எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 3
இராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகர் ஜெய்ப்பூரிலுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் எனக்காக ஜெபித்து என்னை வழி அனுப்பி வைத்தனர். ஜெய்ப்பூரிலிருந்து 80 மைல்கள் பிரயாணம் செய்து நான் ஆஜ்மீர் என்ற பட்டணம் வந்து சேர்ந்தேன். ஆஜ்மீருக்கு வரும் பாதை நெடுகிலும் செழிப்பான கோதுமை வயல்களும், இதர தானியங்கள் பயிரிடப்பட்ட விளை நிலங்களும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாயிருந்தன. ஜீவனுள்ள தேவனை அறியாத மக்கள் நிரம்பிய நூற்றுக்கணக்கான கிராமங்களை நான் கடந்து சென்றேன். அக்கிராமங்களைப் பார்க்கவே என் இருதயம் துக்கத்தால் நிறைந்தது. இந்தக் கிராமங்களுக்கெல்லாம் நாம் தேவனுடைய சுவிசேஷத்தை என்று கொண்டு செல்லப்போகின்றோமோ என்ற கவலை என்னைத் தாக்கிக் கொண்டிருந்தது.
ஆஜ்மீரைச் சுற்றி கக்குவானா, குக்குரா, கேகல், நசிராபாத், தில்வாடா, தில்வாடி, புஷ்கர், னோசர் போன்ற அநேக இடங்களுக்குச் சென்று சுவிசேஷப்பணியைச் செய்து வந்தேன். தில்வாடி கிராமத்தில் ரத்னலால், கங்காராம், ஆச்சார்யா என்ற மூன்று உள்ளங்களில் கர்த்தர் கிரியை நடப்பித்தார். தில்வாடி கிராமத்திற்கு நான் போனபோது நண்பகல் நேரமானபடியால் அன்புள்ள கங்காராம் ஒரு பெரிய கோதுமை ரொட்டியை நான் சாப்பிடும்படி எனக்கு கொடுத்தார். சுத்தமற்ற நிலையில் காணப்பட்ட அந்த ரொட்டியை நான் உண்பது எவ்வாறு? வாங்க மறுத்தால் அன்போடு தரும் உள்ளம் புண்படும் அல்லவா? பேசாமல் அன்புடன் வாங்கி அதை என் பையினுள் வைத்துக்கொண்டேன். பின்னர் கங்காராம் என்னைத் தனது சைக்கிளில் ஏற்றி மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள நசிராபாத்தில் கொண்டு வந்து விட்டுச்சென்றார். வழி நெடுகிலும் நான் அவருக்கு இரட்சகர் இயேசுவைப் பற்றிக் கூறினேன். ரத்னலால் என்ற வாலிபன் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளப் போவதாகக் கூறினான். கர்த்தருக்கே மகிமை.
கக்குவானா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்தேன். தன் வயலுக்குச் சென்று கொண்டிருந்த கிராமவாசி ஒருவனைப் பின் தொடர்ந்து சென்று இரட்சகரைப்பற்றி அவனுக்குக் கூறினேன். நான் அவனைவிட்டுப் பிரியும் வேளையில் ஒரு ஹந்தி சுவிசேஷப் பங்கை அவனுக்குக் கொடுத்தேன். அவன் தனக்கு உருது மொழிதான் தெரியும் என்று கூறி ஒரு உருது புத்தகம் தரும்படி அன்போடு கேட்டான். நான் எனது தோள் பையைத் தேடியபோது ஒரே ஒரு உருது சுவிசேஷப் பங்கைக் கண்டெடுத்து ஜெபத்தோடு அவனிடம் கொடுத்தேன். அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. நிச்சயமாகத் தேவன் அவனை அந்த சுவிசேஷத்தின் மூலம் தொடுவார் என்ற நிச்சய விசுவாசம் எனக்குண்டு.
நசிராபாத் ஒரு பெரிய ராணுவ கேந்திரஸ்தானம். இங்குள்ள இராணுவ உத்தியோகஸ்தர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஊழியம் மேற்கொண்டேன். ஒரு சில வயது வந்த மாணவர்கள் என்னை கேலிபண்ணி பரிகாசித்தனர். இருப்பினும் சில மாணவர்கள் நான் கூறிவற்றைப் பொறுமையோடு கேட்டுப் பிற இடங்களுக்கும் என்னைப் பின்பற்றி வந்தனர். சாயங்காலம் பஸ் நிலையம் வரை என்னோடு வந்து என்னை வழி அனுப்பிவிட்டுச் சென்றனர்.
கக்குவானாவிலிருந்து ஆஜ்மீருக்கான 10 மைல்களுக்கும் அதிகமான தூர ரஸ்தாவில் ஹந்தி சுவிசேஷ பிரதிகளை கொடுத்துக்கொண்டே கால் நடையாக வந்து கொண்டிருந்தேன். வெயிலின் உக்கிரகம் கடுமையாக இருந்தது. வழியில் சற்று தொலைவில் ஓர் ஆஜ்மீர் வயதான மேய்ப்பன் தனது ஆடுகளைத் தன்னந்தனியனாக மேய்த்துக்கொண்டிருந்தான். அவனோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்படியாக ஆவியானவர் என்னைப் பலமாக உணர்த்தியபடியால் நான் எனது பாதையைவிட்டு கீழே இறங்கி அவனண்டை சென்று அந்த எரிக்கும் வெயிலில் இரட்சகரைப்பற்றி அவனுக்குக் கூறினேன். ஆடுகள் தூரமாகச் சென்றுவிட்ட போதினும் நான் அவனுடன் பகிர்ந்து கொண்ட காரியங்களை மிகவும் பொறுமையோடும், அன்போடும் நின்று கேட்டுச் சென்றான்.
ஆஜ்மீர் பட்டணத்தின் தெருக்களிலும் துண்டுப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டு இரவு நேரங்களிலும் சுற்றியலைந்தேன். ஆஜ்மீரில் எனக்குப் புகலிடம் தந்து என்னை ஆதரித்தவர்கள் சக்கன்லால் என்ற ஒரு கிறிஸ்தவ ஆசிரியர் குடும்பமாகும். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் நான் சுவிசேஷ ஊழியத்திற்காகக் கிராமங்களுக்குப் புறப்படுகையில் சக்கன்லால்ஜீயின் அன்புள்ளம் கொண்ட மனைவி துயரம் தோய்ந்த தொனியில் ஹந்தியில் “தம்பி நீங்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டாம். பழக்கமற்ற மக்கள் மத்தியில் நீங்கள் செல்லுவதினால் அவர்கள் உங்களைக் கொல்லக்கூடும்” என்பார்கள்.
பகற்காலங்களில் நான் எனது கிராம சுவிசேஷ ஊழியங்களை முடித்து இரவில் நான் அந்த அன்பான அம்மாவை சந்திக்கும்போது அவர்களின் சந்தோசத்திற்கு எல்லையே இருக்காது. பகலில் நான் செய்த ஊழியங்கள், சென்ற கிராமங்கள், சந்தித்த மக்கள் அனைத்தையும்பற்றி ஒன்றுவிடாமல் கேட்டு கர்த்தருக்குள் ஆனந்திப்பார்கள். கிராமத்தில் குடியானவர்கள் எனக்கு கொடுத்த பட்டாணி போன்றவற்றை நான் அவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்களின் சந்தோசம் இன்னும் அதிகமாக இருக்கும். அக்கம்பக்கத்திலுள்ள கிறிஸ்தவ வீடுகளிலுள்ள மக்களைக்கூட்டிச் சேர்த்து இரவில் ஜெபக்கூட்டங்களை நான் தங்கியிருந்த வீட்டின் மக்கள் ஒழுங்கு செய்தார்கள். நான் ஆங்கிலத்தில் பேசிய தேவச்செய்தியை திருமதி சக்கன்லால் அம்மாஅவர்கள் ஹந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார்கள். கர்த்தர் செய்திகளை ஆசீர்வதித்தார்.
ஒரு நாள் அதிகாலையில் நான் எழும்பி “ஆண்டவரே, இன்று நான் எங்கு செல்ல சித்தமாயிருக்கிறீர்?” என்று கேட்டு அவர் நடத்தின பாதையான னோசர் ரஸ்தாவில் சென்று கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் “தயானந்த சரஸ்வதி ஆச்சிரமம்” என்ற ஒரு இந்து ஆச்சிரமத்தில் ஒரு தோட்டக்கார மனிதர் ஆச்சிரமத் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதரோடு சம்பாஷிக்க என்னைத் தூண்டினார். என்னைக் கண்டதும் அவர் ஆச்சிரமத் திண்ணையில் வந்து அமர்ந்தார். நானும் அவரின் அருகில் உட்கார்ந்து தேவ ஓத்தாசையோடு ஆண்டவர் இயேசுவின் மூலமாகவுள்ள பாவ மன்னிப்பையும், தேவ சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் குறித்து தெளிவாகக் கூறினேன். எங்கள் சம்பாஷணை நீடித்தது. அந்த மனிதரின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிப்பதை என்னால் நன்கு காண முடிந்தது. நான் அந்த மனிதரைவிட்டு பிரியும்போது அநேக ஹிந்தி மொழி சுவிசேஷ துண்டுப்பிரசுரங்களையும், சுவிசேஷப் பங்கு ஒன்றையும் கொடுத்தேன். ஆஜ்மீரில் நான் சந்தித்த ஆத்துமாக்களில் இந்த தோட்டக்கார மனிதரும் ஒரு தவனமுள்ள மனிதராவார்.
ஆஜ்மீர் பட்டணத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 5 நாட்கள் ஊழியம் செய்தபின் மீண்டும் நான் ஜெய்ப்பூர் பட்டணம் போய்ச் சேர்ந்தேன். அடிமையை ஆஜ்மீரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் எவ்வித நாசமோசமின்றிப் பாதுகாத்து பரதேசியின் மூலம் செய்யப்பட வேண்டிய எல்லா ஊழியங்களையும் தம்முடைய நாம மகிமைக்காக நிறைவேற்ற ஒத்தாசை புரிந்த அன்பின் ஆண்டவரை நன்றி நிறைந்த உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன்.