைகளில் பட்டு வழுக்கினதின் காரணமாகவும் கெடு பாதாளங்களில் வீழ்ந்து மாண்டு மடிந்து போனார்கள். அந்த உயரமான இடத்தில் வாழ்கின்ற தங்கள் தெய்வத்தை தங்கள் வாழ்வில் ஒரு தடவையாவது தரிசித்துவிட்டு தங்கள் வாழ்வை முடித்துவிட வேண்டுமென்பது அந்த மக்களின் கட்டுக்கடங்கா வாஞ்சையாகும். இன்று வரை அந்த மக்களின் கைலாச யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
ஆனால், கிறிஸ்தவ மக்களாகிய நாம் எத்தனை பாக்கியசாலிகள். நமது ஜீவனுள்ள ஆண்டவரை நாம் தேடிக்கொண்டு எங்கும் செல்லாமல் நாம் இருக்கும் இடத்திலேயே அவருடைய இன்பப் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக மணிக்கணக்காக அவருடைய பாதங்களில் நாம் அமர்ந்து விடுகின்றோம். ஒரு கண நேரம் கூட அவரை விட்டுவிடாமல் அவரை அண்டிக் கொள்ளுகின்றோம். “எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்” (சங் 73 : 28) என்று களிகூருகின்றார் சங்கீதக்காரர். அந்த அன்பரும் “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத் 28 : 20) என்றும் “நான் உன்னோடு இருப்பேன், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை (யோசுவா 1 : 5) என்று நமக்கு நிச்சயமான வாக்கு அளித்து மகிமையின் நம்பிக்கையாக நமக்குள்ளே வாசம் செய்கின்றார் (கொலோ 1 : 27) அல்லேலூயா.
டார்ச்சுலாவிலிருந்து தவாகாட் என்ற இடம் 16 கி.மீ தொலைவில் உள்ளது. நாங்கள் டார்ச்சுலாவை விட்டதுமே வழியோரங்களில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டே வந்தோம். சில கி.மீ. தூர பயணத்திற்குப் பின்னர் நாங்கள் எங்கள் வழித்தடத்தில் தோபாட் என்ற மலைக் கிராமத்தை வந்தடைந்தோம். இந்தக் கிராமத்தின் மலை உச்சியில் 3 கி.வா. திறனுள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்று உள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் பணி புரியும் Mr.Toy என்ற கிறிஸ்தவ சகோதரன் எங்களை தோபாட் கிராமத்தின் சிறிய கடை வீதியில் சந்தித்தார். நாங்கள் எல்லாரும் தேவனுடைய பிரசுரங்களை அங்குள்ள மக்களுக்கு கொடுப்பதைக் கண்ட அவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். தான் தங்கியிருக்கும் சிறிய ஹோட்டல் அறைக்கு எங்களை அழைத்துச் சென்று பிஸ்கட் மற்றும் டீ கொடுத்து எங்களை மிகுந்த அன்புடன் உபசரித்தார். நம்முடைய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேலுடைய கரத்தில் ரூபாய் 100 கொடுத்து எங்களுடைய ஊழிய செலவுகளுக்கு வைத்துக் கொள்ள அவர்களை வற்புறுத்தினார். நாங்கள் அவருக்கு ஆண்டவருடைய வார்த்தைகளைக் கூறி அந்த இடத்தில் அவர் கர்த்தருக்கு ஒரு சாட்சியின் மகனாக வாழும்படியாகக் கேட்டுக் கொண்டு அவருக்காக ஜெபித்துவிட்டு அந்த இடத்திலிருந்து பிரயாணப்பட்டோம். தோபாட் என்ற சிறிய இமயமலை கிராமத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். மலை உச்சியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பெரிய மின் கம்பத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட நீங்கள் ஒருக்கால் பார்க்க முடியும் என்று நினைக்கின்றேன்.
தோபாட் என்ற இடத்திலிருந்து நாங்கள் தவாகாட்டிற்கு வந்தோம். பகல் நேரத்திலேயே இங்கு இருள் மண்டிக்கிடப்பதை நாங்கள் காண முடிந்தது. நாற்புறமும் வானளாவ ஓங்கி வளர்ந்து நிற்கும் மலைகள், வலது இடது பக்கங்களிலிருந்து வெண் நுரைகளைத் தள்ளிக் கொண்டு பாய்ந்தோடி வரும் தவுளி கங்கா மற்றும் காளி என்ற இரண்டு நதிகளின் இரைச்சல்கள், நமக்கு முன்னாலுள்ள மலைகளில் ஆங்காங்கு விழுந்து கொண்டிருக்கும் சின்னச் சின்ன பனி மலை அருவிகள் எல்லாம் நம்மை பிரமிக்கப்பண்ணுவதாக இருக்கின்றன. அந்த தவாகாட் என்ற இடத்திற்கு இடது கைப்பக்கமாக கொஞ்ச தூரத்தில் உள்ள சோப்லா என்ற இடத்தில் ஒரு சிறிய அணையும், நீர் மின் நிலையமும் இருப்பதால் தவாகாட் என்ற சின்னஞ் சிறிய கடை வீதியில் மக்கள் எப்பொழுதும் காணப்பட்ட வண்ணமாக இருக்கின்றனர். அத்துடன் மக்களை ஏற்றிக் கொண்டு போக வசதியாக சில வாகனங்கள் அங்கு நின்று கொண்டே இருக்கின்றன. நாங்கள் சென்ற நேரம் அங்கு காணப்பட்ட மக்களுக்கெல்லாம் கர்த்தருடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்துவிட்டு தவாகாட்டை ஒட்டிய வலது கைப் பக்கம் இருந்த ரஸ்தா வழியாக அங்கிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள பாங்கு என்ற இடத்தை நோக்கிப் பயணமானோம்.
எங்கள் இடது கைப் பக்கமாக வானுற ஓங்கி நிற்கும் செங்குத்தான மலைகள் ஒரு புறம் நின்று கொண்டிருக்க எங்கள் வலது கைப்பக்கமாக காளி என்ற நதி இரைச்சலிட்டு ஓடிக் கொண்டிருக்க எங்கள் வாகனங்கள் மலையைக் குடைந்து வெட்டப்பட்டிருந்த கரடு முரடான சிறிய ரஸ்தாவில் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று தவறு ஏற்படினும் வாகனம் சில ஆயிரம் அடிகளுக்கு கீழாக விழுந்து காளி நதியோடு கலந்து மறைந்து விடும். நாம் செல்லப்போகின்ற அந்த மலை ரஸ்தாவை தூரத்திலிருந்து பார்த்தாலே நமது தலைகள் சுழுல ஆரம்பித்து விடும். அன்பின் ஆண்டவரையே எங்கள் மனதில் தியானித்தவர்களாக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். ஓரிடத்தில் வரவும் ஒரு முழு மலையே நடு நதிக்குள் விழுந்து கிடப்பதை நாங்கள் ஆச்சரியத்துடன் கவனித்தோம். இன்னும் நாங்கள் அப்பால் செல்லவும் பாறைகளையும், கற்குவியல்களையும் அப்படியே அலாக்காக தூக்கித் தள்ளுகின்ற வலுமையான புள் டோசர் வண்டி ஒன்று நொறுங்கிய நிலையில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அதைப் பார்த்ததும் நமது பாஸ்டர் சகோதரன் என். சாமுவேல் அவர்கள் அதைக் குறித்து “இந்த புள் டோசர் வண்டியை ஓட்டியவர் தமிழ் நாட்டிலுள்ள விழுப்புரத்தை சேர்ந்தவராவார். குடும்பத்தை அங்குவிட்டுவிட்டு பிழைப்புக்காக இங்கு வந்து தனியனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல அன்றைய தினமும் புள் டோசரைஓட்டிக் கொண்டிருந்தபோது திடீரென மலை உச்சியிலிருந்து பாறைகள் சரிந்து வந்து அவருடைய வாகனத்தில் விழுந்து அவர் அந்த இடத்திலேயே நொறுங்கிப் போனார்” என்று சொன்னார்கள். நாங்கள் எல்லாரும் அந்த இடத்தில் இறங்கி நின்று உடைந்து சிதறிப்போன அந்த வாகனத்தை துயரத்தோடு சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு கடந்து சென்றோம்.
நாங்கள் செல்லுகின்ற பாதையில் அந்தப் பயங்கரமான பாதையை இரவும் பகலும் கண் விழித்துப் பாதுகாக்கும் இந்திய எல்லைப் புற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலருக்கும் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கும் சிலாக்கியம் பெற்றோம். இந்த தொழிலாளர்கள் இரவும் பகலும் நாங்கள் சென்ற அந்த சாநிழல் பள்ளத்தாக்கின் ரஸ்தா ஓரமாகவே கூடாரங்கள் போட்டு தங்கி ரஸ்தாவின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தாங்கள் தங்கியிருக்கும் கூடாரத்திற்குள்ளாகவே காஸ் சிலிண்டர்கள் வைத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே இரவில் படுத்துக் கொள்ளுகின்றனர். எந்த ஒரு பொழுது போக்கிற்கும் வசதியற்ற அந்த ஏகாந்தமான இடங்களில் தனிமையாக அந்த மக்கள் இருக்கும் நேரங்களில் நாங்கள் கொடுத்த தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்கள் அவர்களோடு நிச்சயமாக பேசும் என்று நாம் நம்பலாம். அப்படிப்பட்ட கூடாரங்களில் நாங்கள் கொடுத்த ஆண்டவருடைய வார்த்தைகளை ஆவலாக வாசிக்கும் மக்களை நீங்கள் காண்பதுடன் அங்கு பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு திரும்பி வரும் நமது சகோதரன் விஜயசிங் அவர்களையும் நீங்கள் செய்தியில் காணலாம்.
நாங்கள் தவாகாட்டிலிருந்து சாநிழல் பள்ளத்தாக்கின் பாதையில் 16 கி. மீ. தூரம் பிரயாணம் செய்து பாங்லா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். வரும் வழித்தடத்திலும் நாங்கள் சந்தித்த பலருக்கும் கைப்பிரதிகளை விநியோகித்து வந்து கொண்டிருந்தோம். அங்குள்ள வீடுகளில் உள்ள மக்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்து விட்டு திரும்பி வரும் நமது சகோதரனை நீங்கள் படத்தில் காணலாம்.
அங்குள்ள வீடுகள் மற்றும் அவைகளைச் சூழ்ந்த இமயமலை தாவரங்கள் எப்படி உள்ளன என்பதை நீங்கள் பார்க்க முடியும். பாங்லாவுக்கு நாங்கள் வந்ததும் அங்குள்ள பாதுகாப்பு படைக் காவலர்கள் எங்கள் அனைவரின் பெயர்கள் மற்றும் எங்கள் வாகனங்களின் நம்பர்களை எல்லாம் கேட்டு எழுதிக் கொண்டார்கள். பாங்லா என்ற இடத்திலுள்ள மக்களுக்கு நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களை மக்கள் ஆர்வத்தோடு வாசிப்பதை நீங்கள் காண்பதுடன் சீன நாட்டு எல்கைக்கு அருகிலுள்ள அந்தக் கிராமத்தின் இமயமலைத் தொடர்கள் எப்படியாக விண்ணை நோக்கி நின்று கொண்டிருக்கின்றன என்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
நீங்கல் பானி, பலவாகோட், கட்டியாபகட், தோலா கிராமங்களில் நடந்த ஊழியங்கள்.
அன்று அதிகாலையில் நாங்கள் எழுந்து எங்களது ஜெப தியான வேளைகளுக்குப் பின்னர் குளித்து எங்கள் காலை ஆகாரத்துக்குப் பின்னர் நாங்கள் எல்லாரும் கூடி ஜெபித்துவிட்டு எங்கள் வாகனங்களுடன் தேவ ஊழியத்திற்காகப் புறப்பட்டோம். எங்களுடைய வழித்தடத்தில் நாங்கள் சந்தித்த முதல் கிராமம் நீங்கல்பானி என்ற இடமாகும். இந்த இடத்தில் நிறைய வயல்கள் இருந்தமையால் வயல்களில் நெல் அறுவடை செய்யும் மக்களுக்கு ஆண்டவருடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். அதற்கப்பால் நாங்கள் சற்று தொலைவு எங்கள் வாகனங்களில் சென்று உச்சியில் பச்சை பசேல் என்ற மரங்களடர்ந்த சோலைகளுக்குள்ளாக ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருப்பதை கவனித்து எங்கள் வாகனங்களை ரஸ்தாவில் நிறுத்திவிட்டு பள்ளிக்கூடத்தை நோக்கி மேட்டில் நடந்தோம். அந்தப் பள்ளியில் ஒரு ஆசிரியரும் 10 பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம். அந்த இடத்தின் பெயர் சீப்பு என்பதாகும். அதற்கப்பால் நாங்கள் பிரயாணப்பட்டு சார்ச்சும் என்ற கிராமத்திற்கு வந்தோம். அங்கிருந்த ஆரம்ப பள்ளியில் 2 ஆசிரியர்களும் 32 பிள்ளைகளும் இருந்தனர். அதே கிராமத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்களும் 34 மாணவ மாணவியரும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கர்த்தருடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம்.
நாங்கள் இப்பொழுது பலவாகோட் என்ற இரு புறமும் கடைகளைக் கொண்ட நீண்ட கடை வீதிக்கு வந்து சேர்ந்தோம். இது ஒரு வைராக்கியமான இந்துக்களின் இடம் என்பதை பின்னர்தான் நாங்கள் கண்டு பிடித்தோம். நாங்கள் இந்த நீண்ட கடை வீதியில் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தோடு தாராளமாக விநியோகித்தோம். இந்த இடத்தில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த நமது குழுவிலுள்ள சகோதரன் அர்ச்சுன் என்பவர்களிடம் அங்குள்ள ஒரு மனிதன் வந்து பல கேள்விகளையும் கேட்டு இறுதியில் அவர்களை அடிக்க தயாராகும் வேளையில் தேவ தயவால் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
நாங்கள் பலவாகோட் கடை வீதியில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த போது காக்கி ராணுவ உடையில் இருந்த ஒரு வாலிபன் எங்களண்டை வந்து நாங்கள் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த தேவனுடைய பிரசுரங்களை தனக்கும் தரும்படியாக அன்புடன் கேட்டுக் கொண்டார். அவருடைய விருப்பப்படி எங்கள் வசம் இருந்த கர்த்தருடைய பிரதிகள் யாவிலும் வகைக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்தோம். அவர் இந்திய ராணுவத்தில் எல்லைப் புற ரஸ்தாக்களை பாதுகாக்கும் ஸ்தாபனத்தில் பணி ஆற்றுவதாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவரான அவருடைய பெயர் போலோங் என்றும் எங்களிடம் கூறினார். அவரிடம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய முழுமையான வேதாகமம் இருக்கின்றதா என்று நாங்கள் கேட்ட போது புதிய ஏற்பாடு மாத்திரம்தான் தன் வசம் உள்ளதாகச் சொல்லவே ஒரு முழுமையான ஹிந்தி வேதாகமத்தை நாங்கள் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. அதற்கப்பால் நாங்கள் பலவாகோட்டிலிருந்த ஆரம்பப் பள்ளியில் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்தோம்.
அங்கிருந்து நாங்கள் கட்டியாபகட் என்ற கிராமத்திற்கு வந்து அந்த கிராமத்திலுள்ள மக்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்தோம். நாங்கள் அந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு வெளியே வரவும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் விரைந்து வந்து கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்ய வந்த உங்களை நாங்கள் என்ன செய்கின்றோம் பார் என்ற ஆவேசத்தில் எங்கள் வாகனங்களில் ஒன்றைத் துரத்தினார்கள். அந்த வாகனத்தை ஓட்டி வந்த நரேஷ் மிகவும் சாமர்த்தியமாக அந்த துஷ்டர்களின் கரங்களில் பிடிபடாதபடி சாமர்த்தியமாக வாகனத்தை ஓட்டிச் சென்று விட்டார்கள்.
அதற்கப்பால் நாங்கள் தோலா என்ற கிராமத்தை வந்தடைந்தோம். அந்தக் கிராமத்திலுள்ள சொற்பமான வீடுகளிலும் பள்ளத்தில் இருந்த அந்த ஊர் ஆரம்ப பள்ளியிலும் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் 4 ஆசிரியர்களும் 60 மாணவர்களும் இருந்தனர். தோலாவில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். டார்ச்சுலாவிலிருந்து தோலா என்ற இடம் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
விடாமல் பெய்த அடை மழை
நாங்கள் 3/10/2009 ஆம் தேதி எங்கள் தேவ ஊழியங்களை முடித்து கர்த்தருடைய கிருபையால் டார்ச்சுலா வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் கர்த்தருடைய ஓய்வு நாளானபடியால் எங்களில் சிலர் உபவாசம் இருந்து அந்த நாளின் மத்தியானம் வரை ஜெபித்தோம். நாங்கள் எல்லாரும் அந்த நாளில் ஒன்றாகக் கூடி கர்த்தரைப் பாடித் துதித்தோம். அந்த நாளில் வானம் கரிய மழை மேகங்களால் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. முந்தின நாள் இரவிலேயே மழை பெய்ய ஆரம்பித்து ஞாயிறு முழுவதும் ஒரு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழை அடுத்த நாள் திங்கள் கிழமை பகல் இரவு முழுவதும் பெய்து செவ்வாய் கிழமையும் தொடர்ந்தது. அன்று நாங்கள் காலையில் எங்கள் காலை ஆகாரத்திற்காக வழக்கமாக நாங்கள் ஆகாரம் சாப்பிடும் மோகன்சிங் என்பவருடைய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் ஆகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எங்கள் வாகனங்கள் ஒன்றின் டிரைவர் மனோஜ் ஒரு மனிதரோடு நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மனோஜ் எங்களிடம் பேசும்போது அவர் பெயர் மதன் மோகன் பட் என்பதாகவும், டார்ச்சுலாவிலுள்ள பெரியதோர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் அவர் குமஸ்தாவாகப் பணி செய்வதாகவும் சொன்னார். அந்த விசயம் அத்துடன் முற்றுப் பெற்றது.
அந்த அற்புதம் நடந்த கதை
மழையில் எந்த ஒரு மாற்றமுமே இல்லை. அது தொடர்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் தேவனுடைய அளவற்ற அன்பின் கிருபையால் என் உள்ளத்தில் ஒரு எண்ணம் உண்டானது. பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் வேலை செய்யும் குமஸ்தா மதன் மோகன் பட் அவர்கள் மூலமாக அந்த பள்ளியின் பிரின்ஸ்பால் அம்மையாரை சந்தித்து அவர்கள் மூலமாக பள்ளியின் பிள்ளைகளுக்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களை கொடுத்துவிடலாமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனது எண்ணத்தை பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களிடமும் மனோஜ் அவர்களிடமும் சொன்ன போது அது அவர்களுக்கு நலமானதாகப் பட்டது. உடனே அவர்கள் இருவரும் பள்ளிக் குமஸ்தாவை சந்தித்து காரியத்தை விளக்கவே அவர் அன்று காலை 10 மணிக்கு சகோதரர்கள் இருவரையும் பள்ளிக்கு வரும்படியாகவும், எங்கள் சார்பில் அவர் பள்ளியின் பிரின்ஸ்பால் அம்மையாரிடம் பேசுவதாகவும் கூறவே, பாஸ்டர் என்.சாமுவேல் அவர்களும் மனோஜ் அவர்களும் தங்கள் கரங்களில் நாங்கள் கொண்டு சென்ற தேவனுடை பிரசுரங்கள் யாவற்றிலும் ஒவ்வொன்றையும், ஒரு ஹிந்தி வேதாகமத்தையும் எடுத்துக் கொண்டு கொட்டும் மழையில் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். பள்ளிக்குச் சென்றவர்கள் எங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வர நாங்கள் எல்லாரும் உள்ளத்தின் பாரத்தோடு நாங்கள் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து ஜெபித்துக் கொண்டிருந்தோம். காரணம் கடந்த 2 நாட்களாக எந்த ஒரு ஊழியமும் செய்யாமல் நாங்கள் மிகவும் கவலையோடிருந்தோம்.
கர்த்தருடைய பேரன்பால் அந்த பெரிய பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் பிரின்ஸ்பால் தேவகி போரா என்ற அந்த அம்மையார் தனக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்கள் யாவையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டதுடன் தனது பள்ளி மாணவிகள் அனைவருக்கும் பிரசுரங்களைக் கொடுக்கும்படியாகக் கேட்டுக் கொண்டார்கள். மதன் மோகன் பட் என்ற அந்த பள்ளி குமஸ்தாவும் பள்ளி பிரின்ஸ்பால் அவர்களிடம் எங்களைக் குறித்துப் பேசியிருக்கின்றார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரர்கள் இருவரும் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து பள்ளியில் கிடைத்த திறந்தவாசலைக் குறித்துச் சொல்லவே, நாங்கள் எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து தேவனுடைய பிரசுரங்களுடன் எங்கள் வாகனங்கள் இரண்டையும் எடுத்துக் கொண்டு கொட்டிக் கொண்டிருந்த மழையின் ஊடாக பெண்கள் மேல் நிலைப் பள்ளியை நோக்கிச் சென்றோம்.
பள்ளியில் 27 ஆசிரிய, ஆசிரியைகள் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு வேதாகமும் தேவனுடைய பிரசுரங்களில் வகைக்கு ஒவ்வொன்றாக ஒவ்வொரு பிரதியையும் ஜெபத்துடன் அளித்தோம். நமக்கு சுவிசேஷம் அளிக்க வகை செய்த குமஸ்தா மதன் மோகன் சிங் பட் அவர்களுக்கும் வேதாகமம் உட்பட அனைத்துப் பிரதிகளையும் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் படித்த மொத்தம் 750 பெண் பிள்ளைகளுக்கு அந்த நாளில் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுக்க தேவ கிருபை பெற்றோம். 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு “சத்திய மார்க்கம்” என்ற படங்கள் மற்றும் விளக்கங்கள் நிறைந்ததும் நிறைய பக்கங்கள் கொண்டதுமான யோவான் சுவிசேஷத்தைக் கொடுத்தோம். நாங்கள் கொடுத்த சுவிசேஷ பிரசுரங்களை பிள்ளைகள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் பெற்று ஆனந்தித்தனர். கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் எந்த ஒரு நிலையிலும் வெளியே சென்று தேவ ஊழியம் செய்ய இயலாமல் முடங்கிக்கிடந்த பாவிகளாகிய எங்களுக்கு அன்பின் கருணாகர கர்த்தர் அப்படிப்பட்டதான ஒரு வழி வாசலைத் திறந்து ஒரு அற்புதமான ஊழிய வாய்ப்பைக் கொடுத்து எங்களை ஆனந்தத்தால் களிகூரப்பண்ணினார். அந்த அன்பருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? அந்த அற்புதம் நடந்த டார்ச்சுலா பெண்கள் மேல் நிலைப் பள்ளியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். “அரசாங்க பெண்கள் இண்டர் காலேஜ்” டார்ச்சுலா, பித்தோர்கார்ட், உத்தராகாண்ட் என்று ஹிந்தியில் அந்த போர்ட் எழுதப்பட்டுள்ளது. கர்த்தருக்கே மகிமை.
எங்கள் விடுதிக்கு ஆச்சரிய வருகை தந்த அந்த நிக்கொதேமு
நாங்கள் ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்ய டார்ச்சுலா வந்திருப்பதை ஆர்.எஸ்.நெகி (R.S.Neggie) என்ற ஒரு மனிதர் அறிந்து கொண்டிருக்கின்றார். இவர் இந்திய எல்லைப்புற காவல் துறை உளவுப் பிரிவில் ஒரு உயர் அதிகாரியாக பணி புரிபவர். இந்த மனிதர் நாங்கள் ஆகாரம் சாப்பிடும் மோகன்சிங் ஹோட்டலுக்கு வந்து எங்கள் நடபடிகளை கவனித்திருக்கின்றார். இந்த மனிதருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் அதிக அன்பும் பற்றும் பாசமும் உள்ளது. இருப்பினும் கிறிஸ்து பெருமானை தொழுது சேவிக்கின்ற கிறிஸ்தவ மக்களுடைய நடபடிகள் ஆண்டவரண்டை அவரை வரவிடாதபடி தடுத்து நிறுத்தியிருக்கின்றன. கிறிஸ்தவ மக்களுடைய தீய நடபடிகளை குறிப்பாக பரேலி என்ற உத்திர பிரதேச பட்டணத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களுடைய காரியங்களை எல்லாம் அவர் தினசரிச் செய்தித்தாட்களில் வாசித்து அவர்களைக் குறித்து வெறுப்புணர்ச்சியடைந்து வந்திருக்கின்றார். ஆண்டவருடைய தேவாலய நிலங்களை எல்லாம் கிறிஸ்தவர்கள் அபகரித்து இந்துக்களுக்கு விற்கும் காரியங்கள் எல்லாம் செய்தி தாட்களில் வாசித்தபடியால் அவருடைய உள்ளம் வேதனை அடைந்திருக்கின்றது.
அன்பின் ஆண்டவர் இயேசுவைக் குறித்து அதிகமாக அறிந்து கொள்ளும் ஆவலில் அந்தக் கொட்டும் மழை நாளில் எங்களண்டை வந்த அந்த நெகி என்பவருக்கு எங்கள் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் இயேசு இரட்சகரைக் குறித்து மிகவும் விபரமாக எடுத்துக் கூறினார்கள். நாம் பார்க்க வேண்டியது கிறிஸ்தவர்கள் அல்ல, ஆண்டவர் இயேசுவைத்தான் பார்க்க வேண்டும். அந்த அன்பின் ஆண்டவர் எப்படிப்பட்டவர்? அவருடைய மகத்தான அன்பு எப்படிப்பட்டது? பாவ மனுக்குலத்தின் மீட்புக்காக அவர் கொடுத்த அளவிட முடியாத அன்பின் விலைக் கிரயம், அவர் மூலமாக உள்ள நித்திய ஜீவன், அவர் மூலமாக நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய உலகம் தரக்கூடாத தேவ சமாதானம், இரட்சிப்பின் சந்தோசம், பாவ மன்னிப்பு யாவையும் குறித்து நமது சகோதரன் மிகவும் தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறினார்கள். வெளியே மழை விடாமல் பெய்து கொண்டிருந்தபடியால் நெகி எந்த ஒரு ஆத்திர அவசரமில்லாமல் பொறுமையோடு இருந்து நீண்ட நேரம் கேட்டு விட்டு மிகவும் சந்தோசத்தோடு எங்களைவிட்டு கடந்து சென்றார். அவர் போகும் பொழுது அவருக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம், சாதுசுந்தர்சிங் மற்றும் எங்கள் வசமிருந்த தேவனுடைய பிரசுரங்களை எல்லாம் ஜெபத்தோடு கொடுத்தோம். கர்த்தருக்கே மகிமை. நமது சகோதரன் சாமுவேல் அவர்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றிக் கூறுவதை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பதுடன், கொட்டும் மழை காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் தங்கள் படுக்கையிலேலேயே அமர்ந்திருந்த நம்முடைய சகோதரர்கள், நெகி என்ற அந்த உயர் அரசாங்க அதிகாரி பொல்லாத கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற வாழ்வின் காரியங்களைக் குறித்துப் பேசும்போது ஒரு புறம் துக்கமும் மறுபுறம் சிரிப்புடன் கவனித்துக் கேட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னுடனே இருப்பேன்
3/10/2009 சனிக்கிழமை இரவு முதல் 6//10/2009 ஆம் தேதி செவ்வாய் கிழமை பகல் இரவு எல்லாம் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. நாங்கள் தங்கியிருந்த டார்ச்சுலா அரசு விடுதி பொது அறையின் அருகில் வெளியே மழைத் தண்ணீர் வடிந்து செல்ல வைத்திருந்த குழாயிலிருந்து சப்தமாக மழைத் தண்ணீர் இரவும் பகலும் கொட்டிக் கொண்டிருந்த சப்தம் எங்கள் காதுகளில் இடைவெளியில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
இந்த அடை மழைக்கு ஒரு முடிவு வராதா? அப்படியே மழை உடனே நின்றுவிட்டாலும் நம்மால் தொடர்ந்து வாகனங்களுடன் பிரயாணப்பட முடியுமா? ஊழியத்தை தொடர முடியுமா? தொடர் மழை காரணமாக எங்கும் நிலச்சரிவு ஏற்பட்டு ரஸ்தாக்கள் பல இடங்களிலும் துண்டிக்கப் பட்டிருக்குமே என்ற கவலை எல்லாம் என்னை வாட்டினதுடன், பெரும் பணம் செலவிட்டு வாங்கியும், அச்சுப்போட்டுக் கொண்டு வந்ததுமான தேவனுடைய பிரசுரங்களின் நிலை என்ன ஆவது என்பதை அறிந்தபோது நான் உள்ளம் கலங்கினேன். இந்த நிலையில் 7/10/2009 ஆம் தேதி இரவில் அன்பின் ஆண்டவர் ஏசாயா 43 : 1-2 வசனங்களின் மூலமாக என்னுடன் திட்டமாகப் பேசி என்னைப் பெலப்படுத்தினார்.
அன்று இரவு நான் தேவ சமூகத்தில் “ஆண்டவரே, நான் அடுத்து வரும் புதிய நாளை தனது பூரண கிரணங்களை உலகிற்கு வீசி உதயமாகும் சூரிய அருணோதயத்தின் ஒளியுடன் எழும்ப எனக்கு உதவி செய்யும் என்ற எனது இருதயக் கதறுதலின் ஜெபம் தேவ சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு அவ்வாறே நான் சூரிய ஒளியின் பிரகாசத்தில் கண் விழித்து எழுந்தேன். தேவ பிள்ளைகளாகிய எங்கள் அனைவருக்கும் மழையற்ற அந்த நாள் மிகுந்த களிகூருதலின் நாளாக இருந்தது.
பரம், பல் மரா, கிம் கோலா, தோலா, கார்ஜியா, சோரிபகட், பங்கா பானி ஊழியங்கள்
7/10/2009 ஆம் தேதி புதன் கிழமை காலையில் நாங்கள் எல்லாரும் டார்ச்சுலாவிலிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள பங்கா பானி என்ற இடத்திற்கு தேவ ஊழியத்தின் பாதையில் புறப்பட்டுச் சென்றோம். கடந்த சுமார் நான்கு நாட்களாக இரவும் பகலும் மழை விடாமல் கொட்டியிருந்ததால் நாங்கள் சென்ற பாதைகளில் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக மழைத் தண்ணீர் நீர் ஓடைகள் ஓடியவண்ணமாக இருந்தன. சேறும், சகதியுமாக இருந்த அந்த நீரோடைகளை எல்லாம் நாங்கள் மிகவும் கவனமாக கடந்து செல்ல வேண்டியதாகவிருந்தது. எங்கள் வழித்தடத்தில் முதலாவதாக பரம் என்ற ஒரு கிராமம் வந்தது. அங்குள்ள நீண்ட கடை வீதியில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அங்கிருந்தோருக்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். அங்கிருந்து நாங்கள் வானளாவ ஓங்கி நின்ற பசுமையான மரச் சோலைகள் நிறைந்த கிராமமான பல்மரா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். பல்மரா என்றால் “பெலன் நீங்கிற்று” என்பது பொருளாகும். கர்த்தர் கொடுத்த மகா பெரிய பெலனை தனது கீழ்ப்படியாமையால் இழந்துபோன சிம்சோனையே அந்த இடம் எனக்கு நினைப்பூட்டுவதாக இருந்தது. எந்த ஒரு நிலையிலும் அன்பின் ஆண்டவருக்கு கீழ்ப்படியாமல் நடந்து அவர் நமக்களித்த பரலோக கிருபைகளை இழந்து போகாமல் காத்துக் கொள்ள அந்த இடம் எனக்கு ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ள வகை செய்வதாகவும் இருந்தது. கர்த்தருக்கே மகிமை.
கடந்த நாட்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக ரஸ்தாக்களின் பல இடங்களில் உடைப்புகள் காணப்பட்டதால் அவைகளை செப்பனிட ரஸ்தா சீரமைப்பு பணியாளர்கள் பலர் சாலைகளில் வேலைகளில் ஈடுபட்டு இருந்ததால் அந்த மக்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை அதிகமான அளவில் கொடுக்க வசதியாக இருந்தது. அந்தக் காட்சியை எல்லாம் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
நாங்கள் எங்கள் பாதையில் கிம்கோலா, தோலா, கார்ஜியா என்ற இடங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி தேவ ஊழியம் செய்துவிட்டு முன்னோக்கி வந்து கொண்டிருந்தோம். கன மழைகளுக்குப் பின்னர் வெயில் மிகவும் காட்டமாக வீசிக் கொண்டிருந்தமையால் மக்கள் தங்கள் ஈரமான துணிகளை எல்லாம் எடுத்து வந்து புல் தரைகளில் உலர வைத்துக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் கொடுத்தோம். ஓரிடத்தில் வரவும் எங்களுக்கு முன்னாலுள்ள கிராமத்தின் பெயர் ஜோரிபகட் அதாவது “திருடன் பிடிபட்டான்” என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். கிராமங்களின் பெயர்கள் எப்படி எல்லாம் இருக்கின்றது பாருங்கள். நீங்களும் அந்த போர்டை இந்தச் செய்தியில் காணலாம்.
நாங்கள் அந்த ஜோரிபகட் என்ற கிராமத்தில் தேவ ஊழியத்தை செய்துவிட்டு எங்களுக்கு முன்னாலுள்ள பங்காபானி என்ற இடத்தை நோக்கிச் சென்றோம். போகும் வழித்தடத்தில் எங்கள் வலது மற்றும் இடது கைப்பக்கங்களில் ஆங்காங்கு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருப்பதை கண்டோம். இன்னும் முழுமையான விளைச்சலை அவைகள் அடையாததால் நாங்கள் அதை விரும்பவில்லை. எங்கள் எல்லாரையும் விட எங்கள் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுக்குத்தான் ஏமாற்றம் அதிகமாக இருந்திருக்கும் என்று நாம் நிச்சயமாக கூறலாம். காரணம், அவர்களுடைய தந்தை ஒரு விவசாயி ஆனபடியால் இந்த நிலக்கடலை எல்லாம் அவர்களுடைய வயலில் விளைந்து சிறு பிராயத்தில் சகோதரன் அதை அதிகமாக விரும்பி சாப்பிட்டிருக் கின்றார்கள்.
நாங்கள் டார்ச்சுலாவிலிருந்து 60 கி.மீ. தூரம் பிரயாணம் பண்ணி பங்காபானி வந்து சேர்ந்தபோது அங்குள்ள மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் மத்தியான ஆகாரத்திற்கான இடை வேளையில் இருப்பதை அறிந்தோம். எங்கள் கண்களுக்கு தென்பட்ட பள்ளிப் பிள்ளைகளுக்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அவர்கள் எல்லாரும் அவைகளை மிகவும் அன்பும் பணிவுடனும் பெற்றுக் கொண்டனர். அந்த ஏகாந்தமான இடங்களுக்கெல்லாம் யார் வந்து இப்படிப்பட்ட அருமையான தேவனுடைய பிரசுரங்களை இலவசமாகக் கொடுப்பார்கள்? பங்காபானி கிராமத்தில் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதையும் நமது ஊழியர்கள் பாக்கேலால் மற்றும் விஜய்சிங் நமது வாகனத்துக்கு அருகில் நின்று கொண்டிருப்பதையும், தேவனுடைய பிரசுரங்களை பெற்றுக்கொண்ட ஒரு மாணவன் கடந்து சென்று கொண்டிருப்பதையும் நீங்கள் செய்தியில் காணலாம்.
பங்காபானி ஊழியத்திற்குப் பின்னர் நாங்கள் டார்ச்சுலா வந்து சேர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த நாளே அங்கிருந்து 65 கி.மீ. தொலைவிலுள்ள டிடிகாட் என்ற இடத்திற்குப் பயணமானோம்.
கன மழை காரணமாக நாங்கள் சென்ற வழிகளில் எல்லாம் நிலச் சரிவுகள் ஏற்பட்டிருந்தமையால் ஆங்காங்கு போக்குவரத்துக்கள் தடைபட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படி ஓரிடத்தில் மலை ரஸ்தாவில் எங்களுக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
நாங்கள் மக்களுக்கு கொடுக்கும் தேவனுடைய பிரசுரங்களை வாங்கிப்படிக்கும் கூட்டமான மக்களையும், தனி நபர்களையும், அடுத்து வரும் படங்களில் நீங்கள் காணலாம். எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுப் படிக்கும் மக்கள் உள்ளங்களில் கர்த்தர் தொடர்ந்து பேசவும், நம்முடைய பிரயாசங்களின் பலனை பரலோகில் நாம் காணவும் தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் அன்பாக தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.