இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்
தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் இதுவரை வாசித்து வந்தது மட்டுமேதான் இராஜஸ்தான் மாநிலத்தில் நான் செய்த தேவ ஊழியங்கள் என்று நினைத்துவிட வேண்டாம். தேவகிருபையால் அந்த மாநிலத்தில் பின் வந்த ஆண்டுகளில் எவ்வளவோ தேவ ஊழியங்கள் மேற்கொள்ளப்பட்டன. கர்த்தருக்கே மகிமை.
அந்த மாநிலத்தின் ஜோத்பூர், உதயபூர், பிக்கானீர், தேவிகுண்ட், ஜெய்சால்மீர், பரத்பூர் போன்ற பல இடங்களில் சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களும், நானும் ஒன்றாக இணைந்து தேவ ஊழியங்களைச் செய்தோம். ஜெய்சால்மீர் என்ற இடத்தில் முழுமையான தார் பாலைவனத்துக்குள்ளேயே நாங்கள் சென்று கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தோம். அதுபற்றிய முழுமையான விபரங்களை எல்லாம் நான் கடந்த நாட்களில் நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் எழுதினேன். உங்களில் அநேகர் அதை கட்டாயம் வாசித்திருப்பீர்கள்.
இராஜஸ்தானின் பிக்கானீர் பட்டணத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் தார் பாலைவன எல்கையில் தேஷ்நோக் (DESHNOKE) என்ற ஒரு இடம் உண்டு. பிக்கானீர் பட்டணத்திலிருந்து நாம் இந்த இடத்திற்கு ரயிலிலும் வரலாம். ஆம், அங்கு ஒரு ரயில் நிலையமும் உண்டு. ரயில் நிலைய அறிவிப்பு பலகையை படத்தில் நீங்கள் காணலாம்.
நம் முழு உலகத்திலும் எந்த ஒரு இடத்திலும் இல்லாதவிதத்தில் இங்குதான் எலிகளை தெய்வங்களாக வழிபடும் “கர்ணி மாதா” கோயில் ஒன்று உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் திரளாக இங்கு வந்து இங்குள்ள கோயிலில் உள்ள ஒரு சில ஆயிரம் எலிகளுக்கு ஆகாரம் கொடுத்து அவைகளைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிச் செல்லுவதை நாம் ஆச்சரியத்துடன் காணலாம். நானும், சகோதரன் நார்ட்டன் அவர்களும் அந்த மாநிலத்திற்கு தேவ ஊழியத்திற்காக 1997 ஆம் வருடம் சென்றிருந்தபொழுது இந்தக்காரியத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியமடைந்து எப்படியாவது தேஷ்நோக் என்ற அந்த இடத்திற்குச் சென்று எலி கோயிலைப் பார்த்து அந்த இடத்திலும் ஆண்டவருக்கு எப்படியும் ஒரு தேவ ஊழியம் செய்துவிட வேண்டுமென்ற ஆவலில் ஒரு நாள் பிக்கானீரிலிருந்து ஜெபத்தோடு தேஷ்நோக்கிற்கு சுவிசேஷ பிரசுரங்களுடன் பேருந்தில் நாங்கள் பயணமானோம்.
அங்குள்ள கர்ணி மாதா கோயிலைச் சென்று பார்த்தோம். திரளான எலிகள் அந்தக் கோயிலில் வாழ்வதையும், அவைகளை வணங்குவதற்காக வருகின்ற மக்கள் அவைகளுக்கு உணவுப் பொருட்களைப் படைப்பதையும், அவைகளுக்கென்று இனிப்பான பாயாசத்தை பெரிய பெரிய கொப்பரைகளில் தயாரிப்பதையும் எங்கள் கண்ணாரக் கண்டு பிரமிப்படைந்தோம். அந்த எலி தெய்வங்கள் சாப்பிட்ட முந்திரி பருப்புகள் மற்றும் பாதாம் கொட்டைகளை மக்கள் ஆவலாக சாப்பிடுகின்றனர். அவைகள் குடித்த மற்றும் அசுத்தப்படுத்திய பாயாச தட்டுகளின் பாயாசங்களை சாப்பிட மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். அவைகளைச் சாப்பிடுவதால் தங்கள் சரீர நோய் பிணிகளிலிருந்து சுகம்பெறுவதுடன், தாங்கள் செய்யும் தொழில்களில் லாபம், மன நிம்மதி, மற்றும் பிள்ளைப்பேறு போன்றவைகள் கிடைப்பதாக அவர்கள் முழுமையாக நம்புகின்றனர். இந்த செய்தியில் “கர்ணிமாதா” எலிக் கோயிலின் படத்தையும், அங்கு எலிகளுக்கு பெரிய தட்டுகளில் ஊற்றப்பட்ட இனிப்பு பாயாசத்தை எலிக்கூட்டங்கள் ஆசையாகக் குடித்துக்கொண்டிருப்பதையும் நீங்கள் படங்களில் காணலாம்.
நாங்கள் எலிக்கோயிலுக்குள் எந்த ஒரு ஊழியமும் செய்ய வில்லை. அப்படிச் செய்ய நாங்கள் விரும்பவுமில்லை. காரணம், அது தவறு என்பதுவும் மற்ற மக்களின் மனதைப்புண்படுத்தும் காரியம் என்பதையும், அப்படிச் செய்தால் நமக்கும் திட்டமான ஆபத்து உண்டு என்பதையும் நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். ஆனால் கோயிலைச் சுற்றி காணப்பட்ட ஒரு சிலருக்கு மிகவும் இரகசியமாக சுவிசேஷப் பிரசுரங்களை விநியோகித்துவிட்டு அந்த தேஷ்நோக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்து அங்கு ஏதாவது ஊழிய வாய்ப்புகள் கிடைக்காதா என்ற தாகத்தில் ஊருக்குள் கடந்து சென்றோம். அப்படி நாங்கள் செல்ல வேண்டுமென்பது தேவனின் அநாதி தீர்மானமாக இருந்தது என்பதை பின்னர்தான் நாங்கள் கண்டு கொண்டோம்.
தேஷ்நோக் என்ற அந்த பாலைவன கிராமத்தின் வீடுகளை நாங்கள் பார்த்தபோது மிகவும் பரவசம் அடைந்தோம். அங்குள்ள வீடு ஒன்றின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.
அப்படி நாங்கள் கண்ட ஒரு வீட்டின் பின் பக்கமாக நான் போய் அதை ஆச்சரியமாகப் பார்த்தபோது அந்த வீட்டின் மூதாட்டி ஒருவர் என்னுடன் பலத்த குரல் எழுப்பிச் சண்டைக்கு வந்துவிட்டார்கள். மூதாட்டியின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து ஒரு வாலிபன் ஓடி வந்து அவனும் அந்த அம்மாளுடன் சேர்ந்து என்னுடன் தர்க்கம் செய்தான். அப்பொழுது சகோதரன் நார்ட்டன் அவர்கள் வந்து “நாங்கள் வசிக்கும் தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட வீடுகள் கிடையாது. உங்களுடைய வீடுகள் நூதனமாக கட்டப்பட்டுள்ளதால் தனது ஆர்வ மிகுதியால் எனது நண்பர் வீட்டின் பின்புறமாக சென்று பார்த்துவிட்டார்கள். மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பின்னர் நாங்கள் சமாதானமாகிவிட்டோம். அந்த வாலிபன் எங்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்புடன் உபசரித்தான். அந்த வாலிபனின் பெயர் ஜெகதீஷ் டாண் என்பதாகும். அந்த வாலிபன் கர்ணிமாதா எலிக்கோயிலின் பூஜாரிகளில் ஒருவர் என்பதை எங்களிடம் சொன்னான். அவன் தனது அன்பான மனைவியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினான். அந்தப்பெண் தனது முகம் முழுவதையும் நன்றாக மூடிக்கொண்டிருந்தாள். அவள் பள்ளி சென்று படித்த அறிவுள்ள மகள். சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு எங்களுடன் கொண்டு சென்ற சுவிசேஷப் பிரசுரங்களை வகைக்கு ஒன்றாக அவளுக்கு ஜெபத்துடன் கொடுத்தோம். அவள் அவைகளை மிகுந்த ஆர்வத்துடன்வாங்கி ஒவ்வொன்றாக வாசித்தாள். அவைகளை அவள் தன் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.
அடுத்து வந்த 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாங்கள்ஒழுங்காக இராஜஸ்தானிலுள்ள அந்தக் கர்ணிமாதா எலி கோயிலுக்குச் சென்றோம். இப்பொழுது எங்களுக்கு எலி கோயிலுக்குள்ளேயே தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை தைரியமாகக் கொடுத்து ஊழியம் செய்யக்கூடிய பாக்கியம் கிடைத்தது. காரணம், நம்முடைய ஜெகதீஷ் டாண் என்ற வாலிபன் அங்குதானே பூஜாரியாக பணி செய்கின்றார். ஜெகதீஷ் எலிக்கோயிலில் பணிசெய்து கொண்டிருக்கும் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
நாங்கள் எலிக்கோயிலுக்குள் சென்றதும் ஜெகதீஷ் எங்களை அன்புடன் வரவேற்று சற்று நேரத்திற்கெல்லாம் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுவார். எங்களைக் கண்டதும் அந்த வாலிபனின் மனைவிக்கு அத்தனையானதொரு சந்தோசம் உண்டாகிவிடும். முதல் தடவைதான் தனது முகத்தை முழுமையாக மூடியிருந்தார்கள். இப்பொழுது திறந்த முகத்தோடு எங்களை வரவேற்றார்கள். திறந்த முகத்தோடு தனது சிறிய வீட்டிற்கு முன்னர் கணவர் ஜெகதீசுடன் நிற்பதை படத்தில் நீங்கள் காணலாம்.
நாங்கள் சென்றதும் வீட்டிலுள்ள பண்டம் பலகாரங்களை எல்லாம் நாங்கள் சாப்பிட எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து வைப்பார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் ஜெகதீஷ் தனது அன்பின் உச்ச கட்டமாக ஒரு பாட்டல் மதுவையும் நாங்கள் குடிப்பதற்காக கொண்டு வந்து வைப்பார். “நாங்கள் மது அருந்துவதில்லை” என்று சொன்னதும் அந்த வாலிபனின் ஆச்சரியம் எல்லை தாண்டிச் சென்றுவிடும்.. “நாங்கள் ஆராதிக்கும் ஆண்டவர் இயேசு இரட்சகர் பரிசுத்தமுள்ளவர். அவருடைய பிள்ளைகளாகிய நாங்களும் மது அருந்துவதில்லை. நீங்களும் மது அருந்தக்கூடாது. அது கொடிய தீய பழக்கம். நமது சரீரத்தையும், மனதையும் வெகுவாக பாதிக்கும், நமது குடும்ப சமாதானத்தை சீர் குலைத்து நம்மை தரித்திரத்துக்கும், சஞ்சலத்திற்கும் வழிநடத்திச் செல்லும் என்று ஆலோசனை கூறுவோம்” எங்களுடைய வாயின் வார்த்தகள் மற்றும் நடபடிகளை கவனிக்கும் ஜெகதீஷின் மனைவி நாங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தேவனுடைய பிரசுரங்களை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி வாசிப்பார்கள். வீட்டில் சும்மாயிருக்கும் சமயங்களிலும் அவைகளை வாசிப்பதை நாங்கள் கண்டு கொண்டோம். காரணம், நாங்கள் அவர்களுக்கு கொடுப்பதற்காகவே வித்தியாசமான, வித விதமான கர்த்தருடைய பிரசுரங்களை டில்லி போன்ற இடங்களிலிருந்து வாங்கிக் கொண்டு செல்லுவோம். அவைகளை அவர்கள் சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டு ஒவ்வொன்றாக கவனமாகப் பார்ப்பார்கள். ஏதாவது பிரசுரங்களை நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்தால், இது என் வசம் உள்ளது, அதை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன் என்று அதை எங்களிடம் திருப்பித் தந்து விடுவார்கள். மிகுந்த தவனமுள்ள ஆத்துமா. அன்பின் ஆண்டவர் அந்த தவனமுள்ள ஆத்துமாவுடன் எப்படியாவது தமது ஜீவனுள்ள வசனங்களின் மூலமாக இடை பட்டிருப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். ஒரு முக்கியமான காரணம் என்னவெனில் பிள்ளையில்லாமல் நீண்ட நாட்கள் கண்ணீரிலிருந்த அவர்களை பாவிகளாகிய நாங்கள் அவர்கள் இல்லம் சென்று சந்தித்த பின்னர் ஆண்டவர் கர்ப்பத்தின் கனியினால் ஆசீர்வதித்தார். ஒரு அழகான ஆண் மகவை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். அதிலிருந்து எங்கள் மீதும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் தேவனுடைய பிரசுரங்களின் மீதும் அளவற்ற வாஞ்சை அந்த மகளுக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து எப்படியாவது தேஷ்நோக் என்ற அந்த எலிக்கோயில் உள்ள பாலைவன கிராமத்திற்குச் சென்று ஜெகதீஷ் பூஜாரியின் மனைவியை இரட்சகரின் அன்புக்குள் வழிநடத்திவிட வேண்டும் என்ற தாகத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டு காலம் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். 2000 ஆம் ஆண்டில் நாங்கள் அங்கு செல்ல இயலவில்லை. 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டில்லியில் ஜன்பாத் என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ ஹிந்தி புத்தகசாலையில் (Masihi Sahitya Sanstha) ஜெகதீஷின் மனைவிக்குக் கொடுப்பதற்காக நல்ல பயனுள்ள சிறு சிறு ஹிந்தி கிறிஸ்தவ புத்தகங்களை வாங்கிக்கொண்டு பிக்கானீர் பட்டணம் சென்று அங்கிருந்து தேஷ்நோக்கிலுள்ள எலிக்கோயிலுக்கு நாங்கள் சென்றபோது ஜெகதீஷ் எங்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். குடிசை வீட்டை நெருங்க நெருங்க எங்களைச் சந்திக்க ஆசை ஆவலாக எதிர்கொண்டு வரும் அந்த அன்பு மகள் இந்த தடவை வரவில்லை. வீடு அமைதியாக காணப்பட்டது. ஜெகதீஷ் தனது கண்களில் கண்ணீர் பெருக தனது அருமை மனைவி எதிர்பாராதவிதமாக திடீரென மஞ்சள் காமாலை நோயால் மரித்துப் போனாள் என்றும் அவர்களை சுடுகாட்டில் வைத்து எரித்த அவர்களின் சாம்பல்தான் வீட்டிற்குள் ஒரு பாத்திரத்தில் இருக்கிறதென்றும், ஹரித்துவாரத்திலுள்ள கங்கை நதியில் அதைக் கறைப்பதற்காக பத்திரமாக வைத்திருக்கின்றேன் என்றும் சொன்னார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் எங்கள் துயரம் கட்டுக்கடங்காமல் சென்றது. அந்த குடிசை வீட்டிற்கு முன்னால் நாங்கள் இருவரும் சற்று நேரம் ஸ்தம்பித்து நின்றுவிட்டோம். எப்படியாவது தேவ கிருபையால் அந்த ஆத்துமாவை இரட்சகரின் அன்புக்குள் பூரணமாக வழிநடத்திவிடலாம் என்ற எங்கள் பரலோக ஆவலை சத்துரு தட்டிப்பறித்துவிட்டானே என்று நாங்கள் எங்கள் உள்ளத்திற்குள் மிகுதியாக வியாகுலப்பட்டோம். ஆண்டவருடைய வழிகள் நமக்குத் தெரியவில்லை. ஒருக்கால் நாங்கள் ஏற்கெனவே தொடர்ச்சியாக 3 ஆண்டு காலங்கள் அந்த ஆத்துமாவுக்கு ஜெபத்துடன் கொடுத்த தேவனுடைய பிரசுரங்கள் மூலமாக ஆண்டவர் அவள் உள்ளத்தில் நிச்சயமாக கிரியை நடப்பித்திருப்பார் என்று நாம் விசுவாசிக்கலாம். “வருடத்தில் அக்டோபர் மாதம் பிறந்துவிட்டால் போதும் எனது மனைவி உங்கள் இருவரின் வருகையைத்தான் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருப்பாள். நாட்கள் கடந்து செல்லுகின்றதே. நமது மகாத்துமாக்கள் ஏன் இன்னும் வரவில்லை” என்று அவள் என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பாள் என்று ஜெகதீஷ் டாண் என்ற அந்த எலிக்கோயில் பூஜாரி எங்களிடம் சொன்னபோது அந்த இடத்தில் சத்தமிட்டு அழுதுவிடலாம் போலவிருந்தது. எங்கள் துயரம் அந்த அளவிற்குச் சென்றது. கர்த்தருக்குள் எங்களை ஆறுதல்படுத்திக்கொண்டு நாங்கள் வாங்கிச் சென்ற புத்தகங்களை ஜெகதீஷ்க்குக் கொடுத்து அவைகளை அவனுடைய மனைவியைப்போல ஆவலுடன் படிக்கவும் மெய்யான ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவும் அன்புடன் கேட்டுக்கொண்டோம்.