எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 4
எனது இராஜஸ்தான் சுவிசேஷ பிரயாணத்தை தமிழ் நாட்டிலிருந்து ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இராஜஸ்தானத்தில் ஆள்வார் (ALWAR) என்ற இடத்தில் தமிழ் நாட்டிலிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அங்கு பிரசங்கிக்கச் சென்ற துரைராஜ் என்ற கர்த்தருடைய பிள்ளையை உயிரோடே பூமியில் புதைத்து விட்டதான செய்தியை நான் பத்திரிக்கைகளில் படித்தேன். அன்றிலிருந்து நான் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்துக்கொண்டேன். அதாவது “இராஜஸ்தானத்தில் சகோதரன் துரைராஜ் அவர்கள் உயிரோடு புதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அதே ஆள்வார் என்ற இடத்திற்கு நாம் நிச்சயம் சென்று எப்படியும் அங்கேயும் கர்த்தருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்தே தீரவேண்டும்” என்பதே அந்த முடிவு.
அதின்படி 15-2-1971 ஆம் தேதி இரவில் இராஜஸ்தான் ஜெய்ப்பூரிலிருந்து புறப்படும் “டில்லி மெயில்” இரயிலில் ஏறி நள்ளிரவில் நான் ஆள்வார் என்ற பட்டணம் வந்து சேர்ந்தேன். அப்பொழுது கொடிய குளிராக இருந்தது. ஆள்வாரில் யாரையும் அறியாத நான் ஒரு பரதேசியைப்போல ஆள்வார் ரயில் நிலையத்தில் படுத்து இளைப்பாறிவிட்டு யோனா நினிவே பட்டணத்திற்குள் பிரவேசித்தது போல நான் அடுத்த நாள் காலையில் ஆள்வார் பட்டணத்திற்குள் பிரவேசித்தேன்.
ஆள்வார் ஒரு நடுத்தரமான பட்டணம். சற்றுத் தொலைவில் மலைகள் உள்ளது. மலை முகடுகளில் பண்டைய ராஜாக்களின் கோட்டை கொத்தளங்கள் பார்க்கப் பரவசமாக இருக்கின்றன. இங்குள்ள பண்டைய ராஜ அரண்மனை ஒன்றில் ஜில்லா கலெக்டரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அரண்மனையையும், சுற்றியுள்ள வனப்புமிக்க புராதன கட்டிடங்களையும் மனித வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆள்வார் என்ற இடத்தையும், அங்குள்ள மலைக்கோட்டையையும் படத்தில் நீங்கள் காணலாம்.
எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பயணத்தில் ஆஜ்மீர் பட்டணம் வரை நான் எனது தேவ ஊழியங்களை ஓரளவு சிரமமின்றி செய்ய முடிந்தது. அதற்கப்பால் ஆள்வாரிலிருந்து எனக்கு உபத்திரவமும், பாடுகளும் ஆரம்பித்தன. ஆள்வாரில் சுகுணாபாய் தர்மசாலை என்ற இந்துச் சத்திரத்தில் யாத்ரீகர்களோடு தங்கியிருந்து தேவ ஊழியத்தை மேற்கொண்டேன். “அவருக்கோ (நமது இரட்சகருக்கோ) சத்திரத்தில் இடமில்லாதிருந்தது” என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆனால், எனக்கு இந்தச் சத்திரத்தில் இடம் கிடைத்தது. சத்திரத்தில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு விக்கிரக கோயில் இருந்தது. பிசாசின் கோட்டைக்குள் தங்கியிருந்து கொண்டே அவனது கோட்டையை சிதறடிக்க முயலும் அடிமையைப் பயமுறுத்தித் துரத்த சாத்தான் வெகுவாக முயன்றான். ஒரு நாள் இரவில் நான் எனது சொப்பனத்தில் சில பொல்லாத ஆவிகளின் சாயல்களைக் கண்டேன். ஆனால், நான் பயப்படாமல் உறுதியோடு அந்தச் சத்திரத்திலேயே தெய்வ ஒத்தாசையுடன் தங்கியிருந்தேன்.
ஆள்வாரைச் சுற்றிலும் தௌலிதூப், அக்பர்பூர், பீஜாமந்திர், சிலிசேட், சக்கரிபாஸ் போன்ற கிராமங்களில் நான் தேவ ஊழியங்களை நிறைவேற்றினேன். மான்சிங் என்ற சீக்கிய ஏழை தொழிலாளியை ஆள்வார் பட்டணத்தின் எல்லை ஒன்றில் கண்டு அவனது சீக்கிய வம்சத்தில் தோன்றிய மகாத்மா சாதுசுந்தர்சிங் கண்டுகொண்ட மெய்யாம் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பை அவனிடம் ஜெபத்துடன் சொன்னேன். அவன் மிகவும் பொறுமையுடன் என்னருகில் உட்கார்ந்து எனது வாயிலிருந்து புறப்பட்டத் தேவனது வார்த்தைகளை ஆசை ஆவலாகக் கேட்டுக் கொண்டிருந்து இறுதியில் கிறிஸ்து பெருமானைத் தனது வாழ்வின் இரட்சகராக ஏற்றுக்கொள்ளப் போவதாக என்னிடம் உறுதி கூறினான். நான் அவனைவிட்டுப் புறப்படும் சமயம் சில ஹந்தி துண்டு பிரசுரங்களை அவனிடம் கொடுத்துக் கர்த்தருடைய ஆவியானவரின் ஆளுகைக்குள் அவனை ஒப்புவித்துப் புறப்பட்டேன். நான் சத்திரத்தில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட அவன் மிகவும் துக்கமடைந்து “நீங்கள் சத்திரத்திலா தங்கியிருக்கின்றீர்கள்? வேண்டவே வேண்டாம். என் குடிசை வீட்டில் என்னோடு வந்து தங்கிக் கொள்ளுங்கள்” என்று மிகவும் வற்புறுத்தி அன்போடு அழைத்தான்.
எரிக்கும் வெயிலில் ஆள்வாரிலிருந்து பீஜாமந்திர் வரைக்குமான நீண்ட தூர ரஸ்தா வழியாக அநேகக் கிராமங்களைக் கடந்து நூற்றுக்கணக்கான துண்டுப்பிரதிகளை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டே சென்றேன். கொடிய வெப்பத்தால் களைப்படைந்து நடக்கக்கூடப் பெலனற்றவனாய் ஒரு இடத்தில் உட்கார இடம் கேட்டபோது அங்குள்ள ஒரு மனிதனால் கோபத்தோடு துரத்திவிடப்பட்டேன். அந்த நிமிஷமே கர்த்தர் என்னுடைய களைப்பைப் போக்கி என்னை சந்தோஷிக்கப்பண்ணினார். அல்லேலூயா.
சிலிசேட் என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
ஆள்வார் என்ற இடத்திலிருந்து சிலிசேட் என்ற அழகான இடம் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. சிலிசேட் ஒரு அழகான காட்டுப் பிராந்தியம். பண்டைய கால ராஜபுதன அரசன் ஒருவனால் வெட்டப்பட்ட ஒரு அகன்ற நீர்த்தேக்கமும், ஒரு கோடை வாசஸ்தல அலங்காரமான அரண்மனையும் உள்ளது. செய்தியில் அந்த ஏரியையும், அரண்மனையையும் காண்பீர்கள்.
இங்குள்ள மரங்களில் பெரிய பெரிய தேன் கூடுகள் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த இடத்தைப் பார்க்க வந்த சில வாலிபர்களுக்கு சுவிசேஷம் கூறி துண்டுப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தேன். ஹிராலால் என்ற குறிப்பிட்ட ஒரு வாலிபன் மிகவும் உற்சாகம் காண்பித்தான். அன்பின் ஆண்டவர் அவனுடன் தொடர்ந்து கிரியை நடப்பித்திருப்பார் என்று நான் நம்புகின்றேன். அக்பர்பூர் என்ற இடத்திலும் தேவ ஊழியம் மேற்கொண்டேன். சாயங்கால வேளைகளில் ஆள்வார் ரயில் நிலையத்திற்குள் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று சுவிசேஷ பிரதிகளை ரயில் பயணிகளுக்குக் கொடுத்தேன்.
“தௌலிதூப்” என்ற கிராமத்தில் எனக்கு கிடைத்த தூஷணங்கள்
தௌலிதூப் என்ற கிராமத்தில் மக்கள் என் நடமாட்டத்தைக் குறித்துச் சந்தேகப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் நான் பாக்கிஸ்தானத்திலிருந்து வந்துள்ள ஒரு வேவுகாரன் என்று பேசிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் என்னைத் தூஷணங்களால் வசைமாறி பொழிந்தான். நான் ஒரு உண்மையான இந்திய குடிமகன் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டனர். உடனடியாகத் தங்கள் ஊரைவிட்டுப் போய்விட என்னைக் கேட்டுக்கொண்டார்கள். இந்த கிராமத்தினர் என்னைப் பற்றி போலீசில் புகார் கொடுத்திருக்கலாம் என்பதை “பாந்திகுயி” என்ற ரயில் நிலையத்தில் நான் கண்டு கொள்ள முடிந்தது. அதை குறித்து சற்று பின்னர் எழுதுகின்றேன்.
ஆள்வாரில் நடைபெற்ற சிதறலான தேவ ஊழியங்கள்
ஆள்வாரில் சில வைராக்கியமான இந்து சாதுக்களுக்கு அருமை இரட்சகரின் சுவிசேஷ நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். தனிப்பட்டவிதத்திலும் மக்களைச் சந்தித்து சுவிசேஷம் அறிவித்தேன். இந்த ஆத்துமாக்களில் பிரவிண், கட்டாரியா என்ற இரு வாலிபர்கள் மிகவும் தொடப்பட்டதை நான் கவனித்தேன். நான் ஆள்வாரிலிருந்து புறப்படும் கடைசி நாளன்று சாயங்காலம் நான் தங்கியிருந்த சுகுணாபாய் தர்மசாலையின் மானேஜரிடம் சென்று நான் அவருடைய ஆள்வார் ஊருக்கு வந்ததின் காரணத்தையும், அவருடைய சத்திரத்தில் தங்கியிருந்ததின் இரகசியத்தையும் கூறி அவருக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துவிட்டு அன்பின் ஆண்டவர் இயேசு இரட்சகர் எனது தனிப்பட்ட வாழ்வில் என்னைச் சந்தித்ததையும், பாவ மன்னிப்பையும் இரட்சிப்பின் சந்தோசத்தையும், பொங்கி வழியும் தேவ சமாதானத்தையும் எனக்குத் தந்ததையும் குறித்து விபரமாகக் கூறி என் வசமிருந்த வேதாகம சுவிசேஷப் பங்குகளையும், இதர அருமையான கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஜெபத்துடன் அவருக்குக் கொடுத்தேன். அவர் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவில்லை. கர்த்தர் அவரது உள்ளத்தில் தொடர்ந்து நிச்சயமாக கிரியை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் அவரது சத்திரத்தில் தங்கப்போவதின் காரணத்தை அந்த மனிதர் முதலில் அறிந்திருப்பாரானால் நிச்சயமாக அவர் தனது சத்திரத்திற்குள் என்னை நுழையவே அனுமதித்திருக்க மாட்டார்.
சத்திரத்துக்குள் இருந்துகொண்டே அங்கு வரும் பிரயாணிகளுக்கு சுவிசேஷம் அறிவித்தேன். நான் வழக்கமாக ஆள்வாரில் உணவு உட்கொண்ட ஹோட்டலின் முதலாளியைப் பல தடவைகள் சந்தித்து இரட்சகரைப்பற்றிக் கூறி சுவிசேஷப் பிரசுரங்களை அவருக்குக் கொடுத்தேன் நான் சத்திரத்தில் தங்கியிருப்பதின் காரணத்தையும், எனது நடமாட்டங்களையும் மக்கள் தீவிரமாக நிதானித்துக்கொண்டிருப்பதைக் கண்ட நான் இரவோடிரவாக ஆள்வாரை விட்டுப் புறப்பட்டுப் “பாந்திகுயி” என்ற இடத்திற்குப் போய்விட்டேன்.
ஆள்வாரில் அடிமையால் விநியோகிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான சுவிசேஷ கைப்பிரதிகளைப் பெற்றுக்கொண்ட மக்களையும், தனிப்பட்ட முறையில் சந்திக்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளைக் கேட்ட மக்களையும் அன்பின் ஆண்டவர் தொடர்ந்து பிடித்துக் கிரியை நடப்பித்து தமது மந்தையின் ஆடுகளாக்க கர்த்தர் கிருபை செய்வாராக.