இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்களின் ஒரே ஒரு ஊழியப் பகுதி
(இமாச்சல் பிரதேசத்தில் பாவியாகிய நான் தனிமையிலும் அதின் பின்னர் சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் இருவருமாக அங்குள்ள அநேக இடங்களுக்குச் சென்று தேவ ஊழியங்களை ஆரம்ப நாட்களில் தேவ அன்பால் செய்ததுண்டு. எல்லா துதி, கனம், மகிமை நம் ஆண்டவர் இயேசு இரட்சகர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.)
தேவ ஊழியர்களும், இரண்டு வாகனங்களின் ஓட்டுநர் களுமாகிய நாங்கள் எல்லாரும் ஒன்றிணைந்து 2 முழுமையான நாட்கள் இமாச்சல் பிரதேசத்திலுள்ள உன்னா என்ற பட்டணத்தில் பாஸ்டர் சகோதரன் சங்கர்தாஸ் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து தேவனுடைய பிரசுரங்களை சிரமமின்றி மக்களுக்குக் கொடுப்பதற்காக வகைப்படுத்தி அட்டைப் பெட்டிகளில் நிரப்பிக்கட்டி லாரி ஒன்றில் ஏற்றிக்கொண்டு சம்பா என்ற இடத்திற்குப் புறப்பட்டோம். லாரி எங்களுக்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்றுவிட்டது. அதில் நமது தேவ ஊழியர் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் லாரியில் ஏற்றப்பட்ட ஏராளமான பெட்டிகளில் இருந்த தேவனுடைய பிரசுரங்கள் அச்சிடப்பட்ட அச்சுக்கூடத்திலிருந்தும், இந்திய வேதாகம சங்கம் அலகாபாத்திலிருந்தும் பெறப்பட்ட தஸ்தாவேசுகளுடன் (Documents) புறப்பட்டார்கள். அந்த சான்றுகள் நமக்கு இல்லாத பட்சத்தில் நாம் வணிக வரித் துறையினருக்கு பெருந்திரளான பணம் விற்பனை வரியாக செலுத்த வேண்டும்.
நாங்கள் எல்லாரும் அந்த நாளின் காலை வேளையில் மிகுதியான ஜெபத்துடன் தேவ சமூகத்தில் எங்களைத் தாழ்த்தி ஒப்புவித்து, அடுத்து வரும் சுமார் ஒரு மாத கால தேவ ஊழியங்களை கர்த்தர் தம்முடைய நாமத்திற்கு மகிமையாக சிறப்பாக எடுத்து நடத்தவும், பரதேசிகளாகிய எங்கள் எல்லாரையும், வாகனங்களையும் தமது இரத்தக் கோட்டைக்குள்ளாக மறைத்துக் காத்துக்கொள்ளவும் பாரத்தோடு மன்றாடிவிட்டு எங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தோம். வழியில் சந்திக்கும் மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுப்பதற்காக எங்களுடைய 2 வாகனங்களிலும் போதுமான அளவுக்கு பெட்டிகளை நாங்கள் தயாராக வைத்துக் கொண்டோம்.
வாகனங்கள் இரண்டுக்கும் அவைகளின் எரிபொருள் டாங்குகள் நிரம்பும் அளவுக்கு டீசல் நிரப்பிக் கொண்டோம். அழகிய அந்தக் காலை வேளையில் மாத்திரம் குரல் எழுப்பிப் பாடும் இமயமலைகளின் சிறிதும் பெரிதுமான பறவைகளின் இனிய குரல்களைக் கேட்டு மனமகிழ்ந்து கர்த்தருக்குத் துதி செலுத்திக் கொண்டே புறப்பட்டுச் சென்றோம். தங்களுடைய அந்த நாளின் பூவுலக அலுவல்களை அந்தக் காலையிலேயே ஆரம்பித்து செய்து கொண்டிருந்த கிராம மக்களை வலது இடது கைப் பக்கங்களில் பார்த்துக் கொண்டே நாங்கள் சென்றோம். “மனுஷன் வருத்தம் அனுபவிக்கவே பிறந்திருக்கிறான்” (யோபு 5 : 7) என்ற யோபு பக்தனுடைய வார்த்தைக்கேற்றபடி அந்த நாளுக்கான வருத்தத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டதை அந்த ஏழை மக்களின் முகங்கள் பிரதிபலிப்பதாக இருந்தது.
நாங்கள் 32 கி. மீட்டர் தூரம் பிரயாணம் செய்து ஆம்ப் என்ற ஒரு சிறிய பட்டணத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். அந்த ஆம்ப் என்ற இடம் ஒரு மலை அடிவாரத்தில் இருப்பதை நாங்கள் கவனித்தோம். அங்கிருந்து எங்கள் பயணப்பாதை மலை ஏற்றத்தில்இருப்பது தெரிந்தது. எங்கள் எல்லாருக்கும் நல்ல பசியாக இருந்ததால் அந்த இடத்திலுள்ள ஒரு ஹோட்டலில் எங்கள் காலை ஆகாரத்தை சாப்பிட்டுவிட்டு அந்த ஹோட்டலில் உள்ளவர்களுக்கும், அப்பொழுது அங்கு காலை ஆகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தோடு கொடுத்துவிட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
ஆம்ப் என்ற இடத்திலிருந்து எங்கள் பயணப்பாதை மலை மீதே செல்லுவதாக இருந்தது. இமயத்தின் இவ்வித சிறு மலைகளை “சிவாலிக் மலைகள்” என்று அழைக்கின்றனர். நாங்கள் இந்த இமயமலைகளில் உள்ள சிறிதும் பெரிதுமான கிராமங்களிலும், பட்டணங்களிலுமாக எங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்தி ஏராளமான தேவனுடைய பிரதிகளைக் கொடுத்துக் கொண்டே சென்றோம். மக்கள் எந்த ஒரு எதிர்ப்பும், மறுப்புமில்லாமல் அவைகளை சந்தோசத்தோடு வாங்கிப் படித்துச் செல்லுவதை எங்களால் காண முடிந்தது. கர்த்தருக்கே மகிமை.
சிந்துபூரணி வந்தடைந்தோம்
எங்கள் பிரயாணத்தின் பாதையில் சிந்துபூரணி என்ற ஒரு புகழ்பெற்ற இந்து புண்ணிய ஸ்தலத்தை நாங்கள் வந்தடைந்தோம். நாங்கள் எங்கள் காலை ஆகாரத்தை சாப்பிட்ட ஆம்ப் என்ற இடத்திலிருந்து இந்த இடம் 43 கி.மீ. தொலைவில் உள்ளது. மலையில் சுமார் 4000 அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்திலுள்ள இந்து கோயில் பெரிய ஆலமரங்களால் சூழப்பட்டு நாங்கள் சென்ற ரஸ்தா ஓரமாகவே இருப்பதை நாங்கள் கவனித்தோம். கணவன் இறந்து போனால் அவனுடன் உடன்கட்டை ஏறுகின்ற மனைவிகளுக்கான தேவதையாகிய “சதி மாதா” வின் பாதமும், அந்த தேவதையின் நெற்றிப் பொட்டும் (திலகம்) இங்கு இருப்பதாகக் கூறப்படுகின்றது. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் சதி மாதாவிடம் யார் வந்து என்ன கேட்டாலும் கொடுப்பதாக நம்பப்படுவதால் ஏராளமான இந்து யாத்ரீகர்களை எங்களால் காண முடிந்தது. இந்த சிந்துபூரணி என்ற இடத்திலும் நாங்கள் எங்கள் வாகனங்களை தைரியமாக நிறுத்தி தம்மிடம் வந்து கேட்கும் எந்த ஒரு மாந்தருக்கும் நித்திய ஜீவனை முற்றிலும் ஈவும், இலவசமுமாக அளிக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசுரங்களை ஜெபத்தோடு வழங்கினோம். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
சிந்துபூரணி என்ற இடத்திலிருந்து நாங்கள் 32 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து தல்வாடா என்ற ஒரு பட்டணத்துக்கு வந்து சேர்ந்தோம். அந்தப்பட்டணம் மிகவும் ஜன நெருக்கடியான இடமாக இருந்தமையால் நாங்கள் அந்த இடத்தில் சுவிசேஷப் பிரசுரங்கள் எதையும் கொடுக்காமல் அப்படியே கடந்து சென்றுவிட்டோம். வழியில் ஒரு மலை கிராமத்தில் ரஸ்தா ஓரமாக இருந்த ஒரு சிறிய ஹோட்டலில் நாங்கள் எங்கள் நண்பகல் ஆகாரத்தை அருந்தினோம். பசியாக இருந்த எங்களுக்கு அங்கு அளிக்கப்பட்ட ஆகாரம் திருப்தியாக இருந்ததுடன் அதின் விலையும் மிகவும் நியாயமானதாக தெரிந்தது. ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்னர் அந்த உணவகத்தில் இருந்தோர் அனைவருக்கும் சுவிசேஷ கைப்பிரதிகளை கொடுத்துவிட்டு அந்த இடத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டபின்னர் எங்கள் பிரயாணத்தை மீண்டும் தொடங்கினோம். அந்த நாளின் காலை வேளையிலிருந்து நண்பகலைத் தாண்டி வெகு நேரம் வரை அன்பின் ஆண்டவர் எங்களுக்கு நல்ல ஊழியங்களைத் தந்தார். கிராமங்களிலும், பட்டணங்களிலும், ரஸ்தாக்களில் செல்லும் ஏராளமான மக்களுக்கு ஆங்காங்கு எங்கள் வாகனங்களை நிறுத்தி, நிறுத்தி நிறைய சுவிசேஷ பிரசுரங்களை நாங்கள் தேவகிருபையால் கொடுத்து முடித்திருந்தோம். மத்தியான ஆகாரத்திற்குப் பின்னர் அதிகமான கிராமங்கள் எங்கள் வழித்தடத்தில் இல்லாததாலும், வாகனங்கள் உயரமான மலை ஏற்றத்தில் கானகங்களின் ஊடாகச் சென்று கொண்டிருந்தபடியாலும், மொத்தத்தில் நாங்கள் எல்லாரும் பிரயாணக் களைப்புற்றிருந்தபடியாலும் அதற்கு மேல் அதிகமான ஊழியங்கள் எதுவும் எங்களால் செய்ய முடியவில்லை.
தல்வாடாவிலிருந்து ராஜா கா தாலாப், நூர்பூர், லகரு, கஜ்ஜர் போன்ற இடங்களைக் கடந்து சம்பா என்ற பட்டணம் வரும்போது பொழுது சாய்ந்துவிட்டது. எங்களுக்கு முன்பாக தேவனுடைய பிரசுரங்களை ஏற்றி வந்த லாரியிலுள்ள ஏராளமான அட்டைப் பெட்டிகளை எங்கு இறக்கி வைப்பது என்பது பிரச்சினையாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் அவைகளை வைக்க இடம் கிடைக்கவில்லை. சகோதரன் நார்ட்டன் அவர்களும், நானும் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலய முக்கிய அங்கத்தினர் ஒருவரைப் பார்த்து இடம் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக நமது ஊழியத்தில் கலந்து கொண்டிருந்த பாஸ்டர் சகோதரன் சங்கர்தாஸ் அவர்களின் முயற்சியால் சம்பாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரனின் வீட்டில் அவைகளை வைக்க இடம் கிடைத்தது. தேவனுடைய திரளான பிரசுரங்களை தன் வீட்டில் வைத்துக்கொள்ள இடம் அளித்த அந்த அடியானின் வீட்டைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
தேவனுடைய அளவற்ற இரக்கப் புண்ணியத்தால் அந்தப் பட்டணத்தில் நாங்கள் எல்லாரும் வசதியாக தங்கிக்கொள்ள இமாச்சல் பிரதேச அரசாங்க சுற்றுலா பயணியர் விடுதியில் ஒரு பொது அறை எங்களுக்குக் கிடைத்துக் கொண்டது. சுமார் 12 கட்டில்கள் போடப்பட்டிருந்த அந்த முழு அறையையே நாங்கள் அப்படியே வாடகைக்கு எடுத்துத் தங்கிக் கொண்டோம். கூடுதலான எந்த ஒரு தொகையையும் அவர்கள் எங்களிடம் வசூலிக்கவில்லை. கர்த்தருக்கு துதி உண்டாவதாக. அறையில் இராக்காலத்தில் கொசுக்கடி அதிகமாக இருந்ததால் ஒவ்வொரு நாளும் இரவில் கொசுவர்த்தி வைத்துத்தான் நாங்கள் நித்திரை செய்ய வேண்டியதாக இருந்தது.
சம்பா பட்டணம் குறித்த சில வரிகள்
சம்பா பட்டணத்திற்கு சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களும், நானும் 1994 ஆம் ஆண்டு வந்து ஒரு அற்பமான சிறிய தேவ ஊழியத்தைச் செய்துவிட்டு திரும்பியிருக்கின்றோம். சம்பா பட்டணத்திலும் அதற்கு வெகு அருகாமையிலுள்ள ஒரு சில இடங்களிலும் தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் கொடுத்ததுண்டு. அத்துடன் ராவி நதிக்கரையின் செங்குத்து மலை முகட்டில் இருந்த ஒரு சிறிய கிறிஸ்தவ குடியிருப்பு பகுதியில் இருந்த வீடுகளில் நடந்த ஜெபக்கூட்டங்களில் நாங்கள் தேவச் செய்தி கொடுத்த நினைவும் வருகின்றது.. மலையின் மேல் அமைந்துள்ள அழகிய சம்பா பட்டணத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
புரதான இந்து கோயில்களால் நிரம்பி நிற்கும் சம்பாவில் ஒரு கிறிஸ்தவ தேவ ஆலயமும் உயர்ந்த மேட்டின் மேல் இருக்கின்றது என்று சொன்னால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியம் கொள்ளுவீர்கள். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அந்த தேவ ஆலயம் இரகசிய கிறிஸ்தவனான ஒரு இந்து ராஜாவால் கட்டப்பட்டு சம்பாவிலுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதுதான். சம்பாவை ஆண்ட அந்த குறுநில மன்னனின் பெயர் “ராஜா ஷாம்சிங்” என்பதாகும். ஆலயத்தின் கிராதியில் உள்ள ஒரு சலவைக் கல்லில் இவ்விதமான வரிகள் வெட்டப்பட்டுள்ளன. “சம்பாவிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்காக மகா மேன்மை தங்கிய ராஜா ஷாம்சிங் அவர்களால் இந்த தேவாலயம் கட்டப்பட்டு சம்பாவிலுள்ள ஸ்காட்லாந்து கிறிஸ்தவ மிஷனிடம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது” “அஸ்திபாரக்கல் 1899 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் தேதி போடப்பட்டது. 1905 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் தேவாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு எனப்படும்” (ஏசாயா 56 : 7). முற்றும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் அந்த தேவஆலயத்தின் பெயர் பரிசுத்த அந்திரேயா ஆலயமாகும். அந்த தேவ ஆலயத்தின் படத்தையும் நீங்கள் காணலாம்.
இந்த தடவை நாங்கள் சம்பா சென்ற சில தினங்களில் அந்தப்பட்டணத்தில் ராம்லீலா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கடைசி நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தின் பெரிய மைதானத்தில் திரண்டனர். உருவப் பொம்மைகளை எல்லாம் அன்றுதான் எரித்தனர். மொம்மைகளை எரிப்பதற்கு முன்னர் அவைகளை எல்லாரும் வணங்குவதை நாங்கள் கவனித்தோம். மைதானத்தில் உருவப் பொம்மைகள் இருப்பதையும், அங்குள்ள கூட்டத்தையும், மைதானத்திற்குப் பின்னணியத்தில் சம்பா பட்டணத்தையும் நீங்கள் காணலாம்.
இந்த தடவை தேவ ஊழியர்களாகிய நாங்கள் எல்லாரும் எங்களுடைய முதல் ஓய்வு நாளை சம்பாவிலுள்ளஅந்தப் பரிசுத்த அந்திரேயா தேவ ஆலயத்தின் ஆராதனையில்தான் செலவிட்டோம். ஆராதனையை நடத்திய குருவானவர் எங்களையும் ஆராதனையில் பங்கு கொள்ள அழைத்ததினால் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தேவச்செய்தியைக் கொடுத்ததுடன் நமது பாஸ்டர் சகோதரன் ரோமில்டன் அவர்கள் சபையினரை ஜெபத்தில் வழிநடத்தினார்கள். சபையின் குருவானவர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் சம்பாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியிலிருந்து கர்த்தரால் எல்லாரும் பாதுகாக்கப்பட்டதையும், அதே சமயத்தில் சம்பாவுக்கு வெகு அருகிலுள்ள பாக்கிஸ்தான் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் அதே நாளில் மாண்டு மடிந்து போனதையும் சுட்டிக்காண்பித்து நாம் உடனடியாக மனந்திரும்ப வேண்டியதின் அவசியத்தையும், சாக்குப்போக்குச் சொல்லிக் காலத்தைக் கடத்துவதில் உள்ள பெரிய ஆபத்தையும் சபையினருக்கு எச்சரித்துக் கூறினார்.
எங்கள் மேல் கரிசனை கொண்ட நம் அன்பின் தேவன்
சம்பாவில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் எங்களுக்கு முன்பாக இருந்த ஒரு பெரிய பிரச்சினை எங்களது ஆகாரத்தைப் பற்றியதாகும். நாங்கள் எங்கள் ஆகாரத்தை மொத்தமாக ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒரே ஹோட்டலில் சாப்பிடுவது என்பது கூடாததாக இருந்தது. காரணம், அத்தனை வசதியான உணவகங்கள் அங்கு இல்லாதிருந்ததுடன், ராம்லீலா திருவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு சாப்பிடும் இடங்களில் கூட்டமும் அதிகமாக இருந்தபடியால் நாங்கள் இரண்டு அல்லது மூன்று ஹோட்டல்களில் தனித்தனியே சாப்பிடவேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் ஆகாரங்களும் அவைகளின் விலைக்குத் தக்கதாக சாப்பிடக்கூடிய நிலையில் இல்லாதிருந்தது. நாங்கள் வெளியிடங்களிலிருந்து வந்தவர்கள் என்பதைக் கண்டு கொண்ட ஹோட்டல்காரர்கள் எங்களை ஏமாற்றுவதையும் கவனித்தோம். கடைசியாக நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு உணவு விடுதியை பட்டணத்தின் கடைக் கோடிப் பகுதியில் சந்தைக்கு அருகில் கண்டு பிடித்தோம். அதில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு ஓரளவு நல்லதாகவும், அதற்கான விலைக்கிரயம் நியாயமானதாகவும் எங்களுக்குத் தெரிந்தது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இருந்தது. ஆனால், ஒரு நாள் எங்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் தனக்குத் தேவையில்லை என்று கூறிய ஒரு பொரியலை அவர் கை தொட்டு கொஞ்சம் சாப்பிட்ட பின்னர் அந்த எச்சியை அவரது சாப்பாட்டுத் தட்டிலிருந்தே அப்படியே முழுவதையும் எடுத்து யாவருக்கும் உணவு பரிமாறும் பொதுப் பாத்திரத்தில் ஹோட்டல் தொழிலாளி போட்டுக் கொண்டதை நமது சகோதரர்களில் ஒருவர் எப்படியோ கண்டு கொள்ளவும் அதுவேதான் நாங்கள் அந்தக் கடையில் சாப்பிட்ட எங்களின் கடைசி ஆகாரமாக முடிந்தது.
இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற நேரத்தில் தேவன் எங்கள் இக்கட்டான நிலை உணர்ந்து நாங்கள் எல்லாரும் ஒரே இடத்தில்அமர்ந்து நல்ல சுவையான ஆகாரத்தைச் சாப்பிடக் கிருபை செய்தார். நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதிக்கு அருகில் மேட்டில் ஒரு பனியா(மார்வாடி) ஒரு புதிய லாட்ஜை அப்பொழுதுதான் கட்டி முடித்திருந்தார். எங்கள் காரியம் அறிந்த நாங்கள் தங்கியிருந்த அரசாங்க விடுதியின் அன்பான மேலாளர் மேற்கண்ட பனியாவுடன் பேசி எங்களுக்கு ஆகாரம் கொடுக்கக் கேட்டுக்கொள்ளவே அவர் மிகுந்த சந்தோசத்துடன் எங்களுக்கு நல்ல தரமான உணவை நியாயமான விலையில் செய்து கொடுத்தார். எங்களுக்குத் தேவையான ஆகாரம் அந்த நாளில் எந்த மணி நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அவருக்கு முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அவ்வளவுதான், ஆகாரம் சரியான நேரத்தில் தயார் செய்யப்பட்டு விடும். பின் வந்த நாட்களில் நாங்களே சந்தைக்குச் சென்று எங்களுக்கு விருப்பமான புதிய காய்கறிகளையும், இதர பொருட்களையும் பனியாவுக்கு வாங்கிக் கொடுத்து வந்ததினால் அவர் இன்னும் மனமகிழ்ச்சியோடு எங்களுக்கு தனது உதவியாட்களைக் கொண்டு சமையல் செய்து கொடுத்தார். நாங்கள் கண் விழிக்கும் அதிகாலை நேரத்தில் எங்கள் காலை காப்பியையும் கூட எங்கள் படுக்கைக்கே அந்த அன்புள்ளம் கொண்டோன் அனுப்பி வைத்தார்.
அந்த இடத்தில் நம் அன்பின் தேவன் நமது வீட்டுச் சாப்பாட்டைப்போல அத்தனை சிறப்பான ஆகாரங்களை எங்களுக்கு சுத்தமாகவும், சுடச் சுடவும் கொடுத்தார். ஆகாரம் தயார் ஆனதும் பனியா எங்களுக்குச் சொல்லி அனுப்புவார். நாங்கள் எல்லாரும் மேலேயுள்ள அவரது லாட்ஜ்க்குச் சென்று ஒரு பெரிய சாப்பாட்டு மேஜைக்கு முன்பாக அமர்ந்து எங்களில் யாராவது ஒருவர் கர்த்தர் கொடுத்த ஆகாரத்துக்காக நன்றி ஏறெடுத்து ஜெபம் செய்ய நாங்கள் பக்தி வினயமாகச் சாப்பிடுவதை அருகில் இருந்து அந்த அன்புள்ளம் கொண்ட பனியா ஆச்சரியத்துடன் கவனித்து வந்தார்.
தேவ ஊழியத்தின் பாதையில் நாளின் பகற் காலங்களில் நாங்கள் வெளியிடங்களில் எங்கள் ஆகாரங்களைக் கவனித்துக் கொண்டபோதினும் ஒவ்வொரு நாள் காலையிலும், இரவிலும் எங்களுக்கு நல்ல ஆகாரங்கள் கிடைத்தன. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாங்கள் சம்பாவை விட்டுப் புறப்படும் நாளில் எங்களுக்கு உணவுஅளித்த அந்த பனியா அவர்களுக்கும், அவருடைய பணி ஆட்களுக்கும் எங்களுடைய முழுமையான அன்பின் நன்றியைக் கூறினதுடன் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்கள் யாவிலும் வகைக்கு ஒன்றாக ஜெபத்தோடு அவருக்கும், அவருடைய உதவியாட்களுக்கும் கொடுத்தோம். எங்களுக்கு பணிவிடை செய்த ஏழைப் பணியாளர்களுக்கு எங்களுடைய அன்பளிப்பையும் கூட மறவாது கொடுக்கக் கருத்தாயிருந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து செல்லும் நேரம் அவருக்கும் அவரது வேலையாட்களுக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. அதே துக்கம் எங்களுக்கும் இருக்கவே செய்தது.
சம்பாவைத் தாக்கிய பூகம்பம்
நாங்கள் இமாச்சல் பிரதேசத்தின் சம்பா பட்டணத்தில் தேவ ஊழியம் ஆரம்பிக்கவிருந்த முதல் நாளின் காலை 8 : 15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பொழுது நாங்கள் சம்பாவில் இரண்டு அல்லது மூன்று ஹோட்டல்களில் தனித்தனியாக எங்கள் காலை ஆகாரத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த இடம் சில நொடிகளுக்கு பலமாக நடுநடுங்கவே தேவகிருபையால் நாங்கள் எல்லாரும் துரிதமாக ஹோட்டலிலிருந்து வெளியே ஓடி வந்து விட்டோம். அதே நாளின் அதே சமயம் சம்பாவுக்கு வெகு அருகாமையிலுள்ள பாக்கிஸ்தான் நாட்டின் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சில இலட்சம் மக்கள் மாண்டு மடிந்து போனார்கள். எங்களுடைய ஜீவன் ஆண்டவர் பார்வையில் அருமையாக இருந்ததற்காக அவருக்கு அனந்தம் கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்.
ஜூமாரில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
சம்பாவிலிருந்து ஜூமார் என்ற இடம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. 6655 அடி உயரத்திலுள்ள அந்த இடத்திற்கு நாங்கள் எங்கள் இரண்டு வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை வேண்டிய அளவிற்கு எடுத்துக் கொண்டு ஒரு நாள் காலையில் ஜெபத்தோடு புறப்பட்டோம். 15 கி.மீ. தூரத்தையும் எங்கள் வாகனங்கள் ஒரே செங்குத்து ஏற்றத்தில் ஏறிக்கடக்க வேண்டியதாகவிருந்தது. வழியில் ஓரிரு கிராமங்கள் எங்களுக்கு எதிர்ப்பட்டன. அந்த இடங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி கிராமத்திலுள்ள மக்களுக்கு ஆண்டவருடைய பிரதிகளை நாங்கள் விநியோகித்துவிட்டு மலை உச்சிக்குச் சென்றோம். மலை உச்சியை நெருங்க நெருங்க தேவதாரு மரச்சோலைகள் எங்கள் வலது இடது கைப்பக்கங்களில் வானளாவ நின்று கொண்டிருப்பதைக் கவனித்தோம். எங்கெங்கே தேவதாரு மரங்கள் (Cedar Trees) காணப்படுகின்றதோ அந்த இடத்தில் குளிர் மிக அதிகமாக இருப்பதுடன் அந்த இடத்தின் உயரமும் அதிகமாக இருக்கும் என்று நாம் உடனே நிதானித்து விடலாம்.
ஜூமார் என்ற அந்த இடத்தில் ஒரு சிறிய ஹோட்டலும், சில வீடுகளும், ஒரு இந்துக்கோயிலும், ஒரு அழகான பெரிய புல்வெளி மைதானமும் இருப்பதை நாங்கள் கவனித்தோம். மேட்டின் மேல் ஒரு நடு நிலைப்பள்ளி இருந்தது. அதில் நிறைய பிள்ளைகள் இருந்தனர். நாங்கள் போகும் சமயம் பள்ளி ஆரம்பித்து வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. நமது தேவ ஊழியர்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை அணுகி அவர்களுடைய சம்மதத்தின்பேரில் மாணவ மாணவியரை எல்லாம் பள்ளி மைதானத்துக்கு வந்து கூடியிருக்கச் செய்தார்கள். நமது தேவ ஊழியர் பாஸ்டர் சகோதரன் என். சாமுவேல் அவர்கள் அந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்கெல்லாம் தேவன் இந்த அழகிய உலகத்தைப் படைத்தது, அந்த அழகிய உலகத்தில் ஆதாம், ஏவாள் என்ற நம் ஆதி தாய் தந்தையரை சிருஷ்டித்து அவர்கள் இருவரையும் ஏதேன் என்ற அழகிய பூங்காவனத்தில் மனமகிழ்வுடன் வாழ வைத்தது, சாத்தானாம் பிசாசு அவர்களை தனது தந்திரத்தால் வஞ்சித்து உலகத்தில் பாவத்தையும், சாபத்தையும், மரணத்தையும் கொண்டு வந்தது, உலக மக்களின் பாவம் போக்க இயேசு இரட்சகர் மானிடனாக இந்த உலகத்தில் அவதரித்தது, அந்த இரட்சா பெருமான் இந்த உலகத்தில் நோய், பிணி, துயரங்களால் துயரப்பட்ட மக்களுக்கு அவர்களின் பிணிகள் நீக்கி ஆறுதலையும், சமாதானத்தையும் அளித்தது, மரித்தோரை உயிரோடு எழுப்பினது, நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தது, பொல்லாத யூத மக்கள் அவரை சிலுவையில் அறைந்து கொன்றது, மரித்த இரட்சகர் மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தது, இன்றும் ஜீவிக்கின்ற அந்த இரட்சகராம் தேவனை யார் யார் தங்கள் சொந்த தகப்பனாக ஏற்றுக்கொள்ளுவார்களோ அவர்களை அந்த அன்பர் தமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளுவது, தங்கள் மனம்போல பாவங்களில் வாழ்ந்து இந்த உலகத்தில் தீயராக, ஆண்டவர் இயேசுவை தங்கள் இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாதோரை நியாயம் விசாரிக்க அவர் திரும்பவும் இந்த உலகத்துக்கு வரப்போவது, அப்பொழுது நல்லார், பொல்லாதோரை மோட்சம், நரகம் ஆகிய இடங்களில் சேர்ப்பது போன்ற காரியங்களை அழகான பெரிய படங்களின் மூலமாக மிகவும் விளக்கமாகவும், தெளிவாகவும் படங்களைக் காண்பித்துச் சொன்னார்கள். தனது விளக்கத்தின் போது மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதையும், பொய், களவு, தூஷணம்,கெட்ட நட்பு போன்றவற்றை விலக்கி வாழ்வதையும், நன்றாகப்படிக்க வேண்டியதன் அவசியதையும், தங்களையும் தங்கள் உடைகளையும் சுத்தமாக வைப்பதையும் அவர்கள் சொன்னார்கள். அந்த வார்த்தைகள் மாணவர்களுக்கும், கேட்டுக்கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் பயன் உள்ளதாகவும், சந்தோசத்தை அளிப்பதாகவும் இருந்தது. கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. அதின் பின்னர் நாங்கள் ஜெபத்தோடு எல்லாப் பள்ளிக் குழந்தைகளுக்கும் “சாந்தி மார்க்கம்” என்ற ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களையும் இதர தேவனுடைய பிரதிகளையும் கொடுத்தோம். ஆசிரியப் பெரு மக்களுக்கு புதிய ஏற்பாடுகள் போன்றவற்றை சேர்த்துக் கொடுத்தோம். ஜூமார் பள்ளியில் பாஸ்டர் சகோதரன் என்.சுhமுவேல் அவர்கள் படங்களைக் காட்டி பிள்ளைகளுக்கு சத்தியத்தை விளக்குவதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். மாணவர்களோடு ஆசிரியைகளும் சகோதரனுடைய வார்த்தைகளை ஆர்வமாக நின்று கவனிப்பதை நீங்கள் பார்க்கக் கூடும்.
ஜூமார் என்ற அந்த இடத்தில் தேவதாரு மரங்கள் அதிகமாக இருப்பதை நான் முன்பு குறிப்பிட்டேன். அங்கு வெட்டப்படும் தேவதாரு மரங்களை சிலீப்பர் கட்டைகளாக அறுத்து உயரமான குவியலாக ஆங்காங்கு அடுக்கி வைத்திருக்கின்றனர். அப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு உயரமான மேடையில் உட்கார்ந்தவாறே ஒரு தவனமுள்ள ஆத்துமா எங்களுடைய கரங்களிலிருந்து பெற்றுக்கொண்ட “சாந்தி மார்க்கம்” என்ற ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷத்தை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துக் கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள்.
அந்த மனிதர் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவே சுமார் ஒரு மணி நேரமாவது அதை வாசித்திருப்பார். அந்தக் காட்சியை நாங்கள் எல்லாரும் கண்டு ஆண்டவருக்குள் மகிழ்ந்ததுடன் அந்த ஆத்துமா எப்படியாவது நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளக் கிருபை செய்ய கர்த்தரை நோக்கி நாங்கள் எங்கள் உள்ளத்துக்குள் மன்றாடினோம்.
அந்த இடத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு நாங்கள் ஊழியம் செய்துவிட்டு அதற்கு மேலாக வலது கைப்பக்கத்தில் உயரமான இடத்தில் ஒரு மேல் நிலைப்பள்ளி இருப்பதாகக் கேள்விப்பட்டு தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகளை எங்கள் தோளில் சுமந்து கொண்டு நாங்கள் சுமார் 2 கி.மீ. தொலைவு மலையில் ஏறி நடந்து சென்றோம். போகின்ற பாதையில் எங்கள் இரு மருங்கிலும் ஏராளமான தேவதாரு மரங்கள் வானளாவ எழுந்து நின்றன. நாங்கள் எல்லாரும் மலை ஏறி மிகவும் கஷ்டத்துடன் குடுமாக் என்ற கிராமத்தை வந்தடைந்தோம். அந்தக் கிராமத்தில் ஒரு ஓரத்தில் மிகவும் பள்ளமான இடத்தில் மேல் நிலைப்பள்ளி ஒன்று இருப்பதை நாங்கள் கவனித்தோம். நிறைய பள்ளி மாணவர்களும், மாணவியரும், ஆசிரியர்களும், ஆசிரியைகளுமாக அந்தப் பள்ளி நிறைந்திருந்தது. நமது தேவ ஊழியர்களில் ஓரிருவர் முதலாவது அந்தப் பள்ளிக்குச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுக்க அனுமதி கேட்கச் சென்றனர். கர்த்தருடைய கிருபையால் எங்களுக்கு அனுமதி கிடைத்ததுடன் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டவர் இயேசுவைக்குறித்துப் பேசும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது. எல்லா மாணவ மாணவியரையும் ஒன்றாகக் கூட அமரச் செய்து ஆண்டவர் இயேசுஇரட்சகரைக் குறித்து அந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லும்படியாக எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதின்படி நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தனது வசம் இருந்த அழகிய படச்சுருளை ஒவ்வொரு தாளாகக் காண்பித்து ஜூமார் நடுநிலைப்பள்ளியில் பேசியது போலவே பேசினார்கள். மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. கர்த்தர் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்போருக்கு ஆசீர்வாதமாக இருக்க நாங்களும் ஜெப நிலையிலேயே இருந்தோம். அதின் பின்னர் பள்ளி மாணவ மாணவியர்கள் எல்லாருக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் புதிய ஏற்பாட்டுடன் கூடிய இதர பிரசுரங்களையும் விநியோகித்தோம். அந்தப் பள்ளியில் ஊழியம் முடிந்து வரும் வழியில் குடுமாக் கிராமத்திலும் தேவனுடைய பிரதிகளை நாங்கள் கொடுத்தோம். அந்த நாளில் அன்பின் ஆண்டவர் தமது சுத்தக் கிருபையால் எங்களுக்கு நல்லதொரு தேவ ஊழியத்தைத் தந்தார்.
பார்மர் என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
நாங்கள் எந்த எந்த இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு நாளும் தேவ ஊழியம் செய்ய வேண்டும் என்பதை அன்பின் ஆண்டவரே எங்கள் உள்ளத்தில் உணர்த்தி எங்களை வழிநடத்திச் செல்லுபவராக இருந்தார். அதற்காக நாங்கள் எல்லாரும் தேவ சமூகத்தில் அதிகமாக ஜெபித்து ஆண்டவரின் வழிநடத்துதலுக்காக காத்திருந்தோம். தேவ ஊழியத்தில் எங்கள் மாமிச சித்தம் எந்த ஒரு நிலையிலும் வந்துவிடாமல் கர்த்தருடைய சித்தம் மட்டுமே நிறைவேற மன்றாடினோம்.
அப்படியே ஒரு நாள் காலையில் நாங்கள் எங்கள் இரு வாகனங்களிலும் தேவனுடைய பிரசுரங்களை போதுமான அளவிற்கு எடுத்துக்கொண்டு ஜெபத்தோடு புறப்பட்டோம். ராவி நதியை ஒட்டியே எங்கள் பாதை சென்றது. சம்பாவிலிருந்து பார்மர் 65 கி.மீ. தொலைவில் உள்ளது. தொலை தூரத்தில் பார்மர் என்ற இடம் இருந்ததால் அன்றைக்கு இரவுக்குள்ளேயே சம்பாவுக்கு நாங்கள் திரும்ப வேண்டியதாக இருந்தபடியால் இடையிலுள்ள எல்லா இடங்களிலும் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. எனினும், சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதும், ஜனக்கூட்டத்தை நாங்கள் காண்கையிலும் கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டே போய்க் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு கணிசமான தூரம் வந்தபின்னர் நாங்கள் சென்று கொண்டிருந்த பாதை மிகவும் கரடு முரடாகவும் எந்த ஒரு நிலையிலும் முன்னேற இயலாததாகவும் இருந்தபடியால் பார்மர் செல்லும் எங்கள் எண்ணத்தை நாங்கள் கைவிட்டு விட்டு சம்பா திரும்ப நினைத்து எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நம்முடைய வாகனத்தை திருப்பிச் செல்ல சைகை காட்டிவிட்டு நாங்கள் முன்சென்று எங்கள் வாகனத்தை வளைத்துத் திருப்ப முயற்சித்து முன்சென்று கொண்டிருந்தோம். அந்தச் சமயம் எங்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை நிறுத்தி பார்மர் செல்லும் ரஸ்தாவின் விபரம் கேட்டோம். அந்த வாகனத்தின் டிரைவர் நாங்கள் செல்லும் ரஸ்தா கொஞ்ச தூரத்திற்கு மாத்திரமே மோசமாக இருப்பதாகவும் அதின் பின்னர் மிகவும் நல்ல ரஸ்தாவாக இருப்பதாக கூறவே எங்கள் மனதை நன்கு திடப்படுத்திக்கொண்டு முன்னேறிச்செல்லத் தீர்மானித்தோம். அதற்குள்ளாக நாங்கள் திருப்பிப் போகச் சொன்ன எங்கள் வாகனத்தின் டிரைவர் ஜஸ்வந்த்ராய் அவர்கள் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிப்போய் மறைந்துவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் எங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த வாகனத்தை இடைமறித்து மீண்டும் அழைத்துக்கொண்டு வர துரிதமாகச் சென்று கொண்டிருந்தோம். அந்த வேளைதான் கர்த்தரின் அற்புதம் நடந்தது. வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஜஸ்வந்த்ராய் அவர்களின் வாகனத்தை எதிரே வந்த ஒரு லாறி தூரத்தில் நிறுத்தியிருந்ததை நாங்கள் கவனித்து ஆண்டவருக்கு துதி செலுத்தினோம். நாங்கள் எங்கள் வாகனத்தை விரைந்து ஓட்டி குரல் கொடுத்து அந்த வண்டியை நிறுத்தி, முன்னாலுள்ள வழியின் விபரத்தைக் கூறி பின்னர் நாங்கள் எங்கள் இரு வாகனங்களுடன் பார்மருக்குப் பயணமானோம்.
உண்மையில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பின்னர் ரஸ்தா நன்றாகவே இருந்தது. எனினும் அந்த ரஸ்தா உயரமான மலையில் செல்லும் இடங்களில் அத்தனை சீராக இருக்கவில்லை. அப்படிப்பட்ட மிக உயரமான ரஸ்தாக்கள் எங்கும் அப்படியே இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எங்களுடைய வழித்தடத்தில் பக்கா, தார்வாலா, துர்கேத்தி, தாகோக், கஹ்ரா, பட்டோக், சத்திரன், லீமா போன்ற இடங்களில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி அந்தஇடங்களின் கடைவீதிகளில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். நாங்கள் சென்ற வழித்தடத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரதிகளை ஆவலோடு வாசித்துச் செல்லும் இருவரை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். நாங்கள் சென்ற பார்மர் என்ற இடம் 8600 அடிகள் உயரத்தில் இருப்பதால் அங்குள்ளபாதைகளின் பயங்கரத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை. சாநிழல் பள்ளத்தாக்கின் பாதையிலேயே நாங்கள் எங்கள் கடைசிகட்ட பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. அந்த சா நிழல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு குறுகிய அபாயகரமான வளைவை நீங்கள் இந்தச்செய்தியில் பார்க்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் எதிர் வரும் வாகனத்திற்காக நாங்கள் சென்ற வாகனத்தின் டிரைவர் அவினாஷ் தாக்கூர் அவர்கள் தனது வாகனத்தை ஒரு மகா பயங்கரமான செங்குத்து மலை உச்சியில் நிறுத்தியிருந்தார்கள். அந்தச் சமயம் என்னோடு அமர்ந்திருந்த பாஸ்டர் சகோதரன் ரோமில்டன் அவர்கள் அந்த இடத்தின் பயங்கரத்தை சற்றும் அறியாமல் யதார்த்தமாக வாகனத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்க முயற்சித்தபோது கர்த்தருடைய அளவற்ற கிருபையால் நான் அவர்களை உள்ளே இழுத்துப் பாதுகாத்தேன். அதின் காரணமாக எனது கரம் வாகனத்தின் கதவில் பட்டு கொஞ்சம் நைந்தும் போனது. தலை எட்டிப் பார்த்தால் தலை அறுந்து விழும் என்ற வார்த்தையின்படி அந்தஇடத்தின் செங்குத்து கெடு பாதாளம் அத்தனை மா பயங்கரமாக இருந்தது. அந்த இடத்தின் சம்பவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகின்றது.
நாங்கள் பார்மர் என்ற இடத்தை வந்தடையும்போது சுமார் 3 மணிக்கும் கூடுதலாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். எல்லாருக்கும் நல்ல பசியான நேரம். சாப்பிடுவதற்கு சுத்தமான சாப்பாட்டுக் கடைகள் எதுவும் அந்த இடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் ஓரளவு சுத்தமான ஒரு கடையைத் தெரிந்து கொண்டோம். எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட ஆகாரம் எப்படி இருந்தபோதினும் அந்தக் கடைக்கு முன்னால் அப்பொழுது தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த சூடான பக்குவாடாவை வாங்கி அதின் உதவியுடன் ஆகாரத்தை சாப்பிட்டு முடித்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சாப்பிட்டு முடிந்ததும் நாங்கள் எங்கள் வாகனங்களிலிருந்து தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகளை வெளியே எடுத்து வைத்து அந்தப்பட்டணத்தின் கடைவீதி எங்கும் கூடியிருந்த மக்களுக்கெல்லாம் தேவனுடைய பிரதிகளை ஜெபத்துடன் கொடுத்தோம். நம்முடைய தேவ ஊழியர்கள் அந்தப் பட்டணத்தின் தெருக்களுக்கெல்லாம் புகுந்து சென்று அவைகளைக் கொடுத்தனர். பள்ளிகள் முடிந்து பள்ளிப் பிள்ளைகள் சாரை சாரையாக தங்கள் வீடுகளுக்குச் செல்லும் நேரமாக இருந்தமையால் அவர்களும் ஆண்டவருடைய வார்த்தைகளை மகிழ்ச்சியோடு பெற்றுச் சென்றனர்.
நாங்கள் தேவனுடைய ஊழியத்தை மிகவும் மும்முரமாக அந்த இடத்தில் செய்து கொண்டிருந்த வேளையில் 2 உயர் போலீஸ் அதிகாரிகள் மேட்டிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அந்த அதிகாரிகள் என்ன சொல்லுவார்களோ? அடுத்து என்ன நடக்குமோ? என்று நாங்கள் எல்லாரும் ஒரு கணப்பொழுது நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு முதலாவது எங்களது தாழ்மையான வந்தனத்தைத் தெரிவித்துவிட்டு கர்த்தருடைய பிரசுரங்களை அவர்களுக்கும் கொடுத்தோம். எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் சிரித்த முகத்தோடு அவைகளை அவர்கள் வாங்கிச் சென்றனர். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. மொத்தத்தில், பார்மர் பட்டணத்தில் அன்பின் ஆண்டவர் எங்களுக்கு ஒரு பெரிய தேவ ஊழியத்தை நாங்கள் சற்றும் எதிர்பாராத விதத்தில் எங்களுக்குத் தந்தார். பார்மர் செல்லும் வழி மோசமானது என்று நாங்கள் திட்டமாக நினைத்து திரும்பிச் செல்லக்கூடிய கடைசி வேளையில் அன்பின் பரம தகப்பன் எங்களைத் தடுத்து நிறுத்தி அற்புதமான ஒரு ஊழியத்தை நாங்கள் மனமகிழத்தக்க விதத்தில் எங்களுக்குத் தந்தார். அவருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்!
பார்மர் 8600 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய இமயமலைப்பட்டணம். அது மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் குளிர் அதிகமாகவே இருந்தது. அந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் உயரமான கேதுரு மரங்கள் நின்று கொண்டிருந்தன. யாவுக்கும் மேலாக ஆப்பிள் மரங்கள் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கனி மரங்களின் காட்சியைக் காணவும் அருமை இரட்சகர் தமது அடியாருக்கு கூறிய “ஒருவன் என்னிலும், நான்அவனிலும்நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவான் 15 : 5) என்ற பரவசமான தேவ வார்த்தைகளே எங்கள் நினைவுக்கு ஓடி வந்தன. நாங்கள் கண்ட கனி நிறைந்த இரண்டு ஆப்பிள் மரங்களின் காட்சியை நீங்களும் பார்க்கலாம்.
பார்மரில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை முடித்துவிட்டு சம்பா திரும்புகையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையாக இருந்தது. திரும்பி வருகின்ற வழித்தடத்தில் ஓரிடத்தில் டீ குடிப்பதற்காக நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தோம். ரஸ்தாவின் ஒரு பக்கம் ஒரு பிரமாண்டமான மலைப்பாறை வானுற ஓங்கி நின்று கொண்டிருந்தது. அந்த மலைப்பாறைக்கு அடியில் உள்ள குகை போன்ற இடத்தில் ஒரு ஏழைக் குடும்பம் வாழ்வதை நாங்கள் துயரத்தோடும், அதே சமயம் ஆச்சரியத்தோடும் கவனித்தோம். ரஸ்தாவின் மறு பக்கம் ராவி நதி ஓடுகின்றது. நதி மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக மற்ற இடங்களுக்கும் பாதைகள் செல்லுவதால் அந்தச் சிறிய கடை வீதியில் மக்கள் கூட்டம் இருப்பதை நாங்கள் கவனித்தோம். சந்தர்ப்பத்தை கர்த்தருக்கு மகிமையாகப் பயன்படுத்திக்கொண்டு நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அழகிய படச்சுருளைக் காண்பித்து அங்குள்ள மக்களுக்கு தேவனுடைய சுவிசேஷத்தை அறிவித்தார்கள். அதை அந்த இடத்திலுள்ள மக்கள் மிகவும் ஆசை ஆவலாகக் கூடி நின்று கேட்டார்கள். அந்தக் காட்சியை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அந்த இடத்தின் பெயர் தாஹோக் என்பதாகும். கர்த்தருக்கே மகிமை.
பார்மரிலிருந்து நாங்கள் சம்பா வருவதற்கு இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. நாங்கள் வரவும் எங்கள் இரவு ஆகாரம் தயாராக இருந்தது. அந்த நாளில் அன்பின் ஆண்டவர் தமது நாமத்திற்கு மகிமையாக தமது ஆலோசனையின்படி எங்களுக்குத் தந்த அருமையான ஊழியங்களுக்காக நாங்கள் அவருக்கு துதி செலுத்திவிட்டு எங்கள் இளைப்பாறுதலுக்குள் கடந்து சென்றோம். நாங்கள் படுத்திருந்த அந்த அரசாங்க விடுதியில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் அனுதினமும் கொசுவர்த்தி வைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.
கேஹர் என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
சம்பாவிலிருந்து நாங்கள் ஒரு நாள் காலையில் மிகுந்த ஜெபத்தோடு கேஹர் என்ற இடத்திற்கு ஊழியம் செய்வதற்காக எங்கள் வாகனங்களில் போதுமான அளவிற்கு தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக்கொண்டு பயணப்பட்டோம். கேஹர் என்ற இடம் சம்பாவிலிருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடமாகும்.
நாங்கள் பண்டா, மஞ்ஜேரி, டார்குலா என்ற இடங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி மக்களுக்குத் தேவனுடைய பிரசுரங்களை அதிகமான அளவில் கொடுத்துக் கொண்டே வந்தோம். வரும் வழித்தடத்தில் பள்ளத்தில் ஒரு மேல் நிலைப்பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் அந்த மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்க்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தால் எத்தனை பெரியதொரு தேவ ஊழியம் செய்துவிடலாம் என்று எங்கள் மனதுக்குள்ளே ஆவல் கொண்டோம். எங்கள் ஆவலை அறிந்த நம்முடைய பாஸ்டர் சகோதரன் சங்கர்தாஸ் அவர்கள், “நான் அந்த பள்ளிக்குச் சென்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி அனுமதி பெற்று வருகின்றேன்’ என்று கூறி கையில் கொஞ்சம் மாதிரி பிரதிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றார்கள். அந்த நேரம் நாங்கள் எல்லாரும் மேலேயிருந்து கர்த்தர் அந்த தலைமை ஆசிரியர் உள்ளத்தில் பேசும்படியாக ஜெபித்துக் கொண்டேயிருந்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் சகோதரன் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆண்டவருடைய பிரசுரங்களை எடுத்தக் கொண்டு கீழே வரும்படியாக எங்களுக்கு சைகை காட்டினார்கள். எங்களுடைய ஆனந்தத்துக்கு அளவேது? அந்த நேரம் வகுப்புகள் எல்லாம் குளிர் காரணமாக பள்ளி மைதானத்தில் வெயிலில் வைத்துத்தான் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் கரங்களில் அட்டைப் பெட்டிகளில் ஆயத்தமாகக் கொண்டு சென்ற பிரசுரங்களை வகுப்பு, வகுப்பாகச் சென்று தேவனுடைய வார்த்தையாகிய சாந்தி மார்க்கத்தையும் ( லூக்கா – ஹிந்தி ) அதினுடன் “சமாதான காரணர்” “தேவன் உங்களை நேசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” “உங்கள் வாழ்வின் உற்ற நண்பன்” என்பது போன்ற பிரதிகளை பிள்ளைகளுக்குக் கொடுத்தோம். ஆசிரியர்களுக்கு ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட “சத்திய மார்க்கம்” என்ற யோவான் சுவிசேஷங்களைக் கொடுத்தோம். அநேக அருமையான விளக்கங்களோடும் படங்களோடும் நிறைய பக்கங்களோடு வேதாகம சங்கத்தினரால் வெளியிடப்பட்ட பதிப்பு அதுவாகும். மிகவும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் நாங்கள் ஒரு ஆசீர்வாதமான தேவ ஊழியத்தை அந்த நாளின் காலையில் நிறைவேற்ற அன்பின் ஆண்டவர் எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்து நின்றார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
நாங்கள் அங்கிருந்து பயணப்பட்டு ஒரு பெரிய இமயமலை கிராமத்தின் கடைவீதிக்கு வந்து சேர்ந்தோம். அந்தக் கிராமம் மிகவும் அழகாக இருந்தது. இங்கிலாந்து தேச கிராமப்புறத்தைப்போல அது எங்களுக்குத் தெரிந்தது. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் ஆப்பிள் மற்றும் இதர பழ மரங்கள் காணப்பட்டன. அங்கு நாங்கள் கண்ட ஒரு அழகிய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அந்த ஊரின் பெயர் சலோனி என்று நினைக்கின்றேன். அந்தக் கிராமத்தின் கடை வீதியிலும் கர்த்தர் நல்லதொரு ஊழியத்தை எங்களுக்குத் தந்தார். ஏராளமான தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் அங்கு ஜெபத்துடன் விநியோகித்தோம்.
அங்கிருந்து நாங்கள் இறங்கு முகமாக கேஹர் என்ற இடத்தை நோக்கிச் சென்றோம். எங்களுடைய பயணப்பாதை கொஞ்ச தூரத்திற்கு வலது இடது கைப்பக்கங்களில் வானுற ஓங்கி வளர்ந்து நின்ற தேவதாரு மரங்களால் நிறைந்திருந்தன. சலோனி என்ற கிராமமும் மிகவும் உயரமான இடத்திலேயே அமைந்துள்ளதால் அங்கு வீசிய குளிரை நாங்கள் உணர முடிந்தது. அங்கும் தேவதாரு விருட்சங்கள் காணப்பட்டன. நாங்கள் இப்பொழுது இறங்கு முகமாகவே சமதரைக்கு வந்து சேர்ந்தோம். குந்தி, மைத்ரா, பர்தாச்சு போன்ற கிராமங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி மக்களுக்கு தேவனுடைய பிரதிகளைக் கொடுத்தோம். இறுதியாக நாங்கள் கேஹர் என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். கேஹர் கிராமம் நல்ல உயரமான இடத்தில் இருந்ததால் நமது தேவ ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு ஏற்றம் ஏறி அங்கிருந்த வீடுகளுக்குச் சென்று சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தனர். கிராமத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிய கடை வீதி இருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த மக்களுக்கும், கடைகளில் இருந்தோருக்கும் பிரதிகளை விநியோகித்தோம். அந்தக் கிராமமானது முழுமையான ஒரு முகமதிய கிராமம் என்பதை நாங்கள் விரைவில் கண்டு கொண்டோம். ஆனால், அங்குள்ள எந்த ஒரு மக்களும் ஒரு சிறிய எதிர்ப்போ அல்லது வெறுப்போ எங்களுக்கு காண்பிக்காததுடன் நாங்கள் கொடுத்த தேவனுடைய வார்த்தைகளை அன்பாகப் பெற்று வாசிப்பதை நாங்கள் கண்டு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அத்துடன் நாங்கள் வழியில் ஊழியம் செய்த கிராமங்களும் முஸ்லீம் மக்கள் வாழும் இடங்கள்தான் என்பதை அறிந்தோம். அன்பின் ஆண்டவர் அந்த இடங்களிலும் நாங்கள் வந்து ஊழியம் செய்ய வேண்டுமென்று தமது திருவுளத்தில் தீர்மானித்திருந்ததை நினைத்து அவருக்கு துதி செலுத்தினோம்.
நாங்கள் சம்பா வரும்போது இரவு ஆகிவிட்டது. அன்பின் ஆண்டவர் அந்த நாளில் எங்களுக்குத் தந்த நல்ல அருமையான ஊழியத்திற்காக அவருக்குத் துதி செலுத்திவிட்டு எங்கள் இளைப்பாறுதலுக்குச் சென்றோம்.
டல்கௌசியில் (Dalhousie) நடைபெற்ற தேவ ஊழியங்கள்
சம்பாவிலிருந்து டல்கௌசி என்ற இடம் 46 கி.மீ. தொலைவில் உள்ளது. கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் நாங்கள் ஒரு நாள் அந்த இடத்திற்கு ஜெபத்தோடு பயணப்பட்டுச் சென்றோம். வழக்கம் போல எங்கள் வாகனங்கள் இரண்டிலும் போதுமான அளவுக்கு ஆண்டவருடைய சுவிசேஷ பிரதிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். வழியில் ஓப்ரி, பரேல், தரோலி என்ற கிராமங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி தேவ ஊழியம் செய்தோம். பின்னர் உதய்பூர் என்ற இடத்திலுள்ள ஒரு பள்ளியில் அனுமதியுடன் பள்ளிப் பிள்ளைகளுக்கு சுவிசேஷப் பிரதிகளைக் கொடுத்தோம். அப்படியே செயூர், காண்டு என்ற இரண்டு இடங்களில் இருந்த பள்ளிகளிலும் பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரதிகளை வழங்கினோம். அங்கிருந்து டிராடா, பரிகர் என்ற இடங்களில் கர்த்தருடைய ஊழியங்களைச் செய்துவிட்டு கோலி என்ற இடத்திலிருந்த ஒரு பள்ளியிலும் ஊழியம் செய்தோம். தேவிதாரா என்ற இடத்திலும் பாதுரி என்ற இடத்திலுள்ள ஒரு சந்தையிலும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். இப்பொழுது நாங்கள் பனிகேத் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். இந்த பனிகேத் என்ற இடம் டல்கௌசிக்கு சுமார் 2 அல்லது 3 .மீட்டர் தொலைவில் இருந்தது. பனிகேத் ஒரு ஜனசந்தடியான பெரிய இடம்தான். பல ரஸ்தாக்கள் இங்கு வந்து ஒன்று சேருவதால் பல இடங்களிலிருந்து வந்த பேருந்துகள் அங்கு நின்று கொண்டிருந்தன.
காலையிலிருந்து பயணப்பட்டு வந்திருந்த எங்களுக்கு கடும் பசி இருந்தமையால் அந்த இடத்தில் எங்கள் ஆகாரத்தை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் எங்கள் ஊழியத்தை தொடங்க நினைத்தோம். அந்த இடத்தில் எங்களுடைய மனதுக்கு திருப்தியான ஆகாரம் கிடைக்கவில்லை. காசு நிறையக் கொடுத்தும் எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்ட ஆகாராதிகள் அத்தனை நன்றாக இல்லாததால் நாங்கள் எவரும் திருப்தியாக சாப்பிட இயலவில்லை. எங்கள் ஆகாரத்திற்குப் பின்னர் நாங்கள் பனிகேத் என்ற அந்த இடத்தில் ஒரு அருமையான தேவ ஊழியத்தைச்செய்து முடித்தோம். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஓரிரு பேருந்துகள் அனைத்திலுமுள்ள பேருந்து பயணிகளுக்கு நம்முடைய தேவ ஊழிய சகோதரன் சகாயராஜ் அவர்கள் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்தார்கள். கர்த்தருக்கே மகிமை. பனிகேத்திலிருந்த கடைகள், தெரு வீதிகளில் நின்று கொண்டிருந்த மக்கள் மற்றும் அங்கிருந்த மருத்துவமனை போன்ற இடங்களில் இருந்த நிறைய பேருக்கு கர்த்தருடைய பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. பனிகேத்தில் நாங்கள் எங்கள் ஊழியத்தை முடித்துவிட்டு மலை உச்சியில் இருந்த டல்கௌசி என்ற இடத்திற்கு செங்குத்தாகப் பயணம் செய்தோம். எங்கள் வாகனம் சென்ற இருமருங்கிலும் தேவதாரு மற்றும் பைன் மரச் சோலைகள் வானளாவ வளர்ந்து நின்றன. அந்த மரங்களுக்கு மத்தியில் அழகழகான ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட வீடுகளை நாங்கள் கண்டோம்.
டல்கௌசி என்ற ஆங்கிலேய கவர்னர் ஜெனரலின் பெயரை அந்தப்பட்டணம் தாங்கி நிற்கின்றது. 8021 அடிகள் உயரமுள்ள இடத்தில் அந்த இடம் இருப்பதால் மிகவும் குளிராக இருக்கின்றது. பக்ரோட்டா, கத்லோக், டெஹ்ரா, பாலுன் என்ற மலைகளில் அது அமைக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக விளங்கிய அந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் 4 பழமையான தேவாலயங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அவற்றில் ஓரிரு அழகிய தேவாலயங்களை நாங்களும் வெளியிலிருந்து காண முடிந்தது. உயர்ந்த கேதுரு மரங்களும், பைன் மரங்களும், இதர மரங்களும் அந்த மலைப்பட்டணத்தை சூழ்ந்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. டல்கௌசி என்ற அந்த அழகான மலைப் பட்டணத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
ஆங்கிலேயர்களுடைய காலத்தில் கட்டப்பட்ட அழகிய வீடுகள், பள்ளிக்கூடங்களைச் சுற்றிலும் விதவிதமான பூச்செடிகள் பூத்து மலர்ந்திருப்பதை நாங்கள் கண்டு மகிழ்ந்தோம். அந்த டல்கௌசி இந்தியாவின் முக்கியமான ராணுவ கேந்திரமாகவும் விளங்குகின்றது. காரணம், சீன தேசம் வெகு அருகில் இருப்பதால் அந்த இடம் நமது நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பலத்த பாசறையாக இருக்கின்றது. எங்கும் ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை நாம் அங்கு காணலாம்.
பல ரோடுகள் பிரிந்து செல்லும் டல்கௌசி பட்டணத்தின் மையப் பகுதியில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு கடைவீதிகளில் நின்று கொண்டிருந்த ஏராளமான மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தோடு கொடுத்தோம். ஜனங்கள் எந்த ஒரு முறுமுறுப்புமின்றி அவைகளை ஆசை ஆவலோடு வாங்கி வாசித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக நாங்கள் அந்த இடத்தில் சுற்றியலைந்து தேவ ஊழியம் செய்தோம். அந்த இடத்தில் அன்பின் தேவன் எங்களுக்கு ஒரு நல்ல அருமையான ஊழியத்தைத் தந்தார்.
அங்கிருந்து நாங்கள் புறப்பட்டு பட்டணத்தின் வெளிப்புற டீ கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு அந்த இடத்திலிருந்த மக்களுக்கும் சுவிசேஷ பிரதிகளை விநியோகித்தோம். சூரியன் அஸ்தமித்து மாலைப் பொழுதாகி விட்டபடியால் குளிர் காற்று வீசத்தொடங்கியது. நாங்கள் எங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு மலை இறக்கத்தில் வந்து கொண்டிருந்தோம். சுமார் 10 கி.மீ. தூரம் நாங்கள் வந்ததும் அடர்த்தியான ஒரு கருங்கானகம் எங்களுக்கு எதிர்ப்பட்டது. அந்தக் காடு அபூர்வ விலங்கினமான இமயமலை கருங்கரடி வாழும் கானகம் என்று எங்கள் வாகனத்தின் டிரைவர் எங்களிடம் கூறினார். அது உண்மையான வார்த்தைதான் என்பதை இமாச்சல் பிரதேசத்தைக் குறித்து எழுதப்பட்ட ஒரு வழிகாட்டி புத்தகத்தில் நாங்கள் வாசித்தது எங்கள் நினைவுக்கு வந்தது.
நாங்கள் சம்பா பட்டணம் வரும்போது இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. அன்பின் ஆண்டவர்அந்த நாளில் எங்களுக்குத் தந்த அருமையான தேவ ஊழியத்திற்காக அவருக்கு எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதி, ஸ்தோத்திரம் ஏறெடுத்து விட்டு அந்த நாளில் எங்கள் கரங்களிலிருந்து தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக் கொண்ட மக்களோடு கர்த்தர் தொடர்ந்து பேசும்படியாக ஜெபித்து எங்கள் இளைப்பாறுதலுக்குச் சென்றோம்.
மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி
ஒரு நாள் நாங்கள் சம்பாவிலிருந்து சூராங்கண்ணி என்ற ஒரு இடத்திற்குச் சென்றோம். சூராங்கண்ணி என்ற பெயர் நம் தமிழ் நாட்டுப் பெயரைப் போல இருக்கின்றதல்லவா? எங்கள் வழித்தடத்தில் கடைக்கோடி கிராமம் வரை நாங்கள் அன்று சென்று கரோடி கிராமத்திலும், காண்ட்லா, போரா என்ற இடங்களிலிருந்த பள்ளிகளிலும் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். நண்பகல் நேரம் ஓரிடத்தில் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நாங்கள் ஆகாரத்திற்காக அமர்ந்தோம். நாங்கள் அமர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு போலீசார் எங்களுக்கு முன்பாக ஹோட்டலின் முகப்பில் வந்து அமர்ந்து ஒரு பேப்பரை விரித்து வைத்து எங்களைப் பார்த்தவர்களாக ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை நாங்கள் ஆச்சரியத்துடனும் அதே நேரம் சற்று பயத்துடனும் கவனித்தோம். அவர்கள் இருவரும் எங்களையே பார்த்து ஒவ்வொருவரையும் ஒன்று, இரண்டு, மூன்று என்று மனதுக்குள்ளாக இலக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். நிச்சயமாக நாம் இன்று ஏதோ ஒரு பெரிய சிக்கலில் அகப்படப் போகின்றோம் என்று நாங்கள் எங்களுக்குள் நிச்சயித்துக் கொண்டோம். கடைசியாக நாங்கள் ஹோட்டலிலிருந்து வெளியேறும்போது நாங்கள் எத்தனை பேர் வந்திருக்கின்றோம்? எதற்காக வந்திருக்கின்றோம்? என்பதை எல்லாம் நம்முடைய தேவ ஊழியர்களிடம் விபரமாகக் கேட்ட போது இலவசமாக கிறிஸ்தவ பிரசுரங்களை மக்களுக்குக் கொடுக்க 2 வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வந்திருக்கின்றோம் என்றதும், அவைகளை எங்களிடமிருந்து வாங்கிப் பார்த்து வாசித்து அவர்கள் ஆச்சரியத்தால் பிரமித்தார்கள். அத்துடன் நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களையும் வாங்கிச் சென்றனர்.
நாங்கள் அங்கு ஊழியத்திற்காகச் சென்ற சமயம் இமாச்சல் பிரதேசத்தில் ஏதோ ஒரு இடத்தில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பெண்ணைக் கடத்திச் சென்றிருந்திருக்கின்றார்கள். நாங்கள் தேவ ஊழியர்கள் மொத்தம் 8 பேர்களானபடியால் ஒருக்கால் நாங்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று காவல் துறையினர் நினைத்திருக்கின்றார்கள். அத்துடன் நாங்கள் எட்டுப் பேர்களாக எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை காவல் துறையினர் எப்படியோ உளவறிந்து தனது காவலர்களை அனுப்பியிருக்கின்றார்கள்.
சூராங்கண்ணி என்ற இடத்தில் ஓர் நீர் மின் நிலையம் இருப்பதால் அங்கும் கடை வீதிகளும், பள்ளிகளும் இருக்கின்றன. அங்கிருந்த மாடிகளுள்ள ஓர் மேல் நிலைப்பள்ளிக்கு நாங்கள் சென்று ஒவ்வொரு வகுப்பிலுள்ள பிள்ளைகளுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது பள்ளிக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் வேண்டுமென்று கேட்டு அவர்களது முகவரியை எங்களுக்குத் தந்தார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அந்தப் பள்ளியில் நாங்கள் எங்கள் ஊழியத்தை முடித்து மேலே ஏறி வரும்போது ஒரு ஆங்கிலப் பள்ளியின் பெரிய மாணவ மாணவிகள் வகுப்புகள் முடிந்து உச்சி மேட்டிலிருந்து படிக்கட்டுகளின் வழியாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் இறங்கி வந்த பிள்ளைகளுக்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் இரண்டு மூன்று ஆசிரியைகளும் அந்தப் பிள்ளைகளுடன் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அந்த ஆசிரியைகளில் ஒருவர் நாங்கள் கொடுக்கும் பிரதிகளை வாங்கக்கூடாது என்று தனக்கு பின்னால் வந்த பள்ளிப் பிள்ளைகளை எச்சரிக்கவே அதின் குரல் கேட்ட சுமார் 20 பிள்ளைகள் நாங்கள் கொடுத்தவைகளை வாங்க மறுத்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு பின்னால் வந்த எல்லாப் பிள்ளைகளும் சந்தோசத்தோடு பிரசுரங்களை வாங்கிச் சென்றனர். ஜீவனுள்ள ஆண்டவருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும் எதிராக சாத்தான் எவ்வளவு கொந்தளிப்பாக வேலைசெய்கின்றான் பார்த்தீர்களா?
ஆண்டவரின் ஆச்சரியமான வழிகள்
“உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரளான தண்ணீர்களிலும் இருந்தது, உமது காலடிகள் தெரியப்படாமற் போயிற்று” (சங்கீதம் 77 : 19) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. கடந்த கால நாட்களில் நாம் நமது இமயமலை தேவ ஊழியங்களில் ஒலி பெருக்கி கருவியைப் பயன்படுத்திய நாட்கள் உண்டு. கிராமங்களிலும், ஜன நெருக்க மிகுந்த கடை வீதிகளும் நமது தேவ ஊழியர்கள் தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை ஒலி பெருக்கி கருவி மூலமாக மக்களுக்கு அறிவித்தார்கள். அதின் இரண்டு காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அநேக ஆயிரங்கள் அந்தவிதமான நமது ஊழியங்களில் ஆசீர்வாதம் பெற்றதை நாம் அறிவோம். இந்த நாட்களில் தேவன் படங்களைக் காண்பித்து ஊழியம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பை நமக்குத் தந்திருக்கின்றார். நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுக்கு இந்த ஊழியத்திற்கான நல்லதொரு பயிற்சி “ஆப்பரேஷன் மொபிலைசேஷன்” என்ற பெரிய கிறிஸ்தவ ஸ்தாபனத்தின் மூலமாக கிடைத்ததுடன் அந்த ஸ்தாபனத்திடமிருந்தே அவர்களுக்கு ஒரு அழகான படச்சுருளும் கிடைத்தது. இந்தப் படச்சுருள் ஊழியத்தை நாங்கள் நமது இமாச்சல் பிரதேச ஊழியத்தில் கர்த்தருக்கு மகிமையாக நன்கு பயன்படுத்திக் கொண்டோம். ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள் என்று அநேகம் பள்ளிக்கூடங்களில் இந்தப் படச் சுருள் ஊழியத்தை செய்ய கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார். தலைமை ஆசிரியர்களும், வகுப்பிலுள்ள இதர ஆசிரியர்களும் பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து அமர்ந்து சகோதரன் அவர்கள் படங்காட்டிச் சொல்லும் வார்த்தைகளை கவனமாகக் கேட்டு ஆனந்தித்தனர். அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. செய்தி முடிவில் நாங்கள் அனைவருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அதின் பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர்களுடைய முகவரிகளைப்பெற்றுக் கொண்டோம். அந்த முகவரிகளுக்கெல்லாம் ஏற்கெனவே, கடந்த மாதங்களில் பல்வேறுவிதமான சுவிசேஷப் பிரசுரங்கள் கூடுதலான எண்ணிக்கையில் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. ஹிந்தி வேதாகமம் கேட்டோருக்கு அவைகள் அனுப்பப்பட்டன. அத்துடன் அவர்களுடைய முகவரிகள் எல்லாம் நமது கணினியில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. சில ஆரம்ப பள்ளிகளில் படச்சுருளைக் காண்பித்து பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் கர்த்தருடைய செய்தியை பிள்ளைகளுக்குச் சொல்லுவதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். பல ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளில் சகோதரன் அவர்கள் தன்னுடைய படச்சுருளைக்காண்பித்து தேவனுடைய ஊழியத்தைச் செய்த காட்சிகளை எல்லாம் நாங்கள் படம் எடுக்கவில்லை. கர்த்தருடைய பரிசுத்த நாமமும், அவருக்காக மிகுந்த பிரயாசத்தோடும், பாடுகளோடும் செய்யும் அருமையான தேவ ஊழியங்களும் கறைப்பட்டுப் பாதிக்கப்பட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும், அதின் மூலமாக தந்திர சாத்தான் மக்களுடைய உள்ளங்களில் தனது நச்சு விதைகளை ஊன்றி கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தைகளை வாசிப்பதிலிருந்து அவர்களை தடைசெய்து விடாதபடி நாங்கள் அவ்விதமாகச் செய்ய விரும்பவில்லை. இந்த விசயத்தில் நாங்கள் மிகவும் கண்ணும் கருத்துமாகவிருந்தோம். நீங்கள் காண்கின்ற புகைப்படங்களும் மிகவும் மறைவாக தூரத்திலிருந்து எடுக்கப் பட்டவையாகும்.
கர்த்தருடைய பரிசுத்த ஊழியங்களுக்காக நீங்கள் உதாரத்துவமாகக் கொடுத்த உங்கள் தியாக அன்பின் காணிக்கைகள் எங்களால் எவ்விமாக பயன்படுத்தப்பட்டன, அதினால் ஆண்டவரை அறியாத மக்கள் எவ்வண்ணமாக ஆசீர்வதிக்கப்பட்டனர் என்பதை வெறும் எழுத்துக்களின் வாயிலாக அறிவிப்பதைவிட அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் மிகவும் மறைவாக எடுக்கின்றோம். மற்றபடி நைனிடால் என்ற இடத்திலுள்ள சகோதரன் ஒருவர் கடந்த நாட்களில் நமக்கு எதிராகக் கூறியது போல சுவிசேஷ ஊழியத்தின் புகைப்படங்களை நாங்கள் நிறைய எடுத்து தேவ எக்காளத்தில் அவைகளை வெளியிட்டு அவைகள் மூலமாக தேவப்பிள்ளைகளிடமிருந்து ஏராளமான பணங்களை நாங்கள் சம்பாதிக்கின்றோம் என்ற இழிவான நோக்கம் எல்லாம் எங்களுக்கு இல்லை. பரிசுத்த அப்போஸ்தலன் அவர்கள் சொன்னது போல நாங்கள் அவ்விதமாக கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதை தேவன் அறிகின்றவராக இருக்கின்றார் (எபேசியர் 4 : 20)
இந்த தடவை நாங்கள் இரண்டு வாகனங்களில் ஏறி ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு பகுதியை சந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு திசையை நோக்கி நாங்கள் பயணமானோம். அதின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு பகுதிகளில் சுவிசேஷ ஊழியம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் எந்த எந்த இடங்களில் இருந்து ஊழியம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதையும், நாங்கள் எங்கு சந்திக்க வேண்டும் என்ற விபரங்களை எங்கள் வசம் இருந்த செல் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசிக் கொண்டோம். நாங்கள் ஒன்றாக சந்திக்கும் வேளை எங்களுடைய ஊழியத்தின் விபரங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டதுடன் தவனமுள்ள ஆத்துமாக்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் போன்றோரின் முகவரிகளையும் பெற்றுக் கொண்டோம். எல்லா இடங்களிலும் நாங்கள் இப்படிச் செய்யாமல் இப்படிச் செய்ய அனுகூலமான ஓரிரு இடங்களில் மாத்திரம் அந்த வழியைப் பின்பற்றினோம்.
எங்கள் ஊழியத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயம்
இந்தவிதமான எங்களுடைய ஊழியத்தின் ஓரிடத்தில் ஒரு வாலிபன் அந்தப் பகுதியின் மலையில் மறைவாயிருந்த ஒரு பெரிய மேல் நிலைப்பள்ளிக்கு எங்களை அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவனே நேரில் பேசி தேவனுடைய பிரசுரங்களை அந்தப் பள்ளியில் நாங்கள் கொடுக்க எங்களுக்கு அனுமதி வாங்கித் தந்தான். அந்தப் பள்ளியில் நாங்கள் ஒரு பெரிய தேவ ஊழியத்தைச் செய்ய அவன் எங்களுக்கு பேருதவியாக இருந்தான். இறுதியில் நாங்கள் அந்த அன்பான வாலிபனுக்கு எங்கள் நன்றியைக் காண்பிக்கும் வகையில் நாங்கள் எங்களுடன் எங்களுடைய அவசர கால பசியை ஆற்ற எடுத்துச் சென்றிருந்த அதிரசத்தில் சிலவற்றைக் கொடுத்து, அவனுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்து தேவனுடைய பிரதிகளையும் கொடுத்தோம். அவன் மிகுந்த அன்போடு அவற்றைப் பெற்றுக் கொண்டான். இறுதியில் நாங்கள் அவனுடைய பெயரைக் கேட்டபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தோம். ஆம், அவன் ஒரு முகமதிய வாலிபன் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது.. தேவன் தமது கிருபையுள்ள வார்த்தைகளை தமது ஜனத்துக்குக் கொடுக்க எந்த எந்த வழிகளை எல்லாம் கையாளுகின்றார் என்பதை நாங்கள்அறியவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
தனது அடி ஆட்களை எங்கும் வைத்திருக்கும் தந்திர சாத்தான்
பள்ளிகளில் உள்ள பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்க நாங்கள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகும்போது எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டாமென்று போராட அங்குள்ள யாராவது ஒரு ஆசிரியரை அல்லது ஒரு ஆசிரியையை எங்களுக்கு விரோதமாக சாத்தான் ஏவிவிடத் தவறுவதே இல்லை. அவன் தனது ஆட்களை எங்கும் வைத்து தனது அரணைப் பாதுகாக்க விழிப்பாக இருக்கின்றான். ஆனால், அன்பின் ஆண்டவர் அந்த எதிர்ப்பின் குரல்களை எல்லாம் முறியடித்து நமக்குச் சாதகமாகப் பேசி தேவனுடைய ஊழியம் தடையின்றி நடைபெற அந்த இடத்தில் நமக்காக யாரையாவது ஒருவரை வைத்திருப்பதை நாங்கள் பல இடங்களிலும் கண்ணாரக் கண்டு ஆண்டவரை துதித்து ஸ்தோத்திரித்திரிக்கின்றோம். ஆ, தேவன் தமது நாமத்தைக் குறித்து எத்தனை வைராக்கியமாக இருக்கின்றார் பாருங்கள்! எனினும், ஓரிரு பள்ளிகளில் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படவே செய்தது. அதையும் நாங்கள் தேவனுடைய அன்பின் திருவுளச் சித்தமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.
சம்பாவைச் சுற்றிலும் இருந்த அநேக கிராமங்களுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் எழுந்து தேவனுடைய பிரசுரங்களை எங்கள் வாகனங்களில் எடுத்துக் கொண்டு சம்பாவை வளைத்துக் கொண்டு ஓடும் ராவி நதியைப் பாலத்தின் வழியாகக் கடந்து, கடந்து சென்று தேவனுடைய சுவிசேஷத்தை மக்களுக்கும், ஏராளமான பள்ளி மாணவ மாணவியருக்கும் ஜெபத்தோடு கொடுத்தோம். அந்த இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் எல்லாவற்றையும் குறித்த விபரங்களை நாங்கள் இங்கு எழுதி வெளியிட இயலாத நிலையில் இருக்கின்றோம். எந்த எந்த இடங்களுக்கு நாங்கள் சென்றோம், எவ்வண்ணமாக நாங்கள் பாடுகளோடும், கஷ்டங்களோடும், மெய்யான ஆத்தும பாரதோடும் நம் ஆண்டவருக்கு ஊழியம் செய்தோம் என்ற அனைத்து நடபடிகளும் ஆண்டவருடைய ஞாபக புஸ்தகத்தில் உள்ளது. எல்லாப் புகழும் அடிக்கப்பட்ட நம் தேவ ஆட்டுக்குட்டியானவருக்கே உண்டாவதாக.
நீங்கள் உலகத்துக்குவெளிச்சமாயிருக்கிறீர்கள்
சம்பா பட்டணத்தை நாங்கள் எங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம், சில இலட்சக்கணக்கான மக்களை பாக்கிஸ்தான் நாட்டில் காவு கொண்ட பயங்கர பூகம்பம் நாங்கள் தங்கியிருந்த சம்பாவில், நாங்கள் எங்கள் தேவ ஊழியத்தை ஆரம்பிக்கவிருந்த முதல் நாளின் காலை வேளை ஏற்பட்டது. தேவகிருபையால் நாங்களும், சம்பாவும் காக்கப்பட்டோம். அந்த பூமியதிர்ச்சி இன்னும் சில நொடிகள் நீடித்திருந்தால் நாங்கள் தப்பித்திருக்க முடியாது. நாங்கள் எங்கள் காலை ஆகாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஹோட்டல் மிக மிகப் பழமையான பச்சைப்பாசி பிடித்திருந்த கட்டிடமாகும்.
அடுத்த ஒரு முக்கியமான காரணம், சம்பாவுக்கு சில கில்லோ மீட்டர் தொலைவிலிருந்த ஒரு நிலத்தடி நீர் மின் நிலையத்தை நாங்கள் காணக் கர்த்தர் கிருபை செய்தார். பூமியின் அடிப் படுகையில் பூமியைக்குடைந்து அந்த பிரமாண்டமான நீர் மின் நிலையத்தை அமைத்திருக்கின்றனர். அந்த மின் நிலையத்தை எல்லாரும் காண இயலாது. அந்த மின் நிலையத்தில் பணிஆற்றிய பிரதான பொறியாளர் (Chief Engineer) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ விசுவாசி ஆவார். நமது ஊழியத்தில் கலந்து கொண்ட பாஸ்டர் சகோதரன் சங்கர் தாஸ் அவர்களின் அன்பால் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது ஒரு ஓய்வு நாளின் மாலை வேளை. நாங்கள் அன்று ஓய்வு நாள் ஆராதனையில் கலந்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நாளில் அந்த இடத்திற்குச் சென்று வந்தோம்.
பிரமாண்டமான யந்திரங்கள் பூமிக்கடியில் அமைக்கப் பட்டிருக்கும் ஆச்சரியமான விதமும் அவைகள் எழுப்பும் ஓசையும் நம்மை மெய் சிலிர்க்கப் பண்ணுவதாக இருக்கின்றது. அவைகள் வேலை செய்யும் விதங்களையும், யந்திர நுணுக்கங்களையும், எந்த ஒரு விபத்து அங்கு எதிர்பாராதவிதமாக ஏற்பட்டாலும் தப்பிக்கொள்ளும் சுரங்கப்பாதை போன்ற காரியங்களை எல்லாம் அந்த கேரள சகோதரன் எங்களுக்கு விளக்கிக் கூறினார்கள். அவர்கள் சொன்ன விளக்கத்தில் என் உள்ளத்தைக் கவர்ந்த ஒரு ஆச்சரியமான விளக்கம் உண்டு. நாங்கள் அங்கு சென்ற நேரத்தில் நதி நீர் பற்றாக் குறையின் காரணமாக மூன்று மின் உற்பத்தி யந்திரங்களில் ஒன்றே ஒன்று மட்டுமேதான் வேலை செய்து கொண்டிருந்தது. அந்த யந்திரம் மட்டுமே இமாச்சல் பிரதேசத்திலுள்ள இலட்சாதி இலட்சம் மாந்தரை அப்பொழுது மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான்அதிகமாக எனக்குள் யோசித்துப் பார்த்தேன். அதுவும் வேலை செய்யாவிட்டால் கிராமங்களும், பட்டணங்களும் இரவில் கார் இருளில் மூழ்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த யந்திரத்தின் உச்சியில் ஒரு சிகப்பு விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பதை அந்த கேரள சகோதரன் எங்களுக்குச் சுட்டிக் காண்பித்து அதோ அந்த யந்திரம்தான் இப்பொழுது மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது. அதின் அடையாளமாக அந்த விளக்கு எரிகின்றது. மற்ற யந்திரங்கள் இரண்டிலும் விளக்குகள் எரியவில்லை என்றார்கள். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத் 5 : 14) என்று அன்பின் இரட்சகர் சொன்னார் அல்லவா? நம்மில் ஆண்டவரின் ஜீவ ஒளி பிரகாசிக்கும்போது அதினால் எத்தனை எத்தனையோ மக்கள் களிகூருவார்கள்அல்லவா? பரிசுத்த மகாத்துமா சாதுசுந்தர்சிங் அவர்களின் முகத்தில் பிரகாசித்த இரட்சகர் இயேசுவின் ஜீவ ஒளியைக் கண்டு முழு உலகமே களிகூர்ந்ததே! ஆனந்தம் கொண்டதே! அந்த ஜீவ ஒளி நம் ஒவ்வொருவரிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டிய கிருபைகளை கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபையாகத் தந்தருள்வாராக. ஆமென்.